வெள்ளி, 5 ஜூலை, 2019

கடவுள் நம்மோடு இருக்கிறார்

கடவுள் நம்மோடு இருக்கிறார்
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக!
அன்புக்குரிய இறைமக்களே இன்று நாம் நம்மோடு இருக்கும் இயேசுவைப் பற்றி சிந்திக்க அழைக்கப்படுகிறோம். ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் அதிபராக இருந்தபோது அவருடைய நண்பர் அவரிடம் நாளுக்கு நாள் உங்களது புகழானது மேலோங்கிக் கொண்டே செல்கிறது. கண்டிப்பாக ஆண்டவர் இயேசு உங்களோடு இருக்கிறார் அதன் விளைவே நாளுக்கு நாள் நீங்கள் புகழ்பெற்று கொண்டிருக்கிறீர்கள் என்று கூறினாராம். அதற்கு ஆபிரகாம் லிங்கன் ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்னோடு இருக்கிறார் என்பதில் எனக்கு எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால், நான் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு இருக்கின்றேனா? என்ற கேள்விதான் என்னை அனுதினமும் சிந்திக்கத் தூண்டி கொண்டே இருக்கிறது என்று கூறினாராம். கடவுள் நம்மோடு உள்ளார். ஆனால் அதை நாம் உணர்ந்ததுண்டா? கடவுள் எப்படி மனிதனைப் படைத்தார் என்பது பற்றி தொடக்கநூல்; 2:7; இவ்வாறாக கூறுகிறது “ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்.” என்று விவிலியத்தில் நாம் வாசிக்கலாம். மண்ணில் இருந்து வந்த உடல் மண்ணுக்கு செல்கிறது. கடவுளிடமிருந்து வந்த உயிர் மூச்சு மீண்டும் கடவுளிடமே செல்கிறது. இதன் பெயரே இறப்பு என்றும் சிலரால் விண்ணக பிறப்பு என்றும் கூறப்படுகிறது. இந்த உலகில் மிகவும் பழமையான ஒரு நிகழ்வு உண்டு என்றால் அது என்ன என ஆராயும் போது பிறப்பும் இறப்பும் என்பதுதான் சரியான பதிலாக அமைகிறது. உயிர் உலகில் உண்டான நாள் துவங்கி பிறப்பும், இறப்பும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இனியும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கப் போகிறது. மண்ணில் பிறந்தவர்கள் மறைந்து (இறந்து) போவார்கள் என்பது நிச்சயம். ஆனால் வாழும் நாட்களில் நாம் நம்மிடம் உள்ள இறைவனை கண்டு கொண்டோமா? என்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகம் வழியாக நாம் சிந்திக்கவிருக்கிறோம். கடவுள் இவ்வுலகில் மனிதனை படைத்தார் காரணம் ஒருவர் மற்றவரை அன்பு செய்து, ஒருவர் மற்றவருக்காக வாழவேண்டும் என்பதற்காகவே. ஆனால், இன்று மனிதன் உலகில் உள்ள பல மாய கவர்ச்சிகளுக்குள் தன்னை இணைத்துக் கொண்டு தன்னிடம் கடவுள் இருப்பது போல மற்றவரிடமும் இருக்கிறார் என்பதை மறந்து மனிதனை மனிதன் அடிமைப்படுத்தியும், துன்புருத்தியும் வாழ்கிறான். இது இன்று அல்ல அன்றும் நடந்தது. அன்று இயேசு இம்மண்ணில் மனிதனாக வலம் வந்த காலத்தில் மனிதன் மனிதனை அடிமைபடுத்தியும், சட்டத்தால் துன்புறுத்தியும், வந்தான். சுமூகத்தில் ஒரு மனிதன்  நோய்வாய்ப்பட்டால் அது அவன் செய்த பாவத்தின் விளைவு என்று கூறி அவனை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து வாழ்ந்து வந்தான். இத்தகைய சூழல்களுக்கு மத்தியில் தான் இயேசு 72 பேரை தேர்ந்தெடுத்து அவர்களை நற்செய்தி பறைசாற்ற அனுப்புகிறார். சமூகத்தில் இழைக்கப்படும் அநீதிகளையும், நோய்களை குணமாக்க அவர்களுக்கு அதிகாரம் தருகிறார். பாதிக்கப்பட்டு ஓரம்கட்டப்பட்ட மக்களுக்கு புதிய வாழ்வை வழங்க இயேசு அவர்களை மக்களிடம் அனுப்புகிறார். இதனை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசித்தோம். அன்று இயேசு தம் சீடர்கள் வழியாக செய்த அதே பணியை நாமும் செய்ய கடமைப்பட்டுள்ளோம். நாம் வாழும் உலகில் தேவையில் உழல்வோருக்கும், துயரப்படுவோருக்கும் உறுதுணையாக இருக்க வேண்டியது நமது கடமை. நம்மால் பிறரின் நோய்களை நீக்க இயலாவிட்டாலும் நோயுற்றவரை கவனிக்க இயலும். நாம் யாரையும் அடிமைப்படுத்தி சுரண்டி வாழாவிட்டாலும் நம்மால் அனைவரையும் அன்புசெய்து ஏற்றுக்கொண்டு வாழ முடியும். ஏனெனில் நாம் அனைவரும் கடவுளின் சாயல். இன்றைய முதல் வாசகம் வழியாக “தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுப் போல நான் உங்களை தேற்றுவேன்” என்ற கடவுளின் வார்த்தைகளுக்கு ஏற்ப அவர் நம்மை தேற்றுவார் அதுப்போலவே நாம் ஒருவர் மற்றவரை தேற்றவும், நம்மோடு உள்ள இறைவன் அடுத்தவருடனும் உள்ளார் என்பதை உணர்ந்தவர்களாய் கண்ணுக்கு தெரியும் மனிதனை கடவுளின் சாயல் என்பதை உணர்ந்து, ஒருவர் மற்றவர் மீது அன்பு செய்து இயேசுவின் அருளில் நிலைத்திருப்பவர்கள் வாழவும், அதற்கேற்றதுப் போல நமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளவும் அருள் வேண்டி தொடர்ந்து இணைவோம்...

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...