மகிழ்வை விதைக்க விதைக்க...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் நாம் இந்த மூன்றாம் வாரத்தில் மகிழ்ச்சி என்னும் மெழுகுதிரியை ஏற்றி, ஆண்டவர் இயேசுவின் பிறப்பை ஆவலுடன் எதிர்நோக்குகின்றோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பானது நமக்கு வலியுறுத்துவது அவர் இந்த மானுடத்தின் மீது கொண்டிருந்த அன்பையே. அந்த அன்பையே நாமும் இந்த சமூகத்தில் விதைக்க கூடியவர்களாக, அன்பின் மூலம் மகிழ்வை கண்டடைய கூடியவர்களாக இருக்க இறைவன் அழைப்பு தருகின்றார். இறைவனை நாம் அன்பு செய்வதன் மூலம் கடவுளோடு எப்போதும் இணைந்து மகிழ்ந்திருக்க முடியும். அவ்வாறு மகிழ்ந்து வாழ வேண்டும் என்பதையே இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது. கடவுள் படைத்த இந்த அழகிய உலகத்தில் மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவர் மீது அக்கறை கொண்டு இரக்கச் செயல்கள் புரிவதன் மூலம் மகிழ்வினை விதைக்க கூடியவர்களாக இருக்க முடியும். நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இருப்பதில் பகிர்வதன் மூலம் நிறைவு கொண்டு வாழ இன்றைய நாள் ஆனது நமக்கு அழைப்பு தருகின்றது.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியும் இன்றைய நாளில் இதையே நமக்கு வலியுறுத்துகிறது. நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ள வாசகங்களும் அழைப்பு தருகின்றன. இருப்பதை பகிர்வது என்பது இயலாத காரியம் அல்ல இருப்பதை நம்மால் பகிர்ந்து கொள்ள முடியும். பகிரும் பொழுது நம்மிடம் இருப்பது குறைவுபடுவது போல தோன்றினாலும், நாம் நிறைவு பெறுவோம் என்பதே நிதர்சனமான உண்மை.
ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மீது கொண்ட அன்பின் காரணமாக தனது இன்னுயிரை நமக்காக தியாகம் செய்தார். அவரைப் போல நாமும் இந்த சமூகத்தில் வாழ அழைக்கப்படுகிறோம். கடவுளின் பார்வையில் நாம் அனைவரும் சமமானவர்களே. நாம் அனைவருமே அவருடைய பிள்ளைகள் என்பதை உணர்ந்தவர்களாக பாகுபாடுகள் நிறைந்து இருக்கின்ற இந்த சமூகத்தில் வேறுபாடுகளை கடந்து சாதி மத இன மொழி பாகுபாடுகள் என அனைத்தையும் புறந்தள்ளியவர்களாய், மனிதர்களை மனிதர்கள் என்ற முறையில் மதிக்கக்கூடிய மனிதநேயம் கொண்ட மனிதராக இந்த சமூகத்தில் ஒருவர் மற்றவரை அன்புசெய்து அரவணைத்து வாழ பிறரது அகத்திலும் முகத்திலும் மகிழ்வினை காண இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்புத் தருகின்றன. ஆண்டவரின் வார்த்தைகளை வெறும் வார்த்தைகளாக மட்டும் எடுத்துக் கொண்டு செல்லாமல், ஆண்டவரின் வார்த்தைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க கூடியவர்களாக நாம் மாறிட இந்த நாள் நமக்கு ஒரு அழைப்பை தருகின்றது. அன்பே கடவுள் என்பதைத் தான் அனைத்து மதங்களும் போதிக்கின்றன. அன்பின் உருவமாக விளங்குகின்ற நம்முடைய கடவுளை நாம் நம்மவராக மாற்றிக்கொள்ள நமது செயல்களில் அன்பானது மேலோங்கி காணப்படவேண்டும். அன்பால் இந்த அகிலத்தை ஆளவும், அன்பால் இந்த அகிலத்தில் உள்ள மனங்களை எல்லாம் ஆட்கொள்ள கூடிய மனிதர்களாக நாம் மாறிடவும், நாம் கொண்டிருக்கும் அன்பானது நிறைவான மகிழ்வை இந்த சமூகத்தில் தரக்கூடியதாக அமைந்திட இன்றைய நாள் நமக்கு ஒரு புதிய நாளாக அமைகிறது.
ஆண்டவரின் பிறப்பை ஆவலோடு எதிர்நோக்குகின்ற நாம், அன்பு என்ற ஒற்றை
வார்த்தையால் அகிலத்தை அரவணைக்கக் கூடியவர்களாக, ஆட்கொள்ளக் கூடிய மனிதர்களாக மாறிடவும், நற்செய்தியில் ஒளிரும் மகிழ்வாக நமது வாழ்வு அமைந்திடவும், ஆண்டவரின் சீடர்கள் நாம் என்பதை செயல்களால் வெளிக்காட்டவும் இன்றைய நாளில் இறைவன் நமக்கு அழைப்பு தருகின்றார். இறைவன் தருகின்ற அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாக மகிழ்வினில் மலர்ந்திடும் இரக்கச் செயல்களால் அகிலத்தை ஆட்கொள்ள இறைவனது அருளை இணைந்து இன்றைய நாளில் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக