புதன், 24 மார்ச், 2021

இறை விருப்பத்தை அறிந்து செயலாற்றிட ... (25.3.2021)

இறை விருப்பத்தை அறிந்து செயலாற்றிட ..

ஆண்டவரை காண ஆவலோடு கண்விழிக்கும் அன்பு உள்ளங்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தைகளின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் அருளும் அடையாளமாக குழந்தை ஒன்று பிறக்கும். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடப் என்று இறைவாக்கினர் எசாயா கூறுகின்றார்.


இன்றைய  இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசகத்திலும் மீண்டும் மீண்டும் கூறப்பட கூடிய ஒரு வாக்கியம் "இதோ வருகின்றேன்" என்பதாகும்.

இன்றைய வாசகங்கள்  நம் தாய் அன்னை மரியாவின் அர்ப்பணத்தைப்  பற்றியும்  சேய் இயேசுவின் பிறப்பு அறிவிக்கப்பட்டதைப் பற்றியும் நமக்கு விளக்குகின்றன.
ஒரு ஏழை தாயானவள் இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள். வசதிகள் ஏதும் இல்லாத நிலையில் ஒரு ஓலைக் குடிசையில் அவர்கள் வாழ்ந்து வந்தனர். மின்சாரம் இல்லாததால் எண்ணெய் விளக்கு ஏற்றி அதன் ஒளியில் தங்கள் வாழ்வைக் கழித்தனர். ஒருநாள் இரவு எண்ணெய் விளக்கின் ஒளியில் அமர்ந்து தாயானவள் உணவுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். இரு குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென எதிர்பாராத விதமாக குழந்தைகளின் கை விளக்கை தட்டி விட்டதால் கீழே அமர்ந்திருந்த தாயின் துணையில் தீப்பற்றிக் கொண்டது. குழந்தைகள் இருவரும், அம்மா! அம்மா! என்று அலறித் துடித்தனர். தீயின் வேகம் அதிகமானதால் யாராலும் உதவி செய்ய இயலாத சூழல். ஒரு கணம் யோசித்த தாய், தன் இரு குழந்தைகளையும் தூக்கி குடிசைக்கு வெளியில் எறிந்து விட்டு கதவை அடைத்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக வீசிய பெரும் காற்று அங்கு மழையைக் கொண்டு வந்தது. தீயின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு பெரும் உடல் வேதனைகளுக்கு மத்தியிலும் அன்று அத்தாய் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு பின்பாக மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்.

இந்த ஏழைத் தாயைப் போன்று,  தான் துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்தாலும் பரவாயில்லை, தன்னுடைய மக்களாகிய இந்த மனுக்குலம் முழுவதும் மீட்கப்பட வேண்டும் என்று தன்னையே கையளித்தவர் தான் நம் அன்னை மரியாள். கிறிஸ்து பிறப்பின் மூலம் இவ்வுலகு மீட்கப்பட, ஆகட்டும்! என்ற மேன்மையான சொல்லால் தன்னையே கருவியாக அர்ப்பணித்தவர் நம் அன்னை மரியாள்.தனது விருப்பம் தனது நலனை கருதாமல் இவ்வுலகு வாழ தன்னையே தியாகம் செய்தவள். சவால்களும் பிரச்சினைகளும் நிறைந்த யூத சமுதாயத்தில் இறைத்திட்டத்திற்கு தன்னை கையளித்த வீரமங்கை நம் அன்னை மரியாள். அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்! என்ற வானதூதரின் வாழ்த்துரையை கேட்டு உள்ளத்தில் சற்று கலங்கினாலும், முழு மனதுடன் தன்னை கையளித்தார். வரலாறு என்பது வெறும் வெற்றிகளை கொண்டு மட்டும் உருவானது அல்ல. மாறாக, பலரின் தியாக உள்ளம், தன்னல மறுப்பு, கீழ்ப்படிதல், தாழ்ச்சி போன்ற புண்ணிய செயல்களால் அழகுபடுத்தப்பட்டது. அன்னை மரியாவும் தன் தாழ்ச்சியினால், கீழ்ப்படிதலால், வரலாற்றில் உன்னத தாயாக உயர்ந்து நிற்கிறார். உலக மக்களின் தாயாக, திருஅவையின் தாயாக, இன்றும் விளங்குகிறார். இத்தகைய சிறப்புமிக்க அன்னையை நினைத்து மகிழ்வோம். நம்மையும் இறைவனின் திட்டத்திற்கு முழுமையாக அர்ப்பணிக்க இவ்வேளையில் இறையருளை வேண்டுவோம். அன்னையைப் போல இறைவிருப்பத்தை அறிந்துகொள்ளக் கூடிய தூய மனதையும் அதை மகிழ்வோடும் ஏற்று செயல்படும் வரத்தையும்  இறைவனிடம் சிறப்பாக கேட்டு இன்றைய நாளில் ஜெபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...