திங்கள், 8 மார்ச், 2021

அன்னை இல்லம்...(9.3.2021)

நன் மதிப்போடு நல்லவர்களாக வாழ விரும்பும் அன்பர்களே... வணக்கம்.

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்.
வாழ்க்கை என்பது ஒரே கதைதான் ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைப்பை இடுகின்றனர்.
நமக்கு ஒருவர் இரக்கம் காட்டும் போது நாம் அடுத்தவருக்கு இரக்கம் காட்ட வேண்டும் ஆனால் அதை விட்டு விட்டு  அடுத்தவருக்கு இரக்கம் காட்ட மறுக்கும் செயலை இறைவன் இன்று சாடுகிறார்.

இச்செயல் எங்கோ நடப்பது அல்ல மாறாக அனுதினமும் நமது குடும்பங்களிலும் இச்செயலானது நடந்து கொண்டுதான் இருக்கிறது. 
ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழுங்கள் என்பது இன்று ஒருவர் மட்டுமே விட்டுக்கொடுத்து போகவேண்டும் என்ற சூழலில் தான் பல குடும்பங்கள் இன்று  உள்ளன.
 இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம் என்ற வார்த்தைகள் காதில் பல இடங்களில் இருந்து வந்து ஒலித்தாலும் இரக்கம் என்னவோ நமது செயலில் வெளிப்படுவது இல்லை.

ஒருவன் ஆசையாக மிக உயர்ந்த மாட மாளிகை போல் ஒரு வீட்டை கட்டினார். வீட்டிற்கு அவன் வைத்த பெயர் அன்னை இல்லம் ஆனால் அவன் அன்னை இருப்பதோ முதியோர் இல்லத்தில். இதுதான் இன்றைய எதார்த்தமான வாழ்க்கையாக உள்ளது. நம்மில் பலர் பெரும்பாலும் இரக்கத்தை பற்றி பேசுகிறோம். ஆனால் நமக்கு நெருங்கிய உறவுகளிடமும்  கூட பல நேரங்களில் நம்மால் இரக்கத்தை காட்ட முடிவதில்லை. இரக்கம் என்பது பேசும் பொருள் அல்ல அது செயலாக்கப்பட வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் கூட தங்களின் இரக்கமற்ற செயலால் ஆண்டவரை விட்டு அந்நியப்பட்டுப் போன இஸ்ரயேல் மக்கள் தங்கள் செயல் குறித்து வருந்தி மனமாற்றம் பெற்றவர்களாக முழுமையான நம்பிக்கையோடு முழு உள்ளத்தோடு ஆண்டவரிடம் திரும்பி வந்து ஆண்டவரின் இரக்கத்தை நாடுகிறார்கள். அதுபோலவே நற்செய்தி வாசகத்தில் இரக்கமற்ற முறையில் செயல்பட்ட ஒருவனைப் பற்றியும் இறைவார்த்தை வழியாக இறைவன் நம்மோடு உரையாடுகிறார்.
ஆண்டவர் காட்டும் இரக்கத்தை நாம் நமது வாழ்வில் செயலாக மாற்றுவோம். அப்போது இரக்கமற்ற நம் இதயம் இரக்கமுள்ள இயேசுவின் இதயமாக மாறும்.

இரக்கத்தோடு வாழ அனைவரும் இணைந்து புனித அசிசியாரின் அமைதி மன்றாட்டு வழியாக இறை அருளை தொடர்ந்து வேண்டுவோம்.

ஆண்டவரே என்னை உமது அமைதியின் கருவியாக்கும்.
வெறுப்பு உள்ள இடத்தில் அன்பையும்.
மனவருத்தம் உள்ள இடத்தில் மன்னிப்பையும்.
ஐயம் உள்ள இடத்தில் நம்பிக்கையும்.
நம்பிக்கையற்ற இடத்தில் நம்பிக்கையையும்.
இருள் உள்ள இடத்தில் ஒளியையும்.
துன்பம் உள்ள இடத்தில் மகிழ்ச்சியையும்.
நான் விதைத்திட அருள் புரியும்.
ஓ தெய்வீக குருவே
ஆறுதலைத் தேடுவதை விட 
ஆறுதல் அளிக்கவும்.
பிறரால் புரிந்து கொள்ளப் படுவதை விட 
பிறரை புரிந்து கொள்ளவும்.
அன்பு செய்யப் படுவதை விட பிறரை அன்பு செய்யவும்.
எனக்கு அருள் புரியும்.
ஏனெனில் 
கொடுக்கும் போது தான் 
நாங்கள் பெறுகின்றோம்.
மன்னிக்கும் போது தான்
நாங்கள் மன்னிக்கப்படுகிறோம்.
இறப்பதில்தான் முடிவில்லா வாழ்வுக்குப் பிறக்கின்றோம்.
 ஆமென் 

1 கருத்து:

  1. நமது இல்லமும் உள்ளமும் இரக்கத்தால் நிறைந்து இயேசுவின் உள்ளமாக மாறிட நமது துன்பங்களை நமது வேதனைகளை ஆண்டவரிடம் ஒப்புக் கொடுத்து அவரின் இதய அன்பினால் நம்மையும் நம்மை சுற்றி வாழும் அனைவரையும் அரவணைத்திட நம்மை அன்போடு அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு நமது அன்பின் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...