இயேசுவின் பணியைச் செய்ய...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர் ஒருவர் ஒரு மாணவனை எழுப்பி, உங்க அப்பா என்ன வேலை செய்கிறார்? என்று கேட்டார். அதற்கு அச்சிறுவன் ஆடு வெட்டும் தொழில் செய்கிறார் என்று பதில் கூறினான்.
அப்படியானால் உன் அப்பாவிடம் சொல்லி ஆண்டின் சிறந்த பகுதியை எனக்கு கொண்டு வா என்று கூறினார்.
அச்சிறுவனின் தந்தையிடம் சென்று ஆசிரியர் கூறியதை கேட்டான். அவனது தந்தையும் அவனிடம் ஆட்டின் சிறந்த பகுதி நாக்கு என்று கூறி, நாக்கை வெட்டி அவனிடம் கொடுத்து அனுப்பினார்.
அவன் ஆசிரியரிடம் சென்று அதை காண்பித்தான். அதைக் கண்டு கோபமடைந்த ஆசிரியர், மீண்டும் உன் தந்தையிடம் சென்று, ஆட்டின் மிகவும் மோசமான பகுதியை பெற்று வா என்று கூறினார்.
அவன் மீண்டும் தன் தந்தையிடம் சென்ற போது அவனது தந்தை, ஆட்டின் மோசமான பகுதி நாக்கு என்று கூறி மீண்டும் ஆட்டின் நாக்கை அவனிடம் கொடுத்து அனுப்பினார்.
எலும்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும் என்பார்கள். இந்த நாக்கினை கொண்டு நாம் உதிர்க்கக் கூடிய வார்த்தைகள் பல நேரங்களில் ஆறுதலைத் தரும். பல நேரங்களில் அடுத்தவர் மனதில் காயத்தையும் உருவாக்குகிறது. ஆனால் நாம் எத்தனை வார்த்தைகளை உதிர்க்க வேண்டும் என்று இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் வெளிப்படுத்துகிறார். வெளிப்படையான, இரக்கம் மிகுந்த, கனிவு நிறைந்த, அன்பான வார்த்தைகளை உதிர்க்க வேண்டும் என இயேசு கிறிஸ்து இன்றைய நாள் நமக்கு அழைப்பு தருகின்றார். இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு வெளிப்படுத்துகிறது.
பல ஆடுகள் இருக்கும் போது, ஒரு ஆடு தொலைந்து போனால், ஆயன் தொலைந்து போன ஆட்டை தேடிச் செல்வது போல, நாம் வாழ்கின்ற இந்த சமூகத்தில், நாம் உதிர்க்கின்ற வார்த்தைகள் வழியாக
காயப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தருபவர்களாகவும், அவர்களை தேடிச் செல்பவர்களாகவும், அவர்களை ஊக்கமூட்டக் கூடியவர்களாகவும் இருக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகிறது.
நாம் சமூகத்தில் உயர்ந்ததை நாடிச் செல்கிறோம். ஆனால் இருக்கின்ற 99 ஆடுகளை விட்டுவிட்டு தொலைந்து போன ஒரு ஆட்டைத் தேடிச் செல்கின்ற ஆயனை போல,
நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில், துன்பத்தால் பலவிதமான பிரச்சனைகளுக்கு மத்தியில் உழலக்கூடிய, பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்களை நாம் தேடிச் செல்லவும் அவர்களுக்கு நமது வார்த்தைகளால் ஆறுதல் தரவும் பரிவு காட்டவும் இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன.
தொன்னூற்று ஒன்பது ஆடுகளை விட காணாமல் போன ஆட்டிற்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை போலவே இந்த சமூகத்தால் நலிவுற்று இருப்பவர்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் அவர்களை நமது வார்த்தைகளால் ஊக்கப்படுத்தவும், அவர்கள் வாழ்வு உயர நாம் பாடுபட வேண்டும் என்பதையும், இறைவன் இன்றைய நாளில் வாசகங்கள் வழியாக நமக்கு வெளிப்படுத்துகிறார்.
இறைவன் வெளிப்படுத்திய வார்த்தைகளை உள்ளத்தில் இருத்தியவர்களாய், ஆண்டவர் இயேசுவின் பணியைச் செய்யக்கூடியவர்களாய், இறையருளை இன்றைய திருப்பலி வழியாக இணைந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக