வெள்ளி, 8 ஜனவரி, 2021

தாகம் கொள்வோம்! (10.1.2021)

தாகம் கொள்வோம்!  
இறைவன் இயேசுவில் அன்புக்கு உரியவர்களே!  இன்றைய நாள் இறைவார்த்தைகளின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.  

தாகம் இன்றி இத்தரணியில் மனிதரில்லை. பலருக்கும் பலவிதமான தாகம் உண்டு. தாகம் என்றால் நீர் தாகம் என்பது மட்டுமல்ல. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தாகத்தினை கொண்டுள்ளார்கள். சிறுவயதில் பொம்மையின் மீது தாகம் ஏற்படுகிறது. விவரம் அறியும்போது  விளையாட்டின் மீது தாகம் ஏற்படுகிறது. பருவமடைந்ததும் காதலின் மீது தாகம் ஏற்படுகிறது. பின் தாரத்திலும் தாகம் ஏற்படுகிறது.  பணத்தில் தாகம்,  பதவியில் தாகம், பெயரில் தாகம், புகழில் தாகம், என ஆயிரம் தாகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் இந்த உலகத்தில்.    ஆனால்   மனித வாழ்வின்   இறுதியில் ஆறடி நிலத்தின் தாகத்திற்கே அர்ப்பணமாகிறது, இந்த உடல். தாகம் இன்றி இத்தரணியில் யாரும் இல்லை எனக்கூறலாம்.  இப்படிப்பட்ட சூழலில், இன்றைய நாளில், இறைவன், தாகமாய் இருப்பவர்களே  என்னிடம் வாருங்கள்!  என்று நம் அனைவரையும் அழைக்கிறார், தாகத்தில் இருந்து நமக்கு நிறைவு அளிக்கவே. ஆம்! அந்த அன்பு தாகத்தின்  வெளிப்பாடுதான், இன்று நம் முன்பாக இருக்கக்கூடிய சிலுவை. நமக்காக, நமது வாழ்வு அர்த்தமுள்ள வகையில், அடுத்தவருக்கு நலன் தரக் கூடிய வகையில்,  அன்பு பணியின் அடிப்படையிலான வாழ்வாக அமையவேண்டும் என்பதற்காக, தன்னுடைய சொல்லாலும் செயலாலும் நமக்கு பாடம் கற்பித்த இயேசுவின் தாகத்தின் வெளிப்பாடுதான் இந்த சிலுவை. இன்று இச்சிலுவையை உற்று நோக்கும் நாம்,  அவரை போல அன்பு தாகம் கொண்டவர்களாக அன்பு பணி செய்ய அழைக்கப்படுகின்றோம்.  இதனையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் காணலாம். 

இயேசு கிறிஸ்துவை இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வென்றவர் யார்? நீராலும் இரத்தத்தாலும் தூய ஆவியாலும் வந்தவர் இந்த இயேசு கிறிஸ்து.  இந்த இயேசு கிறிஸ்துவைப் போல நாமும் அன்பு பணிசெய்ய அழைக்கப்படுகிறோம்.  இதன் வெளிப்பாடுதான் இன்றைய நற்செய்தி வாசகமும். திருமுழுக்கு யோவான் தன்னைத் தாழ்த்தி இயேசுவை முன்னிலைப்படுத்தும் தாழ்ச்சி வழியான அன்பின் பரிமாணம். 

அன்பில் மட்டும் தான் நாம் அனைத்தையும் இழக்கின்றோம்.  அந்த அன்பை இம்மண்ணில் காணும் மனிதர்களிடத்தில் விதைத்திட அன்பு தாகம் கொள்ள இன்றைய நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.  இயேசு தன்னுடைய வாழ்வில் அன்பை  மையப்படுத்தி வாழ்ந்த போது அவரை தூய ஆவியானவர் தனது கொடைகளால் நிரப்பி வழி நடத்தியது போல, நம்மையும் தன் அன்பான கொடைகளால் நிரப்பிட, தன் அன்பு கொடைகளால் தூய ஆவியானவர் நிரப்பிட, தூய ஆவியானவரை  நோக்கி ஜெபிப்போம்.   

அன்னை தெரசா அவர்கள் கூறுவார்கள், வெறுப்பது யாராக இருந்தாலும், நேசிப்பது நீயாக இரு என்று. அன்னையின் வார்த்தைகளையும் ஆண்டவர் இயேசுவின் வாழ்க்கையையும், ஆண்டவர் இயேசு கொண்டிருந்த அன்பு தாகத்தையும்,  மனதில்  ஏற்றவர்களாக, நமது வாழ்வில் நாமும் பலவிதமான தாகங்களுக்கு மத்தியில்,  அன்பு தாகத்தை நமக்குள் வளர்த்துக் கொண்டு, கண்ணில் காணும் மனிதர்களிடத்தில் அன்பை பகிரவும், அன்பின் வடிவமாக நாம் திகழ்ந்திடவும், இறைவனது அருளைை வேண்டி, இணைந்து  ஒருவர் மற்றவருக்காக தொடர்ந்து ஜெபித்து,இயேசு தனது பணி வாழ்வை திருமுழுக்குப் பெற்றது முதல் துவங்கியது போல நாமும் இன்றைய நாள் முதல் நமது அன்பு பணியை இச்சமூகத்தில் தொடர  இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம். .

1 கருத்து:

  1. அன்பின் மீது தாகம் கொண்ட இயேசு ஆண்டவரின் திருமுழுக்கு நமக்கு இத்தகையதொரு சிறந்த பாடத்தை கற்பிக்கிறது என்பதை அழகாக எடுத்துரைத்த சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும்! நன்றிகளும்! செபங்களும்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...