செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

நன்மையை எதிர்நோக்கிட....(1.9.2021)

நன்மையை எதிர்நோக்கிட....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த அம்மாவுக்கு அல்லது அப்பாவுக்கு அல்லது அண்ணனுக்கு அல்லது அக்காவிற்கு என்று கடிதம் எழுதிய நாட்கள் எல்லாம் கடந்து போய்விட்டன இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்ற போது மலரும் நினைவுகள் போல எழுதிய கடிதங்கள் தான் நினைவுக்கு வந்தன.

 ஆம் இன்றைய முதல் வாசகத்தில் கொலோசையர் நகர மக்களுக்கு திருத்தூதர் பவுலும் திமோத்தேயுவும் வாழ்த்துக் கூறி கடிதம் எழுதுகிறார்கள்.


 அறிவியல் கண்டுபிடிப்புகளின் மேதை தாமஸ் ஆல்வா எடிசன் தன்னுடைய நிறுவனத்திற்கு ஆள் எடுக்க நேர்காணல் நடத்துவார். நல்ல அறிவார்ந்த ஒளிவீசும் இளைஞனாக ஒருவர் நேர்காணலில் பங்கெடுக்கிறார் என அறிந்தால் அவனை இரவு உணவிற்கு அழைத்துச் செல்வார். உணவு வந்ததும் ஒரு வாய் ருசி பார்த்துவிட்டு இன்னும் கொஞ்சம் உப்பு தேவைப்படுகிறது என்று சொல்வார். பிறகு அந்த இளைஞனை கவனிப்பார். அந்த இளைஞன் உடனடியாக கொஞ்சம் உப்பை தன்னுடைய தட்டில் போட்டுக் கொண்டால் அவனை தன்னுடைய நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டார். மாறாக அந்த இளைஞன் தான் ருசி பார்த்துவிட்டு உப்பு தேவையா என்று தெரிந்த பிறகு உப்பு சேர்த்துக் கொண்டால் அவனை அந்த நிறுவனத்திற்கு தேர்ந்தெடுப்பார்.

தாமஸ் ஆல்வா எடிசன் நிறுவனத்திற்கு ஆள் எடுக்கும் பொழுது எப்படி தாமாக சிந்தித்து செயல்படக்கூடிய நபரை தேர்ந்தெடுத்தாரோ அதுபோலவே இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் கொலோசையர்  நகர மக்களுக்கு திருத்தூதர் பவுலும் திமோத்தேயுவும் அறிவித்திருந்தாலும் இன்றையச் சூழலில் அவர்களிடம் காணப்படக்கூடிய இயேசுவின் மதிப்பீடுகலான நம்பிக்கையையும், அன்பையும் அறிந்துகொண்டு அவர்களை வாழ்த்தும் பாராட்டும் தங்கள் கடிதத்தை தொடங்குகிறார்கள்.  அவர்களிடத்தில் காணப்படுகின்ற நம்பிக்கையும் அன்பும் அவர்கள் நன்மையை எதிர் நோக்குவதால் கிடைத்தது நம்பிக்கையும் அன்பும் மேலும் வாங்கியதால் அவர்கள் திருத்தொண்டர்கள் என அழைக்கப்படுவார்கள் என்று திருத்தூதர் பவுலும் திமோத்தேயுவும்  தங்கள் கடிதம் வழியாக உறுதிப்படுத்துகிறார்கள்.

நாமும் கொலோசையர் நகர மக்களைப் போல நன்மையை எதிர் நோக்க கூடியவர்களாக இது நல்ல திருத்தொண்டர்களாக மாறிட இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.
இன்றைய நாளில் நாம் வாசிக்க கேட்கின்ற நற்செய்தி வாசகத்தில் கூட இயேசுவின் சீடர்கள் கடும் காய்ச்சலால் துன்புற்ற பேதுருவின் மாமியார் உடல்நிலைக்காக ஆண்டவரிடத்தில் மன்றாடுகிறார்கள். அதுபோலவே ஆண்டவர் இயேசு கிறிஸ்து இருக்கிறார் என்ற செய்தியை கேள்விப்பட்டு பலரும் பல நோயாளிகள், பேய் பிடித்தவர்களை ஆண்டவர் இயேசுவிடம் கொண்டு வந்து நலம் பெற்றுக் கொண்டு சென்றார்கள் என  இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம். இயேசு தனிமையாக சென்று ஜெபிக்க சென்றபோது கூட அவரைத் தேடிச் சென்ற திரளான மக்கள் அவரிடமிருந்து பலவதமான நன்மைகளை தாங்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல்
 அடுத்த வரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பல நோயாளிகளை அவரிடத்தில் அழைத்துச் சென்றார்கள் என இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம்.

தமது நலனை மட்டும் மையப்படுத்தி வாழும் இந்த உலகத்தில் அடுத்தவர் நலனை மையப்படுத்தி வாழக்கூடிய மக்களாக நாம் வாழும் போதுதான் நன்மையை எதிர் நோக்கிய மக்களாக இச்சமூகத்தில் நாம் இருக்க முடியும் கொலோசையர் நகர மக்கள் அவ்வாறுதான் இருந்தார்கள். எனவே தான் அவர்களிடத்தில் ஆண்டவர் இயேசுவின் மீதான ஆழமான நம்பிக்கையும், அடுத்தவர் மீதான அன்பும் தொடர்ந்து இருந்தது. அதை கண்டதும் அவர்களை பாராட்டியதுபோல நாமும் நமது வாழ்வில் நன்மையை எதிர் நோக்கி இருக்கக் கூடியவர்களாக இருக்கும்பொழுது நமது வாழ்வும் கொலோசையர் நகர மக்களைப் போல நம்பிக்கைக்குரிய அன்புக்குரியவரிய வாழ்வாக அமையும் அப்போது நானும் நல்ல திருத்தொண்டர்களக மாறலாம். அத்தகைய வாழ்வை நாம் நமது வாழ்வாக மாற்றிக்கொண்டு ஆண்டவர் இயேசு காட்டுகினற பாதையில் அவரை பின்தொடர கூடிய உண்மை சீடர்களாக பயணித்திட இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

இரவா....? பகலா....?(31.8.2021)

 இரவா....? பகலா....?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
       ஒரு ஊரில் ஒருவன் இரண்டு நாய்களை வைத்து இருந்தான். வெள்ளை நிற நாய், கருப்பு நிற நாய். அவ்வப்போது இரண்டு நாய்களுக்கும் இடையே போட்டிகள் நடக்கும். சில நாட்கள், சில நேரங்களில், வெள்ளை நிற நாயானது வெற்றி பெறும். சில நேரங்களில் கருப்பு நிற நாயானது வெற்றிபெறும். இரண்டு நாய்களும் சண்டையிடும் பொழுது நாயின் உரிமையாளர் ஒரு குறிப்பிட்ட நாயின் மீது பந்தயத்தை கட்டுவார். அது எப்படி என தெரியவில்லை, அவர் எந்த நாயின் மீது பணத்தை கட்டுகிறாரோ, அந்த நாய்தான் வெற்றி பெறக் கூடியதாக இருந்திருக்கிறது. எப்படி இது சாத்தியமானது என்று கேள்வி எழுப்பிய போது, அவர் கூறினாராம், எந்த நாய்க்கு ஒரு வாரம் நான் உணவிட்டேனோ, அந்த நாயின் மீது தான் பந்தயம் கட்டுவேன் என்று கூறினாராம். 

               நம்மிடையே காணப்படும் இரவு பகல் என்ற இரண்டும் மனித வாழ்வில் இன்றியமையாததாக உள்ளது. இந்த இரவு பகலில் நாம் எதை சார்ந்த பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்? என்பது நம் ஒவ்வொருவரையும் பொறுத்தது. நாம் பகலுக்குரிய மக்களாகவா? அல்லது இருளுக்குரிய மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன.  



 பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது. எனவே உருவாகிறது, இரவு பகல். நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றுதான், இந்த இரவும் பகலும்.  இரவும் நிரந்தரமல்ல, பகலும் நிரந்தரமல்ல. இரண்டும் மாறி மாறி வந்துகொண்டே தான் இருக்கின்றது.  

       பகலில் ஒரு செயலை செய்வதற்கு தெளிவாக நமக்கு கண் தெரியும்.  பகலில்  செய்யக் கூடிய செயலை பலரும் உற்று நோக்குவார்கள். ஆனால், இரவு எப்போதுமே கனவுக்கான இடமாகவே கருதப்படுகிறது.  இரவில் செய்யக்கூடிய செயல்கள் பெரும்பாலும் யாரும் அறியாதவையாகத் தான் இருக்கிறது.  யாரும் அறிய மாட்டார்கள் என்ற எண்ணம்தான், இரவில் பல தவறான செயல்களையும் செய்யத் தூண்டுகிறது.  எனவேதான் திருடுவதற்கு ஏற்ற நேரம் இரவாக இருக்கிறது. 

      நாம் இந்த மண்ணுலகில் இந்த இரவையும் பகலையும் குறித்து சிந்திக்கின்ற பொழுது,  பகலுக்குரிய மக்களாக,  அதாவது ஒளிக்குரிய மக்களாக நாம் வாழ இறைவன் அழைக்கின்றார்.  இருளுக்குரிய மக்களாக நாம் வாழ்வதை விட்டுவிட்டு,  பகலுக்குரிய, பலரும் பார்க்கும் வகையில், பல விதமான நல்ல செயல்களை செய்யக் கூடிய நல்லதொரு வாழ்வினை நாம் வாழ இறைவன் அழைக்கின்றார். 

அத்தகைய வாழ்வை நாம் மேற்கொள்ளும் பொழுது, இயேசுவிடம் காணப்பட்ட அதிகார போதனையானது நம்மிடமும் வெளிப்படும். நாம்  பகலில் பலரும் பார்க்கும் வண்ணம் பல நல்ல செயல்களைத் தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.  நாம் செய்கின்ற நல்ல செயல்களை பார்ப்போர், தங்கள் வாழ்விலும் அந்த நற்செயலை செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். பகலுக்கு உரிய மக்களாக, ஒளிக்குரிய மக்களாக, நாம் இந்த சமூகத்தில் பயணிக்கின்ற போது, இயேசுவைப் போல யாருக்கும் அஞ்சாது துணிவோடு இந்த சமூகத்திலே பலவிதமான நற்செயல்களை செய்து கொண்டே, இயேசுவைப் போல பயணம் செய்ய முடியும்.

      நற்செயல்கள் செய்வதால் பலர் நம்மை சூழ்ச்சிக்கு உள்ளாக்கி, நம்மை நிலைகுலைய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படலாம்.  ஆனால் மனதில் நிறுத்துங்கள்! நாம் ஒளிக்குரிய மக்களாக, பகலுக்கு உரிய மக்களாக, ஒளியைச் சார்ந்தவர்களாக, நாம் ஆண்டவர் இயேசுவின் பணியினை மேற்கொண்டு இருக்கிறோம்.  

               நாம் இரவைச் சார்ந்தவர்களாக, யாரும் அறியாத செயல்களைச் செய்பவர்களாக இல்லாது, ஒளிக்குரிய மக்களாக இருக்கின்ற பொழுது,  உண்மையான உலகின் ஒளியான இறைவன், நம்மோடு இருந்து நம்மை வழிநடத்தி காத்தருள்வார்.


 இன்றைய வாசகங்களும், நாம் ஒளிக்குரிய மக்களாக இச்சமூகத்தில் பயணம் செய்ய அழைப்பு தருகின்றது. ஒளிக்குரிய மக்களாக பயணம் செய்கின்றபோது,  உண்மையை அதிகாரத்தோடு உரக்கச் சொல்வோம்.  அப்போது தீயது எண்ணக்கூடிய ஒவ்வொருவருமே நம்மை கண்டு அஞ்சுவார்கள்.  எப்படி அன்று  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை கண்டு தீய ஆவிகள் அஞ்சியதோ, அது போல, தீமை நம்மைக் கண்டு அஞ்சும், நாம் ஒளிக்குரிய மக்களாக வாழும் போது. ஒளிக்குரிய மக்களாக வாழ்ந்திட இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

அலட்சியம் செய்யப்படுவது முடங்கி விடுவதற்காக அல்ல...(30.8.2021)

அலட்சியம் செய்யப்படுவது முடங்கி விடுவதற்காக அல்ல...

எதுவும் தொடக்கத்தில் இருப்பது போலவே இறுதிவரை இருப்பதில்லை.
இல்லாதபோது தேடல் அதிகமாக இருக்கும் ஆனால் இருக்கும்போது அலட்சியமே அதிகமாக இருக்கும் இதுவே வாழ்க்கையாக இருக்கிறது இந்த உலகத்தில்.
அன்பு நெஞ்சங்களே வாழ்வில் அலட்சியம் என்பது பல நேரங்களில் பல இடங்களில் நாம் சந்திக்கின்ற ஒன்று. ஏன் பல நேரங்களில் நாம் பலருக்கு தருகின்ற பரிசாகவும் அது அமைகிறது.

இயேசு என்றாலே பொதுவாக அன்பானவர், இரக்கம் உள்ளவர், அனைவரையும் மன்னிக்க கூடியவர்,
 மகத்துவமான மனிதர். ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் பார்க்கின்ற இயேசு சொந்த ஊரில் இருந்து விரட்டப்பட்டவர், புரகணிக்கப்பட்டவர்,  தனது சொந்த ஊரில் அலட்சியம் செய்யப்படுகிறார். வாழ்வில் புறக்கணிப்பும் ஏற்றுக்கொள்ளப்படுதலும் எப்போதும் நம்மை பின்தொடர கூடியவைகள்.

 இயேசுவை காண்பதற்கு ஒரு கூட்டம் ஓடோடி வந்தது, இயேசுவின் வார்த்தைகளை கேட்பதற்கும், வார்த்தைகளின் படி தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்வதற்கும் பலர் இயேசுவை பின் தொடர்ந்தார்கள். ஆனால் இயேசு தனது சொந்த ஊரில் உள்ள மக்களால் இன்று புறக்கணிக்கப் படுகிறார். 

பொதுவாகவே வாழ்வில் நாம் அறியாதவர்களைவிட அறிந்தவர்களால் தான் பல நேரங்களில் அலச்சியம் செய்யப் படுகிறோம்.

ஆனால் அலட்சியம் செய்யப்படக்கூடிய நேரங்களை மனதில் கொண்டு வாழ்க்கை என்னும் பயணத்தில் நாம் சோர்ந்து விடக் கூடாது என்பதனை இறைவன் இன்றைய நாளில் நமக்கு உணர்த்துகின்றார்.

 இயேசு தனது சொந்த ஊரில் அலட்சியம் செய்யப்பட்ட நிலையிலும் அவர் தன் இயல்பை மாற்றிக் கொள்ளாதவராய் எப்போதும் எங்கெல்லாம் நம்பிக்கையாளர்கள் நிறைந்து இருக்கிறார்களோ அங்கெல்லாம் நலமான பல நல்ல பணிகளை செய்யக் கூடியவராக இருந்தார். நமது வாழ்விலும் நாமும் இயேசுவைப் போல நலமான பண பணிகளை முன்னெடுக்க கூடியவர்களாக இருக்க அழைக்கப்படுகின்றோம். பல நேரங்களில் நாம் செய்கின்ற நல்ல பண்புகளை, நல்ல செயல்களை அலட்சியம் செய்யக் கூடிய மனிதர்களை நாம் வாழ்வில் சந்திக்கலாம். ஆனால் அவர்களையெல்லாம் எண்ணி நாம் செய்யக்கூடிய நற்செயலை நிறுத்தி விடாது தொடர்ந்து இந்த சமூகத்தில் நல்ல செயலை செய்யக் கூடிய இயேசுவின் பணியாளர்களாய் பயணிக்க இன்றைய நாளில் இயேசுவின் வாழ்வு நமக்கு அழைப்பு தருகின்றது. 

மண்ணில் தோன்றிய ஒவ்வொரு மனிதனும் மரணத்தை சந்திக்க வேண்டும் என்பது காலத்தின் நியதியாக இருக்கின்ற சூழலில் நாம் மரணத்தை நெருங்கும் நேரம் வரை நல்ல செயல்களை செய்யக் கூடியவர்களாக யாரையும் அலட்சியம் செய்யாதவர்களாக ஒவ்வொருவரையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக, நன்மைகள் செய்யும் நல்ல பணியாளர்களாக இந்த சமூகத்தில் நாம் பயணம் செய்ய வேண்டும். அவ்வாறு நாம் பயணிக்கின்ற போது நாம் இந்த மண்ணுலக வாழ்க்கையை நிறைவு செய்து விண்ணக பிறப்பை அடைந்தாலும், நமது புகழ் இம்மண்ணில் ஓங்கிக் கொண்டு இருக்கும் அதற்கு நல்லதொரு உதாரணம் தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.
இயேசுவின் பாதையிலே நமது பாதச்சுவடுகளை பதியவைக்க வந்திருக்கக்கூடிய நாம் ஒவ்வொருவரும் இந்த சமூகத்தில் இந்த இயேசுவாக மாறிட இந்த இயேசுவை பிரதிபலித்திட இறையருள் வேண்டி இணைந்து ஜெபிப்போம்.

சனி, 28 ஆகஸ்ட், 2021

இறைவார்த்தை செயலாற்றுவது எப்போது? (29.8.2021)

இறைவார்த்தை செயலாற்றுவது எப்போது? 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் இன்று பேசுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.  ஆனால் கேட்பவர்களின் எண்ணிக்கை தான் மிகவும் குறைவு.  கேட்பதை விட பலர் பேசவே விருப்பம் கொள்கின்றனர். இன்று நான் சொல்வதை மற்றவர் கேட்பதில்லை என்பது தான் பல குடும்பங்களிலும்,  பல அலுவலகங்களிலும், பல உறவுகளிடமும் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கின்றது.  இஸ்ரயேல் மக்கள் பேசியதில் கடவுள் பலவற்றை கேட்டார்.  எனவேதான் எகிப்தில் அவர்கள் அடிமையாக துன்பத்தில் வாடிய போது, கடவுளிடம் முறையிட்டு அழுதார்கள். 

கடவுள் அவர்களின் குரலை, அதாவது அவர்கள் பேசியதை செவி கொடுத்துக் கேட்டார்.  எனவே தான் விடுதலை பயணப் புத்தகம் ஒன்பதாம் அதிகாரம் மூன்றாம் வசனத்தில் கடவுள் மோசேயிடம் கூறினார், இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது.  எகிப்தியர் அவர்களுக்கு இழைக்கின்ற துன்பத்தை நான் கண்டேன்.  நீ போய் அவர்களை மீட்டு வா என்று மோசேயை அனுப்பி வைக்கிறார். 

         ஆனால், இது போன்று பல வேளைகளில் இஸ்ரயேல் மக்கள் பேசியதை கடவுள் காது கொடுத்துக் கேட்டார்.  எகிப்தியர் தங்களை கொல்ல நெருங்கி வந்த சூழ்நிலையில், செங்கடலை பிரித்து அவர்களுக்கு பாதை அமைத்துக்கொடுத்த போதும் சரி,  உணவு இல்லை எங்களுக்கு என்று அவர்கள் வேண்டிய நேரத்திலும் சரி,  தண்ணீர் இல்லை என கடவுளுக்கு எதிராக முறுமுறுத்த நேரங்களிலும் சரி,  உரிமை நாட்டை அவர்களுக்கு வழங்கிட, மற்றவரோடு போரிட்ட நேரங்களிலும் சரி,  உரிமையாக்கிக் கொண்ட நாட்டை பகுதிகளாகப் பிரித்துக் கொண்டிருந்த நேரத்திலும் சரி,  இன்னும் பல சூழ்நிலைகளில் பல வேளைகளில் இஸ்ரயேல் மக்கள் பேசுவதை கடவுள் கேட்டார். 

     விவிலியத்தில் காணுகின்ற கடவுள் வெறும் பேசும் கடவுள் அல்ல, கேட்கும் கடவுள்.  இஸ்ரயேல் மக்கள் பேசுவதைக் கேட்டு,  அதற்கு பதில் தருகின்ற கடவுளாக இருந்தார்.  அந்தக் கடவுள்  இன்று  மோசே வழியாக பேசுவதைத் தான் இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம். விவிலியத்தில் 120 முறை "கேளுங்கள்" என்ற வார்த்தை இடம் பெறுகிறது. கேளுங்கள் என்பது தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பலவற்றை இந்த மக்களோடு பேசியதற்கான அடையாளமாகிறது.  கடவுள் குலமுதுவர்கள் வழியாக,  நீதித்தலைவர்கள் வழியாக, அரசர்கள் வழியாக, இறைவாக்கினர்கள் வழியாக, பலவற்றை இந்த சமூகத்தில் பேசினார்.  அவர் பேசியது எதுவும் அவருக்கானது அல்ல.  அவர் பேசியது நமக்கானது. 

       நாம் எப்படி வாழ வேண்டும்?  நாம் என்ன செய்யவேண்டும்?  எப்படிப்பட்ட மக்களாக இருக்க வேண்டும்?  என்பதைத் தான் அவர், குலமுதுவர்கள், நீதித்தலைவர்கள், அரசர்கள்,  இறைவாக்கினர்கள் வழியாக பேசினார். இன்று மோசே வழியாக அவர் அதைத் தான் நமக்கு முதல் வாசகத்தில் கற்பிக்கின்றார்.  எப்படிப்பட்ட மக்களாக வாழவேண்டும் என்பதை சொல்லித் தருகின்றார். 
      ஆனால்,  பல நேரங்களில் கடவுள் பேசியதை பலர் கேட்டார்கள். ஆனால் அவர்களெல்லாம் இன்றைய இரண்டாம் வாசகத்தில் யாக்கோபு எழுதிய கடிதம் முதல் அதிகாரம் இருபத்து இரண்டாம் வசனம் கூறுவது போல, "இறைவார்த்தையை கேட்பவர்களாக மட்டுமல்ல,  அதன்படி நடப்பவர்களாகவும் இருங்கள்"  என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளாதவர்களாகத் தான் இருந்தார்கள்.  பல நேரங்களில் பலர் நாம் பேசுவதை கவனிக்க வேண்டும் என எண்ணுகிறோம். ஆனால் பலர் பேசுவதை நாம் கவனிப்பதில்லை. கவனித்தாலும் அதனை நாம் செயல்களில் வெளிப்படுத்துவதில்லை. 

     இன்று கேட்பதை செயலாக்கப்படுத்த நமது செயல்கள் மூலம் வெளிப்படுத்த இறைவன் அழைப்பு தருகின்றார். 

         இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட பழைய சட்டங்களை கூறி,  இயேசுவையும் அவரது சீடர்களையும் குற்றம் சாட்ட முயலுகின்ற யூதர்களிடம் சட்டங்களை மீறியவர்களுக்கு வக்காலத்து வாங்குபவராக இயேசு செயல்படவில்லை.  மாறாக சட்டத்தின் உண்மைத் தன்மையை கற்பிக்கின்றவராக,  சொல்வதைக் கேட்டு விட்டு நகரும் வெளிப்புற மனிதராக அல்ல, உள்ளார்ந்த மாற்றத்திற்கு வித்திட கூடிய ஒரு புதிய மனிதராக வாழ இறைவன் அழைப்பு தருகின்றார். 

     இன்றும் நாட்டில் பலவிதமான சட்டங்கள் அரங்கேறுகின்றன. ஆனால் அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்க்கும் நிலை தொடர்கிறது.  உரிமையைக் கேட்டுப் போராடக் கூடாது.  மீறி போராட முயன்றால், தண்டனை, எனப் பல சட்டங்கள் நாளுக்கு நாள் உதயமாகின்றன.  ஏன் இவையெல்லாம்?  இச்சட்டங்கள் அன்றைய யூத மனநிலையை இன்று பிரதிபலிப்பது போல உள்ளன.  

           சட்டம்  என்பது மக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக என்கிறார்கள்.  நாடு என்பது மக்களை உள்ளடக்கியது.  மக்களின் மனங்கள் ஏற்க மறுக்கும் போது, நான் பேசுவதை நீ கேள் என்று அன்று இஸ்ராயேல் மக்கள் எவ்வாறு தங்களுடைய விருப்பத்தை மட்டும் முன்னிறுத்தி இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்களோ அந்த மனநிலையை இன்றும் தொடர்கின்ற ஒரு சூழ்நிலையை தான் இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நம்மால் பார்க்க முடிகிறது.  

                  ஆனால்,  ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நாம் பேசியதைக் கேட்டு புரிந்து கொண்டு நம் தேவையை நிறைவு செய்தார்.  அதுபோல இறைவன் பேசுவதையும் கேட்டு புரிந்து கொண்டு,  நாம் அதனை நமது செயலில்  வெளிக்காட்ட வேண்டும்.  ஒரு நாட்டிலும் ஒரு சட்டம் என்பது பலரின் கருத்துக்கு உட்பட்டு,  அது நல்லதா? கெட்டதா என்பதை ஆராய்ந்து, அது மக்களுக்கு ஏற்றதா? இல்லையா? என்பதை மக்களிடத்தில் கேட்டு தெளிவு பெற்று, அதனை சட்டமாக்கிட வேண்டும்.  ஆனால் இந்நிலை இன்று தொடர்கிறதா என்றால் பெரும்பான்மையான அமைச்சர்கள் இருந்தால் போதும், ஒரு சட்டத்தை அரங்கேற்றி விடலாம் என்ற சூழல்தான் இங்கு நிலவிக் கொண்டிருக்கிறது.  இச்சூழலில் இயேசுவின் மனநிலை நம்மில்  பிரதிபலிக்க வேண்டும். 


               பவுல் பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 2ம்  அதிகாரம் , 5 இறை வசனம் கூறுவதுபோல, 


கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!
பிலிப்பியர் 2:5


       கிறிஸ்து கொண்டிருந்த மனநிலை உங்களிலும் இருக்கட்டும் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப நமது உள்ளம் இயேசுவின் மனநிலையை, கடவுளின் மனநிலையை பிரதிபலிக்க வேண்டும். அப்போது தான் நாம் கடவுளைப் போல எல்லா சூழ்நிலையிலும் பேசுபவர்களாக மட்டுமல்லாது, கேட்பவர்களாகவும் இருந்து, அன்று இஸ்ரயேல் மக்களின் துயரத்தை துடைத்த இறைவனை நாம் நமது செயல்களின் மூலம் வெளிக்காட்டிட முடியும்.  கேட்பவராக மட்டும் கடந்து செல்லாது, செயலில், நமது நடத்தையில், இறைவார்த்தைக்கு உயிர் தருபவர்களாக மாறிட முயலுவோம்.  இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

அன்புப் பணியாற்ற...(28.08.2021)

 அன்புப் பணியாற்ற...

பொதுக்காலம் 21ஆம் வாரம் ஆகஸ்ட் 28 சனி; கிழமை

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 



இன்று நாம் தாய்த் திருஅவையாக இணைந்து புனித அகுஸ்தினாரை நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறோம்.  புனித அகுஸ்தினார் மிகப்பெரிய இறையியலாளர்.  ஆனால் இவரது இளமைப் பருவம் என்று பார்க்கின்ற போது, சமூகத்தில் தீயதெனப் படக்கூடிய அனைத்து விதமான தீமைகளின் ஒட்டுமொத்த உருவமாக இருந்தவர் அகுஸ்தினார்.  ஆனால் ஆண்டவரின் வார்த்தைகளை அவர் கேட்டபோது உள்ளத்தில் மாற்றம் அடைந்தவராய் இறைவார்த்தையை எடுத்து வாசிக்கத் தொடங்கினார்.  அன்பே அனைத்திற்கும் ஆணிவேர் என்பதை கண்டு கொண்டவராய்,  ஆண்டவர் இயேசுவின் மீது அதீத அன்பு கொண்டு, இந்த சமூகத்தில் அன்புப் பணியாற்றத் தொடங்கியவர்.  அறநெறிக்கு புறம்பாக வாழ்ந்த தன் வாழ்வை மாற்றிக் கொண்டு அறநெறியோடு ஆண்டவரின் வார்த்தைகளை மனதில் இருத்தி, இந்த சமூகத்தில் அன்பை விதைக்கும் மகத்துவமான பணியில் ஈடுபட்டவர் புனித அகுஸ்தினார் அவர்கள்.  

இந்த அன்பைக் குறித்தே இன்றைய முதல் வாசகத்தில், பவுல் தெசலோனிக்க நகர மக்களுக்கு கூறுகிறார். கடவுள் நம்மை அன்பு செய்வது போல நாமும் அடுத்தவரை அன்பு செய்ய வேண்டும் என அனைவருக்கும் அன்பை கற்பிக்கின்றார் புனித பவுல். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட ஒருவர் தன் பணியாளர்களை அழைத்து ஒவ்வொருவருக்கும் அவரவர் திறமைக்கு ஏற்ற வகையில் சில தாலந்துகளை கொடுத்து சில நாள் கழித்து அவற்றை திரும்பக் கேட்கின்றார். கொடுத்ததை இருமடங்காக மாற்றியவரை பாராட்டுகின்றார்.  ஆனால் கொடுத்ததை அப்படியே புதைத்து வைத்து அதை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கக் கூடியவரை சாடக் கூடியவராகவும், தண்டிக்கக் கூடிய நபருமாக அவர் இருக்கின்றார்.  

இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் இறைவன் ஒருவர் மற்றவரை அன்பு செய்ய நம்மை அறிவுறுத்துகின்றார். அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு இந்த சமூகத்தில் அனைவரையும் அன்பு செய்யக் கூடியவர்களாக, அரவணைக்கக் கூடியவர்களாக நாம் மாறுகின்ற போது,  இறைவன் நம்மைப் பார்த்து பெருமிதம் கொள்பவராகவும், நம் மீது அதீத அன்பைப் பொழியக் கூடியவராகவும் இருக்கின்றார். ஆனால் இறைவன் உணர்த்துவதை உணர்ந்து கொள்ளாது,  சக மனிதனை ஏற்றுக்கொள்ளாமல்,  சாதி, மதம், இனம், மொழி என பல பாகுபாடுகளை முன்னிறுத்தி, அடுத்தவரை புறக்கணித்து, இறைவன் விதைத்த அன்பை வெறும் வார்த்தையாக மட்டும்  வைத்துக்கொண்டு பயணிப்பவர்களை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை.



எப்படி ஒரு பணியாளன் கொடுத்த தாலந்தை  நிலத்தில் மறைத்து வைத்து, அதைக் கொண்டு போய் மீண்டும் அவரிடத்திலேயே கொடுக்கக் கூடியவனாக இருந்தானோ அவனைப் போல, இறைவன் கொடுக்கின்ற அன்பை அடுத்தவரோடு பகிர்ந்து கொள்ளாது, சாதி, மத, இன, மொழி பாகுபாடுகளை முன்னிறுத்தி பயணிக்க கூடியவர்களாய் நாம் இருப்போமாயின், இறைவன் நம்மையும்  புறம்தள்ளக் கூடியவராக மாறுவார் என்பதை உணர்ந்து கொண்டவர்களாய்,  இந்த மண்ணிலே வாழும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும், ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை கொள்ளக் கூடியவர்களாகவும் மாறுவோம். 

எப்படி தவறான பாதையில் வழி நடந்த புனித அகுஸ்தினார் தன் வாழ்வில் மாற்றம் அடைந்த பிறகு பலரும் ஆண்டவரின் அன்பை அறிந்து கொள்ளவும்  உணர்ந்து கொள்ளவும் ஊன்றுகோலாய் மாறியது போல,  நாமும் நமது வாழ்வில் இறைவனை மற்றவர் அறிந்து கொள்ள, அன்பின் வழி பாதையை உருவாக்குவோம்.

இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.



வியாழன், 26 ஆகஸ்ட், 2021

அறநெறியோடு வாழ... (27.08.2021)

 அறநெறியோடு  வாழ...

பொதுக்காலம் 21ஆம் வாரம் ஆகஸ்ட் 27 வெள்ளி; கிழமை

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!



இன்று நாம் தாய்த்திரு அவையாக இணைந்து புனித மோனிக்கா அவர்களை நினைவு கூருகின்றோம்.  யார் இந்த மோனிகா? என்றால் இவர் புனித அகுஸ்தினாரின் அன்னை.  புனித அகுஸ்தினாரின் அன்னைக்கு திருஅவை ஏன் இவ்வளவு முக்கியத்துவத்தை தருகிறது என்றால்,  ஒரு பிள்ளையின் வளர்ப்பில் அதிக பங்கு வகிக்கக் கூடிய ஒரு பெண் அந்த குழந்தையின் தாயாக மட்டுமே இருக்க முடியும். அகுஸ்தினார்  தனது வாழ்வில் பலவிதமான தவறுகளோடு அறநெறிக்கு முரண்பட்டு வாழ்ந்த நிலையில், அவர் அறநெறியோடு இந்த சமூகத்தில் நல்லதொரு குடிமகனாக வாழ வேண்டுமென அனுதினமும் இறைவனிடத்தில் மன்றாடியவர் தான் இன்று நினைவு புனித மோனிகா அவர்கள். 

இன்றைய முதல் வாசகத்தில் தெசலோனிக்க நகர மக்களுக்கு பவுல் வேண்டுகோள் விடுக்கிறார். அவர்களிடத்தில் இருக்கக் கூடிய பரத்தமையானது விலக்கப்பட வேண்டும், மேலும்  ஒவ்வொருவரும் மதிக்கப் பட வேண்டும், மனைவியை தூயவராக கருதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்.  இந்த சமூகத்தில் அறநெறியோடு எப்படி வாழவேண்டும் என்பதை அந்த மக்களுக்கு கற்பிக்கின்ற பணியினை அன்று பவுல் தெசலோனிக்க நகரில் செய்தார்.  அதே பணியைத் தான் புனித மோனிகாவும் தன்னுடைய மகனின் வாழ்வில் செய்தார். 

நாமும்  இச்சமூகத்தில் அறநெறியோடு வாழ அழைக்கப்படுகின்றோம். இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் கூட மானிட மகனின் வருகையை எதிர் நோக்கிய பலருள்  முன்மதி கொண்டோர் மானிட மகனைக் கண்டு கொண்டது போல நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நாம் முன்மதியோடு செயல்படவேண்டும். ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  ஒருவர் மற்றவரை  விட உயர்ந்தவர் என்று எண்ணுவதை விட்டு விட்டு,  நாம் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகள் என்பதை உணர்ந்து கொண்டவர்களாய் ஒருவர் ஒருவரை ஏற்றுக்கொண்டு, ஒருவருக்கு ஒருவர் துன்பம் விளைவிக்காது, இந்த சமூகத்தில் அறநெறியோடு  இணைந்து  வாழ இறையருளை வேண்டுவோம்.

இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.


புதன், 25 ஆகஸ்ட், 2021

விழிப்போடு இருக்க வேண்டும்... (26.08.2021)

 விழிப்போடு இருக்க வேண்டும்...

பொதுக்காலம் 21ஆம் வாரம் ஆகஸ்ட் 26 வியாழக் கிழமை

இயேசுவின் தோழர்களே!






ஒரு ஆசிரியர் தன்னிடம் படித்த ஒரு  மாணவன் நல்ல நிலையில் இருப்பதை கண்டு மகிழ்வது போல,  இன்றைய நாள் முதல் வாசகத்தில் தான் நற்செய்தி அறிவித்த தெசலோனிக்க நகர் பகுதியைப் பற்றி அறிகின்ற பவுல்,  அந்த பகுதி மக்கள் ஆண்டவர் இயேசுவின் மீது அதீத நம்பிக்கை கொண்டு அர்த்தம் உள்ள ஒரு கிறிஸ்தவ வாழ்வை வாழ்வதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தவராய் அவர்களைப் பாராட்டுகிறார்.  அவர்கள் ஆண்டவரோடு உறவில் நிலைத்திருப்பதை கண்டு அவர் மகிழ்கின்றார்.  அவர்களது மகிழ்ச்சி தனக்கு  பெருமகிழ்ச்சியாக மாறியது எனக் கூறுகின்றார்.  அவர்களுடைய அத்தகைய நல்வாழ்விற்காக இறைவனுக்கு நன்றி கூறக் கூடியவராக இருக்கிறார். 

இறைவன் படைத்த இவ்வுலகில் நம்மிடமிருந்து கற்றுக் கொண்டதை மற்றவர்கள் வாழ்வில் செயலாக்கப்படுத்துகிறார்கள் என்பதை கண்ணால் காணும் பொழுது,  நமது உள்ளம் எவ்வாறு மகிழ்வாக இருக்கின்றதோ அது போலவே, பவுலின் உள்ளமும் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. 

ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விழிப்பாய்  இருப்பதற்கு நமக்கு அழைப்பு விடுக்கின்றார். ஒரு உண்மையான கிறிஸ்தவன் இந்த சமூகத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை  நமது பெற்றோர்,  ஞானப்பெற்றோர், பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், நண்பர்கள். உறவுகள் என நாம் காணக்கூடிய பல நல்ல மனிதர்கள் நமக்கு ஒவ்வொரு நாளும் கற்றுக் கொடுக்கிறார்கள்.  கற்றுக் கொடுத்தவற்றை எல்லாம் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டுவிட்டுச் செல்லக் கூடியவர்களாக நாம் இருப்போமாயின் அது அர்த்தமற்றதாக மாறிவிடுகிறது.  மாறாக கற்றுக்கொடுத்த அனைத்தையும் மனதில் இருத்தி அவற்றை நமது வாழ்வில் நாம் செயலாக்கப்படுத்தும் போது தான் இறைவன் விரும்பக்கூடிய நல்ல பணியாளர்களாக நாம் இச்சமூகத்தில் வலம் வர முடியும்.  அதற்கு நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.   பிறர் நம்மை கவனிக்கிறார்கள் என்பதற்காக நாம் நல்லவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்ல.  நாம் எப்போதும் எல்லா சூழ்நிலையிலும் எல்லா நேரத்திலும் நாம் ஆண்டவர் இயேசு விரும்பக்கூடிய நல்ல மனிதர்களாக இச்சமூகத்தில் விழிப்போடு இருக்க வேண்டும். மேலும் எதிர்பாராத நேரத்திலும் நாம்  நமது கடமைகளை சரியாக செய்து கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு பயணிக்கின்ற போது நாம் எதிர்பாராத நேரத்தில் நமது வாழ்வுக்கான பரிசினை இறைவன் கண்டிப்பாக வழங்குவார். பரிசை எதிர்நோக்கி அல்ல,  மாறாக இந்த சமூகத்தில் வழிப்போடு பயணித்து ஆண்டவர் இயேசுவின் உண்மை சீடர்களாக நாம் மாறிடுவோம். இதுவே இறையரசை இம்மண்ணில் நிலைநாட்டுவதற்கான வழியாகும்.  நாம் நமது செயல் வழியாக இம்மண்ணில் இறையரசை நிலைநாட்டிட துவக்கப் புள்ளியாக மாறிட, இன்றைய நாளில் இறையருளை  இணைந்து வேண்டுவோம்.

இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.


செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

போலியா? அசலா?... (25.08.2021)

போலியா? அசலா?... 

பொதுக்காலம் 21ஆம் வாரம் ஆகஸ்ட் 25 புதன்;கிழமை

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!



ஒருமுறை சார்லி சாப்ளினை போல வேடம் அணிந்து வருபவர்களுக்கு பரிசு வழங்குவதாக போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் சார்லி சாப்ளின் கலந்து கொண்டார்.  அதில் அவருக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.

ஆம்! அசலை விட போலிக்குத் தான் ஈர்ப்பு அதிகம். இன்றைய உலகம் இவ்வாறு தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் அக்காலத்தில் இருந்த மறைநூல் அறிஞர், பரிசேயர், சதுசேயர்களின் வெளிவேடத்தன்மையை இயேசு சுட்டிக் காட்டினார்.  அந்நிலையிலிருந்து அவர்கள் மாற்ற வேண்டும் என்பதை மிகவும் ஆணித்தரமாக அச்சமின்றி அனைவருக்கும் முன்பாகவும் எடுத்துரைக்கக் கூடியவராக இயேசு இருந்தார். இந்த இயேசுப் பின்பற்றிய சீடர்களும் தங்களுடைய வாழ்வில் இயேசுவைப் பிரதிபலிக்கக் கூடியவர்களாக மாறினார்கள்.  மக்கள் தவறான பாதைக்கு செல்லும் பொழுது அவர்கள் செல்லுகின்ற பாதை  தவறு என்பதை சுட்டிக் காட்டக்கூடிய ஒரு இறைவாக்கினருக்குரிய பணியினை சிறப்பாக செய்தார்கள்.  இதைத் தான் இன்றைய நாள்  முதல் வாசகத்தில் பவுல் தெசலோனிக்க நகர மக்களுக்கு  எழுதுகிறார். 

நாங்கள் உழைத்தது,  நாங்கள் நற்செய்தி அறிவித்தது அனைத்துமே உங்களுக்காகத் தான்.  இதன் உண்மையான நோக்கம் கடவுளுடைய வார்த்தை உங்களுக்குள் இருந்து செயலாற்ற வேண்டும் என்பதே என்று கூறுகிறார பவுல்;.  கடவுளின் வார்த்தை நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. வார்த்தை உள்ளுக்குள் இருப்பதால் எந்தவித பயனும் அல்ல.  நாம் கேட்ட  இறைவனது வார்த்தைகள் நமது வாழ்வில் செயலாக்கப்பட வேண்டும்.  பரிசேயரும், மறைநூல் அறிஞர்களும், சதுசேயர்களும் இறைவார்த்தையை கூறினார்கள். ஆனால் அது அவர்கள் வாழ்வில் செயலாக்கப்படவில்லை.  எனவே தான் இயேசு அவர்களை சாடக் கூடியவராக இருந்தார். 

இந்த அழகிய உலகத்தில்; அனுதினமும் இறைவனது வார்த்தைகளை வாசிக்கின்றோம்.  இறைவனது வார்த்தைகள் ஒலிக்கப்படுவதை காதுகளால் கேட்கின்றோம்.  கேட்பதை கேட்டு விட்டு நகர்ந்து விடுகிறோம்.  ஆனால் நாம் வாசிக்கின்ற இறைவார்த்தையும், நாம் கேட்கின்ற இறைவார்த்தையும்,  நம் இதயத்தில் பசுமரத்தாணியாய் பதிய வேண்டும்.  அவ்வாறு பதிய வைப்பது நமது வாழ்வில் செயலாக்கப்படுத்தப்பட வேண்டும்.  அவ்வாறு செயலாற்றும் போது  நாமும் கடவுளின் வார்த்தைகளுக்கு ஏற்ப இம்மண்ணில் செயல்படக்கூடிய ஆண்டவர் இயேசுவின் உண்மை சீடர்களாக மாறிட முடியும்.  நமது உள்ளங்களில் இருக்கின்ற இறைவார்த்தை நமது வாழ்வில்  செயலாக்கம் பெற இன்றைய நாளில் இறையருளை இணைந்து வேண்டுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.


திங்கள், 23 ஆகஸ்ட், 2021

பார்வை மாற்றம் ... (24.08.2021)

பார்வை மாற்றம் ... 

பொதுக்காலம் 21ஆம் வாரம் ஆகஸ்ட் 24 செவ்வாய்க்கிழமை

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!



இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.  இன்றைய வாசகங்கள் பார்வை மாற்றம் பெறுவதற்கு நமக்கு அழைப்பு தருகின்றன. 

இன்றைய முதல் வாசகம் திருவெளிப்பாட்டு நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. யோவான் காட்சி மூலமாக கண்டவற்றை தொகுத்து எழுதியதே திருவெளிப்பாட்டு நூல் ஆகும். இந்நூல் நிகழ்காலத்iதில் நாம் சிறப்பாக வாழ வழிகாட்டக்கூடியதாகும். எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தோடு இன்று பலர் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.  ஆதில் முக்கிய பங்காற்றுவது நம்மிடையே இருக்கக்கூடிய முன் சார்பு எண்ணங்கள். 

இன்றைய நாள் நற்செய்தி வாசகத்திலும் கூட நாசரேத்து மக்களை குறித்த ஒரு முன் சார்பு எண்ணம் கொண்டவராக நத்தானியேல் இருக்கிறார். நத்தானியேலின் உள்ளத்தை அறிந்தவரான இயேசு கிறிஸ்து, அவர் வாழ்வில் நடந்த நிகழ்வை அவருக்கு கூறுகிறார்.  ஆண்டவர் கூறிய வார்த்தைகளை கேட்டு அதிர்ந்து போகிறார் நத்தானியேல். தன் பார்வையை மாற்றுகிறார். இறைவன் படைத்த இந்த உலகத்தில் நாம் மன நிறைவோடும் மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்றே இறைவன் விரும்புகிறார்.  ஆனால் பல நேரங்களில் நமது வாழ்வில் துன்பம் துயரமும் சூழ்ந்திருக்கிறது. இந்த துன்ப துயரங்கள் நமக்கு முன் சார்பு எண்ணங்களை உருவாக்குகின்றன.  அந்த எண்ணங்களின் அடிப்படையில் செயல்படுகின்ற போது துன்பத்தைக் கண்டு துவண்டு போகக் கூடியவர்களாகத் தான் நாம் இருக்கிறோம்.  ஆனால் துன்ப நேரங்களில் இறைவன் நம்மை வழிநடத்துகிறார். நம்மால் தாங்க முடியாத எந்த துயரத்தையும் அவர் நமது வாழ்வில் அனுமதிப்பதில்லை, என்பதை உணர்ந்து கொண்டு நாம் தொடர்ந்து இறைவன் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் துன்பத்தை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு நம்மிடம் பார்வை மாற்றம் நிகழ வேண்டும். 

நாம் முன் சார்பு எண்ணங்களின் அடிப்படையில் அடுத்தவரோடு உரையாடுவதும்,  பழகுவதும் என்று வழாமல். நமது பார்வையில் மாற்றம் பெற்றவர்களாய், வாழ்வில்  நல்லதொரு மாற்றத்தோடு இயேசுவின் உண்மை சீடர்களாய்,  முன் சார்பு எண்ணங்களை களைந்து,  ஆண்டவர் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாய் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் இறைவனது விருப்பத்திற்கு ஏற்றவர்களாய் பயணிக்க இறையருளை இணைந்து வேண்டுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.


ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

வழிகாட்டிகளாக மாறிட... (23.08.2021)

 


வழிகாட்டிகளாக மாறிட...

பொதுக்காலம் 21ஆம் வாரம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி திங்கள்கிழமை


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!




இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.


இன்றைய நாள் வாசகங்கள் அனைத்துமே நாம் இந்த சமூகத்தில் எப்படிப்பட்ட ஒரு வழிகாட்டிகளாக இருக்கின்றோம்? என்று சிந்தித்துப் பார்க்க நமக்கு அழைப்பு  தருகின்றது.


இன்றைய முதல் வாசகத்தில் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய கடிதத்தில் அங்கு இருக்கக்கூடிய மக்களை பாராட்டுகிறார்.  அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும் மேலும் அவர்கள் கிறிஸ்துவின் மீது ஆழமான மன உறுதி கொண்டு இருக்க வேண்டும் என்பதையும்,  அவர்களுக்கு நினைவு படுத்தும் விதமாக இந்த கடிதத்தை அவர்களுக்கு எழுதுவதாக நாம் வாசிக்கிறோம்.


 இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் கூட ஆண்டவர் இயேசு கிறிஸ்து அன்றைய யூத சமூகத்தில் வாழ்ந்த வழிகாட்டிகளாக கருதப்பட்ட மறைநூல் அறிஞரையும், பரிசேயர் சதுசேயரையும் இறைவன் கடுமையாக சாடுகின்றார்.  காரணம்,  அவர்கள் தன்னலத்தை முன்னிறுத்தி மக்களை மதத்தின் பெயராலும் சட்டதிட்டங்களின் பெயராலும் தவறான போதனைகளின் அடிப்படையிலும் அடிமைப்படுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். ஒரு தலைவன் என்பவன் எப்படிப்பட்ட வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதற்கு இயேசுவும் அவரை பின் பற்றிய பவுலைப் போல பலரும் நமக்கு முன்னுதாரணமாக இருந்தாலும்,  எப்படிப்பட்டவர்களாக இருக்க கூடாது என்பதற்கு இந்த பரிசேயரும், சதுசேயரும், மறைநூல் அறிஞர்களும்,  உதாரணமாக இருக்கிறார்கள்.


            இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் குழந்தைகளுக்கு தேவை செய்து காட்டுபவர்கள் தான், குறை கூறுபவர்கள் அல்ல என்பார்கள். இன்றைய சமூகத்தில் பெரும்பாலான மனிதர்கள் மற்றவரை குறை கூறுவதன் மூலமாக,  தாங்கள் பெரிய வழிகாட்டிகள் என எண்ணிக் கொண்டு வாழ்கிறார்கள். ஆனால், நாம் இந்த சமூகத்தில் இயேசுவைப் போல நல்ல வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்.  எப்படி இயேசுவைப் பின்பற்றிய சீடர்கள் அவர்கள் போதிப்பதை எல்லாம் தங்களுடைய வாழ்வில் செயல்படுத்தக் கூடியவர்களாக இருந்தார்களோ அது போல, நாமும் நமது வாழ்வில் நல்ல வழிகாட்டிகளாக வாழ அழைக்கப்படுகிறோம்.  இயேசு நல்ல வழிகாட்டியாய் வாழ்ந்தார்.  அவரை பார்த்து அவரைப் பின்பற்றியவர்கள் அவரைப் போல மாறினார்கள்.  நம்மைப் பார்த்து நம்மை பின்பற்றுபவர்களும் நல்ல வழிகாட்டிகளாக மாற வேண்டுமாயின்,  நாம் நல்ல வழிகாட்டிகளாக இந்த சமூகத்தில் பயணிக்கவேண்டும்.  எனவே இறைவன் விரும்பக்கூடிய வகையில் இறைவனது வார்த்தைகளின் படி தன் வாழ்வை அமைத்துக் கொண்ட இயேசுவின் சீடர்களைப் போல, நாமும் இந்த சமூகத்தில் நல்ல வழிகாட்டிகளாக மாறிட இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.  இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

சனி, 21 ஆகஸ்ட், 2021

உடன் இருப்பவரை உணர்ந்து கொள்ள...(22.8.2021)

உடன் இருப்பவரை உணர்ந்து கொள்ள...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
     இன்றைய வாசகங்கள் உடன் இருப்பவரை உணர்ந்து கொள்வதற்கு நமக்கு அழைப்பு தருகின்றன.  ஆபிரகாம் லிங்கன்  வாழ்வில் பல தடைகளைத் தாண்டி சாதனைகள் புரிய கூடிய மனிதராக மாறி,  இந்த உலகிலேயே உயர்ந்த பதவி என கருதப்படுகின்ற அமெரிக்காவின் ஜனாதிபதியாகவும் மாறினார்.  அப்போது அவருடைய நண்பர் அவரிடம் சொன்னாராம், "கடவுள் உன்னோடு இருக்கிறார். எனவே தான் ஒவ்வொரு நாளும் நீ வளர்ந்து கொண்டே செல்கிறாய்" என்றாராம். அப்போது ஆபிரகாம் லிங்கன் கூறினாராம்,  கடவுள் என்னோடு இருக்கிறார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.  ஆனால் நான் கடவுளோடு இருக்கின்றேனா? அந்த கடவுளின் விருப்பத்தின் படி தான் செயல்படுகின்றேனா?  அவரை உணர்ந்து இருக்கின்றேனா?  என்பதுதான் என் முன்பு இருக்கக்கூடிய கேள்வியாக இருக்கிறது என்று கூறினாராம்.

       இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், பரபரப்பான இந்த உலகத்தில், பல வேலைகளுக்கு மத்தியில் நம் உடன் இருப்பவர்களை உணர்ந்து கொள்வதற்கும், புரிந்து கொள்வதற்கும், அவர்களோடு நேரம் செலவிடுவதற்கும், நேரமில்லை என்று சொல்லக் கூடியவர்களாகத் தான் நாம் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

                 இன்றைய முதல் வாசகத்தில் மோசேவுக்கு பிறகாக, யோசுவா தலைமைத்துவ பொறுப்பை ஏற்று, இஸ்ரயேல் மக்களை கடவுள் வாக்களித்த கானான் நாட்டிற்கு அழைத்துச் செல்லக் கூடிய மிகப்பெரிய சவாலான பணியினை செய்து முடிக்கிறார்.  எப்படி யோசுவா இந்த பணியினைச் செய்தார்? என சிந்திக்கின்ற போது விவிலியம் தெளிவாக கூறுகிறது,  அவர் தன்னுடன் இருந்த ஆண்டவரை உணர்ந்திருந்தார்.  அவரது உடனிருப்பை ஒவ்வொரு நாளும் அனுபவித்தார்.  அவருடைய வார்த்தைகளின் படி தன் வாழ்வை அமைத்துக் கொண்டார்.  எந்த முடிவை எடுத்தாலும் அதை இறைவனுடைய சித்தத்திற்கு கையளித்தவராய், இறைவனோடு கலந்துரையாடியவராய், இறைவனது விருப்பம் எது என்பதை அறிந்து,  அதனைச் செய்யக் கூடிய மனிதராக இந்த உலகத்தில் பயணம் செய்தார்.  அதன் விளைவு தான் வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டுக்குள் இஸ்ரயேல் மக்களை அழைத்துச் செல்லக் கூடிய மிகப்பெரிய மாபெரும் பணியை  செய்தவராக யோசுவா திகழ்ந்தார். 

        இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது, கணவன் மனைவி உறவைப்பற்றி.  ஏன் கணவன் மனைவி உறவுக்கும் இன்றைய நாளுக்கும் என்ன சம்பந்தம் என சந்திக்கின்ற போது, உடன் இருப்பவரை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றால்,  திருமணம் என்ற அருள்சாதனத்தின் வழியாக,  உனக்கு நான்- எனக்கு நீ! உன்னுடைய இன்பத்திலும், துன்பத்திலும், உடல் நலத்திலும், நோயிலும், நான் உனக்கு பிரமாணிக்கமாய் இருப்பேன் என,  கடவுளின் முன்பாக கொடுக்கப்பட்ட வாக்கினை நிறைவேற்றக் கூடிய தம்பதியர்களாக இன்று ஒவ்வொரு குடும்பத் தலைவரும்,  தலைவியும் இருக்கிறார்களா? என்ற கேள்வியை சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.  

                 இறைவன் எப்படி நம்மோடு எப்போதும் உடன் இருக்கிறாரோ,  அதுபோலத்தான் நம்முடைய இன்ப துன்பங்களில் நமது உறவுகள் உடன் இருக்கின்றன. அது கணவன் மனைவி உறவாக இருக்கலாம், பெற்றோர் பிள்ளை உறவாக இருக்கலாம், நண்பர்களாக இருக்கலாம், அல்லது அண்ணன் தம்பிகளாக இருக்கலாம்.  ஏதோ ஒரு வகையில் யாரோ ஒரு நபர் எப்போதும் நம்மோடு இருக்கின்றார்.  அவர்களை நாம் எப்படி புரிந்து கொள்கிறோம்?  நமது தேவைக்கு பயன்படுத்தக்கூடிய மனிதர்களாக இன்று நாம் இருக்கின்றோமா?  அல்லது உண்மையாகவே உடன் இருப்பவரின் அன்பையும் அக்கறையையும் கரிசனையும் புரிந்து கொள்பவர்களாகவும், அதையே அவர்களுக்கு திரும்பி காட்ட கூடியவர்களாகவும் நாம் இச்சமூகத்தில் இருக்கின்றோமா?  என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்த்து,  சிந்தித்திட இன்றைய நாள் வாசகம்  நமக்கு அழைப்பு தருகிறது. 

    ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணிலே வாழ்ந்த போது,  பலவிதமான அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்தார்.  அவருடன் பயணித்தவர்கள் எல்லாம் அவரிடம் இருந்து பல நன்மைகளைப் பெற்றுக் கொண்டார்கள். எந்த அளவிற்கு நன்மைகளை மற்றவர்கள் பெற்றுக் கொண்டார்களோ, அதே அளவிற்கு இயேசுவின் மீது அவர்களுக்கு வெறுப்பும் இருந்தது.  காரணம் அந்த மக்களின் குறைகளை அவர் சுட்டிக்காட்டினார்.  அவர்களிடம் இருக்கக்கூடிய தவறான உணர்வுகளை பட்டியலிட்டார்.  இது தவறு,  இது இறை விருப்பத்திற்கு ஏற்றது அல்ல என்பதை அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தார்.  எனவே தான் ஆண்டவர் இயேசுவின் பேச்சைக் கேட்கப் பிடிக்காமல்,  அவரை விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு பலர் அவரை விட்டு விட்டுச் சென்றார்கள்.  ஆனால் இயேசு தன்னுடன் இருந்த தனது சீடர்களை நோக்கிக் கேட்டார், நீங்களும் என்னை விட்டுச் செல்ல எண்ணுகிறீர்களா?  என்றார். 

       அப்போது பேதுரு கூறினார்,  நாங்கள் யாரிடம் செல்வோம்!  நிலை வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே இருக்கின்றன,  என்றார். இந்த பேதுருவைப் போல நாம் இந்த உலகத்தில்  இருக்க அழைக்கப்படுகின்றோம். 
 நம்முடன் இருப்பவர்கள் நமக்கு பல நேரங்களில் அறிவுரை வழங்குகிறார்கள் என்றால்,  அவர்கள் அறிவாளிகள் என்பதால் நமக்கு அறிவுரை தரவில்லை.  அவர்கள் நம்மை விட உயர்ந்தவர்கள் என்பதற்காக அவர்கள் நமக்கு அறிவுரை வழங்குவதில்லை. மாறாக, நமது வாழ்வு நல்ல  வாழ்வாக இருக்க வேண்டும். 

    நமது வாழ்வில் நாம் மகிழ்வோடும் மனநிறைவோடும் வாழ வேண்டும் என்பதற்காக அவர்கள் அனுபவத்தை நம்மிடையே பகிருகிறார்கள்.  அதனை உள்வாங்கிக் கொண்டு, அவர்கள் காட்டுகின்ற வழியில் பயணித்தால்,  நமக்கு என்ன நன்மை கிடைக்கும்?  என்பதை சிந்தித்தவர்களாய்,  நாம் நமது வாழ்வில் செயல்பட அழைக்கப்படுகின்றோம். 

                      இன்று  பல நேரங்களில் நம்மை விட மற்றவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல, என்ற எண்ணம் தான் நம் உள்ளத்தில் ஆழமாக குடிகொண்டிருக்கிறது.  எனவே தான்,  பல நேரங்களில் நல்ல வழிகளை நம் உடனிருப்பவர்கள் கற்பித்தாலும், அதைக் கண்டு கொள்ளாதவர்களாகவும் ஏற்றுக் கொள்ளாதவர்களாகவும் இருக்கின்றோம். 

       எப்படி இயேசுவைப் புறக்கணித்துச் சென்றார்களோ,  அவர்களைப் போல பல நேரங்களில் நம்முடன் இருக்கக்கூடிய உறவுகளை நம்முடன் இருக்கக்கூடிய சொந்தங்களை நாம் விட்டு விலகக் கூடியவர்களாக நாம் இருக்கிறோம்.  ஆனால் விலகிச் செல்வதில் அல்ல இன்பம், உடனிருப்பதில்,  இணைந்திருப்பதில் தான் இன்பம் அடங்கி இருக்கிறது.  நீங்கள் இனி,  இருவரல்ல, ஒருவர் என்ற வார்த்தைகளை இறைவன்,  திருமணம் என்ற  அருட்சாதனத்தில் வழங்குவது போல, நாம் இந்த உலகத்தில் இணைந்திருப்பதற்காகவே இறைவன் நம்மை அழைக்கின்றார்.  கடவுளோடும், சமூகத்தோடும், இயற்கையோடும், உறவுகளோடும், நாம் இணைந்து இன்புற்று இச்சமூகத்தில் வாழ வேண்டும்.  அவ்வாறு வாழுகின்ற போது,  இறைவன் விரும்பக் கூடிய மக்களாக நாம் இம்மண்ணிலே வலம் வர முடியும்.  அதற்கு நாம் முதலில் நம்மிடம் இருப்பவர்களை,  நம் அருகில் உள்ளவர்களை உணர்ந்துகொள்ளவேண்டும். உடன் இருப்பவர்களைக் கண்டு கொள்ள வேண்டும்.  அவர்கள் நன்மைக்கு நம்மாலான உதவிகளை செய்யவேண்டும்.  நாமும் நமது நன்மைக்காக, நம்முடன் இருப்பவர்கள் தருகின்ற அறிவுரைகளை நமது வாழ்வில் சீர்தூக்கிப் பார்த்து அதனை செயலாக்கப்படுத்த வேண்டும்.  உடனிருக்கும் இறைவனையும், இயற்கையையும், உறவுகளையும், அறிந்து கொள்கின்ற போது தான்,  இந்த மண்ணிலே நாம் ஆண்டவர் இயேசுவின் உண்மைச் சீடர்களாக, பேதுருவைப் போல  நிலை வாழ்வைத் தருகின்ற இறைவனை நோக்கி
பின் செல்லக் கூடியவர்களாக மாறிட முடியும். அவ்வாறு மாறிட இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

சொல்வதை செயலாக்கிட...(21.8.2021)

சொல்வதை செயலாக்கிட...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
       உலக நாட்டத்தின்படி வாழாமல் ஆண்டவர் இயேசுவுக்கு உகந்த வாழ்வை வாழ இன்றைய வாசகங்கள் அழைப்பு தருகின்றன.  அக்காலத்திலே இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது யூதர்களும், பரிசேயர்களும், சதுசேயர்களும் எத்தகைய மனம் படைத்தவர்களாக இருந்தார்கள் என்பதை இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம்.  அவர்கள் வெளிப்படையாக ஆடம்பரங்களையும், முதன்மையான இடங்களையும் விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆனால் ஆண்டவரை நம்பி அவரது பணியைச் செய்ய வருகிறவர்கள் எல்லாம் முதன்மையான இடத்தை அல்ல, உலகம் விரும்பக்கூடியவற்றை அல்ல,  மாறாக இறைவன் விரும்பக்கூடியவற்றையே முன்னிறுத்தி, அதனை தங்கள் வாழ்வில் வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருக்க அழைக்கப்படுகின்றோம். 

                இன்று நாம்  வாழுகின்ற உலகத்தில் பெரும்பாலும் பிறர் இப்படி இருக்க வேண்டும்! இப்படி வாழ வேண்டும் என பலவற்றை கற்பிக்கின்றோம்.  ஆனால் நாம் அவ்வாறு இருக்கின்றோமா?  நாம் கற்பிப்பதை நமது வாழ்வில் நாம் செயல்படுகின்றோமா?  என்ற கேள்வியை எழுப்பி பார்க்க இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகிறார்.  பரிசேயரும் சதுசேயரும் மக்களை பல விதமான சட்ட திட்டங்களை முன்னிறுத்தி,  அவர்கள் இதெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்கள்.  ஆனால் அவர்கள் போதித்ததை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை. அதை ஆண்டவர் இயேசு கிறிஸ்து சுட்டிக் காட்டக் கூடியவராக இன்றைய வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம்.  நமது வாழ்வில்  நாம் வாய் வழியாக மற்றவருக்கு போதிப்பதை விட நமது செயல் வழியாக மற்றவர்கள் நம்மிடம் இருந்து வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்வதற்கு இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகிறார்.  நாம் சொல்வதை விட செயலில் ஈடுபடுபவர்களாக இருக்க இன்றைய நாள் நமக்கு அழைப்பு தருகின்றது. 

            இறைவன் தருகின்ற அழைப்பை உணர்ந்து கொண்டு, வாழ்வில்
சொல்வதை செயலாக்கிட இறையருளை வேண்டுவோம் இன்றைய நாளில். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

அன்பு சீடர்களாக மாறுவோம்....(20.8.2021)

அன்பு சீடர்களாக மாறுவோம்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
     அன்பே அனைத்திற்கும் ஆணி வேராகும். அன்பின் அடிப்படையில் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த உலகத்தின் மையம் எது என்று கேட்டால் அது அன்பாக மட்டும் தான் இருக்க முடியும். அன்பை அனைவரும் எதிர்பார்க்கிறோம்.  இந்த சமூகத்தில் நம்மை அன்பு செய்ய ஒருவர் இருக்க வேண்டும் என எண்ணுகிறோம். ஆனால் நாம் மற்றவரை எப்படி அன்பு  செய்கிறோம் என சிந்திக்க இன்றைய நாள் அழைப்பு தருகின்றது.  எல்லோரும் நம்மை அன்பு செய்ய வேண்டும் என்று எண்ணக் கூடிய நாம் பிறரை அன்பு செய்கின்றோமா? என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பி பார்ப்போம். 

               இன்று அன்பின் பெயரால் பலர் ஏமாற்றப்படுகிறார்கள். அன்பின் பெயரால்  பல அநீதிகள் இன்று இவ்வுலகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.  முழுமையான அன்பு என்பது அடுத்தவர் இருப்பது போல அவரை  ஏற்றுக்கொள்வது தான். ஆனால்,  இன்று நாம் விரும்புவது போல அடுத்தவர் இருக்க வேண்டும் என்பதை தான் அன்பு எனக் கருதி இந்த சமூகத்தில் பயணம் செய்கிறார்கள். 

    ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, உன்னை நீ அன்பு செய்வது போல அடுத்தவரை அன்பு செய்ய வேண்டும் என இன்றைய நாளில் வாசகங்கள் வழியாக நமக்கு கற்பிக்கின்றார். 

                  அடுத்தவரை அன்பு செய்ய வேண்டுமாயின் அவர் இருப்பது போல் நாம் ஏற்றுக் கொண்டு அவரை அன்பு செய்யக் கூடியவர்களாக நாம் இச்சமூகத்தில் இருக்க வேண்டும்.  இது முற்றிலும் எளிதானது அல்ல.  கடினமான ஒரு காரியம், பிறரை அவர்கள் இருப்பது போல ஏற்றுக்கொள்வது. 

       ஏனென்றால் இன்று அன்பு என்பது எதிர்பாராத விதமாக ஆரம்பமாகிறது.  நாளடைவில் அன்பு வளரும்போது ஆதிக்கம் செலுத்தக் கூடியதாக மாறுகின்றது.  அந்த அன்பில் நிலைத்திருக்க வேண்டுமாயின் ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். தியாகங்கள் செய்யக்கூடியவர்களாக மாறுகிறார்கள். 

       உதாரணமாக,  கணவனும் மனைவியும் அன்போடு வாழ வேண்டும் என எண்ணுகிறார்கள்.  அதிகமான அன்பு ஒரு கட்டத்தில்  ஒருவர் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு வழிவகுக்கிறது.  அன்பில் முறிவு ஏற்படக்கூடாது என்பதற்காக,  ஒருவர் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு வாழ வேண்டிய சூழல்தான் இன்று பல இடங்களில் நிலவுகிறது. பலர் இதை உணர்ந்து கொள்கின்ற போது வாக்குவாதத்தினாலும் கருத்து வேறுபாடுகளின் அடிப்படையிலும்,  உறவை முறித்துக் கொண்டு அன்பிலிருந்து விலகிச் செல்லக் கூடிய நிலை, இன்று இந்த நாட்டிலே அதிகம் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. 

      ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கடவுளை அன்பு செய்ய வேண்டுமாயின் அடுத்திருப்பவரை அன்பு செய்ய வேண்டும் என்கிறார்.  அடுத்திருப்பவரை அவர்கள் இருப்பது போல ஏற்றுக்கொண்டு,  இந்த சமூகத்தில் நாம் பயணம் செய்ய வேண்டும். அப்படி பயணிக்கின்ற போது தான் நாம் இயேசுவின் உண்மை சீடர்களாக நாம் இருக்க முடியும்.  இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது பலர் பல விதமான கருத்து வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் கொண்டிருந்தார்கள்.  ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைவரையும் அன்பு செய்தார்.  எனவே தான் எது நீதியோ, எது தேவையான ஒன்றோ அதனை முன்மொழிந்தவராய் தன் வாழ்வில் தன் பயணத்தை மேற்கொண்டார்.  அதன் வெளிப்பாடு தான் கல்வாரி மலையிலே தன்னை குற்றுயிரும் குலையுயிருமாக சிலுவையில் தொங்கவிட்டு எள்ளி நகையாடிக் கொண்டிருந்த கூட்டத்தினரையும் கூட அவர் மன்னித்து அவர்களுக்காக இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்யக் கூடியவராக மாறினார். 

        அன்பின் திருவுருவம் எது என்றால் அது சிலுவையில் தொங்கும் இயேசு மட்டும் தான்.  அந்த இயேசுவைப் பின்பற்ற கூடிய நாமும் நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் அடுத்தவர்களை அவர்கள் இருப்பது போல ஏற்றுக்கொண்டு  அன்பு செய்யத் தொடங்குவோம். அதன்வழி இயேசுவை உண்மையாக அன்பு செய்யும் அவரது சீடர்களாக மாறுவோம்.

புதன், 18 ஆகஸ்ட், 2021

எண்ணிப் பாராமல் எதையும் செய்யாதே!(19.08.2021)

எண்ணிப் பாராமல் எதையும் செய்யாதே!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
  கடவுளின் முன்பு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும்.  கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் இருப்பதைவிட வாக்கு கொடுக்காமல் இருப்பதே நலம் என்கிறது சபை உரையாளர் புத்தகம். 

கொடுத்த வாக்கை நிறைவேற்றாமற் போவதைவிட, வாக்குக் கொடாமல் இருப்பதே மேல்.
சபை உரையாளர் 5:5


கடவுள் விண்ணுலகில் இருக்கிறார்,  நாம் மண்ணுலகில் இருக்கிறோம்.  எனவே, கடவுளின் முன் வாக்கு கொடுப்பதற்கு முன்பு எண்ணிப் பாராமல் செயல்படாதே  என்கிறது சபை உரையாளர் புத்தகம்.

கடவுள் முன்னிலையில் சிந்தித்துப் பாராமல் எதையும் பேசாதே; எண்ணிப் பாராமல் வாக்குக் கொடுக்காதே. கடவுள் விண்ணுலகில் இருக்கிறார்; நீயோ மண்ணுலகில் இருக்கிறாய்; எனவே, மிகச்சில சொற்களே சொல்.
சபை உரையாளர் 5:2


கடவுளுக்கு நீ ஏதாவதொரு வாக்குக் கொடுத்திருந்தால், அதை நிறைவேற்றுவதில் காலந்தாழ்த்தாதே. ஏனெனில், பொறுப்பின்றி நடப்போரிடம் அவர் விருப்பங்கொள்வதில்லை. என்ன வாக்குக் கொடுத்தாயோ அதைத் தவறாமல் நிறைவேற்று.
சபை உரையாளர் 5:4



                    இன்றைய நாள் வாசகங்களுக்கும் இவ்வார்த்தைகளுக்கும் இன்று நெருங்கிய தொடர்பு இருப்பதை உணர முடிகிறது. இன்றைய முதல் வாசகத்தில் இப்தா வெற்றிக்கு முன்பாகவே ஆண்டவரிடத்தில் வாக்கு கொடுக்கிறார்.  வெற்றி பெற்றால் நான் முதலில் ஊருக்குள் நுழையும் போது நான் யாரை பார்க்கிறேனோ,  என்னை வரவேற்க யார் ஓடி வருகிறாரோ அவரை பலியிடுகிறேன் எனக் கூறுகிறார்.  அதற்கு ஏற்ற வகையில் அவர் வெற்றியை பெற்றுவிட்டு வரும்போது தனது ஒரே மகளான தனது அன்பு மகள் அவரை எதிர்கொண்டு வருவதை காண்கின்றார்.  உள்ளுக்குள் வருத்தம் இருந்தாலும்,   கடவுளுக்கு கொடுத்து விட்டோமே வாக்கை,  எனவே அந்த வாக்கை நிறைவேற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். 

        அக்காலத்தில் மனித பலி என்பது இருந்த சமயம். அதனை இன்றைய காலகட்டத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் பொழுது,  எண்ணிப் பாராமல் எதையும் செய்யக் கூடாது என்பதை இன்றைய வாசகம் நமக்கு உணர்த்துகிறது. 

            இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட,  கடவுள் திருமண விருந்துக்கு பலருக்கு அழைப்பு தருகிறார். அழைக்கப்பட்ட பலர் அவரது அழைப்பை உதாசீனப்படுத்துகிறார்கள். ஆனால், அதன் பிறகு இறைவன், வீதியில் செல்லக் கூடிய
அனைவரையும் அழைக்கின்றார்.  அப்படி வருபவர்கள்,  அழைக்கப்பட்ட திருமண விருந்துக்கு ஏற்ற வகையில் தகுதி உள்ளவர்களாக தங்களை மாற்றிக் கொள்ளாதிருப்பதை இறைவன் சாடுவதாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்க கேட்டோம். 

      இறைவன் நமக்கும் பலவிதமான வாய்ப்புகளை இந்த சமூகத்தில் தருகிறார்.  அவர் தருகின்ற வாய்ப்புகளை பல நேரங்களில் நாம் உதாசீனப்படுத்திவிட்டுச் செல்பவர்களாக இருக்கிறோம்.  பல நேரங்களில் வாய்ப்புகளை உதாசீனப்படுத்துபவர்களை விட்டுவிட்டு,  எந்தவித எதிர்பார்ப்புமின்றி இறைவன் நமக்கு பலவிதமான வாய்ப்புகளை எப்படி சாலையில் போவோர் வருவோரை திருமண விருந்துக்கு அழைத்தாரோ அது போல,  நமக்கு வாய்ப்புகளை வழங்குகிறார்.  அவர் தருகின்ற அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு இந்த சமூகத்தில் பயணம் செய்ய நாம் அழைக்கப்படுகிறோம்.  ஆனால் பல நேரங்களில் கடவுள் தருகின்ற வாய்ப்புகளை புரிந்து கொள்ளாது உதாசீனப் படுத்துபவர்களாகவும், ஒரு வேளை வாய்ப்பை பயன்படுத்தினாலும் கூட,  அதற்கேற்ற வகையில் நம்மை தகுதிப்படுத்திக் கொள்ளாதவர்களாகவுமே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். 

    நாம் வாழும் இந்த உலகத்தில் நமது செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்க்க இன்றைய நாளில்  அழைப்பு தரப்படுகிறது.  எதையும் செய்வதற்கு முன்பாக எண்ணிப் பாராது, என்ன நடக்கும், இனி என்ன செய்வது என்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாது நாம் செய்யக்கூடிய செயலால்,  இந்த சமூகத்தில் பலவிதமான அநீதிகள் உதயமாகின்றன.  அதுபோலத் தான் நமக்கு கொடுக்க கூடிய வாய்ப்புகளை நாம் உதாசீனப்படுத்தும் போதும்,  அல்லது அதற்கேற்ற வகையில் தகுதிப்படுத்திக் கொள்ளாமல் இருக்கும் போதும் இறைவனின் அன்பிலிருந்து விலகி நிற்கக் கூடியவர்களாக நாம் வாழுகின்றோம்.  நாம் வாழ்கின்ற இந்த உலகத்தில் நமது செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து, நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு,  ஆண்டவர் தருகின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தவும், எதையும் எண்ணிப் பார்த்து செயல்படவும் இன்றைய நாளில் இறையருளை  இணைந்து வேண்டுவோம்.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

நம்மையே நாம் பிரதிபலிக்க...(18.08.2021)

நம்மையே நாம் பிரதிபலிக்க...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 இன்றைய நாளில் இறைவன் நம்மை ஆட்சி செய்கின்றார் என்பதை உணர்ந்து கொண்டு, நாம் நம்மை ஆட்சி செய்ய அடுத்தவரை நாடுவதை விட,  நமது சுயத்தை உணர்ந்தவர்களாய்,  நம்மை நாம் பிரதிபலிக்கக் கூடியவர்களாய் வாழ இச்சமூகத்தில் அழைப்பு விடுக்கப்படுகிறது. 

                   கண்ணாடி முன்பாக நிற்கும் பொழுது கண்ணாடி தன் முன்பாக நிற்பவரை பிரதிபலிக்கிறது.  ஆனால் நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் பலர் தங்களை பிரதிபலிப்பதை விட்டுவிட்டு,  பல நேரங்களில் தங்களுடைய செயல்களால் பிறரை பிரதிபலிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.  பிறரைப் பார்த்து அவர்களைப் போல், அவர்களை போல் என்ற எண்ணத்தோடு பல நேரங்களில் தங்களை இந்தச் சமூகத்தில் பிரதிபலிக்க மறந்துபோய்,  பிறரை பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் இறைவன் எப்போதும் நம்மை நாம் இருப்பது போல இந்த சமூகத்தில் பிரதிபலிக்க அழைப்பு விடுக்கின்றார்.  நமது வாக்கும் வாழ்வும் ஆண்டவருக்கு உகந்ததாய் இச்சமூகத்தில் இருந்திட வேண்டும். நாம் நம்மை இந்த சமூகத்தில் பிரதிபலிப்பதற்கான ஒரு அழைப்பினை இன்றைய நாளில் இறைவன் தருகிறார்.  பலவிதமான கேள்விகளுக்கு மத்தியிலும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கக் கேட்டது போல,  பலவிதமான கேள்விகளுக்கு மத்தியிலும் எனக்குரியதை என் விருப்பம் போல கொடுப்பதற்கு எனக்கு உரிமை இல்லையா?  என்ற அந்த குத்தகைக்காரரைப் போல, முதலாளியைப் போல, நாமும் இந்த சமூகத்தில் நம்மிடம் இருக்கக்கூடிய நல்லவைகளை, நமது விருப்பம் போல இந்த சமூகத்தில் பிரதிபலிக்க அழைப்பு தரப்படுகிறது. 
நாம்  நம்மை இந்த சமூகத்தில் பிரதிபலிக்க கூடியவர்களாக மாறுவோம்.  அடுத்தவரைப் பார்த்து,  அடுத்தவரைப் போல இந்த சமூகத்தில் பிரதிபலிக்க வேண்டும் என்று எண்ணுவதை விட்டு விட்டு,  நம்மையே நாம் இந்த சமூகத்தில் பிரதிபலிக்கக் கூடியவர்களாக மாறிட இன்றைய நாள் அழைப்பு தருகின்றது. 

 அப்போது இறைவன் நம் அனைவரையும் ஆசீர்வதித்து வழிநடத்தி காப்பார். 

 எனவே நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நம்மை நாம் பிரதிபலிக்கக் கூடியவர்களாக மாறிட இறையருளை இணைந்து வேண்டுவோம்.

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

எது எளிது?...(17.8.2021)

எது எளிது?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் .
       சேர்ப்பது எளிதா? இருப்பதை பகிர்வது எளிதா? என்று கேள்வியை எழுப்பினால், சேர்ப்பதை விட இருப்பதை பிறரோடு பகிர்வதே எளிதான காரியமாகும்.  சேர்ப்பதற்கு நாம் கடினப்படுகிறோம்.  கடினப்பட்டு சேர்த்ததை எல்லாம் இறைவன் இல்லாதவரோடு பகிர்ந்து கொண்டு வாழ அழைக்கின்றார். 

சேர்த்து சேர்த்து வைப்பதால், நம்மிடம் செல்வம் மிகுதியாவது போல தோன்றலாம்.  ஆனால் நாம் சேர்த்து வைத்த எதையும் எடுத்துக் கொண்டு இறுதி நாளில் இறைவனிடத்தில் செல்வதில்லை. நாம் சேர்த்து வைத்த அனைத்தையும் இங்கு யாரோ ஒருவருக்கு, அடுத்தவருக்காக  விட்டுவிட்டு தான் செல்ல வேண்டிய நிலை. இதுவே உலகின் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை மனித மனங்கள் நன்கு அறிந்திருந்தும் சேர்த்து வைப்பதில் தான் அதிக ஈடுபாட்டை காட்டக் கூடியவர்களாக அனைவரும் இருக்கின்றார்கள். 

         ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து,  சேர்த்து வைப்பதில் உங்களுடைய ஈடுபாடு இருத்தல் ஆகாது. மாறாக, இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழ்வதில் தான், உங்களது ஈடுபாடு இருக்க வேண்டும் என்ற செய்தியினை இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு தருகிறார்.  இருப்பதை இல்லாதவரோடு பகிரும்போது நமக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? என்று நாம் கைம்மாறை எதிர்பார்ப்பதை இறைவன் தவறு எனச் சுட்டிக் காட்டுகிறார். எதிர்பார்ப்புகளோடு நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிரும் போது நாம்
 ஏமாற்றத்தையே அடையக் கூடிய நிலையும் உருவாகும். 

                          எந்தவித எதிர்பார்ப்புமின்றி இறைவன் படைத்த இந்த உலகத்தில், இருப்பதை எல்லாம் இல்லாதவரோடு  பகிர்ந்து எப்போதும் ஒருவர் மற்றவரின் மகிழ்வை கண்டு நிறைவு கொள்ளக் கூடியவர்களாக,  இந்த சமூகத்தில் பயணம் செய்ய இறைவன் நம்மை அழைக்கின்றார். 

அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய்,  நமது வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கி கொண்டு, சேர்ப்பதை விட இருப்பதை பிறரோடு பகிர்வதே எளிதான காரியமாக இருக்கும். அந்த எளிதான காரியத்தை நமது வாழ்வில் செயலாக்கப்படுத்திட, இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம். 



ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள...(16.8.2021)

நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவரின் பார்வையில் இஸ்ரயேல் மக்கள் தீயதெனப்பட்டதை செய்தனர் என வாசிக்கக் கேட்கின்றோம். இன்றைய நற்செய்தி வாசகத்திலும் நாம் நமது வாழ்வில் நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பதிலை இறைவன் தருகின்றார். 

      கட்டளைகளை கடைப்பிடிப்பதே அதற்கான வழி என முதலில் கற்பிக்கின்றார்.  நாம் கட்டளைகளை கடைப்பிடிப்பவராக இருக்கிறோம் என்றால் நம்மிடம் இருப்பதை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்.  அவ்வாறு கொடுப்பதன் மூலம் நாம் நிறைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள முடியும் என்ற செய்தியினை இன்றைய நாளில் இறைவன் நமக்குத் தருகின்றார். 

      நாம் வாழுகின்ற இந்த உலகத்தில்,  நம்மிடம் இருப்பதை மற்றவரோடு பகிர்வதற்கு மனம் கொண்டவர்களாக நாம் இருக்கின்றோமா? என்ற கேள்வியை இன்றைய நாளில் எழுப்பி பார்க்க நாம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம். 

       பெறுவதில் மகிழ்ச்சி கொள்கின்ற நாம், நம்மிடம் இருப்பதை பிறரோடு பகிர்வதில் மகிழ்ச்சி கொள்ளாமல் இருக்கின்றோம். நமக்கு என அனைத்தையும் சேர்த்து வைத்துக் கொள்ளவே மனித மனமானது விரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், நம்மில் சிலர் மட்டுமே இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து, இல்லாதவரின் துயரத்தை நீக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். நாம் அத்தகைய பணியை செய்யக்கூடிய மனிதர்களாக இருக்கும் போது மட்டுமே, நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள முடியும் என்ற செய்தியினை இறைவன் இன்றைய நாளில் நமக்கு தருகின்றார். இறைவன் காட்டக் கூடிய வழியினை பின்பற்றி நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள இன்றைய நாளில் இறையருளை இணைந்து வேண்டுவோம்.

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

தாயும் (அன்னை மரியா) தாய் நாடும் ...(15.8.2021)


தாயும் (அன்னை மரியா)  தாய் நாடும் ...

அன்புக்குரிய சகோதர சகோதரிகளே....
இன்று நம் நாடு சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டை நாம்  நினைவு கூருகிறோம்.  அதனோடு கூட அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவை   கொண்டாடிட  திருஅவை நமக்கு அழைப்பு தருகின்றது. 

அன்னை மரியா நம் அனைவருக்கும் தாய் ...இந்த தாயின் விண்ணேற்பு நினைவு கூறுகின்ற இந்த நல்ல நாளில் தாய் நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடுவதில் மகிழ்கின்றோம் ...

ஒவ்வொரு தாயும் ஒரு வரலாறு.  
ஒரு தாயிடம் இருந்து தான் ஒரு சமுதாயம் உயிர்பெறுகிறது.  
ஒவ்வொருவருடைய வாழ்விலும் தவிர்க்க முடியாதவளாய்  விளங்குபவள் தாய்.  
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்பார்கள். 

யார் இல்லை என்றால் இந்த சமூகத்தில் நீ பிறந்திருக்க முடியாதோ, யாரை இழந்து விட்டால் நீ திரும்பப் பெறமுடியாதோ,  அவள் தான் தாய் என்கிறார், இராமலிங்க அடிகள். 

  அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறது கொன்றை வேந்தன். 

அன்னையின் தியாகத்தை அறிவதே,  தாய் நாட்டின் பெருமையை உணர்வதாகும். 

தாயின் தியாகத்திற்கும்,  தாய் நாட்டிற்காக தியாகம் செய்தவர்களுக்கும் பல தொடர்புகள் உண்டு. 

 ஒரு வீட்டில் உணவு சூடாக இருந்தால் அதை தந்தை சாப்பிடுவார்.  சுவையாக இருந்தால் அக்கா சாப்பிடுவார்.  ஆனால் மிச்சமாக இருந்தால் மட்டும்தான், பல  வீடுகளில் தாய் சாப்பிடுவாள்.  நாம் இந்த உலகத்தில் பிறப்பதற்கு முன்பாகவே நமக்காக இறைவனை வேண்டியவள் தாய்.  அவளின் பாதமன்றி, விண்ணகத்தை அடைய வழி இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. 

       ஒருவன் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தால், அவன் கையில் இருக்கக்கூடிய பையை பார்க்கும் அவனது குழந்தை.  பாக்கெட்டில் இருக்கும் பணத்தை பார்ப்பாள் மனைவி இப்படி குடும்பத்தை நடத்தலாம் என்று , ஆனால் தன் மகனின் பசியைப் பார்ப்பாள்,  அதாவது அவனது இரைப்பையைப் பார்ப்பாள் தான் தாய். 

      நாம் இந்த உலகத்தில் பிறப்பதற்காக தன் இன்ப துன்பங்களை தியாகம் செய்து,  நமக்காகவே வாழ்பவள்,  நமது ஆயுள் நீடித்திருக்க வேண்டும் என அனுதினமும் எண்ணக் கூடியவள் தான் தாய். 
இந்த தாயின் பெருமையை உணருவதன் வழியாக,  இந்த தரணியில், தியாக உள்ளம் கொண்ட மனிதர்களாக மாறிட வேண்டும் என்பதுதான் இன்றைய சிந்தனை. 
இந்த அன்னை மரியாளும் இயேசுவுக்காக ஏன் இவ்வுலகம் மீட்புக்காக  செய்த தியாகங்கள் பல.   இவ்வுலகத்தின் மீட்புக்காக ஒரு குழந்தை இந்த மண்ணில் பிறக்க வேண்டும் என்பதற்காக, வரக்கூடிய அனைத்து தடைகளையும் துணிவோடு எதிர் கொள்ள முன்வந்தவள் இந்த அன்னை மரியா.  பாலூட்டி சீராட்டி வளர்த்த தன் மகன் அடுத்தவருக்காக  இறப்பதைக் கண்டு உள்ளம் துடிதுடித்தவள் இந்த தாய். இந்த தாயை பின்பற்றியே பல தாய்மார்கள் நம் நாட்டின் விடுதலைக்காக பல மகன்களை தியாகம் செய்திருக்கிறார்கள். 

       ஜப்பான் நாட்டில் முன்பு கொள்ளையர்கள் அதிகமாக இருந்தார்கள்.  கொள்ளையர்களை பார்த்தால் அனைவரும் ஓடிச் சென்று ஒளிந்து கொள்வார்களாம்.  அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஒரு தாய் இரண்டு குழந்தைகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள்.  கொள்ளையர்கள் வருகிறார்கள் என்ற குதிரை சப்தம் கேட்டதும் அனைவரும் ஓடிப்போய் ஒளிந்து கொள்ள முயன்றார்கள்.  இந்த தாயும் ஊட்டிக் கொண்டிருந்த உணவை கீழே போட்டுவிட்டு இரண்டு குழந்தைகளையும் கையில் எடுத்துக் கொண்டு ஓடினாள்.  ஆனால் கொள்ளையர்கள் நெருங்கி வருவதை கண்டதும் தன் கையில் இருந்த ஒரு குழந்தையை இறக்கி விட்டுவிட்டு ஒரு குழந்தையோடு ஓடிச்சென்று குழியில் பதுங்கிக் கொண்டாள்.  அங்கு வந்த கொள்ளையர்கள் வீதியில் இறக்கி விடப்பட்ட குழந்தையின் தலையைத் துண்டித்து விட்டு நகர்ந்தார்கள்.  கொள்ளையர்கள் சென்றதும் அங்கே பதுங்கியிருந்த அனைவரும் ஓடி வந்தார்கள்.   இறந்து கிடந்த அந்தக் குழந்தையினிடத்தில் இந்த தாயானவள் பதறிக் கொண்டிருந்தாள். 

 அப்போது ஒரு மூத்த முதியவர் சொன்னார்,  ஒவ்வொரு தாய்க்கும் குழந்தைகள் கண்களைப் போன்றவர்கள். இரண்டு குழந்தையும் உன் இரு கண்களைப் போன்றவர்கள் தானே.  அப்படி இருக்க ஒரு குழந்தையை இறக்கி விட்டுவிட்டு வர உனக்கு எப்படி மனம் வந்தது? என்று கேட்டபோது,  அந்த தாய் சொன்னாளாம்,  நான் என் குழந்தைக்கும் பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் உணவு ஊட்டிக் கொண்டு இருந்தேன். அங்கு இறந்து கிடப்பது என் குழந்தை,  காப்பாற்றப்பட்டது பக்கத்து வீட்டு குழந்தை என்றாளாம். 
 தாயின் தியாகத்திற்கு அளவில்லை.  எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்றார் கவிஞர் கண்ணதாசன் 
       இன்று நாம்  சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம்? சாதாரணமாக கிடைத்ததல்ல இந்த சுதந்திரம், பலரின் தியாகத்தால் கிடைத்தது.  அந்த தியாக உணர்வை அவர்களுக்கு ஊட்டியது தாய்.  எனவேதான் தாய்நாட்டின் மீது பற்று கொண்டார்கள். வருங்கால சந்ததியினர் வளமோடு வாழ வேண்டும் என்பதற்காக தங்கள் ஆசைகளை துறந்து, நான் என்ற ஆணவத்தை அழித்தொழித்தவர்களாய்,  நாம் நலமுடன் வாழ தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள்.  அந்த தியாகிகளை இன்றைய நாளில் நாம் நினைவுகூர அழைக்கப்படுகிறோம்.  இவர்களை போல இந்த சமூகத்தில் பிறர் நலத்தை முன்னிறுத்தி வாழக் கூடியவர்களாக நாம் மாறிட வேண்டும்.  அதற்கு முதலில் நமது வீட்டுக்குள் இருக்கக் கூடிய தாயின் தியாகத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.  தாயின் தியாகத்தை உணரும் போது தான், இந்த சமூகத்தில் பல தியாகிகள் உருவாகுகின்றார்கள்.

   முற்றும் துறந்த முனிவரும் தவிர்க்க முடியாத ஒன்று தாயின் அன்பு என்பார்கள்.  அனைத்தையும் விட்டுவிட்டு துறவு மேற்கொண்ட ஆதிசங்கரரும்,  தன் தாய் இறந்தார் என்ற செய்தி கேட்டு ஓடிவந்தவர்.  அனைத்தையும் துறந்த பட்டினத்தாரும் தன் தாய் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஓடிவந்த துக்கத்தின் மத்தியில் அமர்ந்து,  தாயை நினைத்து அவர் பாடிய பத்துப் பாடல்களும் காலத்தால் அழியாத புகழ் பெற்றவை என்பது நம்மில் பலர் அறிந்ததே.  துறக்க முடியாத ஒரு அன்பு தான் தாயின் அன்பு. 

 தாய் நாட்டின் சுதந்திரத்தை நினைவு கூறுகின்ற எந்த நல்ல நாளிலே 
 நமது வீட்டில் இருக்கும் தாய்மார்களைப் போற்றுவோம்.  நமது தாயின் தியாகத்தின் வழி இந்தத் தரணியில்  பிறருக்காக தியாகம் செய்கின்ற நல்ல மனிதர்களாக உருவாகுவோம்.

 நமக்காக தன்னுயிரை தியாகம் செய்த இயேசுவின் வழியில் நமது நாட்டுக்காக தன் உயிரைத் தியாகம் செய்து சுதந்திரக்காற்றை நம்மை சுவாசிக்க வைத்த விடுதலைப் போராட்ட வீரர்களையும் அவர்களின் குடும்பங்களையும்  நினைவு கூறுவோம்... இவர்களைப் பின்பற்றி நாமும் தியாக உள்ளம் கொண்டவர்களாக இந்த சமூகத்தில் உருவாகிட இறையருள் வேண்டுவோம் ...

சுதந்திர தின விழா திருப்பலி முன்னுரை (15.8.2021)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் கல்வாரித் திருப்பலிக்கு உங்களை அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  இன்று நம் நாடு சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டை நாம்  நினைவு கூருகிறோம்.  அதனோடு கூட அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவை   கொண்டாடிட  திருஅவை நமக்கு அழைப்பு தருகின்றது. 
நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற வரம், இந்த சுதந்திரம். நாம் வளர, அவர்கள் விதையாய் மடிந்தார்கள்.  அவர்களின் தியாகத்தை மனதில் கொண்டு இந்த சமூகத்தில் நாமும் தியாகங்கள் பல புரியக்கூடிய மனிதர்களாகிட இன்றைய நாள் நமக்கு அழைப்பு தருகின்றது. 

இந்த தியாகத்தின் வடிவமாகத் தான் திருஅவை அன்னை மரியாவை இன்று  நினைவு கூருகிறது. மனுக்குல மீட்பிற்காக, பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் ஆண்டவர் இயேசுவை தன் வயிற்றில் சுமந்தவர் இந்த அன்னை மரியா. இந்த அன்னை மரியா நமக்கு பலவிதமான பாடங்களை கற்பிக்கின்றார். இந்த சமூகத்தில் துணிவோடு செயல்படவும்,  அடுத்தவரின் நன்மையை முன்னிறுத்தி செயல்படவும்,   அடுத்தவருக்காக பரிந்து பேசவும்,  எப்போதும் எல்லாச் சூழ்நிலையிலும் நல்லதை மட்டும் நாடவும் இந்த அன்னையின் வாழ்வு நமக்கு வழிகாட்டுகிறது.  

இந்த நல்ல நாளில் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த பலரின் வாழ்வும் இதே செய்திகளைத்தான் இன்று நமக்குத் தருகின்றது.  இவர்கள் மூலமாக நாம் கற்றுக்கொண்ட, அல்லது  தெரிந்துகொண்ட நற்செயல்களையும் நற்பண்புகளையும் நமது வாழ்வில் செயலாக்கப்படுத்திட இன்றைய நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம்.  அழைக்கப்படக் கூடிய நாம் அனைவரும், தகுதி உள்ளவர்களாக மாறி, நமது குற்றம் குறைகளை இறைவனிடத்தில் அறிக்கையிட்டு,  இனி வருகின்ற நாட்களில், இறைவன் விரும்பக் கூடிய மனிதர்களாக இச்சமூகத்தில் நாம் வலம் வருவோம்...   சுதந்திர தினத்தையும் அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவையும்  நினைவு கூருகின்ற இந்த நல்ல நாளிலே, நம்மிடம் இருக்கக்கூடிய வேறுபாடுகளைக் களைந்து,  அனைவரும் ஒருதாய் மக்கள் என்பதை உணர்ந்தவர்களாய், இந்த சமூகத்தில் ஒருவர் மற்றவருக்கு அரணாகவும், கேடயமாகவும், இருக்கக் கூடிய இயேசுவின் சீடர்களாக மாறிட,  இறையருளை வேண்டி, இணைவோம் இந்த திருப்பலியில், சுதந்திர உணர்வோடு.....

குழந்தைகளைப் போல மனம்...(14.8.2021)

குழந்தைகளைப் போல மனம்..

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
      சிறு குழந்தைகளைப் போல மனம் படைத்தவர்களாக இருப்பதற்கு இறைவன் இன்றைய நாளில் நம்மை அழைக்கின்றார்.  அத்தகைய இதயத்தை தான் இறைவன் இயேசுவும் கொண்டிருந்தார்.  எனவேதான், தான் வாழ்ந்த இந்த மண்ணிலே மக்கள் எவ்வாறாக இருந்தாலும், அனைவரையும் ஏற்றுக் கொண்டு, அனைவரோடும் உறவு பாராட்டக் கூடியவராக இயேசு இந்த மண்ணில் வாழ்ந்தார்.  தந்தையின் உள்ளமும் இதே சிறுகுழந்தை உள்ளத்தைக் கொண்டதாகவே இருந்தது. எனவேதான் இஸ்ரயேல் மக்கள், தாங்கள் ஆண்டவரை விட்டு பிரிய மாட்டோம், அவருக்கு எதிராகச் செல்லமாட்டோம் என்று கூறினாலும்,  தங்கள் சொல்லை அவர்கள் செயலாக்காமல் தங்கள் வாழ்வில் ஆண்டவருக்கு எதிரான காரியங்களில் அவர்கள் ஈடுபட்ட நேரங்களில் எல்லாம், ஆண்டவர் அவர்களை மன்னித்து, சிறு குழந்தை மனம் கொண்டவராய் அவர்களை ஏற்றுக் கொண்டு,  அவர்களோடு உறவைப் புதுப்பித்துக் கொண்டு மீண்டும் அவர்களோடு உறவோடு வழிநடத்தினார். 
         இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், பல நேரங்களில் நாம் கடின உள்ளம் கொண்டவர்களாக, சிறு குழந்தை உள்ளம் இல்லாதவர்களாகவும் இருக்கின்றோம்.  இந்த கடின உள்ளத்தின் காரணமாக பல நேரங்களில் நாம் அடுத்தவரோடு உள்ள உறவை துண்டித்துக் கொள்ள விரும்புகிறோம்.  எப்படி இயேசுவிடம் வர நினைத்தவர்களை பலர் தடுத்தார்களோ, அது போல பல நேரங்களிலும் நாமும் தடுக்கக் கூடியவர்களாகத் தான் இருக்கிறோமே ஒழிய, இணைந்து இன்புற்று  வாழாதவர்களாக பல நேரங்களில் நாம் செயல்படுகிறோம். அத்தகைய நிலையில் இருந்து கடந்து,  அனைவரையும் இன்முகத்தோடு ஏற்றுக் கொண்டு,  ஒருவர் மற்றவரோடு இணைந்து வாழ சிறு குழந்தை உள்ளம் கொண்டு நாம் இவ்வுலகத்தில் பயணிக்க இறைவன் அழைப்பு தருகின்றார். அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய்,  வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டு, நமது உள்ளத்தை புதுப்பித்துக்கொண்டு,  சிறு குழந்தைகளைப் போல உள்ளம் படைத்தவர்களாகிட இறையருளை இன்றைய நாளில் வேண்டுவோம்.

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

விலக்க நினைத்தாலும் விலக்க முடியாதவர் இறைவன்!...(13.08.2021)

விலக்க நினைத்தாலும் விலக்க முடியாதவர் இறைவன்!

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
       மனிதன் தனித்து இருப்பது நல்லது அல்ல எனக் கண்ட இறைவன் மனிதனுக்கு தகுந்த துணையை உருவாக்கினார். இறைவன்  உருவாக்கிக் கொடுத்த துணையோடு இணைந்து இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்பதே இறைவனது விருப்பம். ஆனால்,  ஆரம்பத்தில் இணைந்து வாழ்வதில் இன்பம் கண்ட மனிதன்,  இன்று இணைந்து இருப்பதைவிட, தனித்திருப்பதே மேல் என எண்ணக் கூடியவனாக மாறிவிட்டான். ஏன் மனிதனிடையே இத்தகைய மாற்றம்?  என சிந்திக்கின்ற போது,  சுயநலமும், தான் மட்டும் தான், என்ற எண்ணமும் மேலோங்கி இருக்கின்றது. இன்று கடவுளுக்கு முன்பாக வாக்குறுதிகள் கொடுத்து இணையக் கூடியவர்கள்,  இணைந்த பிறகு, தன்னுடைய விருப்பத்தின்படி மற்றவர் இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள்.  

      அன்பு என்பது ஒருவரை இருப்பது போலவே ஏற்றுக்கொள்வது. ஆனால் இன்று பிறரை இருப்பது போல் ஏற்றுக் கொள்வதை விட்டுவிட்டு,  நாம் விரும்புவது போல அடுத்தவர் இருக்க வேண்டும் என்ற எண்ணமானது மனிதர்களின் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றிவிட்டது.  இதன் காரணமாகவே இணைந்து இருப்பதைவிட, தனித்து இருப்பது நல்லது என எண்ணுகிறான்.  எனவே, இணைந்திருக்கும் போது,  தனது இணையிடம் தன்னுடைய விருப்பங்களை தான் அவன் தனது இணையிடம் எதிர்பார்க்கக் கூடியவனாக இருக்கின்றான்.

     இயேசுவினிடத்தில் கணவன் மனைவி எப்போது பிரிந்திருக்கலாம்? என்ற கேள்வியை எழுப்பும் போது அவர், பிரிவு என்பது இவர்களிடையே இருக்கக் கூடாது என்பதனை கற்பிக்கின்றார்.  தொடக்க காலத்திலும் இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக இருந்த போது அவர்களுக்கு விடுதலை தந்து அவர்களை கானான் நாட்டுக்கு இறைவன் அழைத்து வந்த நேரங்களில், பல சூழ்நிலைகளில், பல நேரங்களில் அந்த மக்கள் ஆண்டவரை விட்டு விட்டு விலகிச் செல்லக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆனால், அவர்கள் விலக நினைத்தாலும் அவர்களை விலக்கி விடாதவராக இறைவன் இருந்தார். 

        நமது வாழ்வில் நாம்,  அந்த இறைவனைப் போலவே இந்த சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரோடும் இருக்க அழைக்கப்படுகின்றோம்.  குறிப்பாக, கணவன் மனைவி என்ற அற்புதமான திருமண பந்தத்தால் இணைக்கப்படுகின்றவர்கள்,  தங்களுடைய எல்லாச் சூழ்நிலையிலும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யவும், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கவும், ஒருவரை அவர் இருப்பது போலவே ஏற்றுக்கொண்டு, அவரோடு இணைந்திருக்கவும் இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். 

 வீட்டிற்கு வீடு வாசல் படி என்று கூறுவார்கள்.  எல்லா வீட்டிலும் பிரச்சனைகள் உண்டு. ஆனால் பிரச்சனைகளின் வடிவங்கள் தான் வெவ்வேறாக இருக்கின்றது.  பிரச்சனைகளை மையப்படுத்தி பிரிந்து போவதற்கு ஆயிரம் காரணங்களை தேடுகிறோம். ஆனால்,  இணைந்திருப்பதற்கான காரணத்தை தேட மறுக்கின்றோம்.  நாம் இணைந்து இருக்கவும், விலக்க முடியாதவர்களாக ஒருவர் மற்றவருடைய வாழ்வில் இணைந்திருக்கவுமே இன்றைய நாளில் இறைவன் அழைக்கின்றார். 

  இஸ்ரயேல் மக்கள் விலக்க எண்ணிய போதும் இஸ்ரயேல் மக்களை விலக்காதவராக கடவுள் இருந்தார்.  எனவே அந்த மக்களின் வாழ்வில் அவர்களின் இன்ப துன்பத்தின் எல்லா நேரங்களிலும், இறைவன் உடன் இருந்து அவர்களை தேற்றக் கூடிய நபராக இருந்திருக்கிறார். 
நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் அந்த இறைவனை நாம் நமது உறவுகளிடையே பிரதிபலிக்க வேண்டும்.   எல்லாச் சூழ்நிலையிலும் நாம் தனித்து இருப்பதை விட இணைந்து இருப்பதையே சிரமேற் கொண்டு செயல்பட இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். நாளுக்குநாள் விவாகரத்து கேட்டு நீதிமன்றங்களை நாடுவோரின் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்ற செய்தி ஒருபுறம் இருந்தாலும், தனித்திருப்பதை விட இணைந்திருப்பதையே இறைவன் விரும்புகிறார் என்ற உண்மையை உணர்ந்துகொண்டு, தனித்து இருப்பதில் அல்ல  இன்பம். இணைந்து இருப்பதில் தான் இன்பம் இருக்கிறது.  இணைந்திருப்பது என்பது இறைவனுடன் மட்டுமல்ல அருகிலுள்ள ஒவ்வொருவரோடும், குறிப்பாக கணவன் மனைவியோடும் மனைவி கணவனோடும் என இணைந்து வாழவே நாம் அழைக்கப்படுகின்றோம்.

     நாம் அனைவரும் கடவுளை தந்தை என அழைப்பதால் கடவுளின் பிள்ளைகளாக இணைக்கப்பட்டுள்ளோம்.  எனவே அவரின் பிள்ளைகளான நாம், அவரிடம் இருந்து அவர் கற்பிக்கின்ற பாடங்களை கற்றுக் கொண்டு, நமது வாழ்வில் இணைந்து, இன்புற்று வாழ அழைக்கப்படுகிறோம். 

        விலக்குவதை விட்டுவிட்டு,  இணைந்து இருப்பதை மட்டுமே நமது வாழ்வின் முதல் படியாக கொண்டு, இந்த உலகத்தில் பயணம் செய்ய இறையருளை இணைந்து வேண்டுவோம்.

புதன், 11 ஆகஸ்ட், 2021

இறைவனை முன்னிறுத்துவோம்...(12.08.2021)

இறைவனை முன்னிறுத்துவோம்.

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
   இன்றைய நாளில் வாசிக்கப்பட்ட வாசகங்கள் அனைத்தும் நமது வாழ்வில் இறைவனை முன்னிறுத்தி, அவரைப் பின்பற்றி, அவரைப் போல இந்த சமூகத்தில் பிரதிபலிக்கக் கூடியவர்களாக மாறிட  நமக்கு அழைப்புத் தருகின்றன.  தொடக்க நூல் 1ம் அதிகாரம் 28ஆம் வசனம் கூறுகிறது, கடவுள் மனிதரைத் தம் உருவிலும் சாயலிலும் படைத்தார் என்று.  கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டுள்ள நாம் அவரை இந்த சமூகத்தில் பிரதிபலிக்கக் கூடியவர்களாக மாறிட வேண்டும். 

 இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து அழைத்து வந்த இறைவனை எல்லாச் சூழ்நிலையிலும் முன்னிறுத்த வேண்டும் என்ற செய்தியினை, இறைவாக்கினர்கள் வலியுறுத்துகிறார்கள். 

 எனவேதான்  ஆண்டவரின் பேழையை முதலில் சுமந்து கொண்டு, மக்களுக்கு முன்பாக ஆண்டவரின் பேழை செல்ல,  அதனைப் பின்செல்லக் கூடியவர்களாக அவர்கள் எப்போதும் இருக்கின்றார்கள்.  ஆண்டவரின் பேழை என்பது அவர்களுக்கு ஆண்டவரின் உடன் இருப்பை உணர்த்துவதாகவும்,  அவரே தங்களை முன் நின்று நடத்துவதாகவும் கண்டார்கள்.  நமது வாழ்வில் நாமும் எல்லாச் சூழ்நிலையிலும் ஆண்டவரை முன்னிறுத்தவும் அவரே நம்மை முன்னின்று வழி நடத்துகிறார் என்பதை கண்டு கொள்ளவும் நாம் அழைக்கப்படுகின்றோம். 

        பொதுவாகவே நாம் வாழுகின்ற இந்த உலகத்தில்,  ஆண்டவரை முன்னிறுத்துவது என்பது,  நல்ல காரியங்களில் நமக்கு நாமே மார்தட்டிக் கொண்டும் ஏதேனும் ஒரு துயரம் வருகின்றபோது ஆண்டவரை முன்னிறுத்தக்கூடிய பணியையும் தான் அறிந்தும் அறியாமலும் பலர் பல இடங்களில் செய்து கொண்டிருக்கிறோம்.  ஆனால் எல்லாச் சூழ்நிலையிலும் ஆண்டவரை முன்னிறுத்த நாம் அழைக்கப்படுகின்றோம்.  ஆண்டவரை முன்னிறுத்துகிறோம் என்றால்,  அது நமது  சொல்லிலும் செயலிலும் வெளிப்பட வேண்டும்.  ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணுலகில் வாழ்ந்த போது தன்னை  மரணத்திற்கு கையளித்தவர்களையும்,  தன்னை குற்றுயிரும் குலை உயிருமாக சிலுவையில் தொங்க விட்டு எள்ளி நகையாடிக் கொண்டிருந்தவர்களையும்  ஒன்று எனக் கருதினார்.  அனைவரையும் மன்னித்தார். அனைவரையும் ஏற்றுக் கொண்டார்.  அவர்களின் குற்றங்களுக்காக இறைவனிடத்தில்  பரிந்து பேசி மன்றாடினார். 

       அந்த இயேசு கிறிஸ்துவை நமது வாழ்வில் நமது சொல்லிலும் செயலிலும் வெளிப்படுத்தும் போது தான் உண்மையாகவே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பிரதிபலிக்கக் கூடிய மக்களாக இந்த சமூகத்தில் நாம் வலம் வர முடியும். 

 ஒருவர் எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்ற கேள்விக்கு எல்லை கடந்த அளவில் மன்னிக்க வேண்டும் என்ற பாடத்தை இயேசு கற்பிக்கின்றார்.  கற்பித்ததை தன் வாழ்வில் செயலாக்கப்படுத்தி காண்பித்தவர் இந்த இயேசு கிறிஸ்து.  இந்த இயேசுவை பின்பற்றுகின்ற நீங்களும் நானும், இவரிடம் காணப்பட்ட பண்புகளை நமது நற்பண்புகளாக மாற்ற வேண்டும்.  வெறும் வாய் வார்த்தையாக சொல்லி விட்டு நகர்ந்து விடாது, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை உண்மையாகவே சொல்லிலும் செயலிலும் இந்த சமூகத்தில் பிரதிபலித்து,  எல்லாச் சூழ்நிலைகளிலும்  அவரை முன்னிறுத்தி பயணிக்கக் கூடியவர்களாக இந்த சமூகத்தில் நாம் உருவாகிட இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

இணைந்து ஜெபிப்பதை இறைவன் விரும்புகிறார். ..(11.8.2021)

இணைந்து ஜெபிப்பதை இறைவன் விரும்புகிறார். 


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
     அனுதினமும் ஆண்டவரை நினைக்கக் கூடிய நம்மில் பலர்,  ஒவ்வொருவரும் ஆண்டவரிடத்தில் நமது தேவைகளைக் எடுத்துரைக்கின்றோம். ஆனால் நாம் இணைந்து ஜெபிப்பதை இறைவன் விரும்புகிறார். ஏனென்றால் நாம் அனைவரும் அவரை தந்தை என அழைக்கின்றோம். தந்தை என அவரை அமைப்பதால் நாம் அனைவரும் அவரது பிள்ளைகளாகிறோம். பிள்ளைகளாகிய நம்முடைய வேண்டுதலானது, மனம் ஒத்து இருக்கும் பொழுது அது இறைவனால் கேட்கப்படுகின்றது.  இறைவனால் அது நிறைவேற்றப்படுகிறது. 

         எங்கேனும் ஒரு தீர்வை எடுக்க வேண்டும் என்றால், பத்து பேர் இருக்கக்கூடிய இடத்தில் எத்தனை பேர் இந்த கருத்தை ஆதரிக்கிறீர்கள்? என்ற கேள்வியை எழுப்பி அதிகமானவர்கள் எதை ஆதரிக்கிறார்களோ அதனை நாம் தீர்வாக எடுப்பது உண்டு.  அதுபோலவே இறைவனிடத்தில் மன்றாடும் போதும் நாம் மனமொத்து ஒரு கருத்துக்காக அனைவரும் இணைந்து செபிக்கின்ற போது,  இறைவன் அதற்கு செவிகொடுக்கக் கூடியவராக இருக்கிறார் என்ற சிந்தனையை இன்றைய நற்செய்தி வாசகம் வழங்குகிறது.  மேலும் இன்றைய நற்செய்தி வாசகம்,  நம்மை குறை காணக்கூடிய மனிதர்களாக அல்ல,  நிறைகளை மையப்படுத்தக் கூடிய மனிதர்களாக இருக்க அழைக்கின்றது.  நாம் அடுத்தவரிடத்தில் குறைகளை அதிகம் கண்டு கொண்டிருக்கிறோம்.  குறைகளை கண்டு கொள்வதை விட்டுவிட்டு,  அடுத்தவரிடம் இருக்கக்கூடிய நேர்மறையான எண்ணங்களையும் நல்ல செயல்பாடுகளையும் அதிகமாக கண்ணோக்கவும்,  அதனை முன் நிறுத்தவும் இன்றைய நாளில் இறைவன் அழைக்கின்றார்.
       பிறரை குற்றவாளிகள் என சொல்லிக் கொண்டிருக்கும்போது தான் நாம் குற்றவாளிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.... என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.  நாம் வாழுகின்ற இந்த உலகத்தில்,  பிறரிடம் இருக்கின்ற குறைகளை பெரிதுபடுத்துவதை விட்டுவிட்டு, அவர்களிடம் இருக்கின்ற நிறைகளை பெரிதுபடுத்தி,  இந்த உலகத்தில் ஒத்த கருத்துடையவர்களாய், இறைவன் விரும்பக்கூடிய இறையாட்சியின் மதிப்பீடுகளை மட்டும் மனதில் நிறுத்தியவர்களாய்,  அந்த மதிப்பீடுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கக் கூடிய இயேசுவின் உண்மைப் பணியாளர்களாய் மோசேயைப் போல நாமும் இந்த உலகத்தில் பயணம் செய்து இறைவனது உண்மைச் சீடர்கள் என்பதை சொல்லால் அல்ல,  செயலால் வெளிக்காட்டிட இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...