ஞாயிறு, 31 ஜனவரி, 2021

நம்பிக்கையால் நற்சான்றுபகர்வோம்! (1.2.2021)

நம்பிக்கையால் நற்சான்றுபகர்வோம்!

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் எனது சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

 2021 ஆம் ஆண்டில் முதல் மாதத்தை நிறைவு செய்து நாம் புதிதாக இரண்டாவது மாதத்தில் இன்று காலடி எடுத்து வைத்திருக்கிறோம். இந்த ஒரு மாத காலமாக பல விதமான நோய் தாக்கத்தினால் அச்சத்தில் இருக்கக்கூடிய மனிதர்களுக்கு மத்தியில் இறைவன் நம்மை காத்து இருக்கிறார் என்பதற்காக நன்றி கூறுவோம். இறைவன் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரையும் பாதுகாக்க வேண்டும் என இன்றைய நாளில் நமது முதல் வேண்டுதலை இறைவனிடத்தில் சமர்ப்பிப்போம். இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் நாம் நற்செயல்களால் நம்பிக்கையினால் நற்சான்று பெறக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என அழைப்பு தரக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் பேய் பிடித்த ஒரு நபரை நாம் பார்க்கின்றோம். இந்த பேய் பிடித்த நபர் எப்படி இருந்தார் என விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது என்றால், இவரது கைதிகளை சங்கிலிகளால் கட்டி வைப்பார்கள். ஆனால் அவர் அதனை உடைத்து விடுவார் என்றும், இவர் இரவு பகலாய் கூச்சலிட்டுக் கொண்டே இருப்பார் என்றும், இவரை எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், இவர் தம்மை தாமே கற்களால் காயப்படுத்திக் கொண்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய மனிதன் ஆண்டவர் இயேசுவிடம் ஓடி வந்து சரணாகதி அடையும் போது இறைவன் அவரை குணப்படுத்துவதை தான் நாம் இன்றைய  நற்செய்தி வாசகத்தில் வாசிக்கின்றோம். கடந்த ஒரு மாத காலமாக இந்த பேய் பிடித்த மனிதனைப் போலத் தான் நமது செயல்பாடுகளும் சில நேரங்களில் இருந்திருக்கும். பலர் நம்முடைய கைகளை கட்டிப்போட முயன்றார்கள். நாம் நல்ல செயல் செய்ய வேண்டும் என எண்ணும் போது கூட அதனை செய்ய விடாதவாறு நாம் பல நேரங்களில் பலரால் கை கட்டி வைக்கப்பட்டிருந்திருப்போம். அத்தகைய சூழலில் இருந்து விடுபட இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். எப்படி அந்த பாதிக்கப்பட்ட மனிதன் இரவு பகலாக எந்நேரமும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தானோ, அது போல கடந்த ஒரு மாதத்தில் நாமும் பலவற்றைப் பற்றி பலவற்றுக்கு எதிராக கூச்சலிட்டுக் கொண்டே இருப்போம்.  இன்றைய நாளில்,  புதிதாக பிறந்திருக்கும் இந்த புதிய மாதத்தில், கூச்சலிடுவதை நிறுத்தி அமைதியில் நடக்கும் நிகழ்வுகளை சீர்தூக்கி பார்த்து சிந்தித்து செயலாற்ற அழைக்கப்படுகின்றோம்.
எப்படி அந்த பேய் பிடித்த மனிதனை எவராலும் கட்டுபடுத்த இயலவில்லையோ அது போலத்தான், நாம் வாழும் இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் தனது மனதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு தோற்றுக் கொண்டேயிருக்கிறான். தோற்றாலும் முயற்சிப்பதை  நிறுத்தி விடாமல், முயற்சி செய்து மனதை அடக்க கற்றுக் கொள்ளக் கூடியவர்களாக நாம் வாழவும் அழைக்கப்படுகின்றோம். எப்படி பேய் பிடித்த அந்த மனிதன் தன்னைத்தானே கற்களால் காயப்படுத்தி கொண்டிருந்தானோ அது போலத்தான் தேவையில்லாத பலவற்றை சிந்தித்து சிந்தித்து, தேவையில்லாத  பலவற்றைப் பற்றி எண்ணி நாம் ஒவ்வொரு நாளும் நம்மை நாமே காயப்படுத்தி ஒவ்வொரு நாளையும் இனிய நாளாக மாற்றாமல் இனிமையான நாளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். இத்தகைய செயல்பாடுகளில் இருந்து நாம் விடுபட்டவர்களாய் இந்த புதிய மாதத்தில் அடியெடுத்து வைக்க நம்மை அன்புடன் அழைக்கிறது இன்றைய முதல் வாசகம்.  பிறந்துள்ள இந்தப் புதிய மாதத்திலே நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையினால் நற் செயல்களை செய்திட அழைக்கப்படுகின்றோம். இயேசு பேய் பிடித்து பாதிக்கப்பட்டிருந்த மனிதன் தன்னிடம் வந்து சரணடையும் போது அந்த மனிதனை முழுமையாக மாற்றி அவர் அறிவுத் தெளிவோடு ஆடை அணிந்தவராக இயேசுவின் அருகில் அமர்ந்து இயேசுவோடு உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு வியந்தவர்களைப் போல நாம், கடந்த மாதத்தில் நடந்த கசப்பான அனுபவங்களை எல்லாம் மனதில் இருத்தி வாழ்க்கையின் அழகை கெடுத்து விடாமல்,  கடந்த மாத அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மட்டுமே மனதில் இருத்தியவர்களாய், பிறந்துள்ள இந்த புதிய மாதத்தில் ஒவ்வொரு நாளும் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்யக்கூடிய, நல்லது செய்யக்கூடிய, நற்செயல் புரியும் மனிதர்களாக இருக்க அழைக்கப்படுகின்றோம். இன்றைய முதல் வாசகத்தில் கூட நம்பிக்கையினால் அரசுகளை வென்றவர்களை பற்றிய பட்டியல் ஆனது நமக்கு தரப்படுகிறது. கடவுள் மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கையின் காரணமாக பலர் தங்கள் வாழ்க்கையில் நற்செயல் செய்வதை மட்டும் தங்களுடைய தலையாய பணி என எண்ணி அப்பணியைச்  செய்ததால் வாழ்க்கையில் பல நிலைகளில் வெற்றி பெற்றார்கள். இதை தான் இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம். வாசகங்கள் நமக்கு உணர்த்தக்கூடியவற்றை  வாங்கியவர்களாக, நாம் நம்பிக்கையினால் நற்செயல் செய்யக்கூடியவர்களாக விளங்கிட, இன்றைய நாளில் இறைவனது அருளை வேண்டி இணைந்து ஒருவர் மற்றவருக்காக தொடர்ந்து செபித்த வண்ணம் இறையருளை வேண்டுவோம்.

சனி, 30 ஜனவரி, 2021

இறைவனை அறிந்தவன் இறைவாக்கு உரைப்பான்! (31.1.2021)

இறைவனை அறிந்தவன் இறைவாக்கு உரைப்பான்! 
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

ஒரு ஊரில் தையல்காரர் ஒருவர் இருந்தார். அதிகம் படிக்காவிட்டாலும் கேள்வி ஞானம் உடையவர். நீண்ட காலமாக இரு பிரிவினருக்கிடையே இந்த பிரச்சனையை தீர்த்து, நியாயமான தீர்ப்பினை வழங்கினார். இதைக் கேள்விப்பட்ட அந்த நாட்டு அரசன், அவரை அரண்மனைக்கு அழைத்து, பாராட்டி, விலைமதிப்பில்லாத வந்தால் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய கத்தரிக்கோலை பரிசாகத் தந்தார். தையல்காரரோ,  அதை வாங்க மறுத்துவிட்டார். இது விலை உயர்ந்த பரிசு ஆயிற்றே!   ஏன் மறுக்கின்றாய்?  இதைவிட மேலான பரிசினை விரும்புகிறாயா? அப்படியானால் தயங்காமல் கேள், தருகிறேன்! என்றான், அரசன் அப்படியானால் தயங்காமல் கேள், தருகிறேன் என்றான் அரசன். அதற்கு தையல்காரர், அரசரே! எனக்கு இந்த கத்திரிக்கோல் வேண்டாம். எனக்கு ஒரு சிறிய ஊசியை பரிசாக கொடுங்கள். அதுவே நான் விரும்பும் பரிசு என்றான். விலை மதிப்பற்ற இந்த வைர கத்தரிக்கோலை விட, நீ கேட்கும் ஊசி, எந்த விதத்தில்  உயர்ந்தது?  என்று கேட்டார், அரசர். கத்திரிக்கோல் எவ்வளவு விலை உயர்ந்த பரிசாக இருந்தாலும், அதன் பணி வெட்டுவதே! ஆனால் ஊசியோ, வெட்டுண்டதை இணைக்கின்றது. ஒன்று சேர்க்கின்றது. நான் வெட்டுவதை அல்ல, இணைப்பதையே பரிசாகப் பெற விரும்புகிறேன் என்றான், அந்த தையல்காரன்.  அவனை பார்த்து அரசர் மெய்சிலிர்த்த வண்ணம், பாராட்டினார்.

 இறைவனை நாம் ஒவ்வொருவரும் அறிந்து இருக்கிறோம்.இன்றைய நற்செய்தி வாசகத்தில் தீய ஆவி இறைவனை அறிந்திருக்கிறது. அந்த தீய ஆவி இயேசுவைப் பார்த்து, உமக்கு இங்கு என்ன வேலை என்ற கேள்வியை எழுப்புகிறது. நீர் யார் என எங்களுக்கு தெரியும் எனக் கூறுகிறது.  அதே தீய ஆவி தான் இயேசுவைப் பார்த்து, நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் எனவும் கூறுகிறது. தீம் ஆவிகள் ஆண்டவரை அறிந்திருந்தன.  ஆனால், இயேசு உடன் இருந்தவர்கள் அவரை அறிந்து கொண்டார்கள் என்ற கேள்வியை இன்றைய நாளில் நாம் நமக்குள்ளாக எழுப்பிப் பார்ப்போம்.இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த  போது, அவர் செய்த புதுமைகளையும்,  அவர் செய்த நல்ல செயல்களையும் பார்த்து பழகியவர்கள் கூட, அவர்கள் வாழ்வில் துன்பம் என வரும் போது, அவரை நம்பாதவர்களாகவும், அவரை ஏற்றுக் கொள்ளாதவர்களுமாகத் தான் இருந்திருக்கிறார்கள். ஆனால், இறைவனை அறிந்த ஒவ்வொருவருமே, இறைவாக்கு உரைப்பவர்களாகவும், இறைவன் இயேசு காட்டிய பாதையில் நடக்கக் கூடியவர்களாக இருக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன. நாம் இயேசு கிறிஸ்துவை அதிகமாக அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாகவே நாம் நமது வாழ்வில் இருக்கக்கூடிய கவலைகளை எண்ணி எண்ணி, நிகழ்காலத்தை வாழாமல் எதிர்காலம் பற்றிய சிந்தனையிலேயே,  நமது வாழ்வை கழிக்கின்றோம். ஆனால், இன்றைய இரண்டாம் வாசகத்தில், கடவுள் கூறுகிறார், நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன் என்று.1 பேதுரு 5ம் அதிகாரம் 7ம் இறைவசனம் கூறுகிறது, 

உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்.
1 பேதுரு 5:7.

       நாம் நமது கவலைகளை எல்லாம் ஆண்டவரிடம் ஒப்படைத்து விட்டு, அவர் நமக்கு கற்பித்த மதிப்பீடுகளின் படி வாழும் போது, நாம் அவரை அறிந்தவர்களாக இருப்போம். அவர் அறிவித்தவற்றை மற்றவர்களுக்கும் அறிவிக்க கூடிய இறைவாக்கினர்களாக உருவாக முடியும். ஒரு இறைவாக்கினன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி இன்றைய முதல் வாசகம் அழகாக எடுத்துரைக்கிறது. இறைவாக்கினன் என்பவன்,  இறைவனது பெயரால், இறைவன் உரைத்தவற்றை, அடுத்தவருக்கு அறிவிக்க கூடியவராக இருக்கிறார்கள். சமூகத்தில் நடக்கக் கூடிய அநீதிகளை அநீதி என சுட்டிக்காட்டுகிறார்கள். அப்படி சுட்டிக் காட்டுவதனால், அவர்களுக்கு பலவிதமான இன்னல்களும் துன்பங்களும் அடைகிறார்கள். அவற்றை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு,  ஆண்டவர் இயேசுவின் பணியான, நற்செய்திப் பணியை மட்டுமே சிரமேற்கொண்டு, தங்கள் வாழ்க்கையில் இறைவனது மதிப்பீடுகளின் படி இறைவாக்கு உரைத்து அனைவரையும் ஆண்டவர் இயேசுவுக்குள் வரவழைக்க செய்பவர்களாகத் தான் விவிலியத்தில் நாம் பார்த்த ஒவ்வொரு இறைவாக்கினரும் இருந்திருக்கிறார்கள். திருமுழுக்கு வழியாக திருஅவையின் உறுப்பினராக மாறக்கூடிய நாம் ஒவ்வொருவருமே, இறைவாக்கு உரைக்க கடமைப்பட்டிருக்கிறோம். 

இன்றைய நாளில் அச்சங்களை களைந்து, நம்மிடம் இருக்க கூடிய கவலைகளை எல்லாம் விட்டொழித்து விட்டு, ஆண்டவர் இயேசுவை முழுமையாக அறிந்து கொள்ளக் கூடியவர்களாக, அவரது வாழ்க்கை பாடம் நமக்கு கற்பித்த பாடங்களின் அடிப்படையில், இந்த சமூகத்தில் நீதியையும், உண்மையையும், எடுத்துரைக்கக் கூடிய ஒரு இயேசுவின் இறைவாக்கினனாக, இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். இறைவனை அறிந்தவன் இறைவாக்கு உரைப்பான், என்பதற்கேற்ப, நாம் இறைவனை அறிந்திருக்கிறோம். இறைவனை நாம் சந்திக்கும் நபர்களுக்கு அறிவிப்போம்.‌ அவர்கள் வாழ்க்கையில் அவர்களும் இயேசுவை கண்டுகொள்ளக் கூடியவர்களாக, இயேசுவின் போதனைகளின் அடிப்படையில், தங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவரது பாதையில், உலகத்தை அன்புச் சமுதாயமாக மாற்றக் கூடிய பணியினை செய்ய, அதிகாரத்தோடும், துணிச்சலோடும், இறைவாக்கு அறிவிக்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். வாருங்கள், அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவிகொடுத்தவர்களாய், அறிந்த இறைவனை நாம் அறியாத மக்களுக்கு அறிவிப்போம். அறிவிக்கும் நல்ல இறைவாக்கினர்களாக மாறுவோம்.

வெள்ளி, 29 ஜனவரி, 2021

இழந்தாலும் இழந்து விடாதே...(30.1.2021)

இழந்தாலும் இழந்து விடாதே...
இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


ஒருவர் ஒரு பெரிய கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சைக்கிளில் சென்றார். சைக்கிளை பூட்டி வைக்க மறந்து விட்டு சைக்கிளை கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு தேவையான பொருள்களை வாங்கி விட்டு வெகு நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தார். பூட்டப் படாத சைக்கிள் திருடு போகாமல் வைத்த இடத்திலேயே இருந்தது. அதைக் கண்டு வியப்படைந்த அவர் கடவுளுக்கு நன்றி சொன்னார். அடுத்த கணமே அருகாமையில் இருந்து கோவிலுக்கு சென்றார். கோவிலுக்கு வெளியே சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு கோவிலுக்குள் சென்று மூன்று முறை வலம் வந்து, பின் கையிலிருந்த ஒரு தேங்காயை உடைத்து விட்டு, வெளியே வந்து பார்த்தால் சைக்கிள் திருடு போய்விட்டது. அவர் கடைக்கு சென்றபோது அவருக்கு கடவுள் மேல் நம்பிக்கை இருந்தது, புட்டின் மீது நம்பிக்கை இல்லை. சைக்கிளும் பத்திரமாக இருந்தது. ஆனால் அவர் கோவிலுக்கு சென்றபோது அவருக்கு பூட்டு  மேல் நம்பிக்கை இருந்தது கடவுளின் மேல் நம்பிக்கை இல்லை. கடவுள் எனவே சைக்கிள் காணாமல் போனது.

பொதுவாகவே எல்லாவற்றையும் கடவுளிடம் இருந்து பெற்றுக் கொண்டு கடவுளை நம்புவதை விட,  நம்மிடம் இருப்பதை இழப்பதன் மூலம் கடவுள் மீதான  நம்பிக்கையை வைப்பது சாலச்சிறந்த ஒன்று என கூறுவார்கள்.

இன்றைய வாசகங்கள் அனைத்தும் நமது நம்பிக்கையை நாம் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு அழைப்பு தருகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் தொடக்கத்தில் தன்னிடம் பல விதமான செல்வங்களும், உற்றார் உறவினர்களும், ஆடு மாடுகளும் என மகிழ்வோடு வாழ்ந்து வந்த ஆபிரகாமை இறைவன் உன்னிடம் இருப்பதை எல்லாம் விட்டுவிட்டு நான் காண்பிக்கும் நாட்டுக்குச் செல் என்று கூறும்போது ஆண்டவரின் வார்த்தைக்குச் செவிகொடுத்து  அவரின் மீது நம்பிக்கை கொண்டு, அவர் காட்டிய பாதையில்  பயணித்து நம்பிக்கையின் நாயகனாக திகழ்ந்தார்.

இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொள்வதற்கு ஒரு விதமான துணிச்சல் அவசியமாகிறது.  இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசுவினுடைய பலவிதமான அரும் அடையாளங்களையும், அவர் செய்த வல்ல செயல்களையும், நேருக்கு நேராக அவருடன் இருந்து கண்ட சீடர்கள், தங்கள் வாழ்வில் துயரம் கொள்ளும்போது நம்பிக்கை இழந்தவர்களாக தடுமாறுகிறார்கள். தடுமாறிய தன் சீடர்களைப் பார்த்து இன்னுமா உங்களுக்கு நம்பிக்கை இல்லை? என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து கேட்கிறார். இன்னுமா உங்களுக்கு நம்பிக்கை இல்லை? என்ற கேள்வியானது சிடர்களுக்கானது மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்குமானது.

பொதுவாகவே நாம் கடவுள் மீது கொண்டிருக்கக்கூடிய நம்பிக்கை என்பது நான்கு தூண்களில் நிறைநிலை நிறுத்தப்பட்டுள்ளது என்பார்கள்.
1. நாம் அறிக்கையிடும் நம்பிக்கை அறிக்கை.
2.  நாம் கொண்டாடக்கூடிய நம்பிக்கையின் அருளடையாளங்கள்.
3. நாம் கடைபிடிக்கும் நம்பிக்கை உரிய 10 கட்டளைகள்.
4. நாம்  நம்பிக்கையோடு ஜெபிக்கும் கர்த்தர் கற்பித்த செபம்.

 இவை நான்கும் நாம் கடவுள் மீது மீது கொண்டிருக்கக்கூடிய நம்பிக்கையானது நிலை நிறுத்தப்பயன்படுகிறது. ஆனால் நாம் கடவுளிடம் இருந்து அபரிமிதமானவற்றை பெறுவதால் அவர் மீது நம்பிக்கை கொள்கின்றோமா?அல்லது உண்மையாகவே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது நம்மிடம் இருப்பதை எல்லாம் இழந்தாலும் நம்பிக்கையுடன் அவரை பின் தொடர்ந்து அவர் காட்டிய பாதையில் அவரது மதிப்பீடுகளின்படி நாம் பின்பற்றுகிறோமா? சிந்திக்க இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன.

திருவிவிலியத்தில் லூக்கா நற்செய்தி 3:45  வசனம் ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் என எலிசபெத்தின் வார்த்தைகள் மரியாவுக்கு ஊக்கம் ஊட்டியது. மரியா கடவுளை நம்பினார். எனவே இயேசு மண்ணில் பிறப்பதற்கு அவரை தன் வயிற்றில் கருவுற்றார். அதுபோலவே தோமாவிடம் உயிர்த்த ஆண்டவர் தோமாவை நோக்கி என்னைக் கண்டதால் நம்பினாய் காணாமல் நம்புவோர் பேறுபெற்றோர் என யோவான் நற்செய்தி 20 : 29 இல் குறிப்பிடுகிறார். தோமா இயேசுவை நம்பினார். நீரே என் ஆண்டவர் நீரே என் கடவுள் என அறிக்கையிட்டார். யோவான் 20 28. 
 ஆண்டவரில் நம்பிக்கை கொண்டவர்களின் கூட்டம்
திருப்பாடல் 5 :14 கூறுவதுபோல
நாமும் நம்பிக்கையாளர்களின் கூட்டத்தில் இடம் பிடிக்க... நம்மிடம் இருப்பதை எல்லாம் இழக்கும் நேரங்களிலும் நமது நம்பிக்கை இழக்காதவர்களாய் இறைவனை பின்தொடர இறையருள் வேண்டுவோம்.

செயல்படத் துவங்குவோம்....(7.2.2021)

செயல்படத் துவங்குவோம்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

 ஒரு மனிதன் நல்லதை செய்கிறான். ஆனால் அவனுக்கு துன்பமே கிடைக்கிறது. இதை எப்படி புரிந்து கொள்வது? என்ற நோக்கத்தோடு அலையக்கூடிய நம்மில் பலருக்கு இன்றைய முதல் வாசகத்தில்  வாசிக்கப்படும் யோபுவின் வாழ்வு நமக்கு பாடம் கற்பிக்கிறது. 

ஊருஞ் சதமல்ல 
உற்றார் சதமல்ல 
உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல  
பெண்டிர் சதமல்ல  
பிள்ளையும் சீரும் சதமல்ல
நின் தேசத்திலே யாதும் சதமல்ல
 நின்தாள் சதம் கச்சி ஏகம்பனே.... 
அதாவது ஊரும் நிரந்தரமல்ல உற்றாரும் நிரந்தரமல்ல நாம் பெற்ற பெயரானது நிரந்தரமல்ல கட்டிய மனைவியாக இருந்தாலும் சரி பெற்ற பிள்ளையாக இருந்தாலும் சரி அல்லது மனைவி கொண்டுவந்த சீராக இருந்தாலும் சரி இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரமல்ல ஒன்றே ஒன்று நிரந்தரம் அதை இறைவன் ஒருவனே என்ற பட்டினத்தாரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இறைவனை உறுதியாக பற்றிப் படித்துக் கொண்டிருந்தவர் தான் இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க  கேட்ட  யோபு ...

செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்த யோபு சாத்தானின் சோதனைக்கு உள்ளாகும் போது இருந்ததை எல்லாம் இழந்துவிடுகிறான் தன்னுடன் இருந்த நண்பர்களும்,கட்டிய மனைவியும் அவனை ஏளனம் செய்தார்கள்.
 ஆனால் இவை அனைத்தையும் கடவுள் கொடுத்தார் கடவுள் எடுத்துக்கொண்டார் நன்மைகளை மட்டும் பெற்றுக்கொள்ளக்கூடிய நாம் ஏன் கடவுளிடமிருந்து துன்பங்களை பெறக்கூடாது என்றவராய் அனைத்தையும் இழந்த போதும் அவரிடமிருந்த இறைவன் மீதான நம்பிக்கையை மட்டும் இழக்காமல் உறுதியோடு இருந்தார்.


உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார். 

1 பேதுரு 5:7
என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப ஆண்டவர் மீது அனைத்து விதமான நம்பிக்கையையும் கொண்டவராக இருந்தவர் தான் இந்த யோபு.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இறையாட்சி பணிக்கென சீடர்களை அழைத்துக் கொண்டு, நோயுற்றவர்கள் பேய் பிடித்தவர்கள், சமூகத்தால் புறம்தள்ளப்பட்ட நோயாளிகள் என ஒவ்வொருவரையும் தேடிச்சென்று குணப்படுத்துகிறார். மேலும் இறைவனையும் தேடிச் சென்று தனிமையில் ஜெபிக்கிறார். வாருங்கள் அடுத்த ஊருக்கும் சென்று இப்பணியைச் செய்வோம் என சீடர்களை அழைத்துக் கொண்டு புறப்படுகிறார்.
 இயேசுவின் வாழ்வு இவ்வுலகில் நாம் வாழும் போதும், எப்போதும் நல்ல பணிகளைச் செய்து கொண்டே செல்ல வேண்டும் நல்ல பணிகளைச் செய்வதால் துன்பங்களே பரிசாக கிடைக்கிறது என்றாலும், நல்லது செய்வதை நிறுத்தாது நலமான பணிகளை முன்னெடுத்துச் செல்ல இன்றைய   வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.

நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் இயேசுவின் இந்த மகத்துவமான நல்லது செய்யக்கூடிய பணியினை செய்யக்கூடிய மனிதர்கள் ஆங்காங்கே இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.  ஆனால் அவர்களுக்கு துணை நிற்பதற்கு எவருமில்லை பல நேரங்களில் அவர்களது வீட்டில் உள்ளவர்களே அவர்களுக்கு எதிராக கூறுகிறார்கள் நீ மட்டும் ஏன் இப்படி இருக்கிறாய் அடுத்த பிரச்சனை என்று போய் ஏன் நீ பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சினைகளுக்குள் மாட்டிக் கொண்டு சிக்கி தவிக்கிறாய் இவ்வாறு இருக்காதே என்றெல்லாம் உறவினர்கள் கூறுகிறார்கள். ஆனால் அடுத்த பிறகான வாழ்வுதான் அர்த்தமுள்ள வாழ்வு என்பதை உணர்ந்தவர்களாய் ஒரு துன்பம் தன்னை தீண்டாத வரை அதைப் பற்றி பேசாமல் இருக்கக் கூடிய மனிதர்களுக்கு மத்தியில் சக மனிதனுக்கு ஒரு துன்பம் நேர்கிறது என்றால் அது தனக்கே இருந்த துன்பம் என கருதி அத்துன்பத்தை நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபடக் கூடியவர்கள் மிகவும் குறைவு.  

ஒரு கவிஞன் அழகாகக் கூறுவார்.  

நாம் வாழும் இந்த உலகத்தில் 
ஒரு இனத்திற்கு துன்பம் என்றால் 
அந்த இனத்தைச் சார்ந்த மற்ற அனைத்தும் இணைந்து போரிடும். 
ஆனால் 
மனித இனம் மட்டுமே புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்...
 எனக் கூறினார். 

இன்று நாம் வாழும் சமூகத்தில் நடக்கக்கூடிய அநீதிகளை வேடிக்கை பார்ப்பவர்கள் ஆகவும் அதைப்பற்றி பேசுபவர்களாகவும் மட்டும்தான் என்று பலர் இருக்கிறார்கள் அந்த அநீதியை நீதியாக மாற்றவும் நல்ல செயலாக மாற்றவும் முன் வருபவர்கள் மிகவும் குறைவு.
இவர்களெல்லாம் தங்கள் வாழ்வில் நல்லது செய்வதனால் பலவிதமான இன்னல்களையும் துன்பங்களையும் அடைந்தாலும் இவர்களுக்கு கிடைக்கும் கைமாறு என்ன? என்ற கேள்வியை எழுப்பும் பொழுது அதற்கு பதில் தர கூடிய வகையில் இன்றைய இரண்டாம் வாசகமானது அமைந்துள்ளது. 

ஆம்
 நலமான பணிகளை மட்டுமே முன்னெடுத்தால் கைம்மாறு துன்பமாக இருக்கும் போது எப்படி அதனை முன்னெடுப்பது? என்ற கேள்விக்கு விடை தரும் வகையில் இன்றைய இரண்டாம் வாசகமானது அமைகிறது.  கொரிந்து நகர மக்களுக்கு பவுலடியார் எழுதிய முதல் கடிதத்தில்,  மனநிறைவே கைம்மாறு எனக் குறிப்பிடுகிறார். நல்லதை செய்கிறோம், ஆனால் துன்பமே பரிசாக கிடைக்கிறது. துன்பங்களைக் கண்டு துவண்டு விடக்கூடாது நாம் மாறாக இயேசுவை நேரத்தில் மனதில் இருத்தி அவர்களால் தொடர்ந்து நல்லதை செய்து கொண்டே செல்ல வேண்டும் நல்லது செய்வதனால் நமக்குள் கிடைக்கும் மன நிறைவுதான் இறைவன் தருகின்ற கைமாறு இன்றுவரை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் துன்பங்களை கண்டு அஞ்சாது நலமான நல்ல செயல்களை நாம் வாழும் சமூகத்தில் செய்திட வேண்டும்.  

பேசுவது எளிது 
ஆனால் 
செயல்படுத்துவது மிகவும் கடினம்...

 வாருங்கள் பேசுவதை நிறுத்தி... 
செயல்படத் துவங்குவோம்.... 

அதற்கான அருளை வேண்டி தொடர்ந்து மன்றாடுவோம் இந்த திருப்பலியில் 




வியாழன், 28 ஜனவரி, 2021

எண்ணங்களால் நகரும் வாழ்வு (29.1.2021)

எண்ணங்களால் நகரும் வாழ்வு 
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்


நான் எண்ணுவதால் வாழுகின்றேன் ...

என்ற தத்துவ அறிஞரின் வார்த்தைகளுக்கு ஏற்ப இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் நம்மை நமது எண்ண அலைகளை குறித்து சிந்திக்க அழைப்பு தருகின்றது .

இன்றைய முதல் வாசகத்தில் ஒருவன் ஒளியை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறான். அவன் அந்த ஒளியை பெற்ற பின் அந்த ஒளியை பெறுவதற்கான முயற்சியில் அவனுக்கு ஏற்பட்ட துன்பம் நிறைந்த போராட்டங்களை மன உறுதியோடு ஏற்றுக்கொள்கிறான். இந்த ஒளியை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடும்போது, அவன் பலவிதமான இகழ்ச்சிக்கும், வேதனைக்கு ஆளாகி பலரும் பார்க்கும் வகையில் வேடிக்கை பொருளாகவும் இருந்திருக்கிறான். இப்படி எல்லாம் இருந்தாலும், ஒளியை பெற்ற பின்பு நேரிட்ட அனைத்து துன்பம் நிறைந்த போராட்டங்களையும் மன உறுதியோடு ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறான் மனிதன் என்ற செய்தியானது மிகவும் ஆழமாக  நமக்குத் தரப்படுகிறது.

இத்தகைய இறைவார்த்தையின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனுடைய எண்ண ஓட்டங்களை சீர்தூக்கிப் பார்க்கும் பொழுது, மனித மனமானது ஒன்றின் மீது நாட்டம் கொள்கிறது. அதனை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறது. அதனால் பலவிதமான இன்னல்களை சந்தித்து, இறுதியில் அந்த எண்ணம் ஈடேறியவுடன் அதற்கடுத்ததாக அடுத்த ஒன்றின் மீது நாட்டம் கொண்டு, அதனை நோக்கி பயணிக்க கூடியதாக இருக்கிறது. 
எண்ணங்கள்தான் ஒன்றின் மீது நாட்டத்தையும் உருவாக்குகிறது. அதே எண்ணங்கள் தான் அந்த நாட்டத்தின் காரணமாக வரக்கூடிய துன்பங்களையும் ஏற்றுக் கொள்கின்றது. அதே எண்ணங்கள் தான் அந்த  நாட்டமானது ஈடேறும்போது வரக்கூடிய மகிழ்ச்சியையும் ஏற்றுக்கொள்கிறது. பின் அதற்கடுத்ததாக அடுத்த ஒன்றினை நோக்கியும் நகர்கிறது...

நான் எண்ணுவதால் வாழ்கின்றேன் என்ற தத்துவ அறிஞரின் வார்த்தைகளுக்கு ஏற்ப எண்ணங்கள் நகர்த்தக்கூடிய நமது வாழ்வில் இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக இறைவன் தரக்கூடிய செய்தி... உங்கள் எண்ணங்களையும் அதன் செயல்பாடுகளையும் சீர்தூக்கிப் பாருங்கள் என்பதாகும்.

எப்படி ஒருவர் விதையை நிலத்தில் விதைத்து விட்டுச் செல்ல, விதைத்தவர்க்கு தெரியாமலேயே விதையானது முளைத்தெழுந்து தளிர்,கதிர் பின் கதிர் முழுக்க  தானியங்கள் என தானாக வளர்ந்து இருக்கிறதோ, அதுபோல  யாரோ ஒருவரால் நம்மிடையே விதைக்கப் படக்கூடிய எண்ணங்களும் படிப்படியாக நமக்குளாகவே வளர்ச்சியடைந்து நிற்கின்றது.

இத்தகையை எண்ணங்களின் வளர்ச்சியில் இருக்கக்கூடிய அழகு என்னவென்றால். நாம் வாழும் இந்த உலகத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களைப் பற்றி ஒவ்வொரு விதமான எண்ணங்களை யாரோ ஒருவராலோ அல்லது நாமாகவோ  நமக்குள் விதையாக விதைக்கின்றோம் அல்லது விதைக்கப்படுகிறது.
விதைக்கப்பட்டுள்ள இந்த விதைக்குள் ஒருவரை பற்றிய நேர்மறையான, எதிர்மறையான என அனைத்துவிதமான குணநலன்களும் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் தான் மிகவும் வேகமாக வளர்ச்சி எடுக்கின்றன.  

நமக்குத் தெரியாமலேயே நமக்குள்ளாகவே அதிகமாக வளர்ந்திருக்கக்கூடிய இந்த அடுத்தவரை பற்றிய எதிர்மறையான எண்ணங்களை பற்றிய சுய ஆய்வுக்கு தான் இன்றைய வாசகங்கள் நமக்கு சிந்திக்க அழைப்பு தருகின்றன.

ஒருவர் மீது நாம் கொண்டிருக்கக்கூடிய தவறான எண்ணங்கள் தான், நமது வாழ்வில் பெரும்பாலான நேரங்களில் அமைதியை இழக்க செய்யக்கூடியதாக இருக்கின்றது.  

இந்த உலகில் உள்ள யாருமே சண்டையிட்டுக் கொள்வது இல்லை மாறாக கருத்து வேறுபாடுகள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கருத்து வேறுபாடு என்பது ஒவ்வொரு மனிதனும் தான் கொண்டிருக்கக்கூடிய கருத்துக்களை சரியா? தவறா? என சுய ஆய்வு செய்து சிந்திக்கவும் சீர்தூக்கிப் பார்க்கவும் முயலும்போது மட்டுமே வளர்ச்சியில் முழு நிறைவை நாம் கண்டுகொள்ள முடியும்.  

நாம் நமக்குள்ளாக அடுத்தவர்களைப் பற்றி கொண்டிருக்கக்கூடிய எண்ணங்களில் நேர்மறை, எதிர்மறை எது அதிகமாக வளர்ந்து இருக்கிறது என்பதனை சீர்தூக்கிப் பார்ப்போம். அச்சம் தவிர்த்து அடுத்தவர் பற்றிய நல்லவிதமான எண்ணங்களோடு பயணிக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றது .

அச்சம் என்பது பகுத்தறிவின் துணையை கைவிடுவதே  

சாலமோனின் ஞானம் 17:12

அச்சம் கலைந்து பகுத்தறிவின் துணையோடு நமது எண்ணங்களை சீர் தூக்கி பார்க்க முயலுவோம். அதற்கான இறையருளை வேண்டுவோம். 

மனஉறுதியோடு ஏற்றுக்கொள்வோம்... (29.1.2021)

மனஉறுதியோடு ஏற்றுக்கொள்வோம்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 

ஒரு நாள் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி உச்சிவெயிலில் சற்று ஓய்வுக்காக மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த வியாபாரி ஒருவர் அவரைப்பார்த்து, இவர் கடுமையாக உழைத்தார் எனவேதான் அயர்ந்து ஓய்வு எடுக்கிறார் என்று கூறிக்கொண்டே சென்றார். அவரைக் கண்ட ஒரு திருடன், இவன் இரவு திருடனாக இருப்பான். அதனால்தான் பகலில் அயர்ந்து தூங்குகிறான் என்றான். அவ்வழியே வந்த குடிகாரன், இவன் காலையிலேயே குடித்துவிட்டு மயங்கிக் கிடக்கிறான் என்றான். இறுதியாக அவ்விடத்திற்கு வந்த துறவி, இவர் முற்றும் துறந்த துறவி. எனவே உறங்கிக் கொண்டிருக்கிறார் எனக் கருதி அவரை வணங்கி விட்டுப் போனார்.

 காட்சி ஒன்றுதான் என்றாலும் மனிதர்களின் பார்வை வேறுபடுகிறது. இன்று நாம் வாழக்கூடிய இந்த சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கண்ணோட்டத்தோடு புரிந்து கொள்கிறோம். இன்றைய முதல் வாசகத்திலும் கூட, கடவுள் நமது வாழ்வின் முன்னைய நாட்களை நினைத்துப் பார்க்க அழைக்கின்றார்.  காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல் என்று கவிஞர் ஒருவர் கூறுவது போல இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் இயேசு கடவுள் நமது வாழ்வின் இன்றைய நிலைக்கு நம்மை வழிநடத்திய நமது கடந்த கால வாழ்வை அழகாக நினைவுகூற நம்மை அழைக்கின்றார். நாம் கடந்து வந்த பாதைகள் முழுவதும் பலவிதமான வண்ண மலர்களும் முட்களும் கூட சூழ்ந்து இருக்கலாம். மலர்களின் அழகில் மயங்கி வாழ்க்கையில் வியந்த நாம், பல நேரங்களில் முட்களின் வலியில் வேதனை அடைந்திருக்கலாம். 

இன்றைய இறைவாக்கு,

"நீங்கள் ஒளி பெற்றபின் உங்களுக்கு நேரிட்ட துன்பம் நிறைந்த போராட்டத்தை மனஉறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள்" - எபிரேயர் 10: 33, என்று நமது வாழ்வில் நாம் எந்நாளும் பெற்றுக் கொண்டு,  நிலைத்து இருக்க வேண்டிய ஒளி பற்றி நம்மிடம் கூறுகிறார். நானே உலகின் ஒளி என்று சொன்ன இயேசு ஆண்டவர், அவரைப் போல இறுதி வரை உறுதியான உள்ளத்தோடு வாழ நம்மை அழைக்கின்றார். அவரது  பாதையில் வழி நடப்போம்.

மற்றவர்களது பார்வை நம்மீது எப்படிப்பட்டதாக  இருந்தாலும் நம்மைப் பற்றிய நமது பார்வை எத்தகையதாக அமைந்திருக்கிறது என்பதை இன்றைய நாளில் சீர்தூக்கிப் பார்ப்போம்.

புதன், 27 ஜனவரி, 2021

ஒளி ஏற்றுவது வழியை கண்டுகொள்ளவே... (28.1.2021)

ஒளி ஏற்றுவது வழியை கண்டுகொள்ளவே...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் எனது சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய முதல் வாசகத்தில் நமக்கு வாக்களித்த இறைவன் நம்பிக்கைக்கு உரியவர் . நாம் வாழும் இந்த உலகில் ஒருவர் மற்றவரை அன்பு செலுத்தவும், நற்செயல் செய்ய ஊக்கப்படுத்த வேண்டும் என முதல் வாசகம் எடுத்துரைக்கிறது .

ஒரு ஊரில்  கடவுளை மறுத்து, கடவுளுக்கு  எதிராக எப்போதும் பேசிய நபர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு நாள் காட்டுக்குள் சென்ற போது, ஒரு சிங்கம் அவரை துரத்திக் கொண்டு வந்தது. அப்போது அவர் பயந்து கொண்டு கடவுளே  என்னை காப்பாற்றும் என்று கத்தினார். கடவுள் அவரிடம் வாழ்நாள் முழுவதும் என்னை மறுத்த உனக்கு சாகும்போது மட்டும் எப்படி என் நினைவு வருகிறது? உன்னை என்னை சார்ந்தவராக ஏற்றுக் கொள்வது எப்படி? என்று கேட்டார். அதற்கு அந்த நபர்  என்னை உன்னுடைய பக்தனாக மாற்றவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது. ஆனால் இந்த சிங்கத்தையாவது உன் விழுமியங்களின் படி வாழ கூடியதாக மாற்றுங்கள் என்றார்.  அப்போது இந்த சிங்கம் என்னை கொல்லாமல் விட்டு விட்டுப் போய்விடும் என்றான். உடனே கடவுள் அந்த சிங்கத்தை தன்னை அறிந்த சிங்கமாக மாற்றினார். உடனே அந்த சிங்கம் தனது இரண்டு கால்களையும் குவித்து இறைவா நான் உண்ண போகும் இந்த உணவை ஆசீர்வதியும் என்று ஜெபித்தது.பின் அந்த மனிதனை சாப்பிட்டுவிட்டு தனக்கு கிடைத்த உணவுக்காக நன்றி செலுத்தியது.

வேடிக்கையான கதையாக இருந்தாலும் இன்றைய வாசகங்கள் நாம் நற்செயல் செய்யவும், ஒருவரை ஒருவர்  அன்பு செய்யவும் வேண்டும் என்ற அன்பு கட்டளையை நமக்கு கற்ப்பிக்கின்றது.
பொதுவாகவே நம்மில் பலர் நமக்கு துன்பம் நேரும் போது தான் இறைவனை நினைக்கின்றோம். அப்போதுதான் இயேசுவின் விழுமியங்களின் படி வாழ வேண்டுமென சிந்திக்கின்றோம். ஆனால் எந்நேரமும் எல்லாச் சூழ்நிலையிலும் நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும், நற்செயல்கள் செய்யவும், ஒருவரை ஒருவர் ஊக்கமூட்டவும் அழைக்கப்படுகிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசு விளக்கை ஏற்றி மரக்காலுக்கு அடியில் வைப்பது முறையா? என்ற கேள்வியை எழுப்புகிறார்.விளக்கு ஏற்றப்படுவது வழி காட்டுவதற்காகத்தான் அன்புக்குரியவர்களை நாம் அனைவரும் இச்சமூகத்தில் விளக்காக ஏற்றப்பட இருக்கிறோம், நாம் அடுத்தவருக்கு வழிகாட்டக்கூடிய விளக்காக இருக்க அழைக்கப்படுகிறோம்.

விளக்குத் தண்டின் மீது வைக்கப்பட்ட விளக்கானது வெளிச்சத்தின் மூலம் பலருக்கு இருளை அகற்றி வழியை காண்பிப்பது போல, நாம் நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான திறமைகளையும் பயன்படுத்தி ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும், நற்செயல்களை இச்சமூகத்தில் செய்திடவும், நற்செயல்கள் செய்பவர்களையும், அன்பு செய்பவர்களையும், தொடர்ந்து ஊக்கம் ஊட்டிக் கொண்டே வாழவும் இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.
உருகும் மெழுகு திரியைப் பார்த்து யாரும் இறந்து கொண்டிருக்கிறது என்று கூறுவது இல்லை.  

நாம் அன்பானவர்கள், நற்செயல் செய்பவர்கள், ஊக்கமூட்டுபவர்கள் என பிறர் கூற வேண்டும் என்பது அல்ல, மாறாக இப்பண்புகள் நமது செயல்பாடுகளில் வெளிப்பட வேண்டும். இதனை செய்யவே இன்றைய நாளில் நீங்களும் நானும் அழைக்கப்படுகிறோம்.
நாம் அதிகமான நூல்களை வாசிப்பதும் நமது திறமைகளை அதிகம் வளர்த்துக் கொள்வதும் பிறருக்கு பயன்படுத்தவே அவற்றைப் பயன்படுத்தாமல் நமக்கு உள்ளே வைத்து இருப்போமாயின் அதனால் பயன் எதுவுமில்லை.நான் கற்றவைகளையெல்லாம் செயல்படுத்தாமல் நமக்குள்ளே வைத்திருக்கக் கூடியது விளக்கை ஏற்றி மரக்காலுக்கு அடியில் வைப்பதற்கு இணையாகும்.நமது சுயநலத்திற்காக மட்டும் நமக்குள் இருக்கக்கூடிய திறமைகளையும் நாம் தெரிந்த வகைகளையும் பயன்படுத்துவதை விட, நாம் கற்றுக்கொண்டவைகளை பயன்படுத்தி அடுத்தவர் வாழ்வில் ஒளியேற்றிட நாம் ஒளியாக இருக்க வேண்டும்.  துன்பம் வரும்போது மட்டும் இறைவனை  நினைத்த அந்த நபரைப் போல இல்லாமல் எப்போதும் நம்மிடம் இருப்பவைகளை எல்லாம் கொண்டு அடுத்தவரை அன்பு செய்யவும், நற்செயல்கள் செய்யவும், ஊக்கமூட்டும் முயலுவோம்.  
 வருவது வரட்டும் என்று வாழத் துவங்கி விட்டால் வருவது எல்லாம் வரவே என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப நாம் நமது வாழ்வில் நற்செயல்களைச் செய்யவும், நல்லதை ஊக்கப்படுத்தவும், ஒருவர் மற்றவரை அன்பு செலுத்தவும்,அன்பு செய்யும் பிறரை ஊக்கமூட்ட கூடியவர்களாக உருவாகிட, ஒளியாக இருந்து வழிகாட்டிட இறையருளை இணைந்து வேண்டுவோம். 

செவ்வாய், 26 ஜனவரி, 2021

விதைக்கப்படுவது விருட்சமாகவே ... (27.1.2021)

விதைக்கப்படுவது விருட்சமாகவே 
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு ஊரில் இருந்த மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என ஆசைப்பட்டார்கள். எங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று அவர்கள் அனைவரும் இறைவனை நோக்கி மன்றாடினார்கள். கடவுள் அவர்களுக்கு காட்சி கொடுத்து நீங்கள் சுதந்திரமாக வாழ நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்? என்றார். அந்த ஊர் மக்களோ எங்களுக்கு நிறைய சாலைகள் வேண்டும் என்றனர். அதற்கு கடவுள் ஏன் நிறைய சாலைகளை கேட்கிறீர்கள்? என்றார். அதற்கு அந்த ஊர் மக்கள் கூறினார்கள். நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் விருப்பம் போல் நாங்கள் விரும்பும் பாதையில் செல்ல விரும்புகிறோம். எனவே தான் எங்களுக்கு அதிகமான சாலைகள் வேண்டும் என கேட்கிறோம் என்றானர். அதைக் கேட்ட கடவுள் இதுவா உண்மையான சுதந்திரம்? என்று கேட்டார். எல்லோரும் ஒன்றும் புரியாமல் நின்றுகொண்டிருந்தார்கள். கடவுள் தொடர்ந்து பேசினார். உண்மையான சுதந்திரம் என்பது அவரவர் விருப்பப்படி வாழ்வதில் அல்ல ... மாறாக என் விருப்பத்தை நிறைவேற்றுவதில் தான் அடங்கியுள்ளது என்றார். உடனே அந்த மக்கள் ஆண்டவரே உமது விருப்பம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அவர் மற்றவர்களை நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என கூறினார்.


அன்புக்குரியவர்களே மற்றவர்களை மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும் என்பதற்காகத் தான் கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். அவர் நமக்காக பலியானார்.இதையே இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கிறோம்.  இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது அவர் விதைத்த விதையான வார்த்தைகள் தான் இன்று நமது இதயத்தில் ஆழமாக எழுதப்பட்டுள்ளது.  இதயத்தில் எழுதப்பட்ட வார்த்தைகள் எழுதப்பட்டவையாக மட்டும் இருக்குமாயின், அது பலன் இல்லை. அது கனி தர வேண்டும்.
 
இன்றைய நற்செய்தி வாசகத்தில் விதைப்பவர் உவமையைப் கூறுகிறார் இயேசு. பிறகு தனது சீடர்களுக்கு அந்த விதைப்பவர் உவமையைப் பற்றிய அர்த்தத்தை உணர்த்துகிறார்.

 நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின்  அடிச்சுவட்டை பின்பற்றக்கூடிய குடும்பங்களாக நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
நினைத்துப் பார்ப்போம்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் போதனைகள் எந்த அளவிற்கு நமது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் எந்த அளவிற்கு அவரது வார்த்தைகளுக்கு செயல் வடிவம் கொடுத்தவர்களாக இருக்கிறோம். ஆண்டவர் நம்மிடையே நலமான நல்ல விதைகளை இறைவார்த்தை வழியாக விதைத்துள்ளார். அந்த இறைவார்த்தை எந்த அளவிற்கு பயன் தருகிறது. அது பாதையில் விழுந்த விதை போல இருக்கிறதா? அல்லது வழியோரம் விழுந்தது போல இருக்கிறதா? அல்லது முட்ச்செடிகளுக்கு மத்தியில் விழுந்த விதைகளாக இருக்கிறதா?இயேசுவின்  வார்த்தைகள் விதைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் விதைக்கப்பட்ட நிலம் எப்படிப்பட்ட நிலம் என்பதை இன்று நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண்டவருடைய வார்த்தைகள் நமது வாழ்வில் செயலாக்க படவில்லை என்றால், அது மற்றவர்க்கு பயன் தரக்கூடிய வகையில் அமையவில்லை.  நாம்  இன்னும் கனி கொடாத விதைகளாக தான் இருக்கிறோம். நாம் நல்ல விளைச்சலைத் தர வேண்டும் என்றால் இறை வார்த்தைகளை இதயத்தில் எழுதினால் மட்டும் போதாது மாறாக இறை வார்த்தைகளை வாழ்வின் செயலாக்க வேண்டும். 

செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம்
என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப. நாம் இறை வார்த்தைகளை செயல் ஆற்றிட இன்றைய நாளில் இறைவன் அழைக்கின்றார்.

இறை வார்த்தைகளின் படி வாழ்ந்து காட்டி அடுத்தவர் மகிழ்வில் மகிழ்வது தான் உண்மையான சுதந்திரம். இச்சுதந்திரத்தை பெற்றவர்களாய் வாருங்கள் 
 இறைவார்த்தையை  இதயத்தில் எழுதுவதை விட அதை செயல்படுத்துவோம்.
 

திங்கள், 25 ஜனவரி, 2021

இறைவனின் திருவுளம். முன்னுரை (26.1.2021)

எது இறை திருவுளம்? 
விடிந்தால் நமது நாடு குடியரசு பெற்று 71 ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த 71 ஆண்டுகளில் சட்டத்தின் பெயரால் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா? அல்லது சட்டத்தால் மக்கள் நசுக்கப்படுகிறார்களா? என்ற கேள்வியை எழுப்பும் போது, இன்று நடந்து கொண்டிருக்கக் கூடிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மக்களின் போராட்டம் தான் நினைவுக்கு வருகிறது.  சட்டம் என்பது மனிதனை நல்வழிப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று சட்டங்கள் மனித வாழ்வை அழிக்க கூடியதாக மாறிக்கொண்டே வருகிறது. சட்டங்கள் அனைத்துமே மறு ஆய்வு செய்யப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால் மறு ஆய்வு செய்கின்றேன் என்ற பெயரில் சட்டத்தால் மக்களை நசுக்கும் சூழல் இன்று அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழல்களுக்கு மத்தியில் 71 ஆண்டுகளை நிறைவு செய்து நாம் இன்று நமது நாட்டின் குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம்.  இந்த வேளையில் இன்றைய நற்செய்தி வாசகமும் இன்றைய முதல் வாசகமும் இறை திருவுளத்தை நிறைவேற்ற நமக்கு அழைப்பு தருகின்றன. இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவது மட்டுமே நம் ஒவ்வொருவரின் பணி. சட்டங்கள் அனைத்தும் இறைவனது திருவுளத்தை நிறைவேற்றக் கூடிய வகையில் அமைந்திட வேண்டும். ஆனால் இன்று சட்டங்கள் மக்களை நசுக்குகின்றன. இந்த கடுமையான சட்டங்களிலிருந்து விடுதலை பெற்று, சட்டம் அது மனிதனுக்காகத் தான் ; சட்டத்திற்காக மனிதன் அல்ல என்பதை உணர்ந்தவர்களாய் அன்று சட்டத்தால் அடிமைப்பட்ட மக்களுக்காக இயேசு குரல் கொடுத்தது போல, நாம் இன்று வாழக்கூடிய இச்சமூகத்தில் சட்டங்களால் நசுக்கப்படக் கூடியவர்களுக்கு துணை நிற்க இறையருளை வேண்டுவோம். இதுவே இறைவனின் திருவுளம். இந்த திருவுளத்தை நிறைவேற்றக் கூடிய நல்ல மனிதர்களாக நாம் உருவாகிட இறை அருளை வேண்டி இணைந்து ஜெபிப்போம் இந்த திருப்பலியில்.

இதோ வருகின்றேன்! (26.1.2021)

இதோ வருகின்றேன்!
 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
         
                       இன்றைய முதல் வாசகத்தில் "இதோ வருகின்றேன்" என்ற இறைவார்த்தை மையப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆலயத்தில் பலி செலுத்த வருகின்ற பொழுது, தான் செய்த பாவத்தை நினைத்து மனம் வருந்தி பலி செலுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு அல்லாது, வெறுமனே விலங்குகளின் இரத்தத்தை பலியிடுவது என்பது மக்களின் பாவங்களை போக்க இயலாததாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் மீண்டும் பாவம் போக்கும் பலியை நாம் செலுத்த வேண்டும் என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையின் வழியாக,  ஒரே முறையாக  அவர் சிந்திய ரத்தத்தின் வழியாக, நம்மை ஒவ்வொரு நாளும் மீட்கிறார், தூய்மைப்படுத்துகிறார். இதற்காகவே தனது உடலை இறைவனிடம் கையளித்ததாக முதல் வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து குறிப்பிடுகின்றார். 

                    இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஆண்டவர் தன்னுடைய இறையரசு அறிவிப்பு பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறார். ஆண்டவர், தந்தை தம்மிடம் ஒப்படைத்த பணிகளை இம்மண்ணுலகில் ஆற்றுகிறார். மக்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைப்பதின் வழியாக இறையரசு பணியை ஆர்வத்தோடு செய்து கொண்டிருக்கிறார். 
                    அப்போது ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி பணிக்கு இடையூறு விளைவிக்கும் வண்ணமாக ஆண்டவர் இயேசு மதிமயங்கி இருக்கிறார் என்று சலசலப்பான பேச்சு அங்கு நிலவிக் கொண்டிருந்தது. இதனை செவியுற்ற ஆண்டவர் இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தவர்களாய், ஆண்டவர் இயேசுவிடம் "இதோ வருகிறேன்" என்று ஓடோடிச் சென்று அவரை வதந்திகளில் இருந்து காப்பாற்ற வேண்டும் என விரும்பினார்கள். ஆண்டவர் இயேசுவிடம் வந்தார்கள். 
                    அங்கு கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் ஒருவரை மட்டும் ஆளனுப்பி ஆண்டவர் இயேசுவை அவ்விடத்தை விட்டு வெளியே வருமாறு அழைக்கிறார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ, "இதோ வருகிறேன்" என்று சொல்லி அவர்களோடு சென்றுவிடவில்லை. மாறாக தந்தை இறைவன் தனக்கு பணித்த இறையாட்சிப் பணியை எளிய மக்கள் மத்தியில் ஆற்றிக் கொண்டிருக்கிறார்.
                    மேலும் தன்னை சுற்றியிருந்து இறை வார்த்தைக்கு செவி கொடுத்துக் கொண்டிருந்த மக்களை பார்த்து, "இவர்களே என் தாயும் சகோதரர்களும்" என்று கூறுகிறார். ஏனென்றால் அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும், "இதோ வருகிறேன்" என்று சொன்னவர்களாய் இறைவார்த்தைக்கு செவி கொடுக்க ஆண்டவர் இயேசுவை தேடி வந்தவர்கள். 
ஆண்டவர் இயேசுவின் தாய் அன்னை மரியாவோ, கபிரியேல் வானதூதரிடமிருந்து இறைச் செய்தியை கேட்ட பொழுது, உடனே, "நான் ஆண்டவரின் அடிமை. உமது சொற்படியே எனக்கு ஆகட்டும்" இதோ ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்ற வருகிறேன்!  என்று கூறியதோடு மட்டுமல்லாது அதனை உடனடியாக தனது வாழ்வில் செயல்படுத்தியவர். இவ்வாறு இதோ வருகிறேன் என்ற அர்ப்பண வார்த்தைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் நம் அன்னை மரியாள். எனவே தான் நம் அன்னை மரியாள் உலகத்தில் உள்ள எல்லோருக்கும் தாயாக சிலுவையின் அடியில் நமக்கு கொடையாக கொடுக்கப்பட்டார். 
         இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் நாமும் பல நேரங்களில் ஆண்டவர் இயேசுவைத் தேடுகிறோம். அந்தத் தேடலில் உண்மை இருக்கிறதா? ஆர்வம் இருக்கிறதா? மகிழ்ச்சி பிறக்கிறதா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.
                இயேசுவைத் தேடிச் செல்கின்ற நமக்கும் இறையாட்சிப் பணிக்கான அழைப்பை ஆண்டவர் இயேசு வழங்குகின்றார். நம்மில் எத்தனை பேர், "இதோ வருகிறேன்" என்று கூறி, ஆண்டவரின் குரலுக்கு செவி கொடுக்கிறோம் என சிந்திப்போம். 
               ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் வார்த்தைக்கு செவி கொடுத்தவர்களாக வாழ்ந்து, "இதோ வருகிறேன்" என்று கூறி, தூய்மையான உள்ளத்தோடு ஆண்டவரை தேடக்கூடியவர்களாய் நாம் ஆலயத்திற்குச் செல்ல இன்றைய நாளில் உறுதி ஏற்போம். ஆண்டவரின் ஆலயத்தில் ஆண்டவரை சந்தித்து,  அவரில் உண்மையைக் கண்டு உணர்வோம். நம்மையும் உண்மையின் பாதையில் அர்ப்பணித்து ஆண்டவர் இயேசுவின் அன்பு பிள்ளைகளாக அவரின் இறைபணியில் இணைந்திடுவோம்.

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

கடவுள் மீது தான் ஆர்வம் கொண்டிருந்தேன்! (25.1.2021)

கடவுள் மீது தான் ஆர்வம் கொண்டிருந்தேன்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்று நாம் நமது தாய்த்திரு அவையோடு இணைந்து பவுலின் மனமாற்ற விழாவினை சிறப்பித்துக் கொண்டிருக்கிறோம்.  

இன்றைய நாளின் முதல் வாசகத்தில் பவுல், தான் தனது கடந்த கால வாழ்க்கையில் கற்றிருந்த கடவுளின் நெறியையும், தன்னை சந்தித்து தடுத்தாட்கொண்ட இயேசு ஆண்டவரின் வழியாக, தன்னுடைய பழைய வாழ்க்கை நிலையின் ஓட்டத்தின் மத்தியில், ஆண்டவர் இயேசுவின் ஒளியை அவர் பெற்றதையும், அதன் வழியாக அவர் அடைந்த மன மாற்றத்தையும், நமக்கு எடுத்துரைக்கிறார். 

எந்த இயேசுவின் பெயரை அறிக்கை இடுபவர்களையும், அந்த இயேசுவின் பெயரால் ஒன்றிணைந்தவர்களையும் தேடித் தேடிச் சென்று கொன்று குவித்தாரோ, அந்த இயேசுவின் பெயரை இதயத்தில் சுமந்தவராய், பல கடல்கள் தாண்டி நாடு நாடாகச் சென்றும், வீதிவீதியாக சென்றும், அந்த இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து,  பலரை அந்த இயேசுவின் பெயரில் ஒருங்கிணைக்கக்கூடிய பணியினை செய்ததைத்தான் இன்றைய முதல் வாசகத்தில்  நாம் வாசிக்க கேட்கின்றோம். 
ஒரு தாய் தனது மூன்று வயது மகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.
  அப்போது அக்குழந்தை கூடையில் இருந்த ஆப்பிள் பழங்களை உண்பதற்காக கையில் எடுத்தது. வலது கையில் ஒன்றும், இடது கையில் மற்றொன்றுமாக அதனை சாப்பிடுவது என்று பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது அந்தத் தாய், "எனக்கு ஒரு ஆப்பிள் தருவாயா?" என்று ஆவலோடு கேட்டாள். உடனே அக்குழந்தையை வேகமாக தன் வலது கையிலிருந்த ஆப்பிளை கடித்தது. அதைக் கண்ணுற்ற தாய்க்கு மனதில் வருத்தம். கணக்குக் கேட்ட உடனேயே தன்னிடமுள்ள குழந்தை  தனது ஆப்பிளை கடித்து விட்டதே என்று எண்ணி மனம் வருந்தினாள். மீண்டுமாக மற்றொரு ஆப்பிளையும் அந்த குழந்தை கடித்தது.  இப்போது தாய்க்கு கோபமும் வருத்தமும் உள்ளத்தில் சேர்ந்து கொண்டன. சற்று நேரத்தில்  அக்குழந்தை தாயிடம் வந்து, தனது கையில் இருந்த ஒரு ஆப்பிளை கொடுத்து‌, அம்மா இந்த ஆப்பிள் தான் மிகவும் சுவையாக உள்ளது. இதனை சாப்பிடுங்கள் என்று தனக்கு கிடைத்த மிக இனிமையான பழத்தை தன்னுடைய அன்னையின் உள்ளம் மகிழ்ந்திட அன்னைக்கு கொடுத்தது.  

                இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்வோர் மீட்புப் பெறுவர், பேய்களை ஓட்டுவர், புதிய மொழிகளை பேசுவர், அரும் அடையாளங்கள் செய்வர். கொடிய விஷம் கொண்ட பாம்புகளையும் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அவர்களுக்குத் தீங்கு எதுவும் நேராது. மேலும் நற்செய்தி அறிவிப்பு பணியின் வழியாக ஆண்டவரில் தம்மை இணைத்துக் கொண்டோர், தன் கைகளை உடல்நலமற்றோர் மீது வைக்க, அவர்களும் குணமடைவர், என்று நற்செய்தி அறிவிப்போருக்கும் ஆண்டவருக்கும் இடையே இருக்கும்  ஆழமான உறவின் வழியாக வெளிப்படும் அருள் வரங்களையும் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது.

ஆண்டவர் இயேசுவின் நற்செய்திப் பணியை உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் அறிவிக்க வேண்டியது நமது கடமையாகும். ஏனென்றால் அது ஆண்டவர் இயேசுவால் அவரை பின்தொடர்ந்த சீடர்களுக்கு சொல்லப்பட்டது.  இன்று நமக்கும் இதையே தான் ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நம்மிடமும் கூறுகிறார்.

இன்று அந்த இயேசுவின் சீடர்களாக, அவரை மையப்படுத்தி, நற்செய்திப் பணியை செய்பவர்களாக நாம் இவ்வுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறோம். 

ஆயினும் சில வேளைகளில் கடவுளின் மீது ஆர்வம் கொண்டிருந்த யாராக இருந்தாலும், 

கண்டிப்பாக பவுலைப்போல மனமாற்றம் கொண்டவர்களாக, உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றவும் நம்பிக்கை கொண்டவரை இயேசுவிடம் அழைத்து வரவும் நாம் இந்த மனமாற்றப் பெருவிழாவில் அழைக்கப்படுகிறோம்.   
மனமாற்றம் என்பது மனதில் இருந்தால் மட்டும் போதாது, அது நமது செயலிலும் வெளிப்படவேண்டும். பவுலைப் போல மனமாற்றம் பெற்றவர்களாக, நிழலின் பிம்பத்தையே நம்பி வாழாமல், நிஜமான இயேசுவை நம்பி வாழவும்,  இயேசுவை நம்பக்கூடியவர்களை ஒருங்கிணைத்து ஒன்று சேர்க்கவும்  அருள்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

சனி, 23 ஜனவரி, 2021

பாதையில் புது வெளிச்சம்! (24.1.2021)

பாதையில் புது வெளிச்சம்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 

ஒரு ஊரில் அன்பு என்ற ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவர் தன் பெயருக்கேற்ப அன்பான மனிதர் தான். அந்த மனிதனிடத்தில் அன்பு மட்டுமல்லாது பல தரப்பட்ட திறமைகளும் இருந்தன. எந்த வேலையை கையில் எடுத்தாலும், அவர் அதை வெற்றியுடன் நிறைவேற்றுவார்.  ஒரு நாள் அந்த மனிதர் இறந்து விட்டார். கடவுளின் திருமுன் கொண்டு வரப்பட்டார். அப்பொழுது கடவுள் அவரிடம் அங்கிருந்த ஒரு புத்தகத்தை பிரித்து படி என்று கூறினார். அதில் யார் யாருக்கெல்லாம் கடவுளைப் பிடிக்குமோ அவர்களின் பெயர்ப் பட்டியல் இருந்தது. மிகப் பெரிய புத்தகமாக இருந்ததால் அந்த புத்தகத்தை நீண்ட நேரம் வாசித்தார். அவருக்கு அறிமுகமாகியிருந்த பல்வேறு நபர்களின் பெயர்களை அந்த புத்தகத்தில் கண்டார். தன்னுடைய பெயர் அதில் எங்கு இருக்கின்றது என்று ஆவலோடு தேடினார். இறுதியில் அவரது பெயரை அவர் கண்டுபிடிக்காமலேயே அந்த புத்தகம் முடிவடைந்துவிட்டது. மிகவும் வருத்தத்தோடு அந்த புத்தகத்தை கடவுளின் முன்னிலையில் வைத்தார். "கடவுளே! நான் இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் உங்களை நான் தேடாமல் போய்விட்டேனே! என்னுடைய பெயர் இந்த புத்தகத்தில் இடம் பெறவில்லையே என்று வருத்தத்தோடு கூறினார். உடனே கடவுள் அவரை பார்த்து, சரி! உனக்கு மீண்டும் ஒரு புத்தகத்தை தருகிறேன். இந்த புத்தகத்தை நீ படி என்று கூறினார் சற்று மனதை அமைதிப்படுத்திக் கொண்டு அந்த புத்தகத்தை வாங்கிப் படித்த அந்த  அன்புக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அந்த புத்தகத்தில் முதல் பெயராக அன்புவின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருந்தது. அதை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அப்பொழுது கடவுள் கூறினார், கடவுளை விரும்பியவர்களின் புத்தகத்தில் உன்னுடைய பெயர் இல்லையே என்று வருத்தப்பட்டாய். ஆனால் கடவுள் விரும்பிய, கடவுளுக்கு பிடித்த நபர்களின் புத்தகத்தின் பட்டியலில் உனது பெயர் தான் முதலில் பொறிக்கப்பட்டுள்ளது. நீ எனக்கு உரியவன். உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்று கடவுள் மகிழ்ச்சியோடு அன்பை பார்த்து கூறினார்.

ஆம், அன்புக்குரியவர்களே! இன்றைய வாசகங்கள் அனைத்தும் கடவுளுக்கு பிடித்தமான ஒரு நபராக நாம் வாழ்ந்திட நமக்கு அழைப்பு தருகின்றன. 
இன்றைய முதல் வாசகத்தில் நினிவே நகர மக்கள் தன் விருப்பம் போல வாழ்ந்து பாவ வழியில் செல்வதை கண்ணுற்ற ஆண்டவர், இறைவாக்கினர் யோனாவை அனுப்பி அவர் வழியாக அந்த மக்கள் மனம் மாற வேண்டும் என விரும்புகிறார். மனம் மாறாவிட்டால் அழிவு நேரிடும், அந்த நகரம் முழுவதும் அளிக்கப்படும் என இறைவாக்கினர் வழியாக நினிவே நகர மக்களுக்கு தன்னுடைய செய்தியை கொடுக்கின்றார். இறைவாக்கினரின் சொற்களைக் கேட்ட நினிவே நகர மக்கள் உள்ளத்தில் இறையச்சம் கொண்டவர்களாய், தம் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள, அரசன் முதல் அந்நகரில் இருக்கும் குழந்தைகள் வரை அனைவரும், ஆடு மாடு போன்ற விலங்கினங்கள் வரை, நோன்பிருந்து ஆண்டவரை நோக்கி மனம் மாறியதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது.

          இன்றைய இரண்டாம் வாசகம் நாம் வாழும் காலம் மிகவும் குறுகியது என்று கூறுகிறது.  எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும், வளமையிலும் வாழத் தெரியும் என்று கூறுகின்ற புனித பவுல் அடிகளாரைப் போல நாமும் வாழ்ந்திட, எல்லா சூழ்நிலையிலும் எத்தகைய மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றிட இன்றைய இரண்டாம் வாசகம் நம்மை அழைக்கிறது.  மேலும் நமது சூழ்நிலைகள் எத்தகையதாக இருந்தாலும் நாம் இறைவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு அழைப்பு தருகின்றது.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் இயேசு தன்னுடைய இறையாட்சி பணிக்கு தன்னோடு இணைந்து உழைக்க சீடர்களை அழைக்கின்றார். ஆண்டவர் இயேசுவால் அழைக்கப்பட்ட சீடர்கள், அன்றைய தினத்தில் ஆண்டவர் அவர்களை சந்திக்கும் முன்பு வரை கடலோடும் அலையோடும் வலையோடும் பின்னிப் பிணைந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் "என் பின்னே வாருங்கள்" என்ற ஆண்டவரின் வார்த்தையைக் கேட்ட உடனேயே தன்னுடைய வலைகளையும் படகையும் தந்தையையும் கூட விட்டுவிட்டு தான் இத்தனை நாட்களாக வாழ்ந்திருந்த குடும்பத்தையும் தன்னுடைய தொழிலையும் விட்டுவிட்டு ஆண்டவரோடு செல்லக் கூடியவர்களாக தங்கள் வாழ்வை மாற்றிக் கொண்டார்கள். 
              இன்றைய நாளில் இறைவாக்கினர் யோனாவைப் போலவும், இயேசுவால் அழைப்பு பெற்ற சீடர்களை போலவும் இன்றைய வாசகங்கள் வழியாக ஆண்டவர் நம்மை அழைக்கின்றார். நமது உழைப்பையும் தொழிலையும் விட்டுவிட அல்ல, மாறாக நம்முடைய பொறாமை குணத்தையும், மற்றவரை தாழ்வாக நினைக்கின்ற ஏளனப் பார்வையையும் மாற்றிக் கொள்ள அழைப்பு தருகின்றார். எவ்வளவுதான் செல்வங்கள் பெற்றிருந்தாலும் ஒரு ஏழைக்கு இரங்காத மனநிலையை மாற்றிக் கொண்டு, நாம் செய்யும் சிறு பகிர்வின் மூலமாக ஒரு ஏழையின் குடும்பத்தில் ஒளி ஏற்ற நமக்கு அழைப்பு தருகின்றார்.  மற்றவரோடு போட்டிபோட்டுக்கொண்டு, உழைப்பதற்கு கணக்குப் பார்த்துக் கொண்டு, நம்மை சோம்பேறிகள் ஆக்கிக் கொண்டிருக்கும் மனநிலையை மாற்றி நமது கடமைகளை சுறுசுறுப்போடும் புத்துணர்வோடும் உற்சாகத்தோடும் ஆற்றிட இன்றைய நாளில் நமக்கு அழைப்பு தருகின்றார். எனது கவலை தான் பெரிது, எனது வேதனைகள் யாருக்குமே இல்லை, என்னைப் போல துன்பப்படக்கூடியவர் யாருமே இல்லை என்று தன் மீதே கழிவிரக்கம் கொள்கின்ற தாழ்நிலையை மாற்றி, சந்திக்கும் அனைவரிடத்திலும் புன்னகை மணம் பரப்ப, செல்கின்ற இடமெல்லாம் சிறு புன்னகையின் வழியாக நன்மைகளை செய்திட நாமும் சிறு தூண்டுகோலாய் விளங்கிட நமக்கு அழைப்பு தருகின்றார். நமது குடும்பத்தில் உடல் நலமற்றிருக்கும் பெற்றோரையும் பெரியோரையும் கவனித்துக் கொள்வதன் வழியாக ஆண்டவர் இயேசுவுக்கு ஒரு சிறு பரிசினை நாம் அன்போடு வழங்கிட நமக்கு அழைப்பு தருகின்றார். இவ்வாறாக நமது செயல்களை பரந்த மனப்பான்மையோடு, அன்பை அடித்தளமாகக் கொண்டு, அருளின் பணியாளர்களாக, செல்கின்ற இடமெல்லாம் இறையருளை விதைத்துச் சென்றிட,  ஆண்டவர் இயேசுவுக்கு பிடித்தமானவர்களின் பெயர் புத்தகத்தின் பட்டியலில் நமது பெயரும் இணைக்கப்பட நமது வாழ்வை மாற்றிக் கொள்வோமா இன்று!

வெள்ளி, 22 ஜனவரி, 2021

அவமானப்பட்டவர்கள் தான் அதிகமாக சாதிக்கிறார்கள்! (23.1.2021)

அவமானப்பட்டவர்கள் தான் அதிகமாக சாதிக்கிறார்கள்!
 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மதிமயங்கி இருக்கிறார் என மக்கள் பேசிக் கொண்டார்கள் எனக் கூறி, அவரது உறவினர்கள் அவரைப் பிடித்து வருவதற்கு ஆள் அனுப்புகிறார்கள். இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் இது போன்ற நிகழ்வுகளை நாமும் சந்தித்து இருக்கக்கூடும். இந்த உலகத்தில் நாம் நலமான பணிகளை முன்னெடுக்கும் போதும், நேர்மையாகச் செயல்படும் போதும், உண்மையை பேசும் போதும், பல நேரங்களில் நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நம்மைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். இவர்கள் பேசுவது போதாதென்று நம்மோடு உடன் இருக்க வேண்டிய உறவினர்கள் கூட, அவர்களின் பேச்சுக்கு அஞ்சியும் அவர்கள் பேச்சை நம்பியும்,  நம்மை ஏளனப்படுத்துவார்கள்.

 ஆனால், இன்றைய நற்செய்தி வாசகத்தில் இத்தகைய சூழலைத் தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அடைகிறார்.  ஆனால் இயேசு தனது பணியை நிறுத்திக் கொள்ளவில்லை. நாளுக்கு நாள் அதிகமாக மக்கள் வந்து கொண்டே இருந்தார்கள். அவரைத் தொட வேண்டும், அவரை சந்திக்க வேண்டும் என அவரிடம் வந்து கொண்டே இருந்தார்கள். தம்மிடம் வந்தவர்களுக்கெல்லாம் உணவு கூட அருந்த நேரமில்லாத அளவுக்கு பணியாற்றிக் கொண்டிருந்தார் இயேசு. இதுதான் இன்றைய வாழ்வில் நமக்கு இறைவன் இன்றைய நாள் வாசகங்கள் வழியாக தரக்கூடிய செய்தியாக உள்ளது. நாம் நமது வாழ்வில் நலமான பணிகளை நல்ல செயலை முன்னெடுக்கும் பொழுது, எதிர் வரக்கூடிய இடர்பாடுகளை எல்லாம் கண்டு அஞ்சி விடாமல் விமர்சனங்களை கண்டு பின்வாங்கி விடாமல், எப்போதும் தொடர்ந்து முயல வேண்டும் என்ற செய்தியினை இன்றைய வாசகம் நமக்கு தருகிறது. உண்மையைவிட பரபரப்பானது பொய் என்று கூறுவார்கள். பல நேரங்களில் பலர் பலவற்றை உரைத்தாலும், நம்மை பற்றி அவதூறாக உரைத்தாலும், நாம் அதற்கு செவி கொடுத்து  நாம் செய்ய வேண்டிய நல்ல செயல்களை செய்யாமல் இருக்காமல், தொடர்ந்து இயேசுவைப்போல நலமான பணிகளைச் செய்ய நாம் அழைக்கப்படுகிறோம். இது தான் இன்றைய முதல் வாசகத்தின் வழியாக நமக்கு விளக்கப்படுகிறது. நம் அனைவருடைய பாவத்திற்காகவும் ஒரே ஒரு செம்மறி ஆடாகிய இயேசு கிறிஸ்து பலியானார். கல்வாரியில் அவர் சிந்திய இரத்தத்தின் வழியாக நாம் அனைவரும் மீட்பு பெற்றோம். அவர் இரக்கம் கொண்டவர். நாம் நம்முடைய தவறான செயல்பாடுகளிலிருந்து மனம் வருந்தி, மாற்றத்தை முன்னெடுத்தவர்களாய் அதை நோக்கிச் செல்லும் பொழுது, அவர் இரக்கத்தோடு நம்மை அரவணைக்கக்கூடிய ஒரு நல்ல தகப்பனாக இருந்து கொண்டிருக்கிறார்.
  இந்த இயேசு தனது வாழ்வில் தன்னைச் சுற்றியிருந்த இடர்பாடுகளையும் தன்னைச் சுற்றியிருந்த குற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்தோடு பயணித்தவர்களையும் கண்டு அஞ்சாது தொடர்ந்து நலமான நல்ல இறையாட்சிப் பணியை செய்து கொண்டே சென்றது போல, நாம் ஒவ்வொருவரும் செய்வதற்கு இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.  அரசியல் உரைக்கு கூடக்கூடிய கூட்டங்கள், இன்று ஆன்மீக உரைக்கு கூடுவதில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை தான்.

 ஆனால் இன்றைய நாளில் நாம் ஆண்டவர் இயேசு நமக்கு தரக்கூடிய இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொண்டு பயணிக்கும் போது, நாம் சாதிக்கக்கூடியவர்களாக மாறுகிறோம். இந்த சமூகத்தில் பலவிதமான அவமானங்களை சந்தித்த காந்தியடிகள், அம்பேத்கர் இவர்களெல்லாம் அவமானப்பட்டவர்கள் தான். ஆனால், அதிகமாக சாதித்தவர்கள். அவமானங்களையும் பிறருடைய விமர்சனங்களையும் கண்டு அஞ்சி, உங்கள் நல்ல செயல்களை நீங்கள் மாற்றிக் கொள்ளாமல், இயேசுவை மனதில் கொண்டு, இயேசுவைப் போல, சுற்றி இருப்பவர்கள் உங்கள் மீது குறை காண வேண்டும் என்ற நோக்கத்தோடு உங்களைப் பின்தொடர்ந்தாலும், உங்கள் செயல்களை குற்றம் சாட்டிக் கொண்டே இருந்தாலும், அதற்கெல்லாம் செவி கொடுக்காது, ஆண்டவர் இயேசுவை மனதில் கொண்டு, அவரைப்போல  அடுத்தவருக்கு நலம் தர கூடிய நல்ல பணிகளை முன்னெடுக்கக் கூடியவர்களாக உருவாகிட இறையருளை வேண்டி இணைந்து இயேசுவின் பாதையில் பயணம் செய்வோம்.

வியாழன், 21 ஜனவரி, 2021

வாக்குறுதிகள் வாழ்வாக வேண்டும்! (22.1.2021)

வாக்குறுதிகள் வாழ்வாக வேண்டும்!
 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 

                         ஒரு குடும்பத்தில் நீண்ட காலமாக இவ்வாறு ஒரு பழக்கம் இருந்தது. அந்த குடும்பத்தில் பிறக்கக்கூடிய முதல் குழந்தைக்கு அதன் தந்தை அக்குழந்தை விரும்பக் கூடிய ஒரு காரினை அந்தக் குழந்தையின் இருபதாவது வயதில் பரிசாகத் தர வேண்டும். அக்குடும்பத்தில் பிறந்த ராஜாவுக்கு தற்பொழுது வயது 20 ஆகப்போகிறது. மூன்று வாரங்களுக்கு முன்பாக தந்தையும் ராஜாவும் கார் விற்பனை செய்யக்கூடிய கடைக்குச் சென்றார்கள். தந்தை கடைக்காரரிடம் சொல்லி, ராஜா விரும்பக்கூடிய காரினை பார்த்து, அதன் விலையைக் கேட்டு குறித்துக் கொண்டார். மூன்று வாரங்களுக்குப் பிறகு ராஜாவின் பிறந்த நாளும் வந்தது. அப்பொழுது தந்தை தனக்கு பரிசாகத் தரப் போகின்ற காரினை எண்ணிக்கொண்டிருந்தவனாய் ராஜா மகிழ்ச்சியோடு இருந்தான். அப்போது அங்கு வந்த தந்தை ஒரு கனமான பொருளை அவனிடம் பரிசாகக் கொடுத்தார். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. வழக்கமாக கார் சாவியை ஒரு சிறிய பெட்டியில் அல்லவா வைத்து தருவார்கள்!  இது ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைத்த அவன், அந்த பரிசுப் பொருளை வாங்கி பிரித்தான். உள்ளே விவிலியம் ஒன்று இருந்தது. கோபத்தில் அதனை மூலையில் தூக்கி எறிந்தவனாய் உடனே தன்னுடைய துணிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு தன்னுடைய தாயின் சொல்லுக்கும் செவி கொடுக்காமல் விரைவாக வீட்டை விட்டு வெளியேறி, தன்னுடைய உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றான். அங்கு சில நாட்கள் தங்கியிருந்து, ஒரு வேலையில் சேர்ந்தான். தந்தை தனக்கு தருவதாக சொல்லிய காரினை பரிசாக தரவில்லையே என்று கோபத்துடன் அவன் வீட்டிற்கு வர மறுத்துவிட்டான். சில ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் அவனது தந்தை இறந்துவிட்டார் என்று செய்தியை கேட்டு தந்தையின் முகத்தை இறுதியாக பார்ப்பதற்காக ஓடோடி வந்தான். தந்தையை பார்த்து கதறி அழுதான். அடக்கச் சடங்குகள் எல்லாம் முடிந்த பின்பு, சற்று நிதானமாக, மனம் அமைதி அடைந்த பின்பு, தன்னுடைய அறைக்குச் சென்று கதவைத் திறந்தவன், அன்று தான் கோபத்தில் வீசிய அந்த விவிலியத்தின் அருகில் கிடந்த ரிப்பன் கட்டப்பட்ட ஒரு சாவியையும் கண்டான். தந்தையின் வாக்குறுதியை அன்று அவன் உணர்ந்து கொண்டவனாய், தந்தையின் வாக்கு மாறாத அன்பை நினைத்து அவனது கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது.

ஆம்! அன்புக்குரியவர்களே!இன்றைய முதல் வாசகமானது கடவுளோடு நாம் கொண்டிருக்கக்கூடிய வாக்குறுதியையும் அவ்வாக்குறுதியினால் நிலை நிறுத்தப்படக்கூடிய உடன்படிக்கையையும் பற்றி  எடுத்துரைக்கின்றது. பொதுவாகவே மனித வாழ்வில் வாக்குறுதிகளுக்கு பஞ்சம் இருப்பதில்லை. பல நேரங்களில் நாம் நமது வாழ்வில் வாக்குறுதிகள் கொடுக்கிறோம். மகிழ்ச்சியில், துக்கத்தில் என பல நேரங்களில் நாம் வாக்குறுதிகளை கொடுக்கிறோம். வாக்குறுதிகள்  கொடுப்பதில் எந்த வித தவறும் இல்லை. கொடுத்த வாக்கை பின்பற்றி இறுதி வரை நிலைத்திருப்பதில் தான் மகத்துவம் அடங்கியிருக்கிறது. ஆனால், பொதுவாகவே, கொடுத்த வாக்கை இறுதி வரை காப்பாற்றக் கொண்டிருக்க கூடிய மனிதர்கள் இவ்வுலகத்தில் மிகவும் குறைவு.


இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசு தன்னுடைய சீடர்களை, தாம் விரும்பியவர்களை எல்லாம் நம்மிடம் அழைத்து நற்செய்தி அறிவிக்கவும், பேய்களை ஓட்டவும் பலவிதமான அருள் அடையாளங்களை செய்வதற்கான வல்லமையையும் தன் சீடர்களுக்கு கொடுத்தார். அவர்கள் இறுதி வரை அவரோடு இருந்து பயணிப்பார்கள் என நம்பினார். ஆனால் அவர்களும் அவரை மறுதலித்தார்கள். அவரை விட்டு விட்டு ஓடினார்கள். இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கக் கேட்டது போல,  இஸ்ரயேல் மக்களோடு இறைவன் உடன்படிக்கை செய்திருந்தார். நீங்கள் என் மக்கள். நான் உங்கள் கடவுள் என்று. ஆனால் பல நேரங்களில் அந்த மக்கள் கடவுளை மறந்து விட்டு, தாங்கள் விரும்பிய பாதையில் சென்றார்கள். தாங்கள் விரும்பிய பாதையில் சென்று தவறிழைத்தோம் என்பதை உணர்ந்து கொண்ட போது, மீண்டும் இறைவனிடம் திரும்பி வந்தார்கள். வாக்குறுதியை புதுப்பித்தார்கள். மீண்டும் இறைவனது அன்பில் நிலைத்திருந்தார்கள்.  இன்னும் சில காலம் கழிந்த பிறகு மீண்டும் வாக்குறுதியில் இருந்து விலகி ஓடினார்கள். பொதுவாகவே நமது நெஞ்சத்திற்கு நெருக்கமானவர்கள் தான், கொடுத்த வாக்கை மீறி செயல்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இன்றைய வாசகப் பகுதியானது நாம் வாக்கு கொடுக்கின்றோம் என்றால் அந்த வாக்குறுதியில் இறுதி வரை  நிலைத்திருக்க நமக்கு அழைப்பு தருகின்றன.
 ஆம்! அன்புக்குரியவர்களே! சபை உரையாளர் புத்தகம் கூறுகிறது, கடவுளின் முன்னிலையில் சிந்தித்துப் பாராமல் எதையும் பேசாதே. வாக்குக் கொடுக்காதே. அப்படி கொடுத்தால் கொடுத்த வாக்கை நிறைவேற்று. கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் போவதைவிட வாக்கு கொடுக்காமல் இருப்பதே நலம் என சபை உரையாளர் புத்தகம் அதிகாரம் 5,  இறைவசனம் 2 கூறுகிறது.

 நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில், பல நேரங்களில் பலர், பலரிடம், பலவற்றுக்காக வாக்கு கொடுக்கின்றோம். கொடுத்த வாக்கை இறுதிவரை பிடித்துக்கொண்டிருந்தோமா? என சிந்தித்துப் பார்ப்போம். சில வேளைகளில் நாம் கொடுத்த வாக்கை பிடித்துக் கொண்டிருப்பதால், ஒருவேளை நம்மை சுற்றி வாழ்பவர்களுக்கு அதனால் தீங்கு ஏற்படுமாயின், அதனை நலம் பயக்கும் வாக்குறுதியாக மாற்றிக் கொள்ள நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.  ஒருவேளை  சமூகத்தின் நன்மைக்காக,  அடுத்தவரின் நலனுக்காக, கொடுத்த வாக்கிலிருந்து நாம் பின்வாங்குகிறோம் என்றால், அதனை சமூகத்திற்கு பயன் தரக்கூடிய வகையில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறது மகாபாரதம். ஆம்! பீஷ்மர் தன்னுடைய தந்தையின் சுகத்திற்காக தான் அரியணை ஏற போவதில்லை என சபதம் எடுக்கிறார். வாக்கு கொடுக்கின்றார். கொடுத்த வாக்கை இறுதிவரை காத்து நிற்கின்றார்.  ஆனால் இவர் தான் கொடுத்த வாக்கை நீதிக்காக, சமூகத்தில் தர்மம் நிலைக்க வேண்டும் என்பதற்காக மாற்றிக் கொள்ளாததன் விளைவாகத்தான் அஸ்த்தினாபுரம் என்ற ஊரிலே அனேக அநீதிகள் நிகழ்ந்தது என மகாபாரதத்தின் கதாநாயகனாகிய கிருஷ்ணன் விளக்கிக் கூறுகிறார், யுத்த களத்தில் நின்ற வண்ணம். இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் பல நேரங்களில் கொடுத்த வாக்கை நாம்  இன்றைய நாளில் நினைத்துப் பார்ப்போம். கடவுளின் முன்னிலையில் சிந்தித்து செயல்படுவோம். தேவையான இடங்களில் வாக்குறுதிகளை கொடுப்போம். வாக்கு கொடுத்தால் அதனை செயலாக்குவோம். பெயரளவிற்கு வாக்கு கொடுத்து விட்டுச் செல்லாமல் கொடுக்கக்கூடிய வார்த்தைகளை இறுதிவரை உறுதியாக இருந்து வாழ்வாக்குவோம்.  ஒருவேளை அநீதியை தடுக்க வேண்டும் என்ற சூழலில் மட்டும் கொடுத்த வாக்கினை மறுபரிசீலனை செய்வோம். வாக்குறுதிகள் கொடுப்பதை பற்றியும் வாக்குறுதிகள் பெற்றுக் கொள்வதை பற்றியும்,  கொடுத்த வாக்கை மீறிய நமது செயல்பாடுகளையும் இன்றைய நாளில் சீர்தூக்கிப் பார்த்து நம்மை நாம் சரி செய்து கொண்டு கொடுத்த வாக்கை செயல்படுத்தக் கூடியவர்களாக,  வெறுமனே பேசுபவர்களாக மட்டுமல்லாமல், செயலில் காட்ட கூடியவர்களாக உருமாற இறையருள் வேண்டி, இணைந்து செபிப்போம்.


புதன், 20 ஜனவரி, 2021

உங்களைப் பின்தொடர்வது யார்? (21.1.2021)

உங்களைப் பின்தொடர்வது யார்?
"தலைவனாக இரு. 
இல்லையேல்,...
தலைவனோடு இரு"  

என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, இன்று பலரும் பலரை பின்தொடர்கின்றனர்.  பஞ்சாயத்துக்கு பஞ்சமில்லாத நமது நாட்டில், இன்று நாளுக்கு நாள் ஒரு தலைவன், ஒரு புதிய கட்சி, ஒரு புதிய குரு என உதயமாகிக் கொண்டே உள்ளனர். 

இப்படிப்பட்ட இச்சூழலில் இன்றைய முதல் வாசகமானது ஒரு நல்ல குரு அல்லது ஒரு நல்ல தலைவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதனை சுட்டிக்காட்டும் வகையில்  இயேசுவை ஒரு நல்ல தலைவராகவும் குருவாகவும் சுட்டிக்காட்டி விளக்குகின்றது. இந்த இயேசுவைப் பின்பற்றி, அவரின் பாதையில், அவரது வார்த்தைகளை மையமாகக் கொண்டு வலம் வரக்கூடிய பல குருக்கள் மற்றும் இயேசுவை ஏற்றுக்கொண்ட பலரும் தாங்கள் பின் தொடரும் இயேசுவின் பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறார்களா?  என சற்று நின்று திரும்பிப் பார்க்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பலர் இயேசுவிடம் குணம் பெற வேண்டும் என்றும், அவரைத் தொட வேண்டும் என்றும், அவரைப் பின் தொடர்கின்றனர். இன்றுவரை இயேசுவின் பாதையில் பயணிக்கிறோம் எனக் கூறக்கூடிய நாம், நம்மை பின்தொடர்பவர்கள் யார்? என சிந்தித்துப் பார்ப்போம். பிறர் நம்மை பின் தொடரக் கூடிய வகையில் நமது வாழ்வு அமைந்து உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பி பார்ப்போம். திருவிவிலியத்தில் மத்தேயு நற்செய்தி 28 ஆம் அதிகாரம் 20 ஆவது வசனம் கூறுகிறது, "நான் உங்களுக்குக் கட்டளையிட்டவற்றை எல்லாம், அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்" என்ற  கடவுள், இன்று நம்மோடு உள்ளார். அவரை மனதில் கொண்டு, அவர் காட்டிய பாதையில் பாடம் கற்றவர்களாக நாம் பயணிக்க வேண்டும். அப்படி பயணிக்கும் போது, நாம் பலரும் நம்மை பின் தொடரக் கூடிய நபர்களாகிட முடியும். 

இன்று நம் தாய் திருஅவையோடு இணைந்து நினைவு கூறக் கூடிய புனிதை ஆக்னஸ் தன் வாழ்வில் கிறிஸ்து இயேசுவின் வார்த்தைகளின் படி வாழ்ந்து வந்தவர். கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையால் உரோமை தலைவனது மகனின் ஆசைக்கு இணங்க மறுத்தமையினால் வெட்டிக் கொல்லப்பட்டார். இவர் இறக்கும் முன்பு, தன்னைச் சுற்றி உள்ளவர்களை பார்த்து, எனது இரத்தத்தால் உங்களது வாளை நீங்கள் கறைப்படுத்தலாம். ஆனால் கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட எனது உடலை  யாரும் கறைப்படுத்த  முடியாது எனக் கூறி, இறப்புக்கு தயார் ஆனாள். ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளுக்கு  ஏற்ப வாழும் போது, நமது வாழ்வும் புனித ஆக்னஸைப் போல, பிறர் பின்பற்றும் வாழ்வாக மாறும்.       

"கடவுளுக்கு அஞ்சி நடப்போரை ஒருபோதும் அசைக்க இயலாது" என்ற, நீதிமொழிகள் 10ம் அதிகாரம் 30 வது வசனத்திற்கு ஏற்ப  நமது வாழ்வை அமைத்து, பிறர் பின் தொடரக் கூடிய வாழ்வாக நமது வாழ்வை மாற்றிட இயேசுவின் பாதையில் நாம் அவரைப் பின் தொடர்ந்து பயணிப்போம்.

செவ்வாய், 19 ஜனவரி, 2021

அவர்கள் பேசாது இருந்தார்கள். நீங்கள் எப்படி? (20.1.2021)

அவர்கள் பேசாது இருந்தார்கள்.    நீங்கள் எப்படி?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டை ஒரு வயதான தகப்பனும், அவனுடைய பத்து வயது மகனும் கடக்க வேண்டிய சூழ்நிலை. கல்லும் முள்ளும் நிறைந்த பாதை. பாவம்! அந்த சிறுவனால் நடக்க முடியவில்லை. அந்த மகனை தூக்கிக்கொண்டு நடக்க முடியாத சூழ்நிலை தகப்பனுக்கு. இருப்பினும், தன் மகனுக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என விரும்பினார், அந்த நல்ல தகப்பன். அவருடைய சிந்தனைச் சக்கரம் சுழலத் துவங்கியது. செயல்வடிவம் பிறந்தது. கல்லும் முள்ளும் நிறைந்த இடத்தில் தனது கால்களை பதித்து, கல்லையும் முள்ளையும் தனது கால்களால் அகற்றி, மகனே நான் முன்னே நடக்கிறேன். நான் காலடி வைத்த இடத்தில் உனது அடியை வைத்து வா என்றார். மகன் தகப்பன் சொன்னது போலச் செய்ய, அவன் பயணம் சுகமானது. இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில், ஒருவரின் துன்பத்திற்கு பின்னால்தான் மற்றவரின் இன்பம் மறைந்திருக்கிறது. நமது குடும்பங்களில், நமது பெற்றோரின் துன்பத்திற்கும் தியாகத்திற்கும் பின்னால்தான் குழந்தைகளின் இன்பம் மறைந்திருக்கிறது. 

                   இவ்வாறாக இவ்வுலகில் அனைவரும் அனைத்திற்கும் மற்றவரை சார்ந்தவராக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.   ஒரு குழந்தை இம்மண்ணுலகில் தாயின் வயிற்றில் இருந்து தானாகவே பிறக்கும் பொழுது கூட, அது மற்றவர்களால் கைகளில் ஏந்தப்படுகிறது. மற்றும் ஒருவரால் அது குளிப்பாட்டப்படுகிறது. பின்னும் ஒருவரால் அது தாயின் அருகில் வைக்கப்படுகிறது. அந்த குழந்தை வளர்ந்து வருகின்ற காலகட்டத்தில் தந்தையின் கரங்களைப் பற்றிக்கொண்டு நடக்க ஆரம்பிக்கிறது. தாயிடம் எனக்கு உணவு வேண்டும் என்று கேட்கிறது. தாயும் அதற்கு உணவு ஊட்டுகிறார். அதற்கு நல்ல பழக்கவழக்கங்களை சொல்லிக் தருபவர்களாக அந்தக் குழந்தையின் குடும்பத்தினரும் சுற்றத்தினரும் இருக்கிறார்கள். ஆறு வயதில் பள்ளிக்குச் செல்லும் போது பல்வேறு ஆசிரியர்கள் அக்குழந்தைக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். விளையாடும்போது கூட அந்த குழந்தை தானாக விளையாடிக் கொள்ள முடியாது. அதற்கு நண்பர்கள் உதவுகிறார்கள், உடன் இருக்கிறார்கள். உடல்நிலை சரியில்லாத போது கூட மருத்துவரின் உதவியால் தன்னை சரி செய்து கொள்கிறார்கள். வயது முதிர்வின் காரணமாக தன்னால் வேலை எதுவும் செய்து கொள்ள முடியாத போதும் கூட மற்றவர்களால் கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள். இறுதியில் இறந்த பின்னும் கூட மற்றவர்களால் குளிப்பாட்டப்படுகிறார்கள், அடக்கம் செய்யப்படுகிறார்கள். மற்றவர்களின் வார்த்தையால் இவரது வாழ்க்கை அன்று பேசப்படுகின்றது. இறுதிச் சடங்கை நிறைவேற்ற அவரைத் தூக்கிச் செல்லவும் மற்ற நால்வர்  அவருக்கு உதவுகிறார்கள். 
இவ்வாறாக முதல் குளியலும் இறுதிக்குளியலும் மற்றவர்களால் நமக்கு நடத்தப்படுகிறது. 
நான் தனித்துவமானவன், மற்றவர்களிலும் உயர்ந்தவன், என்று சொல்லிக் கொள்கின்ற ஒரு மனிதனும் கூட, மற்றொரு மனிதர்களை இவ்வுலகில்  உணவிலிருந்து, உரையிலிருந்து, நடையில் இருந்து, தனது வாழ்வில் அவனது சாதனைகளின் மத்தியிலும் கூட மற்றவரை சார்ந்தே வாழ்கிறான்.
            இப்படி எல்லாமே நமக்கு மற்றவர்களால் செய்யப்படும் பொழுது, நாம் அடுத்தவர்களுக்காக வாழ கடமைப்பட்டு இருக்கிறோம். நாம் வாழும் இவ்வுலகத்தில் நமக்கு ஒரு பிரச்சனை வருகின்ற பொழுது, நமக்கு ஒரு தேவை ஏற்படுகின்ற பொழுதுமற்றவர் தமக்கு துணை நிற்க வேண்டும் நமக்கு கைகொடுத்து காப்பாற்ற வேண்டும் என மற்றவரிடம் விரும்புகிறோம், எதிர்பார்க்கிறோம். ஆனால் மற்றவரின் தேவையில் நாம் உடன் இருக்கின்றோமா என்பதை இந்நேரத்தில் சிந்தித்துப் பார்ப்போம்.

                          இன்றைய முதல் வாசகத்தில் நாம் காணும் மெல்கிசேதேக் எனும் குருவை பற்றி பார்க்கும் பொழுது, அவருக்கு தந்தை இல்லை. தாயும் இல்லை. வரலாறும் இல்லை. துவக்கமும் இல்லை முடிவும் இல்லை.  ஒரு நல்ல அரசராக, நீதியின் அரசராக, நேர்மையான ஒரு குருவாக இருக்கின்றன அவருக்கு தெளிவான, அவரைப் பற்றிய ஒரு வரலாறு இல்லை. ஆனால் அத்தகையதொரு குருவே ஆபிரகாமுக்கும் ஆசி வழங்குகின்றார். மேலும் அவரைப் போலவே மற்றவர்களும் வாழ அழைக்கப்படுகிறார்கள். அந்த குருவைப் போலவே, யார் என்று அறியப்படாத பல மக்கள் இந்த சமூகத்தில் துன்புற்று கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு துன்புறுகின்ற அவர்களுக்கு யார் என்றே தெரியாத பல நபர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
             ‌ உதாரணமாக பழங்குடியின மக்களின் விழிப்புணர்வுக்காக பணியாற்றிய இயேசு சபையைச் சார்ந்த அருட்தந்தை ஸ்டேன் அவர்களுக்கும்,  அந்த பழங்குடியின மக்களுக்கும் எந்த விதமான தொடர்பும், உறவும் கிடையாது. அவர் யார் என்று அறியாத அந்த பழங்குடியின மக்களின் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திட அந்த மக்களுக்காக உழைத்தவராக, அதனால் துன்பத்தை அனுபவிப்பவராக இன்றைய நாளில் தமது வயதான காலத்தில் அவர் துன்பகரமான சிறைவாசத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார். இன்று அவருடன் நாம் இருக்கின்றோமா? என்ற கேள்வியை நாம் எழுப்பி பார்த்தால் நாம் அவருடன் இல்லை. அவருக்காக குரல் கொடுப்பதும் இல்லை என்பதே இன்றைய நமது நிலையாகவும் நமது பதிலாக இருக்கும். 
                                 
 இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட இயேசு ஒரு கை சூம்பிய நலமற்ற ஒரு மனிதனை பார்க்கிறார். அவருக்கு உதவி செய்ய வேண்டுமென நினைக்கிறார். ஆனால் அவரை சுற்றி இருக்கின்ற கூட்டமானது அவரிடம் குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கில் பார்த்துக் கொண்டே இருக்கிறது. அக்கூட்டத்தினரை பார்த்து இயேசு, இவரை குணப்படுத்துவது முறையா? இல்லையா? என்று கேட்கிறார். இந்த ஓய்வுநாளில் நன்மை செய்வதா? தீமை செய்வதா? இன்று அவர்களை பார்த்து கேள்வி கேட்கிறார். அவர்கள் அனைவருக்கும் கேள்விகளுக்கு பதில் கூற இயலும். ஆனால் அவர்களோ பதிலேதும் பேசாது அமைதியாக இருந்தார்கள். 
                       இன்றும் கூட நமது சமூகத்தில் விவசாயிகள் 55 நாட்களுக்கும் மேலாக விவசாயத்தை மீட்டெடுக்க போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஒரு போராட்டம் நன்மையை மீட்டெடுப்பதற்கான போராட்டம் என்பதை நாம் அனைவரும் அறிந்த போதும், அதை நாம் ஆதரிக்கின்றோமா? அது நல்லதுதான் என்று சொல்கின்றோமா? அவர்களுக்கு நமது ஆதரவை தெரிவிக்கின்றோமா? அல்லது நாமும் அந்த பரிசேயர்களைப் போன்று எதுவும் கூறாது மௌனமாக  இருக்கிறோமா? 
                  ஒரு அநீதி நடக்கிறது இந்த சமூகத்தில் என்பதை நாம் பார்க்கும் பொழுது, அது அநீதி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆயினும் இங்கு நாம் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால், நமக்கு பாதிப்பு வந்துவிடுமோ என நினைத்துக் கொண்டு, அந்த அச்சத்தினால், அது நம்மை தீண்டாதவரை, நாமும் இந்த பரிசேயர்களை போன்று, அது அடுத்தவர் பிரச்சனை என்று, அடுத்தவர் நலனில் அக்கறை கொள்ளாது, வாய் பேசாத மௌனியாக இருக்கின்றோம்.
               இவ்வாறு நாம் மௌனமாக இருப்பது நல்லது தானா? இயேசு அங்கிருந்த பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின் மௌனத்தை கண்டு கோபமடைந்தார் என விவிலியம் கூறுகிறது. அவர்கள் மீது கோபமடைந்தாலும் தான் செய்ய விரும்பிய நல்ல பணியை அந்த கை சூம்பிய மனிதனுக்கு செய்துவிட்டுச் சென்றார் எனவும் நாம் விவிலியத்தில் வாசிக்கின்றோம். 
         இன்று பலரும் பல்வேறு நன்மைகளை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு நாம் துணை நிற்பது இல்லை. நாம் துணை நிற்காததன் காரணமாகவே அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். இன்னல்களை அடைந்த போதிலும், அதையும் கடந்து நீதிக்காகவும் உண்மைக்காகவும் எழுந்து சமுதாய நலன்களை மீட்டெடுக்கவும் மனம் தளராது போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
                நமது வாழ்வில், நமது பிறப்பிலிருந்து இறப்புவரை அடுத்தவர்களால் வாழ்வு பெற்றுக் கொண்டிருக்கின்ற நாம், அடுத்தவரின் துயரத்தைக் கண்டு நமது ஆதரவை வழங்கப் போகிறோமா? அல்லது, பரிசேயர் சதுசேயரைப் போன்று பேசாது இருக்கப் போகின்றோமா? 

நீங்கள் எப்படி? 
            கேள்வி உங்களிடம். விடைகளை நீங்களே எழுதிக் கொள்ளுங்கள்.

திங்கள், 18 ஜனவரி, 2021

வாக்கு மாறாத கடவுள்! (19.1.2021)

வாக்கு மாறாத கடவுள்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய வாசகங்கள் அனைத்திலும், இறைவன் வாக்கு மாறாதவர்! நம்பத்தகுந்தவர்! நிறைவை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்லக் கூடியவர்! என்ற உண்மையானது மையப்படுத்தப்பட்டுள்ளதை நாம் பார்க்கிறோம். 

                     "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை" என்ற ஒரு பாடலின் வரிகளை நாம் கேட்டிருப்போம். அப்பாடலின் கருத்தானது, நாம் நினைப்பதை எல்லாம்  தெய்வம்  நடத்தக்கூடியவர் அல்ல என்று கருத்து வலியுறுத்துகின்றது. நாமும் கூட பல நேரங்களில் கடவுளிடம் ஜெபிப்பது என்பது, நாம் கேட்பதை அவர் நிறைவேற்ற வேண்டும் என்பதாக நாம் நினைத்துக் கொள்கிறோம். நமது வாழ்வுக்கு என்று நாம் கட்டளையிடுகின்ற காரியங்களை நிறைவேற்றக் கூடியவராக கடவுள் இருந்தால், நாம் நினைப்பதை செயல்படுத்தக் கூடியவராக கடவுள் இருந்தால், அவர் நல்லவர்! உண்மையானவர்! வலிமையானவர்! என்று அவரை புகழ்கின்றோம். ஆனால், நமது விருப்பங்களுக்கும், நமது எண்ணங்களுக்கும் மாறாக, நமது வாழ்க்கையும் நாம் விரும்புகிறவர்களின் வாழ்க்கையும் அமையும் பொழுது நாம் பல நேரங்களில், கடவுளுக்கு கண்கள் இல்லை, காதுகள் இல்லை.,இதயமும் இல்லை. அவர் நம்மை புரிந்து கொள்வதில்லை. நம்மை கண்டுகொள்வதில்லை என்று ஒவ்வொருவரிடமும் புலம்பிக்கொண்டே நமது வாழ்க்கையை இழுத்துச் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் இன்றைய முதல் வாசகமும், நற்செய்தி வாசகமும் நமக்கு தெளிவாக எடுத்துக் கூறுகின்றது, கடவுள் வாக்கு மாறாதவர் என்று. 

                   ஆம்! எவ்வகையில் கடவுள் வாக்கு மாறாதவர் என்று சிந்தித்து பார்க்கின்ற பொழுது, நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மேலாக நமக்கு அனைத்தையும் நிறைவேற்றக் கூடியவர் நம் ஆண்டவர். ஒரு குடும்பத்தில் பிறந்து இருக்கின்ற சிறு குழந்தைக்கு என்ன தேவை என்பதை அதனுடைய தாயும் தந்தையும் நிச்சயம் அறிந்திருப்பர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இவ்வுலக குழந்தையின் தேவையை அறிந்திருக்கின்ற இவ்வுலகப் பெற்றோர்களை விட அதி உன்னதமானவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இவர் இன்று நமக்கு கூறுகின்ற செய்தி என்னவென்றால், நம்முடைய வாழ்வு முழுவதற்குமான வாக்குறுதிகளும் திட்டங்களும் அவரது கைகளில் இருக்கின்றன. நாம் பிறப்பதற்கு முன்பே அவர் நம்மை தேர்ந்தெடுத்திருக்கிறார். நமது வாழ்வில் பல்வேறு நன்மையான காரியங்களையும் நமக்கு தேவையான காரியங்களையும் நிறைவேற்றியிருக்கிறார், மேலும் அவர் நிறைவேற்ற காத்திருக்கின்றார். 

          இன்றைய நாளில் அவர் நமக்கு கொடுக்கின்ற நம்பிக்கையின் வாக்குறுதி என்னவென்றால், 

 உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 29:11.
                                                          ஆம் அன்புக்குரியவர்களே! 
நம் நல்வாழ்விற்கான அத்தனை திட்டங்களையும் வகுத்தவராக நம் ஆண்டவர் இருக்கின்றார். நம் ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்பதை நம் ஆண்டவர் அறிந்திருக்கின்றனர்.

சபை உரையாளர் புத்தகம் பிரிவு 3 அருள் வாக்கியம் 11 இவ்வாறாகக் கூறுகிறது,

கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது.
சபை உரையாளர் 3:11. 

மேலும்,

‘இது அதைவிடக் கெட்டது’ என யாரும் சொல்ல முடியாது. எல்லாம் அதனதன் காலத்தில் நல்லவை என விளங்கும்.
சீராக் 39:34, 

               எனவும் விவிலியத்தில் நாம் வாசிக்கின்றோம்.

எனவே நமது வாழ்வின் நிகழ்வுகள் நமக்குசில வேளைகளில் மகிழ்ச்சியையும், பல வேளைகளில் கலக்கத்தையும், வேதனையையும் கொடுத்தாலும், அந்த நிகழ்வுகளின் வழியாக ஆண்டவர் நம்மை திடப்படுத்துகின்றார். அவரைத் தேடுகின்ற நமக்கென்று வைத்திருக்கும் நல்வாழ்வின் திட்டங்களை நாம் பெற நம்மை உறுதிப் படுத்துகின்றார், தயாரிக்கின்றார், என்பதை அறிந்து, நமது உள்ளத்தில் உணர்வோம்.  நமக்கு இன்று அவர் வைத்திருக்கின்ற ஆசீர்வாதங்களை நமக்கு அல்லாமல் வேறு எவருக்கும் அவர் கொடுப்பவர் அல்ல என்பதை உள்ளத்தின் ஆழத்தில் உணர்வோம். நமது மகிழ்வையும் நன்றியையும் புகழ்ச்சியையும் ஆண்டவரிடத்தில் அர்ப்பணிப்போம். வாக்கு மாறாத ஆண்டவரின் அருள் வரங்களை பெற்றுக்கொள்ள நம்மையே நாம் தகுதியாக்கிக் கொள்ள இன்றைய நாளில் இறைவனின் பாதத்தில் அமர்ந்து இறைவனில் இணைந்து ஜெபிப்போம்.

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

சொல்லாதே செய்.... (18.1.2021)

சொல்லாதே செய்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

செபமும் தவமும் இறைவனிடம் மனிதன் வர உதவக்கூடியவை...
பக்திகளில் சிறந்தது இறைபக்தி என்பார்கள்.

அந்த இறைவனை மனதில் கொண்டு அடுத்தவரின் பாவத்திற்குக் கழுவாயாக பலியை நிறைவேற்றக்கூடிய பொறுப்பினை பல குருக்கள் செய்கிறார்கள். அப்படிப்பட்ட குருக்களில் ஒருவராக மெல்கிசேதேக்கு என்பவரை பற்றி தான் இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம். ஒரு குருரவின் பணி என்பது அடுத்தவரின் பாவங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுவதும், அவர்களுக்காக ஜெபிப்பதுமே. விவிலியத்தில் இப்பணியைச் செய்த பலரை நாம் காண இயலும்.  ஆனால் இது குருக்களுக்கான ஒரு பணி  என நாம் கருத்தில் கொள்ளுதல் கூடாது.
 நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் அடுத்தவருக்காக, அடுத்தவரின் தவறுக்காக, அவர்களுடைய வாழ்வு நலமான வாழ்வு அமைய வேண்டுமெனவும் இறைவனிடத்தில் ஜெபிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

ஒவ்வொரு நாளும் திருப்பலியில் நாம் பாவமன்னிப்பு வழிபாட்டில் பயன்படுத்தக்கூடிய செபம் ...
"எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே உங்களிடமும், நான் பாவியென்று ஏற்றுக் கொள்கிறேன். என் சிந்தனையாலும் ,சொல்லாலும், செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன்.என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே... ஆகையால் எப்பொழுதும் கன்னியான புனித மரியாவிடமும் ,வானதூதர்கள், புனிதர்களிடமும், சகோதர சகோதரிகளே உங்களிடமும் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்".

இந்த செபத்தினை அனுதினமும் திருப்பலியில் நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் நாம் நம் அருகில் இருக்கக் கூடியவர்களின் தவறான வாழ்க்கைக்கு, அவர்கள் செய்த தவறுக்காக இறைவன் அவர்களை மன்னிக்க வேண்டும் என உண்மையாலுமே நாம் ஜெபிப்பது உண்டா? ...நம்மை நாமே சுய ஆய்வு செய்து பார்ப்போம்.

 வெறும் வார்த்தைகளை மட்டும் சொல்லுவதற்கு பெயர் செபமல்ல ...
ஜெபிக்கின்ற போது....
இதயம் இல்லாத வார்த்தைகளை விட வார்த்தைகள் இல்லாத இதயம் எவ்வளவோ மேலானது ...
என கூறுவார்கள்.நமது ஜெபம் என்பது வார்த்தைகளாக மட்டுமில்லாமல் இதயத்திலிருந்து வெளிப்படக்கூடிய உண்மை வேண்டுதலாக இருக்க வேண்டும். இதனை உணர்ந்தவர்களாக நாம் ஒருவர் மற்றவருக்காக ஜெபிக்க கூடிய குருவினுடைய பணியை சிரமேற்கொண்டு செய்ய வேண்டுமென்பதை  இன்றைய முதல் வாசகம் வழியாக நாம் அனைவரும் அறிந்து கொள்கின்றோம். 

இப்பணியை செய்வதில் பொதுவாகவே நாம் காலம் தாழ்த்த கிறோம். பொதுவாகவே நம்மிடம் ஒருவர் தங்களது துன்பங்களை பகிரும் போது, நான் உங்களுக்காக செபிக்கிறேன் என கூறுகிறோம். ஆனால் உண்மையிலேயே நாம் அவர்களுக்காக ஜெபிக்கிறோமா? இன்றைய நற்செய்தி வாசகத்தில் புதிய ஆடையோடு பழைய ஆடையை ஓட்டு போடுவதை பற்றி இறைவன் கூறுகிறார்.  இதனை  நாம் ஒரு நாளுக்குரிய செயலை இன்னொரு இன்னொரு நாளுக்கு என தள்ளிக்கொண்டே செல்லும் செயலுக்கு ஒப்பிடலாம். 

நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் இன்று நாம் செய்ய வேண்டிய பல பணிகளை செய்யாமல் பிறகு என்று அடுத்த நாளோடு ஒப்பிட்டுக் கொண்டே சொல்கிறோம்... உதாரணமாக இன்றைய நாளில் நாம் ஒருவரோடு கருத்து முரண்பாடு ஏற்படுகிறது என்றால், அதனை இன்றே நாம் சரி செய்து கொள்ளாமல் அதனை எடுத்துக்கொண்டு அடுத்த நாளுக்கு செல்கிறோம். அப்படி செல்லும்போது அந்த நாளானது இனிய நாளாக இருப்பதற்கு பதிலாக மனவருத்தத்தோடு நாம் பயணிக்க கூடியவர்களாக இருப்போம்.பல நேரங்களில் பலரிடம் நான் உங்களுக்காக ஜெபித்துக் கொள்கிறேன். உங்களுக்காக இறைவனிடத்தில் வேண்டுகிறேன் என்ற வார்த்தைகளை பயன்படுத்தும் நாம். அவர்களை பற்றி அந்நாளிலே  நினைப்பது இல்லை. மாறாக பிறகு அவர்களுக்காக ஜெபிக்கலாம் என காலம் தாழ்த்துகிறோம். ஆனால் சபை உரையாளர்  5:4
நீ ஏதாவதொரு வாக்குக் கொடுத்திருந்தால், அதை நிறைவேற்றுவதில் காலந்தாழ்த்தாதே". என்ற இறை வார்த்தைகளை மனதில் கொண்டு செயல்பட நாம் அழைக்கப்படுகிறோம்.
புதிய ஆடையில் போடப்படும் பழைய துணி ஒட்டானது எப்படி புதிய ஆடையை பாதிக்குமோ  அதுபோல  இன்றைய நாள் கவலைகளை அடுத்த நாளோடு ஒப்பிடும்போது அந்நாளானது மகத்துவம் மற்ற துன்பகரமான நாளாக மாறுகிறது.எனவே அன்றைய நாளின் பணியை அன்றே முடிக்கவும்,அடுத்தவருக்கு உரிய நலன்களுக்காக இறைவேண்டல் செய்யக்கூடிய பணியினை அன்றே செய்து முடித்து விடவும். இறை அருளை வேண்டுவோம். 

சபை உரையாளர் 9:10 கூறுகிறது 

நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்; அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய். 

இவ்வார்த்தைகளின் அடிப்படையில் நம் அருகாமையில் இருக்கக்கூடிய அடுத்தவருக்காக ஜெபிக்கும் செயலை செய்ய இன்றே செயலில் இறங்கி மாற்றத்தை நமக்குள் விதைத்து கொள்ள தொடர்ந்து ஜெபிப்போம். 

 

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...