வியாழன், 7 ஜனவரி, 2021

நிலை வாழ்வைப் பெற வேண்டுமா?... (8.1.2021)

நிலை வாழ்வைப் பெற வேண்டுமா?...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ...
தாமஸ் ஆல்வா எடிசன் சிறுவனாக இருந்தபோது ஒருநாள் வகுப்பாசிரியர், தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் தாயாரிடம், உங்கள் பிள்ளையின் தலையில் களிமண் மட்டுமே உள்ளது. இவனை பள்ளியில் வைத்திருந்தால் எங்கள் பள்ளியின் பெயர் கெட்டுப் போய்விடும் என்றார்.  தற்காலத்தில் இவரின் பெயரை தங்கள் பள்ளியின் பெயராக மாற்றினார்கள்.  இவர் இறந்த போது மின் விளக்குகள் அனைத்தும் இரண்டு நிமிடத்திற்கு அணைக்கப்பட்டன. அப்போது தலைவர் ஒருவர் கூறினார்,  இவர் இல்லை எனில், இந்த உலகம் இவ்வாறு தான் இருந்திருக்கும் இன்று.... நம்பிக்கையோடு தொடர் முயற்சியில் ஈடுபடும்போது வெற்றி நிச்சயம் என்ற பாடத்தினை தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் வாழ்வு நமக்கு கற்பிக்கிறது. நாமும் ஒவ்வொரு நாளும் நம்பிக்கையோடு பயணிக்க வேண்டும் என்ற செய்தியினைத் தான் இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகிறார்.  நம்பிக்கையால் நாம் அனைவரும் நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என இன்றைய முதல் வாசகத்தின் வழியாக யோவான் தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஒரு தொழுநோயாளி, ஆண்டவரே! நீர் விரும்பினால் எனது நோயை குணமாக்க முடியும்! என மன்றாடி,  இயேசுவிடம் இருந்து உடல்நலனை பெற்றுச் செல்கிறார்.  

வாழ்க்கையில் துன்பங்கள் நேரும் போது நாம் நமது நம்பிக்கையை இழந்து விடுகிறோம். ஆனால் துன்ப நேரத்தில் துணிவோடு இருக்கவும், நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிக்கவும், இன்றைய வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. தொழுநோயாளி பல ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டு இருந்தாலும் நோயுற்றவரை அச்சமூகத்தில் உள்ளவர்கள் எல்லாம், ஓரம் கட்டி, ஒதுக்கி வைத்திருந்தனர்.  அவர்களை தொடுவதும் பார்ப்பதும் தீட்டு என கருதினர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு தொழுநோயாளி இயேசுவிடம், நீர் விரும்பினால் என்னை குணமாக்க உம்மால் முடியும்! என்று கூறுகிறார் என்றால், இந்த தொழுநோயாளிகளை தேடி இயேசு சென்றார் என்பதுதான் உண்மை. அந்த இயேசுவினிடத்தில் நம்பிக்கை கொண்டிருந்த வண்ணமே, அவர் தனது நலம் பெறுதலுக்காக ஆண்டவர் இயேசுவிடம் வேண்டினார். நம்பிக்கையோடு கேட்கும் அனைவரும் பெற்றுக் கொள்கின்றனர், என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, இயேசு அந்த  தொழுநோயாளரின் நம்பிக்கையைக் கண்டு வியந்த வண்ணம், அவருக்கு உடல்நலம் கொடுத்தார்.  அவர் நலமுற்றார் என்ற செய்தியை, அன்று யூத சமூகத்தில் நிலவிய சடங்கு முறைகளை பின்பற்றுமாறு கூறி, அவர் குணம் அடைந்ததை சமூகத்திற்கு தெரிவிக்கிறார்.

ஒரு எறும்பானது தன்னை விட 8 மடங்கு சுமையை சுமக்கும். அதுவே போர் காலங்கள் என்றால் 15 மடங்கு சுமையை சுமக்கும் என்று கூறுவார்கள். ஆனால் நாம் ஏதேனும் சிறிய துன்பம் நேர்ந்தாலே நம்பிக்கையை இழந்து, முடங்கிப்போய், வீட்டுக்குள் முடங்கி விடுகிறோம். இன்றைய நாளின் வாசக பகுதிகள் வழியாக இறைவன் நம்மை நம்பிக்கையோடு இவ்வுலகில் பயணம் செய்ய அழைக்கின்றார். நம்பிக்கையோடு நம்மை சுற்றி உள்ள ஒவ்வொருவரையும் அன்பு செய்து, ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை காட்டக் கூடிய இயேசுவின் சீடர்களாக பயணம் செய்ய துவங்குவோம் இந்நன்னாளில் ....

வானின் மழைத்துளி மண்ணை முத்தமிட்டால் மண்ணகம் செழிக்கும். 
கடல் கரையை முத்தமிட்டால் கடற்கரை கண்கொள்ளா காட்சி தரும்.
கவிஞனின் பேனா முனை காகிதத்தை முத்தமிட்டால் வெள்ளை காகிதம் காவியமாகும்.
ஓவியனின் தூரிகை வெற்றிடத்தை முத்தமிட்டால் கவின்மிகு அழகு ஓவியமாகும்.
சிற்பியின் உளி கரடுமுரடான கல்லை முத்தமிட்டால் கலைநயமிக்க சிலையாகும்.
அதுபோலவே.....
நம்பிக்கை நமது உள்ளத்தில் முத்தமிட்டால் நமது வாழ்வு நிலை வாழ்வு கொண்டதாக மாறும்.
 நிலை வாழ்வை பரிசாகப் பெற, இந்நாளில் நம்பிக்கையின் நாயகனாம் ஆண்டவர் இயேசுவின் தலைமையில், நம்பிக்கையோடு நமது வாழ்க்கை என்னும் தொடர் பயணத்தில் ஈடுபடுவோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...