வெள்ளி, 15 ஜனவரி, 2021

அழைக்கிறார்! அவர் பின்னே செல்வோமா!(16.1.2021

அழைக்கிறார்! அவர் பின்னே செல்வோமா!

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 மற்றவரிடம் தவறு கண்டுபிடித்துக் கொண்டு இருப்பது தான் நாம் தவறாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதன் ஆதாரம். இறைவன் இயேசுவில் அன்புக்கு உரியவர்களே!
        நாம் நமது கடவுள், இரக்கத்தின் கடவுள், நம்மை முழுவதுமாக அறிந்து கொண்டவர். அந்த இறைவன் நாம், நம்மையே நாம் சரி செய்து கொண்டு அவரை பின்பற்றும் போது அவர் நம்மை ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்கிறார். அவரை நோக்கி வருவதற்கு இன்று அழைப்பு தருகிறார். இன்றைய முதல் வாசகத்தில், அந்த இரக்கத்தின் இறைவனது வார்த்தைகள் எவ்வளவு வலிமையானது என்பதையும், இறைவன் இவ்வளவு இரக்கம் கொண்டவர் என்பதையும், இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. 

முதல் வாசகத்தின் அடிப்படையில் நாம் இறைவார்த்தையின் மீது நம்பிக்கை கொண்டவர்களாய், நமது உள்ளங்களை, நமது வாழ்வை சரிசெய்துகொண்டு, ஆண்டவர் இயேசுவின் குரலுக்குச் செவிகொடுக்க அழைக்கப்படுகிறோம். ஆம்!  சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவியை, என்னைப் பின்பற்றி வா! என்று இயேசு அழைத்த போது, அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றாரே, அதுபோல நாம் அனைவரும் ஆண்டவர் இயேசுவை இன்று பின்பற்றிக் கொண்டு இருக்கிறோம். அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து, இந்த மண்ணுலகில் வாழ்ந்த போது, ஏழைகள், அனாதைகள், பாதிக்கப்பட்டவர்கள், சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் என ஒவ்வொருவரையும் தேடிச் சென்று, அவர்களோடு அமர்ந்து, அவர்களோடு உணவருந்தி,  அவர்களின் துன்பங்களில் பங்கெடுத்தார். இதன் அடிப்படை நோக்கம், மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே! மனிதர்களிடையே உயர்வு தாழ்வு என்பது இல்லை.  ஒவ்வொரு மனிதனுமே கடவுளின் படைப்பு.  இந்தக் கடவுளின் படைப்பாகிய மனிதர்கள், தங்களுக்கு கீழாக மற்றவர்கள் என்ற அடிப்படையில் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்திக் கொண்டும்,  பிறரை குற்றவாளிகள் எனக்கூறி, பாவிகள் எனக்கூறி, தங்களுக்கு கீழாக வைத்துக் கொண்டு, மேலே அதிகாரத்தில் இருந்து கொண்டு சுகம் காண கூடியவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய செயல் முறைகளை எல்லாம், ஆண்டவர் இயேசு கிறிஸ்து அறிந்திருந்தார். எனவேதான் அவர், இந்தப் போலியான அதிகாரிகளை விட்டு விட்டு, பாதிக்கப்பட்டு இருப்போரை எல்லாம் தேடி சென்றார். எனவேதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட கூறுவார், மருத்துவர் நோயற்றவருக்கு அல்ல நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் என்றார். இயேசு இந்த சமூகத்தில் மக்களை மக்களே‌ சட்டத்தின் பெயராலும் பல்வேறு காரணங்களின் அடிப்படையிலும் மற்றவர்களை அடிமைப் படுத்திக் கொண்டிருந்த போது அப்படி அடிமைப்படுத்தப்பட்டவர்கள் எல்லாம் தங்களை தாங்களே சரி செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்த தவறை சுட்டிக் காட்டிக்கொண்டே, வாழ்நாள் முழுவதும் பயணித்தார். இயேசுவின் செயலைக் கண்டு அஞ்சிய அவர்கள் எப்படியாவது, இயேசுவை ஒழித்துவிட வேண்டும் என்பதில் மும்முரமாக கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு தேடுவது போல தேடிக்கொண்டிருந்தார்கள். வாய்ப்புக்காக காத்திருந்தார்கள். வாய்ப்பை உருவாக்கி இயேசுவை, விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் குற்றுயிரும் குலை உயிருமாக கொன்று போட்டார்கள். இயேசுவின் இறப்பு அவர்களுக்கு மகிழ்வைத் தந்தது போல தோன்றினாலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கும் போது கூட அவர்களை மன்னித்து, உயிர் துறந்தார்.  ஒரு தலைவன் என்பவன் தான் சொல்வதை செயலில் காட்ட வேண்டும். இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது இதையெல்லாம் சொன்னாரோ அதை எல்லாம் தன் வாழ்வில் கடைப்பிடித்தார். தன்னை கொல்பவர்களை கூட அவர் மன்னித்தார்.  அதிலிருந்து நீயும் சக மனிதனை மன்னி.ஏற்றுக்கொள். மனிதனை மனிதனாக மதிக்கப்பழகு என்ற பாடத்தை கற்றுக் கொடுத்தார்.  ஆனால் இன்று நாம் வாழும் இந்த உலகில், பெரும்பாலான நேரங்களில் அடுத்தவர்களின் குறை காண்பதில் மட்டுமே நாம் நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கிறோம்.

 நாம் மொட்டுக்களை போல மௌனமாக இல்லாமல், பூக்களைப் போல சிரித்துக்கொண்டு இருக்க அழைக்கப்படுகிறோம்.ஆம்! நாம் மொட்டுகளாக அநீதியின் போதும், நீதியற்ற சூழல் அரங்கேறும் போதும் அமைதியாக இருக்காமல், இயேசுவைப் போல அந்த அநீதியை இழைப்பவர்கள் மனம் மாற வேண்டும் என்ற நோக்கத்தோடு, அவர்களுக்கு அவர்கள் தவறை சுட்டிக் காட்டும் வகையில் எப்போதும் நாம் இருக்க அழைக்கப்படுகின்றோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் ஆற்றல் வாய்ந்தது. அந்த ஆற்றல் வாய்ந்த வார்த்தைகளின் அடிப்படையில், நாம் நமது வாழ்வை சீர் தூக்கிப் பார்ப்போம். பல நேரங்களில் நாமும் இந்த நற்செய்தியில் இன்று  நாம் நற்செய்தியில் வாசிக்க கேட்டது போல, நமது வாழ்வில் பல நேரங்களில் நாம் அடுத்தவர்களை குற்றவாளிகள் என குறைகூறிக் கொண்டே இருந்திருப்போமாயின், இன்றைய நாளில் குறை காண்பதை எல்லாம் விடுத்து விட்டு, நேர்மறையான எண்ணம் கொண்டு சக மனிதனையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக, சக மனிதனையும் உரிமையோடும் அன்போடும் ஏற்றுக் கொள்ளக் கூடியவனாக இருக்க அழைக்கப்படுகிறோம். இப்படி நாம் இருக்கும் பொழுது, அநீதிகள் நடக்கும் சமூகத்தில், அந்த அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்கக் கூடியவர்களாக இயேசுவைப் போல மாற வேண்டி இருக்கும். இயேசுவைப் போல மாறும் பொழுது துன்பத்தைக் கண்டு அஞ்சாது துணிவோடு இருக்கவேண்டும்.
 
        விதையாக இருக்கக்கூடிய நாம்  சாகாதவரை அதிலிருந்து புதிய வாழ்வு என்பது முளை விடாது. நாம் நமது வாழ்வை, இயேசுவைப்போல இயேசுவின் வாழ்க்கை நமக்கு கற்பித்த பாடத்திற்கு ஏற்ற வகையில், இறைவார்த்தைகளின் அடிப்படையில்,  இயேசுவின் வாழ்வு இறைவார்த்தை வழியாக நமக்குக் கற்பித்த பாடத்தின் அடிப்படையில், நமது வாழ்வை சீர் செய்து கொண்டு, ஒருவர் மற்றவரை அன்போடும் சகோதரத்துவத்தோடும் ஏற்றுக்கொண்டு, குறை காணாது, நிறைகளைக் கண்டு  ஊக்கப்படுத்தக் கூடியவர்களாக வாழ இறையருளை இன்றைய நாளில் வேண்டுவோம்.

 என் பின்னே வா என அழைக்கின்றார். அவர் பின்னே அவரைப் பின்பற்றிச் செல்ல முயலுவோமா!

1 கருத்து:

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...