புதன், 31 மார்ச், 2021

புனித வாரத்திற்கான தலைப்புகள் ...

புனித வாரத்திற்கான தலைப்புகள் ...
1.இயேசுவின் பாதையில் பயணமாக ....
2. தலைவனின் பாதையில் ...
3.உறவும் உணவும்...
4.கல்வாரி நோக்கி ...
5.கல்வாரி பாடம் கற்க புறப்படுவோம்...
6. உடைந்து உருகொடுக்க...
7. உறவை வளர்க்கும் நற்கருணை ...
8. உடைபட்டது உறவாகிடவே...
9. உறவாகிட உணவானவர்...
10.உறவை வளர்க்கும் விருந்து ...
11.நற்கருணையில் மலரும் வாழ்வு...
12. உறவில் மலரும் உன்னதம்...
13. எனக்காக என்னோடு இருப்பவரே...
14.எல்லாரும் வாழ....      
     தியாகம் செய்....
      நீடூழி  வாழ்வாய்... 

15. அறிய.....  
     அனுபவிக்க.... 
      அறிவிக்க....

இயேசுவை வெளிக்காட்ட... (1.4.2021)

தலைவர்களே....! வணக்கம்.

இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஏன் தலைவர்களே என்று உங்களை அழைக்கிறேன் என எண்ணுகிறீர்களா? 

மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தலைமைத்துவப் பண்பினை கொண்ட தலைவர்கள் தான். 
பலர் தாங்கள் ஒரு தலைவர் என்பதை கண்டு பிடித்துக் கொள்கிறார்கள். 
பலர் தாங்கள் தலைவர்களா? என தங்கள் மேலேயே ஐயம் கொள்கிறார்கள். 
பலருக்கு சிலர் நீங்கள் தான் தலைவர் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள். 
இன்று நிலவும் சூழலில் கூட பலரும் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்காக நான் உங்களுக்காக இரத்தம் சிந்துகிறேன்.... நான் உங்களுக்காக என்னிடம் இருப்பதை எல்லாம் இழந்துவிடுவேன் என கூறக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் இன்று நாம் தலைவர்களுக்கெல்லாம் தலைவரான ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திரு பாடுகளை நினைவு கூருகின்றோம்.

தலைவனுக்கு இருக்க வேண்டிய பண்புகள் என்ன? என்று இன்று உள்ள சூழலில் வலைதளத்தில் தட்டினால் பல தலைமைத்துவ பண்புகளை நாம் காணலாம். தலைமைத்துவ பண்புகள் பல இருந்தாலும் தலைமைத்துவத்திற்கு அடிப்படையானது... தலைமைத்துவ பண்புகளோடு வாழ்ந்து காட்டும் செயல் மட்டுமே.... இதன்படி வாழ்ந்தவரைத் தான் இன்று உலகம் நினைவுகூறுகின்றது.

இயேசு ஒரு நல்ல தலைவரா? என்ற கேள்வியை நம்மில் பலர் எழுப்பலாம். நல்ல தலைவனாக இருந்திருந்தால் ஏன் பலரால் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும்... ஒரு நல்ல தலைவன் அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடியவனாக தானே இருக்க முடியும்? அப்படி அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடிய தலைமைத்துவ பண்பை கொண்டிருந்தால் இவர் ஏன்  பலருக்கு எதிரியாக இருக்கக் கூடிய சூழல் உருவானது? என்ற கேள்விக் கணைகள் நம் உள்ளத்தில் ஆயிரம் முறை எழுந்து கொண்டே இருந்தாலும் அதற்கு விடையைத் தேட வேண்டிய நேரம் தான் இன்றைய நாள்... 

இயேசு மண்ணில் வாழ்ந்த போது சட்டத்தால் ஒருவரை அடிமை படுத்துவது தவறு என்றார்.எனவே சட்டத்தை பிடித்துக்கொண்டிருந்த பரிசேயர்களுக்கு அவர் எதிர்ப்பாளராக மாறினார்.
 
ஆண்டவரின் ஆலயம் அனைவருக்கும் பொதுவானது என்பதை மறுத்து, அங்கு உயர்வு, தாழ்வு பின்பற்றுவதை சாடினார். எனவே சதுசேயர்களுக்கு எதிர்ப்பாளராக மாறினார்.

மக்களிடம் அதிக வரி வசூலிப்பது ஆட்சியாளருக்கு உகந்த செயல் அல்ல என்பதைச் சுட்டிக் காண்பித்தார் ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்பாளராக மாறினார்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். நம்மிடையே யூதர்... கிரேக்கர்... சமாரியர்... என்ற பாகுபாடு கூடாது என்று கூறியதன் விளைவு தன் இன மக்களுக்கு எதிர்ப்பாளராக மாறினார்.

சமாரியர்கள் என்றால் தீண்டத்தகாதவர்கள்...அவர்களைத் தொடக்கூடாது, அவர்களோடு உரையாட கூடாது, அவர்கள் இருக்கும் பகுதிக்குக் கூட நாம் செல்லக்கூடாது. எனவே வாருங்கள் நாம் பல மைல் தூரம் கடந்து எருசலேம் தேவாலயத்தை சென்றடைவோம் என்ற நோக்கத்தோடு செயல்பட்டவர்களுக்கு மத்தியில் சமாரியர்களை சந்தித்து அவர்களோடு உண்டு, அவர்களோடு உரையாடியதன் விளைவு... சமூகப் போராளி என சமூகத்தின் எதிர்ப்பாளராக மாறினார்.

இப்படி பலருக்கு எதிர்ப்பாளராக மாறியதன் விளைவு தான் இன்று தலை சிறந்த தலைவனாக நீனைக்கப்படுகிறார். எப்படியும் வாழலாம் என்பவர்களுக்கு மத்தியில் இப்படித்தான் வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டியவர் இந்த இயேசு ...

தலைமைத்துவ பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக... நான் தலைவனாக ஆட்சியில் அமர்ந்தால்
நான் அனைத்தையும் மாற்றி விடுவேன்...  என வெறும் வெற்று வார்த்தைகளால் பலரின் உள்ளங்களை கவருபவர்களுக்கு மத்தியில்  தன்னுடைய வாழ்வால் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தவர் தான் இந்த இயேசு.

தலைவன் என்பவன் முதன்மையான இடத்தையும் ஆட்சியையும் அதிகாரத்தையும் தேடுபவன் அல்ல மாறாக தன் செயலில் மனித சமூகத்திற்கு வாழ்க்கை பாடத்தை கற்பிப்பவனாக இருக்க வேண்டும்.
இதோ இன்றைய நாளில் நாம் வாசித்த வாசகங்கள் அனைத்தும் நமக்கு இயேசுவின் வாழ்விலிருந்து வாழ்க்கை பாடத்தை கற்பிக்கிறது.
உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர்... அனைவருக்கும் பணியாளனாகட்டும் என்ற ஆண்டவரின் வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல அது செயல்வடிவம் பெற்றது இன்று இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவிய போது....
சென்ற இடமெல்லாம் நன்மை செய்துகொண்டே சென்றார் இயேசுகிறிஸ்து என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப இன்று தலைவர்களுள் பெரும்பாலும் பலர் தன்னுடன் இருப்பவர்கள் எல்லாம்  தன்னைப் போலத்தான் இருக்க வேண்டும் என எண்ணி வாழ்கிறார்கள்.ஆனால்  இவர்களுக்கு  மத்தியில் இயேசு தன்னைக் காட்டிக் கொடுப்பவன்,  மறுதலிப்பவன், தன்னை விட்டுவிட்டு ஓடுபவன்  என அனைவரையும் தன் நண்பர்கள் என எண்ணியவராய்... அவர்களை பற்றி முழுதாக அறிந்திருந்தும் அவர்களோடு அமர்ந்து உணவருந்துகிறார்,தன்னிடம் இருப்பதை அவர்களோடு பகிர்ந்து கொள்கிறார்... ஏன் தன்னையே பகிர்ந்தார் என்பதுதான் முற்றிலும் உண்மை...இதனை இயேசுவின் இறுதி இராவுணவில் உணரலாம்.

தம்மிடம்  இருப்பதில் பகிரும் பகிர்வாளர்களுக்கு மத்தியில் இருப்பதையே பகிர்ந்த இயேசுவின் செயல்பாட்டை கல்வாரி சிலுவையில் இருந்து உணரலாம் ....
சொல்லிவிட்டு செய்ய மறந்த தலைவர்களுக்கு மத்தியில் சொல்லுவதை எல்லாம் தன் செயலில் வெளிக்காட்டிய தலைவன் தான் இன்று நாம் நினைவுகூறும் இந்த இயேசு கிறிஸ்து... இவரைப் பின்பற்றி இவரைப் போல வாழ வேண்டும் என எண்ணம் கொண்டவர்களாகிய நாம் அனைவரும் எண்ணங்களால் வாழ்வதல்ல வாழ்க்கை. நமது வாழ்வால் இயேசுவை வெளிக்காட்ட வேண்டிய கடமை கொண்டவர்களாக இருக்கிறோம்.

அறிந்தோ அறியாமலோ பிறப்பின் மூலமாக கிறிஸ்தவ மதத்தை தழுவிய நாம் அனைவரும் நாங்கள் அனைவரும் கிறிஸ்துவின் சாட்சிகள் எங்கள் தலைவனை போல் வேறு தலைவன் இல்லை என மார்தட்டிக் கொண்டு இருப்பதற்காக அல்ல இவ்வாழ்வு ...முன்மாதிரியான, எடுத்துக்காட்டாக இயேசுவின் வாழ்வை போன்ற ஒரு சாட்சிய வாழ்வாக நமது வாழ்வு இருக்க வேண்டும்.

போலியான தலைவர்களின் வெற்று வார்த்தைகளை நம்பி பயணிப்பதை நிறுத்திவிட்டு உண்மையான தலைவனின் அடிச்சுவட்டில் அனுதினமும் அடி எடுத்து வைக்கக்கூடிய சாட்சிய வாழ்வு வாழ இயேசுவின் பாடுகள் வழி வாழ்க்கைப் பாடம் கற்றிட முயல்வோம்....  

செவ்வாய், 30 மார்ச், 2021

வாழ்வின் நோக்கம் அறிவோம்? (31.03.2021)

வாழ்வின் நோக்கம் அறிவோம்?

இறைவனால் அனுப்பப்பட்டு இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களே! வணக்கம்.

இன்றைய நாள் இறைவார்த்தைகளின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 
இன்றைய நாள் வாசகங்கள் இறைவன் நமக்குக் கொடுத்துள்ள கொடைகளை பற்றியும் அவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றியும் சிந்திக்க நமக்கு அழைப்பு தருகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் கற்றோரின் நாவையும், அறிவைப் பெறுவதற்கான ஆர்வத்தையும், அந்த அறிவினை உள்வாங்கிக் கொள்ள தேவையான செவியையும், இவற்றோடு கூட இன்னும் பல கொடைகளையும் இறைவன் நமக்கு தந்துள்ளார் என்பதை எடுத்துரைக்கிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் யூதாசு ஆண்டவர் இயேசுவை காட்டிக் கொடுப்பதற்காக 30 வெள்ளிக் காசுகளை பெற்றுக் கொண்டதையும் ஆண்டவர் இயேசுவை காட்டிக் கொடுக்க அவன் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்ததையும் எடுத்துரைக்கிறது.

இந்த உலகில் நம்மை பிறக்கச் செய்த இறைவன், நமது பிறப்பின் நோக்கத்தோடே, அதனை நாம் நிறைவேற்றும் பொருட்டே இவ்வுலகிற்கு அனுப்பி இருக்கின்றார்.

இறைவன் நமது வாழ்வில் நமக்கு வழங்கியுள்ள நற்கொடைகள் எவை? என்பதை இன்று சிந்திப்போம்.


நமது பிறப்பின் நோக்கத்தை நமது வாழ்வின் இலட்சியத்தை நாம் ஒவ்வொரு நாளும் நாம் நிறைவேற்றும் விதமாக இறைவன் நமக்கு கொடுத்து இருக்கின்ற நமது உடலுக்காக, உடல் உறுப்புகளுக்காக, சிந்திப்பதற்கு இறைவன் கொடுத்த அறிவிற்காக, இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். இவற்றின் மூலமாக நாம் பெற்றுக்கொண்ட நல்ல நண்பர்களையும் உறவுகளையும் இன்னும் நம் வாழ்வில் பெற்று கொண்ட அனைத்திற்காகவும் இறைவனுக்கு நன்றி கூறுவோம். 

இத்தகைய இறைவனின் கொடைகளைக் கொண்டு நமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய, வளர்ச்சி தரக் கூடிய காரியங்களை செய்திட வேண்டும் என்று இன்றைய முதல் வாசகத்தின் வழியாக இறைவன் நமக்கு அழைப்பு தருகின்றார்.

இறைவன் நமக்கு வழங்கியுள்ள கொடைகளை நாம் எதற்காக பயன்படுத்துகிறோம்? என்பதை இன்று சிந்திப்போம்.
இன்று நாம் வாழும் உலகில் பொதுவாக மனிதனின் கைகளில் ஏதேனும் பணமோ அல்லது மதிப்பு மிகுந்த பொருட்களோ கிடைக்கும் பொழுது அதனை நாம் வெறுமனே விட்டு வைத்து விடுவதில்லை. அதனைக் கொண்டு மேலும் பலவற்றை சம்பாதித்துக் கொள்ள விரும்புகிறோம். இன்று பணத்தையும் பொருட்களையும் மேலாக மதிக்கின்ற நாம் இறைவன் நமக்கு வழங்கியுள்ள கொடைகளை உணர்ந்து இருக்கின்றோமா? என்று சிந்திப்போம். 
இன்று ஒரு படம் வரையவோ, பாடல் பாடவோ, ஒரு கருத்தைச் சொல்லவோ அல்லது வேறு ஏதேனும் சிறப்பான செயல்களைச் செய்யவோ அழைக்கப்படும் பொழுது அதனை என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு முன் வருகின்றோமா? அல்லது அடுத்தவர் காரியத்தை சிறப்பாக செய்வார் என்று கூறி ஒதுங்கி விடுகின்றோமா? 
எனக்கு அத்தகைய திறமைகள் ஒன்றும் கிடையாது. என்னால் முடியாது. மற்றவரே என்னை விட சிறந்தவர் என்று நம்மை குறைவாக மதிப்பிடுகிறோமா?
என்பதை இறை  ஒளியில் சிந்திப்போம்.

ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்; நீரே என் மாட்சி; என்னைத் தலைநிமிரச் செய்பவரும் நீரே.

திருப்பாடல்கள் 3:3

என்ற திருப்பாடல் வரிகளுக்கு ஏற்ப இறைவன் நமக்கு வழங்கியுள்ள கொடைகளுக்கு இன்றைய நாளில் நாம் நன்றி கூறுவோம்!

நமது நற்சிந்தனைகளால், நற்செயல்களால், கனிவான நல் வார்த்தைகளால், இறைவனுக்கு கொடையாக நம்மை அர்ப்பணிப்போம்!

திங்கள், 29 மார்ச், 2021

வார்த்தை அல்ல வாழ்வே சொல்ல வேண்டும்.... (30.3.2021)

வார்த்தை அல்ல வாழ்வே சொல்ல வேண்டும்.... 

இயேசுவின் பணியை செய்ய விரும்பும் அன்பர்களே...! வணக்கம்.

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய வாசகங்கள் அனைத்தும் நாம் இயேசுவின் சீடர்களாக வாழ்வதற்கு அழைப்பு தருகின்றது. இயேசுவின் சீடராவது மிகவும் எளிதான காரியம்தான், அவருடைய கருத்துக்களின் படி, அவருடைய போதனைகளின் படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளும்போது நாம் இயேசுவின் சீடர்களாக இருக்க முடியும். ஆனால் இயேசுவின் சீடராக வாழ முடியுமா? என்பதுதான் இன்று நம்முன் இருக்கக்கூடிய கேள்வியாக உள்ளது.

இயேசுவோடு இருந்த சீடர்கள் எல்லாம் இயேசுவைப் போல வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருந்தார்கள் ஆனால் வாழவில்லை என்பதனை இன்றைய வாசகங்கள் நமக்கு வெளிப்படுத்திக் காட்டுகின்றன. 
இயேசுவினுடைய இறப்புக்கு முன்பாக இயேசுவோடு பயணித்த ஒவ்வொருவருமே தங்களுடைய விருப்பங்களை மனதில் சுமந்து கொண்டு  செயல்பட்டார்கள்.  ஒருவர் பணத்தின் மீது ஆசை கொண்டவராய் பயணிக்கின்றார். சிலர் பதவியின் மீது ஆசை கொண்டவர்களாக பயணிக்கிறார்கள். சிலர் நான் உன்னை எப்போதுமே மறுதலிக்க மாட்டேன்.... எப்போதும் நீ எனக்கு முதன்மை... எனக் கூறியவர்கள் கூட  சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மாறும்  போது ஒவ்வொருவரும் மாறி போனார்கள். இதைத்தான் இன்றைய வாசகங்கள்  மிகவும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
இன்றைய முதல் வாசகம் கூட ஆண்டவரின் ஊழியராக இருக்க நம்மை அழைக்கின்றது. அவரின் சீடராக இருப்பது எளிதான காரியம் ஆனால் ஆண்டவர் இயேசுவின் சீடராக வாழ்வதுதான் என்று இன்று நம் முன் இருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலாக உள்ளது. இயேசுவோடு இருந்தவரை வெறும் வார்த்தைகளால் அவரின் சீடர்கள் நாங்கள் எனக் கூறிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம்.... இயேசுவின் உயிர்ப்பு பிறகு புத்துயிர் பெற்றவர்களாக..., புத்துணர்வு கொண்டவர்களாக.... உண்மையை எடுத்துரைக்க கூடிய, நீதியின் பங்காளிகளாக மாறி இயேசுவின் பணியை முன்னெடுத்துச் சென்று இயேசுவின் சீடர்கள் நாங்கள் என்பதை தங்கள் வார்த்தைகளால் அல்ல தங்களின் வாழ்வால் வெளி காட்டினார்கள்....

இன்றைய நாளில் நாமும் வெறும் வார்த்தைகளால் அல்ல நமது வாழ்வு வழியாக நாம் ஆண்டவர் இயேசுவின் சீடர்கள் என்பதை வெளிகாட்டிட அழைக்கப்படுகிறோம். எனவே இன்று நாம் வாழக்கூடிய இந்த பரபரப்பான உலகத்தில் அனுதினமும் அழிந்து கொண்டிருக்கக்கூடிய மனிதநேயத்தை மனதில் கொண்டு, மனிதநேய செயல்களை முன்னெடுப்பதன் மூலம் நீதிக்காகவும்.... உண்மைக்காகவும்.... தேவையில் இருப்போரின் தேவையை நிவர்த்தி செய்யக்கூடிய.... நல்ல ஒரு மனிதநேயம் கொண்ட மனிதர்களாக இம்மண்ணில் வாழ்ந்து,  நமது வாழ்வு வழியாக நாம் ஆண்டவர் இயேசுவின் உண்மை சீடர்கள் என்பதை வெளிகாட்டிட இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாக.... இறையருளை வேண்டி தொடர்ந்து பயணிப்போம்...

வார்த்தைகளால் நாம் இயேசுவின் சீடர்கள் என்பதை விட வாழ்வால் வெளிக்காட்டுவோம்.

ஞாயிறு, 28 மார்ச், 2021

வாருங்கள் செயல்படுவோம் ....(29.3.2021)

வாருங்கள் செயல்படுவோம் ....


நலமான பணிகளை முன்னெடுக்கும் நல்லவர்களே...! வணக்கம்.

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் .

இயேசு எருசலேம் சென்று இறப்பதற்கு முன்பாக பெத்தானியா என்ற ஊருக்கு வருகிறார். இவ்வூர் இயேசுவுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஊர். ஏனெனில் இங்குதான் இலாசரை உயிர்பெறச் செய்தார். 


ஓராயிரம் வெற்றுப் பேச்சுகளை விட ஒரு செயல் மேலானது என்பதற்கு ஏற்ப இன்றைய நற்செய்தி வாசகத்தில்  மரியா என்ற பெண்மணி இயேசுவிற்கு நறுமணத் தைலத்தை கொண்டு வந்து இயேசுவின் மீது ஊற்றி அவருக்கு பணிவிடை செய்கிறார். ஆனால் யூதாஸ் இந்தத் தைலத்தை வீணாக்குவது ஏன்? இதனை விற்று ஏழைகளுக்குக் கொடுக்கலாம் என்கின்றார்.

சொல்லப்பட்ட கருத்து நல்லதாக இருப்பினும், அது வெளிப்படையான வெற்று பேச்சாக இருக்கிறது. அவரது உள்ளமோ பணத்தின் மீது நாட்டம் கொண்டிருந்ததை இன்றைய வாசகங்கள் எடுத்துரைக்கின்றன.
நமது வாழ்வில் பெரும்பாலான நேரங்களில் நாமும் பெற்று பேச்சுகளை அதிகம் பேசுகின்றோம். ஆனால் நமது செயல்களும் நமது பேச்சுகளுளும் முற்றிலும் எதிராக இருக்கின்றன.

நமது சொல்லும் செயலும் இணைந்து செல்ல வேண்டும் என்ற பாடத்தை தான் இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகிறார். இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் துன்புறும் இஸ்ரயேல் மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் துன்புறும் ஊழியர் பற்றி எடுத்துரைக்கின்றார். அவரது வார்த்தைகள் வெறும் வெற்று வார்த்தைகள் அல்ல அவை செயல் வடிவம் பெற்றன.

நாம் வாழும் இவ்வுலகில் நமது வார்த்தைகள் செயலாக்கப்பட செயல்கள் மூலம் நமது வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க  இன்றைய நாளில் இறையருளை தொடர்ந்து வேண்டுவோம். 
 

சனி, 27 மார்ச், 2021

பக்கபலமாவோம்.... (28.3.2021)

பக்கபலமாவோம்....

சமூகத்தில் இணைந்து வாழும் இனியவர்களே...! வணக்கம்.

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கின்றேன்.

எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் ....திரும்பும் திசை எங்கும் இதோ உங்கள் வெற்றி வேட்பாளர் வந்து கொண்டிருக்கிறார் என்ற குரலோசை ....யார் வந்தாலும் ஆரத்தி எடுக்க வேண்டும் அப்போதுதான் 200 ரூபாய் கிடைக்கும் என்ற நோக்கத்தோடு சாலையில் ஆரத்தி தட்டுகளோடு மகளிர்.... கூட்டத்திற்கு சென்றால் குடிக்க மது கிடைக்கும் என்ற நோக்கத்தோடு பல ஆண்கள் .....இவைகளுக்கு மத்தியில் இயேசு பாடுகளை எதிர்கொள்ளப் போகிறார் என்பதை வலியுறுத்தும் வகையில் மக்கள் கூட்டம் கையில் குரு தோலைகளுடன் ஒருபுறம் பவனி செல்கின்றனர் ஆலயம் நோக்கி....தேர்தல் வந்தால் வாக்குறுதிகளை அள்ளி தெளிப்பது போல ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக இந்த ஆரவார பவனியில் பலர் தாவீதின் மகனுக்கு ஓசான்னா என்று குரல் எழுப்பியவர்களாய் ஆண்டவர் வெற்றிபெற போகின்றார் அவர் வாழ்க வாழ்க என கத்திக் கொண்டு சென்ற ஒரு கூட்டம் ...ஆனால் வெகு விரைவிலேயே அந்தக் கூட்டத்தினர் இணைந்து இவன் ஒழிக ஒழிக சிலுவையில் இவனை அறையும் என கத்தினார்கள். இதையே இன்றைய வாசகத்தில் நாம்  வாசிக்க கேட்கின்றோம். 
எனது கல்லூரி ஆசிரியர்  திரு. செல்வராஜ் ஐயா அவர்கள்  என்னிடம் கூறுவார் அடிக்கடி ஒருவரை கைதட்டி உயர்த்துவதும் நீங்கள்தான் ஒருவரை கைதட்டி தாழ்த்துவதும் நீங்கள்தான் என்று அவர் கூறிய வார்த்தைகளுக்கு அன்று பெரியதாக அர்த்தம் புரியவில்லை. ஆனால் இன்று இந்த பவனி வழியாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த நிகழ்வை சித்தரிக்கும் போது தான் புரிகிறது இவ்வார்த்தைகளின் அர்த்தம் என்னவென்று...

ஒருவிதத்தில் இதனை அறியாமையின் குரல் என எண்ணலாம் ...ஆனால் விழிப்போடு இருக்க இன்றைய நாள் வாசகங்கள் அழைப்புக் தருகின்றன ... நல்லதைச் சொன்னதற்காக இயேசு  குற்றவாளியாக சித்தரிக்கப்படுகிறார் பலரின் சூழ்ச்சியால் ... ஆனால் இன்று  பவனி வந்தது போல் நாம் பவனி வந்தது போல அன்று இயேசுவோடு  பவனி வந்த மக்கள் கூட்டம் ஏராளம்... இவர்கள் எல்லாம் எங்கே சென்றார்கள்? இயேசுவை குற்றவாளியாகக் ஏற்படும்போது என சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்.

நம்மோடு இருப்பவர்கள் எல்லாம் எப்போதும் நம்மோடு இருப்பார்கள் என்பது அல்ல. நேரத்திற்கும் சூழலுக்கும் ஏற்றவாறு நம்மை விட்டு விலகிச் செல்லக் கூடியவர்கள் தான் மனிதர்கள். இதனை இயேசுவும் நன்கு அறிந்திருந்தார்.    எனவேதான் இயேசு தான் சென்ற இடமெல்லாம் நல்லது செய்வது  இறைவன் தனக்குத் தந்த பணி என எண்ணி அதனை தொடர்ந்து செய்தார்.அவரிடம் இருந்து நன்மைகளை பெற்றவர்கள் கூட அவரை விட்டுவிட்டு ஓடுவார்கள் என்பதை நன்கு அறிந்து செயல்பட்டால் இன்று நாம் வாழும் இவ்வுலகத்திலும் நாம் நல்லது செய்யும் பொழுது அடுத்தவர் நம்மோடு இருப்பார்கள் நம்மை புரிந்து கொள்வார்கள் என்ற எண்ணங்களின் அடிப்படையில் எதையும் முன் எடுக்காமல் இறைவனை மையமாகக்கொண்டு கிடைக்கக்கூடிய அனைத்து செயல்களிலும் மனிதநேயத்தை மனதில்  முன் நிறுத்தி  தொடர்ந்து மக்களுக்கு பணி செய்யக்கூடிய மகத்துவமான மனிதர்களாக நாம் உருவாக அழைக்கப்படுகிறோம். வெறுமனே தேர்தல் நேரங்களில் வாக்குறுதிகளை மட்டும் கொடுக்கும் மனிதர்களாக அல்லாமல் சொல்லானது செயலாக்க கூடியவகையில் சொல்வதை  செய்யக்கூடியவர்களாகவும், நலமான பணிகளை முன்னெடுக்கும் நல்லவர்களுக்கு  எப்போதும் அவர்களை கைவிட்டு விடாது பக்கபலமாக இருக்க கூடியவர்களாகவும் உருவாகிட இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம். 

வெள்ளி, 26 மார்ச், 2021

சூழ்ச்சிகளுக்கு மத்தியில் சாட்சிகளாவோம்... (27.3.2021)

சூழ்ச்சிகளுக்கு மத்தியில் சாட்சிகளாவோம்...

அறம் செய்ய விரும்பும் அன்பர்களே வணக்கம் 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சூழ்ச்சிகள் நிறைந்த இவ்வுலகத்தில் நாம் ஒவ்வொருவருமே நமக்கான பாதையில் பயணம் செய்ய அழைக்கப்படுகின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவை கொள்வதற்காக வழி தேடிக் கொண்டிருந்த பரிசேயர் சதுசேயர் குறித்து நாம் வாசிக்கின்றோம் ஏன் இவர்கள் இயேசுவை சதி செய்து கொலை செய்ய வேண்டும் என எண்ணுகிறார்கள் என சிந்திக்கும் பொழுது அவர்களின் சூழ்ச்சிகளுக்கு காரணமாய் இருப்பது இயேசு தன் பாணியில் தனது பணியை செய்து கொண்டிருப்பதுதான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது அவர் போதித்த போதனைகளுக்கு ஏற்றவகையில் சென்ற இடமெல்லாம் நல்லதை செய்து கொண்டு இறைவனது திட்டம் எது என்பதை அறிவித்தவர் ஆய் இறையாட்சிக்கு வடிவம் கொடுத்தவர் தனது வாழ்வை அமைத்துக் கொண்டு சென்றார் இதனை ஏற்றுக்கொள்ள இயலாத அப்போது மக்களை அடிமைப்படுத்தி கசக்கிக் கொண்டிருந்த பல அதிகார வர்க்கத்தினருக்கு இயேசுவின் செயல் பேரிடியாக இருந்தது எனவே தான் பலரும் சூழ்ச்சி செய்து இயேசுவை குற்றவாளியாக சித்தரித்து அவருக்கு மரண தண்டனை விதிப்பதற்கு இன்று வழி தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நற்செய்தியில் வாசிக்கின்றோம்.

நமது வாழ்விலும் பல நேரங்களில் நாம் நலமான நல்ல பணிகளை முன்னெடுத்துச் செல்லும் பொழுது பலரின் நகைப்புக்கு பலரின் பகைக்கும் காரணமாக மாறலாம். ஆனால் நாம் செய்கின்ற பணி நலமான பணி அது அடுத்தவருக்கு நலன் தருகின்ற பணி என்றால் அதனை இயேசுவைப் போல தொடர்ந்து முன்னெடுத்து சோதனைகளை எதிர்கொண்டு சூழ்ச்சிகளுக்கு மத்தியில் சாதனை புரியக்கூடிய சாட்சிகளாக இயேசுவின் சாட்சிகளாக மாறிட நாம் அனைவரும்  வாசகங்கள் வழியாகஅழைக்கப்படுகிறோம் .

சூழ்ச்சிகள் பல செய்து நம்மை வீழ்த்த எண்ணி நாளும் நாம் சாட்சிகளாய் வாழ இறையருளை வேண்டி இன்றைய நாளில் தொடர்ந்து பயணிப்போம். 

வியாழன், 25 மார்ச், 2021

செயலே சிறந்தது... (26.3.2021)

செயலே சிறந்தது...

செயல்பட துணிவு கொண்ட அன்பு நண்பர்களே...! வணக்கம். 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கின்றேன்.
எதையாவது செய்ய வேண்டும் என விரும்பினால் அதனை பற்றி பேசுவதைவிட முதலில் செயலில் இறங்குபவன் நான் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப நாம் அனைவரும் செயல்பட இன்றைய வாசகங்கள் அழைப்பு தருகின்றன.

நமது செயல்களுக்கு ஏற்ற வகையில் தான் நமது நண்பர்களும் உறவுகளும் நம்மைச் சூழ்ந்து இருப்பார்கள் என்பதனை இன்றைய வாசகங்கள் வழியாக நாம் அறியலாம் இயேசுவின் செயல்கள் அனைவருக்கும் நலம் தரக்கூடிய வகையில் அமைந்திருந்தது. ஆனால் இயேசுவின் செயல்களில் குற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்தோடு அவரை ஏற்றுக்கொள்ள தயங்கும் சிலர் அவரோடு உரையாடுகிறார்கள். அவர்களுக்கு இயேசு தான் தந்தையிடம் இருந்து வந்தவர் தந்தையின் பணியை செய்பவர் என்பதை எடுத்துரைக்கிறார். ஏற்க மனமில்லாத அவர்களிடத்தில் என் வார்த்தைகளின் பொருட்டு என்னை நம்பவில்லை என்றாலும் என் செயல்களின் பொருட்டு என்னை நம்புங்கள் என்கிறார். பல நேரங்களில் மனிதர்கள் நம் பேச்சை விட நமது செயல்பாட்டை கொண்டு தான் நம் மீதான நம்பகத்தன்மையை உருவாக்கிக் கொள்கிறார்கள்.  

இன்று நாம் வாழும் இந்த உலகத்தில் நமது செயல்கள் அடுத்தவருக்கு  நம்பிக்கையை தருகிறதா? என்பதை சிந்திப்போம். நமது செயல்களால் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.

புதன், 24 மார்ச், 2021

இறை விருப்பத்தை அறிந்து செயலாற்றிட ... (25.3.2021)

இறை விருப்பத்தை அறிந்து செயலாற்றிட ..

ஆண்டவரை காண ஆவலோடு கண்விழிக்கும் அன்பு உள்ளங்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தைகளின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் அருளும் அடையாளமாக குழந்தை ஒன்று பிறக்கும். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடப் என்று இறைவாக்கினர் எசாயா கூறுகின்றார்.


இன்றைய  இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசகத்திலும் மீண்டும் மீண்டும் கூறப்பட கூடிய ஒரு வாக்கியம் "இதோ வருகின்றேன்" என்பதாகும்.

இன்றைய வாசகங்கள்  நம் தாய் அன்னை மரியாவின் அர்ப்பணத்தைப்  பற்றியும்  சேய் இயேசுவின் பிறப்பு அறிவிக்கப்பட்டதைப் பற்றியும் நமக்கு விளக்குகின்றன.
ஒரு ஏழை தாயானவள் இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள். வசதிகள் ஏதும் இல்லாத நிலையில் ஒரு ஓலைக் குடிசையில் அவர்கள் வாழ்ந்து வந்தனர். மின்சாரம் இல்லாததால் எண்ணெய் விளக்கு ஏற்றி அதன் ஒளியில் தங்கள் வாழ்வைக் கழித்தனர். ஒருநாள் இரவு எண்ணெய் விளக்கின் ஒளியில் அமர்ந்து தாயானவள் உணவுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். இரு குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென எதிர்பாராத விதமாக குழந்தைகளின் கை விளக்கை தட்டி விட்டதால் கீழே அமர்ந்திருந்த தாயின் துணையில் தீப்பற்றிக் கொண்டது. குழந்தைகள் இருவரும், அம்மா! அம்மா! என்று அலறித் துடித்தனர். தீயின் வேகம் அதிகமானதால் யாராலும் உதவி செய்ய இயலாத சூழல். ஒரு கணம் யோசித்த தாய், தன் இரு குழந்தைகளையும் தூக்கி குடிசைக்கு வெளியில் எறிந்து விட்டு கதவை அடைத்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக வீசிய பெரும் காற்று அங்கு மழையைக் கொண்டு வந்தது. தீயின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு பெரும் உடல் வேதனைகளுக்கு மத்தியிலும் அன்று அத்தாய் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு பின்பாக மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்.

இந்த ஏழைத் தாயைப் போன்று,  தான் துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்தாலும் பரவாயில்லை, தன்னுடைய மக்களாகிய இந்த மனுக்குலம் முழுவதும் மீட்கப்பட வேண்டும் என்று தன்னையே கையளித்தவர் தான் நம் அன்னை மரியாள். கிறிஸ்து பிறப்பின் மூலம் இவ்வுலகு மீட்கப்பட, ஆகட்டும்! என்ற மேன்மையான சொல்லால் தன்னையே கருவியாக அர்ப்பணித்தவர் நம் அன்னை மரியாள்.தனது விருப்பம் தனது நலனை கருதாமல் இவ்வுலகு வாழ தன்னையே தியாகம் செய்தவள். சவால்களும் பிரச்சினைகளும் நிறைந்த யூத சமுதாயத்தில் இறைத்திட்டத்திற்கு தன்னை கையளித்த வீரமங்கை நம் அன்னை மரியாள். அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்! என்ற வானதூதரின் வாழ்த்துரையை கேட்டு உள்ளத்தில் சற்று கலங்கினாலும், முழு மனதுடன் தன்னை கையளித்தார். வரலாறு என்பது வெறும் வெற்றிகளை கொண்டு மட்டும் உருவானது அல்ல. மாறாக, பலரின் தியாக உள்ளம், தன்னல மறுப்பு, கீழ்ப்படிதல், தாழ்ச்சி போன்ற புண்ணிய செயல்களால் அழகுபடுத்தப்பட்டது. அன்னை மரியாவும் தன் தாழ்ச்சியினால், கீழ்ப்படிதலால், வரலாற்றில் உன்னத தாயாக உயர்ந்து நிற்கிறார். உலக மக்களின் தாயாக, திருஅவையின் தாயாக, இன்றும் விளங்குகிறார். இத்தகைய சிறப்புமிக்க அன்னையை நினைத்து மகிழ்வோம். நம்மையும் இறைவனின் திட்டத்திற்கு முழுமையாக அர்ப்பணிக்க இவ்வேளையில் இறையருளை வேண்டுவோம். அன்னையைப் போல இறைவிருப்பத்தை அறிந்துகொள்ளக் கூடிய தூய மனதையும் அதை மகிழ்வோடும் ஏற்று செயல்படும் வரத்தையும்  இறைவனிடம் சிறப்பாக கேட்டு இன்றைய நாளில் ஜெபிப்போம்.

செவ்வாய், 23 மார்ச், 2021

வெற்றி பெற பிறந்தோம் நாம்...(24.3.2021)

வெற்றி பெற பிறந்தோம் நாம்...


இறைவார்த்தையின் அடிப்படையில் வாழும் அன்பு உறவுகளே... வணக்கம்.

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்.(யோவான் 8:31) என்ற இறை வார்த்தைக்கு ஏற்ப வாழ நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.


பழைய ஏற்பாட்டின் அடிப்படையில் பார்க்கும்பொழுது தொடக்க காலத்தில் இஸ்ரயேல் மக்கள்  தாங்கள் வழிபடும் யாவே இறைவனை புறந்தள்ளி பிற கடவுளை வணங்குவதை இறைவன் ஏற்காதவராக இருந்தார் என்பதை விவிலியத்திலிருந்து அறியலாம். 
இன்றைய முதல் வாசகத்தில் தானியேல் இறைவாக்கினர் யாவே இறைவனை  மறுதலிக்க வேண்டும் இல்லையேல் நெருப்பில் தள்ளப்பட்டு துன்புறுத்த படுவார்கள் என்ற இக்கட்டான சூழ்நிலையிலும் தான் விரும்பி ஏற்ற யாவே இறைவனைஇறுதிவரை இறுகப் பிடித்துக் கொண்டு அவரை மறைக்காமல் அவரோடு இணைந்து இருந்ததையும் அதன் விளைவாக இறைவன் அவர்களை எரியும் நெருப்பில் இருந்ததையும் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்க கேட்கிறோம்.


கடந்த சில தினங்களாக யோவான் நற்செய்தியில் இருந்து நாம் வாசிக்கக் கேட்ட வாசகங்களின் அடிப்படையில் ஒன்று புலப்படுகிறது.

இயேசு தன்னை தந்தையிடம் இருந்து வந்தவர் என்பதையும், தன் பணி தந்தையால் கொடுக்கப்பட்ட பணி என்பதையும் அச்சமூக மக்களுக்கு எடுத்துரைக்கிறார். ஆனால் அதை ஏற்க மறுத்து, அவரை புறந்தள்ள கூடியவர்களாக தான் அங்கிருந்த பரிசேயர்களும், சதுசேயர்களும், உரோமை  ஆட்சியாளர்களும், இதர சில குடிமக்களும் இருந்தார்கள் என்பதை நாம் உணர முடிகிறது.  இத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் கூட இறைவன் தன் பணி இறைவனது பணி என்பதை எடுத்துரைத்த வண்ணம் தான் செய்யக்கூடிய நற்செயல்களை தொடர்ந்து செய்துகொண்டே சென்றார் என்பதை நாம் அறியலாம்.

இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கக் கேட்ட தானியேல் இறைவாக்கினரை போலவும்,  நற்செய்தியில் வாசிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவை போலவும்  நாம், செய்யக்கூடிய பணிகளில் தொடர்ந்து இறுதிவரை நிலையான உறுதியோடு  செய்து வெற்றியை அடைந்திட, இலக்கை அடைந்திட நாம் அனைவரும் இன்றைய வாசகங்கள் வழியாக அழைக்கப்படுகிறோம்.

விடாமுயற்சி என்பது ஒரு செயலை முடிந்தவரை செய்வது அல்ல மாறாக அந்த செயலை முடிக்கும் வரை முயல்வதாகும்.

நாமும் அனுதினமும் இறைவார்த்தைகள் வழியாக பலவற்றை உள்வாங்கிக் கொண்டு அவ்வார்த்தைகளின் படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறோம்.
என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்.(யோவான் 8:31) 
என்ற இறை வார்த்தைக்கு ஏற்ப இறைவனது வார்த்தைகளை தொடர்ந்து கடைபிடித்து அவரது சீடர்களாக நாம் அழைக்கப்படுகிறோம். இறைவனது வார்த்தையைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் பொழுது பலவிதமான இன்னல்களை நாம் சந்திக்க நேரலாம். எப்படி தானியல் இறைவாக்கினரும், இயேசுவும் தன் பணியை செய்த போது பலவிதமான தடங்கல்களை சந்தித்தார்களோ, அதுபோல நாமும் பல விதமான சவால்களை  சந்திக்க நேரலாம். அந்நேரங்களில் எல்லாம் நமது முயற்சியை கைவிடாது இருக்க இன்று அழைக்கப்படுகிறோம். 
இவ்வுலகில் நாம் அனைவரும் வெற்றி பெற பிறந்தோம் ...
நமது பிறப்பைப் பற்றிக் கூறும் பொழுது அறிவியல் ரீதியாக பல ஆயிரக்கணக்கான விந்தணுக்களில் முதன்மை இடத்தை பெறக்கூடிய விந்தனு குழந்தையாக உருவாகிறது தாயின் வயிற்றில். அப்படி உருவானவர்கள் தான் நீங்களும் நானும். குழந்தையாக உருவாகுவதற்கு முன்பே நாம் அனைவரும் வெற்றி பெற்றவர்கள். அவ்வெற்றியின் வடிவமே இன்று நாம் இவ்வுலகில் நாம் மனிதர்களாக இருக்கின்றோம். எனவே இன்று இவ்வுலகிலும் நாம் விடாமுயற்சியோடு வெற்றியை நோக்கி,இலக்கை நோக்கி முன்னேறுவோம்.
 
விடாமுயற்சி என்னும் ஒற்றை நூல் சரியாக இருந்தால் வெற்றி என்னும் பட்டம் நம் வசமே.
விடாமுயற்சியோடு  இறைவனது வார்த்தைகளை தொடர்ந்து கடைபிடித்து இயேசுவின் சீடர்களாக மாறுவோம்.

திங்கள், 22 மார்ச், 2021

அவர் நம்மை தனியே விட்டு விடவில்லை...(23.3.2021)

நல்ல குணம் கொண்ட நல்லவர்களே..! வணக்கம்.

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் .
அவர் என்னை தனியே விட்டு விடவில்லை.

நாம் நல்லது செய்யும்போது அந்த நல்லதை உணர்ந்து கொள்ளாது நம் செய்கின்ற செயல்களில் குறை கண்டு குறைகளை மட்டும் பெரிதுபடுத்தி வாழும் மனிதர்களுக்கு மத்தியில் நாம் இன்று உறவாடி கொண்டிருக்கிறோம் என்பதை யாரும் மறுக்க இயலாது.இதையே நாம் இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம்.

அடிமைத்தனத்திலிருந்து மக்களை இறைவன் மீட்டு வருகிறார் ஆனால் அன்றாட தேவைகளான உணவு உடை இருப்பிடம்  இவைகளில் இருப்பதில் மகிழாமல் இன்னும் அதிகமாக என்று அற்ப சுகங்களை நாடுகிறார்கள்.
தங்களுடைய அற்ப சுகங்களுக்காக இறைவனையும் இறைவன் அனுப்பிய தூதரையும் இழிவாகப் பேசுகிறார்கள் மக்களின் இச்செயல் கண்டு கோபமுற்ற இறைவன் அவர்களை தண்டிக்கிறார். ஆனால் மீண்டும் அவர்களைக் காத்தருள அவர்களை குணப்படுத்தக்கூடிய செயலில் இறங்குகிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில்  இயேசு தனது பணியை குறித்து தன்னுடைய சீடர்களுடன் உரையாடுகிறார். துன்பங்கள் என்பது வாழ்க்கையில் வரக்கூடிய ஒரு அங்கம்தான் துன்பம் என்பது நம் வாழ்வில் வரக்கூடிய ஒரு அங்கம் என்பதை மறந்து போய் துன்பம் இல்லாமல் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும் சீடர்களுக்கு துன்பத்தின் வழியை மீட்பு என்பதை இயேசு எடுத்துரைக்கின்றார்.

பொதுவாகவே துன்ப நேரங்களில் எல்லாம் இறைவன் நம்மோடு இல்லை என எண்ணுவோம். ஆனால் இறைவன் நம்மோடு இருந்து நமக்குத் தெளிவைத் தருகிறார் என்ற செய்தியினை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு தருகின்றது.

பல நேரங்களில் நமது செயல்களில் இருக்கக்கூடிய நன்மை தனங்களை கண்டுகொள்ளாது குற்றம் காணும் நோக்கத்தோடு நம்மை சுற்றியுள்ளவர்கள் செயல்படும்போது அவர்களை கண்டு அஞ்ச வேண்டாம்.
இயேசு அன்றைய மண்ணில் வாழ்ந்த போது அவர் மீதும் குற்றம் காணும் நோக்கத்தோடு பின் தொடர்ந்தவர்கள் ஏராளம் என்பதை நாம் அறிவோம்.

நோயாளி ஒருவரை குணப்படுத்தினார் ஓய்வுநாள் சட்டத்தை மீறுகிறான் என குற்றம் சுமத்தினார்கள்.
கோவிலை ஏன் சந்தை கூடாரமாக மாற்றினீர்கள் என்று கேள்வி எழுப்பினார். ஆண்டவருக்கு எதிரானவரானார் .  
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறுகிறார்கள் என்று சொன்னால் அரசுக்கு எதிராக பேசுகிறான் என கூறுவதற்கு ஒரு கூட்டம். 
சமூகத்தில்  அநீதி நிகழும்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது  ஒரு கூட்டம்.  இவர்களுக்கு மத்தியில் இறைவன் தன்னுடைய செயலை மாற்றிக்கொள்ளவில்லை இயேசு தான் செய்ய விரும்பிய நற்செயல்களை தொடர்ந்து செய்துகொண்டே முன்னேறினார். இன்று நாமும் அவ்வாறு இருக்கவே அழைக்கப்படுகிறோம். இருப்பதில் நிறைவு காணவும், இருப்பதை பிறரோடு பகிரவும்,  நாம் துன்பங்களை எதிர் கொள்ளவும் 
இறையருள் வேண்டுவோம்.

ஞாயிறு, 21 மார்ச், 2021

தீர்ப்பு.... (22.3.2021)

தீர்ப்பு.... 

அன்புக்குரியவர்களே வணக்கம்! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.


மறுமலர்ச்சி என்ற ஒரு  பழைய திரைப்படம் ஒன்று உண்டு. அத்திரைப்படத்தில் கதாநாயகன் நல்லது செய்ய முயலும் போது அதை தவறாக புரிந்து கொண்டு ஒரு ஊரைச் சார்ந்தவர்கள் எல்லாம் அவரை அடித்து துன்புறுத்துகிறார்கள். இதனை கண்டு வெகுண்டெழுந்த கதாநாயகனின் ஊர் மக்கள் அனைவரும்  தங்கள் ஊரைச் சார்ந்த ஒரு நல்ல மனிதரை அவர்கள் அடித்தார்கள் என்று கூறி அந்த ஊரையே தீக்கிரையாக்குகிறார்கள். ஆனால் இதனை அறியாத கதாநாயகன் இச்செய்தி கேள்விப்பட்டு தனது ஊர் மக்களை கடிந்து கொள்கிறார். ஆனால் தீக்கிரையாக்கப்பட்ட ஊரைச் சார்ந்த எஞ்சிய நபர்கள் அனைவரும் கதாநாயகன் தான் இதற்கு காரணம் என கருதி அவரை கொல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு அவரது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்கிறார்கள். இப்படத்தின் இறுதி காட்சியில் கதாநாயகன் தனது ஊர் மக்களையும், தீக்கிரையான ஊர் மக்களையும், தான் யாருக்கு நல்லது செய்ய முயன்றாரோ அவர்கள்  முன் நின்று அவர் கேள்விகளை எழுப்புவார். நீங்கள் அனைவரும் தவறீழைதீர்கள் நான் என்ன தவறு செய்தேன். ஏன் என்னை மையமாகக் கொண்டு என் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்தீர்கள்? என்று கேள்விகளால்  தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் செயல்களை  சுட்டிக் காட்டுவார்.  இன்று பல நேரங்களில் நமது தவறான முன் சார்பு எண்ணங்களும், நமது விருப்பத்திற்கு இணங்க மறுத்த அடுத்தவரின் செயல்களும் தான் பலரை குற்றவாளிகளாக நம்மை தீர்ப்பிட  வைக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் குற்றம் ஏதும் செய்யாத சூசன்னாவை சிலர் பொய்க்குற்றம் சாட்டி  குற்றவாளி என தீர்ப்பிடுகிறார்கள். 

இன்று தேர்தலை முன்னிட்டு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வாக்கு சேகரிக்கும் நபர்களுக்கு இடையே நாம் வாழ்கிறோம்.
 
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட மகதலா மரியாவை விபச்சாரத்தில் பிடிபட்டாள் என, அதுவும் கையும் களவுமாக பிடிபட்டவள் எனக் கூறி, இயேசுவின் முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். 

இயேசுவின் முன்பு மகதலா மரியா நிறுத்திவைக்கப்பட்டது இயேசுவை சோதிக்கும்  நோக்கு. இவர் இப்பெண்ணுக்கு  எச்சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குகிறார் என்பதை உற்று நோக்கும் வகையில் முன்னிறுத்துகிறார்கள்.  

இன்று நாம் வாழும் இந்த உலகத்தில், பல நேரங்களில், பல நிலைகளில், நாம் தீர்ப்பிடப்படுகிறோம் சூசன்னாவைப் போல. குற்றம் ஏதும் செய்யாத போது குற்றவாளிகள் ஆக்கப்படுகிறோம். மகதலா மரியாவைப் போல தனியாக ஒரு பெண் விபச்சாரத்தில் ஈடுபட இயலாது. இருந்தபோதும் அவள் மட்டுமே கையும் களவுமாக பிடிபட்டவளாகிறார்.  இன்னொருவர் விட்டுவிடப்படுகிறார். 

இந்த உலகத்தில் பல நேரங்களில் நாமும் முறையற்ற வழியில் தீர்ப்பிடப்பட்டு இருப்போம்.  தவறு ஏதும் செய்யாமல் குற்றவாளிகளாக மாறி இருப்போம்.  நம்மோடு இணைந்து தவறிழைத்தவர்களே நாம் தவறிழைத்தவர்கள் எனக் கூறி நம்மை மட்டும் குற்றவாளியாக்குவார்கள். இச்சூழலில் எல்லாம் நாம் எப்படி செயல்பட வேண்டும்? நமது நம்பிக்கை என்பது யாரிடம் இருக்கிறது என்பதை ஆழமாக சிந்தித்து பார்க்க அழைக்கப்படுகிறோம்.  
இயேசுவும் தீர்ப்பிடப்பட்டவர் தான்.  குற்றம் ஏதும் செய்யவில்லை. ஆனால் தலைமை சங்கத்திற்கு முன் குற்றவாளியாக நிற்கிறார். குற்றமே தெரியாமல் குற்றவாளியாக கொண்டு போய் நிறுத்தியதால் அவருக்கு எதிராக குற்றங்களை தேடுகிறார்கள். பிறகு அவர்களே இரு  சாட்சிகளை உருவாக்குகிறார்கள்.  தலைமை குருவுக்கு முன்பாக இயேசு திருச்சட்டத்தை மீறுகிறார்.  இயேசு  எருசலேம் கோவிலை இடித்துவிடுங்கள்.  மூன்று நாளில் கட்டி எழுப்புகிறேன் எனக்கூறி எருசலேம் தேவாலயத்தை அவமதிக்கிறார் என ஆன்மீகம் சார்ந்த குற்றமாக அவர் மீது குற்றத்தை உருவாக்குகிறார்கள்.  அவருக்கு எதிரான சாட்சிகளை உருவாக்குகிறார்கள். பிலாத்துவின் முன் கொண்டு செல்லப்படும் போது அங்கு அரசியல் காரணமாக இவன் உரோமை அரசுக்கு வரி கட்டக்கூடாது என்கிறான். உரோமை அரசை எதிர்க்கிறான் என்று அரசியல் சார்பான  பொய் குற்றத்தை இயேசுவின் மீது சுமத்துகிறார்கள்.  

இன்று நாம் வாழும் இந்த உலகத்தில் பல நேரங்களில் நாமும் பலரால் பலமுறை தீர்ப்பிடப்பட்டிருப்போம்.  பிறரின் தீர்ப்புகளை எல்லாம் கண்டு அஞ்சி விடக்கூடாது. பிறர் நம்மைப் பற்றிக் கூறக் கூடிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒன்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்  அல்ல.  உச்சநீதிமன்றத் தீர்ப்புகளே மறுபரிசீலனைக்கு உட்பட்டது தான்.  நம்முடைய தீர்ப்பு என்பது நமது மனச்சான்றை பொறுத்தே அமைகிறது.  நாம் செய்கின்ற நல்லது கெட்டதுகளுக்கு நமது மனச்சான்றே நமக்கு முறையான தீர்ப்பு வழங்குகிறது.குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் என்பதுபோல, ஒரு அநீதியை இழைத்த பிறகு அவர் மனம் அடையும் வேதனையை அவரையன்றி வேறு எவரும் அறிய இயலாது. 
 நாம் வாழும் உலகத்தில் தவறான தீர்ப்புகளால் பலரை நாம் நையப் புடைத்திருக்கலாம்.  பலர் மீது பொய்க்குற்றம் சாட்டி பலரின் பெயரைக் கொடுத்து இருக்கலாம். ஆனால் இந்த தவக்காலம் நாம் பிறரை எப்படித் தீர்ப்பிடுகிறோம் என சிந்திக்க அழைப்புத் தருகிறது. இன்றைய வாசகங்களின் மையக் கருத்தும் அதுவாகத் தான் இருக்கிறது. இயேசுவைப் போல அடுத்தவரைத் தீீீீர்ப்பிடுவதற்கு முன்பாக நம்மை நாம் சுயபரிசோதனை செய்வோம்.  தவறுபவன் தவறுகளில் இருந்து விடுபட வேண்டும் என்பது தான் நோக்கம். அதற்கான வழிகளைக் காட்டுவோம். பிறரை குற்றவாளிகள் எனக் கூறி அவர்களை பலரின் முன்பு குறுகிப்  போகச் செய்யாமல் அவர்கள் தவறை  அவர்களே உணர்ந்து கொள்ள வழி காட்டுவோம். நாம் யாரையும் தீீீர்ப்பிட வேண்டாம். அப்போதுதான் நாம் தீர்ப்புக்கு உள்ளாகாமல் இருக்க முடியும்.  அடுத்தவர் செய்கையை நேர்மறையாக பார்க்கப் பழகுவோம்.  பல நேரங்களில் நமது முன் சார்பு எண்ணங்களின் அடிப்படையில் அடுத்தவரை பார்ப்பதனால் தான், ஒருவர் செய்கின்ற செயலில் இருக்கும் நன்மை தன்மையை உணர்ந்து கொள்ளாமல் அவரை குற்றவாளியாக மாற்றுகிறோம்.

 எனவே இன்றைய நாளின் வாசகங்கள் நமக்குத் தரும் செய்தி, தீர்ப்பிடாதே!  தீர்ப்பிடும் முன்பு நீ உன்னையே ஆய்ந்து அறிந்திடு!  என்ற செய்தியாகும். நம்மை நாம் சீர்தூக்கிப் பார்ப்போம். நம்மை பலர் குற்றவாளிகள் எனத்  தீர்ப்பிட்ட தருணங்களை நினைத்து பார்ப்போம். நம்மை தீர்ப்பிட்டவர்களை மன்னிப்போம்.  நாமும் அடுத்தவரைத் தீர்ப்பிடாது நேர்மறை உணர்வோடு அனைவரையும் ஏற்றுக் கொண்டு இன்றைய நாளில் இறையருளை தொடர்ந்து வேண்டுவோம்.

சனி, 20 மார்ச், 2021

மனிதன் இருப்பது எங்கே...? (21.3.2021)

மனிதன் இருப்பது எங்கே...?

நல்லுள்ளம் கொண்ட நல்லவர்களே...!  வணக்கம்.
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
புது உள்ளம் கொண்டவர்களாக மண்ணில் விழுந்து பலன் தர இன்று நாம் அழைக்கப்படுகிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் நமக்கு இறைவன் தரக்கூடிய புதிய இதயத்தைப் பற்றி கூறுகிறார் இந்த இதயத்தில் அன்பு குடிகொண்டிருக்கும். இதுவரை நாம் நம்மிடையே கொண்டிருந்த தவறான எதிர்மறையான எண்ணங்களை எல்லாம் அழித்துவிட்டு இறைவன் தருகின்ற புதிய இதயத்தை நமது ஆக்கிக்கொள்ள எரேமியா இறைவாக்கினர் நம்மை அழைக்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கோதுமை மணி மண்ணில் விழுந்து பலன் தரவேண்டும் என்ற செய்தியினை இறைவன் எடுத்துரைக்கின்றார் நாம் இயேசுவின் புதிய இதயத்தை நம்முடையதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் நம்முடைய தவறான நெறியற்ற  ஒழுக்கநெறிகளுக்கு எதிரான காரியங்கள் எல்லாம் விடுத்துவிட்டு இறைவன் தருகின்ற புதிய இதயத்தில் அன்பு நீதி சமத்துவம் என்ற இறையாட்சியின் விழுமியங்களை தமதாக்கிக் கொண்டு நம்மை சுற்றி உள்ள ஒவ்வொருவரையும் அன்பு செய்யவும் ஏற்றுக்கொள்ளவும் சகோதரர்களாக வாழ உதவும் உறவை மையமாகக் கொண்டு இவ்வுலகத்தில் பல நல்ல உள்ளங்களை நமது ஆக்கிக்கொள்ள இயேசு அழைப்பு தருகின்றார்.
வாழ்வில் மனிதன் ஒரு செயலின் தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடையே இருந்துகொண்டு துன்பங்களுக்கு மத்தியில்  தடுமாறுகிறான். எந்த ஒரு துன்பமாக இருந்தாலும் அதன் பிறகு இறுதியில் கிடைக்கப்போவது மகிழ்ச்சி அல்லது  எதிர்காலத்திற்கான அனுபவம்  என்பதை நாம் உள்ளத்தில் ஆழமாக பதிய வைக்க வேண்டும்.
இன்பத்தாலும் துன்பங்களால் சூழப்பட்ட இந்த உலகத்தில் துன்பங்களை மட்டும்  கண்டு மனம் துவண்டு போய்விடாமல் துன்பங்களுக்கு மத்தியிலும் இறைவனது திட்டத்தை வெளிப்படுத்திய இயேசுவைப் போல நாமும் இவ்வுலகில் பயணிக்க அழைக்கப்படுகிறோம். 

உண்பதும் உறங்குவதும் வாழ்க்கை என்றால் அதனை மண்ணும் செய்யும் மரமும் செய்யும் என்பார்கள் நாம் மனிதர்கள், நாம் இவ்வுலகத்தில்  அன்பால் அனைவரையும் அரவணைத்து துன்பங்களைக் கண்டு துவண்டு விடாது துணிவோடு செல்ல   உள்ளத்தில் உறுதி ஏற்போம்.

வெள்ளி, 19 மார்ச், 2021

என்னை யார் அறிவார்...? (20.3.2021)

என்னை யார் அறிவார்...?

நல்ல எண்ணங்களின் பிறப்பிடமாகிய நல்லவர்களே...! வணக்கம்.

இன்றைய இறைவார்த்தை அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்.
 
பக்தன் ஒருவன் கடவுளிடம் கூறினான்....
உன்னை நினைப்பதில் பாதி...
மறப்பதில் பாதி...
இப்படியே கழிந்தது என் ஆயுள்.
என்று...
இன்று எண்ணங்களுக்கு மத்தியில் நகரும் மனிதனை முழுமையாக  இவ்வுலகில் அறிந்தவர் யாருமில்லை என கூறலாம். ஆனால் இறைவன் ஒருவரே இதய சிந்தனைகளையும் உணர்வுகளையும் அறிந்திருப்பவர் என இன்றைய முதல் வாசகம் வழியாக எரேமியா நமக்கு எடுத்துரைக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவைக் கைது செய்வதற்காக ஒரு கூட்டத்தினரை அனுப்பி விடுகின்றார்கள் சிலர். ஆனால்  இயேசுவை கைது செய்யச் சென்றவர்கள் எல்லாம் இயேசுவின் வார்த்தைகளை கேட்டு உள்ளம் மாற்றம் கொண்டவர்களாக இவர் நேர்மையாளர், இறைவாக்கினர், இவரைப் போல் வேறு ஒருவரை நாம் இதுவரை பார்த்ததில்லை இவரையா கைது செய்ய வந்தோம்? என்ற எண்ணத்தோடு தங்களை கைது செய்ய அனுப்பியவர்களிடம் திரும்பிச்சென்று அவர் நல்லவர் என்பதை எடுத்துரைக்கிறார்கள். ஆனால் முன் சார்பு எண்ணம் கொண்ட சிலரோ அவருக்கு சார்பாக பேசுபவர்களை எல்லாம் திருச்சட்டத்திற்கு எதிரானவர்களாக சித்தரிக்கிறார்கள்.

இது போன்ற நிகழ்வை நாமும் நமது அன்றாட வாழ்வில் சந்திக்கலாம். பல நேரங்களில் நாம் ஒருவர் பற்றிக்கொண்டு இருக்கக்கூடிய முன் சார்பு எண்ணங்களின் அடிப்படையில் அவரைப் பற்றி பிறரிடம் நாம் பேசும் பொழுது, எதிரே இருக்கக் கூடிய நபர் அவர் அப்படி எல்லாம் இல்லை. அவர் நல்லவர். அவர் நீங்கள் சொல்வது போல இல்லை என்று கூறும் பொழுது அவர்களின் குரலுக்கும், கருத்துக்கும் செவி கொடுக்க மறுத்து நாம் சொல்வதை மட்டும் அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் அதன்படி அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவர்களும்  நம் கருத்துக்கு எதிரானவர்கள் என்று கூறக்கூடிய மனப்பாங்கு கொண்டவர்களாக தான் இன்று நம்மில் பலர் இருந்து கொண்டிருக்கிறோம்.
இத்தகைய பண்பு நலமான வாழ்வை அமைத்துக் கொள்ள உதவாது என்பதை இன்றைய வாசகங்கள் வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். ஒருவரை பற்றி நாம் கொண்டிருக்கக்கூடிய முன் சார்பு எண்ணங்களை வாழ்வில் எப்போதும் கொண்டிருப்பது முறையல்ல. முன்சார்பு எண்ணத்தை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதன் அடிப்படையில் நாம் அடுத்தவரை நேர்மறையாக பார்க்கவும், அவர்கள் செய்யக்கூடிய செயல்களை நேர்மறையாக கண்டுகொள்ளவும் நாம் பழகிக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும் போது இறைவன் படைத்த இந்த உலகத்தில் நாம் இன்புற்று ஒருவரை ஒருவர் அன்பு செய்து வாழ முடியும்.  

ஒருவரைப் பற்றி நாம் கொண்டிருக்கக்கூடிய தவறான எண்ணங்கள் அவர் செய்யக்கூடிய ஆயிரம் நற்பண்புகளையும் தவறாகத்தான் பார்க்க நம்மை தூண்டுகிறது. இதனை நாம் முதலில் உணர்ந்து கொள்ள இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். எப்படி இயேசுவின் நற்பண்புகளை அவரைக் கைது செய்யச் சென்றவர்கள் வந்து கூறியபோது ஏற்றுக்கொள்ள மறுத்தார்களோ அதுபோலத்தான் பல நேரங்களில் நாமும் நம்மைச் சுற்றி பலரும் இருந்து கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் நமது சிந்தனைகளை சீர்தூக்கிப் பார்த்து மாற்றத்தையும் உள்வாங்கிக்கொள்ள இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நம்மை அழைக்கின்றார்.
மண்புழுக்கள் கூட தன் உடலை இழுத்து இழுத்துக் கொண்டு தான் ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் சென்றுக் கொண்டு இருக்கின்றன. ஆனால் மனிதர்கள் மட்டும் தான் தான் எண்ணுவதற்கு வெளியே உலகம் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நமது எண்ணங்களை கடந்து நாம் அடுத்தவரிடம் இருக்கக்கூடிய நல்ல பண்புகளை கண்டுகொள்ள இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய் இயேசுவின் பாதையில் அவரது இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளக் கூடிய உண்மை பணியாளர்களாய் அவரை பின் தொடர்வோம். 

வியாழன், 18 மார்ச், 2021

புனித சூசையப்பர் ஒரு பார்வை... (19.3. 2021)

புனித சூசையப்பர் ஒரு பார்வை...

உழைத்து வாழும் உத்தமர்களே...! வணக்கம்.

இன்று நம் தாய்த்திரு அவையோடு இணைந்து மரியாவின் கணவரான புனித சூசையப்பரை நினைவு கூறுகின்றோம்.  

இந்நன்னாளில் சூசையப்பர் பற்றிய தெளிவான புரிதலை வளர்த்துக் கொள்ள... அவரைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.


பெயர் : புனித யோசேப்பு அல்லது புனித சூசையப்பர் ( Saint .Joseph ).
அடையாள பெயர் : இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தை.
புனித கன்னி மரியாவின் கணவர். 
தாவீது அரசரின் வழிமரபில் தோன்றியவர். 
தொழில் :  நாசரேத்தில் வாழ்ந்து வந்த யோசேப்பு தச்சுத் தொழில் செய்து வந்தவர். 
வரலாற்றுச் செய்தி : 
தாவீது குலத்து கன்னிப் பெண்ணான மரியாவுடன் இவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது . அவ்வேளையில் , மரியா தூய ஆவியின் வல்லமையால் இறைமகனைக் கருத்தாங்கும் பேறு பெற்றார் . மரியா திடீரென கருவுற்றதால் யோசேப்பு குழப்பம் அடைந்தார் , நேர்மையாளரான இவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்கி விட நினைத்தார் . மரியா கடவுளின் திருவுளத்தால் இறைமகனை கருத்தாங்கி இருப்பதை வானதூதர் வழியாக அறிந்த இவர் மரியாவை ஏற்றுக் கொண்டார்.
இயேசு பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த வேளையிலும், அவரைக் கோவிலில் ஒப்புக்கொடுக்க எருசலேம் சென்ற நேரத்திலும், ஏரோது அரசன் அவரைக் கொல்லத் தேடிய போதும் மரியாவையும், குழந்தை இயேசுவையும் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் யோசேப்பு பாதுகாத்தவர். 
பன்னிரண்டு வயதில் இயேசு எருசலேம் கோவிலில் தங்கிவிட்ட பொழுது, யோசேப்பு மிகுந்த கவலையுடன் தேடி அலைந்து அவரைக் கண்டுபிடித்தவர். 
தச்சுத் தொழிலில் வந்த வருமானம் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றியவர்.  
யோசேப்பு இயேசுவுக்கும் தச்சுத் தொழிலைக் கற்றுக்கொடுத்தவர். 
மரியாவுக்கு நல்ல கணவராகவும், 
இயேசுவுக்கு நல்ல தந்தையாகவும் யோசேப்பு விளங்கியவர். 
திருக்குடும்பத்தை சிறப்பாகத் தலைமைதாங்கி வழிநடத்தியவர். 
இயேசு தனது இறையரசுப் பணியைத் தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு,இயேசுவும் மரியாவும் அருகில் இருக்க யோசேப்பு  மரணம் அடைந்தார் . 

திருஅவையில் புனிதர்கள் வரிசையில், புனித கன்னி மரியாவுக்கு அடுத்ததாக புனித யோசேப்பு வணங்கப்படுகிறார். 
கிறிஸ்தவ வரலாற்றின் தொடக்க காலம் முதலே இவர் புனிதராக போற்றப்படுகிறார். 
இவர் கிறிஸ்தவர்களால் சிறப்பாக கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால் மிகவும் மதிக்கப்படுகிறார்.
புனித யோசேப்பு அகில உலகத் திருஅவையில் 
கற்பு 
கல்வி 
திருமணம் 
குடும்பங்கள் 
நல்ல மரணம் ஆகியவற்றுக்கும் . 
தொழிலாளர்களுக்கும் பாதுகாவலராக விளங்குகிறார் . 
CIC சபையின் இரண்டாவது பாதுகாவலர் புனித சூசையப்பர்.
கத்தோலிக்கத் திருஅவையில்  இவருக்கு இரண்டு விழாக்கள் சிறப்பிக்கப்படுகின்றன. அவை...
1. புனித யோசேப்பு கன்னி மரியாவின் கணவர் ( மார்ச் 19 ).
2. புனித யோசேப்பு தொழிலாளர்களின் பாதுகாவலர் ( மே 1 ).

இன்று நாம் நினைவு கூரும் புனித சூசையப்பரின் வாழ்வு நம்மையும் அவரைப் போல நேர்மையோடும், நீதியோடும், எப்போதும் இறை திட்டத்திற்கு செவி கொடுத்து வாழ அழைப்பு தருகிறது. இந்த அழைப்பை உணர்ந்து கொண்டு நாமும் புனித சூசையப்பரின் பாதை வழி இறையாட்சியின் உண்மை பணியாளர்களாக மாறுவோம். 

புதன், 17 மார்ச், 2021

சான்று வாழ்வு சரித்திர வாழ்வு! (18.3.2021)

சான்று வாழ்வு சரித்திர வாழ்வு!

சான்று வாழ்வில் சரித்திரம் படைக்க துடிக்கும் அன்பு உள்ளங்களே!

இன்றைய நாளில் இறை வார்த்தைகளின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகம் ஆண்டவரால் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இஸ்ராயேல் மக்கள் தமது வாழ்வில் திசைமாறிச் செல்வதையும், ஆண்டவர் அவர்கள் மேல் கோபம் கொள்வதையும், மீண்டும் அந்த மக்கள் மீது இரக்கம் காட்டி அவர்களைத் தொடர்ந்து வழிநடத்துவதையும் வாசிக்கின்றோம்.
           இன்றைய நற்செய்தி வாசகத்தில், "யோவான் பகர்ந்த சான்றை விட மேலான சான்று எனக்கு உண்டு. நான் முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்து உள்ள செயல்களே அச்சான்று" என்று ஆண்டவர் இயேசு குறிப்பிடுகின்றார். (யோவான் 5: 36.). என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும், அவர் கொடுத்த வேலையை செய்து முடிப்பதுமே என் உணவு என கூறிய இயேசுவின் செயல்பாடுகள் அனைத்தும் அவரின் கூற்றை உறுதிப் படுத்துவதாக அமைந்திருந்தன. இயேசுவின் வார்த்தைகளையும் அவரது வாழ்க்கையும் இணைந்து செல்லும் இயல்பை நாம் நேரிய உள்ளத்தோடு புரிந்துகொள்ள இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை அழைக்கிறது. இயேசு தன்னுடைய பொதுவாழ்வுப் பயணத்தில் எத்தனையோ அருங்குறிகளையும் அற்புதங்களையும் நிகழ்த்தினார். அவை அத்தனையும் இயேசு இறைமகன் என்பதையும் தந்தையின் திருவுளத்தோடு அவர் ஒன்றுபட்டு செயலாற்றியதையும் தெளிவாக வெளிப்படுத்தின. ஆயினும் அவரில் நம்பிக்கை கொள்ளாத அவரது வல்லமையை உணராத பரிசேயர்,  எரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்தனர். ( மாற்கு 3 : 6.) என நாம் வாசிக்கின்றோம்.
        ஆனால் இயேசுவில் நம்பிக்கை கொண்டோர் அசாதாரணமான அவருடைய அற்புதங்களை மட்டுமல்ல, அவரது ஒவ்வொரு இரக்கச் செயலையும் இறையாட்சியின் காணக்கூடிய சான்றுகளாக கண்டனர். அவர் நிகழ்த்திய அறிகுறிகளில் அவருடைய இறை வல்லமையை கண்டு வியப்படைந்த அவர்கள் மிகச் சாதாரணமான அவருடைய செயல்பாடுகளிலும் பேச்சிலும் அவர் வெளிப்படுத்திய தாயன்பையும்,  தந்தையின் இரக்கத்தையும் உணர்ந்தனர். திறந்த உள்ளத்துடன் அவரது செயல்பாடுகளின் ஊற்றாகிய அவரது நேரிய, பரிசுத்த, அன்புநிறை உள்ளத்தை காணக்கூடிய பெற்றனர். இயேசு மனிதனாக மட்டுமல்ல இறைமகனாகவும் இவ்வுலகில் வாழ்ந்தார்.ஆண்டவர் இயேசுவைப் போல நாமும் தந்தை இறைவனுடன் இடைவிடாது இணைந்திருந்தால், அவரது பேரிரக்கத்தை நாம் சுவைத்து அவ்விரக்கம் நமது பேச்சிலும் பார்வையிலும் செயல்களிலும் ஒளிரும்படி வாழலாம். மனத்தாழ்மையுடன் உள்ளத்தில் தூயோராக வாழ நாம் முற்படும் போது நமது செயல்பாடுகளால் உண்மைக்கு சாட்சிகளாய் வாழ முடியும். ஏனெனில் கள்ளமற்ற கபடமற்ற அன்புடன் ஆற்றப்படும் ஒவ்வொரு சிறிய சாதாரண செயலும் அதன் பிறப்பிடம் தூய்மையான உள்ளம் என்பதை தெளிவாக எடுத்துரைக்கும்.

            இன்று நாம் சந்திக்கும் ஒவ்வொருவருடனும் விண்ணகத் தந்தையின் இரக்கத்தை பகிர்ந்து கொள்வதே நமது அழைப்பு என்பதை உள்ளத்தின் ஆழத்தில் உணர்வோம். இதை மனதில் கொண்டு இன்றைய நாளில் நாம் ஆற்றவிருக்கும் செயல்பாடுகள் மிகச் சிறியதாக இருந்தாலும், அவை ஒவ்வொன்றிலும் தந்தை இறைவனின் இரக்கமும் கருணையும் வெளிப்படும்படி வாழ்ந்து காட்டுவோம். நமது பார்வையால், இரக்கச் சொற்களால், நலிந்தவருக்கு ஆதரவு நல்கும் செயல்பாடுகளால் ஆண்டவர் இயேசுவின் மனநிலையை வெளிப்படுத்துவோம். நமக்குள் இருந்து நம்மை இயக்கும் ஆவியானவர் காட்டும் உண்மையின் பாதையில் உறுதியுடன் நடப்போம்.

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...