சனி, 13 மார்ச், 2021

பொக்கிஷங்களை குப்பையில் எறியாதீர்கள் .. (14.3.2021)

பொக்கிஷங்களை குப்பையில் எறியாதீர்கள் 


அன்பின் உருவமாய் விளங்கும் அன்பர்களே...! வணக்கம்.

இன்றைய நாள் இறை வார்த்தைகளின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கின்றேன். 
அன்பு தான் உங்கள் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகப் பெரிய பலசாலி நீங்கள்தான்.... என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப
இறைவனின் அன்பை இன்றைய வாசகங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

இறைவன் படைத்த இந்த அழகிய உலகினிலே இஸ்ரயேல் மக்களை இறைவன் பல வழிகளில்  பாதுகாத்தாலும் பல நேரங்களில் அவர்கள் இறைவனின் உடனிருப்பை உணர்ந்து கொள்ளாமல் அவரை விட்டு விட்டு ஓட கூடியவர்களாக தான் இருந்தார்கள். ஆனாலும் ஆண்டவர் அவர்களை கை விடவில்லை. மாறாக தேடிச் சென்று அவர்களை அரவணைத்தார்.

பொதுவாகவே நமது கிறிஸ்தவ இறையியலை  கோழிக்கும் அதன் குஞ்சுகளுக்கும் ஒப்பிடுவார்கள். ஒரு துன்பம் வரப்போகிறது என்றால் தாய்க்கோழி  எச்சரிக்கைக் குரல் கொடுக்கும். அந்த குரலை கேட்டு அனைத்து கோழி குஞ்சுகளும்  ஓடி வந்து தாயின் சிறகுக்குள் தங்களை மறைத்துக் கொள்ளும். அதுபோல் தான் மனிதன் தவறும் பொழுது இறைவன் பலர் வழியாக அவனது தவறில் இருந்து விடுபட அழைப்பு தருகின்றார். அழைக்கும் இறைவனின் குரலைக் கேட்டு பலர்  தங்கள் தவறான வாழ்வை விட்டுவிட்டு ஆண்டவரிடம் ஐக்கியமாகி விடுகிறார்கள்.
ஆனால் பெரும்பாலானோர் இன்னும் ஆண்டவரின் அழைப்பின் குரலை உணராமல் தங்கள் தவறான வாழ்வில் இருந்து தங்களை மாற்றிக் கொள்ளாமல் இன்றும் தொடர்ந்து தவறான வாழ்விலேயே பயணித்து வருகிறார்கள். இந்நிலையில் இருந்த மாற்றம் பெற நாம் அனைவருமே அழைக்கப்படுகிறோம்.

அருள்தந்தை. தாமஸ் என்பவர் ஒருமுறை ஒரு உணவகத்திற்கு சென்று உணவருந்தினார். உணவு அருந்தி பிறகு அந்த கடையை விட்டு வெளியே வந்தார்.அவரது கவனம் அந்த கடையின் அருகில் இருந்த ஒரு குப்பைத் தொட்டியை நோக்கிச் சென்றது. உணவகத்தில் உண்ட பிறகு இருக்கக்கூடிய எச்சில் இலையை அங்கு இருக்கக்கூடிய பணியாளர்கள் எடுத்துவந்து அந்த குப்பை தொட்டியில் போடுவது வழக்கம். அவ்வாறு அந்த குப்பைத் தொட்டியில் அவர்கள் போட்டு இருந்தார்கள். அந்த குப்பைத் தொட்டி அருகே பல நாய்கள் நின்றுகொண்டிருந்தன. நாய்களுக்கு மத்தியில் ஒருவர் உணவுக்காக அந்த இலைகளோடு போராடிக் கொண்டிருந்தார். அதை பார்த்ததும் மனம் நொந்தார். விவிலியத்தில் வாசிக்கக்கூடிய ஏழை இலாசரைப் போலவே அந்த நபரை இவர் உணர்ந்தால் உடனே ஓடிச்சென்று அந்த நபரை தூக்கினார். இவரைப் போன்ற  கவனிப்பாரற்று சாலையில்  இருக்கக்கூடிய அவர்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும் என முடிவு செய்தார். அதன் விளைவாக இறக்கும் தருவாயில் உள்ள முதியோர் இல்லம் என்பதை தொடங்கி சாலையோரங்களில் கவனிப்பாரின்றி கிடக்க கூடியவர்களை தூக்கிவந்து அவர்களுக்கு பணிவிடை செய்வதை தன் பணியாகக் கொண்டு இன்றும் செய்து வருகின்றார்.  இப்பணியில் அவர் அடைந்த சவால்கள், சிக்கல்கள் ஏராளம். ஆனால் இறைவனுக்காக இப்பணியை இன்முகத்தோடு இன்றும் செய்து வருகிறார்.அவரோடு இணைந்து சில நல்ல உள்ளங்களும் அவருக்கு துணையாக இருந்து வருகின்றனர். கவனிப்பாரற்று  ஆதரவற்ற இறக்கும் தருவாயில் உள்ள முதியவருக்கு இவர் திண்டுக்கல் சென்னை ஆகிய இடங்களில் இல்லங்களை அமைத்து பராமரித்து வருகின்றார்.
இஸ்ரயேல் மக்கள் தங்களின் பாவத்தால் பலநேரங்களில் அடிமைகளாக மாறினார்கள். அடிமைத்தனத்திற்கு சென்றபோதெல்லாம் ஆண்டவர் அவர்களோடு இருந்தார். அவர்களின் குற்றங்களை அவர்களுக்கு நினைவூட்டினார். மீண்டும் அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்து உரிமை வாழ்வை, விடுதலை வாழ்வை வழங்கினார். தவறிய நேரங்களில் எல்லாம் இறைவன் அவர்களை விட்டுவிட வில்லை மாறாக  அவர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்களை பாதுகாத்து பராமரித்து வந்தார். இதனை விவிலியத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.


இன்று நாம் வாழும் இந்தச் சூழலில் கவனிப்பாரின்றி கிடைக்கக்கூடியவர்களை நாம் கண்டுகொள்ள அழைக்கப்படுகின்றோம். பல நேரங்களில் நமது தவறான செயல்பாடுகளால் பலரை நாம் கவனிக்காமல் விட்டு இருந்திருப்போம். பலர் மீது அன்பு காட்ட மறந்திருப்போம். அவர்களை எல்லாம் நினைத்துப் பார்ப்போம். மீண்டும் அவர்களை எல்லாம் அன்பு செய்யவும் அவர்களுக்கு தேவையானதை செய்து அவர்களை கவனித்துக் கொள்ளவும் இன்றைய நாளில் இறைவன் நம்மை அழைக்கின்றார்.

நம் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாகத்தான் இறைவன் தன் ஒரே மகனை நமக்காக பலியாக அனுப்பி கையளித்தார். இறைமகன் இயேசு வழியாகத்தான் நாம் ஒவ்வொருவருமே (ஒரு மனிதன்) எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொள்கின்றோம். அந்த இறைவன் இன்றைய நாளில் நமக்கு கற்றுத் தரக்கூடிய பாடம் 

எல்லா சூழ்நிலையிலும் எப்போதும் எல்லோரையும் அன்பு செய்யுங்கள் என்பதாகும். 

நாம் நமது குடும்பத்தில் அன்பு செய்ய மறந்த உள்ளங்களை நினைத்துப் பார்ப்போம். இந்த  தவக்காலமானது ஏதோ இயேசுவின் பாடுகளை நினைத்து விட்டு வாடிக்கையாக ஒவ்வொரு வருடமும் போல கொண்டாட கூடியது, நினைவுபடுத்தி பார்க்கக்கூடிய ஒரு நிகழ்வு என எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக அர்த்தமுள்ள வகையில் இந்நாட்களை நாம் மாற்றிட வேண்டும்.

ஒரு மனிதன் பசியால் இறக்கிறான் என்றால் அது கடவுள் அவனை பராமரிக்கவில்லை என்பதால் அல்ல... உன்னையும் என்னையும் போன்றவர்கள் அவனை  பராமரிக்காமல் விட்டதன் விளைவு என அன்னை தெரசா அவர்கள் கூறுவார். எப்படி அருள்தந்தை. தாமஸ் குப்பை தொட்டி அருகே கிடந்த ஒரு மனிதனைக் கண்டு இரக்கத்தோடு அவரைத் தூக்கி வந்து இன்றுவரை அவரைப்போலவே பலரை பாதுகாத்து வருகிறாரோ  அவரைப்போல நாமும் ஒருவர் மற்றவரை பாதுகாக்க அழைக்கப்படுகிறோம்.

பெயர் தெரியாதவரை நம்மால் பாதுகாக்க இயலாவிட்டாலும் நம் வீட்டில் இருக்கக்கூடிய முதியவர்களை  நாம் பாதுகாக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
எஸ் செல்வ சுந்தரி என்னும் சமூக ஆர்வலர் பொக்கிஷங்களை குப்பையில் எறியாதீர்கள் என்ற ஒரு கட்டுரையில் இவ்வாறு எழுதினார்.

 அனைவரும் பணத்தை தேடி ஓடிய வெளியே இருப்பதால் வழியில் இருக்கும் வேகத் தடையாக தான் முதியோர்களை நினைக்கிறார்கள் என்று.  

நாம் நமது வீட்டில் இருக்கக்கூடிய முதியவர்களை சுமையாக,தடையாக எண்ணாமல் அவர்கள் தான் நமது பொக்கிஷங்கள் என்பதை உணர்ந்து கொண்டவர்களாய் ஒருவர் மற்றவரை பாதுகாக்கவும் பராமரிக்கவும் இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். இதனைச் செய்ய பல நேரங்களில் தவறி இருக்கலாம். நாம் தவறும் போதெல்லாம் இறைவன் நம்மை விட்டு விட்டு ஓட கூடியவர் அல்ல மாறாக நம்மை தேடி வரக்கூடியவர் இன்றும் நம்மை தேடி வருகிறார் நம் பாவ வாழ்விலிருந்து மாற்றம் பெற்று ஒருவர் மற்றவரை பாதுகாக்க அழைப்பு தருகின்றார். அவர் அழைக்கும் குரலை உணர்ந்து கொள்வோம். எப்படி தாய்க் கோழியின் குரலைக் கேட்டு குஞ்சுகள் அனைத்தும் வந்து தாயின் சிறகுகளுக்கு கீழ் மறைந்து கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனவோ. அதுபோல இன்று அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்து அன்பே உருவான அந்த இறைவனைப் போலவே நாமும் அன்பு மயமாக விளங்கக்கூடிய  இயேசுவின் சீடர்களாக அன்பை பொழியவும், அன்பை பெறவும்,அன்பை விதைக்கவும், அறுக்கவும் கூடிய இயேசுவின் இறையாட்சியின் உண்மைச் சீடராக இன்றைய நாளில் இறையருள் வேண்டி இணைவோம் 

1 கருத்து:

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...