வியாழன், 19 ஜனவரி, 2023

நம்பிக்கையோடு ஆண்டவரை நாடிச் செல்வோம்! (19-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

     இன்றைய இறை வார்த்தையானது நம்பிக்கையோடு கடவுளை நாடிச் சென்ற பல நபர்களை நமக்கு சுட்டிக் காண்பித்து நாமும் நம்பிக்கையோடு இறைவனை நாடிச் செல்வதற்கான அழைப்பினை நமக்கு தருகின்றன.  ஒவ்வொரு நாளுமே கடவுள் நமது வாழ்வில் புதிதாக தருகின்றார் என்றால் அந்த நாளில் அந்த கடவுளை வெளிப்படுத்துகின்ற மனிதர்களாக, அந்த கடவுளின் பண்பு நலன்களை பிரதிபலிக்கின்ற மனிதர்களாக, நாம் இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு நாளுமே நமக்கு வலியுறுத்துகின்றது.

               ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பல நோயாளிகளும், பல தீய ஆவி பிடித்திருந்த நபர்களும் 
நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தோடு நாடிச்சென்று நலன்களை பெற்றுக் கொண்டார்கள் என்பதை இன்றைய இறைவார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது இத்தகைய நம்பிக்கை கொண்ட மனிதர்களாக நாளும் நாம் கடவுளை நாடிச் செல்லுகிற போது, அவரின் பண்பு நலன்களை நமது நலன்கள் ஆகக் கொண்டு இந்த சமூகத்தில் அவரை பிரதிபலிக்கின்ற மனிதர்களாக விளங்க முடியும் என்பதை உணர்ந்தவர்களாக நம்பிக்கையோடு இறைவனை நாடிச் சென்று நலன்களை பெற்றுக் கொள்ள இறைவன் இன்றைய இறைவார்த்தை வழியாக நமக்கு அழைப்பு தருகின்றார். இந்த அழைப்பை இதயத்தில் இருத்தியவர்களாக நம்பிக்கையோடு கடவுளை நாடிச் செல்ல இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

இயேசுவைப் போல நன்மைகள் செய்வோம்! (18-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் !

நல்லது செய்வது மட்டுமே நம் வாழ்வின் இலக்காக இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை வழியாக இயேசுவின் வாழ்வில் இருந்து நீங்களும் நானும் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது சென்ற இடமெல்லாம் நன்மை செய்தார். அப்படி அவர் செய்த ஒரு நன்மைத்தனத்தையே இன்றைய இறைவார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது. 

         கை சூம்பிய நிலையில் இருந்த ஒரு மனிதனுக்கு நலம் பெற வேண்டுமென இறைவன் இயேசு விரும்புகின்றார். ஆனால் சுற்றி இருந்தவர்கள் அனைவருமே ஓய்வு நாளில் இம்மனிதன் இச்செயலை செய்தால் இவனை குற்றவாளியாக குற்றம் சுமத்த வேண்டும் என்ற மனநிலையோடு அவரை சூழ்ந்து இருந்தார்கள். 

       தன்னை சுற்றி இருப்பவர்களின் மனநிலையை உணர்ந்தவராக இருந்தாலும் தன் வாழ்வில் தான் எதை பின்பற்ற வேண்டும் என்பதை உணர்ந்தவராக இயேசு கிறிஸ்து நன்மை செய்வதையே தன் வாழ்வின் இலக்கு என்பதை உணர்ந்து அதனை செய்கின்ற நபராக இருந்தார். இந்த இயேசுவை பின்பற்றக்கூடிய நீங்களும் நானும் ஒவ்வொரு நாளுமே இந்த சமூகத்தில் நம்மால் இயன்ற நன்மைகளை செய்து கொண்டே செல்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

ஓய்வு நாளில் ஆண்டவரை மகிமைப்படுத்துவோம்! (17-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 
       சட்டம் என்பது மனிதனுக்காக உருவாக்கப்பட்டது. எந்த மனிதனும் சட்டத்திற்காக உருவாக்கப்படவில்லை என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு வலியுறுத்துகின்றார்.  பலவிதமான சட்டங்களைச் சொல்லி அந்த சட்டங்களுக்கு ஏற்றபடி தான் வாழ வேண்டும்; இல்லை என்றால் கடவுளின் சாபத்திற்கும் உள்ளாவார்கள் என்று சொல்லி மனிதர்களை சட்டத்தின் பெயரால் நசுக்கிக் கொண்டிருந்த அந்த யூத சமூகத்தில், ஆண்டவர் இயேசு கிறிஸ்து, ஓய்வு நாள் சட்டத்தை சுட்டிக் காண்பித்து, மனிதனுக்காகவே இது உருவாக்கப்பட்டது.  இந்த சட்டத்திற்காக மனிதன் உருவாக்கப்படவில்லை என்பதை எடுத்துரைத்து, நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நாம் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை இறைவன் வலியுறுத்துகின்றார். இந்த வலியுறுத்தலை இதயத்தில் இருத்தியவர்களாக நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நாளும் ஒருவர் மற்றவரோடு இணைந்து வாழ்வதற்கான ஆற்றலை கடவுளிடத்தில் கேட்போம். நாம் இந்த உலகில் இருப்பதே இணைந்து இன்புற்று வாழ்வதற்காகவே. காணும் பொங்கலை கொண்டாடக் கூடிய இன்றைய நாளில் நாம் பல உறவுகளை கண்டு, அவர்களோடு உறவை புதுப்பித்துக் கொண்டு, நாளும் நமது வாழ்வை கடவுளுக்கு உகந்த வாழ்வாக மாற்றுவோம். நம் தேவைகளுக்கு எனச் சொல்லி, மனிதர்களை பயன்படுத்துவதை விட, நாம் அனைவரும்  இந்த சமூகத்தில் கடவுளின் பிள்ளைகளாக இருப்பதற்கு உருவாக்கப்பட்டோம் என்பதை உணர்ந்தவர்களாக அனைத்து உறவுகளோடும் உறவை புதுப்பித்துக் கொண்டு, மனிதநேயத்தை முன்னிறுத்திய மனிதர்களாக நாளும் வளர்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

இயேசு நம்மோடு! (16-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்! 
 ஆண்டவர் இயேசு நம்மோடு இருக்கின்ற போது, எதை குறித்தும் அஞ்ச வேண்டியதில்லை என்பதை இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு வலியுறுத்துகின்றன. கடவுள் நமக்கு துணையாக இருக்கின்றார்; அந்த கடவுளின் துணையை கொண்டு ஒவ்வொரு நாளும் நமக்கென்று கொடுக்கப்பட்ட கடமைகளையும் பொறுப்புகளையும் நாம்  சரிவர செய்கின்ற நபர்களாக இருப்பதற்கான அழைப்பு இன்று நமக்கு தரப்படுகிறது. எவரும் பழைய துணியில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. பழைய தோற்பையில் புதிய மதுவை ஊற்றி வைப்பதும் இல்லை. அவ்வாறு செய்கிற போது அது வீணாகும் என்பதை இன்றைய இறைவார்த்தை வழியாக இறைவன் வலியுறுத்துகின்றார்.


           இன்றைக்கு உரிய கடமைகளை இன்றைய நாளில் நாம் செய்கின்ற போது நாளைய தினத்தை குறித்த கவலை இல்லாத மனிதர்களாக இருக்க முடியும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற ஆழமான நம்பிக்கையோடு அந்தந்த நாளுக்குரிய கடமைகளை சரிவர செய்கின்ற நபர்களாக நீங்களும் நானும் வளர்வதற்கான ஆற்றலை இன்றைய இறைவார்த்தை வழியாக இறைவன் நமக்கு தருகின்றார். இந்த இறைவனின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தியவர்களாய் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு நாளும் நமது கடமைகளை கடவுளின் துணையோடு செய்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

உழைக்கும் மக்களின் உற்சாக விழா! (15-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை கொண்டாடுகிறோம் பொங்கல் விழாவை நான்கு நாட்கள் கொண்டாடுவோம்.
முதல் நாள் போகி பண்டிகை, இரண்டாம் நாள் தைப்பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் கொண்டாடுகிறோம்.

போகிப் பண்டிகை என்பது நம்மிடம் இருக்கின்ற தீமைகளை களைந்து விட்டு, நம்மை நாமே தூய்மைப்படுத்திக் கொள்வதற்கான ஒரு அழைப்பு தான் போகி பண்டிகை நாளில் தரப்படுகிறது. 

இரண்டாம் நாள் ஆகிய இன்று நாம் கொண்டாடுகின்ற தைப்பொங்கல் என்பது  நமக்கு வலியுறுத்துவது, நாம் இந்த உலகத்தில் இன்புற்று வாழ வேண்டுமானால், இயற்கை அவசியம். நமக்காக இந்த இயற்கை கடவுளால் உண்டாக்கப்பட்டது. கடவுளால் உண்டாக்கப்பட்ட இந்த இயற்கையிடமிருந்து நல்லவைகளை கற்றுக் கொண்டு,  அதன் படி நமது வாழ்வை நெறிப்படுத்த வேண்டும். உதாரணமாக, சூரியன் நல்லோர் தீயோர் எனப் பாராமல், எல்லோர் மீதும் தன் ஒளிக் கீற்றை வீசுவது போல நாமும் நம்மை நமது குடும்பம் என்ற வட்டத்திற்குள் சுருக்கி விடாமல், அனைவரோடும் இணைந்து நம்மால் முடிந்த நன்மைகளை ஒருவர் மற்றவருக்கு செய்யக்கூடிய நல்ல மனிதர்களாக வாழ வேண்டும் என்பதை, இரண்டாம் நாள் நமக்கு வலியுறுத்துகிறது. 
    மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல். அனுதினமும் பரபரப்பாக பல பணிகளுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவரையுமே ஆறறிவு பெற்ற மனிதர்களாக இருந்தாலும், ஐந்தறிவு கொண்டது என்று நாம் சொல்லக்கூடிய அந்த உயிரினங்களின் மீது அக்கறை காட்டக் கூடியவர்களாகவும், நமது உழைப்புக்கு பயன்படுகின்ற பொருள்களை மதிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை மூன்றாம் நாள் நமக்கு வலியுறுத்துகிறது. 

      நான்காம் நாள் காணும் பொங்கல். கடவுள் மனிதனை இந்த உலகில் படைத்ததன் நோக்கமே, ஒருவர் மற்றவரோடு இணைந்து வாழ வேண்டும் என்பதுதான். நாகரிக வளர்ச்சி என்ற பெயரில், அதிலும் குறிப்பாக நான்கு சுவற்றுக்கு உள்ளாக முடங்கி போகின்ற நாம் வெளிவந்து எல்லோரோடும் இணைந்து பல மனிதர்களைக் கண்டு உறவுகளை இன்னும் அதிகரித்துக் கொண்டே நமது வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அந்த நாள் நமக்கு உணர்த்துகிறது. 
     இந்த நான்கு நாட்களும் நான்கு விதமான சிந்தனைகளை தந்தாலும், ஆண்டவர் இயேசுவின் வார்த்தையும் இதைத்தான் நமக்கு வலியுறுத்துகிறது. ஒவ்வொரு நாளும் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கி பார்த்து, நம்மிடம் இருக்கின்ற தீமைகளை எல்லாம் அகற்றிவிட்டு, இறைவனின் படைத்த இந்த இயற்கையிடம் காணப்பட்ட நற்பண்பை நமது நற்பண்புகளாக வைத்துக்கொண்டு, இந்த சமூகத்தில் அனைத்து உயிர்களையும் மதிக்க கூடிய மனிதர்களாக மற்ற உறவுகளோடு இணைந்து வாழவே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். இதை உணர்த்துவதற்காகவே ஆண்டவரே இந்த உலகில் தோன்றினார். 33 ஆண்டுகாலம் இந்த மண்ணில் வாழ்ந்தாலும், மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்கு சொல்லிக் காண்பித்து சென்றிருக்கிறார். இந்த இயேசுவை பின்பற்றக் கூடியவர்களாக நாம் இருக்கிறோம். 

     அன்று யோவான் இந்த இயேசு கிறிஸ்துவை நமக்கு சுட்டிக் காட்டினார். இன்று நாம் இயேசுவை சுட்டிக் காட்டுவதற்கான ஒரே வழி நமது சொல்லும் செயலும் கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வாக அமைய வேண்டும். ஒவ்வொரு நாளும் இறை வார்த்தையை இதயத்திலிருத்தி, நம்மை நாமே சீர்படுத்திக் கொண்டு நமது சொல்லாலும் செயலாலும் ஆண்டவர் இயேசுவை அடுத்தவருக்கு சுட்டிக்காட்டுகின்ற மனிதர்களாக நாளும் வளர்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 


புதன், 18 ஜனவரி, 2023

புனித தேவ சகாயம் விழா! (14-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

      இன்று தாய்த்திரு அவையோடு இணைந்து, நாம்  தமிழகத்தின் முதல் புனிதரான தேவ சகாயம் அவர்களை நாம் நினைவு கூருகிறோம். எத்தனையோ இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் மத்தியிலும் தான் ஏற்றுக்கொண்ட அந்த இயேசுவின் வார்த்தைகளை ஆழமாக நம்பி, அந்த வார்த்தையின் மீது நம்பிக்கை கொண்ட மனிதனாக, எல்லா இடர்பாடுகளையும் எதிர்கொண்ட ஒரு மனிதனாக, இந்த இயேசுவிற்காக இந்த இயேசுவை பின்பற்றியதன் அடிப்படையில், அவரது வார்த்தைகளை வாழ்வாக்க முயன்றதன் அடிப்படையில், இரத்தம் சிந்தி உயிர் நீத்தார். அவரை இன்றைய நாளில் நாம் நினைவு கூருகின்றோம்.

           இன்றைய முதல் வாசகம் கூட கடவுளின் வார்த்தை எத்தகைய ஆற்றல் மிக்கது என்பதை எடுத்துரைக்கிறது.
 இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நாம் ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்களாக நாளும் வளர அழைக்கப்படுகிறோம். 

      நற்செய்தி வாசகத்தில் கூட இந்த இயேசுவின் வார்த்தைக்கு செவி கொடுத்து, சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்பவர் இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றார். இந்த இயேசுவை அறிந்து, அவரைப் பின்பற்றுகின்றோம் என்று சொல்லுகின்ற நாம் ஒவ்வொருவருமே எந்த அளவிற்கு இந்த இயேசுவின் வார்த்தைகளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்ப்போம். இந்த ஆண்டவரின் வார்த்தைகளின் மீது, ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக நாளும் அவரது வார்த்தைகளை வாழ்வாக்க முயற்சிக்கின்ற மனிதர்களாக, தடைகள் வரினும், இன்னல்கள் வரினும், அனைத்திற்கும் மத்தியிலும் தேவசகாயத்தைப் போலவே, நாமும் நமது வாழ்வில் இந்த இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்க ஆற்றல் வேண்டி, இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 
     

முடக்குவாதமுற்றவரை இயேசு குணப்படுத்தினார்! (13-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

   கடவுள் தருகின்ற வாக்குறுதிகளின் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்களாக நாம் நாளும் வளர வேண்டும் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு வலியுறுத்துகின்றது.

     இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட, இந்த இயேசு கிறிஸ்துவை பற்றி கேள்விப்பட்ட பலர், முடக்குவாதமுற்ற ஒரு மனிதனை சுமந்து கொண்டு, இயேசுவை சந்திக்க செல்கிறார்கள். கூட்ட மிகுதியின் காரணமாக, வீட்டின் மேல் கூரையை பிரித்து, அந்த முடக்குவாதமுற்ற மனிதனை கட்டிலோடு இயேசுவின் முன்னிலைக்கு கொண்டு செல்கிறார்கள். இவர்களின் நம்பிக்கை அங்கிருந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது. இந்த மனிதனை குணமாக்க வல்லவர் இந்த இயேசு கிறிஸ்து என்று அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை அத்தனை கூட்டத்திற்கு மத்தியிலும் அந்த முடக்குவாதமுற்ற மனிதனை இயேசுவின் முன்னிலையில் கொண்டு போய் நிறுத்தியது.

    இயேசு அவர்களது நம்பிக்கையின் நிமித்தமாக அவர்கள் விரும்பி வந்த அந்த நலனை செய்வதை இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். 

   இந்த வாசகத்தின் பின்னணியில் நமது வாழ்வை சுய ஆய்வு செய்து பார்க்க நாம் அழைக்கப்படுகிறோம். கடவுள் மீதான ஆழமான நம்பிக்கையில் நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்கிறோமா? நம்பிக்கையோடு இந்த கடவுளை தேடி செல்கிறோமா என்ற கேள்வியை நாம் நமக்குள்ளாக எழுப்பி பார்ப்போம் ‌. இன்னும் நாம் கொண்டு இருக்கிற நம்பிக்கையில் ஆழப்படவும், நம்பிக்கையோடு அனுதினமும் ஆண்டவரை நாடிச் செல்லுகிற மனிதர்களாக, நீங்களும் நானும் இருப்பதற்கான ஒரு அழைப்பு இன்றைய இறைவார்த்தை வழியாக நமக்கு தரப்படுகிறது. இந்த இறைவார்த்தைக்கு ஏற்ற வகையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு ஆண்டவரை நாடிச் செல்ல இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

தொழுநோய் நீங்கியது! அவரும் நலமடைந்தார்!(12-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

         நமது உள்ளம் என்பது எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். இந்த உள்ளத்தில் தீய எண்ணங்கள் மேலோங்க கூடாது என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது. உள்ளத் தூய்மையோடு ஒரு மனிதன் தொழுநோய் பாதிக்கப்பட்டு இருந்த நிலையிலும் கூட,  சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவனாக இருந்தபோதிலும் கடவுளை நாடிச் சென்று  இயேசுவிடம் இருந்து  ஆசிகளை பெற்றவனாக தனது நோயில் இருந்து குணம் பெறுகின்ற  ஒரு நிகழ்வைத் தான் இன்றைய  நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம். 

             நமது உள்ளத்தை தூய்மைப்படுத்திக் கொண்டு  ஆண்டவரை நாடிச் செல்லுகின்ற போது, நாம் 
நலன்களைப் பெற்றுக் கொள்வோம் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன. 

       இந்த வாசகங்களின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்த்து, நல்லதொரு மாற்றத்தை முன்னெடுத்தவர்களாக நமது உள்ளத்தை தூய்மை செய்து கொண்டு, அனுதினமும் ஆண்டவரை நாடிச் செல்லுகின்ற மனிதர்களாக நாம் இருப்பதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

நற்செய்தியின் ஆண்டவரை பின்பற்றிச் செல்வோம்! (11-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

           கடவுள் எப்போதும் நம்மோடு துணை நிற்கக் கூடியவர். இந்த கடவுள் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக, நாம் அவரது பணியினை செய்பவர்களாக இந்த சமூகத்தில் இருக்க வேண்டும் என்பதை இயேசுவின் வாழ்வில் இருந்து இன்றைய வாசகங்கள் வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம்.  நோயுற்ற நிலையில் இருந்த பேதுருவின் மாமியாரை இயேசு தேடிச் செல்கிறார்; அவருக்கு குணம் தருகின்றார்.  தன்னுடைய பணியை ஒரு குறிப்பிட்ட இடத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், வாருங்கள் அடுத்த ஊருக்கு செல்வோம்; அங்கும் நான் நற்செய்தி அறிவிக்க வேண்டும் என சொல்லி,  ஆண்டவர் இயேசு கிறிஸ்து நற்செய்தி அறிவிப்பதற்காக பல இடங்களுக்கு சென்றதை இன்றைய வாசகத்தின் வாயிலாக நாம் அறிந்து கொள்கிறோம். 

     இந்த வாசகத்தின் பின்னணியோடு நமது வாழ்வை ஒப்பிட்டுப் பார்க்கிற போது, கடவுள் எல்லா நேரங்களிலும் நம்மோடு இருந்து நம்மை வழி நடத்துகிறார்;  நாம் துன்பத்தில் வாடுகிற போதும், மகிழ்ச்சியில் திளைக்கிற போதும், இந்த கடவுள் நம்மோடு இருந்து நம்மை வழி நடத்துகிறார். இந்த கடவுளின் நற்செய்தியை நாமும் இந்த இயேசுவை பின்பற்றியவர்களாக  பல்வேறு இடங்களுக்குச் சென்று பல மனிதர்களுக்கு இந்த இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது என்பதை இன்றைய நாள் இறை வார்த்தையின்  அடிப்படையில் உணர்ந்து கொண்டவர்களாக, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, அனுதினமும் ஆண்டவர் இயேசுவின் பணியை அடுத்தவருக்கு அறிவிக்க, ஆவலோடு பயணிக்க இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார். 

இயேசு அதிகாரத்தோடு மக்களுக்கு போதித்து வந்தார்! (10-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
   தீய ஆவி பிடித்திருந்த ஒரு மனிதனிடத்தில் இருந்து தீய ஆவியை இயேசு விரட்டுவதை இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம். இந்த வாசகத்தின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்க்க நாம் அழைக்கப்படுகிறோம். நம்மிடம் இருக்கின்ற தேவையற்ற காரியங்களை எல்லாம் கடவுள் அகற்ற வல்லவர் என்ற நம்பிக்கையோடு அந்த ஆண்டவரை நாடிச் செல்லுகின்ற மனிதர்களாக நாம் நாளும் இருக்க வேண்டும் என்பதை இன்றைய நாளில் இதயத்தில் இருத்திக் கொள்ள அழைக்கப்படுகிறோம். 

     பல நேரங்களில் தவறு என தெரிந்தும் அந்த தவறினை செய்யக்கூடியவர்களாகவே நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்கிறோம்.  ஆனால் ஆண்டவரை நம்பிக்கையோடு நாடிச் செல்லுகிற போது, நம்மிடம் இருக்கின்ற தவறான எண்ணங்களையும், நம்மிடம் இருக்கின்ற தேவையற்ற காரியங்களையும் இந்த கடவுள் நம்மிடம் இருந்து அகற்ற வல்லவர் என்ற ஆழமான நம்பிக்கை நம்மிடத்தில் மேலோங்குமானால், கண்டிப்பாக கடவுள் தருகின்ற மாற்றத்தைக் கண்டு கொண்ட மனிதர்களாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு இந்த ஆண்டவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக நாளும் அவரது வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற மனிதர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும். அத்தகைய ஒரு வாழ்வை நம் வாழ்வாக மாற்றிக்கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

ஞாயிறு, 8 ஜனவரி, 2023

ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா! (09-01-2023)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

தன்னிடம் திருமுழுக்கு பெற வருகின்ற இயேசுவை குறித்து யோவான், நீரா என்னிடம் திருமுழுக்கு பெற வருவது? என்று கேட்டு, தன்னைத்தானே தாழ்த்திக் கொண்ட ஒரு மனிதனாக, அதே சமயம் கடவுளின் திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்கின்ற ஒரு மனிதனாக இயேசுவுக்கு திருமுழுக்கு கொடுக்கின்றார். அந்த திருமுழுக்கின் வாயிலாக வரவிருக்கின்ற மெசியா இவர் தான் என்பதை அறிந்து கொண்டு, அந்த மெசியாவை அருகில் இருந்த ஒவ்வொருவருக்கும் சுட்டிக் காட்டுகின்ற நபராக, யோவான் தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். 
     இந்த யோவானைப் போல நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய இறை வார்த்தை வழியாக அழைக்கப்படுகின்றோம். நாம் அறிந்திருக்கின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அடுத்தவருக்கு அறிவிக்கவும், அந்த இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை வாழ்வாக மாற்றிக் கொண்டு, தொடர்ந்து பயணிப்பதற்கான ஆற்றலையும் இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

அரசரை வணங்க வந்திருக்கிறோம்! (08-01-2023)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
    ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழாவை இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருகின்றோம்.  மூன்று ஞானியர்கள் ஆண்டவர் இயேசுவை காண்பதற்காக சென்றார்கள். தங்களிடம் இருந்து விலை உயர்ந்த பொருட்களை கடவுளுக்கு காணிக்கையாக கொடுத்தார்கள். பொன்னையும், வெள்ளை போளத்தையும், சாம்பிராணிகையும் கடவுளுக்கு காணிக்கையாக கொடுத்து கடவுள் மனிதனாக வந்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்தினார்கள். இந்த ஞானியர்களை நினைவு கூருகின்ற இந்த நல்ல நாளிலே, ஞானிகள் போல நான் என்ன பரிசை கடவுளுக்கு கொடுக்கப் போகிறோம் என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பி பார்ப்போம். 
   இன்றைய முதல் வாசகம், எழுந்து ஒளி வீசு! என நமக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த ஆண்டவரை ஏற்றுக் கொண்டிருக்கிற நாம் ஒவ்வொருவருமே இந்த ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக மாற்றிக்கொண்டு, ஒவ்வொரு நாளும் இந்த சமூகத்தில், இரண்டாம் வாசகம் சுட்டிக்காட்டுவது போல, நமது கடமையை உணர்ந்து செயல்படுகின்ற மனிதர்களாக, மற்றவர்களுக்கு ஒளி வீசுகின்ற மனிதர்களாக, இருப்பதற்கான ஆற்றலை பெற்றுக் கொள்ளவும், அந்த ஆற்றலோடு தொடர்ந்து பயணிக்கவும் அழைக்கப்படுகிறோம்.  இந்த அழைப்பை இதயத்தில் இருத்தியவர்களாக நாம் கடவுளுக்கு தருகின்ற விலைமதிப்பில்லாத பரிசு, அவரை ஏற்றுக் கொண்டவர்கள் நாம் என்பதற்கு நமது சொல்லும் செயலும் சான்றாக அமைய வேண்டும் என்பதை இதயத்தில் இருத்திக்கொண்டு பயணிக்க இன்றைய நாளில் இறை வேண்டல் செய்வோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார். 

கானாவூர் திருமணத்தில் ஆண்டவர் இயேசு! (07-01-2023)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
          இன்று இயேசு செய்த முதல் புதுமையினை நாம் நற்செய்தி வாசகமாக வாசிக்க கேட்கிறோம். கானாவூர் திருமணத்தில்  தண்ணீரை இயேசு திராட்சை ரசமாக மாற்றினார். தனது தாயின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்த ஒரு மனிதனாக கடவுளின் வல்லமையோடு தண்ணீரை ரசமாக மாற்றி அந்த திருமண வீட்டில் இன்னலுற்றிருந்த நிலையில் அச்சத்தோடும் கலக்கத்தோடும் குழப்பத்தோடும் செய்வது அறியாது தடுமாறி கொண்டிருந்த அந்த திருமண வீட்டாருக்கு இயேசு புதுமை மூலமாக வாழ்வு தருவதை நாம் இன்றைய வாசகத்தின் வாயிலாக உணர்ந்து கொள்கிறோம். 

         நம்பிக்கையோடு நாம் கடவுளை நாடிச் செல்லுகிற போது நமது எல்லாவிதமான சூழல்களிலும் இன்னல்களிலும் இந்த இறைவனின் உடனிறுப்பு நம்மை வழி நடத்தும் என்பதை இன்றைய இறைவார்த்தை வழியாக புரிந்துகொண்டு அழைக்கப்படுகிறோம். அதிலும் குறிப்பாக அன்னை மரியாவின் வழியாக நாம் உதவியை நாடுகிற போது கண்டிப்பாக நாம் உதவிகளை பெற்றுக் கொள்வோம் என்பதை இந்த கானாவூர் திருமண உவமை வழியாக நாம் உணர்ந்து கொண்ட அழைக்கப்பட்டிருக்கிறோம்.

      அனுதினமும் ஆலயத்திற்கு வந்து திருப்பலியில் பங்கெடுத்து புனிதர்களின் துணையையும் அன்னை மரியாவின் உன்னையையும் நாடி ஜெபிக்கின்ற நாம் ஒவ்வொருவருமே இன்றைய நாளில் நமது நம்பிக்கையை புதுப்பித்துக் கொண்டவர்களாக இன்னும் ஆழமான நம்பிக்கையோடு மரியாவின் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அணுகுவதற்கான ஆற்றல் வேண்டி தொடர்ந்து இறைவேண்டல் செய்வோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

நீயே என் அன்பார்ந்த மகன் !உன்னில் நான் பூரிப்படைகிறேன்! (06-01-2023)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
        இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெறுகின்ற நிகழ்வை நாம் வாசிக்கின்றோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற தண்ணீரில் இறங்கிய போது, வானம் திறந்து, தூய ஆவியானவர் இயேசுவின் மீது இறங்கியதை யோவான் காண்கின்றார். 

          இவரே என் அன்பார்ந்த மகன். இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என இயேசுவை குறித்து விண்ணகத்திலிருந்து ஒரு குரல் ஒலித்ததையும் அவர் கேட்கின்றார். 
                         இன்று நாமும் திருமுழுக்கு பெற்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிந்தவர்களாக,  இந்த இயேசு கிறிஸ்துவை போல வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு நமது வாழ்வை அமைத்துக் கொண்டு இருக்கிறோமா? என்ற கேள்வியை எழுப்பி பார்ப்போம்.

          நாம் அறியாத பருவத்தில் நம் பெற்றோர் மூலமாக நாம் பெற்றுக் கொண்ட அந்த திருமுழுக்கின் அடிப்படையில் நாமும் தூய ஆவியானவரை பெற்றிருக்கிறோம்.  தூய ஆவியாரை பெற்றிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொரு நாளும் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, இவரே என் அன்பார்ந்த மகன்; இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்று கடவுள் சொல்லுகின்ற அளவிற்கு நமது வாழ்வை நெறிபடுத்தி இருக்கிறோமா? என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்த்து நமது வாழ்வை நெறிப்படுத்தக் கொண்டு கடவுள் காட்டுகின்ற பாதையில் அனுதினமும் பயணிப்பதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

நீர் இறை மகன்! நீரே இஸ்ராயேல் மக்களின் அரசர்! (05-01-2023)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
 இயேசுவை அறிந்து கொண்ட சீடர்கள் தாங்கள் அறிந்த இயேசுவைப் பற்றி அடுத்தவருக்கு அறிவித்து, அதன் அடிப்படையில் மற்றவரையும் இயேசுவை நோக்கி அழைத்து வருவதைத் தான் இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்க கேட்கின்றோம். 

 நத்தானியேலை அழைத்து வருகிறார்கள். இந்த நத்தானியலை குறித்து ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறக்கூடிய வார்த்தைகளை கண்டு நத்தானியல் ஆச்சரியப்படுகிறார். ஆனால் ஆண்டவர், இவற்றை சொல்லுவதனால் நீ என்னை நம்புகிறாயா? இதையும் விட இன்னும் மேலானவற்றை நீ காண்பாய் என்று சொல்லி, நத்தானியேலை தன் பணிக்கென இயேசு ஏற்றுக் கொள்வதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக நாம் உணர்ந்து கொள்கிறோம். 

                           நாம் அறிந்திருக்கின்ற   இயேசுவை எதன் அடிப்படையில் நாம் அறிந்திருக்கிறோம்? ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பி பார்ப்போம். அறியாத நேரத்தில், இன்னல்களும் இடையூறுகளும் சந்தித்தபோது இந்த இறைவனின் உடன் இருப்பை உணர்ந்தவர்களாக இந்த இறைவன் மீது நம்பிக்கை கொண்டிருந்தாலும் கூட, இந்த இறைவன் நம்மை ஒவ்வொரு நாளும் கரம் பிடித்து வழிநடத்தக் கூடியவராக இருக்கிறார். நமது வாழ்வில் நாம் காணும் வகையில் மென்மேலும் பலவிதமான அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்ய வல்லவர் இந்த ஆண்டவர் என்பதை உணர்ந்தவர்களாக ஒவ்வொரு நாளும் இந்த ஆண்டவரை தேடிச் செல்லுகின்ற மனிதர்களாக நத்தானியேலைப் போல நீங்களும் நானும் இருப்பதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார். 

மெசியாவை கண்டோம் ! (04-01-2023)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய  நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்! 
      இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோவான் இயேசுவை மெசியா என சுட்டிக்காட்ட, அவருடைய சீடர்களை இந்த இயேசுவை பின் தொடரச் செல்ல அனுப்பி வைப்பதை நாம் வாசிக்கின்றோம். அதே சமயம் இயேசு தம் பணிக்கென சீடர்களை அழைப்பதை இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம்.

         நாமும் ஆண்டவரின் வார்த்தைகளை அனுதினமும் கேட்கின்றோம். இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றுமே நம்மை ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக மாறுவதற்கான அழைப்பை தருகின்றன. இந்த அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாக நாள்தோறும் நாம்  கேட்கின்ற இறைவார்த்தையின்
 அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகின்ற உண்மைச் சீடர்களாக இருப்பதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

திங்கள், 2 ஜனவரி, 2023

இயேசுவை அறிவிப்போம்! (03-01-2023)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்! 


 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை திருமுழுக்கு யோவான் அறிமுகப்படுத்துவதை இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம்.  நாம் அறிந்திருக்கின்ற ஆண்டவர் இயேசுவை நாமும்  அடுத்தவருக்கு அறிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம். ஆண்டவரை அறிமுகப்படுத்துவது என்பது நம்முடைய சொல்லாலும் செயலாலும், இந்த இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள் நாம் என்பதை மற்றவர்கள் அறியும் வண்ணம்,  நமது வாழ்வில் நமது சொல்லிலும் செயலிலும் இந்த இயேசுவின் மதிப்பீடுகள் பிரதிபலிக்க வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு வலியுறுத்துகின்றன.
        இந்த வலியுறுத்தலின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, அனுதினமும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துகின்ற மனிதர்களாக நமது சொல்லும் செயலும், அமைவதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

திருமுழுக்கு யோவானைப் போல (02-01-2023)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
   திருமுழுக்கு யோவானுடைய பணியைக் கண்டவர்கள், இவர்தான் மெசியாவாக இருக்குமோ என்ற எண்ணத்தோடு,  நீர்தான் மெசியாவா?  என்ற கேள்வியை எழுப்பிய போது தன் நிலையை உணர்ந்தவராக, தான் எதற்கு இந்த சமூகத்திற்கு வந்தோம்? தனக்கென அர்ப்பணிக்கப்பட்ட பணி எது என்பதை நன்கு உணர்ந்திருந்த யோவான், தான் யார் என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்து, ஆண்டவரின் வருகைக்கு அவர்களை ஆயத்தப்படுத்துகின்றார். 

இந்த திருமுழுக்கு யோவானைப் போல, நீங்களும் நானும், நமது வாழ்வை சீர்தூக்கி பார்த்து, நமக்கென்ன கடவுள் இந்த சமூகத்தில் கொடுத்திருக்கிற பணிகள் என்ன என்பதை உணர்ந்து கொண்டவர்களாக, நாளும் ஒரு முன்மாதிரியான வாழ்வை வாழக் கூடியவர்களாக, மற்றவர்களுக்கு  நல்லதொரு முன்மாதிரிகளாகத் திகழ்வதற்கான ஆற்றலை இன்றைய நாளில் இறைவனிடத்தில் கொண்டு போவோம் இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

புத்தாண்டுப் பெருவிழா! (01-01-2023)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு உரித்தாக்குகிறேன்!
 கடந்த வருடம் முழுவதுமாக எத்தனையோ நன்மைகளை செய்த கடவுள், புதிய வருடத்தை நமக்கு தந்திருக்கிறார். இந்த நல்ல நாளிலே கடவுளுக்கு நாம் நன்றி செலுத்துவோம். எப்படி ஆண்டவர் இயேசுவின் பிறப்புச் செய்தி இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டபோது மகிழ்ச்சியோடு அந்த செய்தியை ஏற்றுக்கொண்டு இயேசுவைக் காணச் சென்று, கண்ட இயேசுவை மற்றவர்களுக்கு அறிவித்தார்களோ, அதுபோல கடந்த வருடம் முழுவதுமாக கடவுள் நமக்கு செய்த எல்லா விதமான நன்மைகளையும் நன்றியோடு நினைவு கூர்ந்து நன்றி சொல்லி அவர் தந்திருக்கின்ற இந்த புதிய வருடத்தில் அவருக்கு உகந்த மனிதர்களாக, அவரது வார்த்தைகளை இதயத்தில் இருத்தியவர்களாக, பிறந்து இருக்கின்ற பாலன் இயேசு நமக்கு மகிழ்வைத் தருவார், அந்த மகிழ்ச்சியை ஒவ்வொரு நாளும் கண்டு கொள்ளுகின்ற மனிதர்களாக, மகிழ்வோடு ஒருவர் மற்றவரோடு இணைந்து வாழ்வதற்காக இந்த புதிய வருடம் முழுவதும் நாம் முயற்சிக்க அழைக்கப்படுகிறோம்.  

இந்த புதிய வருடத்தில் பழைய சிந்தனைகளை எல்லாம் கடந்து எறிந்தவர்களாக நம் வாழ்வில் இருந்த ஏற்ற இறக்கங்களை எல்லாம் எண்ணி   வருந்துவதை விட்டு விட்டு, இந்தப் புதிய வருடத்திலிருந்து  புதிய முயற்சிகளை எடுக்கக்கூடியவர்களாக நாளும் ஆண்டவரின் வார்த்தைகளை ஆழமாக வாசிக்கவும், வாசிக்கின்ற வார்த்தைகளை நமது வாழ்வாக மாற்றிக் கொள்ளவும் இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இந்த இறைவன் இந்த வருடம் முழுவதும் நம்மைத் தொடர்ந்து ஆசிர்வதிப்பாராக. 

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...