வெள்ளி, 30 டிசம்பர், 2022

வாக்கு மனிதரானார்; நம்மிடையே குடி கொண்டார்! (31-12 -22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
வாக்கு மனிதரானார்; நம்மிடையே குடி கொண்டார், என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப நம்மோடு இருப்பதற்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்து மனித வடிவம் எடுத்து நம்மிடம் வந்தார். நம்மோடு வாழ்ந்த போது ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை, தன் வார்த்தைகளாலும் செயலாலும் வெளிக்காட்டினார்.  இந்த இயேசுவை உணர்ந்திருக்கின்ற நாம்
ஒவ்வொரு நாளும் இறை வார்த்தைகளின் வழியாக இந்த இயேசுவின் உடனிருப்பை உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.
      வார்த்தையான இறைவன் தன் வார்த்தைகள் வழியாக நமது வாழ்வை ஒவ்வொரு நாளும் நெறிப்படுத்துகிறார். இந்த இறைவன் மீதான ஆழமான நம்பிக்கையில் அவரது வார்த்தைகளை நமது வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்து, நம்மை நாமே சரி செய்து கொண்டு, கடவுளின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற நபர்களாக நாளும் வளர்வதற்கான ஆற்றலை இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

வியாழன், 29 டிசம்பர், 2022

திருக் குடும்ப விழா! (30-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

                      ஆண்டவர் இயேசு கிறிஸ்து குழந்தையாக இருந்தபோது, ஏரோது அரசனிடம் இருந்து இந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக வானதூதர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் குழந்தையை எடுத்துக்கொண்டு அதன் தாய் மரியாவும் யோசேப்பும் எகிப்திற்கு ஓடிச் செல்வதைத் தான் இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்கக் கேட்கிறோம்.
                   கடவுளின் உடனிருப்பும் பராமரிப்பும் எப்போதும் நம்மைப்  பின்தொடருகிறது என்பதை இந்த நிகழ்வு வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.  மண்ணில் நாம் உதயமான நாள் முதல், இந்த நொடிப் பொழுது வரை கடவுள் எத்தனையோ நபர்கள் வழியாக நம்மை பாதுகாத்து, பராமரித்து வழி நடத்தி இருக்கிறார். இந்த கடவுளின் இந்த கிருபையை எண்ணிப் பார்த்தவர்களாக, எப்போதும் நம்முடன் பயணிக்கின்ற இந்த கடவுளை நாம் உணரத் தவறிப் போனாலும் கூட அவர் நம்மை மறந்து விடாத நபராக, ஒவ்வொரு நாளும் இன்பத்திலும்,  துன்பத்திலுமாக உடனிருந்து வழி நடத்துகிறார். இந்த வழி நடத்துகின்ற கடவுளைக் கண்டு கொள்ளக் கூடியவர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான ஆற்றலைப் பெற்றுக்கொள்ள இன்றைய  நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி! (29-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 கடவுள் மனிதனை சந்திப்பதற்காக மனித வடிவம் எடுத்துப் பிறந்தார். இந்த குழந்தையை ஏந்தியவர்களாக மரியாவும் சூசையும் ஆண்டவரின் இல்லத்திற்கு சென்று கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார்கள். 
யூத சட்டங்கள் உருவாக்கி வைத்திருந்த அனைத்தையும் இயேசுவுக்காக அப்படியே பின்பற்றுகிறார்கள். 
   இந்த இயேசுவை தன் கைகளில் ஏந்திய மூத்த நபராகிய சிமியோன், கடவுளைக் கண்டு கொண்டவராக, கடவுளை போற்றிப் புகழுகின்றார். 

            இன்றைய நற்செய்தி வாசகத்தை நாம் நமது வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்கிற போது, மண்ணில் பிறக்கின்ற குழந்தைக்காக நன்றி சொல்லி நமது பெற்றோரும் நம்மை சுமந்து கொண்டு ஆலயம் வந்தார்கள். நாமும் நமது குழந்தைகளை சுமந்து கொண்டு ஆலயம் வந்து கொண்டிருக்கிறோம். ஆலயம் வருவதன் நோக்கம் கடவுள் தந்த இந்த குழந்தைகளுக்காக நன்றி சொல்வது. 

      நன்றி சொல்வதோடு நின்று விடுவதல்ல நம் வாழ்வு. கடவுள் தந்த விலை மதிப்பில்லாத பரிசாகிய இந்த குழந்தைகளை நாம் நல்லதொரு முன்மாதிரிகளாக இருந்து, இயேசுவைப்போல பெற்றோருக்கு கீழ்ப்படிந்து, அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்குகின்ற குழந்தைகளாக, வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து கொள்வதற்கு இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக நாம் அழைக்கப்படுகிறோம். 
         மண்ணிற்கு வருகிற ஒவ்வொரு குழந்தையுமே ஆண்டவர் இயேசுவின் செய்தியை கொண்டு வருகிறது. இந்தக் குழந்தைகளை கடவுளுக்கு உகந்த குழந்தைகளாக வளர்த்தெடுப்பதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறை வேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

புனித மாசில்லா குழந்தைகளின் மறைசாட்சியம்!(28-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
    இன்று நாம் தாய்த்திரு அவையோடு இணைந்து மாசில்லா குழந்தைகள் தினத்தை கொண்டாடுகிறோம். ஏரோது அரசனுடைய அரண்மனைக்குச் சென்று ஆண்டவர் இயேசுவை நாங்கள் காண வந்திருக்கிறோம், மெசியா பிறந்திருக்கிறார்   என்ற செய்தியை அறிந்து இங்கு வருகை தந்திருக்கிறோம் என்று சொல்லியபோது ஏரோது அரசன் கலங்கினான். தனக்கு எதிராக ஒரு அரசன் வந்து விட்டாரோ என்ற  கலக்கமானது, அவரது உள்ளத்தில் நஞ்சை விதைத்தது. 

       அங்கிருந்த ஞானிகளை பார்த்து, நீங்கள் சென்று பாலன் இயேசுவை வணங்குங்கள். அவரைப் பற்றி எனக்கு தகவல் கொடுங்கள். நானும் அவரை வணங்குவேன் என்று நயவஞ்சகமாக கூறி அனுப்புகின்றான். இயேசுவை கண்ட ஞானிகள் இந்த இயேசுவின் இருப்பிடத்தைக் குறித்து ஏரோதுக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காத சூழ்நிலையில் இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் எல்லாம் கொல்லுவதற்கு ஆணை பிறப்பிக்கின்றான். அதன் அடிப்படையில், பல குழந்தைகள் தன் உயிரை இழந்தனர். இப்படி உயிரிழந்த குழந்தைகளை எல்லாம் நினைவு கூருவதற்காகவே, திரு அவை இந்த மாசில்லா குழந்தைகள் தினத்தை உருவாக்கியது. 

         ஆண்டவர் இயேசுவின் பிறப்புக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த இந்த மாசில்லா குழந்தைகளை நன்றியோடு நினைவு கூர்ந்து ஜெபிக்கின்ற இந்த நன் நாளிலே நாம் நமது குழந்தைகளுக்கான முன்னோடிகள் என்பதை இதயத்தில் இருத்தியவர்களாக, நமது சொல்லாலும் செயலாலும் நம் குழந்தைகளுக்கு நல்லதொரு முன்மாதிரிகளாக நாம் திகழவும், நம்மைப் பார்த்து வளருகின்ற குழந்தைகள், நாளும் கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்குபவர்களாகவும், இயேசுவைப் போல பெற்றோருக்கு பணிந்து சிறந்து விளங்கக் கூடிய, குழந்தைகளாக வளரவும் இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

புனித யோவான் - திருத்தூதர், நற்செய்தியாளர்! (27-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
     ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது அன்பு கொண்டிருந்த சீடர்களுள் ஒருவராக யோவானை சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த யோவானை நினைவு கூர திரு அவை இன்று நமக்கு அழைப்பு தருகிறது. ஆண்டவர் இயேசுவால் அழைக்கப்பட்ட போது, தான் செய்து கொண்டிருந்த மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு ஓடி வந்தவர். இயேசு அழைப்பதற்கு முன்னதாகவே திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளைக் கேட்டு, தன் வாழ்வை மாற்றிக் கொண்டு மனமாற்றம் பெற்றவராக திருமுழுக்கு பெற்றவர். இந்த திருமுழுக்கு யோவான்,  இதோ இறைவனின் செம்மறி என்று அடையாளம் காட்டிய போது,  இயேசுவை அறிந்தவராக இருந்தாலும், இயேசு  அழைத்தபோது உடனடியாக ஓடிச் சென்று அவரது பணிக்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தவர். இயேசுவோடு உடன் பயணித்தவர்.
 சிலுவையில் இயேசு தொங்குகிற போது கூட, சிலுவையின் அடியில் நின்று கொண்டிருந்த நபராக இந்த யோவானை நாம் விவிலியத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
                        தன் வாழ்நாள் முழுவதுமே ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதே தன் வாழ்வின் இலக்கு என்பதை உணர்ந்தவராக, தான் அன்பு செய்த ஆண்டவர் மீதான நம்பிக்கையில் அனுதினமும் வேறூன்றிய ஒரு நபராக நம்பிக்கையோடு  ஆண்டவரின் வார்த்தைகளை துணிவோடு எடுத்துரைத்து சான்று பகருகின்ற மனிதனாக தன் வாழ்நாளை அமைத்துக் கொண்டவர். 
   இந்த புனிதரை நினைவு கூருகின்ற இந்த நன்நாளிலே ஆண்டவர் மீது அதிகமான அன்பு கொள்ளக் கூடியவர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான அழைப்பு நமக்கு தரப்படுகிறது. நம்மை தேடி வந்த இறைவனை நாம் உணர்ந்து கொண்டு, அவரின் வார்த்தைகளை இதயத்தில் இருத்திக்கொண்டு, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு கடவுள் மீதான அன்பில் நாளும் வளரவும் அந்த அன்பை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளவும், இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 


ஞாயிறு, 25 டிசம்பர், 2022

புனித ஸ்தேவான்- முதல் மறைச்சாட்சி! (26-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
இன்று தாய்த்திரு அவையானது முதல் மறைச்சாட்சியான திருத்தொண்டர் ஸ்தேவான் அவர்களை நினைவு கூர்கிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பணியினை செய்வதற்காக அழைக்கப்பட்ட ஒவ்வொருவருமே படைப்பிற்கெல்லாம் சென்று நற்செய்தியை அறிவிக்கின்ற நபர்களாக மாறிய போது பலவிதமான இன்னல்களையும் இடையூறுகளையும் தங்கள் வாழ்வில் சந்தித்தார்கள். அதிலும் குறிப்பாக கிரேக்க மொழி பேசக்கூடிய பெண்களுக்கு இடையே பலவிதமான பிரச்சனைகள் உருவானது. பலதரப்பட்ட மக்கள் இயேசுவின் பெயரால் இணைந்திருந்த சூழ்நிலையிலும்,  கிரேக்க பெண்கள், அதிலும் கணவனை இழந்த நிலையில் இருந்த அந்த கைம்பெண்கள் முறையாக கவனிக்கப்படவில்லை என்ற பிரச்சனையானது திரு அவையில் உருவான போது, அப்போது இருந்த திருத்தூதர்கள் எல்லாம் ஒன்று கூடி கடவுளின் துணையோடு தூய ஆவியின் அபிஷேகம் பெற்ற பலரைத் தேர்ந்தெடுத்து திருத்தொண்டர்களாக அவர்களை நியமித்து,  பந்தியில் பரிமாறுகின்ற பணியினை அவர்களுக்கு வழங்கினார்கள்.  அப்படி அவர்கள் தேர்ந்த  திருத்தொண்டர்களுள் ஒருவர் தான் புனித ஸ்தேவான்.
 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றி ஆணித்தரமாக எடுத்துரைக்கக் கூடிய ஒரு மனிதனாக தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். ஆண்டவர் ஆலயத்தில் உறைந்திருப்பவர் அல்ல; மாறாக அவர் இந்த அகிலம் முழுவதிலும் பரந்திருப்பவர் என்பதை துணிவோடு எடுத்துரைத்தார். இந்த இயேசுவின் செய்தியை அறிவிப்பதால் எத்தனையோ இடர்பாடுகளை பலர் சந்தித்த போதும், நீங்கள் அவர்களை எத்தனை இடர்பாடுகள் தந்தாலும் கடவுள் அவர்களை காத்தருள்வார்.  நாம் அவர்களை தண்டித்தலாகாது. மாறாக, அவர்களின் வார்த்தைகளைக் கேட்டு வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும் என இயேசுவின் நற்செய்தியை அறிவித்தவர்கள் சார்பாக துணை நின்ற ஒரு மனிதர். அது போலவே தன்னுடைய வாழ்நாளில், ஆண்டவர் இயேசு கிறிஸ்து உயிர்த்தார். உயிர்த்தவர் விண்ணகத்தில் தந்தையின் வலப்பக்கம் இருக்கிறார் என்று ஆணித்தரமாக பல தரப்பட்ட மக்களுக்கும் துணிவோடு நற்செய்தி அறிவித்தார். அதன் விளைவாக சுற்றி இருந்தவர்களால் இவன் மோசேயின் சட்டத்தை மீறுகிறான் என்று குற்றம் சாட்டப்பட்டு கல்லால் எறிந்து கொல்லப்பட்டார். உயிர் விடுகின்ற நேரத்திலும் கூட தான் ஏற்றுக்கொண்ட இந்த ஆண்டவர் இயேசுவை பிரதிபலிக்கின்ற மனிதனாக, தந்தையே! இவர்களை மன்னியும் என்று சொல்லி அவர்களுக்காக மன்னிப்பு வேண்டி தனது இன்னுயிரை தியாகம் செய்தார்.  திரு அவையின் முதல் மறைசாட்சியான இந்த ஸ்தேவானை நினைவு கூர்கின்ற இந்த நன்னாளிலே நாம் ஆண்டவரின் மீது ஆழமான நம்பிக்கை கொள்ளவும், அவரது வார்த்தைகளை வாழ்வாக்கவும், அவரது வார்த்தைகளை துணிவோடு எடுத்துரைக்கவும் ஆற்றல் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசீர்வதிப்பார். 

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்! (25-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாளிலே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பெருவிழாவை உலகெங்கும் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 
இந்த நல்ல நாளிலே உங்கள் அனைவருக்கும் ஆண்டவர் இயேசுவின் பிறப்பு பெருவிழா வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு உரித்தாக்குகிறேன். கடவுள் எதற்காக மனித வடிவம் எடுத்தார் என்ற கேள்வியை இதயத்தில் எழுப்புகிற போது கடவுள் மனிதனை இந்த சமூகத்தில் அன்போடும் பகிர்வோடும் மகிழ்ந்திருப்பதற்காக உருவாக்கினார். 
ஆனால் மனிதன் தன் மனம் போன போக்கில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டு, அன்பையும் பகிர்வையும் மகிழ்வையும் குலைத்த மனிதனாக, தன்னுடைய சுயநலத்தை மட்டுமே முன்னிறுத்திய மனிதனாக நெறி தவறி வாழுகின்ற போது, எத்தனையோ நபர்கள் வழியாக வாழ்வை நெறிப்படுத்துவதற்கான அழைப்பை தந்த இறைவன், இன்றைய நாளில் மனித வடிவம் எடுத்து நம்மில் ஒருவராக வந்து, நம்மோடு உரையாடி, உறவாடி, நம் வாழ்வை நெறிப்படுத்துகின்றார்.  நம்மை நெறிப்படுத்தி கடவுளுக்கு உகந்த மனிதர்களாக நம்மை மாற்றுவதற்கு கடவுளே மனித வடிவம் எடுத்து, நம்மைத் தேடி வந்திருக்கிறார். நம்மைத் தேடி வந்த ஆண்டவரை கண்டு கொள்ளவும், அவரை  பிரதிபலிக்கின்ற மனிதர்களாக  நாம் மாறிடவும், இந்த நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். 
 பிறந்திருக்கின்ற பாலன் இயேசு உங்களையும் என்னையும் ஆசீர்வதித்து, நம் வழியாக இந்த சமூகத்தில் பல நல்ல காரியங்களை முன்னெடுப்பார். கடவுளின் திட்டத்திற்கு நம்மை முழுவதும் கையளித்தவர்களாக, இந்த நாளிலே இணைந்து பயணிப்போம். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மகிழ்வோடு மற்றவருக்கு அறிவிப்போம்.

சனி, 24 டிசம்பர், 2022

விண்ணில் இருந்து விடியல் நம்மை தேடி வருகிறது.(24-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
செக்கரியா கடவுளை போற்றி புகழ்ந்ததை இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம். கடவுள் சொன்ன வார்த்தைகள் நிறைவேறுமா என்ற ஐயம் உள்ளத்தில் எழுந்த போது, கடவுளின் வார்த்தைகள் செயல் வடிவம் பெறுகின்ற வரை நீ பேச்சற்றவனாய் இருப்பாய் என்று வான தூதர் கூற, அதன் அடிப்படையில் பேச்சிழந்த நபராக அவர் இருந்தார். கடவுள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் நிறைவேறிய போது, அவர் மீண்டும் நாவன்மை பெற்றவராக,  கடவுள் செய்த அளப்பரிய காரியத்தை எண்ணி, அவரை போற்றி புகழக் கூடியவராக, இருப்பதை இன்றைய வாசகம் வாயிலாக நாம் உணர்ந்து கொள்கிறோம். இந்த வாசகத்தின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் சீர்தூக்குகிற போது, இன்னல்களும் இடையூறுகளும் ஏற்பட்டபோது பல நேரங்களில், இதனை நம்மால் எதிர்கொள்ள முடியுமா என்ற கலக்கம் நம்மில் மேலோங்கி இருக்கலாம். 

    ஆனால் கண்ணுக்குத் தெரியாத கடவுள் இந்த பிரச்சனைகளை கடந்து வருவதற்கான ஆற்றலை கொடுத்து நம்மை அத்துன்பத்திலிருந்து மீட்டெடுத்திருக்கின்றார். அப்படி அவர் நம்மை மீட்டெடுத்த தருணங்களை எல்லாம் நன்றியோடு நினைவு கூர்ந்து, அந்த கடவுளுக்கு நன்றி சொல்லுகின்ற மனிதர்களாக நீங்களும் நானும் நாளும் வளர்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
      

திருமுழுக்கு யோவானின் பிறப்பு. (23-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 
 
               கடவுளின் வார்த்தைகள் செயல் வடிவம் பெறுவதை இன்றைய இறை வார்த்தைகள் வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். அன்று ஆண்டவரின் தூதர் செக்கரியாவுக்கு தோன்றி சொன்ன வார்த்தைகள் அனைத்துமே யோவானின் பிறப்பில் முழுமை பெறுகின்றன. கடவுள் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் செயல் வடிவம் பெறுவதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக நாம் உணர்ந்து கொள்கிறோம். நாமும் அனுதினமும் ஆண்டவரின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்கிறோம். இந்த வார்த்தைகள் வெறுமனே கேட்பதற்கானது மட்டுமல்ல. செயல் வடிவப்படுத்தப்பட வேண்டியது என்பதை உணர்ந்து கொண்டவர்களாக, கடவுளின் வார்த்தைகளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு, அந்த வார்த்தைகளை வாழ்வாக்குவதற்கான முயற்சியில் நாம் அனுதினமும் ஈடுபட கடமைப்பட்டிருக்கிறோம். கடவுளின் வார்த்தை எத்தகைய மனநிலை படைத்தவர்களாக நாம் இருந்தாலும், நம் மனநிலைக்கு ஏற்றவாறு ஆறுதல் தரக்கூடியதாக அமையும். இந்த ஆறுதலான வார்த்தைகளை மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக, கடவுளின் திருவுளத்தை அறிந்த மனிதர்களாக, அவரின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாக, நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள, இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். (22-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
       அன்று ஒருநாள் அன்னா என்ற பெண்மணி ஆண்டவரின் திரு முன்னிலையில் வந்து நின்று, தனக்கு ஒரு குழந்தை இல்லை என்பதை சொல்லி ஆண்டவரிடத்தில் அழுது புலம்பிய போது, தூரத்திலிருந்து அதை கவனித்துக் கொண்டிருந்த ஏலி என்ற குரு கடவுளின் முன்னிலையில் வந்து குடித்துவிட்டு நிற்கிறாய் என்று சொல்லி அந்த பெண்ணின் வேண்டுதலை அவர் கேள்விக்கு உட்படுத்திய போது, குடித்துவிட்டு வரவில்லை மாறாக, தனக்கு குழந்தை இல்லை என்பதால் இந்த கடவுளிடத்தில் எனது உள்ளத்தின் குமுறல்களை எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்தப் பெண்மணி சொல்லி, தனக்காக இறைவனிடத்தில் மன்றாடிய போது, அவர், உரிய காலத்தில் கடவுள் உன் மன்றாட்டுக்கு செவிசாய்ப்பார் என்று சொல்லி அவரை அனுப்பி வைக்கின்றார். 

      அதற்கேற்றார் போல சில நாட்களுக்குப் பிறகாக அந்த அன்னா என்ற பெண்மணி ஒரு குழந்தையை பெற்றெடுத்து, கடவுள் தனக்கு செய்த நன்மையை நினைவுகூர்ந்த ஒரு பெண்மணியாக, கடவுளுக்கு நன்றி சொல்ல மீண்டும் அதே ஆலயத்திற்கு வந்து, ஆண்டவர் தனக்கென கொடுத்த அந்த மகனை கடவுளின் பணிக்கென அர்ப்பணிப்பதைத்தான், இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம்.

           இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட, அன்னை மரியா கடவுளை போற்றி புகழ்கின்றார். எத்தனையோ பெண்கள் ஆண்டவரின் வருகைக்காக காத்திருந்த போது, கடவுள் அன்னை மரியாவை தேர்ந்தெடுத்தார்.  இந்த மரியாவின் வழியாக இந்த அகிலத்திற்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து வந்தார். மரியா கடவுள் ஆயிரம் பேருக்கு மத்தியில் தன்னை தேர்ந்தெடுத்ததை குறித்து மகிழக்கூடியவராக, கடவுள் தன்னை உயர்த்தியதை எண்ணி கடவுளைப் போற்றி புகழக் கூடியவராக இருப்பதை எடுத்துரைப்பதாக இன்றைய நற்செய்தி வாசகம் அமைந்திருப்பதை நாம் வாசிக்க கேட்டோம்.

       இந்த வாசகங்கள் இரண்டுமே நமக்கு தருகின்ற வாழ்வுக்கான பாடம், நமது வாழ்வில் எத்தனையோ நேரங்களில் நாம் கடவுளிடத்தில் கண்ணீரோடு மன்றாடிய போதெல்லாம், அவர் நம் மன்றாட்டுக்கு பதில் தந்திருக்கிறார். தகுந்த நேரத்தில் நமது தேவைகளுக்கெல்லாம் துணை நின்று, தேவைகளை நிவர்த்தி செய்த அந்த இறைவனை நன்றியோடு நினைவு கூர, இன்றைய நாள் இறை வார்த்தைகள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. நன்றி மறவாத மனிதர்களாக இன்றைய நாளில் கடவுள் செய்த எல்லா விதமான நன்மைகளையும் நினைவுகூர்ந்து நன்றி சொல்லுவோம். அதற்கான அருளை வேண்டி இன்றைய நாளில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 
    

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? (21-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
               வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை. வார்த்தைகளால் ஒருவருடைய மனதை காயப்படுத்தவும் முடியும், குணப்படுத்தவும் முடியும் என்பார்கள். இன்று மரியாவின் வார்த்தைகள் எலிசபெத்தை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியதை நாம் வாசிக்க கேட்டோம். அதுபோல முதன் முதலாக மரியாவை ஆண்டவரின் தாய் என்று குறிப்பிட்டதும் எலிசபெத்தம்மாள். 

       வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடம்பெறுகின்ற வார்த்தைகள் அனைத்துமே ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியை உருவாக்குகின்றன. இந்த இறை வார்த்தையோடு நமது வாழ்வை ஒப்பிட்டு பார்க்கிற போது, நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் எவருக்கு எத்தகைய உணர்வுகளை உருவாக்குகிறது என சிந்திக்க நாம் அழைக்கப்படுகின்றோம். நமது வார்த்தைகளால் அடுத்தவரை மகிழ்விக்கவும், ஆண்டவரை மகிழ்விக்கவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தவர்களாக, நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகளை குறித்து மிகவும் கவனமாக இருப்பதற்கு, இன்றைய நாள் இறை வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது. ஆண்டவரின் வார்த்தைகளை ஆர்வத்தோடு எடுத்துரைப்போம். இந்த ஆண்டவரின் வார்த்தைகள் அடுத்தவருக்கு மகிழ்ச்சியை உருவாக்கும். மகிழ்வை உருவாக்கும் வார்த்தைகளை நமது வார்த்தைகளாக மாற்றிக் கொண்டு இந்த சமூகத்தில் ஒருவர் மற்றவரோடு இணைந்து, இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்க முயல்வோம். அதற்கான அருளை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறை வேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

இதோ! கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.(20-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

             ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அறிவிக்கப்படுவதை இன்றைய வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். கடவுளின் தூதர் சொன்ன வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு கடவுளின் திட்டத்திற்கு தன்னை முழுவதுமாக அன்னை மரியா கையளித்தார். இந்த அன்னை மரியாவை போல நாமும் கடவுளின் திட்டத்திற்கு தன்னை கையளிக்க கூடிய மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இன்றைய நாள் இறை வார்த்தைகள் நமக்கு வலியுறுத்துகின்றன. கடவுள் மனிதன் மீது கொண்ட அன்பின் காரணமாக மனிதனை தேடி வந்தார். நம்மை தேடி வந்த இறைவன் நமது வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை தன் சொன்னாலும் செயலாலும் நமக்கு முன்மாதிரியாக இருந்து, வாழ்ந்து காட்டினார். 

       இந்த இயேசுவை பின்பற்றக்கூடிய நாம் ஒவ்வொருவருமே, கடவுளின் திட்டத்தை உணர்ந்தவர்களாக, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு ஆண்டவர் இயேசுவை பின்பற்றுகின்ற நாம் அவரிடம் காணப்பட்ட அனைத்து பண்பு நலன்களையும் நமது பண்பு நலன்களாக கொண்டு, கடவுளின் திட்டத்திற்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாக நாளும் இச்சமூகத்தில் வளர்வதற்கான ஆற்றலை வேண்டி, இன்றைய நாளில் இறைவேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

திருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது.(19-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
        இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானின் பிறப்பு செக்கரியாவுக்கு அறிவிக்கப்படுகின்றது. இந்த செக்கரியா என்ற மனிதர் ஆலயத்தில் பணி செய்கின்ற நபராக இருக்கின்றார். தன் முன்னிலையில் வந்து நிற்பது ஆண்டவரின் தூதர் என்று அறிந்த நிலையிலும், அவர் சொல்லுகின்ற வார்த்தையில் கலக்கம் கொண்ட மனிதராக இருக்கின்றார். அதன் விளைவாகவே கடவுளின் தூதர் சொன்ன வார்த்தைகள் நிறைவேறும் வரை  இவரின் வாய் கட்டப்படும் என்று சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில் அவர் பேச்சற்ற மனிதராக இருக்கின்றார். 
   கடவுளின் தூதர் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் நிறைவேறிய போது அவர் மீண்டும் பேசத் தொடங்கியவராய்  கடவுளைப் போற்றி புகழ்கின்றார். கடவுளின் வார்த்தைகளின் மீது  நாம் ஆழமான நம்பிக்கை கொண்ட மனிதர்களாக நாளும் வளர வேண்டும் என்பதைத்தான் இந்த இறை வார்த்தை பகுதியில் இருந்து உள்வாங்கிக் கொள்ள நாம் ஒவ்வொருவருமே அழைக்கப்படுகின்றோம். கடவுளின் வார்த்தைகள் ஆற்றல் வாய்ந்தவை என எபிரேயர் புத்தகத்தில் நாம் வாசிக்கின்றோம். இந்த கடவுளின் வார்த்தைகளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாய், இந்த வார்த்தைகளின் வல்லமையை உணர்ந்தவர்களாக, நாளும் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்குவதற்கான ஆற்றலை வேண்டுவோம். இந்தக் கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்குவதன் வாயிலாக நாம் கடவுளுக்கு உகந்த மனிதர்களாக இன்றும் என்றும் பயணிப்பதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

இறையன்பில் மகிழ்வோம். (18-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
      திருவருகைக் காலத்தின் நான்காம் வாரமாகிய இன்று நாம் அன்பு என்ற மெழுகு திரியை ஏற்றி, அன்பை குறித்து சிந்திக்க நாம் அழைக்கப்படுகின்றோம். கடவுள் நம்மை அன்பு செய்தார். அதன் அடிப்படையில் தான் மனிதனாக அவர் இம்மண்ணில் உருவெடுத்தார். இந்த இயேசுவின் பிறப்புச் செய்தி அறிவிக்கப்படுவதைத் தான் நாம் இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். 

       இந்த ஆண்டவர் நம் மீது அன்பு கொண்டவர். எப்போதும் நம்மோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அந்த அடிப்படையில் தான் இந்த இயேசுவின் பிறப்பை ஆவலோடு எதிர்நோக்கி நாமும் நம்மை ஆயத்தமாக்கி கொண்டு இந்த ஆண்டவர் இயேசுவின் பிறப்புக்காக காத்திருக்கிறோம். இந்த இயேசுவை சோதிக்கும் மனநிலையோடு நமது வாழ்வு எப்போதும் இருத்தல் ஆகாது என்பதை தான் இன்றைய முதல் வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது. 

          மனிதர்களை சோதிப்பது போலவே பல நேரங்களில் கடவுளின் அன்பையும் சோதிக்க கூடியவர்களாக  நம்மில் பலரும் இருக்கலாம். ஆனால், நாம் கடவுளை சோதிக்கின்ற நபர்களாக இருக்காமல், நம் மீது கொண்ட அன்பின் அடிப்படையில் நம்மை தேடி வந்து, இந்த மண்ணுலகில் தனது இன்னுயிரை தியாகம் செய்தார் என்பதை உணர்த்த நபர்களாக, அவரது அன்பை உணர்ந்தவர்களாக நாளும், அந்த அன்பினை நாமும் சக மனிதர்களோடு பகிர்ந்து, அன்போடு வாழ இன்றைய நாள் இறை வார்த்தை வழியாக அழைக்கப்படுகின்றோம். அன்பே உருவான இறைவன் அன்போடு வாழ நம்மை தேடி வந்தார். இந்த தேடி வந்த இறைவனை ஏற்றுக் கொள்ள, நம்மை நாமே ஆயத்தமாக்கிக் கொண்டு, அன்போடு அனைவரையும் அணுகுவதற்கான ஆற்றல் வேண்டியவர்களாய், இன்றைய நாளில் இறைவேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணை.(17-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
        இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியலை நாம் வாசிக்கின்றோம். முதல் வாசகத்தில் யாக்கோபு தனது புதல்வர்களை அழைத்து, புதல்வர்களின் எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதன் அடிப்படையில், தன் ஆசிகளை அவர்களுக்கு வழங்குவதாக முதல் வாசகத்தின் வாயிலாக நாம் வாசிக்க கேட்டோம். 

           இந்த வாசகங்கள் அனைத்துமே நாம் நமது முன்னோர்களை நினைவு கூற அழைப்பு விடுக்கின்றன. நாம் இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த இந்த நபரை எத்தனையோ நபர்கள் வழியாக, நாம் நமது முன்னோர் வழியாக இந்த இயேசு கிறிஸ்துவை அறிந்து இந்த இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குவதற்கான முயற்சியில் அனுதினமும் நமது வாழ்வை நாம் அமைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நல்ல நாளிலே நமக்கு இந்த இயேசுவை அறிவித்த நபர்களை எல்லாம் நன்றியோடு நினைவு கூர்ந்து அவர்கள் விட்டுச் சென்ற அந்த ஆசிகளை எல்லாம், நம்மில் நாம் கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கையோடு, நாம் நமது செயல்களின் மூலமாக மற்றவர்களின் எதிர்காலம் சிறந்து விளங்கும் வகையில், நம்மோடு இருப்பவர்களுக்கு இயேசுவை அறிவித்து, நாம் கொண்டிருக்கின்ற ஆசிகளை அவர்களோடு பகிர்ந்து, நாளும் அவர்களது வாழ்வு ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வாக அமைந்திட, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, மற்றவரின் வாழ்வு நெறிப்பட, நமது வாழ்வை அர்ப்பணித்திட இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய், நமது வாழ்வை ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வாக மாற்றிக் கொள்ள, இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. (16-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
        மனித வாழ்வானது ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகருகின்ற ஒரு வாழ்வாக அமைய வேண்டும் என்பதன் அடிப்படையில், மனித வாழ்வு எப்படி இருக்க வேண்டும், எவற்றையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்பதை அன்று இறைவாக்கினர் எசாயா இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துரைத்ததை இன்று நாம் நமக்கு ஏற்ற வகையில், முதல் வாசகமாக அதனை வாசிக்க கேட்கின்றோம். 

                இந்த வாசகத்தின் அடிப்படையில், நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு ஆண்டவருக்கு சான்று பகருகின்ற மனிதர்களாக, நாம் வாழ அழைக்கப்படுகின்றோம். இந்த மண்ணில் வாழ்ந்த போது திருமுழுக்கு யோவான் கடவுளுக்கு சான்று பகருகின்ற மனிதராக தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். 

       முப்பத்து மூன்று ஆண்டுகள் இந்த மண்ணில் பயணம் செய்த இயேசு கிறிஸ்து கூட, கடவுளின் திட்டத்திற்கு சான்று பகரும் வகையில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். 

      இவர்களை எல்லாம் அடிப்படையாகக் கொண்டு நாளும் நம்பிக்கையில் வளரக்கூடிய நீங்களும் நானும், நமது வாழ்வை ஆண்டவருக்கு சான்று பகருகின்ற ஒரு வாழ்வாக அமைத்துக் கொள்ள இன்றைய இறைவார்த்தை வழியாக நாம் அழைக்கப்படுகின்றோம். இந்த இறை வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு நாளும் ஆண்டவருக்கு சான்று பகருகின்றவர்களாக நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் ஆண்டவர் இடத்தில் அருள் வேண்டுவோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

திருமுழுக்கு யோவான் ஆண்டவரின் வழியை ஆயத்தம் செய்யும் தூதர். (15-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
     
         
            இன்றைய இறை வார்த்தைகள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையில் இன்னும் ஆழப்பட்டவும், கடவுள் வகுத்திருக்கின்ற திட்டங்களை உணர்ந்து கொண்டு, அந்த திட்டங்களுக்கு ஏற்ற வகையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, அனுதினமும் ஆண்டவர் இயேசுவின் பாதையில் பயணம் செய்ய, நாம் ஒவ்வொருவருமே அழைக்கப்படுகின்றோம் ஆண்டவரை முழுமையாக நம்புகிற போது பலவிதமான நன்மைகளை நமது வாழ்வில் நாம் பெற்றுக் கொள்வோம் என்பதை இறைவாக்கினர் எசாயா இஸ்ராயேல் மக்களுக்கு முன்னறிவித்ததை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம்.
 இந்த ஆண்டவரால் கூடாத காரியம் எதுவும் இல்லை. இந்த ஆண்டவர் நம்மோடு இருக்கிற போது பலவிதமான நன்மைகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது. 

                 இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட, ஆண்டவர் இயேசு கிறிஸ்து திருமுழுக்கு யோவானின் வாழ்வை சுட்டிக் காண்பித்து,  இந்த யோவானை போல நீதியோடும், நேர்மையோடும், துணிவோடும், ஆண்டவரின் வார்த்தையை அறிக்கையிடுகின்றவர்களாக இருக்க வேண்டும் என்ற வாழ்க்கை பாடத்தைக் கற்று தருகின்றார். பலரும் அதைக் கேட்டு தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, திருமுழுக்கு யோவானிடம் சென்று நல்லதொரு மனமாற்றத்தை அடைந்தவர்களாக, திருமுழுக்கு பெறுகிறார்கள். 
  ஆனால் பலரும் இந்த கடவுளின் திட்டத்தை புறம் தள்ளியவர்களாக, தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்கிறார்கள். 

             இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் ஒப்பிட்டுப் பார்க்க அழைக்கப்படுகின்றோம். நமக்கென கடவுள் வகுத்துள்ள திட்டங்களை எல்லாம் கண்டுணர்ந்து கொண்டு அத்திட்டத்தின் அடிப்படையில் கடவுளை நாடிச் செல்கின்ற மனிதர்களாக நாம் இருக்கின்றோமா அல்லது கடவுளின் வார்த்தைகளை உதாசீனப்படுத்திவிட்டு கேட்டுவிட்டு நகர்ந்து விடக் கூடிய மனிதர்களாக இருக்கிறோமா? கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்த்து, நம்மை நாமே சரி செய்து கொண்டு நாளும் ஆண்டவர் இயேசுவின் பாதையில் பயணிக்க ஆற்றல் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 
    

நீங்கள் கண்டதையும் கேட்டதையும் யோவானிடம் போய் அறிவியுங்கள் (14-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வாழ்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
               இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக ஆண்டவர் ஒருவரே; அவரை நாம் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இறைவாக்கினர் எசாயா வலியுறுத்துவதை நாம் வாசிக்கக் கேட்டோம். நம்பிக்கை இழந்திருந்த மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் அந்த இஸ்ரேல் மக்களுக்கு இறைவாக்கினர் எசாயா, ஆண்டவர் ஒருவரே!  அவரை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ஆழமாக வலியுறுத்துகிறார். 

               இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட , என்னை தயக்கமின்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர் என்று இயேசு குறிப்பிடுகின்றார்.

                 இந்த இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தியவர்களாக நாம் இயேசுவை எந்த அளவிற்கு ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்க்க அழைக்கப்படுகின்றோம். நமக்கு நன்மைகளை செய்தால் மட்டுமே இந்த இறைவனை நாடுவதையும், தீமைகள் துன்பங்கள் வருகின்ற போதும் இந்த இயேசுவை விட்டு புறம் செல்லுகின்ற 
மனிதர்களாக நமது வாழ்வு அமைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள நாம் அழைக்கப்படுகின்றோம்.

     அன்றைய காலகட்டத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தயக்கம் இன்றி ஏற்றுக் கொண்ட காரணத்தினால் தான் இந்த இயேசுவைப் பற்றி அறிக்கையிடுவதால் துன்பம் பரிசாக கிடைக்கும் என்பதை உணர்ந்த நிலையிலும் கூட, இந்த இயேசுவை ஏற்றுக்கொண்டு தாங்கள் ஏற்றுக்கொண்ட இயேசுவை அறிக்கையிட்டு, இவரின் வார்த்தைகளை வாழ்வாக்க முற்பட்டு பலரும் இந்த இயேசுவுக்காக உயிர் தியாகம் செய்தார்கள். இந்த நபர்களை எல்லாம் இந்த புனிதர்களை எல்லாம் நினைவு கூர்ந்து இன்றைய நாளில் இந்த இறைவார்த்தையின் பின்னணியோடு நமது வாழ்வை நாம் ஒப்பிட்டு பார்க்க நாம் அழைக்கப்படுகின்றோம்.  ஆண்டவரை தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளவும், அவர் மீதான நம்பிக்கையில் இன்னும் அதிகமாக ஆழப்படவும்,  ஆற்றல் வேண்டியவர்களாய் இன்றைய நாளில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

யோவான் வந்தார். பாவிகள் அவரை நம்பினார்கள்.(13-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
              இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒரு அழகிய உவமையை சுட்டிக்காட்டுகின்றார்.  தந்தை முதல் மகனை பார்த்து வயலுக்குச் செல் என்கிறார். அவன் நான் செல்ல விரும்பவில்லை என்று சொல்லிவிட்டுச் செல்கிறான். பிறகு தன் மனதை மாற்றிக் கொண்டு, தந்தை சொன்ன இடத்திற்கு செல்லக் கூடியவனாக இருக்கிறான்.  இன்னொரு புறம் இரண்டாவது மகனோ தந்தை வயலுக்கு செல் என்று சொன்னவுடனே, "இதோ செல்கிறேன்" என்று சொன்னவன், செல்லாமல் இருக்கக் கூடியவனாக இருக்கிறான். ஒரு விதத்தில் தந்தையின் மனதை இந்த இரண்டு புதல்வர்களுமே நோகச் செய்து இருக்கிறார்கள். கடவுளுடைய பார்வையில் பல நேரங்களில் அவரின் பிள்ளைகளாகிய நாமும் நமது வாழ்வை இத்தகைய பிள்ளைகளைப் போலவே அமைத்துக் கொண்டு,  கடவுளின் மனம் நோக்கக்கூடிய வகையில் நமது வாழ்வை பல நேரங்களில் அமைத்துக் கொள்வது உண்டு.  நாம் கடவுளின் வார்த்தைக்கு செவிகொடுக்கின்றோம்.செவிகொடுக்கின்ற வார்த்தைக்கு செயல் வடிவம் கொடுக்க தவறியவர்களாகவே பல நேரங்களில் நாம் வாழுகின்றோம்.  ஆனால் நாம் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை வாழுகிற போது, அவரது வார்த்தைகளுக்கு செவிகொடுக்கின்ற போது,  நம்மை குறித்து மகிழக்கூடியவராக கடவுள் இருக்கிறார். அன்றைய யூத சமூகத்தில் சமய குருக்கள் ஒவ்வொருவருமே கடவுளின் வார்த்தைக்கு தாங்கள் கீழ்ப்படிவது போல சொல்லிக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் கீழ்ப்படிய மறுத்தார்கள்.  பாவிகளாக கருதப்பட்ட பலரும் கடவுளின் வார்த்தைக்கு செவி கொடுக்காதவர்கள் என்று சொல்லப்பட்ட நிலையிலும் கூட,  தங்கள் வாழ்வை மாற்றிக் கொண்டு மீண்டும் ஆண்டவரை நோக்கி செல்லக்கூடியவர்களாக இருந்தார்கள்.  ஆண்டவரின் பிறப்புக்கு ஆயத்தமாகக் கூடிய நாமும்   நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்த்து நம்மை நாமே சரி செய்து கொண்டு, ஆண்டவர் காட்டுகின்ற பாதையில் பயணம் செய்ய, அவருக்கு உகந்த வாழ்வை வாழ தவறி இருப்போமாயின் நம்மை நாமே நெறிப்படுத்திக் கொண்டு, மீண்டும் ஆண்டவர் இயேசு காட்டுகின்ற பாதையில் பயணம் செய்ய இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார். 

யோவானின் திருமுழுக்கு எங்கிருந்து வந்தது?(12-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!   இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்! 

இன்றைய இறை வார்த்தைகள் ஆண்டவர் இயேசு செய்கின்ற எல்லா செயல்களும் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்றன என்ற கேள்வியை இயேசுவை நோக்கி எழுப்புகிறார்கள். மறைநூல் அறிஞர்களும், மூப்பர்களும் தலைமை குருக்களும் ஆண்டவருடைய சட்ட திட்டங்களை எல்லாம் எடுத்துரைத்து,  நெறி தவறுகின்ற  மனித வாழ்வை நெறிப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். இப்படி நியமிக்கப்பட்டவர்கள் எல்லாம் இப்பணியை செய்வதற்கு பதிலாக, தாங்கள் விரும்பும் வகையில், தங்களின் ஆதாயத்தை மையப்படுத்தியவர்களாக இறை வார்த்தைகளை விளக்கிக் கூறி, மக்கள் மத்தியில் இருந்து பலவிதமானவற்றை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். இத்தகைய நிலையில் இருந்ததன் காரணமாகத் தான் இயேசு செய்கின்ற பணியைக் குறித்து அவர்கள் எப்போதும் கேள்வி எழுப்பக்  கூடியவர்களாக,  இருந்தார்கள்.  இவர்கள் எழுப்பிய கேள்விக்கு இயேசு நேரடியாக பதில் தரவில்லை. பல நேரங்களில் அவர்களுடைய கேள்விகளை அவர் கண்டும் காணாத நபராக,  தன் செயல்கள் மூலமாக பதில் தரக்கூடியவராக இருந்திருக்கிறார் என்பதை இயேசுவின் வாழ்வில் இருந்து நாம் உணர்ந்து கொள்ள முடியும். இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது  ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என சொல்லித் தந்தவர் அல்ல. மாறாக தான் சொல்லியதை தன் செயல் வடிவத்தில் வெளிக்காட்டியவர் தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.  இந்த இயேசுவை பின்பற்றக்கூடிய நாம் ஒவ்வொருவருமே இந்த இயேசுவின் வருகைக்காக ஆயத்தமாகி கொண்டிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே நமது செயல்களை சீர்தூக்கிப் பார்க்க அழைக்கப்படுகிறோம். கடவுளுக்கு உகந்த செயல்களை நமது செயல்களாக எடுத்துக்கொண்டு நாளும் வளரவும், பலரை ஆன்மீக வழியில் நல்வழிப்படுத்தவும் ஆற்றல் வேண்டியிட இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

வர இருப்பவர் நீர் தாமா? (11-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்! 
         திருவருகைக் காலத்தின் மூன்றாம் வாரமாகிய இன்று மகிழ்ச்சி என்ற மெழுகு திரியை ஏற்றியவர்களாக ஆண்டவரின் பிறப்பு நமக்கு எல்லாம் மகிழ்ச்சியை கொண்டு வருகிறது என்பதை உணர்ந்து கொள்ளவும், அந்த மகிழ்ச்சியைக் கண்டு கொள்ளவும், இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகின்றோம்.  ஆண்டவரின் வருகையை ஆவலோடு பலரும் எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்கள்.  இஸ்ரயேல் மக்கள் அடிமைப்பட்டிருந்த போது கூட, இறைவாக்கினர் எசாயா ஆண்டவர் வருவார் என்ற செய்தியினை அவர்களுக்கு எடுத்துரைக்கிறார்.

          இந்த ஆண்டவர் வருகையின் போது எல்லாம் நிகழும். இதுவரை நடக்காத நிகழ்வுகள் அனைத்தும் நிகழும் என்று கூறக்கூடியவராக, பாலை நிலம் கூட சோலை வனமாக மாறும் என்பதை எடுத்துரைப்பதை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம்.  இந்த இறை வார்த்தைகளின் அடிப்படையில் நாம் இன்றைய நாளில் ஆண்டவரின் வருகைக்காக நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள அழைக்கப்படுகின்றோம்.  திருமுழுக்கு யோவான் வழியாக நல்லதொரு மனமாற்றத்தை பெற்றுக் கொண்டவர்களாக ஆண்டவரின் வருகையை நாம் ஆவலோடு நாடிட அழைக்கப்படுகின்றோம். 

        இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட திருமுழுக்கு யோவானின் சீடர்கள் இவர்தான் மெசியாவா என்ற எண்ணத்தோடு இயேசுவை அணுகிய போது, நீங்கள் கண்டதையும் கேட்டதையும் யோவானிடம் அறிவியுங்கள் என இயேசு சொல்கின்றார். நோயுற்றோர் குணம் பெறுவதும், பார்வையற்றோர் பார்வை பெறுவதும், முடக்குவாதமுற்றோர் எழுந்து நடப்பதும் இவர்கள் பார்த்தார்கள்.  தாங்கள் பார்த்த செய்தியை  யோவானிடம் அறிவித்தார்கள். அன்று இறைவாக்கினர் எசாயா வழியாக முன்னறிவிக்கப்பட்டது, ஆண்டவரின் நாளின் போது, அவரின் வருகையின் போது, பார்வையற்றோர் பார்ப்பர், கேட்கச் செவி இல்லாதோர் கேட்பர் என்று கூறப்பட்ட இறை வார்த்தைகள் அனைத்துமே இயேசுவின் வாழ்வில் நிறைவேறியதை உணர்ந்து கொள்ள இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் ஒவ்வொருவருமே அழைக்கப்படுகின்றோம்.

      ஆண்டவரின் நாள் அண்மையில் இருக்கிறது.  நம்மை தேடி வரவிருக்கின்ற இந்த இயேசுவை நாம் இதயத்திலும் இல்லத்திலும் ஏற்றுக்கொள்ள நம்மை நாமே தகுதியுள்ளவர்களாக மாற்றிக் கொண்டு, ஆண்டவரின் வருகையை அன்போடு எதிர்நோக்கிட, ஆற்றல் வேண்டியவர்களாய் இன்றைய நாளில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

செவ்வாய், 13 டிசம்பர், 2022

இறைவாக்கினரின் குரலுக்கு செவி கொடுப்போம்! (10-12-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
இன்றைய நாள்  இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

      இறைவாக்கினர்கள் நமது வாழ்வை நெறிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பலவற்றை எடுத்துரைத்தார்கள்.  அன்று இறைவாக்கினர்களின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்தவர்கள் தங்கள் வாழ்வை மாற்றிக்கொண்டு கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை வாழ்ந்தார்கள். சீராக்கின் ஞான நூலும்  இத்தகைய ஒரு சிந்தனையை நமக்கு வழங்குகிறது. கடவுளுக்கு உகந்த மனிதர்களாக வாழ்வதற்கான பல வழிகளை இந்த புத்தகமானது எடுத்துரைக்கிறது.  

            இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம், மறைநூல் அறிஞர்கள் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள். அவர்களை பொருத்தவரை மெசியாவின் வருகைக்கு முன்னதாக எலியா இவ்வுலகத்திற்கு வருவார் என நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.  ஆனால் இயேசு கிறிஸ்து எலியா தான் இந்த யோவான் என்பதை எடுத்துரைக்கின்றார்.  யோவான் ஆண்டவருக்கான வழியை ஆயத்தம் செய்து, தவறிய வாழ்வு வாழ்ந்த மனிதர்களை எல்லாம் கடவுளை நோக்கி மனம் திருப்பக் கூடியவராக இருந்தார்.  இந்த யோவான் மீது காழ்ப்புணர்வு கொண்ட அதிகார வர்க்கத்தினர் அவரைக் கொன்றார்கள். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து,  இந்த யோவானை எலியாவோடு ஒப்பிட்டு காண்பித்து,  இயேசுவே மெசியா  என்பதை நேரடியாகவும் மறைமுகமாகவும் சுட்டிக் காட்டக் கூடியவராக இருந்தார்.

       இந்த இயேசுவின் வாழ்வும் இறைவாக்கினர்களின் வாழ்வும் நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம், நமது வாழ்வு கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வா? என்ற கேள்வியை எழுப்பிப் பார்த்து, நம்மை நாமே சரி செய்து கொண்டு ஆண்டவருக்கு உகந்த மனிதர்களாக நாளும் வளர ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம்.   இறைவன் தொடர்ந்து நம்மை
 ஆசிர்வதிப்பார். 

ஆண்டவர் இயேசுவிடம் இருந்து கற்றுக் கொள்வோம்! (09-12-22)

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

      இன்றைய இறை வார்த்தையானது ஆண்டவரிடமிருந்து கற்றுக் கொள்வதற்கான அழைப்பை நமக்குத் தருகிறது இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரேல் மக்கள் அழிவுக்கு காரணம் அவர்கள் ஆண்டவரிடமிருந்து கற்றுக் கொள்ள தவறினார்கள் என்பதாக திருவிவிலியம் சுட்டிக்காட்டுகிறது. எத்தனையோ வழிகளில் அவர்களின் வாழ்வு நெறிப்பட வேண்டும் என்பதற்காக  கடவுள் அவர்களுக்கு பலவற்றை கற்பித்தார்.  பல நேரங்களில் அவர்கள் அதற்கு செவி கொடுக்க தவறியவர்களாக, 
தங்கள் வாழ்வை தங்கள் மனம் போன போக்கில் அமைத்துக் கொண்டார்கள்.  அதன் விளைவாக அழிவை சந்தித்தார்கள். 

              இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்லக்கூடிய, அவர் வாழ்வுக்கு கற்றுத் தரக்கூடிய அந்த கற்பித்தலை புரிந்து கொள்ளாமல், இயேசுவின் மீது குற்றம் சுமத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டுமே அவரோடு இருந்த சிலர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். 

     ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னை சுற்றி இருப்பவர்களின் மனநிலையை அறிந்தவராக தான் செய்ய விரும்பிய நன்மையை செய்யக்கூடியவராக தொடர்ந்து பயணித்தார். அதே சமயம், இந்த இயேசுவிடம் இருந்து சுற்றியுள்ள ஒவ்வொருவருமே வாழ்வுக்கான பாடத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கு தனது வாழ்வு மூலமாக பாடமாக திகழ்ந்தார். இந்த இயேசு கிறிஸ்துவை தான் ஈராயிரம் ஆண்டுகளாக நாமும் பின்பற்றுகிறோம்.  இந்த இயேசு கிறிஸ்துவின் பண்பு நலன்கள் அனைத்துமே நமது வாழ்வை நெறிப்படுத்துவதற்கு நமக்கு அழைப்பு தருகின்றன.  இந்த இயேசு கிறிஸ்துவிடமிருந்து நமது வாழ்வை நெறிப்படுத்தக் கூடிய பண்புகளை கற்றுக்கொண்டு, அதை நமது வாழ்வாக மாற்றிக் கொண்டு பயணிக்க இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை
 ஆசிர்வதிப்பார். 

அன்னை மரியா, அமல உற்பவி! (08-12-22)

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

தாய்த்திரு அவையோடு இணைந்து அன்னை மரியா அமல உற்பவி என்ற பெருவிழாவை கொண்டாட நாம் ஒவ்வொருவரும் இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.  மரியா பிறப்பிலிருந்தே ஜென்ம பாவம் இல்லாமல் பிறந்தார் என்பதை வலியுறுத்தும் வண்ணமாக, திருத்தந்தை ஒன்பதாம் பத்தி நாதர்,  மரியா அமல உற்பவி என அறிவித்தார்.  இவரின் வார்த்தைகளுக்கு வடிவம் தருகின்ற விதத்தில் லூர்து நகரில் அன்னை மரியா பெர்னதத் என்ற சிறுமிக்கு காட்சி கொடுத்து, நாமே அமல உற்பவம் எனக் கூறினார். இதன் அடிப்படையில் இப்பெருவிழாவானது திரு அவையில் மலர்ந்து வேரூன்றத் தொடங்கியது. இந்த திருவிழா நாட்களில் நாம் அன்னை மரியாவை குறித்து சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.   

      ஆண்டவருக்காக அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, ஆண்டவருடைய வார்த்தைக்கு செவி கொடுத்து அவரின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தி சிந்தித்து, அதன் அடிப்படையில் தன் செயல்பாடுகளை அமைத்துக் கொண்ட இந்த அன்னை மரியாவைப் போல நாமும் நமது வாழ்வில் இருக்க அழைக்கப்படுகிறோம்.

     இயேசுவை வயிற்றில் சுமப்பதற்கு திருவுளம் கொண்ட  இந்த மரியாவை இறைவன் பாவ நிலையிலிருந்து காத்தது போல, நம்மையும் பாவத்திற்கு ஏதுவான சூழ்நிலைகளில் இருந்து காக்க வல்லவர் இந்த இறைவன் என்பதை உணர்ந்தவர்களாக, கடவுளுக்கு உகந்த மனிதர்களாக நாம் வாழ அன்னை மரியின் துணையோடு அனுதினமும் பயணிக்க ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 
      


 அவரின் வருகைக்கு நம்மைக ஆயத்தமாக்கிக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை
 ஆசிர்வதிப்பார். 

இயேசு கிறிஸ்துவை நாடிச் செல்வோம்! (07-12-22)

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

          ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

     நம்பிக்கையோடு ஆண்டவரின் வருகைக்காக காத்திருக்கக்கூடிய நாம், உள்ளத்தில் இருக்கின்ற எல்லாவிதமான கவலைகளையும் புறம் தள்ளியவர்களாக, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நாடிச் செல்ல இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். பெரும் சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று கூறக்கூடிய ஆண்டவருடைய வார்த்தைகளை இதயத்தில் இருத்தியவர்களாக, நமது வாழ்வில் இருக்கின்ற எல்லாவிதமான இடர்பாடுகளையும்   புறம் தள்ளியவர்களாக,   கடவுள் மீது கொண்டிருக்கின்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் நிமித்தமாக நாம் நமது வாழ்வில் சந்திக்கின்ற எல்லா இடர்பாடுகளையும் தடைகளையும் தகர்த்தெறிவதற்கான ஆற்றலை இந்த இறைவன் தர வல்லவர் என்பதை உணர்ந்தவர்களாக, இந்த ஆண்டவரை நோக்கி நமது வாழ்வை அமைத்துக் கொள்வோம்.  பிறக்கவிருக்கின்ற இறைவன் நமது உள்ளத்திலும் இல்லத்திலுமாக பிறந்து, நம்முடைய கவலைகளை நீக்கி நமக்கு மகிழ்ச்சியை தருவார் என்ற நம்பிக்கையோடு அவரின் வருகைக்கு நம்மை ஆயத்தமாக்கிக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை
 ஆசிர்வதிப்பார். 

திங்கள், 12 டிசம்பர், 2022

நமது வாழ்வை குறித்து கடவுள் மகிழ்வார்! (06-12-22)

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

          ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

     ஆண்டவரின் வருகைக்காக நம்மை நாமே ஆயத்தப்படுத்திக்கொள்ள அழைப்பு தருகின்ற இந்த திருவருகை காலத்தில், வழி தவறிப் போன ஆட்டை தேடி செல்லுகின்ற உவமை வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து, அவரின் வார்த்தைகளின் படி வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் நெறி பிறழ்ந்து இருக்கக்கூடிய வழி தவறி அலைகின்ற ஒவ்வொருவரையும் தேடிச் செல்லக்கூடியவராக இருக்கிறார் என்ற ஆழமான சிந்தனையினை இன்றைய வார்த்தை வழியாக நமக்கு வழங்குகிறார். இறைவன் நம்மை தேடி வருகின்றார்.

         நமக்காக நம்ம மத்தியில் மனிதனாக பிறக்கவிருக்கின்ற இந்த ஆண்டவரை நாம் நம்மவராக மாற்றிக் கொள்ள, நம்மிடம் இருக்கின்ற தவறிய வாழ்வுகளை எல்லாம்  சரி செய்து கொண்டு, தவறிய பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்றால் அதை சரி செய்து கொண்டு மீண்டும் ஆண்டவருடைய பாதையில் அவருக்கு உகந்த மனிதர்களாக நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகிறார்.

       இறைவனின் அழைப்பிற்கு செவி கொடுத்து நமது வாழ்வை நெறிப்படுத்துகிற போது நமது வாழ்வை குறித்து கடவுள் மகிழக்கூடியவராக இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்தவர்களாக வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு ஆண்டவரின் பாதையில் அனுதினமும் பயணம் செய்ய ஆண்டவரிடத்தில் ஆற்றல்  வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

நம்பிக்கையோடு ஆண்டவரை நாடுவோம்! (05-12-22)

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!  

நம்பிக்கையோடு முடக்குவாதமுற்ற ஒரு மனிதனை நான்கு நபர்கள் இணைந்து சுமந்து கொண்டவர்களாய் இயேசுவின் முன்னிலையில் கொண்டு வர முயலுகிறார்கள்.  கூட்டம் மிகுதியாக இருக்கின்ற காரணத்தினால் கூரையை பிரித்து இயேசுவின் முன்பாக அவரை இறக்குகிறார்கள். இவர்களின் நம்பிக்கையை கண்ட இறைவன் வியந்து போனவராக  அங்கு இருப்பவர்களுடைய மனநிலை பலவேறு பட்டதாக இருந்தாலும், கடவுள் இந்த முடக்குவாதமுற்றவரை சுமந்து கொண்டு வந்தவரின் நம்பிக்கை நிமித்தமாக அந்த முடக்குவாதமுற்றவரைப் பார்த்து, உனது பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று கூறி, அவருக்கு நலம் தருகின்ற நிகழ்வை நற்செய்தி வாசகமாக வாசிக்க கேட்டோம்.

    நம்பிக்கையோடு ஆண்டவரை நாடுகின்ற போது,  பல்வேறு நலன்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதற்கு இந்த வல்ல செயல் ஒரு முன் உதாரணமாக அமைகிறது. நாம் நம்பிக்கையோடு ஆண்டவரை எதிர்கொள்ளவும், அவரது பிறப்புக்காக நம்மை நாமே ஆயத்தமாக்கிக் கொள்ளவும், அழைக்கப்படுகின்ற இந்த காலகட்டத்தில் ஆண்டவர் மீதான நம்பிக்கையில் இன்னும் ஆழப்பட்டவர்களாக நம்பிக்கையோடு அவரை நாடி சென்று பலவிதமான நன்மைகளை அவரிடம் இருந்து பெற்றுக் கொள்ள ஆற்றல் வேண்டி ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

அமைதியில் ஆண்டவரின் வருகைக்கு ஆயத்தம் செய்வோம்! ( 04-12-22)

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!  

திருவருகை காலத்தின் இரண்டாம் வாரமான இந்த ஞாயிற்றுக்கிழமையில் அமைதி என்ற மெழுகு திரியை ஏற்றி நாம் இந்த நாளை துவங்குகின்றோம். ஆண்டவருடைய வருகையை ஆவலோடு எதிர் நோக்கி இருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே இந்த ஆண்டவரின் வருகைக்கு நம்மை நாமே ஆயத்தப்படுத்திக் கொள்ள நாம் நல்லதொரு மனம் மாற்றத்தை பெற வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.  திருமுழுக்கு யோவானின் பிறப்பு ஆண்டவருக்கான வழியை ஆயத்தம் செய்வதற்கு என விவிலியம் சுட்டிக்காட்டுகிறது. 

         இன்று ஆண்டவர் இயேசுவின் பிறப்புக்காக நம்மை நாமே ஆயத்தப்படுத்துகின்ற இந்த நல்ல நாளில் நாம் தவறிய வாழ்வுகளை நினைவு கூர்ந்து மனம் வருந்தி மனம் மாற்றம் பெற்றவர்களாக, அமைதியை இதயத்தில் மலர்வித்தவர்களாக ஆண்டவரின் வருகைக்கு நம்மை நாமே ஆயத்தப்படுத்திக்கொள்ள அழைக்கப்படுகின்றோம். ஆண்டவரின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே அவரின் நாள் வருகிற போது, இந்த அகிலம் எப்படி இருக்கும் என்பதை இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளுகிறோம்.  நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காண்பித்த இந்த இயேசுவை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் நமது செயல்களை சீர்தூக்கிப் பார்த்தவர்களாய், நல்லதொரு மனமாற்றம் அடைந்தவர்களாய், ஆண்டவரின் வருகைக்கும் இயேசுவின் பிறப்புக்கும் நம்மை நாமே தகுதிப்படுத்திக் கொள்ள, இறை வார்த்தையின் வழியாக நாம் அழைக்கப்படுகிறோம்.  இறைவார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் சுய ஆய்வு செய்து பார்த்தவர்களாய், நல்லதொரு மனமாற்றத்தை பெற்றவர்களாக, அமைதியை இந்த சமூகத்தில் மலர்விக்கின்ற இயேசுவின் சீடர்களாக நாம் மாறிட ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

புனித பிரான்சிஸ் சேவியர்! (03-12-22)

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!  

இன்று தாய்த்திரு அவையோடு இணைந்து  நாம் புனித பிரான்சிஸ் சேவியருடைய திருநாளை கொண்டாட அழைக்கப்படுகிறோம். 

      உலகெங்கும் சென்று படைப்பிற்கு எல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள் என்ற ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் சுமந்தவர்களாய், அதற்கு செயல் வடிவம் தருகிறவர்களாக, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை இயேசுவின் சீடர்கள் பல இடங்களுக்குச் சென்று அறிவித்தார்கள்.  இவர்களின் வழியாக இயேசுவை ஆழமாக அறிந்து கொண்ட பலரும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை பல இடங்களுக்கு சென்று அறிவித்தார்கள். அப்படி வந்தவர்களுள் ஒருவர் தான் புனித பிரான்சிஸ் சேவியர் அவர்கள்.

                இன்று அவருடைய நினைவு நாளை கொண்டாடுகின்ற இந்த நன்நேரத்தில் நாம், நாம் அறிந்த இயேசுவை எந்த அளவிற்கு அடுத்தவரிடம் அறிவிக்கின்றோம் என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்த்து அனுதினமும் ஆண்டவரின் வார்த்தைகளை அடுத்தவருக்கு அறிவித்து இயேசுவின் சீடர்களாக சான்று பகருகின்ற மனிதர்களாக, நாம் வாழ்வதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறை வேண்டலில் ஈடுபடுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

நம்பிக்கையில் மலர்ந்திடுவோம்! (02-12-22)

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!  

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம்பிக்கையோடு பார்வையற்ற இருவர், ஆண்டவரே! தாவீதின் மகனே! எங்களுக்கு இறங்கும் என கத்திக்கொண்டே இயேசுவைப்பின் தொடர்ந்தார்கள் என வாசிக்கின்றோம். பார்வையற்ற அந்த நபர்களிடமிருந்த ஆழமான நம்பிக்கை அவர்களை இயேசுவைப் பின் தொடர வைத்தது. அதே நம்பிக்கையோடு இன்று நாம் இருக்கிறோமா என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்த்து, ஆண்டவரின் வருகைக்காகவும் இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்காகவும் நம்மை தயாரித்துக் கொண்டிருக்கின்ற இந்த நாட்களில், பார்வையற்ற நபர்களிடம் காணப்பட்ட நம்பிக்கை நம்மிலும் மலர வேண்டும்.  நாமும் நம்பிக்கையோடு இயேசுவை பின் செல்ல வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம்.  நம்பிக்கையோடு ஆண்டவரை பின் தொடர்ந்து அவரிடமிருந்து பல நலன்களை பெற்றுக் கொள்ள ஆற்றல் வேண்டி இறைவனிடத்தில் 

இன்றைய நாளில்  இறை வேண்டல் செய்வோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

இறைத் திருவுளத்தை அறிந்து நிறைவேற்றுவோம்! (01-12 -22)

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!  

இன்றைய இறைவார்த்தையானது கடவுளின்   திருவுளத்தை அறிந்து அதனை நிறைவேற்றுகின்ற மனிதர்களாக நாம் இருப்பதற்கான அழைப்பை தருகிறது. கடவுளின் வார்த்தைகளை நம் வாழ்வாக நாம் மாற்றுகின்ற போது, அவரின் திருவுளத்தை நிறைவேற்றுகின்ற மனிதர்களாக  இம்மண்ணில் நாம் வலம் வர முடியும். அத்தகைய ஒரு வாழ்வு நம் வாழ்வாக அமைகிற போது, பாறையின் மீது அடித்தளம் இடப்பட்ட வாழ்வாக நமது வாழ்வு மாறும்.

   எத்தனையோ இடர்பாடுகளும் இன்னல்களும் எதிர்பாராத நேரங்களில் நம்மை நோக்கினாலும், நாம் ஆண்டவர் மீது அடித்தளம் இடப்பட்டிருப்பதால் அசைவுறாது நிலைத்து நிற்க முடியும் என்பதை இன்றைய இறைவார்த்தை வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். 

        இந்த இறைவனின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்று அதற்கு செயல் வடிவம் தருவதன் வழியாக கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றும் ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறை வேண்டலில் ஈடுபடுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

புனித அந்திரேயா! (30-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

      இன்று நாம் தாய்த்திரு அவையோடு இணைந்து புனித அந்திரேயாவை நினைவு கூருகின்றோம். அன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களை, என் பின்னே வாருங்கள்! நான் உங்களை மனிதர்களை பிடிப்பவர் ஆக்குவேன் என்று சொன்னார். 
      இயேசுவின் இந்த வார்த்தைகளைக் கேட்டு தங்களிடம் இருந்த அனைத்தையும் விட்டு விட்டு இந்த இயேசுவை பின்பற்றுகின்ற மனிதராக இந்த அந்திரேயா தனது வாழ்வை அமைத்துக் கொண்டார். இவரை நினைவு கூருகின்ற இந்த நல்ல நாளில், நாம் நமது வாழ்வை இந்த அந்திரேயாவின் வாழ்வு போல அமைத்துக் கொள்ள அழைக்கப்படுகின்றோம். ஆண்டவரோடு கொண்டுள்ள அன்பு உறவில் நிலைத்திருப்பவர்களாக, அவரின் திருவுளத்தை அறிந்து, அதனை நிறைவேற்றுகின்ற மனிதர்களாக, நாம் இந்த ஆண்டவர் இயேசுவை நாடிச் செல்ல அவரது அன்புப் பணியை அகிலத்தில் நாம் செய்து, இறைவனுக்கு உகந்த மனிதர்களாக வாழ ஆற்றல் வேண்டி, இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். 
            இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.  

சனி, 10 டிசம்பர், 2022

இறை உறவில் நெருங்கி வளர்வோம்! (29-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

      இன்றைய இறை வார்த்தைகள் அனைத்துமே தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள உறவை குறித்து நாம் சிந்திக்க அழைப்பு தருகிறது. எப்படி இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது கடவுளின் திருவுளத்தை உணர்ந்து வைத்திருந்தாரோ அந்த கடவுளோடு நெருங்கிய உறவு கொண்டிருந்தாரோ, அதுபோல நீங்களும் நானும் இறைவனோடு இணைந்து இருக்க வேண்டும் என்பதைத்தான் இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு வலியுறுத்துகின்றன. இந்த இறை வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் கடவுளோடு அமர்ந்தவர்களாக ஒப்பிட்டுப் பார்ப்போம். 

              நமது செயல்கள், சொல் அனைத்துமே கடவுளோடு உள்ள உறவில் இன்னும் நாம் ஆழப்பட்ட உதவி செய்கின்றனவா? அல்லது நாம் கடவுளோடு உள்ள உறவிலிருந்து அந்நியப்பட்டவர்களாக நாம் நிற்கின்றோமா? நமக்குள் கேள்வியை எழுப்பி பார்த்து நம்மை நாமே சரி செய்து கொண்டவர்களாக தந்தைக்கு மகனுக்கும் இடையே இருந்த அந்த அன்புறவை நாமும் வளர்த்துக் கொள்ள ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். 
            இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.  

ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளின் மீது ஆழமான நம்பிக்கை கொள்வோம்! ( 28-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

         இன்றைய இறை வார்த்தையானது நூற்றுவர் தலைவன் கொண்டிருந்த நம்பிக்கையை நாம் உணர்ந்து கொள்ள அழைப்பு விடுக்கிறது. வெறுமனே நூற்றுவர் தலைவன் கொண்டிருந்த நம்பிக்கையை நாமும்  கொண்டிருக்க வேண்டும் என்ற மனநிலையோடு மட்டும் கடந்து விடாமல் நூற்றுவர் தலைவன் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளின் மீது எந்த அளவிற்கு ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை சிந்திக்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம். 

      நான் உன் வீட்டிற்கு வந்து உன் பையனுக்கு நலன் தருகிறேன் என்று இயேசு சொன்னபோது கூட, நீர் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் என் மகன் பிழைத்துக் கொள்வான் என்று சொல்லுகிற அளவிற்கு ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட ஒரு மனிதனாக நூற்றுவர் தலைவன் இருந்தார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். 

       இத்தகைய ஒரு சிந்தனையோடு நாம் ஆண்டவரின் வார்த்தைகளின் மீது இது எந்த அளவிற்கு நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றோம் என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்த்து, ஆண்டவரின் வார்த்தைகள்
 ஆற்றல் வாய்ந்தவை; இரு பக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானவை. இந்த வார்த்தைகளின் வல்லமையை உணர்ந்து கொண்ட மனிதர்களாக இந்த இறைவனின் வார்த்தையை வாழ்வாக்க அருள் வேண்டி தொடர்ந்து இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.  

ஆண்டவரின் நாளை எதிர் கொள்ள தயாராவோம்! (27-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

இன்று தாய்த்திரு அவையோடு இணைந்து நாம் திருவருகை காலத்தினை துவங்குகிறோம். நம்பிக்கை என்ற ஒளியை ஏற்றி பிறக்கவிருக்கும் பாலன் இயேசுவுக்காக நம்மை நாமே சரி செய்து கொண்டு, ஆயத்தத்தோடு எப்போதும் விழிப்பாய் இருப்பதற்கான அழைப்பை இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு தருகின்றன. ஆண்டவர் இயேசுவை இல்லங்களில் பிறக்கச் செய்கின்ற மனிதர்களாக மட்டும் நாம் இருந்து விடாமல், நமது இதயத்தில் பிறக்கச் செய்வதற்கான வழிகளை கண்டுணர்ந்து கொண்டு, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு நாம் வாழ்வதற்கான அழைப்பினை இன்றைய இறைவார்த்தை வழியாக இறைவன் நமக்கு தருகின்றார்.  எப்போது வருவார் என தெரியாத வண்ணம் திடீரென ஒரு கள்வனைப் போல ஆண்டவரின் நாள் வரும். அந்த நாளுக்கு ஏற்ற வகையில் ஆண்டவரை எதிர்கொள்ள நீங்களும் நானும் தயார் நிலையில் நிலையில் எப்போதும் இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தைகள் வழியாக இறைவன் எடுத்துரைக்கின்றார். 

       நோவாவின் காலத்தில் மக்கள் பாவங்கள் பல செய்து கொண்டிருந்த போது அழிவு நேரப் போகிறது என்பதை எடுத்துரைத்த போது கூட, தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள தவறிப் போனவர்களாக இருந்தார்கள். கடவுளின் வார்த்தையை கேட்டு தனக்கென ஒரு பேழையை வடிவமைத்த நோவாவை கூட அவர்கள் பல நேரங்களில் கேலி செய்கின்ற மனிதர்களாகத் தான் இருந்து சென்றார்கள். ஆனால் ஆண்டவர் சொன்னது நிறைவேறிய நாளின் போது மற்றவர்கள் அழிவுற்றபோது நோவாவும் அவரது குடும்பமும் காத்துக் கொள்ளப்பட்டது. நாம் நமது வாழ்வை நெறிப்படுத்தி க் கொண்டு இயேசு கிறிஸ்து நமது இதயத்தில் பிறப்பதற்கு நம்மை நாம் தகுதி உள்ளவர்களாக மாற்றிக்கொண்டு ஆண்டவரின் நாளுக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள இன்றைய இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு வாழ ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.  

ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது! (26-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 

இன்றைய இறை வார்த்தையானது ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது. அந்த ஆண்டவரின் நாளில் அவரை எதிர்கொண்டு செல்ல நாம் எப்போதும் விழிப்பாய் இருந்து மன்றாட வேண்டும் என்பதை இறைவன் இன்று வலியுறுத்துவதை இன்றைய இறை வார்த்தையின் வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். 

    ஆண்டவரின் நாள் இந்த மண்ணில் வாழுகின்ற ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டிய ஒரு நாளாக அமைகிறது. இந்த ஆண்டவரின் நாளை எதிர் கொள்ளை நம்மிடையே இருக்கக்கூடிய பலவிதமான தீய எண்ணங்களை நாம் தகர்த்தெறிய வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு வலியுறுத்துகிறார். 

     இறைவன் வலியுறுத்துகின்ற இந்த வாழ்வுக்கான பாடங்களை இதயத்தில் ஏற்றவர்களாய் நம்மை நாமே சரி செய்து கொண்டு ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வை நமது வாழ்வாக அமைத்துக் கொண்டு எப்போதும் விழிப்பாய் இருந்து ஆண்டவரின் நாளில் அவரை எதிர்கொள்ள நம்மை நாமே ஆயத்தமாக்கிக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

ஆண்டவரின் வார்த்தைகள் ஒருநாளும் அழிவுறாது! (25-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்! 

       ஆண்டவரின் வார்த்தைகள் ஒரு நாளும் அழிவுறாது. இந்த வார்த்தைகளை நமது வாழ்வாக மாற்றிக்கொண்டு ஒவ்வொரு நாளும் நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை, இறைவன் இன்று நமக்கு வலியுறுத்துவதை நாம் நற்செய்தி வாசகத்தின் வாயிலாக வாசிக்க கேட்கின்றோம். ஆண்டவரின் வருகையை குறித்து ஆவலோடு எதிர்நோக்கி இருக்க கூடிய நாம் ஒவ்வொருவருமே இந்த மண்ணில் வாழுகிற போது கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை நமது வாழ்வாக அமைத்துக் கொள்ள அழைப்பு தரப்படுகிறது. 

      பொதுவாகவே திருவருகை காலத்திற்கு முன்பாக பொதுக்காலத்தில் ஆண்டவரின் வருகையை குறித்து ஆழமாக சிந்திக்கின்றோம். ஆண்டவர் வருகையின் போது இது நாள் வரை தவறிழைத்தவர்களுக்கு எல்லாம் தண்டனைகள் வழங்கப்படும்.   இது நாள் வரை நீதியின் பொருட்டு துன்புறுத்தப் படுவோருக்கெல்லாம் மீட்பு வழங்கப்படும் என்ற செய்தியினை, திருவெளிப்பாட்டு நூலில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வை நாம் வாழுகிற போது, ஆண்டவரின் நாள் வருகிற போது, அவரை எதிர்கொண்டு செல்லுகிற போது, நாம் அவருக்கு உகந்த ஒரு மனிதர்களாக அவரது திருமுன்னிலையில் நின்று அவரை புகழக் கூடிய மனிதர்களாக, நாமும் இருக்க முடியும் என்பதை இன்றைய முதல் வாசகம் வாயிலாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். நமது வாழ்வை ஆண்டவரின் வார்த்தைகளின் மீது நம்பிக்கைக்குரிய ஒரு வாழ்வாக அமைத்துக் கொண்டு நாளும் கடவுள் விரும்புகின்ற  மனிதர்களாக நாம் வாழ இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

ஆண்டவரின் வார்த்தைகளை இதயத்தில் இருத்துவோம்! ( 24-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்! 

       ஆண்டவரின் நாளை குறித்து ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கக்கூடிய நாம் ஒவ்வொருவருமே இந்த மண்ணில் வாழுகிற ஒவ்வொரு நாளும்  ஆண்டவரின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தியவர்களாய் ஆண்டவரின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாக நாளும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அழைப்பை இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு தருகின்றார்.

          திடீரென குழப்பங்களும் போர் முழக்கங்களும் இயற்கை சீற்றங்களும் எழுகின்ற போது, அஞ்சி, நடுங்கி, கலக்கமுறுவதற்கு பதிலாக, கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை இது நாள் வரை அமைத்துக் கொண்டிருக்கிறோம். எனவே துணிவோடு ஆண்டவரை எதிர்கொள்ள ஆயத்தமான நபர்களாக விழிப்போடு இருப்பதற்கான அழைப்பு இன்றைய இறைவார்த்தை வழியாக நமக்கு தரப்படுகிறது.  

    இன்னல்களும் இக்கட்டுகளும் துன்பங்களும் சூழ்கின்ற போது, தலை நிமிர்ந்து நிற்பதற்காக இறைவன் இன்றைய இறைவார்த்தை வழியாக, நம்பிக்கை ஊட்டுவதை நாம் நற்செய்தி வாசகத்தில் வாசிக்கக் கேட்கிறோம். 

       இந்த வாசகங்களின் அடிப்படையில் நாம் நமது வாழ்வை சீர்தூக்கி பார்க்கின்ற போது, கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை நாம் வாழ்ந்து இருக்கிறோம் என்றால், நாம் தொடர்ந்து அவ்வாழ்வை நம் வாழ்வாக மாற்றிக் கொள்வோம். ஒருவேளை கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்க தவறி இருக்கிறோம் என்றால், நம்மை நாமே சரி செய்து கொண்டு, ஆண்டவரின் வருகைக்கு ஆயத்தமாவதற்கான ஒரு அழைப்பினை இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு தருகிறார். இந்த இறைவனின் அழைப்பிற்கு செவி கொடுத்தவர்களாய், நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வை எப்போதும் வாழ்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில், இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

புதன், 23 நவம்பர், 2022

துன்பங்களுக்கு மத்தியிலும் ஆண்டவருக்குச் சான்று பகர்வோம்! (23-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
ஆண்டவர் இயேசுவின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கக் கூடிய நாம், துன்பங்களுக்கு மத்தியிலும் கடவுளுக்கு சான்று பகரக் கூடிய மனிதர்களாக இருப்பதற்கான ஒரு அழைப்பு இன்றைய இறை வார்த்தை வழியாக நமக்கு தரப்பட்டிருக்கிறது.

        ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக எந்த விதமான துன்பங்களையும் தாங்கிக் கொள்ளுகின்ற மனம் படைத்த மனிதர்களாக நீங்களும் நானும் நாளும் வளர வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. பல நேரங்களில் எதிர்பாராத துன்பங்களை சந்திக்கின்ற போது, மனம் உடைந்து போகக்கூடிய நமக்கு ஆறுதல் தருகின்ற விதத்தில் இன்றைய நாள் இறை வார்த்தை அமைந்திருக்கிறது. நாம் ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வை வாழுகிற போது, நம்மை பாதுகாப்பவராகவும்,  பராமரிப்பவராகவும், உடனிருந்து தேற்றுபவராகவும்,  கடவுள் இருக்கிறார் என்ற ஆழமான புரிதலை இன்றைய இறை வார்த்தை நமக்கு தருகிறது‌ துன்பங்களுக்கு மத்தியிலும்  கடவுளுக்கு உகந்த மனிதர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொண்டு, ஆண்டவரின் நாளில் அவரை எதிர்கொண்டு செல்ல, நம்மை நாமே தகுதிப்படுத்திக் கொள்ளக் கூடியவராக, ஆண்டவருக்குச் சான்ற  பகருகின்ற மனிதர்களாக நாளும் வளர்வதற்கான ஆற்றலை இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

செவ்வாய், 22 நவம்பர், 2022

புனித செசிலியாவின் இறை புகழ்ச்சி! (22-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
             ஆலயங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது திரு இசை. திருவழிபாட்டை சிறப்போடு நடத்துவதற்கு இசை என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இசையின் வழியாக ஆண்டவரின் இறை வார்த்தையை அகிலத்தில் உள்ளவர்களுக்கு அறிவிக்கக் கூடியவர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான ஒரு அழைப்பு இன்றைய நாளில் நமக்குத் தரப்படுகிறது. 

       பாடகர் குழுவின் பாதுகாவலியான செசிலியம்மாவின் திருவிழாவினை கொண்டாடக் கூடிய நாம் ஒவ்வொருவருமே, பாடல்கள் வழியாக கடவுளை போற்றிப் புகழ அழைக்கப்படுகிறோம். ஒருமுறை பாடுவது இருமுறை செபிப்பதற்கு சமம் என புனித அகுஸ்தினார் குறிப்பிடுவார். நாம் பாடல் வழியாக நமது உள்ளத்து உணர்வுகளையும், ஏக்கங்களையும், ஆண்டவரிடத்தில் எடுத்துரைக்கிறோம். 
        இத்தகைய பணியில் நாம் ஈடுபடுவதற்கு உதவியாக இருக்கக்கூடிய பாடகர் குழு நண்பர்களை நன்றியோடு நினைவு கூரவும், அவர்களுக்காக செபிக்கவும் இந்த நாளில் நாம் அழைக்கப்படுகின்றோம். செசிலியம்மாவின் திருவிழாவினை கொண்டாடுகின்ற இந்த நல்ல நாளிலே நாம் திருவழிபாட்டில் ஆர்வத்தோடு பங்கெடுக்க உதவி புரிகின்ற ஒவ்வொரு பாடகர் குழு உறுப்பினர்களுக்காகவும் கடவுளிடத்தில் மன்றாடுவோம்.

        இசையால் இன்னும் ஆர்வத்தோடு இறைவனை தேடவும், இறைவனை கண்டு கொள்ளவும் ஆற்றல் வேண்டியவர்களாய் இன்றைய நாளில் இறைவனிடத்தில் தொடர்ந்து இறை வேண்டலில் ஈடுபடுவோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...