பாதையில் புது வெளிச்சம்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு ஊரில் அன்பு என்ற ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவர் தன் பெயருக்கேற்ப அன்பான மனிதர் தான். அந்த மனிதனிடத்தில் அன்பு மட்டுமல்லாது பல தரப்பட்ட திறமைகளும் இருந்தன. எந்த வேலையை கையில் எடுத்தாலும், அவர் அதை வெற்றியுடன் நிறைவேற்றுவார். ஒரு நாள் அந்த மனிதர் இறந்து விட்டார். கடவுளின் திருமுன் கொண்டு வரப்பட்டார். அப்பொழுது கடவுள் அவரிடம் அங்கிருந்த ஒரு புத்தகத்தை பிரித்து படி என்று கூறினார். அதில் யார் யாருக்கெல்லாம் கடவுளைப் பிடிக்குமோ அவர்களின் பெயர்ப் பட்டியல் இருந்தது. மிகப் பெரிய புத்தகமாக இருந்ததால் அந்த புத்தகத்தை நீண்ட நேரம் வாசித்தார். அவருக்கு அறிமுகமாகியிருந்த பல்வேறு நபர்களின் பெயர்களை அந்த புத்தகத்தில் கண்டார். தன்னுடைய பெயர் அதில் எங்கு இருக்கின்றது என்று ஆவலோடு தேடினார். இறுதியில் அவரது பெயரை அவர் கண்டுபிடிக்காமலேயே அந்த புத்தகம் முடிவடைந்துவிட்டது. மிகவும் வருத்தத்தோடு அந்த புத்தகத்தை கடவுளின் முன்னிலையில் வைத்தார். "கடவுளே! நான் இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் உங்களை நான் தேடாமல் போய்விட்டேனே! என்னுடைய பெயர் இந்த புத்தகத்தில் இடம் பெறவில்லையே என்று வருத்தத்தோடு கூறினார். உடனே கடவுள் அவரை பார்த்து, சரி! உனக்கு மீண்டும் ஒரு புத்தகத்தை தருகிறேன். இந்த புத்தகத்தை நீ படி என்று கூறினார் சற்று மனதை அமைதிப்படுத்திக் கொண்டு அந்த புத்தகத்தை வாங்கிப் படித்த அந்த அன்புக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அந்த புத்தகத்தில் முதல் பெயராக அன்புவின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருந்தது. அதை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அப்பொழுது கடவுள் கூறினார், கடவுளை விரும்பியவர்களின் புத்தகத்தில் உன்னுடைய பெயர் இல்லையே என்று வருத்தப்பட்டாய். ஆனால் கடவுள் விரும்பிய, கடவுளுக்கு பிடித்த நபர்களின் புத்தகத்தின் பட்டியலில் உனது பெயர் தான் முதலில் பொறிக்கப்பட்டுள்ளது. நீ எனக்கு உரியவன். உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்று கடவுள் மகிழ்ச்சியோடு அன்பை பார்த்து கூறினார்.
ஆம், அன்புக்குரியவர்களே! இன்றைய வாசகங்கள் அனைத்தும் கடவுளுக்கு பிடித்தமான ஒரு நபராக நாம் வாழ்ந்திட நமக்கு அழைப்பு தருகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் நினிவே நகர மக்கள் தன் விருப்பம் போல வாழ்ந்து பாவ வழியில் செல்வதை கண்ணுற்ற ஆண்டவர், இறைவாக்கினர் யோனாவை அனுப்பி அவர் வழியாக அந்த மக்கள் மனம் மாற வேண்டும் என விரும்புகிறார். மனம் மாறாவிட்டால் அழிவு நேரிடும், அந்த நகரம் முழுவதும் அளிக்கப்படும் என இறைவாக்கினர் வழியாக நினிவே நகர மக்களுக்கு தன்னுடைய செய்தியை கொடுக்கின்றார். இறைவாக்கினரின் சொற்களைக் கேட்ட நினிவே நகர மக்கள் உள்ளத்தில் இறையச்சம் கொண்டவர்களாய், தம் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள, அரசன் முதல் அந்நகரில் இருக்கும் குழந்தைகள் வரை அனைவரும், ஆடு மாடு போன்ற விலங்கினங்கள் வரை, நோன்பிருந்து ஆண்டவரை நோக்கி மனம் மாறியதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது.
இன்றைய இரண்டாம் வாசகம் நாம் வாழும் காலம் மிகவும் குறுகியது என்று கூறுகிறது. எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும், வளமையிலும் வாழத் தெரியும் என்று கூறுகின்ற புனித பவுல் அடிகளாரைப் போல நாமும் வாழ்ந்திட, எல்லா சூழ்நிலையிலும் எத்தகைய மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றிட இன்றைய இரண்டாம் வாசகம் நம்மை அழைக்கிறது. மேலும் நமது சூழ்நிலைகள் எத்தகையதாக இருந்தாலும் நாம் இறைவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு அழைப்பு தருகின்றது.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் இயேசு தன்னுடைய இறையாட்சி பணிக்கு தன்னோடு இணைந்து உழைக்க சீடர்களை அழைக்கின்றார். ஆண்டவர் இயேசுவால் அழைக்கப்பட்ட சீடர்கள், அன்றைய தினத்தில் ஆண்டவர் அவர்களை சந்திக்கும் முன்பு வரை கடலோடும் அலையோடும் வலையோடும் பின்னிப் பிணைந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் "என் பின்னே வாருங்கள்" என்ற ஆண்டவரின் வார்த்தையைக் கேட்ட உடனேயே தன்னுடைய வலைகளையும் படகையும் தந்தையையும் கூட விட்டுவிட்டு தான் இத்தனை நாட்களாக வாழ்ந்திருந்த குடும்பத்தையும் தன்னுடைய தொழிலையும் விட்டுவிட்டு ஆண்டவரோடு செல்லக் கூடியவர்களாக தங்கள் வாழ்வை மாற்றிக் கொண்டார்கள்.
இன்றைய நாளில் இறைவாக்கினர் யோனாவைப் போலவும், இயேசுவால் அழைப்பு பெற்ற சீடர்களை போலவும் இன்றைய வாசகங்கள் வழியாக ஆண்டவர் நம்மை அழைக்கின்றார். நமது உழைப்பையும் தொழிலையும் விட்டுவிட அல்ல, மாறாக நம்முடைய பொறாமை குணத்தையும், மற்றவரை தாழ்வாக நினைக்கின்ற ஏளனப் பார்வையையும் மாற்றிக் கொள்ள அழைப்பு தருகின்றார். எவ்வளவுதான் செல்வங்கள் பெற்றிருந்தாலும் ஒரு ஏழைக்கு இரங்காத மனநிலையை மாற்றிக் கொண்டு, நாம் செய்யும் சிறு பகிர்வின் மூலமாக ஒரு ஏழையின் குடும்பத்தில் ஒளி ஏற்ற நமக்கு அழைப்பு தருகின்றார். மற்றவரோடு போட்டிபோட்டுக்கொண்டு, உழைப்பதற்கு கணக்குப் பார்த்துக் கொண்டு, நம்மை சோம்பேறிகள் ஆக்கிக் கொண்டிருக்கும் மனநிலையை மாற்றி நமது கடமைகளை சுறுசுறுப்போடும் புத்துணர்வோடும் உற்சாகத்தோடும் ஆற்றிட இன்றைய நாளில் நமக்கு அழைப்பு தருகின்றார். எனது கவலை தான் பெரிது, எனது வேதனைகள் யாருக்குமே இல்லை, என்னைப் போல துன்பப்படக்கூடியவர் யாருமே இல்லை என்று தன் மீதே கழிவிரக்கம் கொள்கின்ற தாழ்நிலையை மாற்றி, சந்திக்கும் அனைவரிடத்திலும் புன்னகை மணம் பரப்ப, செல்கின்ற இடமெல்லாம் சிறு புன்னகையின் வழியாக நன்மைகளை செய்திட நாமும் சிறு தூண்டுகோலாய் விளங்கிட நமக்கு அழைப்பு தருகின்றார். நமது குடும்பத்தில் உடல் நலமற்றிருக்கும் பெற்றோரையும் பெரியோரையும் கவனித்துக் கொள்வதன் வழியாக ஆண்டவர் இயேசுவுக்கு ஒரு சிறு பரிசினை நாம் அன்போடு வழங்கிட நமக்கு அழைப்பு தருகின்றார். இவ்வாறாக நமது செயல்களை பரந்த மனப்பான்மையோடு, அன்பை அடித்தளமாகக் கொண்டு, அருளின் பணியாளர்களாக, செல்கின்ற இடமெல்லாம் இறையருளை விதைத்துச் சென்றிட, ஆண்டவர் இயேசுவுக்கு பிடித்தமானவர்களின் பெயர் புத்தகத்தின் பட்டியலில் நமது பெயரும் இணைக்கப்பட நமது வாழ்வை மாற்றிக் கொள்வோமா இன்று!
நமது வாழ்க்கைப் பாதையில் பிறருக்கு உதவும் நல்ல செயல்கள் மூலம் ஆண்டவர் இயேசுவுக்கு பிடித்தமானவர்களாக வாழ நம்மை அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களோடு இணைந்து ஆண்டவரின் அன்பு பிள்ளைகளாக இவ்வுலகில் வலம் வருவோம்!
பதிலளிநீக்கு