நிறைவை நிரந்தரமாக்க...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
மனித மனம் நிறைவை அடைவது என்பது சாதாரணமான ஒன்று அல்ல. ஆனால் நிறைவை அடையும் போதுதான் வாழ்வு முழுமை பெறுகிறது. பிறந்த நாளில் இருந்து மரணத்தை தொடும் நேரம் வரை ஏதோ ஒன்றை தேடிக் கொண்டு பயணிக்கின்றோம். இந்த இடைப்பட்ட காலத்தில் மனம் நிறைவடைந்ததா? என்ற கேள்வியை எழுப்பும் பொழுது நிறைவானது எட்டாக்கனியாகவே இருக்கிறது. பாலைநிலத்தில் இஸ்ரயேல் மக்களை வழிநடத்திய இறைவன், பாலைவனத்தில் அவர்களின் பசியை அறிந்தவராய் அவர்களுக்கு மன்னாவை பொழியச் செய்தவர்;, ஆனால் கொடுத்த உணவில் குறை காணத் தொடங்கினர்ர்கள்அவர்கள். எதுவும் இல்லாத காலத்தில் மன்னா அவர்களுக்கு பெரிய உணவாக தெரிந்தது. எல்லாம் கிடைக்கின்ற நேரத்தில் மன்னாவை விட உயர்ந்த உணவை நோக்கி மனமானது நகர்ந்தது. இதுதான் பல மனிதர்களின் இயல்பான மனநிலை. நாமும் பல நேரங்களில் அவ்வாறு தான் இருக்கின்றோம். இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடன் இருந்த சீடர்களிடம் கூடியிருந்த கூட்டத்தினருக்கு உணவு கொடுக்கச் சொன்னார். சீடர்கள் தங்களிடம் இல்லை என்ற வார்த்தைகளைத்தான் முதலில் உதிர்த்தார்களே தவிர, தங்களிடம் இருப்பதை முதலில் தருவதற்கான வார்த்தைகள் அவர்களிடம் எழவில்லை. காரணம், மனித மனம் எதையும் தனக்கென வைத்துக் கொள்ளவும், தன்னுடைய நிறைவை மட்டும் மையப்படுத்துவதாக இருந்தது. ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைவருடைய எண்ணங்களையும் அறிந்தவராய், அனைவருக்கும் நிறைவைத் தரக் கூடியவராய், அனைவருக்கும் உணவு கொடுங்கள் என்றார். உணவில் மட்டும் தான் நிறைவை நாம் காண முடியும். அதுவும் நிரந்தரமான நிறைவு அல்ல. ஒரு குறிப்பிட்ட நேரத்தின் நிறைவு. எனவே தான் அனைவரும் உண்டது போக மீதி உள்ளதை 12 கூடைகளில் எடுத்து வைத்தார்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைவருக்கும் நிறைவைத் தர வேண்டும் என்பதற்காகவும், தம்மிடம் இருப்பதை அடுத்தவரோடு பகிர வேண்டும் என்பதற்காகவும், இரண்டு மீனையும், ஐந்து அப்பத்தையும் பலரோடு பகிர்ந்தார்.
நாமும் இருப்பதை பகிரும் போது நமக்குள்ளாக ஒரு நிறைவு உருவாகும். அது நிரந்தரமானது என்று கூறமுடியாது. ஆனால் அந்த நிறைவை நிரந்தரமாக்கிக் கொள்ள நாம் நமது வாழ்வில் ஈடுபட வேண்டும் என்ற செய்தியினை இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமக்குத் தருகின்றார். இறைவன் தருகின்ற அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாய், நமது சொல்லிலும் செயலிலும் நம்மிடம் இருப்பதை அடுத்தவரோடு பகிர்வதில் நிறைவு காணவும் இறையருளை இணைந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக