யார் பொய்யர்?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!
கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருப்பலி நடந்துகொண்டிருந்தது. குருவானவர் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்தார். அன்பே கடவுள் கடவுள்! அன்பு அதுவே உண்மை என்று போதித்தார். அனைவரும் தூங்கி வழிந்து கொண்டு இருந்தனர். சோம்பேறிகளாக இருந்தனர். குருவானவரின் மறையுரையை எவரும் கேட்கவில்லை. பலம் கொண்ட மட்டும் மிகவும் உருக்கமாக கத்திப் பார்த்தார். யாரும் கவனிக்கவில்லை. உடனே அய்யோ! தீ! ஆலயத்தில் தீ என கத்தினார். அனைவரும் அதிர்ந்து போய் விழித்து எழுந்தனர். பரபரப்பாய் நிதானமாக புன்னகையோடு குருவானவர் சொன்னார் நான் அன்பே கடவுள் என்று உண்மையை உரைத்த போது எல்லோரும் தூங்கி வழிந்தீர்கள். சோம்பேறிகளாக இருந்தீர்கள். உண்மையை கண்டு கொள்ளவில்லை. ஆனால் நான் தீ தீ என்று பொய் சொன்னேன். எல்லோரும் விழித்தெழுந்து பொய்மையை மதிக்கிறீர்கள்! பரபரப்பாக இருக்கிறீர்கள்! உண்மைதான்! நீங்கள் உண்மைக்கு தூங்குகிறீர்கள்! பொய்கைக்கு விழித்தெழு கிறீர்கள் என்று கூறினார். நமது வாழ்விலும் கூட பல நேரங்களில் நாம் பொய்யை நம்பக்கூடியவர்களாக இருக்கிறோம்.
இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் தந்தையையும் மறுப்போரே பொய்யர் என்று புனித யோவான் கூறுகிறார்.
இத்தகைய பொய்மை நின்று விலக்கி உண்மையை நோக்கி வழி நடக்க, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைஉறுதியுடன் ஏற்றுக் கொண்டவர்களாக நாம் தொடக்கமுதல் நிலை வாழ்வு பற்றி, கேட்டறிந்த காரியங்களில் நிலைத்திருக்க புனித யோவான் நம்மை அழைக்கிறார். மேலும் இன்றைய நாளில் நீங்கள் ஆண்டவரால் அருள்பொழிவு பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் பெற்றுக்கொண்ட அருள்பொழிவால் அனைத்தையுமே கற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் பெற்றுக்கொண்ட அருள்பொழிவு உண்மையானது. ஆண்டவரின் அருள் பொழிவால் நிலைவாழ்வு பற்றி கற்றுக் கொண்ட நீங்கள், அந்த நிலை வாழ்வின் ஊற்றாகிய ஆண்டவரை உறுதியாக பற்றிக் கொள்ளுங்கள். அவரோடு இணைந்து வாழுங்கள், என்று புனித யோவான் நம்மை அழைக்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் யூதர்கள் பரிசேயர்களையும் லேவியர்களையும் திருமுழுக்கு யோவானிடம் அனுப்பி, நீர் யார்? என கேட்ட போது, அவர் நான் மெசியா அல்ல என்பதை வெளிப்படையாகக் கூறினார். மீண்டும் அவர்கள் அப்படியானால் நீர் எலியாவா? அல்லது இறைவாக்கினரா? என்று அவரிடம் கேட்கிறார்கள். திருமுழுக்கு யோவானும் அவர்களிடம் நான் அல்ல என்று வெளிப்படையாக அவர்களிடம் கூறுகிறார். மேலும் அவர், பாலை நிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்க அனுப்பப்பட்ட குரல் நான்! என்று தன்னைப்பற்றி வெளிப்படையாகக் கூறுகிறார்.
இன்று நாம் நற்செய்தி வாசகத்தில் காணும் புனித திருமுழுக்கு யோவானை போல, உண்மையை உரக்கச் சொல்ல கூடியவர்களாக வாழ முற்படுவோம். நமது உள்ளத்தை உண்மையின் பால் திருப்புவோம். உண்மையும் வழியும் வாழ்வும் நானே என்று கூறிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே, உண்மையின் வடிவாக திகழ்கிறார். ஆண்டவரோடு உள்ள உறவில் இணைந்திருந்து அவரோடு நிலைத்திருந்து நாம் உண்மையை பற்றிக் கொள்ளவும், அதனை வாழ்வில் வெளிப்படுத்தக் கூடியவர்களாகவும் வாழ இன்றைய நாளில் புனித யோவான் வழியாக இறைவன் அழைக்கின்றார். அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவிகொடுத்தவர்களாய், நமது வார்த்தையாலும் வாழ்வாலும் உண்மையை உயர்த்திப் பிடிக்க, இறையருளில் நம்மை இணைத்துக் கொள்வோம்! ஆண்டவரின் உண்மை பிள்ளைகளாக, அவரது அன்புச் சீடர்களாக தொடர்ந்து வாழ்ந்து, நம் ஆண்டவர் இயேசுவுக்கு பெருமை சேர்ப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக