உங்கள் இதயம் உங்கள் கையில்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஒரு மாலை நேரத்தில் அரசனும் அரசியும் படகிலே உலா வருவது வழக்கம். அன்று மாலை கடலில் வெகுதூரம் சென்று விட்டார்கள். திடீரென வானம் இருண்டது. மழைக் காற்று வீசியது. அலைகள் படகின் மீது மோதின. அரசன் அமைதியாக இருந்தான். அரசியோ அவளுக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி அழுது மன்றாடினாள். பேசாமல் இருந்த அரசனைப் பார்த்து, உங்களுக்கு மனைவி மக்கள் மீது அக்கறை கிடையாதா? உங்கள் முகத்தில் கொஞ்சம் கூட பயம் இல்லையே! உங்களுக்கு என்ன ஆனது? என்றாள் அரசி. அரசன் பதில் எதுவும் சொல்லவில்லை. அப்போது அரசன் தன் உறைவாளை எடுத்து அரசியை வெட்டுவதற்காக ஓங்கினான். அரசி சிரித்தாள். அரசன், என்ன நான் உன்னை வெட்டுவதற்காக வாளை ஓங்குகிறேன். நீ சிரிக்கிறாயே! என்றான். அதற்கு அரசி கூறினாள், என்னை அன்பு செய்பவரின் கையில், இதை விட பயங்கரமான ஆயுதம் ஒன்று இருந்தாலும் எனக்கு எந்த ஆபத்தும் நேராது என்று எனக்கு தெரியும் என்றாள். உடனே அரசன் அரசியை பார்த்து கூறினான், என்னை விட கடவுள் உன்னை அதிகம் அன்பு செய்கிறார். எனக்கு எந்த ஆபத்தும் நேராது. அமைதியாக இரு என்று அறிவுரை கூறினார்.
இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் அன்புக்காக மனித இனம் பல இடங்களில் ஏங்கித் தவிக்கிறது. உண்மையாலுமே எப்போதும் என்றும் மாறாமல் மறவாமல் நம்மை அன்பு செய்வது இறைவன் ஒருவரே. அளவுக்கு அதிகமாக நம்மை அவர் அன்பு செய்வதன் வெளிப்பாடே, நாம் இன்றும் இந்த உலகில் பலவிதமான சவால்களுக்கு மத்தியிலும், எதிர் நீச்சல் அடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இறைவனிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் அன்பை எல்லோருடனும் பகிர்ந்து வாழ உறவுகளோடு இணைந்திருக்க இன்றைய நாளில் இறைவன் நம்மை அழைக்கின்றார்.
சபைஉரையாளர் புத்தகம் 9 அதிகாரம் 10 வசனம் கூறுகிறது,
நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதை செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும் போதே செய் என்று கூறுகிறது.
இன்றைய நாளில் முதல் வாசகம் வழியாக இறைவன் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளையும் இன்றே என எண்ணி, ஒருவருக்கொருவர் அறிவுரை கூறி, ஒருவரோடு ஒருவர் இணைந்து மகிழ்வோடு இருப்பதற்கு அழைப்பு தருகிறார். இவ்வாறு இருப்பதற்கு தடையாக இருப்பது நாம்தான். நமது இதயத்தை நாம் கடினப்படுத்தி கொண்டு இருப்போமாயின், நம்மால் இன்பத்தோடு இருக்க இயலாது. நாம் ஒருவர் மற்றவரோடு இணைந்து மகிழ்ந்து இருக்க, இதயத்தை முதலில் சரி செய்து கொள்ள வேண்டும். நமது இதயம் என்பது நம்மிடம் தான் இருக்கிறது. எனவேதான் "உங்கள் இதயத்தை கடினப்படுத்தி கொள்ளாதீர்கள்" என இறைவன் இன்றைய முதல் வாசகம் வழியாக இறைவன் நமக்கு அழைப்பு தருகின்றார்.
இன்று தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினைக் கொண்டாடி கொண்டிருக்கிறோம். ஒருபுறம் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க ...மறுபுறம் பொங்கல் பண்டிகையை கோலாகலத்துடன் கொண்டாட தயாராகி விட்டோம் ... பொங்கல் விழாவை உழவர் திருநாள் என கூறுவோம். இன்று உழவர்களில் பலரின் இதயமானது கடினப்பட்டு இருக்கிறது. காரணம் நாம் மன நிறைவோடும் மகிழ்ச்சியோடும் இருப்பதற்கு நமக்காக சேற்றில் இறங்கி உழைத்தவன் இன்று சட்டத்தால் நசுக்கப்படும் போது அவர்களக்கு துணை நிற்பதற்கு அவர்கள் அருகில் நாம் இல்லாமல் இருப்பதனால்....இருந்தாலும் நமக்காக தன்னம்பிக்கையோடு விடாமல் தங்கள் மனதை திடப்படுத்திக் கொண்டு போராடிக்கொண்டிருக்க கூடியவர்களாக இன்றைய நாளில் நாம் சிறப்பாக ஜெபிக்கவும் அழைக்கப்படுகிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட ஒரு தொழுநோயாளர் ஆண்டவர் இயேசுவை தேடி செல்கிறார். அவர் தனது இதயத்தை கடினப்படுத்தி கொள்ளாமல் இந்தச் சமூகம் என்னை தொழுநோய் என்பதனால் ஒதுக்கி வைத்திருக்கிறது. இந்த தொழுநோய் என்பது என்னுடைய மூதாதையர்,அல்லது என்னுடைய பெற்றோர்,அல்லது நான் கடவுளுக்கு எதிராக செய்த பாவம் இவைகளின் அடிப்படையில் உருவானது எனக் இச்சமூகம் கூறிய போது கூட, அதனை கேட்டு தனது உள்ளத்தை கடினப்படுத்தி கொள்ளாமல், ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து, இறைவன் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இயேசுவிடம் சென்று, "நீர் விரும்பினால் என்னை குணமாக்கும் என்று இயேசுவிடம் கேட்கிறார். இயேசுவும் அவரை பார்த்து, நான் விரும்புகிறேன். உனது நோய் உன்னை விட்டு நீங்கட்டும் என்று தனது கையை நீட்டி, யாருமே தொட மறுக்கக்கூடிய தொழுநோயாளியைக் இயேசு முதலில் தொட்டு குணப்படுத்துகிறார்.
இயேசுவின் தொடுதல் அந்த மனிதனுக்கு நலத்தை உருவாக்கியது. அது வெளிப்புறத்தில் மட்டுமல்ல, உடலளவிலும் உள்ளத்து அளவிலும் அவருக்கு மாற்றத்தை கொடுத்தது. எனவேதான் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை பார்ப்போர் எல்லாற்கும் அறிவித்துக் கொண்டே அம்மனிதன் சென்றான் என நாம் விவிலியத்தில் வாசிக்கின்றோம்.
இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில், எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக பல மணி நேரம் நாம் யோசிக்கிறோம். ஆனால் நம்மில் பலர் யோசிப்பதிலேயே நேரத்தை விரயமாக்கிவிடுகிறார்கள். எதையாவது ஒன்றை செய்ய நினைத்தாலும் அதனை உடனே செய். அதுவும் உனக்கு ஆற்றல் இருக்கும் போதே செய் என்ற சபை உரையாளர் வார்த்தைகளின் அடிப்படையில், இன்றைய முதல் வாசகத்தில் கூட ஒவ்வொரு நாளும் இன்றே என எண்ணி நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள் என்ற வார்த்தைகளின் அடிப்படையில், நாம் ஒவ்வொரு நாளும், ஒருவர் மற்றவரோடு இணைந்து இருக்கவும் மகிழ்ந்திருக்கவும் அதன் வழியாக இயேசுவின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்திக் கொண்டு ஆழப்படுத்திக்கொண்டு இறையாட்சியின் விழுமியங்களின் படி நமது வாழ்வை அமைக்கக் கூடியவர்களாக பயணம் செய்ய அழைக்கப்படுகிறோம்.
இன்று நாம் வாழும் இந்த உலகத்தில், பல நேரங்களில் பலர் மீது இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகளின் காரணமாக, நமது இதயங்களை நாமே கடினப்படுத்திக் கொண்டு உறவுகளிடத்தில் சில உறவுகளை துண்டித்து விட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உறவுகள் துண்டிக்கப்படும் போதெல்லாம் அங்கு இறைவனோடு உள்ள நமது உறவும் துண்டிக்கப்படுகிறது. இறைவன் எப்போதும் இணைந்திருக்கவும் மகிழ்ந்திருக்கவுமே விரும்புகிறார். மனிதனும் இவ்வுலகத்தில் மகிழ்ச்சியைத் தேடிச் செல்கிறான். பிரிவு, சில வலிகளோடு இருந்தாலும், நாளடைவில் அந்தப்
பிரிவு வலியை மறைத்து மகிழ்வை உண்டாக்கும் என்ற எண்ணமானது நமது இதயத்தில் குடி கொண்டிருப்பதன் காரணமாகத்தான் நம்மில் பலர் உறவுகளை பிரிந்தாலும் இதயத்தை கடினப்படுத்திக் கொண்டே நகர்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இறைவன் இயேசு இன்றைய நாளில் நமக்கு தரக்கூடிய செய்தி, ஒவ்வொரு நாளையும் இன்றே எனக் கருதுங்கள் என்கிறார். பிரிவு அதிகமாகும்போது புரிதல் அதிகம் ஆகும் என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் இன்று இருக்கும் நாம் நாளை இருப்போமா? என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்த்தால், அந்த கேள்விக்கு யாராலும் சரியான விடையை கூறிவிட முடியாது. நம்பிக்கையின் அடிப்படையில் நாம் இருப்போம் எனக் கூறலாம். அது இறைவன் கையில் தான் இருக்கிறது. இம்மண்ணில் இருக்கும் வரை தொழுநோயாளியின் உள்ளத்தில் இருந்த ஆண்டவர் இயேசுவின் மீதான நம்பிக்கையை நாமும் கொண்டவர்களாய் ஒவ்வொரு நாளும் சக மனிதர்களோடு, உறவுகளோடும், அன்போடும், பாசத்தோடும் இணைந்து மகிழ்ந்து வாழ இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம்.
உங்கள் இதயம் கடினமாகிக் கொள்வதும், உங்கள் இதயம் அன்பாக, இலகுவாக, அரவணைக்க கூடிய இதயமாக இருப்பதும் உங்கள் கையில் தான் இருக்கிறது. இறைவன் நம்மிடம் மீண்டும் கூறுகிறார், உங்கள் இதயத்தை கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று. இதயத்தை கடினப்படுத்திக் கொள்ளாமல் இணைந்து மகிழ்ந்து இன்புற்று வாழ இறையருளை வேண்டுவோம்.
🙏
பதிலளிநீக்குகனத்த இதயத்தோடு, கடினப்படுத்தும் சட்டங்களை சரி செய்ய போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் முயற்சிகள், வெற்றி பெற, இந்தத் தை மாதத்தில் அவர்களுக்கு வழி பிறக்க, அவர்களின் வாழ்வு சிறக்க, அதனை தொடர்ந்து இந்த அகிலமும் மகிழ்வோடு இணைந்து வாழ்ந்திட இன்றைய நாளில் உருக்கத்தோடு ஜெபிப்போம்!
பதிலளிநீக்கு