செவ்வாய், 9 மார்ச், 2021

குருத்து ஞாயிறு ( 28.3.2021)

 குருத்து ஞாயிறு



முன்னுரை:

பரபரப்பான இவ்வுலகில் பவனிகளுக்கு இன்று பஞ்சமில்லை. இன்று ஊர்வலங்களும், பவனிகளுமே அதனதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டன. இச்சூழலில் இன்று நாமும் குருத்தோலைகளை கைகளில் ஏந்தி ஓசான்னா! தாவீதின் மகனுக்கு ஓசான்னா! என்று கோஷமிட்டுக்கொண்டு பவனி செல்ல இருக்கின்றோம். இப்பவனியே புனித வாரத்தின் தொடக்கம். அன்று இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேம் நகர வீதியில் நுழைந்ததை நினைவுபடுத்தும் ஒரு சடங்கு என்று இதனை நினைப்போமாயின் இப்பவனியும் பொருளற்றதாகிவிடும். இப்பவனியின் நோக்கம் இன்றும் நாம் இயேசுவை அரசராக ஏற்றுக்கொண்டு அவரது தலைமையில் இறையாட்சி என்னும் புதியதொரு உலகைப் படைக்கவே ஓரணியாக இணைந்து பவனி செல்கின்றோம். இப்பவனி நம் வாழ்க்கைப் பயணத்தைக் குறிப்பதாகும். நமது வாழ்க்கைப் பயணத்தின் இலக்கு இறையாட்சியே ஆகும். இன்று நம்மை ஆளும் அரசை தேர்வுச் செய்ய காத்திருக்கும் நாம் இறைவனின் அரசாம் அன்பின் அரசை மனதில் கொண்டு இயேசுவைப் போலவே அடுத்தவர் நலனுக்காக இன்னுயிரையும் தியாகம் செய்யக் கூடிய தலைவர்களாக நாமும் பிறரும் உருவாக உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய் பக்தியோடும் இப்பவனியில் இணைவோம். 


முதல் வாசக முன்னுரை: எசா 50: 4-7

தலைவன் தாழ்ச்சியின் மறுவுருவம் என்பதை வழியுருத்தும் வகையில் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட ஒவ்வொருவரும் எப்படி செயல்பட வேண்டும்? என்பதையும், ஒருவர் இறைத்திட்டத்தை முழுமையாய் ஏற்று,க் கொண்டால் தன் வாழ்வில் வரும்  துன்பங்களையும் சவால்களையும் நெருக்கடி தருகின்ற தருணங்களையும் எத்தகைய மனநிலையோடு எதிர்கொள்ள வேண்டுமென்பதை இன்றைய முதல் வாசகத்தின் வழியாக எசாயா இறைவாக்கினர் வார்த்தைகள் நமக்கு உணர்த்துகின்றன. கவனத்தேமாடு செவிகொடுப்போம் இயேசுவைப் போல நல்ல தலைவர்களாகிட….


இரண்டாம் வாசக முன்னுரை: பிலி 2: 6-11

இயேசு இம்மண்ணில் வாழ்;ந்த போது தாழ்ச்சியின் உறைவிடமாகத் திகழ்ந்தார். இதனை இயேசுவின் வாழ்வு வெளிப்படுத்துகிறது. அந்த தாழ்ச்சியின் பொருட்டு அவர் எவ்வாறு மாட்சிபடுத்தப்பட்டார் என்பதை பவுல் பிலிப்பியற்கு எழுதிய கடிதம் வழியாக நமக்குத் தெளிவாய் விளக்கிக் கூறுகிறார். நாமும் துன்பங்கள் வழியாக இறைவனது மாட்சியில் பங்கு கொள்ள நம்மை தகுதிப்படுத்த அழைக்கும் இறைவார்த்தைக்கு ஆர்வத்தோடு செவி கொடுப்போம்.




விசுவாசிகள் மன்றாட்டு

1. எனது ஆடுகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன் என்ற நல்லாயானாம் இயேசுவே! உமது மந்தையாகிய அகில உலகத் திருச்சபைக்காகவும், அதனை வழிநடத்தும் திருச்சபைத் தலைவர்களுக்காகவும் உம்மிடம் மன்றாடுகிறோம். திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் அருட்சகோதரிகள் அனைவரையும் இறைஞானத்தாலும், இறை அனுபவத்தாலும் நிரப்பிடவும், தங்கள் பணிவாழ்வில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளத் துணிவையும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. பணிவிடை ஏற்க அன்று, பணிவிடை புரியவே வந்தேன் என திருவாய் மொழிந்த இயேசுவே! எம் எமது தமிழகத்தை ஆளும் தலைவர்களை நாங்கள் தேர்வு செய்ய உள்ளோம். நூங்கள் தேர்வுச் செய்யும் தலைவர்கள் சாதி, மத, மொழி போன்றவற்றால் ஏற்படும் பிரிவினைகளும், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சமூக நோய்களை கலைந்திடவும். எங்கள் நாட்டுத் தலைவர்கள் சுயநலம், ஊழல் மற்றும் இலஞ்சம் போன்றவற்றைத் துறந்து, நேர்மையுடன் மக்களை வழிநடத்திச் செல்ல நல்ல தலைவர்களை நாங்கள் தேர்வு செய்ய தூய ஆவியார் ஞானத்தை அருள வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


3. பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே! எல்லோரும் என்னிடம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்த அமைதியின் நாயகனே! எம் பங்கிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தலைவர், குடும்பத்தலைவிகள் ஒவ்வொருவருக்காகவும் உம்மிடம் மன்றாடுகிறோம். தங்கள் குடும்பங்களை வழிநடத்தவும், பிள்ளைகளைப் பராமரிக்கவும், இரவு பகல் பாராது உழைத்து ஓடாய் தேயும் அனைத்துப் பெற்றோருக்கும், மன அமைதியையும், அவர்கள் தன்னலம் பாராது மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களையும் ஆசீர்வதித்து மனநிறைவையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


4. குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள் என்ற அன்பின் பிறப்பிடமே! எம் பங்கிலுள்ள இளைஞர் இளம்பெண்கள் மற்றும் கல்வி பயிலும் அனைத்துக் குழந்தைகளையும் உம்மிடம் ஒப்புவித்து அவர்களுக்காக மன்றாடுகிறோம். இளைஞர் இளம்பெண்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு மற்றும் நல்லதொரு வாழ்க்கைத்துணையைத் தர வேண்டியும், படிக்கின்ற குழந்தைகளுக்கு நல்ல கல்வியறிவு மற்றும் ஞானமும் தந்து ஆசீர்வதிக்கவும், எம் பிள்ளைகளுக்கு நீரே அரணும் கோட்டையுமாக இருந்து அவர்களைக் காத்திட வேண்டியும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


5. நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர்; தேவை என்று கூறிய நோய் தீர்க்கும் மருத்துவரே! எம் பங்கில் வசிக்கும் ஒவ்வொரு முதியவருக்காகவும் மற்றும் உடல் நோயினால் வருந்தும் ஒவ்வொரு நோயாளிகளுக்காகவும் உம்மிடம் மன்றாடுகிறோம். உம்மால் குணப்படுத்த இயலும் என்ற நம்பிக்கையுடன் உம்மைத் தேடி வந்துள்ள இவர்கள் அனைவரையும், உமது கரங்களினால் தொட்டு குணமாக்கி, அவர்களது நோய்கள் அனைத்திலுமிருந்து விடுதலை தந்து, இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியைக் காண செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...