வார்த்தைகளை வாழ்வாக்க...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் செக்கரியாவின் பாடலை நாம் வாசிக்கக் கேட்டோம். இந்த செக்கரியா கடவுளின் மீது கொண்டிருந்த ஐயத்தின் காரணமாக நா கட்டப்பட்டிருந்தவர். கடவுள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் நிறைவேறிய போது அவரது நா கட்டவிழ்க்கப்பட்டது. எனவே அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடினார். இந்த பாடல் ஒரு புகழ்ச்சிப் பாடலாக இருந்தாலும், இந்த பாடலில் தன் குழந்தையினுடைய எதிர்காலத்தை குறித்தும் அக்குழந்தையின் வாழ்வு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும் செக்கரியா எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
திருப்பாடலிலே அந்தக் குழந்தை கடவுளின் இறைவாக்கினர் எனப்படும் என்ற வார்த்தையானது கொடுக்கப்படுகிறது. இறைவாக்கினருக்கு உரிய வாழ்வைத் தான் திருமுழுக்கு யோவான் வாழ்வார் என்பதை, குழந்தையாக அவர் பிறந்த மாத்திரமே செக்கரியா
தனது பாடலில் அறிவுறுத்துகிறார்.
அதுபோலவே ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த, அவர் முன்னே செல்ல வேண்டும் என்ற இன்னொரு வரியும் இப்பாடலில் வருகிறது. இதுவே திருமுழுக்கு யோவானின் பணி. அவர் இப்பணி செய்யவே இவ்வுலகத்திற்கு வந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. திருவிவிலியம் இதனை நமக்கு வலியுறுத்துகிறது. இதனையும் குழந்தையாக பிறந்த திருமுழுக்கு யோவானுடைய பெயரிடும் நிகழ்விலே செக்கரியா எடுத்துரைக்கிறார்.
இறுதியாக பாடல் முடியும்போது தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்ய வேண்டும் என்ற வார்த்தையானது இடம்பெறுகிறது. இவ்வார்த்தைகளை வாழ்வாக மாற்றியவர் திருமுழுக்கு யோவான். குழந்தையாக இருந்தபோது அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதையும் அவரது பணி என்ன என்பதையும் அவரின் வாழ்வு எப்படிப்பட்ட வாழ்வாக இருக்க வேண்டும் என்பதையும் செக்கரியா கடவுளை புகழ்ந்து பாடும் பாடலில் எடுத்துரைத்தார். இவ்வார்த்தைகளை வாழ்வாக்கியவர் திருமுழுக்கு யோவான்.
நாமும் ஆண்டவரின் வார்த்தைகளை வாழ்வாக்கக் கூடியவர்களாக மாறிட இந்த நாளில் அழைக்கப்படுகிறோம். எல்லாவிதமான ஆண்டவரின் வருகையை ஆவலோடு எதிர் நோக்குகின்ற நாம் நமது வாழ்வில், ஆண்டவரின் வார்த்தைகளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு நம்பிக்கையில் நிலைத்திருக்க , அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இறைவனது வார்த்தைகளை வாழ்வாக்க இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக