புனித வியாழன்
முன்னுரை:
அன்பிற்கினிய இறைமக்களே!
இன்று ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலியைக் கொண்டாட ஒரே குடும்பமாகக் கூடி வந்துள்ளோம். புனித வியாழன் எனப்படும் இந்த நன்னாளை முப்பெரும் விழாவாகச் சிறப்பிக்க அழைக்கப்படுகிறோம். இதில் முத்தாய்ப்பாய் அமைவது ஆண்டவர் இயேசு தனது சீடர்களின் பாதங்களைக் கழுவும் நிகழ்வு. அடிமைகள் அரசரின் பாதங்களைக் கழுவ வேண்டும் என்கிற கோட்பாட்டை உடைத்தெறிந்துவிட்டு, அரசர்க்கெல்லாம் அரசரான இயேசு தனது சீடர்களின் பாதங்களைக் கழுவுவதன் மூலம் தாழ்ச்சியின் முழுவுருவாய் விளங்குகிறார். நம்மையும் தாழ்ச்சியுள்ளவர்களாக வாழ அழைக்கிறார். இரண்டாவதாக, இயேசு நற்கருணையை நிறுவிய நாள். அப்பத்தைப்பிட்டு தனது சீடர்களுக்குத் தருவதன் வழியாக, பகிர்தலின் அவசியத்தை உணர்த்துகிறார். இன்றைய அன்றாட வாழ்வில் உணவு இல்லாமல் உடல் பசியாலும், அன்புகிடைக்காமல் உள்ளப்பசியோடும் நடைபிணமாய் வாழ்வோர் நம்மில் ஏராளம். உணவையும், அன்பையும் அவர்களோடு பகிர்ந்து வாழ அழைக்கப்படுகிறோம். மூன்றாவதாக, நற்கருணை நிறுவப்பட்ட இந்நாள், குருத்துவத்தின் பிறந்தநாள். தலைமைக்குருவான இயேசுவின் வாரிசுகள் நமது குருக்கள். நமக்காகத் தினந்தோறும் திருப்பலி ஒப்புக் கொடுத்து, நமக்காக இறைவனிடம் மன்றாடுபவர்கள். இன்றைய நவீன உலகில், சவால்கள் நிறைந்த இப்பணியைச் செய்யும் நமது குருக்களுக்காக மன்றாடிட நாம் அழைக்கப்படுகிறோம்.
இன்றைய வழிபாடு நான்கு பகுதிகளைக் கொண்டது.
1. இறைவார்த்தை வழிபாடு
2. பாதம் கழுவும் சடங்கு
3. நற்கருணை வழிபாடு
4. நற்கருணை இடமாற்றப் பவனி.
இந்த வழிபாடுகளில் பக்தியுடன் கலந்து கொண்டு தாழ்ச்சி, பகிர்தல், பணிவாழ்வு போன்ற விழுமியங்களை நமதாக்கிக் கொண்டு இறைஆசீர் பெற்றவர்களாய் வாழ இறையருள் வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.
முதல் வாசக முன்னுரை: விப 12: 1-8, 11-14
இனியவர்களே! இஸ்ரயேல் மக்களை அடிமைப்படுத்திய எகிப்தியரின் நாடெங்கும் இறைவன் கடந்து சென்ற நாளே இப்பாஸ்கா விழா. இது ஆண்டவரின் பாஸ்கா. ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் இஸ்ரயேல் மக்கள் எவ்வாறு காப்பாற்றப்பட்டனர் என்பதையும், ஆண்டவரின் பாஸ்கா உணவை எவ்வாறு உண்ண வேண்டும் என்பதையும் மோசே மற்றும் ஆரோனுக்கு இறைவன் எடுத்துரைப்பதை தான் இன்றைய முதல்வாசகத்தின் வழியாக கேட்க உள்ளோம். எனவே கவனத்தோடு செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை: 1 கொரி. 11: 23-26
நமது கிறிஸ்தவ வாழ்வின் மையம் என்பது கோதுமை அப்ப வடிவிலும், திராட்சை இரச வடிவிலும் இயேசுவின் திருஉடலையும், திருஇரத்தத்தையும் ஒவ்வொரு பலியிலும் உட்கொள்ளும் நாம், இறைமகன் இயேசுவின் இறப்பையும் உயிர்ப்பையுமே எடுத்துக் கூறுகின்றோம். இதுவே நம் நம்பிக்கை. இதையே நாம் நம் ஆண்டவரிடமிருந்து பெற்றுக் கொண்டோம் எனக் கூறும் பவுலடியாரின் வார்த்தைகளுக்கு செவிமடுப்போம். அதை வாழ்வாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு.
பாதம் கழுவும் சடங்கு:
பாதம் கழுவுதல் என்பது யூதமக்களின் வழக்கப்படி வீட்டுத்தலைவன் பணியின் நிமித்தம் வெளியே சென்று வீடு திரும்பும்போது அடிமை தன் தலைவனின் பாதங்களைக் கழுவுவது வழக்கம். அடிமை, தலைவன் என்ற பாகுபாடுகளை உடைத்தெறிந்திட இயேசு, அடிமை மேற்கொண்ட பணியைத் தேர்ந்தெடுக்கிறார். தங்களுள் யார் பெரியவர்? என்ற விவாதம் சீடர்களிடையே எழுந்தபோது பணிவிடை பெற அன்று, பணிவிடை புரியவே வந்தேன்; உங்களையும் பணிவிடை புரிந்திடவே அழைத்துள்ளேன் என்று மொழிந்த இயேசு, தன் சீடர்களின் பாதங்களைக் கழுவி அவர்களுக்கு முன்மாதிரி காட்டுகிறார்.
நான் உயர்ந்தவன், பல பட்டங்களைப் பெற்றவன், எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று பாகுபாட்டை உருவாக்காது, எல்லாரும் எல்லாமே பெறவேண்டும் என்ற மனநிலையில், ஒருவர் மற்றவரது நலனுக்காய் பணிபுரியவேண்டும் என்ற சித்தாந்தத்தை இயேசு நமக்கும் கற்றுக் கொடுக்கிறார். இப்போது இயேசுவின் பிரதிநிதியான குரு இயேசுவின் 12 சீடர்களைக் குறிக்க நாம் தேர்ந்தெடுத்து அழைத்துவந்துள்ள பன்னிருவரின் பாதங்களைக் கழுவ இருக்கிறார். இயேசு காட்டிச் சென்றபாதையில் பயணிக்க திருமுழுக்கு பெற்ற நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தவர்களாய் இத்திருநிகழ்வில் பக்தியுடன் பங்குபெறுவோம்.
நற்கருணை இடமாற்றப்பவனி:
இயேசு தம் சீடர்களோடு தனது இறுதி இராவுணவை உண்டபின் கெத்சமனி தோட்டத்திற்கு சென்று இறைத்திட்டத்தை நிறைவேற்றவும், துன்பத்தைத் தாங்கவும் தேவையான ஆற்றலை, தந்தையாகிய இறைவனிடம் கேட்டு செபித்தார். அந்த நிகழ்வை நினைவுகூறும் விதமாய்தான் இந்த நற்கருணை இடமாற்றப்பவனி நடைபெறுகிறது. சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் என்று தன் சீடர்களிடம் கூறிய இயேசு இன்று நம்மிடமும் கூறுகிறார் நமது பதில் என்ன?. நமக்காய், நமது உடனிருப்புக்காய் ஆவலோடு காத்திருக்கும் இயேசுவிடம் நம்மையும், நமது குடும்பங்களையும் ஒப்புக்கொடுக்கும் போது, துணிவோடு துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றலை இறைவன் நமக்கும் தருவார் என்ற நம்பிக்கையோடு இந்த நற்கருணை இடமாற்றப் பவனியில் பங்கேற்போம்.
மன்றாட்டுக்கள்:
1) நல்லாயனாகிய இறைவா! குருத்துவம் உருவாக்கப்பட்ட இந்தப் புனித நாளில் எம் திருச்சபையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை. ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவறத்தார் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். இவர்கள் அனைவரும் நல்ல உடல், உள்ள, ஆன்ம நலம் பெற்று உம் துணையோடும், தூய ஆவியின் வழிகாட்டுதலோடும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள எங்களை நிறைவாழ்வை நோக்கி நடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2) வழிநடத்தும் வள்ளலே எம் இறைவா! எங்களுடைய பங்குத்தந்தை மற்றும் எங்கள்; மறைமாவட்டத்தில்; உள்ள அனைத்து அருட்தந்தையர்களுக்காகவும் மன்றாடுகிறோம். சிறப்பாக எங்கள் பங்குத்தந்தையோடு நீரே உடனிருந்து எங்கள் பங்கின் வளர்ச்சிக்கும், பங்கு மக்களாகிய எங்களின் ஆன்மீக வளர்ச்சிக்கும் அவர் முன்னெடுக்கும் செயல்களை ஆசீர்வதிக்கவும், எம்மறைமாவட்டம் இன்னும் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெறவும் அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3) அன்பே உருவான இறைவா! பகிர்தலின் விழாவாகிய இன்று எங்கள் நாட்டில் உள்ள ஏழைகள், நோயாளிகள், ஒடுக்கப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். எங்கள் நாட்டின் வளங்கள் அனைத்தும் சமமாகப் பகிரப்படவும், அனைவரும் அனைத்து நலன்களும் பெற்று சமத்துவ சமூகம் எம்மில் மலரவும், எம்மிடையே இறையருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4) தாயும் தந்தையுமான இறைவா! எங்கள் பங்கில் உள்ள அனைத்து குடும்பங்களுக்காகவும், எங்கள் ஊரில் உள்ள அனைத்து குடும்பங்களுக்காகவும் மன்றாடுகின்றோம். நீரே அனைத்து குடும்பங்களுக்கும் தலைவராக இருந்து வழிநடத்திடவும், எங்களின் தேவைகள், ஏக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றிடவும், எங்களின் வாழ்வு முழுவதையும் உமது நலன்களால் நிறைவு செய்யவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5) அழைத்தலின் ஆண்டவரே எம் இறைவா! எம் பங்கில் உள்ள சிறுவர், சிறுமியர், இளைஞர், இளம்பெண்கள் அனைவரையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். உம் வழியைப் பின்பற்றி உம் பணிசெய்ய அழைக்கும் உம்முடைய அன்புக்குரலுக்குச் செவிகொடுக்;க அவர்களின் உள்ளங்களையும் பக்குவப்படுத்தவும், எம் பங்கில் உம்முடைய அழைத்தல் பெருகி உம்பணி செய்யும் நல்ல குருக்களும், கன்னியர்களும் எம் பங்கில் உருவாக அருள் தர வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவரோடு இணைந்து அவரின் ஆசியால் தங்களின் பணிகள் சிறக்க உங்களுக்காக செபிக்கின்றோம்!
பதிலளிநீக்கு