செவ்வாய், 9 செப்டம்பர், 2025

பிறருக்குப் பாதையாக...(12.9.2025)

அன்பான சகோதரர் சகோதரிகளே,

இன்றைய இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்...


இன்றைய வாசகங்கள் பவுலின் வாழ்வையும் இயேசுவின் போதனையையும் இணைத்து பார்க்க நமக்கு அழைப்பு விடுக்கிறது 

1. பவுலின் வாழ்வும்... 

திருத்தூதர் பவுல் தன் வாழ்க்கையை நினைவுகூர்கிறார்.

  • ஒருகாலத்தில் அவர் கிறிஸ்துவை பழித்துரைத்தார், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினார்,
  • ஆனால் ஆண்டவர் அவர்மேல் இரக்கம் காட்டி அவரை ஆட்கொண்டார்.
  • கிறிஸ்துவோடு இணைந்த நம்பிக்கையிலும் அன்பிலும் அவர் மாற்றப்பட்டார்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது: எவ்வளவு பெரிய தவறுகள் நாம் செய்து இருந்தாலும்  நம்மை ஆண்டவர் விட்டுவிடுவதில்லை. நாம் மனம் திரும்பும்போது அவர் நம்மைத் தம் கரங்களில் தாங்கிக்  கொள்கிறார்.

2. இயேசுவின் போதனையும் 

இயேசு கூறுகிறார்:

  • பார்வையற்றவன் பார்வையற்றவனை வழிநடத்த முடியாது.
  • பிறரின் குறையைச் சுட்டிக்காட்டும் முன், நம் குறைகளைப் பார்க்க வேண்டும்.

இதன் பொருள்: நாம் நம் வாழ்வை சுத்திகரிக்காமல், பிறருக்குக் கற்பிக்க முடியாது.
நாம் சுயபரிசோதனை செய்யாமல், பிறரைக் குறைசொன்னால், அது போலித்தனம் ஆகிவிடும் என்பதை வலியுறுத்துகிறது. 

இரு வாசகங்களையும்  இணைக்கும் செய்தி

பவுல் தன் குற்றங்களை உணர்ந்து, தன்னை மாற்றிக்கொண்டார். அதனால் தான் அவர் பிறருக்கு ஒளியாக இருக்க முடிந்தது.
அதேபோல், நாமும் முதலில் நம்மையே நமது தவறான செயல்களில் இருந்து சரி செய்து கொண்டால், பிறருக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்.

அன்புள்ளவர்களே,
இன்றைய வாசகங்கள் நமக்கு சொல்லுவது:

  • பாவத்தில் இருந்தாலும் ஆண்டவர் இரங்குகிறார் (பவுலைப் போல).
  • நம்மை திருத்தினால் தான் பிறருக்குப் பாதையாக இருக்க முடியும் (இயேசுவின் போதனைபோல).

இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது நடைமுறை வாழ்வில் நாம் சில காரியங்களை பின்பற்றலாம் ....

  • வீட்டில், சமுதாயத்தில், திருச்சபையில் — பிறரை குறை  பேசுவதற்குப் பதிலாக, நம்முடைய குறைகளை நீக்க முயலெல்லாம் .
  • குறைகளைப் பார்க்காமல் அன்பைப் பார்ப்பதும், இதன் வழியில் அடுத்தவரை வழி நடத்துவதுமே  கிறிஸ்தவத்தின் அடையாளம் இதை உணர்ந்து நம் வாழ்வில் அன்பை பிரதிபலிப்போம் ...

அன்பே கிறிஸ்தவ வாழ்வின் நிறைவு...(11.9.2025)

அன்பே கிறிஸ்தவ வாழ்வின் நிறைவு

அன்புடைய சகோதரர் சகோதரிகளே,


இன்றைய வாசகங்களில் இறைவன் நமக்குக் கொடுக்கிற அழைப்பு மிகத் தெளிவானது  அன்பையே கொண்டிருங்கள்; அதுவே நற்பண்புகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்யும்.” (கொலோசை 3:14).

1. கிறிஸ்தவ அடையாளம்: அன்பு

திருத்தூதர் பவுல் , கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களை “கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அன்பிற்குரிய இறைமக்கள்” என்று அழைக்கிறார். அதாவது, நம் வாழ்வின் அடையாளமே அன்பாக இருக்க வேண்டும். மனித உறவுகளில் சிறு குறைகள், மன்னிக்க முடியாத காயங்கள் இருந்தாலும், “ஆண்டவர் மன்னித்தது போல நீங்களும் மன்னியுங்கள்” என்று பவுல் என்று இறை வார்த்தை வழியாக நமக்கு  கற்றுக் கொடுக்கிறார்.

அன்பு என்பது பாவத்தை மறைக்கும் மூடியல்ல; அது எல்லா உள்மன காயங்களையும் குணமாக்கும் மருந்து. அன்பில்லாத கிறிஸ்தவம், வேரற்ற மரம் போல உயிரற்றதாகிவிடும்... என்பதை இதயத்தில் பதித்துக் கொள்ள நாம்  அழைக்கப்படுகிறோம்....

2. இயேசுவின் போதனை :  பகைவர்களுக்கும் அன்பு

நற்செய்தியில் இயேசு மிகவும் கடினமான, ஆனாலும் உயர்ந்த பாதையைச் சுட்டிக்காட்டுகிறார்: “உங்கள் பகைவர்களிடம் அன்பு செலுத்துங்கள்.”
பொதுவாக, நம்மிடம் அன்பு செலுத்துகிறவர்களை நாமும் அன்பு செய்கிறோம். ஆனால், அது மட்டுமே போதுமானதல்ல என்று இயேசு சொல்கிறார்.

  • உன்னை அடிக்கும் ஒருவருக்குக் கன்னத்தைத் திருப்பிக் காட்டுவதும்,
  • உன்னை சபிப்பவருக்காக ஜெபிப்பதும்,
  • உன்னை வெறுப்பவருக்கு நன்மை செய்வதும்,
    — இவை மனிதனுக்குப் கடினமாக  தோன்றலாம். ஆனால், கிறிஸ்தவ அன்பு இதை ஆழமாக பின்பற்ற அழைப்பு விடுக்கிறது.

கடவுளே நன்றிகெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார். அப்படியானால், நாமும் பிறரை அவர்கள் தகுதி பார்க்காமல் அன்பு செய்ய வேண்டும் என்பதை இதயத்தில் இருத்திக் கொள்ள அழைப்பு விடுகிறது...

3. அன்பின் பலன்: கடவுளின் அமைதி

பவுல் சொல்வது போல, கிறிஸ்து அருளும் அமைதியே நம் உள்ளங்களை நெறிப்படுத்த வேண்டும். அன்பான மனதில் கடவுளின் அமைதி நிறைகிறது. அன்பு இல்லாத இடத்தில் சண்டை, பாகுபாடு, வெறுப்பு போன்றவை வேறொன்றும்... அன்புள்ள இடத்தில் சமாதானமும், மகிழ்ச்சியும் வேரூன்றும் என்பதை இதயத்தில் நிறுத்துவோம் ....

அன்பை நமது அன்றாட வாழ்வில் பின்பற்றுவதற்கான வழிகள் ...

அன்பு என்பது உணர்ச்சியில் மட்டும் இல்லாமல், செயலில் வெளிப்பட வேண்டியது.

  • பிறர் குற்றங்களை மன்னியுங்கள்.
  • உதவியைத் தேடுவோருக்கு சுயநலமில்லாமல் உதவுங்கள்.
  • உங்களை புண்படுத்தியவர்களுக்காகவும் நன்மை செய்யுங்கள்.
  • எதைச் செய்தாலும் இயேசுவின் பெயரால் செய்து, நன்றி செலுத்துங்கள்.

அன்பு தான் நம் கிறிஸ்தவ வாழ்வின் முதற்சுடர், கடைசி விளக்கு. அதனால் தான் இயேசு சொன்னார்:
“உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்.”

என்று இதுவே இன்றைய இறை வார்த்தையை நமக்குத் தரும் வாழ்வுக்கான அழைப்பு... 

எனவே அன்பு உறவுகளே ...
👉 நம் வாழ்க்கையில் அன்பை ஆடையாக்கிக் கொள்ளுங்கள்.
👉 பகைவர்களுக்குப் இறைவேண்டல் செய்யுங்கள்.
👉 கடவுளின் இரக்கத்தைப் போல நாமும் இரக்கமுள்ளவர்களாக இருப்போம்.

இதற்கான ஆற்றல் வேண்டி இணைந்து தொடர்ந்து ஜெபிப்போம் ...

திங்கள், 8 செப்டம்பர், 2025

இறையாட்சியை நோக்கிச் செல்லுவோம்...(10.9.2025)

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,


இன்றைய வாசகங்களில் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்கிறேன் ...

1. கிறிஸ்துவோடு உயிர்ப்பிக்கப்பட்டவர்கள்

திருத்தூதர் பவுல் நமக்கு நினைவூட்டுகிறார்:
“நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்தவர்கள்; ஆகவே மேலுலகு சார்ந்தவற்றையே நாடுங்கள்.”
இதன் அர்த்தம், நமது வாழ்க்கை இனி வெறும் உலகப்போக்கு அல்ல என்பதாகும்.

  • கோபம், பொய், ஒழுக்கக்கேடு, பேராசை – இவை எல்லாம் பழைய மனித இயல்பின் அடையாளங்கள்.
  • கிறிஸ்துவோடு வாழும் நாம் இவற்றை தவிர்த்து வாழ வேண்டும்.
  • புதிய மனிதராக, நம்மை படைத்த இறைவனின் சாயலில், இம்மண்ணுலகில் வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

அன்பானவர்களே, கிறிஸ்துவோடு இறந்து, கிறிஸ்துவோடு உயிர்ப்படுவது என்பதே கிறிஸ்தவ வாழ்க்கையின் மையம். சிலுவை வழியாக  உயிர்த்தெழுதல் என்பதே நமது வாழ்வின் இலக்கு என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது.

2. ஆண்டவரின் ஆசீர்வாதமும் எச்சரிக்கையும்

நற்செய்தியில் இயேசு நேரடியாகச் சொல்கிறார்:

  • “ஏழைகளே, நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்குரியது.”
  • “ஆனால் செல்வர்களே, ஐயோ! உங்களுக்குக் கேடு.”

இதில் இயேசு சொல்வது செல்வம் தவறு என்பதல்ல.
ஆனால் செல்வம் நம் இதயத்தை இறைவனிடமிருந்து பிரிக்கக் கூடாது என்பதே உண்மை. இந்த உண்மையை உணர்ந்து வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ளவே இறைவன் அழைப்பு விடுக்கிறார். 

  • ஏழைகள் – தங்கள் வாழ்வை முழுமையாக இறைவனிடம் நம்பிக்கையாய் ஒப்படைப்பவர்கள்.
  • செல்வர்கள் – தங்கள் ஆறுதல், பாதுகாப்பு, மகிழ்ச்சி அனைத்தையும் செல்வத்தில் வைத்துக்கொள்பவர்கள்.

அன்பானவர்களே, உண்மையான பேறு செல்வத்தில் இல்லை; இறைவனோடு இணைந்த வாழ்க்கையில்தான் இருக்கிறது. என்பதை உணர்ந்து நம் வாழ்வில் இறைவனை முன்னிலைப்படுத்து இறைவன் கொடுத்த செல்வங்களை சகபிரபுகளோடு பகிர்ந்து இறைவன் விரும்பும் மக்களாக வாழ்வோம் ...

 இன்றைய இறைவார்த்தை நமக்கு தரும் அழைப்பு

  • உலக ஆசைகளில் சிக்காமல், கிறிஸ்துவோடு புதுமனிதராக வாழுங்கள்.
  • ஏழை, பசி, துயரம் – இவை நிலையானவை அல்ல; இறைவனின் ஆசீர்வாதம் நம்மை நிரப்பும் என்பதை உணர்ந்து வாழுங்கள்.
  • செல்வம், சுகம், புகழ் – இவை நிலையானவை அல்ல; இறைவன் இல்லாவிட்டால் அவை வீணானவை என்பதை மனதில் நிறுத்தி வாழுங்கள்.

இவைகளை எப்படி நம் நடைமுறை வாழ்வில் பின்பற்றலாம் என சிந்திப்போமா... 

  • நமது குடும்பங்களில் கோபம், சண்டை, பொய் – இவற்றை தவிர்ப்போம்.
  • பேராசையை விடுவித்து, பகிர்ந்து கொள்வதில் நிறைவு காண்போம்.
  • ஏழைகளுக்கு உதவி செய்து, ஏழைகளுக்கு உரிய மனப்பான்மையில் வாழ்வோம்.
  • மேலுலகு சார்ந்த அன்பு, கருணை, மன்னிப்பு  இவைகளை நம் வாழ்வில் பின்பற்றவும் .

எனவே அன்பானவர்களே,
கிறிஸ்துவே நமக்கு வாழ்வும், நிறைவும்.... அவரோடு இணைந்த வாழ்வு நம்முடையதானால் , நாம் உண்மையான இறைவனின் அருளை பெற முடியும்.  
எனவே பழைய மனித இயல்பை கடந்து, புதிய மனிதராகக் கிறிஸ்துவோடு இணைந்து வாழ்ந்து, இறையாட்சியை நோக்கிச் செல்லுவோம்.


செவ்வாய், 2 செப்டம்பர், 2025

கிறிஸ்துவில் வேரூன்றி வாழும் வாழ்வு... (9. 9. 2025)

கிறிஸ்துவில் வேரூன்றி வாழும் வாழ்வு”

அன்பான சகோதரர் சகோதரிகளே,

திருத்தூதர் பவுல் சொல்லுகிறார்:  
 “நீங்கள் கிறிஸ்துவோடு இணைந்ததால், குற்றங்களில் இருந்த நீங்கள் உயிர்ப்பெற்றவர்கள்.”  

இங்கு பவுல் வலியுறுத்துவது முக்கியமான இரண்டு உண்மைகள்:  
1. கிறிஸ்துவோடு இணைந்து வாழும் வாழ்க்கை  
2. சிலுவையின் ஆற்றல்

1. கிறிஸ்துவோடு இணைந்து வாழும் வாழ்க்கை  
நாம் கிறிஸ்துவை எமது ஆண்டவராக ஏற்றுக்கொண்ட போது, புதிய வாழ்வை தொடங்கினோம்.  அது சாதாரண நம்பிக்கை  அல்ல; வேரூன்றி நிற்கும் நம்பிக்கை .

ஒரு மரம் வேரால் நிலைத்து நிற்பது போல, கிறிஸ்துவோடு நம் ஆன்மா வேரூன்றியிருக்க வேண்டும்.  

 உலகம் பல விதமான போலியான போதனைகளாலும் ஆசைகளாலும் நம்மை குழப்பத் தேடும்.  
   ஆனால், கிறிஸ்துவில் ஆழமாக வேரூன்றினால் எவராலும் நம்மை குழப்ப முடியாது.  


 2. சிலுவையின் ஆற்றல்

பவுல் மிக அழகாக சொல்கிறார்:  
   “நமக்கு எதிரான கடன்பத்திரத்தை அவர் சிலுவையில் ஆணியடித்து அழித்துவிட்டார்.”  
 நம் பாவங்களின் சுமையிலிருந்து இயேசு நம்மை மீட்டார்.  
அவரது சிலுவை தோல்வி அல்ல; வெற்றி ஊர்வலம்.

உலகின் சக்திகளையும், தீமையைச் செயலிழக்கச் செய்தது அந்த சிலுவை.  ஆகையால், இன்றும் நம்முடைய குற்றங்களும் பலவீனங்களும் சிலுவையில் அடைக்கலம் பெறுகின்றன.   

3. இயேசுவின் முன்மாதிரி: 

வேண்டுதலின் மகத்துவம் ற்றி
லூக்கா நற்செய்தி நமக்குக் கூறுகிறது:  

இயேசு பன்னிருவரைத் தேர்வுசெய்வதற்கு முன்பு இரவெல்லாம் கடவுளிடம் வேண்டிக்கொண்டார்.

நம்முடைய வாழ்க்கைத் தீர்மானங்கள், சேவைகள், பணிகள் அவசரமாக இல்லாமல், ஜெபத்தில் வேரூன்றி வளரவேண்டும் என்பதற்கு இது மிகுந்த சாட்சியாகிறது.  

நாம் வெற்றி பெற்ற ஆட்களாக வேண்டும் என்றால், திட்டங்கள் மற்றும் திறமைகளுக்கு மேலாக, இறைவனின் அருள் வேண்டுவது முக்கியம்.  

4. கிறிஸ்துவைத் தொடும் ஆசை
 
   சமவெளியில் மக்கள் இயேசுவைத் தொடுவதற்காய் கூட்டம் கூட்டமாக வந்தார்கள்.  
ஏன்?  
   ஏனெனில் அவரிடமிருந்து வல்லமை வெளியேறி அவர்களின் வாழ்வை சுகப்படுத்தியது.  
 இன்று நாமும் அந்தக் கிறிஸ்துவைத் தொடுகிறோம்:  
   - நம் ஜெபத்தில்  
   - நற்கருணையில்   ....
   - நற்செய்தியின் வாசிப்பில் ...  
- அவரைத் தொடும் ஒவ்வொருவரின் வாழ்வும் புதிய சுகமும் உயிரும் பெறுகின்றது.  

எனவே அன்பானவர்களே,  
இன்றைய வார்த்தையின் அடிப்படையில் 
- கிறிஸ்துவில் வேரூன்றி நிற்போம்.  
- சிலுவையில் அடைக்கலம் பெறுவோம்.  
- இயேசுவைப்போல் வேண்டுதலில் நிலைத்திருப்போம்.  
- அவரைத் தொடும் நம்பிக்கையோடு வாழ்வோம்.  

இவ்வாழ்க்கை வழியே நாம் பாவங்களில் இருந்து விடுபட்டு, ஆண்டவர் தரும் முழுநிறைவை என் வாழ்வில் அனுபவிப்போம்....

மரியாவின் பிறப்பு...(8.9.2025)

மரியாவின் பிறப்பு...


மரியாவின் பிறப்பு உண்மையிலே இறை வல்லமையால்தான் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படியென்றால், விவிலியத்தில் நிகழ்ந்த ஒருசில முக்கியமான நபர்களின் பிறப்பு இறைவல்லமையால் நிகழ்ந்திருக்கின்றது. 

ஈசாக்கு (தொநூ 21: 1-3) 

சிம்சோன் (நீதி 13: 2-7), 

சாமுவேல் (1சாமு 1: 9-19),

 திருமுழுக்கு யோவான் (லூக் 1:5-24),

 இயேசு கிறிஸ்து (லூக்1:26-38)

 இவர்களுடைய பிறப்பு எல்லாம் சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை. இறை வல்லமை அங்கே அதிகதிகமாக செயல்பட்டிருக்கிறது என்பதை விவிலியத்தின் துணைகொண்டு அறியலாம் ... மரியாவும் மீட்பின் வரலாற்றில் சாதாரணமான ஒரு நபர் இல்லை. இந்த உலகத்தை உய்விக்க வந்த ஆண்டவர் இயேசுவையே பெற்றெடுத்தவர். எனவே, அவருடைய பிறப்பிலும் இறை வல்லமை அதிகமாகச் செயல்பட்டிருக்கும் என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.


பாவக்கறை சிறுதும் இல்லாது பிறந்தவர் இயேசு. எனவே, இயேசு மாசற்றவராக இருப்பதனால், அவரைப் பெற்றெடுக்கும் தாய் மரியாவும் மாசற்றவராக இருக்கவேண்டும் என்பதற்காக அவரைக் கருவிலே பாவக்கறையில்லாமல் தோன்றச் செய்கிறார் கடவுள். ஆகவே, மரியா கடவுளின் படைப்பில் தனிச் சிறப்பு வாய்ந்தவராக விளங்குகின்றார்.


இத்தகைய பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மரியாவின் பிறப்பு விழா நான்காம் நூற்றாண்டிலிருந்தே கொண்டாடப்பட்டு வருகின்றது. கி.பி.330 ஆம் ஆண்டு புனித ஹெலன் என்பவர் மரியன்னைக்கு ஓர் ஆலயம் கட்டி, மரியாவின் பிறப்பு விழாவைக் கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. 


ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த எபிபெனஸ், கிறிசோஸ்டம் போன்றோர் மரியன்னையின் பிறப்பு விழாவைக் கொண்டாடியதாக அறிகின்றோம்.


 கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மரியாவின் பிறப்பு விழா உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட் என்பவர்தான் இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் நாள் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்து இன்றுவரை மரியன்னையின் பிறப்பு விழா அவ்வாறே கொண்டாடப்பட்டு வருகின்றது.


திருச்சபை வழக்கமாக புனிதரின்  இறந்த நாளை அல்லது அவருடைய விண்ணகப் பிறப்பைத்தான் கொண்டாடும், மண்ணகப் பிறப்பைக் கொண்டாடுவதில்லை. இதற்கு விதிவிலக்கு 

ஆண்டவர் இயேசு, 

திருமுழுக்கு யோவான், 

அன்னை மரியா. 

இதை வைத்துப் பார்க்கும்போது திருச்சபையில் மரியா எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர் என நாம் புரிந்துகொள்ளலாம். 


மரியா பாவத்தால் வீழ்ந்துகிடந்த இந்த மானுட சமூகத்தை தன்னுடைய திருமகனால் மீட்டவர். எனவே, அவருடைய பிறப்பு விழாவைக் கொண்டாடுவது என்பது அன்னைக்கும் ஆண்டவருக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

இறைவனின் தாய், மீட்பரின் தாய் என அன்போடு அழைக்கப்படும் மரியன்னையின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்ப்போம்.

1. தேவையில் இருப்போருக்கு இரங்குதல்

மரியா தேவையில் இருப்போருக்கு இரங்கும் நல்ல குணம் படைத்த பெண்மணியாக வாழ்ந்து வந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. 

பேறுகால வேளையில் இருந்த தன்னுடைய உறவுக்கார பெண்மணிக்கு காடு மலைகளை கடந்து உதவச் செல்கிறார். 

இரசம் தீர்ந்துபோனதால் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த கானாவூர் திருமண வீட்டாருக்கு உதவச் செல்கிறார். 

இவற்றையெல்லாம் மரியா யாரும் கேட்காமல் தாமாகவே சென்றுசெய்கிறார். 

மரியாவின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் நாம், நம்மிடத்தில் அவரிடம் இருந்த இரக்க குணம், தேவையில் இருக்கின்ற மக்கள்மீது இரங்கும் குணம் இருக்கின்றதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். 

நாம் தேவையில் இருப்போர்மீது இரங்கும்போது மரியாவின்  அன்புப் பிள்ளைகளாக  மாறுவதோடு மட்டுமல்லாமல், அப்படிப்பட்ட குணம் நம்முடைய உள்ளத்திற்கு ஆறுதலையும் தருகின்றது. இது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

இந்த உண்மையை விளக்க ஒரு கதை. ஒருமுறை இளைஞன் ஒருவன் ஒரு குருவிடம் சென்று, தனக்கிருக்கும் சந்தேகங்களைக் கேட்டான். “நீண்ட நேரம் பூஜை செய்கிறேன். நெடுநேரம் தியானம் செய்கிறேன். மனம் அமைதியடையவில்லை. அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, பின்னர் குரு அவனிடத்தில் சொன்னார், “உன்னால் முடிந்த வரை ஏழைகளுக்கு உதவி செய். யாரேனும் ஏழை நோயுற்றிருந்தால் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து அவனுக்கு பணிவிடை செய். அதனால் உனக்கு மன அமைதி உண்டாகும்” என்கிறார்.

ஆம்  அன்பர்களே... தேவையில் இருக்கும் ஓர் ஏழைக்கு உதவும்போது நம்முடைய உள்ளத்தில் மன அமைதி உண்டாகின்றது. அதேவேளையில் நாம் மரியாவின் அன்புப் பிள்ளைகள் ஆகின்றோம்.

2. கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து வாழ்தல்

மரியா எப்போதும் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து வாழ்ந்தவராக விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. வானதூதர் கபிரியேல் மரியாவிடம் மீட்புத் திட்டத்தை எடுத்துச் சொன்னபோது, தொடக்கத்தில் தயங்கினாலும், பின்னர் “இதோ ஆண்டவரின் அடிமை, உம்முடைய சொற்படி ஆகட்டும்” என்று சொல்லி இறைவனின் விருப்பம் நிறைவேற தன்னை முழுவதுமாய் கையளிக்கின்றார். ஒருவேளை மரியா மட்டும் வானதூதரின் வார்த்தைக்குச் சம்மதம் தெரிவிக்காமல் இருந்திருந்தால், நமக்கு மீட்புக் கிடைத்திருக்குமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. மரியாவின் சம்மதத்தால் நாம் அனைவரும் மீட்கப்பட்டோம் என்பதே உண்மை.

இன்றுக்கு நாம் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கின்றோமா? அல்லது நம்முடைய விருப்பத்தின் படி நடக்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் கடவுளின் விருப்பத்தை மறந்து, நம்முடைய விருப்பத்தின் படி மனம் போன போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.... இந்நிலை மாறவேண்டும். நாம் அனைவரும் மரியாவைப் போன்று கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.

3. தாழ்ச்சி

மரியாவிடம் விளங்கிய எல்லா நற்பண்புகளைவிடவும் தாழ்ச்சி என்ற நற்பண்பே மேலோங்கி இருக்கின்றது. ஏனென்றால் அவர் ஒருபோதும் தன்னை இறைவனின் தாய் என்று காட்டிக்கொள்ளவில்லை. மாறாக பணிவிடை செய்வதிலேயே எப்போதும் மகிழ்ந்திருந்தார். அதனால்தான் இறைவன் அவரை மேலும் மேலும் உயர்த்துகின்றார். நாமும் தாழ்ச்சியோடு வாழும்போது இறைவனால் உயர்த்தப்படுவோம் என்பது உறுதி.

ஆனால் வேடிக்கை என்னவென்றால், நம்மிடத்தில் தாழ்ச்சி என்ற நற்பண்பு பெருகுவதை விடவும், ஆணவம் என்ற தீயப் பண்புதான் அதிகமாகப் பெருகுகின்றது. அதனால் நாம் மேலும் மேலும் அழிவைச் சந்திக்கின்றோம். 

நீதிமொழிகள் புத்தகம் 29:23 ல் வாசிக்கின்றோம், “இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும், தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்”. இது எவ்வளவு அர்த்தம் நிறைந்த வார்த்தைகள். நாம் ஆணவத்தோடும் இறுமாப்போடும் இருக்கின்றபோது அழிவுதான் உறுதி.

ஓர் ஊரில் மிகவும் படித்த அறிஞர் ஒருவர் இருந்தார். தன் கல்வி பற்றி அவருக்கு எப்போதும் அகந்தை உண்டு. ஒருநாள் அவர் ஒரு குருவை அணுகி தனக்கு ஞானம் தருமாறு வேண்டினார். அப்போது வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. ஞானி அவரிடத்தில் சொன்னார். “முதலில் மழையில் போய் நின்று கைகளை உயர்த்தி ஆகாயத்தைப் பார்”. படித்தவர் அப்படியே செய்தார். ஆனால் அவருக்குப் பிடிக்கவில்லை. குருவிடம் வந்து, “கொட்டும் மழையில் முழுக்க நனைந்து ஒரு முட்டாள் போல நின்றுகொண்டிருக்கிறேன்” என்றார். அதற்கு குரு, “முதல் நாளே உனக்கு உன்னைப் பற்றிய தெளிவு வந்துவிட்டதே!, அது நல்லது” என்றார். எல்லாம் தெரிந்தவன் என்று ஆணவத்தோடு இருந்த அந்த அறிஞருக்கு குருவின் வார்த்தைகள சாட்டையடி போன்று இறங்கின.

அகந்தையினால் அழிவு ஒன்றே மிஞ்சும் என்பதை இந்தக் கதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நாம் ஆணவத்தோடும், அகந்தையோடும் வாழாமல், தாழ்ச்சியோடு வாழவேண்டும் என்பதைத்தான் மரியாவின் வாழ்வு நமக்குக் கற்றுத்தருகின்றது.

ஆகவே, மரியன்னையின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் இன்று, அவரைப் போன்று வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.


உண்மையான சீடத்துவம் ... (7.9.2025)

அன்பு சகோதரர் சகோதரிகளே,



1. ஆண்டவரின் திருவுளத்தை அறிதல் 


“ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்?”

உண்மையில் மனித அறிவு குறுகியது, நம் திட்டங்கள் தவறக் கூடியவை. உடலும் உலக சுமையும் நம்மை கீழே தள்ளுகின்றன. விண்ணுலகின் இரகசியங்களை நாம் கண்டுபிடிக்க முடியாது.
ஆனால் கடவுள் தம் தூய ஆவியை அனுப்பும்போது மட்டுமே, நாம் உண்மையை அறிந்து வாழமுடியும்.
இதன் மூலம் ஒரு உண்மை வெளிப்படுகிறது எனவே கடவுளின் வழிகாட்டுதல் இல்லாமல் நம் வாழ்க்கை வெற்றிகரமாக முடியாது என்பதை உணர்வோம் ...

2. கிறிஸ்துவில் அடிமை  சகோதரன் 

 பவுல், பிலமோனுக்கு எழுதுகிறார். ஒனேசிமு ஒருகாலத்தில் அடிமை. ஆனால் கிறிஸ்துவில் புதிய நிலைக்கு உயர்ந்திருக்கிறார்.

“இனி அவரை அடிமையாக அல்ல, உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளுங்கள்.”

கிறிஸ்துவின் அன்பு, மனித உறவுகளை மாற்றுகிறது.
அடிமை – எஜமான் என்ற பந்தம் அன்பின் பந்தமாக மாறுகிறது.
இது கிறிஸ்தவ சமுதாயத்தின் மகத்துவம்.... நம்மிடையே உயர்வு–தாழ்வு இல்லை, எல்லோரும் சகோதரர் சகோதரிகள்.

3. சீடத்துவத்தின் விலை 

 இயேசு சொல்கிறார்:
“உங்களுள் தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.”

இங்கே இயேசு மூன்று நிபந்தனைகளை முன்வைக்கிறார்:

  1. கிறிஸ்துவை முதன்மையாக நேசித்தல் – குடும்பம், செல்வம், உயிர் எல்லாவற்றையும் விட உயர்வாக கிறிஸ்துவை மையப்படுத்த வேண்டும்.
  2. சிலுவையைச் சுமத்தல் – துன்பத்தைத் தவிர்க்காமல், அதை நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்வது நம் வாழ்க்கையின் படிப்பினையாக வேண்டும்.
  3. முழுமையான அர்ப்பணிப்பு – அர்பணிப்பு அரைமனதுடன் அல்ல; முழுமனதுடன் இருக்க வேண்டும். 

இவை எளிதல்ல. ஆனால் உண்மையான சீடரால் மட்டுமே இவை சாத்தியமாகும்...

4. இன்று நமக்கான  செய்தி

இன்று நாம் இன்றைய இறை வார்த்தையின் அடிப்படையில் நமக்குள் எழுப்ப வேண்டிய கேள்விகள்..

  • நான் உண்மையில் கடவுளின் திருவுளத்தை தேடுகிறேனா?
  • என் உறவுகளை கிறிஸ்துவின் அன்பு மாற்றுகிறதா?
  • நான் எனது சிலுவையைச் சுமந்து இயேசுவின் பாதையில் செல்வதற்கு தயாரா?

சகோதரர் சகோதரிகளே,
நாம் பலவீனமானவர்கள். நம் திட்டங்கள் தோல்வியடையலாம். ஆனால் தூய ஆவியின் வழிகாட்டுதலால், கிறிஸ்துவில் சகோதரத்துவ அன்பால், சீடத்துவத்தின் முழு அர்ப்பணத்தோடு நாம் வாழ்ந்தால், நம்முடைய வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்வாக மாறும்.

என்றும் அன்புடன்

அருள்பணி ஜே. சகாயராஜ்

 திருச்சி மறை மாவட்டம் 

யாருடன் ஒப்புரவு... (6.9.2025)

"கடவுள் தம்மோடு ஒப்புரவாக்கினார்"


அன்பான சகோதரர் சகோதரிகளே,

இன்றைய வாசகங்களில் இரு முக்கியமான செய்திகளை நாம் கேட்கிறோம். ஒன்று திருத்தூதர் பவுலின் வாயிலாக – கடவுள் தம் மகனின் சாவினால் நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார் என்பதே. மற்றொன்று, இயேசு கூறிய ஓய்வு நாள் நிகழ்வின் மூலம் – உண்மையான கடவுள் வழிபாடு என்ன என்பதை விளக்குவதாகும்.

1. முன்பு பகைவர்கள் – இப்போது நண்பர்கள்

பவுல் கூறுகிறார்: "முன்பு நீங்கள் இறைவனோடு உறவற்றவர்கள்; பகைவர்கள்; தீச்செயல்கள் புரிந்தவர்கள்."
ஆனால் இப்போது, இயேசுவின் சிலுவைச் சாவினால் நாம் தூயோரும் மாசற்றோரும் குறை சொல்லுக்குப் புலப்படாதவர்களுமாக மாறியுள்ளோம்.
இது கடவுளின் மிகப்பெரிய கருணை!
அவர் நம்மைத் தண்டிக்கவில்லை, மாறாக தம்மோடு ஒப்புரவாக்கினார்.
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது எப்போதும் “ஒப்புரவடைய கூடிய வாழ்க்கை” –ஆம் இந்த ஒப்புரவு கடவுளோடு, அயலானோடு, நம்முடனும் நாளும் தொடர வேண்டும். 

2. நற்செய்தியில் உறுதி நிலை

பவுல் இன்னொரு எச்சரிக்கையைச் சொல்கிறார்: "நீங்கள் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அதில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும்."
உலகத்தில் சோதனைகள் வரும். நம்முடைய நம்பிக்கை அசைக்கப்படும்.
ஆனால் நாம் நிலைத்திருக்க வேண்டும்.
எப்படி வீடுகளை வலுவான அடித்தளத்தில் கட்டுகிறோமோ, அதுபோல் நம்முடைய நம்பிக்கையும் நற்செய்தி மீது உறுதியாக அமைய வேண்டும்.

3. ஓய்வு நாள் – மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே

இயேசுவின் காலத்தில் பரிசேயர்கள் ஓய்வு நாளைச் சட்டமாக மட்டும் பார்த்தார்கள்.
சீடர்கள் பசித்ததால் கதிர்களை எடுத்துத் தின்னும்போது, அவர்கள் குற்றம் சாட்டினர்.
ஆனால் இயேசு கூறினார்: "ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே."
அதாவது, கடவுள் கொடுத்த ஓய்வு நாள் விதிகள், மனிதரை சுமைப்படுத்த அல்ல; அவர்களுக்கு கடவுளின் வழிகாட்டலை உணர்த்துவதும் ஆரோக்கியமும் தருவதற்காகவுமே....

இன்றைய உலகில் நாமும்  கேள்வி கேட்க வேண்டும்:

  • நம் சமயச்சட்டங்கள், நம் வழிபாடுகள், நம் பழக்கவழக்கங்கள் – இவை மனிதனுக்கு உணர்த்துவது என்ன? கேள்வி எழுப்பி சிந்திப்போம் ....

4. இன்றைய வார்த்தை வழியாக நமக்கு கிடைக்கும் அழைப்பு

கடவுள் நம்மை ஒப்புரவாக்கினார்.
ஆகவே நாமும்:

  • பிறருடன் ஒப்புரவில் வாழவேண்டும்.
  • பழிசுமைகள், பகைமைகள், மன்னிப்பில்லாத மனநிலைகள் – இவற்றை விட்டுவிட வேண்டும்.
  • சமய வழிபாடுகளைச் சட்டமாக மட்டும் பார்க்காமல், அன்பில் நடைமுறையாகக் கையாள வேண்டும்.

எனவே அன்பானவர்களே,
கடவுள் தம்மோடு நம்மை ஒப்புரவாக்கினார்.
இயேசு நமக்காகத் தம்மை அர்ப்பணித்தார்.
ஆகவே நாம் நம்பிக்கையில் உறுதியாக நிலைத்து, அன்பில் நடந்து, ஓய்வு நாளைச் சட்டமாக அல்ல, கடவுளின் உடனிருப்பை உணரும் நாளாக எண்ணி வாழ அழைக்கப்படுகிறோம்.

என்றும் அன்புடன்

அருள்பணி ஜே. சகாயராஜ்

 திருச்சி மறை மாவட்டம் 

திங்கள், 1 செப்டம்பர், 2025

வாழ்க்கையின் மையம் இயேசுவே...(5.9.2025)

அன்பான சகோதரர் சகோதரிகளே,

இன்றைய வாசகங்களில் இரண்டு முக்கியமான உண்மைகளை நாம் கேட்கிறோம்.

என்றும் அன்புடன்

அருள்பணி ஜே. சகாயராஜ்

 திருச்சி மறை மாவட்டம் 

1. அனைத்தும் கிறிஸ்துவில் படைக்கப்பட்டது 

திருத்தூதர் பவுல் சொல்லுகிறார்:

"அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன."

இது இன்று நமக்கு ஒரு பெரிய உண்மையை நினைவூட்டுகிறது – நம்முடைய வாழ்க்கையின் மையமும், நோக்கமும், இலக்குமாக இயேசு கிறிஸ்துவே இருக்கிறார்.

  • வானமும், பூமியும், அதிகாரமும், ஆட்சியும் – எதுவும் அவர் இல்லாமல் இல்லை.
  • நாம் நம்புவது முதல் நாம் செய்கிற ஒவ்வொரு செயலிலும் அவர் தான் ஆதாரம்.
  • சிலுவையின் இரத்தத்தால் நமக்காக அமைதி கொடுத்தவர் அவர்.

அதனால், கிறிஸ்துவின்றி நம் வாழ்வு முழுமையற்றது.
நாம் அடிக்கடி நம்முடைய வாழ்க்கையை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்று எண்ணுகிறோம். ஆனால் உண்மையில் அனைத்தும் அவரில்தான் நிலைபெறுகிறது.

2. மணமகன் உடன் இருக்கும் மகிழ்ச்சி...

 “உமது சீடர்கள் ஏன் நோன்பு இருக்கவில்லை?”

அப்போது இயேசு பதிலளிக்கிறார்:

“மணமகன் உடன் இருக்கும் வரை அவர்கள் நோன்பு இருக்க முடியாது.”

இங்கே இயேசு தம்மையே மணமகனாக ஒப்பிட்டுக் கூறுகிறார்.

  • மணமகன் இருக்கும்போது விருந்தினர்கள் மகிழ்ச்சி கொண்டாடுவார்கள்.
  • மணமகன் பிரியும் போது தான் நோன்பும் துன்பமும் வரும்.

அதாவது, கிறிஸ்துவுடன் வாழும் வாழ்க்கை என்பது ஒரு மகிழ்வான உறவு.
ஆனால் அதே நேரத்தில் அவர் சிலுவையில் நம்மக்காகப் உயிர்விடும் போது, அவர் சீடர்களும் துன்பத்தில் பங்கெடுக்க வேண்டும் என்பதையும் நினைவூட்டுகிறார்.

3. புதிய திராட்சை மதுவும் புதிய தோற்பைகளும்

இயேசு மேலும் சொல்கிறார்:

  • புதிய மதுவை பழைய தோற்பையில் வைக்க முடியாது.
  • புதிய மதுவை புதிய தோற்பையில் தான் வைக்க வேண்டும்.

இதன் அர்த்தம் – கிறிஸ்துவில் நாம் புதிதாய் பிறந்தவர்கள்.
அவருடைய அருளையும் உண்மையையும் அனுபவிக்க நம்முடைய பழைய மனநிலையை, பழைய பாவ பழக்கங்களை விட்டுவிட வேண்டும்.
புதிய மனிதராக, புதிய இதயத்தோடு வாழ வேண்டும்.

அன்பர்களே,

  • கிறிஸ்துவில்தான் அனைத்தும் படைக்கப்பட்டது.
  • கிறிஸ்துவுடன் வாழ்வது நமக்கு உண்மையான மகிழ்ச்சியை தருகிறது.
  • ஆனால் கிறிஸ்துவை பின்பற்ற, நம்முடைய பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு புதிய வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆகையால், நாம் அனைவரும் இன்று இதயத்தில் உறுதியேர்ப்போம்:

  • “என் வாழ்க்கையின் மையம் இயேசுவே” என்று.
  • அவரோடு ஒன்றாய் இணைந்து புதிய மனிதராக வாழ்வோம்.

என்றும் அன்புடன்

அருள்பணி ஜே. சகாயராஜ்

 திருச்சி மறை மாவட்டம் 

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

மனிதரைப் பிடிப்போம்....(4.9.2025)

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,

இன்றைய இரு வாசகங்களும் நமக்கு நம்பிக்கை வாழ்வின் இரு பரிமாணங்களை நினைவுபடுத்துகின்றன:

  1. இருளிலிருந்து ஒளிக்குள் அழைக்கப்பட்ட வாழ்க்கை (கொலோசையர் 1:9-14)
  2. அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றும் அர்ப்பணிப்பு (லூக்கா 5:1-11)

1. இருளிலிருந்து ஒளிக்குள் அழைப்பு

திருத்தூதர் பவுல் கொலோசையருக்குச் சொல்கிறார்: “கடவுள் நம்மை இருளின் அதிகாரத்திலிருந்து விடுவித்து, தம் அன்பான மகனின் ஆட்சிக்கு உட்படுத்தினார்.”

இது நமது கிறிஸ்தவ அடையாளம்:

  • நாம் பாவத்தின் அடிமைத்தனத்தில் அல்ல, மீட்பியின் ஒளியில் வாழ்கிறோம்.
  • நம்பிக்கை என்பது அறிவு மட்டும் அல்ல; அது நற்செயல்களில் வெளிப்படும் ஒரு வாழ்க்கை.
  • கடவுளை அறிதல் என்பது புத்தக அறிவல்ல; அன்பு, பொறுமை, மனஉறுதி, நன்றி ஆகியவற்றின் மூலம் வெளிப்படும் அனுபவம்.

2. இயேசுவைப் பின்பற்றும் அர்ப்பணிப்பு

நற்செய்தியில் நாம் சீமோன் பேதுருவின் அனுபவத்தைப் பார்க்கிறோம்.

  • ஆழத்திற்கு செல்: இயேசு சீமோனிடம் சொன்னார் – “ஆழத்திற்குத் தள்ளிச் சென்று வலைகளைப் போடுங்கள்.” நம் வாழ்க்கையிலும் கடவுள் நம்மை மேற்பரப்பில் அல்ல, ஆழமான நம்பிக்கைக்கு அழைக்கிறார். சிரமங்களிலும் தோல்விகள் வந்தாலும் கூட அவர் சொல்கிற வார்த்தையில் நம்பிக்கை வைத்து முன்னேற வேண்டும்.

  • வியப்பும் தாழ்ச்சியும்: பெருமளவு மீன் கிடைத்தபோது, பேதுரு விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி” என்று சொன்னான். இயேசுவை உண்மையில் சந்திக்கும் போது நம்முள் தாழ்மை பிறக்கிறது; நம் பலவீனத்தையும் ஒப்புக்கொள்கிறோம்.

  • அனைத்தையும் விட்டுவிடுதல்: நற்செய்தி சொல்லுகிறது – “அவர்கள் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.” உண்மையான சீடத்துவம் என்பது பாதி அர்ப்பணிப்பு அல்ல; முழுமையான ஒப்புதலே. இயேசுவுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுவிடும் துணிவு தான் சீடத்துவத்தின் அடையாளம்.

3. இன்று நம் வாழ்விற்கான செய்தி

  • நம்மையும் கடவுள் இருளிலிருந்து ஒளிக்குள் அழைத்துள்ளார். அதனால் நாமும் அன்பு, நீதி,மன்னிப்பு,  தூய்மை நிறைந்த வாழ்வில் நிலைத்திருக்க வேண்டும்.
  • இயேசு இன்று நம்மிடம் கேட்கிறார்: “உமது வலைகளை ஆழத்தில் போடு.” அதாவது, சிரமங்களைத் தாண்டியும் அவர்மீது நம்பிக்கை வையுங்கள். இதுவே கிறிஸ்துவைப் பின்பற்றுவதாகும்.

இன்று இறைவார்த்தை நம்மை 

  • ஒளியில் வாழ,
  • நம்பிக்கையுடன் ஆழத்திற்கு செல்ல,
  • அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்ற. 

அழைப்புவிடுக்கிது...

எனவே நாம்  “மனிதரைப் பிடிக்கும் மீனவர்களாகி, நம் வாழ்க்கையின் மூலம் பலரை இறைவனுடைய அன்பின் வலைக்குள் கொண்டுவர முயல்வோம்....

என்றும் அன்புடன்

அருள்பணி ஜே. சகாயராஜ்

 திருச்சி மறை மாவட்டம் 

நாமும் நற்செய்தியை அறிவிப்போம்....(03.09.2025)

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,

இன்றைய வாசகங்களில் கடவுள் நமக்கு சொல்லித் தரும் இரண்டு  உண்மைகள்:

  1. நற்செய்தி உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது (கொலோசையர் 1:1-8).
  2. இயேசு அனைவருக்கும் இறையாட்சியை அறிவிக்க வந்தார் (லூக்கா 4:38-44).

1. நற்செய்தியின் வலிமை

திருத்தூதர் பவுல் கூறுகிறார்: “உலகம் முழுவதும் பரவிப் பயனளித்துவரும் நற்செய்தி உங்களை வந்தடைந்தது”.

  • நற்செய்தி வெறும் வார்த்தை அல்ல, அது மாற்றம் கொண்டுவரும் சக்தி.
  • கொலோசையரில் நம்பிக்கை, அன்பு, நம்பிக்கை வாழ்வு மலர்ந்தது, அதுபோல நம்மிடமும் நற்செய்தி பலன் தர வேண்டும்.
  • நற்செய்தி அறிவிக்கப்பட்ட  இடங்களில் ஒற்றுமை, சேவை, கருணை ஆகியவை மலர்ந்தன.

2. இயேசுவின் பணிக்கோள்

இயேசு சீமோனின் மாமியாரை குணமாக்குகிறார்; நோயாளிகளை குணமாக்குகிறார்; பேய்களை விரட்டுகிறார்.
ஆனால் அவர் தன் பணியை மட்டும் அங்கேயே நிறுத்தவில்லை. அவர் சொல்கிறார்:
“நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்.”

  • இதன் வழியாக நாம் அறிவது: இயேசு அனைவருக்காகவே வந்தார்; 
  • அவர் எங்கு சென்றாரோ அங்கே இறையாட்சியின் மகிழ்ச்சி வெளிப்பட்டது.

3. நமக்கு அழைப்பு

இன்று இந்த வாசகங்கள் நமக்கு நினைவூட்டுவது:

  • நற்செய்தி நம்மை ஒவ்வொரு நாளும் வந்தடைகிறது... அதன்படி நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் ... மேலும் அந்நற்செய்தியை நாம்  மட்டும் வைத்துக் கொள்ளாமல் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
  • நம்முடைய வாழ்க்கை, வார்த்தை, செயல்களில் இயேசுவின் மகிழ்ச்சியை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
  • நோயால் துன்பப்படும் ஒருவருக்கு ஆறுதல் சொல்லும் போது, தனிமையில் இருப்பவரை தேடும் போது, வறியவருக்கு உதவும் போது – நாமும் நற்செய்தியை அறிவிக்கிறோம்.

அன்பான சகோதர சகோதரிகளே,
இன்றைய இறை வாக்கு நம்மை பல வழிகளில் ஊக்கப்படுத்துகிறது:

  • நற்செய்தி நமக்குள் பலன் தரட்டும்.
  • நாம் அனைவரும் நற்செய்தியின் சாட்சிகளாக வாழ்வோம்.
    இயேசு போல, நாமும் எங்கு சென்றாலும் இறையாட்சியை எடுத்துச் செல்லும் கருவிகளாக இருப்போம்.

என்றும் அன்புடன்

அருள்பணி ஜே. சகாயராஜ்

 திருச்சி மறை மாவட்டம் 

ஒளியின் பிள்ளைகளாக வாழ்வோம் ...(02.09.2025)

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,



இன்றைய வாசகங்கள் நமக்கு இரு பெரும் உண்மைகளை வெளிப்படுத்துகின்றன:

1. விழிப்புணர்வோடும் தெளிவோடும் வாழ வேண்டும்

திருத்தூதர் பவுல் கூறுகிறார்:
“ஆண்டவருடைய நாள் திருடன் இரவில் வருவது போல வரும்.”
அதாவது நாம் எப்போது ஆண்டவரைச் சந்திக்க வேண்டி வருமோ, அந்த நேரம் நமக்குத் தெரியாது.
ஆகவே இருள் சார்ந்தவர்களாக அல்ல, ஒளியைச் சார்ந்தவர்களாக வாழ வேண்டும் என்று அழைக்கப்படுகிறோம்.

2. கிறிஸ்து நமக்காக இறந்தார் – நாமும் அவரோடு இணைந்து வாழ வேண்டும்

பவுல் மேலும் கூறுகிறார்:
“நாம் இருந்தாலும் இறந்தாலும் அவரோடு இணைந்து வாழும் வண்ணம் அவர் நம் பொருட்டு இறந்தார்.”
இது நமக்கு மிகப் பெரிய நம்பிக்கை.
இறைவன் நம்மைத் தம் சினத்திற்கு ஆளாக்க அல்ல, மீட்புக்காக படைத்தார்.
அதனால்தான் இயேசு சிலுவையில் தன் உயிரை அர்ப்பணித்தார்.
அவரோடு வாழ்வது என்றால், அவரின் போதனைகளுக்கு இணங்க தினசரி வாழ்வில் நடந்து கொள்வதே.
விழிப்புணர்வோடு நாமும் நற்செயல் செய்து, நாம் வாழும் உலகில்,
கிறிஸ்துவின் ஒளியை வெளிப்படுத்த வேண்டும்.

3. இயேசுவின் அதிகாரம் – நமக்கான விடுதலை

நற்செய்தியில், சாத்தான் இயேசுவிடம்,
“நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” என்று கத்துகிறது.
அதாவது, தீய ஆவிகளுக்கே இயேசுவின் வல்லமை தெரிந்திருந்தது.
இயேசு ஒரு வார்த்தை சொன்னதும் – பேய் வெளியேறுகிறது.
இந்நிகழ்வு நமக்குச் சொல்லும் பாடும்
எத்தனை பெரிய பாவம், பழக்கம், கஷ்டம், சோதனை எதுவாயினும் –
அதை விடுவிக்க இயேசுவிடம் அதிகாரமும் வல்லமையும் இருக்கிறது.
அவரை நாடினால், அவர் நம்மை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து,
அமைதியையும் சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும்  அளிப்பார்.

4. ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோம்

பவுல் ஒரு அழகான வார்த்தை சொல்கிறார்:
“நீங்கள் ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்; ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்யுங்கள்.”
நமது நம்பிக்கை  வாழ்க்கை தனிப்பட்டதாக அல்ல; அது சமூக வாழ்க்கை.
ஆகவே, நாம் நம்முடைய சகோதர சகோதரிகளைத் தாழ்வடையச் செய்யாமல்,
ஊக்கப்படுத்தி, உயர்த்தி, முன்னேற்றம் அடைய உதவ வேண்டும்.
இது தான் கிறிஸ்தவ சமூகத்தின் அடையாளம்.

அன்பர்களே,

  • விழிப்போடு வாழ்வோம்,
  • கிறிஸ்துவோடு இணைந்திருப்போம்,
  • தீமையிலிருந்து விடுதலை பெறுவோம்,
  • ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டி வளர்ப்போம்.

அப்போது நாம் உண்மையில் ஒளியின் பிள்ளைகளாக, ஆண்டவருடைய வருகைக்கு ஆயத்தமாக இருப்போம்.

என்றும் அன்புடன் 

அருள்பணி ஜே. சகாயராஜ்

 திருச்சி மறை மாவட்டம் 

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...