செவ்வாய், 3 டிசம்பர், 2019

எதன் மீது நமது அடித்தளத்தை கட்டி இருக்கிறோம். (5.12.2019)

அன்புக்கு உரியவர்களே

இன்றைய நாளில் நாம் எதன் மீது நமது அடித்தளத்தை கட்டி இருக்கிறோம் என்பது பற்றி சிந்திக்க அழைக்கப்படுகிறோம். ஒவ்வொரு நாளும் பல விதமான மனிதர்களை நாம் சந்திக்கிறோம், பல விதமான நற்செயல்களை நாம் கேட்கின்றோம். நாம் கேட்பதையும், பார்க்கக் கூடிய பல நல்ல செயல்களையும் நமது வாழ்வில் செயல்படுத்துகின்றோமா? என்ற சிந்தனையை இன்றைய நற்செய்தி வாசகங்கள் நமக்கு வழங்குகின்றன.

 

செயலற்ற நம்பிக்கை செத்த நம்பிக்கை என்று கூறுவார்கள். அது போலவே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நாம் பல நேரங்களில் கேட்கின்றோம். கேட்ட வார்த்தைகளை மனதில் வைத்துக் கொண்டு ஆண்டவரே ஆண்டவரே என அழைப்பதால் நாம்

ஆண்டவருக்கு ஏற்ற மக்களாக மாற இயலாது. அவரின் வார்த்தைகளை எப்போது வாழ்வாக மாற்ற முயல்கிறோமோ அப்போது தான் நாம் பாறையின் மீது அடித்தளமிட்டவர்களாக உறுதியாக நிலைத்து நிற்க முடியும். எனவே இன்றைய திருப்பலியில் நாம் அனைவரும் இணைந்து நமது அடித்தளமானது எதன்மீது இடப்பட்டிருக்கிறது என்பது குறித்து சிந்திப்போம். பாறையின் மீது அடித்தளமிடப்பட்டவர்களாக உறுதியாக நிலைத்து இருந்து நற்செயல் புரிவதில் இயேசுவை வெளிகாட்ட உள்ளத்தில் உறுதி ஏற்றவர்கள் இத்திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

பிறர் மீது அன்பு (4.12.2019)

அன்புக்குரியவர்களே 

திரையுலகில் இருக்கக்கூடிய ஒருவர் கூறினார். “ஏழைகள் எல்லாம் கடவுளின் குழந்தைகள் என்றால் குடும்பக்கட்டுப்பாடு செய்யவேண்டியது கடவுளுக்குத்தான்” என்றார். ஆனால் இயேசுவால் கவரப்பட்டு அவரைப் போலவே பிறரன்பு பணியை செய்த நம் புனிதை புனித அன்னை தெரசா அவர்கள் கூறுகிறார் “ஒரு ஏழை ஒருவன் பசியால் உயிர் விட்டால் அது கடவுளால் அல்ல உன்னையும் என்னையும் போன்றோர் அவனுக்கு உணவளிக்காமையால் தான் அது நிகழ்ந்தது” எனக் குறிப்பிடுகிறார். இன்று தன் குறைகளை விடுத்து மற்றவரின் குறைகளை பெரிதுபடுத்தி கூறுவதையே பலர் வாடிக்கையாகக் கொண்டு சுயநலம் கொண்ட மனிதர்களாக வாழும் நிலை  நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு செல்கிறது.

 

புரட்சிக்கவி பாரதிதாசன் கூறுகிறார் “தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டேன்போன் சின்னதொரு கடுகு உள்ளம் கொண்டோன்.” என்கிறார். ஆனால் இன்றைய நற்செய்தி வாசகங்கள் நம்மை பிறர் மீது அன்பு கொண்டவர்களாக வாழ அழைப்பு விடுக்கிறது. இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா ஆண்டவர் எல்லார் முகங்களில் இருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார் என குறிப்பிடுகிறார். இதனையே இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு உடல் ஊனமுற்றோர் நலம் அடையச் செய்வதும், பார்வையற்றோருக்கு பார்வை வழங்குவதும், பேச்சாற்றல் இழந்தவருக்கு பேச்சாற்றலை தருவதுமான பல விதமான செயல்களை இயேசு செய்கிறார். அதோடு மட்டுமன்றி அடுத்தவரின் பசியை உணர்ந்தவராய் தன்னை பின்தொடர்ந்து வந்த மக்களுக்கு உணவு வழங்கக்கூடிய நிகழ்வையும் இன்றைய வாசகங்களில் நாம் காணலாம். எனவே இன்றைய நாளில் கண்ணில் காணக்கூடிய மனிதர்களுக்கு உதவி செய்ய உள்ளத்தில் உறுதி ஏற்றுக் கொள்வோம்.

 

அப்துல் கலாம் அவர்கள் கூறுவார் “வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும்  தலைமுறை”என்று அவ்வார்த்தைகளை சற்று மாற்றி “வாழ்வது ஒருமுறை வாழவைப்போம் ஒரு தலைமுறையாவது” என்று சிந்தையில் நிறுத்துவோம். ஒவ்வொரு நாளும் தேவையில் இருக்கக்கூடிய யாராவது ஒருவருக்கு உதவி செய்ய முன்வருவோம். உதவி என்பது பொருளைச் சார்ந்தது மட்டுமல்ல மற்றவருக்காக நாம் நேரம் செலவிடும் நல்ல உள்ளத்தையும் சார்ந்தது. உதவி செய்ய உள்ளத்தில் உறுதி ஏற்றால் போதாது அதனை செயல் வடிவமாக்கிட முயல்வோம். அதற்கான அருளை இறைவனிடத்தில் வேண்டுவோம்.

 

திங்கள், 2 டிசம்பர், 2019

புனித சவேரியார் திருவிழா (04.12.2019)

புனித சவேரியார் திருவிழா (04.12.2019)
அன்புக்குரியவர்களே 
எப்படி எல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் நான் வாழ்ந்திருக்கிறேன். ஆகவே இப்படித்தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்லக் கூடிய யோக்கியதை எனக்கு உண்டு”. இது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கூறிய வார்த்தை
இன்று நாம் அனைவரும் இணைந்து புனித சவேரியாரின் திருவிழாவை கொண்டாடி கொண்டிருக்கிறோம். “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை தன் வாழ்வாக மாற்றியவர் இவர். “ஒருவன் இவ்வுலகம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்தால் என்ன பயன்?” என்ற இன்னாசியாரின் வார்த்தைகளால் கவரப்பட்டு, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மேல் அசையாத நம்பிக்கை கொண்டவராய் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் நற்செய்தி பணியாற்றி பல உள்ளங்களை ஆண்டவர் இயேசுவை விதைத்தவர். 
    இன்றைய நற்செய்தி வாசகங்கத்தில் ஆண்டவர் இயேசு இருவர் இருவராக நற்செய்தி அறிவிப்பதற்கு சீடர்களை அனுப்பிய நிகழ்வை நாம் வாசிக்க இருக்கிறோம். இன்று நாம் வாழும் உலகில் நம்மில் பலர் பலவற்றை பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் பேசுவதை யாராவது கவனிக்கிறார்களா? அல்லது நாம் தான் பிறர் பேசும் போது கவனிக்கின்றோமா? கவனித்ததையும், பேசியதையும் நம் வாழ்வில் நாம் செயல்படுத்துகிறோமா? என்பதுதான் இன்று நம்முன் இருக்கக்கூடிய கேள்வி. இன்னாசியாரின் வார்த்தைகளை புனித சவேரியார் கேட்டார் அதன்படி தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். நாமும் அனுதினமும் திருப்பலியில் பங்கெடுக்கிறோம், இறைவார்த்தையைக் கேட்கிறோம், பல நல்ல மனிதர்களை சந்திக்கிறோம், அவர்களின் வாய் மொழி வார்த்தைகளை கேட்கிறோம், நாம் கேட்டவற்றையும், பார்த்த நல்லவைகளையும் நமது வாழ்வு செயல்படுத்தி இருக்கின்றோமா? என இன்றைய நாளில் சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்.
 இன்றைய நாளில் உறுதி ஏற்போம் நமது வாழ்வில் நாம் கேட்கக் கூடிய நல்ல செயல்களை நமது வாழ்வில் செயல்வடிவமாக்கிடுவோம் என்று அதற்கான அருள்வேண்டி இறைவனை நாடி செல்வோம். இறைவனை மட்டும் நாடிச் செல்வதால் செயல்வடிவம் பெற முடியாது. நமது முயற்சியும், உறுதியான நிலைப்பாடுமே அதற்கு வழிவகுக்கும் எனவே ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டு கேட்ட நல்லவற்றை செயலாக்க முயலுவோம்.

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

திருவருகைக் காலத்தின் முதல் திங்கள் 2019. 12. 02

இறைவன் இயேசுவின் அன்புக்குரிய அருள் தந்தை அவர்களே, அருள் சகோதரர்களே உங்கள் அனைவரையும் இந்த கல்வாரி திருப்பலி காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் . 

நேற்றைய தினம் நம்பிக்கை எனும் தீபம் ஏற்றி திருவருகைக் காலத்தின் முதல் வாரத்தில் நுழைந்த நாம் இன்று அக மகிழ்வோடு ஆண்டவர் இல்லம் வந்துள்ளோம் அவரின் வருகைக்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள....


நாம் ஆண்டவரின் வருகையை எதிர்கொள்ள நம்மை தயார்படுத்திக் கொள்கிறோமா? அல்லது கிறிஸ்து பிறப்பு என்னும் விழாவை எதிர்கொள்ள நம்மை நாம் தயார்ப் படுத்திக் கொள்கிறோமா?  என்று சிந்திக்க வேண்டிய சூழலில் நாம் அனைவரும் உள்ளோம்.


 இன்றைய நற்செய்தி வாசகத்தில் நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை பற்றி கூறப்படுகிறது... ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த யூத சமூகத்தில் நீர் எனது வீட்டிற்கு வர நான் தகுதியற்றவன் என தன்னையே தாழ்த்திக் கொண்டு ஆண்டவரின் வருகையை விட அவரின் வார்த்தைகளில் அதிகம் நம்பிக்கை கொண்டவராய் நூற்றுவர் தலைவர் இன்று நமக்கு காட்டப்படுகிறார்..


அவரின் நம்பிக்கை அவரது மகனுக்கு நற்சுகத்தையும் அவருக்கு மதிப்பையும் இச்சமூகத்தில் உருவாக்கியது...


நம்பிக்கை இருந்தால் எதிலும் நம்பி  கை வைக்கலாம் என்பதற்கு ஏற்ப நூற்றுவர் தலைவரிடத்தில் காணப்பட்ட நம்பிக்கையை நமது வாழ்வில் செயல் வடிவமாக மாற்ற பக்தியோடு இணைந்து ஜெபிப்போம் இத்திருப்பலியில்


இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...