ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

வார்த்தைகளை வாழ்வில் செயலாக்குவோம்...(28.02.2022)

 வார்த்தைகளை வாழ்வில் செயலாக்குவோம்...




    நாம் இந்த உலகத்தில், தகுந்த தயாரிப்போடு, தகுந்த முறையில், ஆண்டவரது வார்த்தைகளை வாழ்வாக்கும் போது மட்டுமே நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்ள முடியும். 

    ஆண்டவரின் வார்த்தைகளை வாழ்வாக்காமல், வெறுமனே கடமைக்காக, பத்தோடு ஒன்று பதினொன்று, அத்தோடு நான் ஒன்று என்று, நாம் வழிபாடுகளிலும் அறச் செயல்களிலும் ஈடுபடுபவர்களாக இருந்தால், கண்டிப்பாக நிலை வாழ்வு என்பது எட்டாக் கனியாகவே இருக்கும், என்று கூறினாராம். இன்றைய நாள் வாசகத்திலும் கூட நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள ஒருவன் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். கட்டளைகளைக் கடைபிடி என்றார். கடைபிடிக்கிறேன் என்றான்.

    ஆனால் உன்னிடம் இருப்பதை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு என்ற போது, அந்த அறச்செயல்களில் ஈடுபட அவனது மனம் இடம் கொடுக்காததால், அவன் திரும்பிச் சென்று விட்டான். இன்று நம்மில் பலர் பெரும்பாலான நேரங்களில் நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் ஆண்டவர் இயேசு கற்பித்த இறையாட்சியின் விழுமியங்களை, வாழ்வில் பின்பற்றத் தயங்குகிறோம். அதனை செயல்படுத்துவதற்கு மனம் இல்லாதவர்களாக இச்சமூகத்தில் பயணிக்கிறோம். 

    ஆண்டவரது வார்த்தைகளை இச்சமூகத்தில் செயலாக்கப்படுத்த இயலாத போது, நிலை வாழ்வு என்பது எட்டாக் கனியாகவே இருக்கும் என்ற பாடம் இன்று நமக்குத் தரப்படுகிறது. ஆண்டவரது வார்த்தைகளை வாழ்வில் செயலாக்குவோம். நிலை வாழ்வை உரிமையாக்குவோம்.





சனி, 26 பிப்ரவரி, 2022

வார்த்தை வாழ்வாகட்டும்....(27.2.2022)

வார்த்தை வாழ்வாகட்டும்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

 தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. 
யோவான் 1:1


 வார்த்தையான இறைவன் அனுதினமும் நம்மோடு பல வழிகளில் உரையாடுகிறார்.... 


கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
எபிரேயர் 4:12 நாம் வாசிக்கிறோம்...
 இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகளை குறித்தும் நமது உள்ளத்து எண்ணங்களை குறித்தும் சிந்திக்கவும் சீர்தூக்கி பார்க்கும் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.  

U
உள்ளத்தின் நிறைவை வாய் பேசும். (லூக்கா 6:45) என்ற விவிலிய வார்த்தைகளுக்கு ஏற்ப,  ஒரு மனிதனின் எண்ணங்களே அந்த மனிதனை இச்சமூகத்தில் எத்தகைய குணம் கொண்ட  மனிதன் என்பதைப் பிரதிபலிக்கிறது.  

நமது வார்த்தைகளைக் கொண்டே நாம் அறியப்படுவோம் என்பதை இன்றைய முதல் வாசகம் சல்லடையில் சலிக்கின்ற  போது தூசி தங்குவது போல நமது சொற்களில் இருக்கும் மாசுக்களும் நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் மூலம் வெளிப்படுகின்றன என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றன.


எலும்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும் என்பதற்கிணங்க நேரத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப மாற்றி மாற்றி பேசக்கூடிய, மாசுபடிந்த வார்த்தைகளை உதிர்க்கும்  போக்கானது இன்று மனிதர்கள் மத்தியில் வளர்ந்துக் கொண்டே வருகிறது... 


திருவள்ளுவர் குறிப்பிடுவதுபோல ...

 "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.

தீயினால் சுட்ட புண் ஆறிவிடும் ஆனால் நாவினால் உண்டாக்கிய வழிகள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பது மறுக்கவியலாத உண்மை.

நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் இந்த சமூகத்தில் வெறும் வார்த்தைகளாக மட்டுமே இருந்து விடுவது அல்ல. நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் இந்த உலகத்தில் பலவிதமான மாற்றங்களை உருவாக்குகின்றன. வார்த்தைகளால் நாம் ஒருவரை குணப்படுத்தவும் முடியும் இரணப்படுத்தவும் முடியும் ...

பல நேரங்களில் போர்க்கருவிகள் தருகின்ற வலியை விட வார்த்தைகள் தருகின்ற வலியே தாங்க இயலாத ஒன்றாக உள்ளது. 


 நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் அழிவை உண்டாக்காமல் ஆன்மாவை வலுப்படுத்துவதாக அமைய வேண்டும்....என்பதையே இன்றைய வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்ற வாழ்வுக்கான பாடமாக உள்ளது.

நாம் பின்பற்றுகின்ற இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்வு இதைத்தான் நமக்கு வலியுறுத்துகின்றன. இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது அவரது வார்த்தைகள் இந்த மண்ணில் இருந்த பலருக்கு ஆறுதலைத் தந்தது... சமூகத்தால் புறம்தள்ளப்பட்ட அவர்களுக்கு புத்துணர்வைத் தந்தது...பாவி என்று ஓரம் கட்டப் பட்ட மக்களை சமூகத்தோடு ஒன்றிணைக்க செய்தது ...   ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை போலவே நமது வார்த்தைகளும் அனுதினமும் அமைய வேண்டும் ... 


 ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். (லூக்கா 6:44) இவ்வார்த்தைகளுக்கு ஏற்ப நமது வார்த்தைகளாள் நாம் யாரை இந்த சமூகத்தில் பிரதிபலிக்கிறோம் என்பது அறியப்படுகிறது. நமது வார்த்தைகள் ஆண்டவர் இயேசுவை இந்த சமூகத்தில் பிரதிபலிக்க வேண்டும் என்பதுதான் இந்த நாளின் மையச் செய்தியாக உள்ளது....

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை போலவே இந்த சமூகத்தில் நாம் நமது வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக பல நேரங்களில் பார்வையற்றவர் பார்வையற்ற இன்னொருவருக்கு வழி காட்டுவது போலவும், தன் கண்ணில் மரக்கட்டையை வைத்துக்கொண்டு அடுத்தவர் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுக்க முயல்பவர் போலவும் தான் பல நேரங்களில் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்...

பல நேரங்களில் இறைவனது வார்த்தைகளை நமது வார்த்தைகளாக மாற்றி கொண்டு பயணிப்பது என்பது எளிதான காரியமல்ல என நாம் என்னலாம்....  
சுவாமி விவேகானந்தர் கூட தான் இறைவனோடு உரையாடியதாக இவ்வாறு குறிப்பிடுவார்கள்.... 



நான் இறைவனிடம் எனக்கு வலிமை தாரும் என்று கேட்டேன்.  ஆனால் அவர் கொடுத்ததோ நெருக்கடியான சூழ்நிலைகள். 

 நான் எனக்கு மகிழ்ச்சியைத் தாரும் எனக் கேட்டேன். அவரோ மகிழ்ச்சியற்ற மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்.


அறிவைத் தாரும் எனக் கேட்டேன். அவரோ வாழ்வின் புதிர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். 


எனக்கு நிம்மதியை தாரும் எனக் கேட்டேன். ஆனால் அவரோ பிறருக்கு உதவச் சொன்னார்.

சலுகைகளை தாரும் எனக் கேட்டேன். அவரோ வாய்ப்புகளை வழங்கினார். 


நான் விரும்பியது எதையும் கடவுள் எனக்கு தரவில்லை. ஆனால் எனக்கு தேவையானதை எல்லாம் இறைவன் தந்தார் என்ற விவேகானந்தரின் வார்த்தைகளுக்கு ஏற்ப பல நேரங்களில் நாம் நினைப்பதற்கு மாறாக பலவற்றை இறைவன் நமது வாழ்வில் நமக்கு தரலாம்  ஆனால் நாம் எல்லா சூழ்நிலையிலும் இறைவனது வார்த்தைகளை வெளிப்படுத்த மனிதர்களாக இச்சமூகத்தில் விளங்க வேண்டும் ...

எனவே இந்த நல்ல நாளில்  நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகளை குறித்து சிந்திக்கவும், சீர்தூக்கிப் பார்க்கவும் இந்த நாளில் இறைவன் அழைப்பு தருகிறார் ...என்பதை உணர்ந்து கொள்வோம்.  இறைவனின் குரலுக்கு செவி கொடுத்து இனிய வார்த்தைகளால் இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் இன்புற்று வாழ இனிய வார்த்தைகளை நமது வார்த்தைகளாகிக்கொண்டு பயணிக்க இறையருள் வேண்டுவோம்.



இயேசுவைப்போல பயணிப்போம்...(27.02.2022)

 

இயேசுவைப்போல பயணிப்போம். 



    மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் மரணம் என்பதை சந்தித்தே தீர வேண்டும். நாம் பிறந்த நாளில் இருந்து மரணத்தை சந்திக்கும் நாளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தில் எவ்வாறு வாழ்கிறோம் என்று சிந்திக்கின்ற பொழுது, ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களாக இருந்தாலும், பலரிடத்திலும் பல விஷயங்கள் பொதுவாக இருக்கின்றன. குறிப்பாக தன்னைவிட அடுத்தவர்கள் குறைவானவர்கள் என்ற எண்ணம். அந்த அடிப்படையில்தான் பல நேரங்களில் பல அறிவுரைகளை வழங்குபவர்களாக இருக்க ஆசைப்படுகிறார்கள். வழங்கும் அறிவுரைகளை அவர்கள் பின்பற்றுகிறார்களா? என்ற கேள்வியை எழுப்பும் பொழுது, இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கப்பட்டது போல, தன்னுடைய கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுக்காது, அடுத்தவன் கண்ணில் இருக்கக்கூடிய மரக்கட்டையை எடுப்பவர்களாகத் தான் நம்மில் பலர் இருந்து கொண்டிருக்கிறார்கள். 

    ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்லுகிறார், இந்த சமூகத்தில் நாம் எதையெல்லாம் விதைக்க விரும்புகிறோமோ, அதை எல்லாம் நாம் முதலில் விதைக்க கூடியவர்களாக இருப்போம். நமது வாழ்வில், நமது சொல்லில், நமது செயலில், அதனை வெளிப்படுத்துவோம். அதன்பிறகு அடுத்தவர் வாழ்விலும் அவை வெளிப்பட வேண்டும் என்பதை நாம் கற்பிக்கலாம். பொதுவாக வார்த்தைகளில் கற்பிப்பதை விட, செயல்களில் ஈடுபடுவது தான் சிறந்தது எனக் கூறுவார்கள். நாம் நேர்மையாளர்களாக இருந்தால், நம்மைப் பார்க்கின்றவர்கள் நேர்மையாளர்களாக உருவாவார்கள். நாம் ஒரு காரியத்தில் நேர்மையானவர்கள் என்ற பெயரைப் பெறும் பொழுது, நம்மை நாடி வருபவர்கள் நம்மிடம் நேர்மையற்ற முறையில் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு வரமாட்டார்கள். இவர் நேர்மையானவர். எனவே நாமும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு வருவார்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவ்வாறு தான் இந்த உலகத்தில் இருந்தார். தான் எதையெல்லாம் செய்ய வேண்டும்? இந்த உலகம் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என அறிவித்தாரோ, அதனை அவர் வெறும் வார்த்தைகளாக அறிவித்து விட்டுச் செல்லவில்லை. அவர் அறிவித்தவைகளை தன் வாழ்வில் கடைப்பிடித்தார். அவர் எதை எல்லாம் கற்பித்தாரோ, அதை எல்லாம் வாழ்வாக வாழ்ந்து காண்பித்தார். 


    எனவே தான் அந்த ஆண்டவர் இயேசுவை பலரும் பின்பற்றக் கூடியவர்களாக இன்று மாறி இருக்கிறார்கள். நாமும் ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றுகிறோம். ஆனால் பல நேரங்களில் நாம் அனைவரும் நம்மிடம் இருக்கும் குறைகளை சரி செய்து கொள்ளாது, நமது குறைகளை மறைத்து, பிறரின் குறைகளை பெரிதுபடுத்தக் கூடியவர்களாகத் தான் இருக்கிறோம். அவ்வாறு செயல்படாது, பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட இந்த காலங்களிலே, நாம் இந்த சமூகத்தில் நல்ல மனிதர்களாக இயேசுவைப்போல பயணிப்போம். 




வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

குழந்தை மனம் கொண்டவர்களாய்....(26.02.2022)

 

குழந்தை மனம் கொண்டவர்களாய்....




    சிறு குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இந்த சமூகத்தில் ஏராளம். சிறுவர்கள் என்றால் எதுவும் தெரியாதவர்கள் என்று நாம் கூறுவது உண்டு. இன்னும் வளரவில்லை, வளர்ந்த பிறகு கூறு, என்று கூறி அவர்களை மட்டப்படுத்துவதும் உண்டு. ஆனால் சிறு பிள்ளைகளை ஆண்டவர் இயேசு உயர்வாக கூறுகிறார். அவர்களை தன்னிடம் வரவழைக்கின்றார். அவர்களை ஏற்றுக் கொள்ளக் கூறுகின்றார். ஏனென்றால் அவர்களிடத்தில் காணப்படக் கூடிய பண்பு நலன்கள், நாளுக்கு நாள் வளர வளர பெரிதாகின்ற நம்மிடம் மறைந்து போகின்றது. 


    சிறுவயதில் நம்மிடம் இருந்த பல நற்பண்புகள், நாம் வளர்ந்த பிறகு நம்மிடமிருந்து மறைந்து போகின்றன. அவை மறைந்து போகக் கூடியது அல்ல. மாறாக, உனக்குள் புதைந்துள்ள உனது இயல்பைக் கண்டு கொள் என்ற பாடத்தை உணர்த்தும் வண்ணமாகத் தான் சிறுபிள்ளைகளை ஆண்டவர் இயேசு தன்னிடம் வரவழைத்து, அவர்களிடம் இருந்து பாடம் கற்பிக்க அழைக்கின்றார். 


    சிறுபிள்ளைகள் தன்னலம் கருதாது தன்னிடம் இருப்பதை அடுத்தவரோடு பகிர்ந்து கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். சிறுபிள்ளைகள் கோபப்பட்டாலும் அதனை மறந்து அனைவருடனும் இணைந்து விளையாடக் கூடியவர்களாக இருப்பார்கள். சிறுபிள்ளைகள் எளிதில் தன்னைக் காயப்படுத்தியவர்களை  மறந்து மன்னித்து விட்டு, அவர்களோடு நட்பு பாராட்டுவதை விரும்புவார்கள். 


    நாமும் வயது ஆக ஆக நம்மிடம் இருக்கும் இத்தகைய நற்பண்புகளை எல்லாம் புதைத்துவிட்டு, நாம் பகைமையையும் கசப்பு உணர்வுகளையும் மட்டுமே முதன்மைப்படுத்தி உறவுகளிடம் இருந்து பிரிந்து வாழ்கின்றோம். ஆனால், அனைத்தையும் புறம்தள்ளி இணைந்து வாழ்ந்த சிறு குழந்தைகளைப் போல, நாமும் இப்போதும், குழந்தை மனம் கொண்டவர்களாய் வாழ இறைவன் அழைக்கின்றார். அவரது அழைப்பை உணர்ந்து கொண்டு குழந்தை மனம் கொண்டவர்களாய் சமூகத்தில் ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொண்டு இணைந்து வாழ இறையருள் வேண்டுவோம்.




வியாழன், 24 பிப்ரவரி, 2022

இணைந்து வாழ...(25.02.2022)

 இணைந்து வாழ...


    


    நாளுக்குநாள் விவாகரத்து கேட்டு நீதிமன்றங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டிருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில்ஆண்டவர் இணைந்து வாழ இன்றைய வாசகங்கள் வழியாக அழைப்பு தருகிறார்.


    கடவுள் ஆணும் பெண்ணுமாக படைத்தார் அவர்களை ஒருவரோடு ஒருவர் இணைத்து வைத்தார் அந்த இணைப்பில் பலவிதமான கருத்து வேறுபாடுகள் முரண்பாடுகள் இருந்தாலும் அனைத்திற்கு மத்தியிலும் இணைந்து இச்சமூகத்தில் வாழவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. 

    கடவுள் இணைந்திருப்பதை தான் விரும்புகிறார், தனித்திருப்பதை அல்ல. நாம் ஆண்டவரோடு இணைந்து இருக்க வேண்டும். இச்சமூகத்தில் நாம் அடுத்தவரோடு இணைந்திருக்க வேண்டும். கணவன் மனைவியோடு இணைந்திருக்க வேண்டும். மனைவி கணவனோடு இணைந்திருக்க வேண்டும். பெற்றோர் பிள்ளைகளோடும், பிள்ளைகள் பெற்றோரோடும் இணைந்திருக்க வேண்டும். 

    இணைந்து வாழ்வதில் பலவிதமான இன்னல்கள் வந்தாலும் அனைத்தையும் புறந்தள்ளி, தனித்து வாழ்வதை தவிர்த்து, இணைந்து, இன்புற்று, ஒருவர் மற்றவரை புரிந்து கொண்டு, ஒருவர் மற்றவரின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய இயேசுவின் பணியாளர்களாய், ஒருவர் மற்றவரை தாங்கக் கூடியவர்களாக இச்சமூகத்தில் உருவாக்கிட இறையருளை வேண்டுவோம்.




புதன், 23 பிப்ரவரி, 2022

தூய்மையாவோம்....(24.02.2022)

தூய்மையாவோம்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பலி பொருட்களில் உப்பு கலந்து தூய்மையாக்கப்படுவது போல,  நெருப்பால் நாம் ஒவ்வொருவரும் தூய்மையாக்கப்பட வேண்டும் என நாம் வாசிக்கக் கேட்டோம். அன்றைய காலகட்டத்தில் யூதர்கள் கடவுளுக்கு காணிக்கையாக கொடுக்கக் கூடிய பலிப் பொருள்கள் மீது உப்பினை கலப்பார்கள். இந்த உப்பு கலக்கப்படுவது காணிக்கைப் பொருளை தூய்மைப்படுத்துவதற்கான அடையாளமாக கருதப்பட்டது. 

    இதனை குறித்து லேவியர் புத்தகம் 2 அதிகாரம் 13 வசனத்தில் நாம் வாசித்து அறிந்து கொள்ளலாம். எப்படி ஒரு பலி பொருளின் மீது உப்பு கலந்து தூய்மைப்படுத்தப்படுகிறதோ அதுபோல நாம் நெருப்பால் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். 

           இங்கு நெருப்பு என்பது தூய ஆவியானவரின் வடிவமாக பார்க்கப்படுகிறது. திருத்தூதர் பணிகள் இரண்டாம் அதிகாரத்தில் இதனை நாம் வாசிக்கலாம், தூய ஆவியானவர் அங்கிருந்தவர்கள் மீது நெருப்பு வடிவத்தில் வந்தார் என்று. இந்தத் தூய ஆவியானவர் என்னும் நெருப்பால் நாம் தூய்மையாக்கப்பட வேண்டும். நாம் தூய்மையாக்கப்படுவதற்கு இரண்டு வழிகளை ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் முன்னிறுத்துகிறார். 

      முதல் வழி: நாம் யாரென அறியாதவர்களுக்கு சின்னஞ் சிறு உதவிகள் செய்வதன் மூலம், நாம் தூய ஆவியாரால் தூய்மைப்படுத்தப்படுகிறோம்.

இரண்டாவது வழி: பாவம் செய்வதற்கு ஏதுவான சூழல் உருவாகின்ற போது, அச்சூழலில் இருந்து நாம் விலகி செல்கின்ற போது, தூய ஆவியானவரால் தூய்மைப்படுத்தப்படக் கூடியவர்களாக நாம் மாறுகிறோம்.  

           இறைவன் கற்பிக்கின்ற இந்த வழிகளை நமது வாழ்வின் நெறிகளாக மாற்றிக் கொண்டு நாம் வாழுகின்ற சமூகத்தில் நாம் அறியாதவர்களுக்கு நம்மாலான சிறு சிறு உதவிகள் செய்வோம். அதுபோல பாவம் செய்வதற்கு ஏதுவான சூழல் இருக்கின்ற போது அச்சூழலை விட்டு விலகிச்செல்லக் கூடியவர்களாக நாம் மாறுவோம். அதன் வழியாகத் தூய ஆவியானவரின் நெருப்பால் தூய்மைப்படுத்தப் பட்டவர்களாக இறைவனின் பாதையில் ஒவ்வொரு நாளும் இன்முகத்தோடு பயணம் செய்ய இறையருள் வேண்டி இன் முகத்தோடு தொடர்ந்து பயணம் செய்வோம்.

இயேசுவுக்கு உகந்த வாழ்வு...(24.02.2022)

 இயேசுவுக்கு உகந்த வாழ்வு...




    சமையலில் உப்பு மிகவும் அவசியமான ஒன்று. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று கூறுவார்கள்.உணவை அருமையாக சமைத்து அதில் உப்பை இடவில்லை என்றால் அது பயனற்றதாகிவிடும். 

    உப்பு சமையலில் தன்னை பெரிதாக காட்டிக் கொள்வதில்லை.ஆனால் அது தவிர்க்கப்பட முடியாத ஒன்றாக இருக்கிறது. அதுபோல இயேசுவை பின்பற்றக்கூடிய நமது வாழ்விலும் பல உப்புக்கள் தவிர்க்கப்பட முடியாதவையாக இருக்க வேண்டும்.     

    அவைகளில் ஒன்றுதான் அர்ப்பணிப்பு. நம்மிடம் இருப்பதை அடுத்தவரோடு பகிர்ந்து கொள்வதற்கான மனம், தியாக உள்ளம், அர்ப்பணிப்பு மனப்பான்மை நம்மிடத்தில் இருத்தல் வேண்டும். அந்த அர்ப்பணிப்பு நம்மை ஆண்டவர் இயேசுவின் சீடர் ஆக்கும். பலன் கருதாது பணி செய்யத் தூண்டும்.     

    மன்னிப்பு வாழ்வில் அவசியமான ஒன்று. இந்த மன்னிப்பு அடுத்தவரை பாவத்தில் விழச் செய்யாது தடுக்கும். நமக்கு எதிராக தீங்கு செய்தவரை கூட மீண்டும் அந்த தவற்றை செய்ய விடாது தடுக்கக்கூடிய கருவியாக இருக்கும். இந்த மன்னிப்பு வாழ்வில் அவசியமான ஒன்றாகிறது. 

    உப்பு உணவில் மட்டுமல்ல வாழ்விலும் அவசியம். அர்ப்பணிப்பும் மன்னிப்பும் வாழ்வில் இருக்கும் பொழுது நமது வாழ்வு அர்த்தமுள்ள வாழ்வாக, ஆண்டவர் இயேசுவுக்கு உகந்த வாழ்வாக இருக்கும். அத்தகைய வாழ்வை நாம் உரிமையாக்கிக் கொள்ள இறையருள் வேண்டுவோம்.




செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

நலமான பணிகளை முன்னெடுக்க...(23.02.2022)

நலமான பணிகளை முன்னெடுக்க...




    இந்த உலகத்தில் நல்லது செய்வதிலும் போட்டி இருக்கிறது. நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் பலர் நல்ல பணிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அந்த நல்ல பணிகளில் ஈடுபடும் போது அவர்கள் தங்களுக்கான பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், அடுத்தவர் செய்கின்ற நன்மைகளை காணாது, அவர்களிடத்தில் இருக்கும் குறைகளையே அதிகம் மையப்படுத்துகிறார்கள். 

    இவ்வாறு குறைகளை மையப்படுத்துவதை நிறுத்திவிட்டு, அனைவரும் இணைந்தால் கண்டிப்பாக என்னும் அற்புதமான பல பணிகளை இந்த சமூகத்தில் முன்னெடுக்க முடியும். 

    ஆண்டவர் இயேசு கிறிஸ்து பல பணிகளை செய்தபோது அதே பணியை இன்னொருவர் செய்வதை கண்டு, ஏற்றுக்கொள்ள இயலாத சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து கூறியபோது, அவர் இவ்வாறு சொன்னார்: நமக்கு எதிராக இல்லாதவர் நம் சார்பாக இருக்கிறார். நாம் அனைவரும் செய்வது நலமான நல்ல பணி. நல்லதை செய்கிறோம் என்ற ஒற்றை குடையில் நாம் அனைவரும் இணைந்து இருக்கிறோம். அதை மட்டுமே முன்னிறுத்தி நாம் செய்ய வேண்டுமே தவிர மற்றவரை குறை கூறி நாம் தான் அதிகம் செய்கிறோம் என்ற எண்ணத்தோடு சமூகத்தில் பயணிப்பது தவறு என்ற பாடத்தை ஆண்டவர் இயேசு தன் சீடர்கள் வழியாக இன்று நமக்கு கற்பிக்கின்றார். 

    அவர் கற்பிப்பதை உணர்ந்து கொள்வோம். நல்லது செய்வோம். நல்லது செய்வதால் இணைவோம். நல்லது செய்வதிலும் நான்தான் அதிகம் செய்தேன் என்ற மனப்பான்மையோடு பயணிப்பதை நிறுத்திக் கொள்வோம். நல்லது செய்யும் அனைவரையும் ஏற்றுக் கொண்டு இந்த சமூகத்தில் நலமான பணிகளை முன்னெடுக்க இறையருளை வேண்டுவோம்.




திங்கள், 21 பிப்ரவரி, 2022

இயேசுவை ஆழமாக புரிந்துகொள்ள...(22.02.2022)

 

இயேசுவை ஆழமாக புரிந்துகொள்ள...



    இன்றைய நாளில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து திரு அவையை பேதுரு வழியாக நிறுவுவதை நாம் வாசிக்க கேட்டோம்.  மனிதனாக வாழுகின்ற ஒவ்வொருவருக்கும் தன்னைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளத்தில் இருக்கிறது. அந்த ஆசையின் அடிப்படையில், பல நேரங்களில் நாம் பல இடங்களில் நாம் செய்தவைகளை மற்றவர்கள் பாராட்ட வேண்டும், புகழ வேண்டும், நாம் செய்தவைகளுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும், என எண்ணுகிறோம். அதனடிப்படையில் நாம் பல நேரங்களில் பலவிதமான முயற்சிகளில் ஈடுபடுகிறோம். 

    ஆனால், இந்த அங்கீகாரத்தையும் பாராட்டையும், புகழ்ச்சியையும் அடிப்படையாகக்கொண்டு, நமது செயல்கள் அமைந்திருத்தல் ஆகாது. அதைக் கடந்து, நமது செயல்கள் காண்பவர்கள் இயல்பாகவே நாம் செய்யக்கூடிய நற்பண்புகளை புரிந்துகொண்டு அதை அவர்களும் தங்கள் வாழ்வில் பின்பற்றக் கூடியவர்களாக மாற வேண்டும். அத்தகைய வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். இயேசுவின் செயல்பாடுகள் அப்படி அமைந்திருந்தன. எனவேதான் பலர் இயேசுவை பல விதங்களில் புரிந்து கொண்டாலும், பேதுரு அவரை மெசியாவாகப் புரிந்து கொண்டார். 

    தன்னை முழுமையாக புரிந்து கொண்ட அந்த பேதுருவின் மீது திருஅவையை நிறுவுவதாக இயேசு கூறுகிறார். இயேசுவின் வார்த்தைகள் காலப்போக்கில் நிறைவேறின. பேதுரு திருஅவையின் தந்தையாக மாறினார். திருஅவையில் படிக்காத ஒரு நபர், ஆனால் அனைவரையும் ஒருங்கிணைத்து, இச்சமூகத்தில் ஆண்டவர் இயேசுவின் இறையாட்சியின் மதிப்பீடுகளை நிலைநாட்டிட முழுமுதல் காரணமாக இருந்தார். எப்படி அவரால் இது நிகழ்ந்தது? என சிந்திக்கின்ற பொழுது, அவர் இயேசுவை முழுமையாக அறிந்து கொண்டார், புரிந்துகொண்டார். எனவே தான் அவரால் அத்தகைய செயலைச் செய்ய முடிந்தது. 

    நாமும் ஆண்டவர் இயேசுவை ஆழமாகப் புரிந்து கொள்கின்ற போது, நம்மால் இந்த உலகத்தில் பலவிதமான அற்புதமான காரியங்களைச் செய்ய முடியும். எனவே நாம் ஆண்டவர் இயேசுவை ஆழமாக புரிந்துகொள்ள, புரிந்து கொண்ட இறைவனை நமது வாழ்வில் செயல்கள் மூலம் வெளிக்காட்டிட இறை அருள் வேண்டுவோம்.




ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

நமது வாழ்வில் செபமும் நோன்பும்....(21.02.2022)

 நமது வாழ்வில் செபமும் நோன்பும்....




    ஞானி என்பவன் அனைவரிடமிருந்தும் கற்பவன் என்பார்கள். ஒரு குரு தன்னுடைய மாணவர்கள் தன்னிடம் இருந்த அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புவார்கள். அந்த அடிப்படையில்தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும், தன்னிடமிருந்த அனைத்தையும் தன்னுடைய சீடர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புகிறார். 

    ஆனால் முழுமையாக அதனை அவர்கள் செய்யவில்லை. அதனால்தான் தீய ஆவிகளை ஓட்டுகின்ற அதிகாரத்தை ஆண்டவர் இயேசுவிடம் இருந்து பெற்றிருந்த நிலையிலும்,  அவர்களால் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்ய முடியாமல் போகிறது. அந்நேரங்களில் அவர்கள் தடுமாறுகின்ற போது இயேசு அவர்களிடத்தில், உரிமையோடு கடிந்து கொள்கிறார். இன்னும் எத்தனை காலம் நீங்கள் முழுமையாக கற்றுக் கொள்ளாமல் இருப்பீர்கள்? கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி, தீய ஆவியை ஓட்டுகிறார். அதேசமயம் சீடர்களுக்கு பாடத்தையும் கற்பிக்கின்றார். நோன்பும் செபமும் மிகவும் அவசியமான ஒன்று என்பதை அவர்களுக்கு கற்பிக்கின்றார். 

    நமது வாழ்வில் நாம் பலவிதமான அற்புதங்களையும் நல்ல செயல்களையும் செய்யவேண்டும் என்றால், நமது வாழ்வில் அனுதினமும் செபமானது இருத்தல் வேண்டும். அவ்வப்போது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் படிப்பினைகளின் அடிப்படையில்,  நோன்பு இருத்தலையும் நாம் கடைபிடிக்க வேண்டும். இந்த செபமும் நோன்பும் வாழ்வில் பலவற்றை நமக்கு கற்பிக்கிறது. 

    செபம் எல்லா செயல்களிலும் ஆண்டவரை முன் நிறுத்த கற்றுக் கொடுக்கின்றது. 

    நோன்பு அடுத்தவரின் பசியை உணர்ந்து கொள்வதற்கு கற்றுக் கொடுக்கிறது. 

    இந்த இரண்டையும் கற்றுக் கொள்கின்ற போது தான், இந்த சமூகத்தில்  எப்போதும் நாம் அடுத்தவரின் நலனை முன்னிறுத்தி, நலமான பணிகளை செய்ய முடியும். இந்தப் பாடத்தை தான் இயேசு தன் சீடர்களுக்கு கற்பிக்கின்றார். இன்று நமக்கும் கற்பிக்கின்றார். கற்றுக்கொள்வோம். அதனை வாழ்வாக்குவோம். நமது வாழ்வில் செபமும் நோன்பும் முக்கிய பங்கு வகிக்க இறையருளை வேண்டுவோம்.




சனி, 19 பிப்ரவரி, 2022

இயேசுவின் குண நலனை நமது வாழ்வில் வெளிப்படுத்த...(20.02.2022)

யேசுவின் குண நலனை நமது வாழ்வில் வெளிப்படுத்த...




இன்றைய நாள் வாசகங்கள்,  பழைய ஏற்பாட்டின் ஆதாமையும்,   புதிய ஏற்பாட்டின் ஆதாமான இயேசுவையும், ஒப்பிட்டுப் பார்க்க நம்மை அழைக்கின்றது.  


பழைய ஏற்பாட்டு ஆதாமின் மனித இயல்பை நாம் கொண்டிருக்கிறோம். ஆனால் புதிய ஏற்பாட்டு ஆதாமாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் குணநலன்கள் நமது வாழ்வில் வெளிப்பட வேண்டும் என்ற செய்திதான் இன்றைய நாளின் மையச் சிந்தனையாக உள்ளது. 

தாவீது தன்னைக் கொல்ல தேடிய சவுலை, கண்ணெதிரே கண்ட போதும் கூட அவருக்கு எந்தவித தீங்கும் செய்யாது சென்றார். பகைவரை மன்னிப்பதற்கு ஒரு மனம் வேண்டும். தாவீதிடம் அந்த மனம் இருந்தது. அந்த மனம் தான், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் இருந்தது.  

எனவே தான் சிலுவையில் தொங்கும் போது கூட, தன்னை துன்புறுத்தியவர்களை மன்னித்தவராய், தன் உயிரை தியாகம் செய்தார். அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் போல இந்த சமூகத்தில் நாம் வாழ அழைக்கப்படுகிறோம். அதற்கு இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூறப்படுவது போல, அனைவரையும் அன்பு செய்யவும் ஏழைகளை நேசிக்கவும், தேவையில் இருப்பவரின் தேவையை கண்டு கொண்டு, அவர்களின் தேவைகளை நிறைவு செய்யக் கூடியவர்களாக, நாம் இருப்பதும், ஆண்டவர் இயேசுவின் குண நலனை நமது வாழ்வில் வெளிப்படுத்துவதாகும். 




வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

மாற்றத்தை நாம் நமது வாழ்வில்...(19.02.2022)


மாற்றத்தை நாம் நமது வாழ்வில்...




    இன்றைய நாளில் ஆண்டவர் இயேசுவினிடத்தில், எலியா வந்து தான் அனைத்தையும் சரி செய்வார்.  அவருக்குப் பிறகு தான் அடுத்தவர் வருவார், என்ற அடிப்படையில் யார் முதலில் வருவது? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். 


    ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து எலியா ஏற்கனவே வந்து விட்டார் என அவர்களுக்கு தெளிவை உருவாக்குகிறார். நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் இந்த சமூகத்தில் பலவிதமான மாற்றங்கள் நிகழ வேண்டுமென விரும்புகிறோம். 


    ஆனால் மாற்றத்தை நிகழ்த்தப் போவது யார்? யார் இந்த மாற்றத்தைக் கொண்டு வருவார் என்ற கேள்வியைத்தான் நாம் அதிகம் எழுப்புகிறோமே ஒழிய, மாற்றத்தை முன்னெடுப்பவர்களாக நாம் செயல்படுவது இல்லை. 


    ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நாளில் யாரோ ஒருவர் வந்து அனைத்தையும் சரி செய்வார் என்று எண்ணுவதை விட, ஏற்கனவே இந்த உலகத்தில் பலர் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் கூறியவற்றின் அடிப்படையில் மாற்றத்திற்கான முதல் விதையாக, நாம் இருக்க வேண்டும் என்ற பாடத்தை தருகிறார். 



    காந்தியடிகள் கூறுவார், இந்த சமூகத்தில் நீ விரும்பும் மாற்றத்தின் முதல் நபராக நீ இரு என்று கூறுவார். நாம் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றம் உருவாக வேண்டும் என எண்ணுகிறோமோ, அத்தகைய மாற்றத்தை நாம் நமது வாழ்வில் முதலில் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். 

வியாழன், 17 பிப்ரவரி, 2022

இயேசுவின் பின்னால் அவரைப்போல பயணம் செய்வோம். (18. 02.2022)

 இயேசுவின் பின்னால் அவரைப்போல பயணம் செய்வோம். 




    வாழ்வு என்பது இன்பமும் துன்பமும் கலந்தது. இன்பத்தை ஏற்றுக் கொள்ள விரும்பும் நாம் துன்பத்தை ஏற்றுக் கொள்ள விரும்புவதில்லை. ஆனால், ஆழமாக அமர்ந்து யோசித்து பார்த்தால், துன்பத்திற்கு பிறகுதான் வாழ்வில் இன்பம் இருப்பதை கண்டு கொள்ள முடியும். 

    ஏதோ ஒரு வகையில் துன்பம் ஒவ்வொருவர் வாழ்விலும் இருக்கத்தான் செய்கிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமது துன்பங்களை சுமந்து கொண்டு அவரை பின்தொடர அழைக்கிறார். 

    எல்லாச் சுமைகளையும் ஆண்டவரிடத்தில் இறக்கி வைத்துவிட்டு நாம் நிம்மதியாக இருக்க வேண்டும் என விரும்பலாம். ஆனால் நமது சுமைகளோடு அவரைப் பின்தொடர்வது தான் உண்மையான இன்பம் என்பதை இன்றைய நாளில் இறைவன் நமக்கு உணர்த்துகிறார். 

    எனவே தான் தன் சிலுவையை சுமந்து கொண்டு என்னை பின் தொடரட்டும் என்கிறார். இன்று நாம் ஆண்டவர் இயேசுவை பின் தொடரும் போது எத்தகைய மனநிலையோடு பின் தொடர்கிறோம்? 

    நம் தேவைகளை நிறைவேற்றக் கூடியவராகத் தான் அவர் இருக்க வேண்டும், துன்பங்களை தருபவராக கடவுள் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தோடுதான், இன்று பலர் ஆண்டவரை நோக்குகிறார்கள். ஆனால் வாழ்வில் இன்ப துன்பம் வழியாக இறைவன் நம்மை செதுக்கி இந்த சமூகத்தில் சிறந்த படைப்பாக மாற்றுகிறார். 

    அவரது வழிநடத்துதலை உணர்ந்து கொண்டவர்களாய், நமது சிலுவையை நாம் சுமந்து கொண்டு ஆண்டவர் இயேசுவின் பின்னால் அவரைப்போல பயணம் செய்வோம். 



புதன், 16 பிப்ரவரி, 2022

இரக்கத்தை கொடுக்கலாம்.... (17.02.2022)

இரக்கத்தை கொடுக்கலாம்.... 



இயேசு தன்னை யாரென்று சீடர்களிடம் கேள்வி எழுப்புகிறார். இதே கேள்வியை இன்று நம்மிடத்தில் எழுப்பினால், நமது பதில் என்னவாக இருக்கும்? நாம் இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி எத்தகைய புரிதலை கொண்டிருக்கிறோம்? 

பேதுரு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி தான் கொண்டிருந்த புரிதலை ஆண்டவரிடத்தில் வெளிப்படுத்திய போது, அவரை இயேசு புகழ்ந்தார். அதே சமயம் இயேசு யார் என்று அறிந்து கொண்ட பேதுரு, இயேசுவின் பணியை அறிந்து கொள்ளாது அவருடன் பயணித்தார். 

எனவே பாராட்டை பெற்றவர் கண்டிப்பையும் பெற்றார் என இன்றைய வாசகத்தில் வாசிக்க கேட்டோம். நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நமது பார்வை எவ்வாறு இருக்கிறது? ஆண்டவர் இயேசுவை பேதுருவைப் போல மேலோட்டமாகப் புரிந்து கொண்டவர்களாக இருக்கிறோமா? அல்லது அவரது பணியையும் அவரது வாழ்வையும் தெளிவாகப் புரிந்து கொண்டவர்களாக இருக்கின்றோமா? 

ஆரம்பத்தில் ஆண்டவர் இயேசுவை முழுமையாக அறியாதிருந்த பேதுரு, ஆண்டவர் இயேசுவின் இறப்பு உயிர்ப்புக்கு பிறகு, அவரை முழுமையாக அறிந்துகொண்டு, தன் உயிரையே அவருக்கு தியாகம் செய்யத் துணிந்தார். நம் ஆண்டவர் இயேசுவுக்காக நம் உயிரைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அருகில் இருப்பவருக்கு இரக்கத்தை கொடுக்கலாம். ஆண்டவர் பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறார். ஆமென்.

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

தெளிவான பார்வை கொண்டவர்களாகிட ....

 தெளிவான பார்வை கொண்டவர்களாகிட ....

இயேசுவில் அன்புக்குரியவர்களே! 



    வாழ்வை தெளிவான பார்வை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகிறது. இதையே இன்றைய வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. 

    பார்வையற்ற ஒரு மனிதன் பார்வை பெறுவதற்காக இயேசுவிடம் வந்த போது, அவர் முதலில் தெரிவது என்ன? என்று கேட்டதற்கு, மரங்களைப் போல மனிதர்களைக் காண்பதாக கூறுகின்றான். 

    அதன்பிறகு தெளிவான பார்வை பெற்றுக் கொண்டவனாய் இயேசுவிடம் இருந்து விடைபெறுகிறான்.  நாம் நமது வாழ்வில், பல நேரங்களில் எந்த ஒரு செயலையும் தெளிவாக நோக்குவதில்லை. தெளிவான பார்வை நம்மிடம் இருப்பதில்லை. எல்லாவற்றையும் மேலோட்டமாக எடுத்துக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றோம்.  

    ஆண்டவரின் இறைவார்த்தை ஒவ்வொரு நாளும் நமது செவிகளை தொட்டுச் செல்கிறது. ஆனால் அதை ஆழமாக புரிந்து கொண்டு வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிக் கொள்ளாது, மேலோட்டமாக, "பத்தோடு ஒன்று பதினொன்று, அத்தோடு நான் ஒன்று" என்ற போக்கில் பயணிக்கக் கூடியவர்களாக இருக்கிறோம். 

    ஆனால் இன்றைய நாளில் இறைவன் தெளிவான பார்வை கொண்டவர்களாகிட அழைப்பு தருகின்றார்.  நமது பார்வைகளை தெளிவாக்கிட இறையருள் வேண்டுவோம்.




திங்கள், 14 பிப்ரவரி, 2022

நம்பிக்கை கொண்டு அவரை பின்பற்ற... (15.02.2022)

நம்பிக்கை கொண்டு அவரை பின்பற்ற... 

இயேசுவில் அன்புக்குரியவர்களே! 



    நம்பிக்கை என்பது அனைவர் மனதிலும் ஆழமாக இருக்கவேண்டிய ஒன்று. நம்பிக்கைதான் நமது வாழ்வை ஒவ்வொரு நாளும் நகர்த்திக் கொண்டிருக்கிறது. 

    இயேசுவுடன் பயணித்திருந்தாலும், இயேசு செய்த பலவிதமான அற்புதங்களையும், அடையாளங்களையும் கண்டிருந்தாலும் கூட, சீடர்கள் அவர் மீது ஆழமான, அழுத்தமான நம்பிக்கை இல்லாமல் இருந்தார்கள் என்பதை அவ்வப்போது அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சில நிகழ்வுகள் மூலம் நாம் கண்டுகொள்ள முடியும். 

    அவைகளுள் ஒன்றாகத்தான் இன்றைய நாளில் வாசிக்கப்பட்ட வாசகமும் அமைந்திருக்கின்றது. எத்தனையோ புதுமைகளை அவரிடமிருந்து கண்ட அவர்கள், தங்களுக்கு உணவு இல்லை என வருந்துவதை இயேசு சுட்டிக் காண்பிக்கிறார். தன்னோடு இருந்து தன்னோடு பயணிக்கின்றவர்கள், தன்னை இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லையே என்பதை சுட்டிக் காட்டுகின்றார். 

    நாமும் அனுதினமும் ஆண்டவரின் இறைவார்த்தையை கேட்கிறோம். அவரது வார்த்தைகளின்படி வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டுமென கற்பிக்கப்படுவதை கேட்கிறோம். ஆனால், வாழ்வில் செயலாக்கப்படுத்துகிறோமா? என்ற கேள்வியை எழுப்பிப் பார்ப்போம். 

    மன மாற்றத்தை உருவாக்கிக் கொள்வோம். ஆண்டவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு அவரை பின்பற்றும் உண்மைச் சீடராகிட இறை அருள் வேண்டுவோம்.




ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

நாமே அடையாளங்களாக மாறிட... (14.02.2022)

நாமே அடையாளங்களாக மாறிட... 


இயேசுவில் அன்புக்குரியவர்களே! 



    அடையாளங்களை இன்று எதிர்பார்ப்பவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள். ஆனால் இயேசு கிறிஸ்து இன்று நம்மை அடையாளமாக மாறிட அழைப்பு தருகின்றார். 

    இயேசுவை சோதிக்கும் நோக்குடன் அடையாளம் கேட்டவர்களுக்கு,  அவர் அடையாளம் தரப்படமாட்டாது என்கின்றார். 

    அதன் மறை பொருள்,  நாம் தான் இனி இந்த சமூகத்தில் அடையாளங்களாகத்  திகழ வேண்டும் என்பதாகும். 

    ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறையாட்சியின் மதிப்பீடுகளைப் பின்பற்றி வாழும்போது, நாம் இச்சமூகத்தில் அடையாளங்களாக மாறிட முடியும்.  

    நாம் நமது வாழ்வில், யாரோ ஒருவரை அடையாளமாக எடுத்துக் கொள்வதை விட்டுவிட்டு, நாமே அடையாளங்களாக மாறிட, இன்றைய நாளில் அருள் வேண்டுவோம்.




சனி, 12 பிப்ரவரி, 2022

நம்பிக்கையோடு தொடர...(13.02.2022)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 ஆசை யாரை விடும்! - அது அனைவர் மனதிலும் வேரை விடும் என்பார்கள்.  மனிதர்களாகிய நமக்கு பலவற்றின் மீது நாட்டம் இருக்கிறது.  ஆனால் நாம் விரும்பக்கூடியதும் நாம் நம்பக் கூடியதும் எது என்பதை உணர்ந்து கொள்ள இன்றைய வாசகங்கள் நமக்கு உதவி செய்கின்றன. 

 இன்றைய முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினர் நமது நம்பிக்கை என்பது ஆண்டவரின் மீதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.  மனிதர் மீது நம்பிக்கை வைப்பவர் பாலை நிலத்தில் உள்ள புதரைப் போல இருப்பர். 
 ஆனால் கடவுள் மீது நம்பிக்கை வைப்பவர், நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல இருந்து பசுமையாக பருவகாலத்தில் பலன் தரக் கூடியவர்களாக இருப்பர் என எரேமியா இறைவாக்கினர் குறிப்பிடுகிறார். எரேமியா  இறைவாக்கினரின் வார்த்தைகளுக்கு ஏற்ப நாம் நமது வாழ்வில் ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இந்த சமூகத்தில் பயணிக்கின்ற போது, நாமும் பலருக்கு பலன் தரக் கூடியவர்களாக விளங்கிட முடியும். 
 
            பழைய ஏற்பாட்டில் நோவா ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டிருந்ததால் பேரழிவிலிருந்து காப்பாற்றப்பட்டார். 

          யாக்கோபு ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டிருந்ததால் எகிப்து நாட்டின் ஆளுநராக உயர்த்தப்பட்டார். 

           சிறுவனாக இருந்த   தாவீது ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொண்டு செயல்பட்டதால் கோலியாத்தை வெற்றி கொண்டார். 
        
         எதிரிகளின் சூழ்ச்சியால் இன்னலுற்ற போதும் எஸ்தர் அரசி ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு செயல்பட்டதால், தனது இனம் முழுவதையும் அன்று காப்பாற்றினார். 

          இத்தகைய ஒரு வாழ்வை வாழ்ந்தவர்கள் தான் தொடக்க காலத்தில் இருந்த இயேசுவின் சீடர்களும் கிறிஸ்தவர்களும். 

இவர்கள் தங்களிடம் இருந்ததை இல்லாதவரோடு பகிர்ந்தார்கள். பிறரின் துன்பத்தை தனது துன்பம் என எண்ணினார்கள். ஆண்டவர் இயேசுவின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாய் அவருக்காக தங்களின் இன்னுயிரையும் இழக்கத் துணிந்தார்கள். இவர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டதற்கான  காரணம் என்ன என சிந்திக்கின்ற போது, அவர்கள் ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்ட நீரோடையோரம் நடப்பட்ட மரங்களாக இருந்தார்கள் என்பதுதான் வரலாறு நமக்கு கற்பிக்கின்ற பாடமாக உள்ளது. இன்று இத்தகைய பாடத்தையே நாம் நமது வாழ்வுக்கான பாடமாக எடுத்துக்கொள்ள இறைவன் இன்றைய நாளில் நமக்கு அழைப்பு தருகின்றார். 

            நாம் நிலையானது என கருதக் கூடிய எதுவும் இந்த உலகத்தில் நிலையானது அல்ல.   நிலையானவர் இறைவன் ஒருவரே.  இதையே பட்டினத்தார் இவ்வாறு குறிப்பிடுகிறார். 

   "ஊரும் சதமல்ல.
 உற்றார் சதமல்ல.
உற்றுப்பெற்ற பேரும் சதமல்ல.
பெண்டிர் சதமல்ல.
பிள்ளை சதம் அல்ல.
நின் தேசத்தில் யாதும் சதமல்ல.
நின் தாள் ஒன்றே சதம் கச்சியேகம்பனே". 

அதாவது ஊரும் நிரந்தரமல்ல. உற்றுப்பெற்ற பெயரும் நிரந்தரமல்ல.
தேடிய செல்வமும், கட்டிய மனைவியும், கொண்டு வந்த சீரும்  பெற்ற பிள்ளையும் எதுவும் நிரந்தரமல்ல இந்த உலகத்தில். நிலையானவர் இறைவன் ஒருவரே. இந்த இறைவனை நாம் பற்றிக் கொள்ளக் கூடிய  மனிதர்களாக இன்றைய நாளில் நாம் செயல்பட அழைக்கப்படுகின்றோம். 

இயேசு கிறிஸ்துவை பற்றிக் கொண்ட மனிதர்களாக நாம் மாறிடும் இப்போது அவர் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்களாக நாம் திகழுகின்ற போது  இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கக் கேட்ட வார்த்தைகள் எல்லாம் வாழ்வாக்கப்படுவதை நாம் உணரமுடியும். ஆம்!  ஏழைகளின் உள்ளம் மகிழ்வதும் பசியால் வாடுவோர்  நிறைவு பெறுவதும், அழுவோர் சிரிப்பதும், நீதியின் பொருட்டு துன்புறுவோர் மகிழ்வதும்,   எப்போது நடக்குமாயின் நாம் ஆண்டவர் இயேசுவை இறுகப் பிடித்துக் கொண்டு,  நமது வாழ்வில் நமது செயல்கள் மூலம், அவரின் இறையாட்சிப் பணிகளை செயல்படுத்தும் போதே இவை அனைத்தும் சாத்தியமாகும். துயருறுவோரின் துயர் துடைப்பதையே இறைவன் தனது பணியாகக் கொண்டிருந்தார். அப்பணியைச் செய்யவே நம்மையும் அழைத்தார்.
அவரை நம்பி அவரை பின்பற்றி அனுதினமும் அவரைத் தேடுகின்ற நமது வாழ்வில், அவர் மீதான நம்பிக்கையில் ஆழப்பட வேண்டும்.  

            பத்தோடு ஒன்று பதினொன்று.  அத்தோடு நான் ஒன்று என்று வாழாது நாம் ஆண்டவரை இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டவர்களாய் அவரது உயிர்ப்பை எடுத்துரைக்கக் கூடிய உண்மை சீடர்களாக இந்த சமூகத்தில் திகழ வேண்டும். 

             தொடக்க கால கிறிஸ்தவர்கள் அப்படித் தான் வாழ்ந்தார்கள். ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பை அறிவித்தார்கள். ஆண்டவர் 
இயேசுவின் உயிர்ப்பை அறிவித்த போது பல இன்னல்களை அவர்கள் சந்திக்க நேர்ந்தது.  ஆனால் இன்னல்களுக்கு மத்தியிலும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பைக் குறித்து ஆழமாக சிந்தித்தார்கள்.  மாட்சிக்குரிய உடலோடு நாமும் அவரில் உயிர் பெறுவோம் என்பதை வலியுறுத்தினார்கள்.  அந்த ஆண்டவரின் மீது அதீத நம்பிக்கை கொண்டவராய் அவருக்காக  தங்கள் இன்னுயிரையும் இழக்கத் துணிந்த நமது முன்னோர்களை நினைவில் கொண்டு, நாமும் அவர்களைப் போல அறச்செயலை முன்னெடுத்தவர்களாய் இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்யக்கூடிய மகத்துவமான மனிதர்களாக வாழ, நமது நம்பிக்கையை மனிதர் மீது  அல்ல,  இறைவன் மீது வைக்கக் கூடிய மனிதர்களாக மாறிட இந்த நாள் அழைப்பு தருகிறது. இறைவன் மீது நமது நம்பிக்கையை வைத்து நமது வாழ்நாளை நகர்த்துவோம். நாம் நீரோடையோரம் நடப்பட்ட மரமாக இருந்து பருவ காலத்தில் பலன் தரக் கூடியவர்களாக நம்மை இறைவன் மாற்றுவார் என்ற
நம்பிக்கையோடு தொடர்ந்து இந்த திருப்பலியில் இணைந்து பக்தியோடு ஜெபிப்போம்.

பொதுக்காலம் 6ஆம் வாரம் – ஞாயிறு 13. 02. 2022

 பொதுக்காலம் 6ஆம் வாரம் – ஞாயிறு 13. 02. 2022



திருப்பலி முன்னுரை


இறை இயேசுவில் அன்பு நண்பர்களே! உங்கள் அனைவரைம் இந்த கல்வாரி திருப்பலியில் பங்கேற்க அன்புடன் வரவேற்கின்றேன்.

இன்றைய வாசகங்கள் ஆண்டவரில் நம்பிக்கை கொள்ள நமக்கு அழைப்புவிடுக்கின்றன. இன்றைய முதல் வாசகம் வழியாக மனிதர் மீது நம்பிக்கை கொண்டோர் பாலைநிலத்துப் புதர் செடிக்கும், ஆண்டவர்மீது நம்பிக்கை வைப்போர் என்றும் கனிதரும் பசுமையான மரத்திற்கும் ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றனர். உயிர்த்த ஆண்டவரிடம் கொண்ட நம்பிக்கையே தொடக்க கால கிறிஸ்தவர்கள் மற்றும் இயேசுவின் சிடர்கள் என அனைவரைம்  துணிNவுhடு இயேசுவின் உயிர்ப்பை அனைவருக்கும் எடுத்துரைக்க வைத்தது. இப்பணியில் தடைகள் பல எழுந்தாலும் தன்னம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் துணிந்து செயல்பட இறைவன் நமக்கு இன்றைய நாளில் அழைப்பு விடுக்கின்றார். 

அழைக்கும் இறைவனது குரலுக்கு செவி கொடுத்தவர்களாய் நம்பிக்கையோடு  நிலைவாழ்வை உரிமையாக்கிட வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்...


மன்றாட்டுக்கள்:


பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்._


1. அன்பே உருவான  இறைவா! உமது நற்செய்திப் பணியை ஆற்றிவரும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரையும் உமது பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம். அவர்கள் அனைவரும் உமது இறையாட்சியை இம்மண்ணில் கட்டியெழுப்பத் தேவையான ஞானத்தைத் தந்து உடனிருந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


2. நல்வழியில் எம்மை நடத்துபவரே எம் இறைவா! எம் நாட்டை ஆளும் தலைவர்கள், சுயநலம் பாராமல் மக்கள் நலனில் அக்கறை கொண்டு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளைத் தரும் சிறந்த திட்டங்களை பயனுள்ள வகையில் நிறைவேற்றவும், மக்கள் அனைவரும் கல்வி, பொருளாதார நிலையில் மென்மேலும் வளரவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


3. ஆற்றலின் ஆண்டவரே எம் இறைவா! உலக நாடுகளில் அன்பும், அமைதியும், நீதியும் நிலைத்திடவும், மக்கள் யாவரும் நலமும் வளமும் பெற்று சகோதரத்துவத்துடன், உம் அன்புப் பிள்ளைகளாக வாழ்ந்திட வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


4. அன்பின் இறைவா! இயேசு கொண்டு வந்த அன்பு, சமாதானம் எங்கள் ஒவ்வொரு தனிமனித வாழ்விலும் குடும்பத்திலும் சமூகத்திலும் பங்குத்தளத்திலும் நிலவிட வேண்டுமென்று செபிக்கின்றோம். மேலும் அன்பும், ஆறுதலும் கிடைக்காமல் ஏங்கிடும் மக்களுக்கு அவற்றைப் பகிர்ந்திடும் கருவிகளாக நாங்கள் வாழ்ந்திட வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


    


இயேசுவை நோக்கி நமது வாழ்வை அமைத்துக் கொள்ள...(13.02.2022)

 இயேசுவை நோக்கி நமது வாழ்வை அமைத்துக் கொள்ள...



    ஆசை யாரை விடும்? அது அனைவர் மனதிலும் வேரை விடும் என்று கூறுவார்கள்.

    மரமானது நீரை நோக்கி தனது வேர்களை  விடுவது போல  நாம் நமது வாழ்வில் உயிரோடு எழுப்பப்பட்ட ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நோக்கி நமது வேர்களை விட அழைக்கப்படுகின்றோம். 


    ஆண்டவர் இயேசுகிறிஸ்துவை நோக்கி நமது வாழ்வின் வேர்களை விட வேண்டும் என்றால் அவர் கற்பித்தவைகளை நமது வாழ்வாக நாம் மாற்றவேண்டும். 

ஏழைகளை அன்பு செய்வதும் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களின் சார்பாக நிற்பதும் சிறையில் அடைக்கப்பட்டோருக்கு அதரவாக இருப்பதும் தேவையில் இருப்பவர்களுக்கு உதவக் கூடியவர்களாக இருப்பதும் தான் ஆண்டவர் விரும்பக்கூடிய இறையாட்சியின் மதிப்பீடுகளாகும். 

    இந்த இறையாட்சியின் மதிப்பீடுகள்  அன்பு, இரக்கம், அமைதி, நீதி, பகிர்வு என பலவற்றை இந்த சமூகத்தில் மலரச் செய்யும். இதனை மலரச் செய்யக் கூடியவர்களாக நாம் இருக்கும்போது ஆண்டவர் இயேசுவை நோக்கி வேர்களை விடக் கூடியவர்களாக நாம் இருப்போம். 

    நமது வேர்கள் கிறிஸ்துவை நோக்கி மையப்படுத்தியதாக இருக்க வேண்டுமே தவிர நமது உள்ளத்தின் ஆசைகளை மையப்படுத்தியதாக இருத்தலாகாது.  நாம் இன்றைய நாளில் ஆண்டவர் இயேசுவை நோக்கி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளக் கூடியவர்களாகிட இறை அருள் வேண்டுவோம்.



வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

பகிர்ந்து கொள்ள ... (12.02.2022)

பகிர்ந்து கொள்ள ... (12.02.2022) 


இயேசுவில் அன்புக்குரியவர்களே! 



    இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து அடுத்தவரின் பசியை உணர்ந்தவராய்,  தன்னைக் காண வந்திருந்த மக்களுக்கு உணவளிக்கக் கூடிய அற்புதத்தை நிகழ்த்துகின்றார்.  

    நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் தேவைக்கு அதிகமாக நம்மிடம் இருப்பதை நாம் அடுத்தவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற பாடத்தை இறைவன் இன்று உணர்த்துகிறார்.  

     மூன்று வேளையும் நாம் உணவருந்துகிறோம், நிம்மதியாக இருக்கிறோம். ஆனால் ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் வீதிகளில் இருப்பவரைப் பற்றிய சிந்தனை நம்மிடம் இருக்க வேண்டும் என்பதைத் தான் இன்றைய நாளில் வாசகங்கள் வழியாக இறைவன் உணர்த்துகிறார்.  

    இறைவன் உணர்த்துவதை உணர்ந்து கொண்டவர்களாய் ஏழை எளியவரின் பசி போக்கும் பணியில், நாம் நம்மிடம் இருப்பதைக் கொண்டு செயலாற்றிட இறையருளை வேண்டுவோம்.




வியாழன், 10 பிப்ரவரி, 2022

இறைவார்த்தையை நமது வாழ்வாக ... (11.02.2022)

இறைவார்த்தையை நமது வாழ்வாக ... (11.02.2022) 

இயேசுவில் அன்புக்குரியவர்களே! 




    இன்றைய நாளில் காது கேட்காத ஒருவரை  ஆண்டவர் இயேசு கிறிஸ்து தனது வல்லமையால் அவரது செவியை திறக்கிறார். அதே இறைவன் இன்று நம் உள்ளங்களையும் திறக்கிறார்.  

    ஆண்டவரால் காதுகள் திறக்கப்பட்ட நபர்,  நா கட்டவிழ்ந்து ஆண்டவரைப் பற்றிப் பறைசாற்ற தொடங்கினார். 

அனுதினமும் இறைவார்த்தையைக் கேட்கின்ற  நாம், அந்த இறைவார்த்தையை நமது வாழ்வாக மாற்றுகிறோமா? என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். 

நாம் ஆண்டவருடைய வார்த்தைகளை வெறுமன கேட்டுவிட்டு நகர்பவர்களாக இல்லாமல், கேட்ட இறைவார்த்தைகளை செயலாக்கப்படுத்தக் கூடியவர்களாக மாறிட இறையருளை வேண்டுவோம்.



புதன், 9 பிப்ரவரி, 2022

தாழ்ச்சி, நிதானம்., பொறுமை...(10.02.2022)

தாழ்ச்சி, நிதானம், பொறுமை




இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் ” என்றார் திருவள்ளுவர். இறைவனால் முடியாத செயலைக் கூட, விடா முயற்சியினால் அடைந்துவிடலாம் என்பது அதன் பொருள். 

அந்தக் குறளுக்கு விளக்கம் அளிப்பதுபோல அமைந்திருக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.  கிரேக்கப் பெண்ணின் தன் மகளைக் குணப்படுத்துமாறு இயேசுவிடம் வேண்டுகிறார். இயேசுவோ பிள்ளைகளுக்குரிய உணவை நாய்களுக்கு போடுவது முறையல்ல என்று கூறி  மறுத்துவிடுகிறார். ஆனால், அந்தப் பெண் மனந்தளர்ந்துவிடவில்லை. மாறாக, சற்றும் சளைக்காமல் இயேசுவிடம் வாதாடி, அதாவது பிள்ளைகள் வயிறார உண்டபின் மேஜையின் மேலிருந்து கீழே விழும் துண்டுகளை நாய்கள் ஒன்னுமே என்று கூறி தன் மகளுக்கு நலம் பெற்றுவிடுகிறார். இயேசு முதலில் விருப்பம் கொள்ளாவிட்டாலும்கூட, அப்பெண்ணின் விடாமுயற்சியையும், நம்பிக்கையையும் கண்டு வியந்து, தம் மனதை மாற்றிக்கொள்கிறார்.


 நாமும் நம்பிக்கை, விடாமுயற்சி இழக்காமல் செபிப்போம், உழைப்போம். அதுபோலவே ....

    மனித வாழ்வில் மிகவும் அவசியமான ஒன்று தாழ்ச்சி.  நாம் விரும்புவதை பெற்றுக்கொள்வதற்கு எப்போதும் அதிகாரத்தையும் ஆணவத்தையும் வெளிப்படுத்தினால், நாம் விரும்புவதை பெற்றுக் கொள்ள இயலாது. மாறாக,  தாழ்ச்சியோடு நாம் முன்னெடுக்கின்ற போது, ஆண்டவரிடமிருந்து அனைத்து விதமான ஆசிகளையும் பெற்றுக்கொள்ள முடியும். 


    இதற்கு சிறந்த உதாரணமாகத் தான் இன்றைய நாளில் கானானியப் பெண்மணி விளங்குவதை நாம் வாசகத்தில் வாசிக்க கேட்டோம்.  நாம் ஆண்டவரிடத்திலும் அடுத்தவரிடத்திலும் நாம் விரும்புவதை கேட்பதற்கு முன்பாக உள்ளத்தில் தாழ்ச்சியோடு, நிதானத்தோடு, பொறுமையோடு செயல்பட்டு வேண்டுவதைப் பெற்றுக்கொள்ள இறையருள் வேண்டுவோம். 





செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

நலமானதை அடுத்தவருக்கு தர...(9.2.2022)

நலமானதை அடுத்தவருக்கு தர...



    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

லேவியர் 11 ம் அதிகாரத்தில் தீட்டாகக்கருதப்படக்கூடிய விலங்குகளின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. யூதர்களுக்கு தூய்மை என்பது கண்ணும், கருத்துமாக கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. எனவே, எவற்றை சாப்பிட வேண்டும்? எவற்றை சாப்பிடக்கூடாது? என்ற வரைமுறைகளை வகுத்திருந்தனர். எந்த அளவுக்கு இதில் கவனமாக இருந்தார்கள் என்றால், தீட்டான உணவைச் சாப்பிடுவதை விட சாவதே மேல் என்று பலர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வை நாம் மக்கபேயர் நூலில் பார்க்கலாம். இரண்டாம் மக்கபேயர் புத்தகத்தில் பன்றி இறைச்சியைச்சாப்பிடக் கட்டாயப்படுத்தப்பட்ட சகோதரர்கள் ஏழுபேர், பன்றி இறைச்சியைச்சாப்பிட்டு தங்களை தீட்டுப்படுத்துவதை விட சாவதே மேல் என்று தங்கள் உடலைப்பல்வேறு சித்திரவதைகளுக்குக் கையளித்ததையும், அவர்களை அவர்களின் தாய் ஊக்கப்படுத்தியதையும் நாம் வாசிப்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

ஆனால், இயேசு வெளியிலிருந்து சாப்பிடக்கூடிய உணவு அல்ல, மாறாக, மனித எண்ணத்திலிருந்து தோன்றும் தீய சிந்தனைகள் தான் மனிதனைத்தீட்டுப்படுத்துகின்றன என்று சொல்கிறார்

    மனிதனிடம் இருந்து வெளிவரக்கூடியவை இச்சமூகத்தை தீட்டுப்படுத்தும் என்ற வார்த்தைகள் இன்றைய வாசகங்களில் இடம் பெற்றன.  நமது உள்ளத்தில் இருந்து வெளிவரக்கூடிய கோபம், பொறாமை, பகைமை, கசப்பான உணர்வுகள் எல்லாம் அடுத்தவர் வாழ்வில் தீங்கை உருவாக்குகின்றன. அடுத்தவர் இயல்பை மாற்றுகின்றன. 

    ஆண்டவர் இயேசு கிறிஸ்து உள்ளிருந்து வருபவற்றில் கவனமாக இருப்பதற்கு இன்றைய நாளில் அழைப்பு தருகின்றார். நாம் ஏதேனும் ஒன்றை செய்யும் போதும், ஏதாவது ஒரு இடத்தில் பேசும்போதும், சிந்தித்து,  நிதானத்தோடு ஆண்டவர் இயேசு கூறக்கூடிய வகையில் விவேகத்தோடு செயல்படக் கூடியவர்களாய், கவனத்தோடு இருக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். எனவே, சொல்லிலும் செயலிலும் கவனத்தோடு இருந்து நம்மிடம் இருந்து வெளிவரக்கூடியவை நலமானதை அடுத்தவருக்கு தரவேண்டும் என்பதில் உறுதியோடு இருக்க உள்ளத்தில் உறுதி ஏற்போம்.

திங்கள், 7 பிப்ரவரி, 2022

நிறைகளை வாழ்வாக்க...(8.2.2022)

 நிறைகளை வாழ்வாக்க...


இயேசுவில் அன்புக்குரியவர்களே!



    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்றைய நற்செய்தியில் மூதாதையர் மரபை சீடர்கள் மீறுவதாக இயேசுவிடத்திலே பரிசேயரும், மறைநூல் அறிஞரும் குற்றம் சுமத்துகின்றனர். 

பொதுவாக, யூதர்களுக்கு சட்டம் என்பது, கடவுள் கொடுத்த பத்துக்கட்டளைகளும், பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களும் தான். முதல் ஐந்து புத்தகங்களில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால், அவற்றிற்கு சரியான புரிதலோ, விளக்கமோ இல்லை. இந்த குறையை நிவர்த்தி செய்வதற்காக, கி.மு 4 மற்றும் 5 ம் நூற்றாண்டுகளில் மறைநூல் அறிஞர்கள் என்ற ஒரு புதிதாக குழு ஒன்று தோன்றி, அவர்கள் இந்த சட்டங்களுக்கு விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்கள்.  இதுதான் மூதாதையர் மரபு அல்லது வாய்மொழிச்சட்டம் என்று அழைக்கப்பட்டது. கி.பி 3ம் நூற்றாண்டில், இந்த சட்டங்களுக்கான தொகுப்பும் வழக்கிற்கு வந்தது. 

இயேசுவுக்கும், பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களுக்கும் வாக்குவாதம் ஆரம்பித்ததே இதில் தான். இயேசு சட்டங்களுக்கு எதிரானவர் அல்ல. மூதாதையர் மரபுகளையும் இயேசு மதிக்காதவரும் அல்ல. ஆனால், பொருளோ, அர்த்தமோ இல்லாத, காலச்சூழ்நிலையோடு ஒத்துப்போகாத, மக்களுக்கு எந்த பயனும் தராத சட்டங்கள் மாற்றப்பட வேண்டும், என்பது இயேசுவின் கருத்து. ஆனால், பரிசேயர்களுக்கு இத்தகைய மரபுகள் வாழ்வோடு கலந்தவை. அவை எத்தனை தலைமுறைகளானாலும் மதிக்கப்படக்கூடியவை. அவை போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு எதிர்ப்பாக யார் வந்தாலும், எதிர்க்கப்பட வேண்டியவர்கள். அவற்றைக்கடைப்பிடித்தால், கடவுளை பெருமைப்படுத்துகிறோம், இல்லையென்றால், கடவுளை பழித்துரைக்கிறோம் என்று சொல்லி, கடவுளையும் இவற்றோடு தொடர்புபடுத்தினார்கள்.


இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நமது வாழ்வு காண பாடம் :

    காரணம் அறியாது எப்போதும் அடுத்தவரை குறை காணும் நோக்கத்தோடு பயணிக்கின்ற நபர்களை, இறைவன் அவ்வாறு பயணித்தல் கூடாது என்ற செய்தியினை இன்றைய நாள் வாசகங்கள் வழியாகத் தருகின்றார்.

    இயேசுவின் சீடர்கள் கைகளை கழுவாததைப் பெரிய குற்றமாகக் கருதி, அதனை குறை சொல்லக் கூடிய மனப்பான்மையில் இருக்கின்றவர்களுக்கு ஏன் கைகள் கழுவப்பட வேண்டும் என்பதற்கான விளக்கத்தையும் தந்து, எப்போதும் குற்றம் காணும் மனநிலையோடு பயணிப்பதை விட்டு, நலமான பணிகளை முன்னெடுக்கும் நல்லவர்களாக மாறிட இறைவன் அழைப்பு தருகின்றார்.  அதே அழைப்பு தான் இன்று நமக்கும் தரப்படுகிறது.  நம்மை சுற்றி எப்போதும் நம்மோடு இருப்பவர்களிடம் இருக்கும் குறைகளை மட்டுமே கண்டு கொண்டு வாழ்வை நகர்த்தாது, நிறைகளை கண்டுகொள்ளவும், நிறைகளை வாழ்வாக்கவும், உள்ளத்தில் உறுதி ஏற்போம். 

அதேசமயம் சட்டத்திற்காக மனிதன் இல்லை ....மனிதனுக்காக இயற்றப்பட்ட சட்டங்கள் என்பதை மனதில் நிறுத்துவோம் சட்டங்களின் அர்த்தம் அறிந்து அதனை பின்பற்றுவோம்.


ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

நம்பிக்கையை ஆழப்படுத்த...(07.02.2021)

நம்பிக்கையை ஆழப்படுத்த

நம்பிக்கையின் ஆழப்படும் பொழுது நாம் ஆண்டவரை தேடிச் செல்லுவோம். 
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

 நாம் ஆண்டவரை அறிந்து கொள்ளவும் அறிந்துகொண்ட ஆண்டவர் மீது ஆழமான நம்பிக்கை கொள்ளவும் அந்த நம்பிக்கையின் நிமித்தமாக நாம் ஆண்டவரை தேடிச் செல்லவும் இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன. 

           இயேசு படகை விட்டு இறங்கியவுடன் அவர் இன்னார் என அவர்கள் அறிந்து கொண்டார்கள்.
அறிந்து கொண்டதன் விளைவே அவர்கள் ஓடிச் சென்று சுற்றுப்புறமெங்கும் இருந்த உடல் நலமற்றவர்களை அவரிடம் அழைத்து வந்தார்கள். இயேசுவைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால் தான் அவரிடத்தில் நோயாளிகளைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள்.  நாம் இயேசுவை அறிந்து இருக்கின்ற போது அவர் மீதான நம்பிக்கையில் ஆழப்பட முடியும். 

நாம் அவர் மீது கொள்கின்ற ஆழமான நம்பிக்கைதான் நம்மை அவரைத் தேடிச் செல்ல வழிவகுக்கும். இயேசுவினிடத்தில் உடல்நலம் மற்றவர்களை தூக்கி வந்ததற்கான  அடிப்படை காரணம்  இயேசு அவர்களை குணப்படுத்த முடியும் என நம்பினார்கள். 

      இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டிருந்தார்கள். கேள்விப்பட்டதன் வழியாக நம்பிக்கையில் ஆழப்பட்டார்கள்.  நம்பிக்கைதான் அவர்களை பல நோயாளிகளை ஆண்டவரிடத்தில் கொண்டு வர வைத்தது. அவரிடம் வந்த அனைவரும் குணம் பெற்றார்கள். சிலர் அவருடைய மேலுடையை தொட்டு குணம் பெற்றார்கள் எனவும் வாசிக்கிறோம். நம்பிக்கையோடு ஆண்டவரை அறிந்துகொண்டு அந்த நம்பிக்கையோடு ஆண்டவரை தேடுகின்ற போது அவர் நம்மை நலன்களால் நிரப்புகிறார். இந்த ஆண்டவரைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவர் மீது ஆழமான நம்பிக்கை கொள்ளவும் அந்த நம்பிக்கையின் நிமித்தமாக ஆண்டவரை தேடிச் செல்லவும் இந்த திருப்பலி வழியாக இணைந்து ஜெபிப்போம்.

இயேசுவாக மாறுவோம்... (7.2.2022)

  இயேசுவாக மாறுவோம்...






    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    பரபரப்பான இந்த உலகத்தில் ஆண்டவரை தேடிச் செல்ல நமக்கு நேரமில்லை என்று சொல்பவர்கள் இன்று அதிகமாகிவிட்டார்கள்.  இறைவன் எங்கே இருக்கிறார் என்றால் கூப்பிடும் தூரத்தில் என்கிறார்கள். கூப்பிடும் தூரத்தில் இருப்பதால் தான் யாரும் கடவுளை கூப்பிடுவது இல்லை என்று கூறுவது போல, இன்று பலர் ஆண்டவரைத் தேடிச் செல்வதை விட,  இந்த அகிலத்தில் இருக்கக்கூடிய ஆசைகளின் அடிப்படையில் நகர்கின்ற மனித வாழ்வில் பலவற்றை தேடிச் செல்கிறார்கள். ஆனால் இயேசுவைத் தேடி செல்ல இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகிறோம்.

    பலர் இயேசுவைத் தேடிச் சென்றார்கள், நன்மைகளைப் பெற்றுக் கொண்டார்கள்.  நாம் யாரை தேடிச் செல்கிறோம்? இயேசுவைத் தேடுவோம், இயேசுவாக மாறுவோம். நற்செயல்களை பெற்றுக்கொள்ள இறையருள் வேண்டுவோம். 



சனி, 5 பிப்ரவரி, 2022

அழைத்தவர் தகுதியுள்ளவராக்குவார்... (06.02.2022)

அழைத்தவர் தகுதியுள்ளவராக்குவார்...



இயேசுவில் அன்பு உறவுகளே  இன்றைய வாசகங்கள் அனைத்தும் இறைவன் நம்மை தனது பணிக்கு அழைக்கின்றார். அழைத்த இறைவன் நம்மை தகுதியுள்ளவராக மாற்றுகின்றார் என்பதை வலியுருத்துகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கு உரைக்க இறைவன் எசாயாவையும், இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலையும், நற்செய்தியில் தம் சீடராக பேதுருவையும் இறைன் அழைக்கின்றார். அழைத்தவர்களை தகுதியுள்ளவராகவும் மாற்றுகிறார். கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை இம்மூவரின் வாழ்வும் நமக்கு வலியுருத்துகின்றன. 

எசாயா கி.மு. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எருசலேமில் வாழ்ந்தவர். ‘எசாயா’ எனும் பெயருக்கு ‘கடவுள் மீட்கிறார்’ என்பது பொருள். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கு உரைக்க இறைவன் இந்த எசாயாவை அழைத்தபோது, நான் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் என்கிறார் எசாயா. ஒன்றுமில்லாமையிலிருந்து உலகைப் படைத்த இறைவன் எசாயாவின் பவாங்களை அகற்றி அவரை தம் பணிக்கு தகுதியுள்ளவராக மாற்றுகிறார்.  இறைவன் இவரை தகுதியுள்ளவராக மாற்றியதற்கு மூலக் காரணம் எசாயா தன்னை அறிந்தவராய் தன் நிலையை உணர்ந்தவராய் இறைவனிடம் சரணடைந்ததுவே. தகுதியுள்ளவராக மாறிய எசாயா யாரை நான் என் பணிக்கு அணுப்புவேன் என்ற இறைவனின் கேள்விக்கு இதோ நானிருக்கிறேன். என்னை அனுப்பும் என துணிவோடு முன் வாருகிறார். 

அதுப்போலவே இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் தான் “திருத்தூதர் என அழைக்கப் பெற தாம் தகுதியற்றவர்” என்கிறார் (1 கொரி 15:9). அதே சமயம் உயிர்த்த இயேசுவைப் பற்றி துணிவோடு எடுத்துரைக்கிறார். எந்த சக்தியாலும் இயேசுவின் உயிர்ப்பை தடுத்து நிறுத்த முடியவில்லை என்று சுற்றி இருந்தவர்களுக்கு சான்று பகர்கிறார்.


இன்றைய நற்செய்தி வாசகத்திலும் பேதுரு, செபதேயுவின் மக்கள் யாக்கோபு, யோவான் இரவு முழுவதும் கடலிலே மீன் பிடிக்க முயற்ச்சித்து ஒன்றும் அகப்படாமல் ஏற்றம் அடைந்த நிலையில் இருந்தபோது, இயேசு அவர்களைச் சந்திக்கிறார். ஆழத்திற்கு தள்ளிக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார். வயதிலும் சரி அனுபவதிலும் சரி பேதுரு இயேசுவைக் காட்டிலும் கடலையும் அங்கு மீன் பிடிப்பது எப்படி என்பதையும் நன்கு நுட்பமாகவே அறிந்திருக்க கூடும். ஆனால் இயேசு அவரிடம் சென்று மீண்டும் போய் வலையை வீசுங்கள் என்று கூறுகிறார். பேதுருவும் நம்பிக்கையோடு வலையை வீசி வலைகள் கிழிந்து போகும் அளவிற்கு ஏராளமான மீன்களை பெறுகிறார். இயேசுவின் வார்த்தைகளால் நிகழ்ந்த இந்த வல்லச் செயல்களை கண்டு தன் நிலையை அறிந்தவரான பேதுரு இயேசுவிடம், ‘ஆண்டவரே நான் பாவி. நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்கிறார் (லூக் 5:8). ஆனால் இயேசு அவரை தம் பணிக்கு அழைக்கிறார் தகுதியுள்ளவராக்குகிறார். எனவே தான் இயேசு பேதுருவிடம், "அஞ்சாதே, இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்" என்கிறார் (லூக் 5:10).


இந்த வாசக பகுதிகள் நமக்க தரும் பாடம் கடவுள் தகுதியுள்ளவர்களை அழைக்கிறார் என்பதைவிட, தகுதியற்றவர்களை அழைத்து அவர்களைத் தமது பணிக்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகிறார். நாம் எந்நிலையில் இருந்தாலும் கடவுளிடம் நாம் நம்மை முமுமையாக கையளிக்கின்ற போது அவர் நம்மை தகுதியுள்ளவராக்குவார் என்ற ஆழமான நம்பிக்கையோடு இறைவனை நாடிச் செல்ல நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவின் இறையாட்சி  பணியான அன்பின் பணியினை நமது பணியாக எண்ணிச் செயல்பட இறைவாக்கினர் எசாயாவைப் போல ஆண்டவரின் பணியை செய்ய நான் இருக்கிறேன் என்று கூறக்கூடியவர்களாய் நாம் மாறிட இறைவனது அருளை இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம். 



இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...