வெள்ளி, 31 டிசம்பர், 2021

J. sahayaraj

J. Sahayaraj

மலர்ந்தது ஆசீர்வாதத்தின் ஆண்டு...(01.01.2021)

மலர்ந்தது ஆசீர்வாதத்தின் ஆண்டு...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!


வருடத்தின் முதல் நாளாகிய இன்றைய தினத்தினை  திருஅவை அன்னை மரியாவை,  கடவுளின் தாய் மரியாவை நினைவு கூர அழைப்பு தருகிறது.

 ஏன் இத்தகைய ஒரு அழைப்பு? என சிந்திக்கின்ற போது ...... பிறந்துள்ள இந்த புதிய ஆண்டு நமக்கு ஆசிகளின் ஆண்டாக கருதப்படுகிறது.

இழந்துபோன ஆசிகளை நாம் பெற்றுக் கொள்வதற்கான ஒரு ஆண்டாகவே இந்த புதிய ஆண்டு பார்க்கப்படுகிறது....

     இறைவன் படைத்த இந்த அழகிய உலகத்தில் பொதுநல சிந்தனையோடு வாழவேண்டிய மனிதன்,   சுயநலத்தோடு வாழ துவங்குகிறான்....  

இறைவன் படைத்த இந்த அழகிய உலகத்தை அடுத்தவரின் நலனுக்கு என அக்கறையோடு பேணிக் காப்பதற்கு பதிலாக, தன் நலனை மட்டும் முன்னிறுத்தி மற்றவரின் நலனை கருத்தில் கூட  கொள்ளாத நிலையை மனிதன் உருவாக்கி கொண்டான் ....

 அதனால் மனிதன் சந்தித்த விளைவுகள் ஏராளம்..... கடந்த வருடத்தை சிந்திக்கின்ற போது, இக்கட்டான கொடிய நோய் காரணமாக, என்ன செய்வது எனத் தெரியாது, மனித வாழ்வே மாற்றம் பெற்றிருக்கிறது.

      ஓடியாடித் திரிந்த மனிதன் வீட்டுக்குள் முடங்கிப் போன சூழல் உருவாகியுள்ளது.  கொரோனாத் தாக்கம் குறைந்ததாக கூறினாலும்,  அந்த தாக்கம் ஏற்படுத்திய அச்சம் இன்னும் மனதில் இருந்து அகலவில்லை.

        நிகழுகின்ற இந்த இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இறைவன் தந்துள்ள இந்த புதிய ஆண்டு நமக்கு ஆசிகளை வழங்கும் ஆண்டாக உள்ளது.... 

கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என்பதன் அடிப்படையே நமது தாய்.  

ஒரு தாயின் வழியாகவே ஒரு சமூகம் உதயமாகிறது. நம்மை இவ்வுலகத்திற்கு ஒரு தாய் தான் அறிமுகப்படுத்துகிறார்.   தாயிடமிருந்தே ஒரு குழந்தை பலவற்றை கற்றுக் கொள்கிறது.  தன் தாயிடம் காணப்படுகின்ற தன்னம்பிக்கையானது குழந்தைகள் உள்ளத்தில் வேரூன்றுகிறது. 

      ஒரு தாய், தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதுகாப்போடு இந்த உலகத்திற்கு கொண்டு வருவதற்காக, தன் இன்ப துன்பங்களை தியாகம் செய்து, நமக்காக தன் ஆசாபாசங்களை குறைத்துக்கொண்டு நமக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவள்.  

நாம் பிறப்பதற்கு முன்பாகவே நமக்கான உணவை இறைவன் இந்த தாய்மார்கள் வழியாக ஏற்பாடு செய்திருக்கிறார்.  இந்த தாய்மார்களும் இறைவனின்  திட்டத்திற்குச் செவி கொடுத்தவர்களாய், அவர் கொடுக்கும் விலை மதிப்பில்லா பரிசாகிய குழந்தைகளை நல்ல முறையில் பாதுகாப்போடு இச்சமூகத்திற்கு கொண்டு வருகிறார்கள்.  இந்த தாய்மார்கள் தான் நமது வாழ்வின் ஆசியாக விளங்குகிறார்கள்.

        இயேசுவின் வாழ்விலும் இந்த தாய் தான் ஆசியாக விளங்கினார்.  எனவே தான்,  தனது இன்னுயிரை தியாகம் செய்வதற்கு முன்பாக தன்னிடமிருந்த ஒரே சொத்தான தன் தாயை, யோவானை நோக்கி, "இதோ உன் தாய்!" என்று கூறி, இந்த அகிலத்தின் தாயாக மாற்றிவிட்டு இயேசு தன் இன்னுயிரைத் தியாகம் செய்தார். இயேசு கொடுத்த ஆசிகளுள் தலை சிறந்தது இந்த தாயன்பு.  

      பொதுவாக கூறுவார்கள்,  கடவுள் இந்த பூமிக்கு வர முடியவில்லை. எனவே தான் தாயை அனுப்பி வைக்கிறார் என்று.  தாய்மார்கள் தான் நம்முடைய ஆசியாக இருக்கிறார்கள்.

 ஒரு குடும்பத்தில் உணவு சூடாக இருந்தால் கணவர் சாப்பிடுவார். சுவையாக இருந்தால் பிள்ளைகள் சாப்பிடுவார்கள். ஆனால், உணவு மீதம் இருந்தால் மட்டுமே சாப்பிடக்கூடிய தாய்மார்கள் இன்றும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.  நமது நலனை முன்னிறுத்தி  தியாகங்களை மேற்கொள்வார்களுள் தாய்க்கு இணை வேறு யாருமில்லை .  இந்த தாய்மார்கள் தான் நமக்கு இவ்வுலகில் கிடைத்த மிகப் பெரிய ஆசீர்வாதம். 
        இந்த ஆசீர்வாதத்தினை நாம் உணர்ந்து கொள்ளவே, 
இந்த ஆசீர்வாதத்தை தருகின்ற இந்த ஆண்டில் நாம் ஒவ்வொருவரும் கடவுளின் தாய் ஆம் அன்னை மரியா வழியாக நமது தாய்மார்களை  நினைவு கூர அழைக்கப்படுகிறோம்.  


புதுவருடம் பிறந்தால் பெற்றோரிடம் சென்று சிலுவை அடையாளம் பெறுவது,  ஆசிகளைப் பெறுவது நமது  வழக்கமாக இருந்த  ஒன்று. இன்று அவை மறைந்து கொண்டிருக்கிறது. அவைகளை  புதுப்பித்துக் கொள்ளும் நேரம் இது.  நமது குடும்பத்தில் நாம் பெரியவர்களிடமும், பெற்றவர்களிடமும் சென்று, அவர்களிடம் இருந்து ஆசிகளை பெற்றுக்கொள்வோம்.  அந்த ஆசிகள் மூலமாக நாம் இந்த சமூகத்தில் மற்றவருக்கு ஆசிகளை வழங்கக்கூடிய வகையில், நமது வாழ்வை நேரிய முறையில் நல்ல வாழ்வாக அமைத்துக் கொண்டு பயணிக்க, இந்த நாள் அழைப்பு தருகிறது.  

பிறந்திருக்கின்ற இந்த ஆண்டிலே,  நாம் கடவுளின் ஆசிகளை பெற்றவர்களாக வாழ இறையருள் வேண்டி இணைவோம் இன்றைய நாள் திருப்பலியில்.

நமது தாய்மார்களை நன்றியோடு நினைவு கூர்வோம்... (1.1.2022)

 

நமது தாய்மார்களை நன்றியோடு நினைவு கூர்வோம்...    


 "முற்றும் துறந்த முனிவர்களாலும் கூட துறக்க முடியாதது தாயன்பு" என்று கூறுவார்கள்.  வருடத்தின் முதல் நாளாகிய இன்றைய நாளில் நாம் அன்னையை நினைவு கூறுகிறோம் என்றால், அன்னைக்கு நாம் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை இன்றைய நாளில் உணர்ந்துகொள்ள அழைக்கப்படுகின்றோம். தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை.  கடவுளால் நேரடியாக பூமிக்கு வர இயலவில்லை. எனவே தான் அதற்கு பதிலாகத் தான், தாயை அனுப்பி வைத்திருக்கிறார் என்றெல்லாம் கூறுவார்கள்.

    நமக்காக பல தியாகங்களை முன்னெடுப்பவள் தான் தாய். நாம் பிறப்பதற்கு முன்பாகவே நமது நலனில் அக்கறை கொண்டு தியாகங்கள் செய்யும் தியாகத் தலைவியாக மாறியவள் தான் ஒவ்வொரு தாயும்.  இன்றைய நாளில் தாயை நினைவு கூருவது தரணியில் கடவுளை நினைவு கூருவதாக கருதப்படுகிறது. வருடத்தின் முதல் நாளான இன்று, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தாய் அன்னை மரியாள், சமூகத்தில் இருந்த பல துன்பங்களுக்கு மத்தியிலும் நமக்காக மாபரன் இயேசு கிறிஸ்து இம்மண்ணில் பிறப்பதற்காக  அனைத்து விதமான துயரங்களையும் ஏற்றுக்கொண்டு ஆண்டவரின் கட்டளைக்கு செவி கொடுத்து துன்பத்தை ஏற்று நமது மீட்புக்கு உதவி செய்தார்.

    இன்று வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டு, தனக்கு எதுவும் இல்லை என்றாலும் தனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அனுதினமும் நமது நலனில் அக்கறை கொள்ளும் நமது தாய்மார்களை, நன்றியோடு நினைவு கூர்ந்து அவர்கள் வழியாக இச்சமூகத்தில் நல்லவொரு மனிதர்களாக நாம் உருவாகிட, அவர்களிடம் இருந்து பாடம் கற்றிட, இன்றைய நாளில் நம்மை அழைக்கும் இறைவனின் குரலுக்கு தன்னார்வ மனதோடு, செவி கொடுத்து வாழ்வில் மாற்றத்தை உருவாக்குவோம்.



வியாழன், 30 டிசம்பர், 2021

ஆழமான நம்பிக்கை கொண்டவர்களா,,,,(31.12.2021)

ஆழமான நம்பிக்கை கொண்டவர்களா,,,,

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 

"வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்!" என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப நமக்காக நம்மை தேடி வந்து நம் மத்தியில் பிறந்து இருக்கின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக, நாம் தொடர்ந்து பயணிக்க இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது. வார்த்தை மனுவுருவானார் நம்மிடையே குடிகொண்டார் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப வார்த்தையான இறைவன் வாக்களித்த வண்ணமாய் நம்மைத் தேடி வந்து நம் மத்தியில் பிறந்து இந்த வருடம் முழுவதும் பலவிதமான இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் மத்தியில் நம்மை வழிநடத்தி, பராமரித்து இருக்கிறார்.  அவரை நன்றியோடு நினைவு கூர்ந்து நன்றியோடு இந்த நாளை நிறைவு செய்ய நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.  இந்த வருடத்தில் நம்மோடு இருந்த பல உறவுகளை நாம் இழந்திருக்கலாம். நிலவிய கண்ணுக்குத் தெரியாத கொடிய நோயின் தாக்கத்தில் காரணமாக பல உறவுகளை நாம் இழந்திருக்கிறோம். ஆனால் இறைவன் நம்மை விசேஷ விதமாக பாதுகாத்து பராமரித்து வழிநடத்தி வருகிறார். இந்த நல்ல நாளில் அவரது உடனிருப்பை நாம் கண்டு கொள்வோம்.  நம்மைத் தேடி வந்து நம்மோடு நம் மத்தியில் பிறந்து மனிதனோடு மனிதனாக வாழ்ந்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பாதையில் நமது வாழ்வை அமைத்துக் கொண்டவர்களாக ஆழமான நம்பிக்கையோடு அவரது பணியைச் செய்யக் கூடியவர்களாக, அவரது வார்த்தைகளின்படி வாழக் கூடியவர்களாக மாறிட இறைவன் புதிய ஆண்டினை நமக்கு தருகிறார். இறைவன் தருகின்ற அந்த புதிய ஆண்டில், அவரது வார்த்தைகளை வாழ்வாக்கக் கூடிய மனிதர்களாகவும், அந்த இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்க அருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக ஜெபிப்போம்.

புத்தாண்டு திருப்பலி முன்னுரை

புத்தாண்டு திருப்பலி
முன்னுரை

இறைவன் படைத்த இந்த அழகிய உலகத்தில் நாம் எப்போதும் மகிழ்ந்திருக்க அடுத்தவரையும் மகிழ்விக்க ஆசிகளை வழங்க ஆசிகளைப் பெற்றுக் கொள்ள ஆண்டவர் நமக்கு புதியதொரு ஆண்டினை இன்று தந்துள்ளார்.

இந்த புதிய ஆண்டில் இறைவன் நமக்கு ஆசிகள் பலவற்றை தந்து இனி வருகின்ற நாட்களில் நம்மை வழிநடத்த இருக்கின்றார்.
இந்த நல்ல நாளை திருஅவை  இயேசுவின் தாய் மரியா என்பதை   நினைவுகூர்ந்து சிறப்பிக்க நமக்கு அழைப்பு தருகின்றது 

நம்மிடையே  இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கக்கூடிய கொடிய நோயின் அச்சத்தில் இருந்தும், தனித்து வாழும் தனிமை உணர்விலுருந்தும் நம்மை விடுவித்து, நமக்கு வேண்டியதை செய்து நம்மை காக்கின்ற பணியில் இறைவன் அன்று இஸ்ரயேல் மக்களே  பகலில் மேகத்தூணாகவும், இரவில் நெருப்பு தூணாகவும் இருந்து காத்தது போல பிறந்துள்ள இப்போதைய ஆண்டில் இறைவன் நம்மை காத்து நமக்கு ஆசிகளைத் தந்து நம்மை ஆசியாக இவ்வுலகத்தில் விளங்கச் செய்யவுள்ளார்.

இந்த இறைவனை நம்பிக்கையோடு எதிர்கொள்வோம்... பிறந்துள்ள இந்த புதிய ஆண்டில் அவரது ஆசிகளைப் பெற்று செல்வோம்.... நாம் பெற்ற ஆசிகளை ஒருவர் மற்றவரோடு பகிர்ந்து கொள்வோம்... இதற்கான அருளை வேண்டி இன்றைய நாள் திரு வழிபாட்டில் பக்தியோடு பங்கெடுப்போம்.




மன்றாட்டுக்கள்

1. அன்பே உருவான இறைவா எம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவியர் அனைவரையும் பிறந்துள்ள புதிய ஆண்டில்  நீர்  அவர்களை  உமது  பாதுகாப்பில் வைத்து பராமரித்துக் கொள்ளும் ...அவர்களுக்கு நல்ல உடல் உள்ள சுகம் தந்து அவர்கள் முன்னெடுக்கின்ற பணிகளில் அவர்களோடு இருந்து உமது மக்களை நல்வழிப்படுத்த அவர்களுக்கு தேவையான ஆற்றலை உமது பிறப்பு அவர்களுக்கு தர வேண்டுமாய் இந்நேரத்தில் இறைவா உம்மை நோக்கி வேண்டுகிறோம் .

2. பாலன் இயேசுவே! பிறந்துள்ள இப்போதைய ஆண்டில் எமது நாட்டை ஆளும் தலைவர்களை உமது பாதம் அர்பணிகின்றோம். அவர்கள் தன்னலம் துறந்து பொது நலத்தோடு ஒருவர் மற்றவருக்கு தேவையான செய்து மக்களின் நலனை காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை  மன்றாடுகிறோம்.  

3. ஆற்றல் தருகின்ற ஆண்டவரே இன்று புதிதாய் பிறந்துள்ள புதிய ஆண்டில்  இந்த அகிலத்தில் நிலவுகின்ற இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் எங்களுக்கு நம்பிக்கையையும், எங்கள் வாழ்வில் அமைதியையும் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.  அன்பு இறைவா எம் பங்கில் இருக்கின்ற அனைவருக்காகவும் பிறந்துள்ள புதிய ஆண்டில்  மன்றாடுகின்றோம். எங்களை ஒவ்வொரு நாளும் பாதுகாத்து, பராமரித்து நல்லதொரு குடும்பமாக உமது வார்த்தையின்படி வாழக்கூடிய மக்களாக எங்களை வழி நடத்திட எங்களுக்கு தேவையான ஆற்றலை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

5. ஆசிகளை வழங்கி எங்களை நல்வழி நோக்கி நடத்துகின்ற அன்பு இறைவா புதிய ஆண்டில் நாங்கள் பெற்றுக் கொண்ட ஆச்களை பிறரோடு பகிர்ந்து கொள்ளவும் உமது ஆசியை பெறக்கூடிய வகையில் தகுதியான மக்களாக ஒவ்வொரு நாளும் வாழவும் உமது அருளை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


புதன், 29 டிசம்பர், 2021

நலமான பணிகளை முன்னெடுக்க...(30.12.2021)

நலமான பணிகளை முன்னெடுக்க...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் வார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 முதிர்ந்த வயதிலும் ஆண்டவரின் பணியினை செய்து கொண்டிருந்த அன்னாவின் வாழ்வு இன்று நமது வாழ்வை திருப்பி பார்க்க அழைப்பு தருகிறது. வயதாக துவங்குகிறது என அறிகின்ற போதே நம்மை நாம் சுருக்கிக்கொண்டு அடுத்தவரோடு கொண்டுள்ள உறவில் இருந்து சற்று விலகியவர்களாக, நமக்கு நாமே  சொல்லிக் கொண்டு, நாம் முதிர்ந்தவர்கள்; நம்மால் முடியாது என சொல்லிக் கொள்ளக் கூடியவர்களாக மாறிப் போகின்ற நமது வாழ்வில், முதிர்ந்த வயதிலும் ஆண்டவரின் திருப் பணியினை அயராது செய்து கொண்டிருந்த அன்னாவின் வாழ்வு,  நமது வாழ்வில் நாமும் முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதை எடுத்துரைக்கக் கூடிய ஒன்றாக அமைகிறது.

 அப்துல்கலாம் அவர்கள்  கூறுவார், நீ முடியாது என சொல்லுகின்ற ஒன்றை எங்கோ யாரோ ஒருவர் செய்து கொண்டுதான் இருக்கிறார். யாரோ ஒருவரால் முடிகிறது என்றால், அது ஏன் உன்னால் இயலாது  என்று.

 நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நாமும் நம்பிக்கையோடு இருந்தால்,  இதில் எந்த வயதினராக இருந்தாலும் இறைவனது பணியான இறையாட்சியின் மதிப்பீடுகளை நமது வாழ்வில் வெளிப்படுத்த முடியும்.  இத்தகைய முயற்சியில் ஈடுபடுவதற்கு வயது ஒரு காரணமல்ல. இத்தகைய முயற்சியில் ஈடுபடுவதற்கு நமது பொருளாதாரம் ஒரு காரணம் அல்ல. இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு நேரம் என்பது ஒரு காரணம் அல்ல.  எல்லா சூழ்நிலையிலும் நாமும் அன்னாவைப் போல இறைவனது பணியினை செய்யக்கூடியவர்களாக, இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்வாக்கக் கூடியவர்களாக இருக்க இன்றைய நாள் அழைப்பு தருகிறது. இறைவனின் அழைப்பை உணர்ந்து கொண்டு, நம்பிக்கையோடு பல நலமான பணிகளை முன்னெடுக்க இறையருள் வேண்டுவோம்.

செவ்வாய், 28 டிசம்பர், 2021

வாழ்வை உரிமையாக்கிட...(29.12.2021)

வாழ்வை உரிமையாக்கிட...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு மக்களாகிய நாம் அவரை அறிந்து கொள்வதற்கான ஒரே வழி அவரது கட்டளையை கடைப்பிடிப்பதாகும்.  அவரது கட்டளை என்பது பின்பற்ற இயலாத கடினமான கட்டளை அல்ல, அன்பு கட்டளை.  கண்ணில் காணும் எந்த ஒரு மனிதனையும் நாம் அன்பு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதே அந்த கட்டளை ஆகும்.  

அந்த கட்டளைக்கு ஏற்ப நாம் வாழுகின்ற போது, இறைவனை அறிந்து கொள்ள முடியும்.  இந்த கட்டளைகளை பின்பற்றி வாழுகின்றவர்கள் எல்லாம் ஒளியில் வாழக்கூடியவர்களாக கருதப்படுகிறார்கள். 

      இன்று ஒளியில் வாழ்கிறேன் எனச் சொல்லிக்கொண்டு, தம் சகோதரர் சகோதரிகளை மன்னிக்காது வாழக்கூடியவர்கள் எல்லாம் ஒளியில் வாழ்வதாக சொல்லிக்கொண்டு இருளில் வாழ்பவர்கள் என  குறிப்பிடுகிறது, இன்றைய முதல் வாசகம்.  இவ்வாசகத்திற்கு ஏற்ப நமது வாழ்வை நாம் சீர்தூக்கிப் பார்க்க அழைக்கப்படுகிறோம். 

 நற்செய்தி வாசகத்தில் கூட  பிறந்த இயேசுவை சிமியோன் கையில் ஏந்தி இறைவாக்கு உரைத்தார்.  இந்த குழந்தை பலரின் வீழ்ச்சிக்கும் பலரின் எழுச்சிக்கும் காரணமாக அமையும் என்றார்.  யாருடைய வீழ்ச்சி யாருடைய எழுச்சி என சிந்திக்கின்ற போது இந்த குழந்தையானது அன்று சமூகத்தில் நாங்கள் மட்டுமே நல்லவர்கள் நாங்கள் மட்டுமே கடவுளின் கட்டளையை பின்பற்றுபவர்கள், கடவுளுக்கு உரியவர்கள் எனச் சொல்லிக்கொண்டு மக்களை அடக்கி ஆளக்கூடிய பணியை செய்து கொண்டிருந்த ஒளியில் வாழ்வதாக சொல்லிக்கொண்டு இருளில்
வாழ்ந்து கொண்டிருந்த அதிகார வர்க்கத்தினரை ஆதிக்க சக்தியினரின் சக்திகளின் வீழ்ச்சிக்கும் சராசரி சாதாரண மனிதர்களின் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும் என புரிந்து கொள்ளலாம்.  

ஒருவர் மீது குற்றம் காண துவங்கினால் அவரை அன்பு செய்வதற்கான நேரம் இருக்காது எனக் கூறுவார்கள். குற்றம் காண்பதை தவிர்த்து ஒருவர் மற்றவரை செய்வோம்.


        இன்று  நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நமது வாழ்வை இந்த இறை வார்த்தைகளின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்ப்போம்‌.  நாம் ஒளியில் வாழக்கூடிய மக்களாக திகழ வேண்டுமாயின் இறைவனது வார்த்தைகளுக்கு செவி கொடுத்து அவரது கட்டளையை பின்பற்றக் கூடியவர்களாக ஒருவர் மற்றவரை மன்னித்து அன்போடு வாழ அழைக்கப்படுகிறோம்.  இத்தகைய வாழ்வே இறைவனுக்கு உகந்த வாழ்வாக கருதப்படுகிறது. இத்தகைய வாழ்வை நாம் நமது உரிமையாக்கிக் கொள்ள இறைவனது அருளை இணைந்து இந்த திருப்பலியில் வேண்டுவோம்.

மாசில்லா குழந்தைகள் தினம் ...(28.12.2021)

மாசில்லா குழந்தைகள் தினம் ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்று தாய்த் திருஅவையானது மாசில்லா குழந்தைகளை நினைவு கூர நமக்கு அழைப்பு தருகிறது.  ஆண்டவர் இயேசு பிறந்தபோது  இயேசுவின் பிறப்பு ஏரோது அரசனுக்கு அறிவிக்கப்படுகிறது. ஏரோது அரசன் தன்னை மிஞ்சும் வகையில் தனக்கு எதிராக ஒரு குழந்தை பிறந்திருப்பதாக எண்ணி கலங்கினான். தன் கலக்கத்தின் விளைவாக குழந்தைகளை திட்டம் தீட்டினான். அதன் விளைவாக பல குழந்தைகளை கொல்ல ஆணையிட்டான். அவ்வகையில் கொல்லப்பட்ட பல குழந்தைகளை, இயேசுவுக்காக மறைசாட்சிகளாக மாறிய மாசற்ற குழந்தைகளை நினைவு கூரவே திருஅவை இந்த நாளை நமக்கு தந்திருக்கிறது. 
  நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் இந்த மாசற்ற குழந்தைகளை நினைவு கூருகின்ற இந்த தருணத்தில் இந்த மாசற்ற குழந்தைகளின் திருவிழாவானது நமக்கு எத்தகைய பாடத்தை தருகிறது என சிந்திக்கின்ற போது,  இன்று ஆங்காங்கே மாசற்ற குழந்தைகளின் இழப்பானது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பது மறுக்கவியலாத உண்மை. தன்னை முன்னிலைப்படுத்திய வாழ்வில் மனிதன் சிசு என பாராமல் சிறுவயதிலேயே அவர்களை அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

 மற்றவர் முன்னிலையில் தன் குழந்தையை அறிமுகப்படுத்த அஞ்சுகின்ற பெற்றோர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.  குறைகளோடு பிறக்கின்ற குழந்தைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இன்று எல்லோரிடமும் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. குறையோடு ஒரு குழந்தை இருப்பதாக உணர்கின்ற போது அக்குழந்தையை என் மண்ணிற்கு கொண்டு வருவதற்கு முன்பாகவே அழித்துவிடக் கூடிய சூழலும் இச்சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்னும் குறிப்பாக மதுரைக்கு அருகில் இருக்கக்கூடிய உசிலம்பட்டி போன்ற சில கிராமங்களில் இன்றும் பெண் குழந்தை என அறிந்து அவர்களை அழித்துவிடும் சூழல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சுசு விலையை அவர்களை அழித்து விடுவதற்கான சூழல் அங்கெல்லாம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 
         கடவுள் கொடுத்த விலை மதிப்பற்ற செல்வம் ஆகிய நமது குழந்தைகளை பாதுகாக்கவும் பேணி வளர்க்கவும் நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டிருக்கிறோம். நமது எண்ணங்களையும் விருப்பங்களையும் திணிப்பதற்கான இடமல்ல குழந்தைகள். குழந்தைகள் கடவுளின் நற்செய்தியை இந்த உலகிற்கு தாங்கிக் கொண்டு வந்தவர்கள். அவர்கள் குறைகளோடு இருந்தாலும் அழகற்று இருந்தாலும் அவர்கள் கடவுளின் விலைமதிப்பற்ற பரிசு. இந்தக் குழந்தைகளை பாதுகாக்கவும் பேணி வளர்க்கவும், நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இதனை செய்வதற்கு பதிலாக இன்று பல இடங்களில் சிறு வயதிலேயே அவர்களை அழித்து விடுவதற்கான சூழல் இன்றும் தொடர்கிறது.  குறிப்பாக போர் என்று வருகின்றபோது அறநெறி மையும் மீறி பல  சிறு குழந்தைகள் கொல்லப்படுகின்ற நிகழ்வு இன்றும் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கிறது. 

     இந்த மாசற்ற குழந்தைகளை நினைவு கூருகின்ற இந்த நாளில் நாம் நமது குழந்தைகளுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். நமது குழந்தைகளை இறைவன் வழி நடத்தியதற்காக நன்றி சொல்வோம். கடவுள் நமக்கு கொடுத்த விலைமதிப்பற்ற பரிசாகிய நமது குழந்தைகளுக்காக நன்றி சொல்வோம். இந்த குழந்தைகளை அன்போடும் அக்கறையோடும் பேணி வளர்க்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த குழந்தைகள் அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் எழலாம். நான் அறியாத அனைத்தையும் கூட எனது குழந்தை அறிந்திருக்க வேண்டும் என எண்ணலாம். ஆனால் நமது எண்ணங்களை திணிப்பதற்கான இடம் குழந்தைகள் அல்ல என்பதையும், உமது உள்ளத்தில் ஆழமாகப் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். இன்று பல நேரங்களில் அடுத்தவரின் எண்ணங்களை நமது எண்ணங்களை திணிப்பதற்கான  இடமாகத் தான் பலர் தங்கள் குழந்தைகளை கருதுகிறார்கள். 
          ஏட்டில் இருப்பதெல்லாம் இதயத்துக்குள் பதிய வைப்பது மட்டுமல்ல கல்வி.  மாறாக ஒரு குழந்தையின் உள்ளிருப்பதை வெளிக்கொண்டு வருவது உண்மையான கல்வி என்பார்கள். சிறுபிள்ளைகளை நாம் உற்று நோக்குவோமானால் இந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். அன்றெல்லாம் ஒரு சிறு குழந்தை இருக்கிறது என்றால் அந்த குழந்தையை பாலூட்டி சீராட்டி வளர்த்தோம். விளையாடுவதற்கு அந்த குழந்தைக்கு நாம் பொம்மை வாங்கிக் கொடுத்தோம். அந்த பொம்மைகளை அவர்கள் தங்களைப் போலவே கருதினார்கள். அந்த பொம்மைக்கு தலை சீவுவார்கள், உணவு ஊட்டுவார்கள், குளிப்பாட்டுவார்கள். அதனை எப்பொழுதும் தங்கள் அருகில் வைத்துக் கொள்வார்கள். அந்த பொம்மைக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் வருத்தம் கொள்வார்கள்.  அந்த பொம்மையை காணவில்லை என்றால் துடிதுடித்து கதறுவார்கள். இத்தகைய உணர்வு எப்படி ஒரு குழந்தைக்கு வந்தது? என சிந்திக்கின்ற போது, அந்தக் குழந்தையானது இத்தகைய பண்புகளை தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும், ஒவ்வொரு நாளும் பெற்றுக்கொண்டே இருக்கிறது என்பதுதான் மறுக்கப்படாத உண்மை. நாம் ஒரு குழந்தையை எப்படி பராமரிக்கிறோமோ, அதனை அக்குழந்தையும் வெளிப்படுத்துகிறது. அதன் விளைவுதான் பொம்மை மீதான நாட்டங்கள்.   
                ஆனால் இன்று வியாபார உத்திகள், கவர்ச்சிகள், குழந்தைகளின் வாழ்வை சீரழிக்க தொடங்கியிருக்கிறது. பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளோடு நேரம் செலவிடுவதற்கு பதிலாக, அலைபேசியை கொடுத்துவிட்டு நாம் நமது வேலைகளில் மூழ்கி கிடக்கின்றோம். 

மாசற்ற குழந்தைகள் பெரு விழாவினை கொண்டாடுகின்ற இந்த நாள் நாம் நமது குழந்தைகளோடு கொண்டிருக்கின்ற உறவையும் நமது குழந்தைகளின் வளர்ச்சியில் நாம் எடுக்கக்கூடிய ஒவ்வொரு முயற்சியையும் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். கடவுள் கொடுத்த விலை மதிப்பற்ற பரிசாகிய குழந்தைகளை அன்போடும் அறத்தோடும் வளர்க்கவும், பேணி பாதுகாக்கவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். குறைகளோடு இருந்தாலும் சரி, இறைவன் கொடுத்த குழந்தைகளை இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வோம். குழந்தைகள் கண்டு வியக்கின்ற முதல் உலக அழகி யார் என பார்க்கின்ற போது அது தன் தாயாகத் தான் இருக்க முடியும். பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளை பேணி வளர்க்க, இறைவன் கொடுத்த குழந்தைகளுக்காக நன்றி கூற, நமது குழந்தைகளுக்காக இணைந்து இத்திருப்பலி வழியாக தொடர்ந்து ஜெபிப்போம்.

திங்கள், 27 டிசம்பர், 2021

மாசில்லா குழந்தைகளின் விழா...(28.12.2021)


மாசில்லா குழந்தைகளின் விழாl...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நாள் மாசில்லா குழந்தைகளின் விழாவினை கொண்டாட நமக்கு அழைப்பு தருகிறது.  அன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து பிறந்தார் என்ற  செய்தியை அறிந்து அவரை கண்டு வணங்க வந்த ஞானிகள் வழி தெரியாத நிலையில் ஏரோது அரசனிடம் சென்று வழி கேட்டார்கள்.  அவர்கள் கூறியதை கவனத்தோடு கேட்ட அரசன் இயேசுவின் பிறப்பைக் குறித்து அஞ்சினான். எனவே தாங்கள் வணங்க வந்திருக்கும் இயேசுவைப் பற்றி தகவல் தந்தால் தானும் சென்று அவரை  வணங்குவேன் எனக் கூறி,  நயவஞ்சகமாக இயேசுவை சிறுவயதிலேயே தீர்த்துக் கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டான். 

ஆனால் இந்த ஏரோதின் உள்ளத்தை இறைவனின் தூதர்கள் ஞானிகளுக்கு வெளிப்படுத்தி, ஞானிகளின் வழியை மாற்றினார்கள். ஞானிகளால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த ஏரோது அரசன்,  இரண்டு வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகள் அனைத்தையும் கொலை செய்ய ஆணையிட்டார்.  அதன் விளைவாக பல குழந்தைகள் அன்று கொல்லப்பட்டனர்.  அக்குழந்தைகளைத் தான் அந்த மாசில்லாத குழந்தைகளைத் தான் இன்று நாம் நினைவுகூர திருஅவை நமக்கு அழைப்பு விடுக்கிறது.
இயேசுவுக்காக அன்று இரத்தம் சிந்தியவர்களுள் முதன்மையானவர்கள் இந்த மாசில்லா குழந்தைகள்.


               பல இடங்களில், பல நேரங்களில் நமது அறியாமையாலும்,  நமது அலட்சியத்தாலும் பல குழந்தைகள் இறப்பை  சந்தித்துக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில், இறைவனின் படைப்பாக கருதப்படுகின்ற, இறைவனின் பரிசாக கருதப்படுகின்ற இந்த குழந்தைகளை பாதுகாத்து வளர்ப்பதில் மிகுந்த அக்கறையோடும் கவனத்தோடும் செயல்பட வேண்டியவர்களாக இருக்க அழைக்கப்படுகின்றோம். 

சிறுவயதில் சிறு குழந்தைகளின் உள்ளத்தில், நஞ்சை விதைக்கக் கூடியவர்களாக நாம் இல்லாது, அன்பையும் சகோதரத்துவத்தையும் வளர்க்கக்கூடிய மனிதர்களாக, நாம் இருப்பதற்கு திருஅவை நமக்கு அழைப்பு தருகிறது. 

         ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக, உயிரை தியாகம் செய்த சிறு குழந்தைகளை, நினைவு கூறுகின்ற இந்த நல்ல நாளில், நாம் நமது வாழ்வில் நமது குழந்தைகளை, எப்படி வளர்கிறோம்  என்பதை குறித்து சிந்திக்க இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.

        ஒரு குழந்தைக்கு கொடுக்கும் முறையான கல்வி என்பது, ஏட்டில் இருப்பதை இதயத்திற்கு கொண்டு செல்வது அல்ல மாறாக, அதன் உள்ளத்தில் இருப்பதை வெளிக்கொண்டு வருவதே இயல்பான கல்வி, ஒரு முறையான கல்வி. இத்தகைய கல்வியை நாம் நமது குழந்தைகளுக்கு வழங்கக் கூடியவர்களாக இருக்க, கடமைப்பட்டிருக்கிறோம். 

            ஒரு குழந்தையின் முதல் பள்ளிக்கூடம் தாயின் மடி என்பார்கள். தாயிடமிருந்தே தனது குடும்பத்திடம் இருந்தே ஒரு குழந்தை தனது வாழ்வுக்குத் தேவையான 60 சதவீதமான அறிவைப் பெற்றுக் கொள்கிறது என ஆய்வுகளின் அறிக்கைகள் கூறுகின்றன.

         நாம் வாழுகின்ற சமூகத்தில், நாம் நமது குழந்தைகளை, அவர்களிடம் இயல்பாக இருக்கின்ற திறமைகளை வெளிக்கொண்டு வரக்கூடியவர்களாக இதற்கு அழைக்கப்படுகிறோம். 

                   உதாரணமாக நாம் சிறு குழந்தைகளை உற்று நோக்குவோமாயின், சிறு குழந்தைகள் விளையாட்டு பொம்மையை கையில் வைத்துக் கொள்வார்கள். அந்த குழந்தைக்கு தலை சீவுவார்கள், குளிப்பாட்டுவார்கள், அழகிய ஆடைகளை அணிவிப்பார்கள், உணவு ஊட்டுவார்கள். இவையெல்லாம் அந்த குழந்தைகள் இயல்பாக செய்பவை‌. இதை யாரும் சொல்லிக் கொடுத்து செய்வது அல்ல. மாறாக, அந்தக் குழந்தைக்கு தாய் தந்தையரால் இத்தகைய பாசமும் இத்தகைய உணர்வுகளும் வழங்கப்படுகின்றன. 

                  தான் பெற்றுக் கொண்டதை, தனக்குள் இருக்கின்ற அந்த அன்பு உறவைத் தான், சிறு குழந்தைகள் விளையாட்டாக தங்கள் வாழ்வில் வெளிப்படுத்துகிறார்கள். ஒரு முறையான கல்வி என்பதும் குழந்தைகளுக்கு உள்ளே இருப்பதை வெளிக்கொண்டு வரக் கூடியதாக இருக்க வேண்டும்.  

         நமது குழந்தைகளை அன்போடும் பண்போடும் பராமரிக்கவும், நல்வழியில் வழி நடத்திச் செல்லவும் இந்த நாள் நமக்கு அழைப்புத் தருகிறது. 

    எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே!
அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னையின் வளர்ப்பினிலே!

       என்ற கவிஞரின் வார்த்தைகளுக்கு ஏற்ப, நாம் நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள குழந்தைகளை நல்வழியில் வளர்க்க கூடியவர்களாக வாழுவோம். அவ்வாறு வாழுகின்ற பொழுது, நம்மைப் பார்த்து வளரக்கூடிய நமது குழந்தைகள், ஒரு எடுத்துக்காட்டான சாட்சிய வாழ்வு வாழக் கூடியவர்களாக மாறுவார்கள். 
         எனவே மாசிலா குழந்தைகளை நினைவு கூருகின்ற இந்த தருணத்தில், 
நமது குடும்பங்களில் நாமறிந்த நமக்குத் தெரிந்த, அனைத்து குடும்பங்களிலும் இருக்கக்கூடிய சிறுவர்களை, நினைத்து பார்த்து,  அவர்களுக்காக இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். வளர்கின்ற போது இறைவன் அவர்களை அறிவிலும் ஞானத்திலும், சிறந்து விளங்கச் செய்ய வேண்டுமாய் இந்த திருப்பலியில் தொடர்ந்து, இணைந்து ஜெபிப்போம்.

ஞாயிறு, 26 டிசம்பர், 2021

வார்த்தையான இறைவன் வாழ்வாக ...(27.12.2021)

வார்த்தையான இறைவன் வாழ்வாக ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ...
 தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. 
 வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.
அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.
அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது.
யோவான் 1:1-4


என்ற இறை வார்த்தைக்கு ஏற்ப வாழ்வு தருகின்ற வாக்கிய இறைவன் இன்று நம்மத்தியில் பிறந்திருக்கிறார். பிறந்துள்ள எந்த இறைவன் நமது வாழ்வை இறை வார்த்தைகளின் அடிப்படையில் அமைத்துக் கொள்ள நமக்கு அறிவுறுத்துகின்றார்.

ஒரு அலுவலகத்தில் ராஜா ரவி என்ற இருவரும் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். இருவரும் நல்ல நண்பர்கள் வேலை முடிந்து வீட்டுக்குச் சென்றவுடன் இருவரும் தேநீர் அருந்தும் பழக்கம் இருந்தது. ராஜா தன் மனைவியிடம் தேனீர் கேட்டார் தேநீரில் ஒரு எறும்பு கிடந்தது கோபம்கொண்ட ராஜா மனைவியை கத்தத் தொடங்கினாள் மனைவியும் பதிலுக்கு கத்த தொடங்கினாள் வீடு எனது பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து அவர்களுக்கு இடையேயான சண்டையை நிறுத்தி அவர்களை மீண்டும் இணைத்து வைத்தனர். ரவியும் வீட்டிற்குச் சென்றார் மனைவியிடம் தேனீர் கேட்டார் அந்த தேநீரிலும் ஒரு எரும்பு கிடந்தது ரவி மனைவியை அழைத்து உன் தேநீருக்கு நான் தான் அடிமை என எண்ணி கொண்டு இருந்தேன் ஆனால் எனக்கு முன்பாகவே ஒருவன் அதை கொடுக்க முயற்சித்து தனது உயிரையே மாய்த்துக் கொண்டான் என்று கூறி எரும்பை காண்பித்தார் ரவி சொன்னதைக் கேட்டதும் அவரது மனைவி புன்னகையை உதிர்த்தாள் அதன் பிறகு அவள் தயாரித்த எந்த தேநீரிலும் எந்த எரம்பும் இறக்கவில்லை.

இருவருடைய நோக்கமும் ஒன்றுதான் தேநீர் தயாரிக்க சென்றபோது கவனத்தோடு இருங்கள் என்பது தான். ஒருவர் பயன்படுத்திய வார்த்தைகள் குடும்பத்தில் அமைதி இழக்கச் செய்தது இன்னொருவர் பயன்படுத்திய வார்த்தைகள் குடும்பத்தில் அன்பை மலரச் செய்கிறது நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகள்தான் நமது வாழ்வை தீர்மானிக்கின்றன அன்பான ஆறுதலான அடுத்தவருக்கு நலம் என்ற வார்த்தைகளை நாம் பயன்படுத்துகின்ற போது நமது வாழ்வு மகிழ்ச்சியான வாழ்வாக மாறுகிறது வார்த்தையான இறைவன் வாழ்வாக வந்தது போல நமது வார்த்தைகளால் நாம் நமது குடும்பங்களில் அன்பும் அமைதியும் சமாதானமும் நிலைத்திருக்க செய்ய இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது வார்த்தையான இறைவன் நம்மிடையே குடிகொள்ள குழந்தையாக பிறந்து இருக்கிறார் இந்த இறைவனை ஏற்றுக் கொண்ட மக்களாக நாம் ஒருவர் மற்றவரை வார்த்தைகளால் ஊக்கமூட்டும் அவர்களின் வளர்ச்சிக்கு உதவுகின்ற வகையில் ஆறுதல் தருகின்ற வகையில் நாம் நமது வார்த்தைகளை கையாளவும் இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது என்று நாம் நினைவு கூறுகின்ற யோவான் நற்செய்தியாளர் விதையே நமக்கு தெளிவுபடுத்துகிறார் இன்றைய முதல் வாசகத்தில்... தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம்; கண்ணால் கண்டோம்; உற்று நோக்கினோம்; கையால் தொட்டுணர்ந்தோம்.
யோ. 1:1 என்கிறது இந்த வார்த்தையான இறைவனைத் தான் நாம் நமது வாழ்வாக மாற்றிக் கொள்ள வேண்டுமென யோவான் நற்செய்தியாளர் இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் அவரை பின்பற்ற கூடிய அன்பு சீடராக அவருடைய இன்பதுன்ப அனைத்து நேரங்களிலும் அவருடன் இருந்தார் எனவே தான் சிலுவையில் தொங்கும் நேரத்தில் கூட தன்னிடம் இருந்த ஒரு சொத்தாகிய தன் தாய் அன்னை மரியாவை நமக்கு அன்னையாக இந்த யோவான் வழியாக நமக்கு கொடுத்தார்.

இந்த இறைவனின் அன்பை உணர்ந்து கொண்ட மனிதனாக , அன்பு சீடராக இயேசுவின் சிலுவை அடியில் நின்ற இந்த யோவானின் வாழ்வும் நமக்கு கற்பிக்கின்ற பாடம் இறைவனது வார்த்தைகள் நமது வாழ்வாக  வேண்டும் என்பதுதான் வார்த்தைகளை வாழ்வாக்குவோம்  வாழ்வை நலமக மாற்றிக்கொண்டு ஆண்டவரின் பாதையில் பயணம் செய்ய இறையருள் வேண்டி இணைவோம் இந்த திருப்பலியில்

வார்த்தையான இறைவன் ...(27.12.2021)

வார்த்தையான இறைவன் ...

ஆதியில் வார்த்தை இருந்தது அவ்வார்த்தை கடவுளோடு இருந்தது அவ்வார்த்தை கடவுளையும் இருந்தது ...

வார்த்தையான இறைவன் என்று நாம் நமது வாழ்வில் பயன்படுத்தும் வார்த்தைகளை குறித்து சிந்திக்க அழைப்பு தருகிறார்.

வார்த்தைகள் வழியாக கடவுளோடு இணைந்திருப்பவர் கடவுளின் மாண்பை காண்பர்!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

      ஒருமுறை சகோதரி ஒருவரின் வாழ்வில் மிகப்பெரிய போராட்டம் நிகழ்ந்தது. அவரின் ஆசிரியப் பணியில் அவரது உயர் அதிகாரிகளால் அவருக்கு மிகுந்த மன உளைச்சல் கொடுக்கப்பட்டது. அதனால் தன்னுடைய பணியிலும் கவனம் செலுத்த முடியாமல், தன்னுடைய உடல் நலனிலும் அக்கறை செலுத்த முடியாமல், தனது வாழ்வு எங்கே சென்று கொண்டிருக்கிறது என தெரியாமல்
 அனுதினமும் கண்ணீரும் கவலையுமாக பள்ளியிலும், பள்ளிக்கு செல்லும் வழியிலும், ஆலயத்திலும் தனது இல்லத்திலும் எந்நேரமும் "கடவுளே! என்னை காப்பாற்று" என்று இறைவனோடு பேசிக்கொண்டே இருந்தார். 

          எத்தனையோ நாட்கள் பேசியும் அவரது அதிகாரியின் தொந்தரவு குறைந்தபாடில்லை. கடவுளே! நீ எங்கே இருக்கிறாய்? நான் உன்னோடு பேசிக்கொண்டே இருக்கிறேன். உனது உதவியை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.  நீ என்னை காப்பாற்ற மாட்டாயா? என்று தொடர்ந்து ஆண்டவரை உள்ளத்தில் நினைத்து தனது கண்ணீரில் கரைத்து ஒவ்வொருநாளும் இறை சிந்தனையில் தன்னை இணைத்தவளாய், தனது அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்ட தனது வாழ்க்கை படகை செலுத்திக் கொண்டிருந்தார். 

               இன்னும் சில நாட்கள் உருண்டோடின. அந்த சகோதரியின் பிரச்சனைகள் குறைந்தபாடில்லை. என்ன நடக்கப்போகிறதோ? என்னும் அச்சம் அவளின் உள்ளத்தைச் சூழ்ந்தது. ஆயினும் தன் கடமைகளை நிறைவேற்ற கருத்தாய் இருந்தாள். மனம் சோர்ந்த போது ஆண்டவரைத் தேடினாள். விண்ணப்பங்களும் ஜெபமாலைகளும் அவளின் அன்றாட ஜெபங்கள் ஆயின.‌ இறைவா! நான் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும், அது உனது பாதத்திலே இருக்கட்டும் என்று மன்றாடினாள்.

                   என்ன ஒரு ஆச்சரியம்! ஓரிரு வாரங்கள் கடந்த பின் அவளுக்கு பணிமாற்றம் கிடைத்தது.  புதிய இடத்தில் தனது ஆசிரியப் பணியை அமைதியான மனதோடு இறைவனை உணர்ந்த நன்றிப் பெருக்கோடு தனது பணியை தொடர்ந்தார்.  ஆயினும் தனது பழைய அதிகாரியின் தந்திரமான துன்புறுத்தலில் இருந்து இறைவன் தன்னை முற்றிலுமாக விடுவிக்க வேண்டுமென ஜெபித்துக் கொண்டிருந்தார்.  ஆணவமும் அதிகாரமும் அகங்காரமும் நிறைந்த அந்த மேலதிகாரியின் வார்த்தைகளும் சிந்தனைகளும் அவளது உள்ளத்தை அவ்வப்போது கலக்கமுறச் செய்தன.  ஆயினும் அந்த நேரத்தில் எல்லாம் இறைவனின் நாமத்தை விடாது பற்றிக் கொண்டாள்.

ஆம் அன்புக்குரியவர்களே!

 அந்த சகோதரி தனது இக்கட்டிலும், இன்னல்களிலும், இடையூறுகளிலும் ஆண்டவரை இறுகப் பற்றிக் கொண்டார்.  ஆண்டவரது இரக்கமும் கருணையும் அந்த சகோதரியை தொடர்ந்து வழிநடத்தியது.  இதையே இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் நமக்கு எடுத்துரைக்கின்றன.

வார்த்தையான இறைவன் தொடக்கத்திலிருந்து இவ்வுலகை வழி நடத்தி வருகிறார். வாக்காகி,  மனு உருவான இறைவன் ஒவ்வொருவருக்கும் தன்னை வெளிப்படுத்துகிறார். அதனைக் கண்டு கொள்பவர்கள் வெகு சிலரே. 

              எனவே இன்றைய நாளில் தந்தையோடு இருப்பதும் வெளிப்படுத்தப்பட்டதுமான நிலை வாழ்வாகிய ஆண்டவர் இயேசுவின் அன்பின் வல்லமையையும் ஞானத்தையும் நமது வாழ்வில் கண்டுகொள்வோம். வாக்கான இறைவனின் வார்த்தைகளில் நம்மையும் இணைத்துக் கொள்வோம். வாக்கான இறைவனைக் கண்டு கொண்டு அதனை அப்படியே விட்டு விட்டுச் செல்லாமல், நமது வார்த்தைகளிலும் வாழ்க்கையிலும் அவரைப் பிரதிபலிக்க அருள்வேண்டி இணைவோம் இந்த தெய்வீக திருப்பலியில்.

சனி, 25 டிசம்பர், 2021

திருக்குடும்ப பெருவிழா (26.12.2021)

திருக்குடும்ப பெருவிழா 

ஒரு தம்பதியினர் திருமணம் ஆகி ஒன்பது வருடம் ஆன நிலையில், அந்த தம்பதியினரை அழைத்து அங்கிருந்தவர்கள் எல்லாம் விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார்கள். காரணம் கடந்த 50 வருட வாழ்வில் இவர்கள் ஒரு நாளும் சண்டையிட்டுக் கொண்டதே இல்லை என்பதாகும். இவர்கள் இருவருக்குமான விழா, சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. 


ஒரு கட்டத்தில் மனைவியானவள் வெளியே சென்றிருந்தாள்.

அப்போது கணவனைப் பார்த்து மற்றவர்கள் எப்படி இந்த 50 ஆண்டுகளில் சண்டை சச்சரவு ஏதும் இன்றி ஒற்றுமையாக வாழ்ந்தீர்கள்? என்று அருகிலிருந்தவர்கள் அந்த மனிதரைப் பார்த்து அவரிடம்,
அந்த ரகசியத்தை எங்களுக்குச் சொல்லித் தாருங்கள் என அனைவரும் கேட்டார்கள். 
அப்போது அவர் சொன்னார், நானும் எனது மனைவியும் திருமணமான பிறகு குதிரை சவாரி செய்ய ஆசைப்பட்டோம். ஆளுக்கொரு குதிரையில் சவாரி செய்து கொண்டிருந்தோம். அப்போது அந்தக் குதிரை எனது மனைவியை கீழே தள்ளியது. கோபத்துடன் மீண்டும் எழுந்த எனது மனைவி அந்தக் குதிரையைத் திட்டிவிட்டு பயணத்தை தொடர்ந்தாள். மீண்டும் அந்தக் குதிரை இரண்டாவது முறையாக எனது மனைவியை கீழே தள்ளியது. அவள் மீண்டும் எழுந்து அந்த குதிரையையும் முறைத்து பார்த்து விட்டு, 'இதுவே உனக்கு முதல் முறை என்று கூறினாள். சற்று தூரம் சென்றவுடன் மீண்டும் அந்தக் குதிரை அவரைக் கீழே தள்ளியது. மிகுந்த கோபம் கொண்டவனாய் உனக்கு இது மூன்றாம் முறை என்று கூறிவிட்டு தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அதனை சுட்டு விட்டாள்.

   உடனே நான் பதறி ஓடி  வந்து, இப்படி செய்துவிட்டாயே! நாம் குதிரைக்கு என்ன செய்வது? குதிரைக்காரனுக்கு என்ன பதில் சொல்வது? இவ்வாறு செய்துவிட்டாய்? நமக்குப் பெரும் தீங்கு நேரப் போகிறது என்று கத்தினேன். 

எனது மனைவி என்னை பார்த்து, "உங்களுக்கு இதுதான் முதல் முறை என்று கூறினாள். அன்று மூடிய வாய், இன்றுவரை நான் திறக்கவே இல்லை என்று கூறினார்.

        
     குடும்களை பற்றி நகைச்சுவையாக நாம் இவ்வாறு பேசினாலும்,
      இந்த திருக்குடும்பத்தினை நினைவு கூறுகிறோம்.
 
               திருக்குடும்பம் என்றாலே சூசை, மரியாள், இயேசு,  இவர்களைப் போல நமது குடும்பங்களும், திருக்குடும்பகளாகத் திகழ வேண்டும். 

                 இன்று தாய்த்திரு அவையானது திருக்குடும்ப பெரு விழாவினை கொண்டாட நமக்கு அழைப்பு தருகிறது.  திருக்குடும்பம்  என்றால் சூசை, மரி, இயேசுவைப் போல நமது குடும்பம் திருக்குடும்பமாக இருக்க வேண்டும் என்பதாகும். திருக்குடும்பம் நமக்கு உணர்த்துகின்றன பாடம் என்னவென்றால், அன்று ஆண்டவரின் முன்பாகவும்,  உறவுகளின் முன்பாகவும்,  திருஅவை உறுப்பினர்கள் முன்பாகவும், பொதுமக்கள் முன்பாகவும்,  இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாய் இருப்பேன் என்று கூறிய வார்த்தைகளை வாழ்வாக்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். 

 அன்று அனைவரின் முன்னிலையில் நாம் கொடுத்த வாக்குறுதிகளை இன்றுவரை நாம் பின் தொடருகின்றோமா? என்ற கேள்வியை எழுப்பி பார்த்து, தவறிப்போன தருணங்களை நினைத்து மனம் மாறி மீண்டும் கொடுத்த வாக்குறுதியில் நிலைத்திருக்க இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.

 குடும்பம் அன்பு பிறக்கின்ற ஒரு இடம். தியாகம் உருவெடுக்கின்ற ஒரு இடம். பிறரன்பு பணிகள் முதன்மைப்படுத்தப் படுகின்ற ஒரு இடம்.  

                         நான் என்ற மமதையிலிருந்து நாம் என்ற எண்ணம் வளர்வதற்கான ஒரு தளம். இத்தகைய சிறப்பு மிகுந்த குடும்ப வாழ்வு நாம் இந்த சமூகத்தில், ஆண்டவர் இயேசு கிறிஸ்து விரும்புவது போல, ஒருவர் மற்றவரை அன்பு செய்து, நம்மை நேசிப்பது போலவே
அடுத்தவரையும் நேசித்து, அடுத்தவரின் தேவைகளை அறிந்து கொள்வதால் அதனை நிறைவு செய்து,  ஒருவர் மற்றவருக்காக வாழக்கூடிய ஒரு வாழ்வையே இந்த குடும்ப வாழ்வு நமக்குக் கற்பிக்கின்றது. 

 குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு மூல காரணமாய் இருப்பது குழந்தைகள்.  இறைவன் தருகின்ற விலைமதிப்பில்லாத பரிசு அவர்கள். இந்தக் குழந்தையை வளர்ப்பதில் தாயும் தந்தையும் கவனத்தோடு செயல்பட்டு சூசையையும் மரியாவையும் போல,  நாமும் நமது குழந்தைகளை இயேசுவை எப்படி அவர்கள் ஞானத்திலும் அறிவிலும் பலர் வளர்த்தார்களோ அதுபோல நாமும் நமது குழந்தைகளை வளர்க்க இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.  குடும்பம் ஒரு குட்டி திருஅவை என்று கூறுவார்கள்.  குடும்பமாக வாழ்வதே சிறந்த வாழ்வு.  தனித்து வாழ்வதில் சில நன்மைகள் இருப்பது போல் தோன்றினாலும் தனிமை உணர்வு வாட்டும் என்பதை மறந்து விட முடியாது.  குடும்பம் குதூகலத்திற்கான ஒரு இடம். 

குடும்பம் கூடி ஜெபிப்பதற்கான ஒரு இடம்.

 குடும்பம் கூடி மகிழ்வதற்கான ஒரு இடம். 

இந்த குடும்ப வாழ்வை நாம் சிறப்புடன் நடத்தி இறைவன் விரும்புகின்ற வகையில், திருக் குடும்பங்களாக நாம் மாறிட, இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.

ஆண்டவர் இயேசுவின் பிறப்பை மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருக்கின்ற நாம், நமது குடும்பங்களில் இந்த பாலன் இயேசுவை பிறக்கச் செய்வோம். பிறந்திருக்கின்ற பாலன் இயேசுவை ஏற்றுக் கொள்வோம். 

நமது குடும்பத்தில் இந்த பாலன் இயேசு, அன்பையும் அமைதியையும் இரக்கச் செயல்களையும் மேலோங்கச் செய்ய இறைவனது அருளை வேண்டுவோம்.

இறைவன் தாமே நம்மோடு இருந்து, நம்மை ஒவ்வொரு நாளும் வழிநடத்துகிறார்.

 கடவுள் நமது குடும்பங்களுக்கு இதுநாள் வரை செய்த நன்மைகளை
நன்றியோடு நினைவு கூர்வோம்.  அவைகளுக்காக நன்றி செலுத்துவோம்.

 கடவுளின் முன்னிலையிலும் திருஅவை உறுப்பினர்களின் முன்னிலையிலும், பொதுநிலையினர் முன்னிலையிலும், உறவுகளின் முன்னிலையிலும் நாம் கொடுத்த வாக்குறுதிகளை, புதுப்பித்துக் கொள்வோம். வாக்குறுதிகளை வாழ்வாக்குவோம். இவை வார்த்தைகள் அல்ல, வாக்குறுதிகள் என்பதை மனதில் இருத்தியவர்களாய், வாழ்வாக்குவோம்.
  
 

வெள்ளி, 24 டிசம்பர், 2021

நம்மை புதுப்பிக்கும் கிறிஸ்து பிறப்பு விழா (25.12.2021)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

உங்கள் அனைவருக்கும் பாலன் இயேசுவின் பிறப்பின் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி இறைவார்த்தையை உங்களோடு பகிர்ந்து கொள்வதில்
 மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.


இயேசு மீண்டும் பிறப்பதற்காக உலகத்திற்கு வந்தார் என்ற அடிப்படையில் ஒரு கற்பனைக் கதையினை உங்களோடு பகிர விரும்புகிறேன். 

இயேசு மீண்டும் இவ்வுலகத்தில் பிறப்பதற்காக வருகிறார். இரவு மணி பதினொன்று முப்பது இருக்கும். பட்டினத்தில் அதாவது நம்முடைய நகரத்தில் ஒரு பணக்காரனின் வீட்டு கதவை இயேசு தட்ட, ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த பணக்காரன், நாகரீக உடையில் நின்ற இயேசுவை உள்ளே வரவேற்க மறுத்து, நீ ஏமாற்றுபவன் இன்னும் சிறிது நேரம் நீ இங்கேயே நின்றால், காவல்நிலையத்தில் அறிவித்து விடுவேன் என்றான்.

இயேசு அடுத்த தெருவிற்கு சென்றார். அது ஒரு நடுத்தரக் குடும்பம்‌ வீட்டுத் தலைவன் கதவை திறந்து, நீ இயேசு தானா? எங்களை ஆசீர்வதிக்க வந்தாயா? அடையாள அட்டை இருக்கிறதா? என்றான். இல்லை என்றதும் இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். 

இயேசு பட்டினத்தை விட்டுவிட்டு கிராமத்திற்கு சென்றார். ஒரு குடிசைக்குள் நுழைந்தார். அந்த குடிசைக்கு கதவே இல்லை. உள்ளே இருந்த ஏழை கிழவனும் கிழவியும் உள்ளே வந்தவரை அன்போடு வரவேற்று, போர்த்திக்கொள்ள போர்வையும், சூடான கஞ்சியையும் குடிக்கக் கொடுத்தார்கள். கஞ்சி நிறைந்த பாத்திரத்தை கையில் வைத்துக்கொண்டு இயேசு, இவ்வளவு அன்பாக வரவேற்கிறார்களே! நான் யார் தெரியுமா? என்றார்.

 அதற்கு கிழவரோ, தெரியும் என்றார். இயேசுவின் பிறப்பு விழாவில் கலந்து கொள்ள மூவரும் கோயிலுக்குள் நுழையும் நேரம் வந்தது.

 இயேசு கிழவரைப் பார்த்து இப்படி என் மீது பாசத்தை பொழிந்த உங்களுக்கு நன்றி! ஆம்! என்னை தெரியும் என்று சொன்னீர்களே! நான் யார்? என்றார். கிழவரோ! நீ தான் இயேசு என்றார். இயேசுவுக்கு இன்பம் கலந்த அதிர்ச்சி. எப்படி தெரியும்? என்றார். நீ கடவுளாக இல்லையென்றால் ஏழையின் வீட்டிற்குள் புகுந்து இருக்க மாட்டாய்! என்றார் அந்த கிழவர்.  


ஒரு குழந்தையின் பிறப்பு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. ஆனால் இன்று பிறக்கவிருக்கும் நம் பாலன் இயேசுவின் பிறப்பு இந்த அகிலத்திற்கே மகிழ்ச்சியைக் கொண்டு வரக்கூடிய ஒன்றாகிறது.

பிறக்க உள்ள பாலன் இயேசு நமது வாழ்வில் நாம் இழந்துபோனவைகளை எல்லாம் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளக்கூடிய வகையில் புது பிறப்பாக இன்று அமைகின்றார்.  

இவரது பிறப்பு நமது வாழ்வில் கொடிய நோயின் தாக்கத்தினால் நலிவுற்ற நமது நம்பிக்கையை புதுப்பிக்க கூடியதாகவும். 

மறைந்து போன நமது மனித நேயப் பண்புகளை மலரச் செய்ய கூடியதாகவும்.

இழந்துபோன அமைதியை மீண்டும் நமது குடும்பங்களில் கொண்டுவரக் கூடியதாகவும்.

தனித்து விடப்பட்ட நமது வாழ்வில் நம்மைத் தேடி வரும் இறைவனின் அன்பின் ஆற்றலை நமக்குள் விதைக்க கூடியதாகவும் உள்ளது.

நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்". 
(எசேக்கியேல் 36:26) என்ற ஆண்டவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப பிறக்க உள்ள பாலன் இயேசு நமக்கு புதிய இதயத்தையும் புதிய ஆவியையும் தருகின்றார்... பிறக்க உள்ள இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நமது உள்ளத்திலும் இல்லத்திலும் ஏற்றுக் கொண்டவர்களாய் நமது வாழ்வில் நாம் இழந்து போன 
நம்பிக்கையையும்
அன்பையும் 
அமைதியையும் 
இரக்கச் செயல்கள் மூலம் உருவாகும் மகிழ்வையும் ...

மீண்டுமாய் புதுப்பித்துக்கொண்டு நம்மைத் தேடி வருகின்ற இறைவனை நமது உள்ளத்திலும் இல்லத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மக்களாக வாழ இந்த கல்வாரி பலியில் பக்தியோடு இணைவோம். பாலன் இயேசுவை இதயத்தில் ஏற்போம்.

கிறிஸ்து பிறப்பு விழா - 2021

கிறிஸ்து பிறப்பு விழா - 2021
திருப்பலி முன்னுரை

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவினை கொண்டாட ஆலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் இந்த நாளில் மகிழ்ச்சியோடு இந்த கல்வாரி பலிக்கு அழைப்பதில் மகிழ்கின்றேன்.
ஒரு குழந்தையின் பிறப்பு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.  ஆனால் இன்று பிறக்கவிருக்கும் நம் பாலன் இயேசுவின் பிறப்பு இந்த அகிலத்திற்கே மகிழ்ச்சியைக் கொண்டு வரக்கூடிய ஒன்றாகிறது.

பிறக்க உள்ள பாலன் இயேசு நமது வாழ்வில் நாம் இழந்துபோனவைகளை எல்லாம் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளக்கூடிய வகையில் புது பிறப்பாக இன்று அமைகின்றார்.  

இவரது பிறப்பு நமது வாழ்வில்  கொடிய நோயின் தாக்கத்தினால் நலிவுற்ற நமது நம்பிக்கையை புதுப்பிக்க கூடியதாகவும். 

மறைந்து போன நமது மனித நேயப் பண்புகளை மலரச் செய்ய கூடியதாகவும்.

இழந்துபோன அமைதியை மீண்டும் நமது குடும்பங்களில் கொண்டுவரக் கூடியதாகவும்.

தனித்து விடப்பட்ட நமது வாழ்வில் நம்மைத் தேடி வரும் இறைவனின் அன்பின் ஆற்றலை நமக்குள் விதைக்க கூடியதாகவும் உள்ளது.


 "நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்". 
(எசேக்கியேல் 36:26) என்ற ஆண்டவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப பிறக்க உள்ள பாலன் இயேசு நமக்கு புதிய இதயத்தையும் புதிய ஆவியையும் தருகின்றார்... பிறக்க உள்ள இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நமது உள்ளத்திலும் இல்லத்திலும் ஏற்றுக் கொண்டவர்களாய்  நமது வாழ்வில் நாம் இழந்து போன 
நம்பிக்கையையும்
அன்பையும் 
அமைதியையும் 
இரக்கச் செயல்கள் மூலம் உருவாகும் மகிழ்வையும் ...

மீண்டுமாய் புதுப்பித்துக்கொண்டு நம்மைத் தேடி வருகின்ற இறைவனை நமது உள்ளத்திலும் இல்லத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மக்களாக வாழ இந்த கல்வாரி பலியில் பக்தியோடு இணைவோம். பாலன் இயேசுவை இதயத்தில் ஏற்போம்...

முதல் வாசக முன்னுரை :

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் வரவிருக்கின்ற  அரசரின் ஆட்சி எப்படிப்பட்ட ஒரு ஆட்சியாக இருக்கும் என்பதனை எடுத்துரைக்கின்றார். அமைதியும், நீதியும் மேலோங்கி காணப்படக் கூடிய வகையில்... இருளில் வாழும் மக்கள் ஒளியைக் கண்டடையக்கூடிய வகையில் வரவிருக்கின்ற அரசரின் ஆட்சி இருக்கும் என்றுரைக்கும் இன்றைய முதல் வாசகத்தில் பக்தியோடு செவி திறப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை :

இன்றைய இரண்டாம் வாசகத்தில் நம்மைத் தேடி வந்துள்ள ஆண்டவர்  இயேசு கிறிஸ்துவை  நாம் இதயத்தில் ஏற்றுக்கொள்ள தீமைகளை விட்டு விலகி ஆண்டவரின் வார்த்தைகளுக்கு ஏற்ற மக்களாக வாழவேண்டும் என அழைப்பு தருகின்ற இரண்டாம் வாசகத்திற்கு கவனத்தோடு செவி கொடுப்போம். 

மன்றாட்டுக்கள்

1. அன்பே உருவான இறைவா எம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவியர் அனைவரையும் பிறந்துள்ள பாலன் இயேசுவாகிய நீர் உமது  பாதுகாப்பில் வைத்து பராமரித்துக் கொள்ளும் ...அவர்களுக்கு நல்ல உடல் உள்ள சுகம் தந்து அவர்கள் முன்னெடுக்கின்ற பணிகளில் அவர்களோடு இருந்து உமது மக்களை நல்வழிப்படுத்த அவர்களுக்கு தேவையான ஆற்றலை உமது பிறப்பு அவர்களுக்கு தர வேண்டுமாய் இந்நேரத்தில் இறைவா உம்மை நோக்கி வேண்டுகிறோம் .

2. பாலன் இயேசுவே! எமது நாட்டை ஆளும் தலைவர்களை உமது பாதம் அர்பணிகின்றோம். அவர்கள் தன்னலம் துறந்து பொது நலத்தோடு ஒருவர் மற்றவருக்கு தேவையான செய்து மக்களின் நலனை காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை  மன்றாடுகிறோம்.  

3. ஆற்றல் தருகின்ற ஆண்டவரே உமது பிறப்பு இன்று இந்த அகிலத்தில் நிலவுகின்ற இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் எங்களுக்கு நம்பிக்கையையும், எங்கள் வாழ்வில் அமைதியையும் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.  அன்பு இறைவா எம் பங்கில் இருக்கின்ற அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். எங்களை ஒவ்வொரு நாளும் பாதுகாத்து, பராமரித்து நல்லதொரு குடும்பமாக உமது வார்த்தையின்படி வாழக்கூடிய மக்களாக எங்களை வழி நடத்திட எங்களுக்கு தேவையான ஆற்றலை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

5. ஏழைகளை தேடி வந்த இயேசு பாலனே உம்மை போல நாங்களும் ஏழை எளிய மக்களை தேடி செல்லவும் ... அனைவரையும் உறவுகளாக எண்ணி வேறுபாடுகளையும் பாகுபாடுகளையும் கடந்து உம்மைப்போல அன்பால் இந்த அகலத்தில் உள்ள அனைவரையும் அன்பு செய்து வாழ எங்களுக்கு ஆற்றலைத் தர வேண்டுமாய்   இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

வியாழன், 23 டிசம்பர், 2021

வார்த்தைகளை வாழ்வாக்க...(24.22.2021)

வார்த்தைகளை வாழ்வாக்க...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் செக்கரியாவின் பாடலை நாம் வாசிக்கக் கேட்டோம்.  இந்த செக்கரியா கடவுளின் மீது கொண்டிருந்த ஐயத்தின் காரணமாக நா கட்டப்பட்டிருந்தவர்.  கடவுள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் நிறைவேறிய போது அவரது நா கட்டவிழ்க்கப்பட்டது. எனவே அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடினார். இந்த பாடல் ஒரு புகழ்ச்சிப் பாடலாக இருந்தாலும், இந்த பாடலில் தன் குழந்தையினுடைய எதிர்காலத்தை குறித்தும் அக்குழந்தையின் வாழ்வு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும் செக்கரியா எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

 திருப்பாடலிலே அந்தக் குழந்தை கடவுளின் இறைவாக்கினர் எனப்படும் என்ற வார்த்தையானது கொடுக்கப்படுகிறது.  இறைவாக்கினருக்கு உரிய வாழ்வைத் தான் திருமுழுக்கு யோவான் வாழ்வார் என்பதை, குழந்தையாக அவர் பிறந்த மாத்திரமே செக்கரியா
தனது பாடலில் அறிவுறுத்துகிறார். 

 அதுபோலவே ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த,  அவர் முன்னே செல்ல வேண்டும் என்ற இன்னொரு வரியும் இப்பாடலில் வருகிறது. இதுவே திருமுழுக்கு யோவானின் பணி. அவர் இப்பணி செய்யவே இவ்வுலகத்திற்கு வந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. திருவிவிலியம் இதனை நமக்கு வலியுறுத்துகிறது.  இதனையும் குழந்தையாக பிறந்த திருமுழுக்கு யோவானுடைய பெயரிடும் நிகழ்விலே செக்கரியா எடுத்துரைக்கிறார். 

 இறுதியாக பாடல் முடியும்போது தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்ய வேண்டும் என்ற வார்த்தையானது இடம்பெறுகிறது. இவ்வார்த்தைகளை வாழ்வாக மாற்றியவர் திருமுழுக்கு யோவான்.  குழந்தையாக இருந்தபோது அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதையும் அவரது பணி என்ன என்பதையும் அவரின் வாழ்வு எப்படிப்பட்ட வாழ்வாக இருக்க வேண்டும் என்பதையும் செக்கரியா கடவுளை புகழ்ந்து பாடும் பாடலில் எடுத்துரைத்தார்.  இவ்வார்த்தைகளை வாழ்வாக்கியவர் திருமுழுக்கு யோவான். 

                 நாமும் ஆண்டவரின் வார்த்தைகளை வாழ்வாக்கக் கூடியவர்களாக மாறிட  இந்த நாளில் அழைக்கப்படுகிறோம்.  எல்லாவிதமான ஆண்டவரின் வருகையை ஆவலோடு எதிர் நோக்குகின்ற நாம் நமது வாழ்வில்,  ஆண்டவரின் வார்த்தைகளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு நம்பிக்கையில் நிலைத்திருக்க , அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இறைவனது வார்த்தைகளை வாழ்வாக்க இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம்.

புதன், 22 டிசம்பர், 2021

துன்ப நேரங்களில் துணை அவரே...(23.12.2021)

துன்ப நேரங்களில் துணை அவரே...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் 
கன்னி மரியாவிடம் தோன்றிய அதே கபிரியேல் தூதர், செக்கரியாவிடமும் தோன்றினார். செக்கரியாவிடம் தோன்றிய அதே கபிரியேல் தூதர் தான் கன்னி மரியாவிடமும் தோன்றினார். 

செக்கரியாவுக்கு ஒரு மகன் பிறப்பான் என அறிவித்தது போலவே,  அன்னை மரியாவுக்கும் ஒரு மகன் பிறப்பான் என அறிவித்தார்.

செக்கரியா இது எப்படி நிகழும் என கேள்வி எழுப்பினார். ஏனெனில் அவர் முதிர்ந்த வயதினர், அவரது மனைவியும் முதிர்ந்த வயதினராக இருந்தார்.

 இதுபோலவே அன்னை மரியாவும் "இது எப்படி நிகழும்? நானோ கன்னி ஆயிற்றே?" என கேள்வி எழுப்பினார். 

இருவரும் ஒரே தளத்தில் இருந்தார்கள். ஆனால் கபிரியேல் தூதர் செக்கரியாவிடம், நான் சொல்வது நிறைவேறும் வரை உணர்வாய் கட்டப்படும் எனக் கூறி, அவரை மௌனியாக மாற்றினார். 

செக்கரியாவைப் போலவே கேள்வியை எழுப்பிய அன்னை மரியாவிடம், கபிரியேல் தூதர் கேள்விக்கான விளக்கத்தை கொடுக்கிறார். கடவுளின் ஆவியானவர் உன்னிடம் வருவார். உன்னிடம் பிறக்கும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் வாசிக்கின்ற போது, நம் உள்ளத்தில் ஒரு விதமான கேள்வி எழலாம்.

 ஏன் செக்கரியா கேட்ட கேள்விக்கு அவர் மௌனியாக மாற வேண்டும்?

அன்னை மரியாவின் கேள்விக்கு ஏன் விளக்கம் தரப்பட்டது?

என்ற இரு விதமான கேள்விகள் உள்ளத்தில் எழலாம். 

இந்தக் கேள்விக்கு இறையியலாளர்கள் தருகின்ற பதில் என்னவென பார்க்கின்ற பொழுது, செக்கரியா ஆண்டவரின் இல்லத்தில் பணி செய்யக் கூடியவராக இருந்தார். எனவே தனக்கு முன்பாக வந்து நிற்பவர் கடவுளின் தூதர் என்பதை அறிந்திருந்த நிலையிலும் அவர் ஐயம் கொண்டார். 

ஆனால் மரியாவின் வாழ்வு சற்று மாறுபட்டது. சமூகத்தால் பெண்கள் இரண்டாம் தரமாக பார்க்கப்பட்ட அந்தச் சூழ்நிலையில், அன்னை மரியாவின் கேள்வி எதார்த்தமானதாக இருந்தது. ஆனால் செக்கரியாவின் கேள்வி அவர் செய்த குருத்துவ பணியை கேள்விக்கு உட்படுத்தியது. 

கடவுளின் ஆலயத்தில் ஆண்டவரின் தூதர் அறிவித்ததில் அவர் ஐயம் கொண்டவராய் இருந்தார். 

ஆனால் அன்னை மரியா, வீட்டில் இருந்த போது, அவருக்கு காட்சியானது தரப்பட்டது. எனவே அன்னை மரியாவின் வாழ்விலும், செக்கரியாவின் வாழ்விலும், அழைப்பு ஒரே விதத்தில் இருந்தாலும், கேள்விகள் ஒரே விதத்தில் இருந்தாலும், அன்றைய சமூகத்தில் அவர்கள் கொண்டிருந்த நிலையை குறித்து, செக்கரியாவின் கேள்விக்கு மௌனியாக மாற்றப்பட்டதும், அன்னை மரியாவின் கேள்விக்கு விளக்கம் தரப்பட்டதும், நிகழ்ந்தது எனக் குறிப்பிடுகிறார்கள். 

இன்று நாம் வாசிக்கக் கேட்ட இந்தப் பகுதி, நமக்குத் தருகின்ற வாழ்க்கை பாடம் என்னவென சிந்திக்கின்ற பொழுது, ஆண்டவரின் சந்நிதியில் ஆண்டவரை அனுதினமும் தேடி வரக்கூடிய, நமது வாழ்வில் பல நேரங்களில், நாம் செக்கரியாவைப் போல செயல்படக் கூடியவர்களாக இருக்கிறோம். 

கடவுள் காட்டுகின்ற, இறைவார்த்தை வழியாக நமக்கு சொல்லித் தருகின்ற, வாழ்க்கை பாடத்தை, உணர்ந்து கொள்ளாதவர்களாக, செக்கரியாவைப் போல,  எப்படி தன் முன் நிற்பது இறைவனின் தூதர் என்பதை அறிந்து கொள்ளாதவராக செக்கரியா கேள்வி எழுப்பினாரோ, அவரைப் போல பல நேரங்களில் அனுதினமும், ஆண்டவர் தமது வார்த்தைகள் வழியாக நமக்குத் தருகின்ற வாழ்க்கை பாடத்தை உணர்ந்து கொள்ள நாம் தவறி இருக்கலாம். தவறிய நேரங்களில் எல்லாம் நினைத்துப் பார்க்கவும்,  மனம் மாறவும், ஆண்டவர் மீது ஆழமான நம்பிக்கை கொள்ளவும், இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது. 

செக்கரியா மௌனியாக மாறினாலும், அவர் ஆண்டவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அவரது ஐயம், தவிர்க்கப்பட்ட சூழ்நிலையில் அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார் என விவிலியம் நமக்கு சுட்டிக் காட்டுகின்றது. 

இந்த செக்கரியாவைப் போல, நாமும் பல நேரங்களில், நம்பிக்கையில் தளர்ச்சியுறக் கூடியவர்களாக இருக்கிறோம். நம்பிக்கை தளர்ச்சிக்கு அடிப்படை காரணம், வாழ்வில் ஏற்படுகின்ற துன்பங்கள். இந்தத் துன்பங்களுக்கு மத்தியில் நாம் ஆண்டவர் மீது, அதீத நம்பிக்கை கொண்டு வாழ இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது. 


இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருற வேண்டியிருப்பினும், அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள்.
1 பேதுரு 1:6 


எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்.
1 பேதுரு 5:10

சிறிது கால துன்பங்களுக்குப் பிறகு அவர் உங்களை சீர்படுத்தி வலுப்படுத்தி நிலை நிறுத்துவார். 

எனவே அந்த ஆண்டவர் துன்ப நேரங்களில், நமக்குத் துணையாக இருக்கிறார். நாம் இன்னல்களுக்கு மத்தியிலும், 
ஆண்டவரின் சீடர்களாக விளங்கிட, உள்ளத்தில் உறுதி ஏற்று வாழ இன்றைய நாளில் இணைந்து ஜெபிப்போம்.

செவ்வாய், 21 டிசம்பர், 2021

அர்ப்பணம்! என் ஆண்டவருக்கு சமர்ப்பணம்!(22.12.2021)

அர்ப்பணம்! என் ஆண்டவருக்கு சமர்ப்பணம்!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடை
கிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் சாமுவேலின் தாய் அன்னா சிறுவன் சாமுவேலை கூட்டிக்கொண்டு எருசலேம் ஆலயத்திற்கு வந்து ஆண்டவர் திருமுன் சிறுவன் சாமுவேலை காணிக்கையாக அர்ப்பணிக்கின்றார். தான் மன்றாடிய நாளில் தனது மான்றாட்டுக்கு செவி சாய்த்து
தனக்கு ஒரு குழந்தையை அளித்து தனது வம்சத்திற்கு வாரிசை அளித்து தனது இழிநிலையை போக்கிய ஆண்டவரை மகிழ்வுடனும் நன்றியுடனும் அறிக்கையிடுகின்றார். 

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் அன்னை மரியா, தந்தையாம் இறைவன், எலிசபெத்தம்மாளின்
முதிர்ந்த வயதில் அவருக்குக் கொடுத்த  குழந்தை பேற்றை எண்ணி இறைவனுக்கு நன்றி கூறுகின்றார்.  

கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட எலிசபெத்தம்மாள், தமது வாழ்நாள் முழுவதும் வாழ்வின் ஆதாரமாகிய குழந்தைச் செல்வம் இல்லாத காரணத்தினால் பல்வேறு நபர்களின் ஏச்சுக்களுக்கும் பேச்சுகளுக்கும் பல்வேறு துன்பங்களுக்கும் மன போராட்டங்களுக்கும் ஆளாகி இருந்தார். 
     அது போலவே இன்றைய முதல் வாசகத்தில் சாமுவேலின் தாயாகிய அண்ணா சாமுவேலைப்  பெற்றெடுக்கும் வரை தனது சுற்றத்தினரின் ஏச்சுகளுக்கும் பேச்சுக்களுக்கும் நகைப்புக்கும் உள்ளாகி நாள்தோறும் மனவேதனை அடைந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தார். 

இன்றைய வாசகங்களில் நாம் காண்கின்ற மூன்று பெண்களாகிய அன்னாவும் அன்னை மரியாவும் எலிசபெத்தம்மாளும் தம் வாழ்வில் சந்தித்த இன்னல்கள் இடையூறுகள் மற்றும் ஏளனப் பேச்சுகளையும் கடந்து, தங்களது வாழ்வில் ஒளி பிறக்கும், விடியல் தோன்றும். தனது குடும்பம் தழைக்கும் என்று நம்பிக்கையோடு ஆண்டவரிடத்தில் அனுதினமும் தம்மை அர்ப்பணித்து தம்முடைய வேண்டுதல்கள் ஜெபங்கள் வழியாக இறைவனில் இணைந்திருந்தார்கள். அவர்களின் ஜெப அர்ப்பணமே இன்று அவர்களின் வாழ்வில் அவர்களது நம்பிக்கையை மெய்யாக்கியது, அவர்களின் விண்ணப்பங்களுக்கு உயிரோட்டம் அளித்தது. அவர்களுக்கு நல்வாழ்வையும் நற்பெயரையும் அளித்தது. 

          ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் நாம் நமது உள்ளத்தில் எத்தகைய மன உணர்வு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்ப்போம். நமது சிந்தனைகளும் வார்த்தைகளும் செயல்களும் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படவும், இறை வல்லமையை வெளிப்படுத்தவும், அதன் வழியில் நமது வாழ்வு ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக அமைந்திடவும் இன்றைய நாளில் இணைந்து ஜெபிப்போம். 

திங்கள், 20 டிசம்பர், 2021

சந்திப்புகளை குறித்துச் சிந்திக்க ...(21.12.2021)

சந்திப்புகளை குறித்துச் சிந்திக்க ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் சந்திப்புகளை குறித்துச் சிந்திக்க அழைப்புத் தருகின்றன. இன்றைய முதல் வாசகத்தில் தலைவியானவள் தலைவனின் வருகைக்காகக் காத்திருக்கிறாள்.  அந்த தலைவனின் வருகை அவளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது எனக் குறிப்பிடப்படுகிறது.  அதிலும் குறிப்பாக எதிர்பாராத நேரத்தில் வரக்கூடிய தலைவனின் வருகை,  அவளது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது என இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது.    நற்செய்தி வாசகத்திலும் அன்னை மரியா எலிசபெத்தம்மாளை சந்தித்ததைக் குறித்து வாசிக்க கேட்டோம்.  முதிர்ந்த வயதில் எலிசபெத்தம்மாள் கருவுற்றிருக்கிறார் என்ற செய்தியை அறிந்ததும் அன்னை மரியா விரைந்து சென்று அவரை பாதுகாத்து பராமரிக்கும் பணியில் தன்னை இணைத்துக் கொள்கிறார். மரியாவின் சந்திப்பு எலிசபெத்தம்மாளுக்கு மகிழ்ச்சியை தந்தது.  அவருக்கு மட்டுமல்ல அவரது வயிற்றில் இருந்த குழந்தைக்கும் மகிழ்ச்சியை தந்தது.

இவ்வடிப்படையில் அனுதினமும் நாம் நமது வாழ்வில் சிந்திக்கின்ற மனிதர்களைப்  பற்றி சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். அனுதினமும் நாம் கடந்து செல்லக்கூடிய மனிதர்களை இன்றைய நாளில் நிமிர்ந்து பார்ப்போம்.  நமது சந்திப்பு அவர்களது உள்ளத்தில் மகிழ்ச்சியை உருவாக்கியிருக்கிறதா என்ற கேள்வியை நாம் நமது உள்ளத்தில் எழுப்பி பார்ப்போம். 


பல நேரங்களில் இருவர் அல்லது மூவர் இணைந்தால், நம்மை குறித்தும் நமது  வளர்ச்சி குறித்தும் பேசுவதை விட, பல நேரங்களில் நாம் மூன்றாம் நபரைப் பற்றி பேசக் கூடியவர்களாகவே இருக்கின்றோம்.  ஆனால் திருவிவிலியம்  கூறுகின்றது,  நாம் நற்பேறு பெற்றவர்களாக  விளங்க வேண்டுமாயின் பொல்லாரின் சொல்படி நடவாதவராகவும், இகழ்வாரின் குழுவினில்  அமராதவராகவும் இருக்க வேண்டும் என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். 

நற்பேறு பெற்றவர் யார்? – அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்.

         திருப்பாடல்கள் 1:1


எனவே இவ்வார்த்தைகளின் அடிப்படையில் நாம் நமது வாழ்வை அமைத்துக் கொண்டவர்களாக,  நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கின்ற மனிதர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக்க  இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது. நம்மை சந்திக்க வரும் ஆண்டவரின் வருகைக்கு நம்மை நாம் தயாரித்துக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் ஆண்டவரின் சந்திப்பு நமக்கு மகிழ்ச்சியைத் தருவது போல தினமும் நாம் சந்திக்கும் மனிதர்களின் வாழ்வில் நமது சந்திப்பு மகிழ்ச்சியை உருவாக்குவதற்கான அருளை வேண்டி இணைந்து தொடர்ந்து இன்றைய நாளில் செபிப்போம்.

அன்பின் ஆழம் அன்னை மரியா...(21.12.2021)

அன்பின் ஆழம் அன்னை மரியா!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாளில் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
    இந்த உலகில் முதலும் முடிவும் அன்பு. அனைத்திற்கும் அடிவேராகவும் ஆணிவேராகவும் இருப்பது அன்பு. 

    அன்பினால் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. 
அன்பு மட்டுமே இந்த உலகத்தில் நிலையானது. அன்பு மட்டுமே அனைவரையும் வாழ்விக்க வல்லது. 

இன்றைய முதல் வாசகத்தில் கூட இறைவன் மனுக்குலத்தின் மீது கொண்ட அன்பை வெளிப் படுத்துகிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் அன்னை மரியாளின் அன்பு செயல்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. 

அன்பிற்கு எதையும் தாங்கும் சக்தி உண்டு என்பதை இன்று நாம் அன்னை மரியாளின் வாழ்வில் காண்கிறோம். பல்வேறு கலகங்களும் குழப்பங்களும் தன்னைச் சூழ்ந்து இருந்தாலும், தன்னைப் படைத்த ஆண்டவர் மீது அதீத அன்பு கொண்ட அன்னை மரியாள், இன்று தமது அன்பு பணிகளின் தேவையை உணர்ந்து வயது முதிர்ந்த எலிசபெத்தம்மாளுக்கு உதவி செய்ய ஓடோடி விரைந்து செல்கின்றார்.  தன்னைக் கடந்த, தனது இன்ப துன்பங்களையும் கடந்த அன்னைமரியாள், இன்று தனது ஆழ்ந்த அன்பின் அனுபவத்தால் இவர்களுக்கு உதவி செய்ய விரைகிறார். 

   அன்பின் வாரமாகிய இந்த வாரத்தில் நாமும் அனைவரிடமும் அன்னை மரியாவை போன்று பிறருக்கு இரக்கம் காட்ட கூடியவர்களாக, பிறரை அன்பு செய்து மகிழ்ச்சியோடு வாழக் கூடியவர்களாக, நம்மை நாம் உருவாக்கிக் கொள்ள இன்றைய நாளில் இறையருளை இணைந்து வேண்டுவோம்.

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

இறைவனது திட்டத்தை அறிவோம்...(20.12.2021)

இறைவனது திட்டத்தை அறிவோம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் தரும் பாடங்கள் ஏராளம். இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் வழியாக கடவுள் ஆகாசு அரசனோடு உரையாடுகிறார்.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் கபிரியேல் வானதூதர் வழியாக மரியாவுக்கு இயேசுவின் பிறப்பு செய்தி அறிவிக்கப்படுகிறது.

 இதைப் போலவே ஒவ்வொரு நாளும் நமக்கு இறைவார்த்தையின் வாயிலாக பல விதமான வாழ்க்கை பாடங்களை இறைவன் நம்மோடு உரையாடிக் கொண்டிருக்கிறார்.  ஆண்டவரின் உரையாடலுக்கு செவிகொடுத்து நாம் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள அழைக்கப்படுகிறோம்.

 எப்படி இன்றைய நற்செய்தி வாசகத்தில் கபிரியேல் வானதூதர் இயேசுவின் பிறப்பை மரியாவுக்கு முன்னறிவித்த போது உள்ளம் கலங்கியவராய், "இது எப்படி நிகழும்?" என  அன்னை கேள்வி எழுப்பினாரோ, அது போல பல நேரங்களில் நாம் இறைவனது திட்டத்தை உணர்ந்து கொள்ளாது, கேள்வி எழுப்பக் கூடியவர்களாக இருக்கிறோம். 

 மரியாவின் கேள்விக்கான பின்னணி எது எனப் பார்க்கின்ற போது அன்றைய சமூகமான ஆணாதிக்க சிந்தனை நிறைந்த அந்த சமூகத்தில் ஒரு பெண் திருமணத்திற்கு முன்னதாக கருவுற்று இருக்கிறார் என அறிந்தால், அந்த பெண்ணுக்கு இழைக்கப்படக் கூடிய கொடுமைகள் கற்பனைக்கும் எட்டாத ஒன்றாகவே கருதப்படுகிறது.  எனவே மரியாவின் உள்ளத்தில் அந்த கலக்கம் தோன்றினாலும், உரையாடுவது ஆண்டவரின் தூதர் என்பதை உணர்ந்து கொண்டவராய் இறைவனது திட்டத்திற்கு தன்னை முழுமையாக கையளிக்கக் கூடிய ஒரு பெண்மணியாக,  "நான் ஆண்டவரின் அடிமை. உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்" எனக் கூறி தன்னை தாழ்த்தி இறைவனது திட்டத்தை நிறைவேற்ற இசைவு தெரிவித்தார் இந்த அன்னை மரியா.  நமது வாழ்வில் ஒவ்வொரு நாளும் இறைவார்த்தை வழியாக இறைவன் நம்மோடு உரையாடுகிறார். இறைவனது உரையாடலை கேட்டாலும் பல நேரங்களில் நமது இறை வேண்டுதல் என்பது, "என் விருப்பப்படி நிகழட்டும்" என்பதாக இருக்கிறதே தவிர, "உம் விருப்பப்படி நிகழட்டும்"  என்பதாக  இருப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது. 

    கடவுள் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டு, நமக்கு வேண்டியதை கேட்கின்ற நாம் அவர் நமக்குத் தருகின்ற அனைத்தையும் ஏற்றுக் கொண்டு,  அனைத்து விதமான சூழல்களிலும் அவரது திட்டத்தை நிறைவேற்றக் கூடிய மக்களாக நாம் மாறிட இறைவனிடத்தில் அருள் வேண்டிட,  வலுப்பெற்றிட இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.  இறைவன் நமது வாழ்வில் அனுமதிக்கின்ற எல்லா விதமான இன்ப துன்பங்களையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு, அதை இறைவனின் திட்டம் என்பதை உணர்ந்து கொண்டவர்களாய், அத்திட்டத்திற்கு இசைவு தெரிவித்து வாழத் துவங்குவோம்.  அன்னை மரியாவை வழிநடத்திய அதே இறைவன் நம்மையும் வழிநடத்துவார்.  படைத்த இறைவன் நம்மையும் பாதுகாத்து வழிநடத்துவார் என்று நம்பிக்கையோடு பிறக்கவிருக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொண்டு அன்பு செயல்களாலும் இரக்கச் செயல்களாலும் இந்த உலகத்தை மகிழச் செய்ய இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.  அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய் இறைவனது திட்டத்தை அறிந்து அதற்கு செயல்வடிவம் தரக்கூடியவர்களாய்  இணைந்து ஜெபிப்போம் இந்த திருப்பலியில்.

இறைவனது திட்டத்தை கண்டுகொள்ள...(20.12.2021)

இறைவனது திட்டத்தை கண்டுகொள்ள...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள்  இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
 

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் வழியாக ஆகாசு மன்னனுக்கு இறைவாக்கு அறிவிக்கப்படுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் அன்னை மரியாவுக்கு கபிரியேல் தூதர் வழியாக ஆண்டவரின் பிறப்பு பற்றிய செய்தி அறிவிக்கப்படுகிறது.

நாம் வாழுகின்ற இந்த காலகட்டத்தில் நமக்கும்  ஆண்டவரின் வார்த்தைகள் அனுதினமும் அறிவிக்கப்படுகின்றன.

கபிரியேல் தூதரின் வார்த்தைகளைக் கேட்டு அதற்கு ஏற்ற வகையில் தன் வாழ்வை அமைத்துக் கொள்ளக் கூடியவராக அன்னைமரியா திகழ்ந்தார். தன்னை முழுவதுமாக இறைவனின் திட்டத்திற்கு கையளித்தார். யூத சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பல வகையான அடக்கு முறைகள் கையாளப்பட்டுக் கொண்டிருந்த சூழலில், அன்னை மரியா ஆண்டவர் மீது கொண்ட ஆழமான அன்பின் காரணமாக, சமூகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை எல்லாம் கண்டு அஞ்சாதவராக தன்னை முழுவதுமாக இறைவனின் திட்டத்திற்கு கையளித்து, "நான் ஆண்டவரின் அடிமை!" என தன்னைத் தாழ்த்திக் கொள்ளக் கூடியவராக இருந்தார். இந்த அன்னை மரியாவைப் போலவே நாமும் வாழ அழைக்கப்படுகிறோம்.

இறைவார்த்தை வழியாகவும் ஒவ்வொரு நாளும் இறைவன் நம்மோடு உரையாடுகிறார். உரையாடுகின்ற இறைவன் நமக்குத் தருகின்ற திட்டம் என்ன? என்பதை நாம் அறிந்து கொண்டவர்களாய் இறைவனது திட்டத்தை இம்மண்ணில் செயலாக்கப்படுத்தக்கூடிய மனிதர்களாக நாம் மாறிட இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.  வெறுமனே இறைவார்த்தையைக் கேட்டு விட்டு நகர்ந்த விடாது, நாம் இறைவார்த்தை வழியாக இறைவன் நமக்குத் தருகின்ற இன்றைய நாளுக்கான இறைவனது திட்டம் என்ன? என்பதை ஆழமாக சிந்தித்தவர்களாய்... இறைவார்த்தையின் ஒளியில் அதனைக் கண்டு கொண்டு, அத்திட்டத்திற்கு நம்மை முழுவதுமாக அர்ப்பணிக்கக் கூடிய மக்களாக நாம் மாற இந்த நாளில் நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை ஆவலோடு எதிர்நோக்குகின்ற நாம், நம் வழியாக இறைவன் இவ்வுலகில் செய்யவிருக்கும் திட்டங்கள் என்ன என்பதை உணர்ந்து கொள்ளவும், அதனை செயலாக்கப்படுத்தவும் இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம்..

சனி, 18 டிசம்பர், 2021

அன்பு செய்து வாழ ...(19.12.2021)

அன்பு செய்து வாழ ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
 இன்று திருவருகைக் காலத்தின் நான்காவது ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இந்த நல்ல நாளில் அன்பு எனும் மெழுகு திரியை ஏற்றி, இந்த வாரம் முழுவதும் அன்பை குறித்து சிந்திக்க இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது. 

                
ஒரு காட்டுக்குள் இரு காகங்கள் இருந்தன. அந்த காகங்கள் காட்டு ராஜாவின் முன்பாக கோலாகலமாக திருமணம் செய்துகொண்டன. ஆரம்ப காலத்தில் இல்லறமாம் நல்லறம் இனிதே நகர்ந்தது. காலச்சக்கரம் சுழலச் சுழல கணவன் மனைவி மீது காட்டிய அன்பும் குறையத் தொடங்கியது. ஆண் காகம் தாமதமாக வீட்டுக்கு வரத் தொடங்கியது. ஒருநாள் சோகத்தோடு, வீட்டுக்குள் நுழையாமல் ஒரு மரக்கிளையில் ஆண் காகம் அமர்ந்திருந்தது. அதன் பக்கத்தில் போய் பெண் காகம் அமர்ந்தது. 

ஏன் உங்கள் முகத்தில் சோகம் தலைவிரித்தாடுகிறது? கொஞ்ச நாளாகவே நீங்கள் என்னோடு பேசுவதே இல்லை. என்ன காரணம்? என்று கேட்டது பெண் காகம். 

ஆண் காகம் ஒன்றும் சொல்லாமல் எழுந்து பறந்தது. பெண் காகமும் விடுவது போல் இல்லை. கணவன் பின்னால் பறந்தது. ஆண் காகமோ, கொஞ்சம் என்னை தனியா விடுகிறாயா? ஏன் என் பின்னாலேயே சுத்துற? பேசாம வீட்டுக்குப் போ! மனசு சரியானதும் நானே வீட்டுக்கு வந்து விடுவேன் என்றது.

 உடனே பெண் காகம் சொன்னது, நீங்கள் சொன்னதெல்லாம் சரி. ஆனால் கடைசியில் சொன்னது தான் பொய். மனசு சரியில்லை என்று சொல்கிறீர்களே! உங்கள் மனசு என்கிட்ட அல்லவா இருக்கிறது. அது நல்லா தானே இருக்கு. நம்ம கல்யாணம் பண்ண அன்றைக்கு, மாலைய மட்டுமா மாத்திக்கிட்டோம்! மனசையும் தானே மாத்திக்கிட்டோம்! என் மனசு உங்ககிட்ட இருக்கு. என்ன நீங்க அதிகமா அன்பு செய்றதே இல்ல! அதனாலதான் உங்க கிட்ட இருக்கிற என் மனசு சரியில்ல. வீட்டுக்கு வாங்க. என்னை அன்பு செஞ்சா எல்லாம் சரியாகிவிடும் என்றது. 

ஆம்! அன்புக்குரியவர்களே!

     அன்பே அனைத்திற்கும் ஆணிவேராய் அமைந்துள்ளது. இந்த உலகம் இயங்குவது அன்பால் தான். அன்பு மட்டுமே இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் மனிதனாக பிறந்ததும் அன்பின் அடிப்படையில் தான். 
அந்த அன்பின் அடிப்படையில் தான் அவர் நமக்காக தனது இன்னுயிரையும் தியாகம் செய்தார்.  

         இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கக்கூடிய நமது உள்ளங்களிலும் இந்த அன்புத் தீயானது பற்றி எரிய வேண்டும் என்பதே இன்றைய நாளின் மையச் செய்தியாக அமைந்திருக்கிறது. 

     இன்றைய நாளில் வாசிக்கப்பட்ட வாசகங்கள் அனைத்தும் அதையே நமக்கு வெளிப்படுத்துகின்றன. இஸ்ரயேல் மக்கள் பலவிதமான தவறான வழிகளில் சென்றாலும், பலமுறை கடவுளை விட்டு பிரிந்திருந்த நிலையில் இருந்தாலும், கடவுள் அவர்களைத் தேடிச் சென்று அன்பு செய்யக் கூடியவராக இருந்தார். அவர் எப்போதும் இஸ்ரயேல் மக்களை கைவிட்டு விடக் கூடிய நபராக இல்லை. பல நேரங்களில் இந்த இஸ்ரயேல் மக்கள் வணங்காக் கழுத்துடைய மக்களாக ஆண்டவரின் கட்டளைகளை புறக்கணித்து ஆண்டவரோடு செய்த உடன்படிக்கையை விட்டு விலகிய போதும் கூட, ஆண்டவர் அவர்களை தேடிச்செல்லக் கூடியவராக இருந்தார். அது அவரின் அன்பின் வெளிப்பாடாகும். இதையே இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. இந்த நம் கடவுள், நம்மீது கொண்ட அன்பின் அடிப்படையில் தான் இந்த உலகிற்கு வந்தார்.

           இன்றைய நாளில் நாம் வாசிக்கக் கேட்ட நற்செய்தி வாசகத்தில் கூட ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைத் தன் வயிற்றில் சுமந்திருந்த அன்னை மரியா, அன்பின் அடிப்படையில் தனது உறவினராக கருதப்பட்ட, கருவுற்று இருக்கக்கூடிய எலிசபெத்தம்மாளை சென்று சந்தித்து, அவருக்கு பணிவிடை செய்யக்கூடிய ஒரு நபராக இருப்பதை நாம் வாசிக்கக் கேட்டோம். 

  அன்பு மட்டுமே அனைத்தையும் தியாகம் செய்ய தூண்டும். இந்த உலகத்தில் நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் வெறுக்கும் நபர்கள் பலர் இருந்தாலும், அன்பு செய்யக் கூடிய மனிதர்களாக நாம் இருக்க வேண்டும். அடுத்தவரை வெறுக்கத் துவங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது. நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும் அன்பால் இந்த சமூகத்தை ஆளவும் இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.

                     அன்னை மரியா அடுத்தவர் மீது கொண்டிருந்த அன்பைப் போல, நாம் வாழுகின்ற சமூகத்தில், நாமும் ஒருவர் மற்றவர் மீது அன்பு கொண்ட மக்களாக வாழ இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது . 

 ஆனால் பல நேரங்களில் நாம் பிறரால் அன்பு செய்யப்பட வேண்டும் என விரும்புகிறோம். பிறரால் நாம் அன்பு செய்யப்பட வேண்டும் என விரும்புகிற போது நாம் பிறரை அன்பு செய்ய வேண்டும் என்பதையும் நாம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

 அன்பின் அடிப்படையாக விளங்குவதே குடும்பங்கள். நமது குடும்பங்களில் அன்பானது மேலோங்கிக் காணப்பட வேண்டும். "நான்"
 என்ற ஆணவத்தை அழித்து, "நாம்" என்ற உணர்வோடு ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை கொள்ளக் கூடியவர்களாக, ஒருவர் மற்றவர் மீது அன்பு காட்டக் கூடிய மக்களாக வாழ இந்த நாள் நமக்கு அழைப்புத் தருகிறது. 

திருமணத்தில் உருவாகக் கூடிய குடும்ப உறவு என்பதும் கூட வெறுமனே ஒரு சடங்கு அல்ல. அது வாழ்க்கைப் பாடம். இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாய் இருப்பேன் என நாம் கொடுக்கக்கூடிய வாக்குறுதிகள், வெறும் வாக்குறுதிகள் அல்ல, வாழ்க்கைக்கான உறுதிகள். அந்த உறுதியோடு எப்போதும் இன்பத்தோடு ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ இன்றைய நாளில் ஆண்டவர் இயேசு நமக்கு அழைப்பு தருகின்றார்.

 நம்மீது கொண்ட அன்பின் காரணமாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து சிறு குழந்தையாகப் பிறந்து  நம்மைத் தேடி உலகிற்கு வந்தார். இன்று நாமும் இந்த உலகத்தில் கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொருவருமே அன்பு செய்யத் தகுந்தவர்கள் என்பதை உணர்ந்தவர்களாக, அடுத்தவரை அன்பு செய்ய, தேடிச் செல்ல கூடிய மக்களாக இருக்க, இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.  



 அன்பை விதைக்கவும், அன்பை சுவைக்கவும், இந்த நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம். ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ இந்த நாளில் இறைவனது அருளை வேண்டி தொடர்ந்து இத்திருப்பலியில் இணைவோம்.

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...