வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

குழந்தை மனம் கொண்டவர்களாய்....(26.02.2022)

 

குழந்தை மனம் கொண்டவர்களாய்....




    சிறு குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இந்த சமூகத்தில் ஏராளம். சிறுவர்கள் என்றால் எதுவும் தெரியாதவர்கள் என்று நாம் கூறுவது உண்டு. இன்னும் வளரவில்லை, வளர்ந்த பிறகு கூறு, என்று கூறி அவர்களை மட்டப்படுத்துவதும் உண்டு. ஆனால் சிறு பிள்ளைகளை ஆண்டவர் இயேசு உயர்வாக கூறுகிறார். அவர்களை தன்னிடம் வரவழைக்கின்றார். அவர்களை ஏற்றுக் கொள்ளக் கூறுகின்றார். ஏனென்றால் அவர்களிடத்தில் காணப்படக் கூடிய பண்பு நலன்கள், நாளுக்கு நாள் வளர வளர பெரிதாகின்ற நம்மிடம் மறைந்து போகின்றது. 


    சிறுவயதில் நம்மிடம் இருந்த பல நற்பண்புகள், நாம் வளர்ந்த பிறகு நம்மிடமிருந்து மறைந்து போகின்றன. அவை மறைந்து போகக் கூடியது அல்ல. மாறாக, உனக்குள் புதைந்துள்ள உனது இயல்பைக் கண்டு கொள் என்ற பாடத்தை உணர்த்தும் வண்ணமாகத் தான் சிறுபிள்ளைகளை ஆண்டவர் இயேசு தன்னிடம் வரவழைத்து, அவர்களிடம் இருந்து பாடம் கற்பிக்க அழைக்கின்றார். 


    சிறுபிள்ளைகள் தன்னலம் கருதாது தன்னிடம் இருப்பதை அடுத்தவரோடு பகிர்ந்து கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். சிறுபிள்ளைகள் கோபப்பட்டாலும் அதனை மறந்து அனைவருடனும் இணைந்து விளையாடக் கூடியவர்களாக இருப்பார்கள். சிறுபிள்ளைகள் எளிதில் தன்னைக் காயப்படுத்தியவர்களை  மறந்து மன்னித்து விட்டு, அவர்களோடு நட்பு பாராட்டுவதை விரும்புவார்கள். 


    நாமும் வயது ஆக ஆக நம்மிடம் இருக்கும் இத்தகைய நற்பண்புகளை எல்லாம் புதைத்துவிட்டு, நாம் பகைமையையும் கசப்பு உணர்வுகளையும் மட்டுமே முதன்மைப்படுத்தி உறவுகளிடம் இருந்து பிரிந்து வாழ்கின்றோம். ஆனால், அனைத்தையும் புறம்தள்ளி இணைந்து வாழ்ந்த சிறு குழந்தைகளைப் போல, நாமும் இப்போதும், குழந்தை மனம் கொண்டவர்களாய் வாழ இறைவன் அழைக்கின்றார். அவரது அழைப்பை உணர்ந்து கொண்டு குழந்தை மனம் கொண்டவர்களாய் சமூகத்தில் ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொண்டு இணைந்து வாழ இறையருள் வேண்டுவோம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...