அவர்கள் பேசாது இருந்தார்கள். நீங்கள் எப்படி?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டை ஒரு வயதான தகப்பனும், அவனுடைய பத்து வயது மகனும் கடக்க வேண்டிய சூழ்நிலை. கல்லும் முள்ளும் நிறைந்த பாதை. பாவம்! அந்த சிறுவனால் நடக்க முடியவில்லை. அந்த மகனை தூக்கிக்கொண்டு நடக்க முடியாத சூழ்நிலை தகப்பனுக்கு. இருப்பினும், தன் மகனுக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என விரும்பினார், அந்த நல்ல தகப்பன். அவருடைய சிந்தனைச் சக்கரம் சுழலத் துவங்கியது. செயல்வடிவம் பிறந்தது. கல்லும் முள்ளும் நிறைந்த இடத்தில் தனது கால்களை பதித்து, கல்லையும் முள்ளையும் தனது கால்களால் அகற்றி, மகனே நான் முன்னே நடக்கிறேன். நான் காலடி வைத்த இடத்தில் உனது அடியை வைத்து வா என்றார். மகன் தகப்பன் சொன்னது போலச் செய்ய, அவன் பயணம் சுகமானது. இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில், ஒருவரின் துன்பத்திற்கு பின்னால்தான் மற்றவரின் இன்பம் மறைந்திருக்கிறது. நமது குடும்பங்களில், நமது பெற்றோரின் துன்பத்திற்கும் தியாகத்திற்கும் பின்னால்தான் குழந்தைகளின் இன்பம் மறைந்திருக்கிறது.
இவ்வாறாக இவ்வுலகில் அனைவரும் அனைத்திற்கும் மற்றவரை சார்ந்தவராக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு குழந்தை இம்மண்ணுலகில் தாயின் வயிற்றில் இருந்து தானாகவே பிறக்கும் பொழுது கூட, அது மற்றவர்களால் கைகளில் ஏந்தப்படுகிறது. மற்றும் ஒருவரால் அது குளிப்பாட்டப்படுகிறது. பின்னும் ஒருவரால் அது தாயின் அருகில் வைக்கப்படுகிறது. அந்த குழந்தை வளர்ந்து வருகின்ற காலகட்டத்தில் தந்தையின் கரங்களைப் பற்றிக்கொண்டு நடக்க ஆரம்பிக்கிறது. தாயிடம் எனக்கு உணவு வேண்டும் என்று கேட்கிறது. தாயும் அதற்கு உணவு ஊட்டுகிறார். அதற்கு நல்ல பழக்கவழக்கங்களை சொல்லிக் தருபவர்களாக அந்தக் குழந்தையின் குடும்பத்தினரும் சுற்றத்தினரும் இருக்கிறார்கள். ஆறு வயதில் பள்ளிக்குச் செல்லும் போது பல்வேறு ஆசிரியர்கள் அக்குழந்தைக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். விளையாடும்போது கூட அந்த குழந்தை தானாக விளையாடிக் கொள்ள முடியாது. அதற்கு நண்பர்கள் உதவுகிறார்கள், உடன் இருக்கிறார்கள். உடல்நிலை சரியில்லாத போது கூட மருத்துவரின் உதவியால் தன்னை சரி செய்து கொள்கிறார்கள். வயது முதிர்வின் காரணமாக தன்னால் வேலை எதுவும் செய்து கொள்ள முடியாத போதும் கூட மற்றவர்களால் கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள். இறுதியில் இறந்த பின்னும் கூட மற்றவர்களால் குளிப்பாட்டப்படுகிறார்கள், அடக்கம் செய்யப்படுகிறார்கள். மற்றவர்களின் வார்த்தையால் இவரது வாழ்க்கை அன்று பேசப்படுகின்றது. இறுதிச் சடங்கை நிறைவேற்ற அவரைத் தூக்கிச் செல்லவும் மற்ற நால்வர் அவருக்கு உதவுகிறார்கள்.
இவ்வாறாக முதல் குளியலும் இறுதிக்குளியலும் மற்றவர்களால் நமக்கு நடத்தப்படுகிறது.
நான் தனித்துவமானவன், மற்றவர்களிலும் உயர்ந்தவன், என்று சொல்லிக் கொள்கின்ற ஒரு மனிதனும் கூட, மற்றொரு மனிதர்களை இவ்வுலகில் உணவிலிருந்து, உரையிலிருந்து, நடையில் இருந்து, தனது வாழ்வில் அவனது சாதனைகளின் மத்தியிலும் கூட மற்றவரை சார்ந்தே வாழ்கிறான்.
இப்படி எல்லாமே நமக்கு மற்றவர்களால் செய்யப்படும் பொழுது, நாம் அடுத்தவர்களுக்காக வாழ கடமைப்பட்டு இருக்கிறோம். நாம் வாழும் இவ்வுலகத்தில் நமக்கு ஒரு பிரச்சனை வருகின்ற பொழுது, நமக்கு ஒரு தேவை ஏற்படுகின்ற பொழுதுமற்றவர் தமக்கு துணை நிற்க வேண்டும் நமக்கு கைகொடுத்து காப்பாற்ற வேண்டும் என மற்றவரிடம் விரும்புகிறோம், எதிர்பார்க்கிறோம். ஆனால் மற்றவரின் தேவையில் நாம் உடன் இருக்கின்றோமா என்பதை இந்நேரத்தில் சிந்தித்துப் பார்ப்போம்.
இன்றைய முதல் வாசகத்தில் நாம் காணும் மெல்கிசேதேக் எனும் குருவை பற்றி பார்க்கும் பொழுது, அவருக்கு தந்தை இல்லை. தாயும் இல்லை. வரலாறும் இல்லை. துவக்கமும் இல்லை முடிவும் இல்லை. ஒரு நல்ல அரசராக, நீதியின் அரசராக, நேர்மையான ஒரு குருவாக இருக்கின்றன அவருக்கு தெளிவான, அவரைப் பற்றிய ஒரு வரலாறு இல்லை. ஆனால் அத்தகையதொரு குருவே ஆபிரகாமுக்கும் ஆசி வழங்குகின்றார். மேலும் அவரைப் போலவே மற்றவர்களும் வாழ அழைக்கப்படுகிறார்கள். அந்த குருவைப் போலவே, யார் என்று அறியப்படாத பல மக்கள் இந்த சமூகத்தில் துன்புற்று கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு துன்புறுகின்ற அவர்களுக்கு யார் என்றே தெரியாத பல நபர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உதாரணமாக பழங்குடியின மக்களின் விழிப்புணர்வுக்காக பணியாற்றிய இயேசு சபையைச் சார்ந்த அருட்தந்தை ஸ்டேன் அவர்களுக்கும், அந்த பழங்குடியின மக்களுக்கும் எந்த விதமான தொடர்பும், உறவும் கிடையாது. அவர் யார் என்று அறியாத அந்த பழங்குடியின மக்களின் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திட அந்த மக்களுக்காக உழைத்தவராக, அதனால் துன்பத்தை அனுபவிப்பவராக இன்றைய நாளில் தமது வயதான காலத்தில் அவர் துன்பகரமான சிறைவாசத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார். இன்று அவருடன் நாம் இருக்கின்றோமா? என்ற கேள்வியை நாம் எழுப்பி பார்த்தால் நாம் அவருடன் இல்லை. அவருக்காக குரல் கொடுப்பதும் இல்லை என்பதே இன்றைய நமது நிலையாகவும் நமது பதிலாக இருக்கும்.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட இயேசு ஒரு கை சூம்பிய நலமற்ற ஒரு மனிதனை பார்க்கிறார். அவருக்கு உதவி செய்ய வேண்டுமென நினைக்கிறார். ஆனால் அவரை சுற்றி இருக்கின்ற கூட்டமானது அவரிடம் குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கில் பார்த்துக் கொண்டே இருக்கிறது. அக்கூட்டத்தினரை பார்த்து இயேசு, இவரை குணப்படுத்துவது முறையா? இல்லையா? என்று கேட்கிறார். இந்த ஓய்வுநாளில் நன்மை செய்வதா? தீமை செய்வதா? இன்று அவர்களை பார்த்து கேள்வி கேட்கிறார். அவர்கள் அனைவருக்கும் கேள்விகளுக்கு பதில் கூற இயலும். ஆனால் அவர்களோ பதிலேதும் பேசாது அமைதியாக இருந்தார்கள்.
இன்றும் கூட நமது சமூகத்தில் விவசாயிகள் 55 நாட்களுக்கும் மேலாக விவசாயத்தை மீட்டெடுக்க போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஒரு போராட்டம் நன்மையை மீட்டெடுப்பதற்கான போராட்டம் என்பதை நாம் அனைவரும் அறிந்த போதும், அதை நாம் ஆதரிக்கின்றோமா? அது நல்லதுதான் என்று சொல்கின்றோமா? அவர்களுக்கு நமது ஆதரவை தெரிவிக்கின்றோமா? அல்லது நாமும் அந்த பரிசேயர்களைப் போன்று எதுவும் கூறாது மௌனமாக இருக்கிறோமா?
ஒரு அநீதி நடக்கிறது இந்த சமூகத்தில் என்பதை நாம் பார்க்கும் பொழுது, அது அநீதி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆயினும் இங்கு நாம் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால், நமக்கு பாதிப்பு வந்துவிடுமோ என நினைத்துக் கொண்டு, அந்த அச்சத்தினால், அது நம்மை தீண்டாதவரை, நாமும் இந்த பரிசேயர்களை போன்று, அது அடுத்தவர் பிரச்சனை என்று, அடுத்தவர் நலனில் அக்கறை கொள்ளாது, வாய் பேசாத மௌனியாக இருக்கின்றோம்.
இவ்வாறு நாம் மௌனமாக இருப்பது நல்லது தானா? இயேசு அங்கிருந்த பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின் மௌனத்தை கண்டு கோபமடைந்தார் என விவிலியம் கூறுகிறது. அவர்கள் மீது கோபமடைந்தாலும் தான் செய்ய விரும்பிய நல்ல பணியை அந்த கை சூம்பிய மனிதனுக்கு செய்துவிட்டுச் சென்றார் எனவும் நாம் விவிலியத்தில் வாசிக்கின்றோம்.
இன்று பலரும் பல்வேறு நன்மைகளை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு நாம் துணை நிற்பது இல்லை. நாம் துணை நிற்காததன் காரணமாகவே அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். இன்னல்களை அடைந்த போதிலும், அதையும் கடந்து நீதிக்காகவும் உண்மைக்காகவும் எழுந்து சமுதாய நலன்களை மீட்டெடுக்கவும் மனம் தளராது போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
நமது வாழ்வில், நமது பிறப்பிலிருந்து இறப்புவரை அடுத்தவர்களால் வாழ்வு பெற்றுக் கொண்டிருக்கின்ற நாம், அடுத்தவரின் துயரத்தைக் கண்டு நமது ஆதரவை வழங்கப் போகிறோமா? அல்லது, பரிசேயர் சதுசேயரைப் போன்று பேசாது இருக்கப் போகின்றோமா?
நீங்கள் எப்படி?
கேள்வி உங்களிடம். விடைகளை நீங்களே எழுதிக் கொள்ளுங்கள்.
இறைவன் நமக்களித்த வாழ்வு என்னும் கொடைக்காக இன்றைய நாளில் நன்றி கூறுவோம். நமது வாழ்வில் நம்மை வழிநடத்த நம்மை வலுப்படுத்த இறைவன் கொடுத்த நமது அயலாருக்காக நன்றி கூறுவோம்! நமது அன்பு செயல்களால் அவர்களின் வாழ்வையும் வளப்படுத்துவோம் என்று அருமையாக கூறிய அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது அன்பான வாழ்த்துக்களும்! செபங்களும்!
பதிலளிநீக்கு