சனி, 6 மார்ச், 2021

வாருங்கள் சட்டத்தை உள்ளத்தில் எழுதுவோம்... (7.3.2021)

வாருங்கள் சட்டத்தை உள்ளத்தில் எழுதுவோம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே 

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
உண்மையை விட பரபரப்பானது பொய்.... பலவிதமான பொய்களை கூறி, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி நாங்கள் மட்டுமே நேர்மையானவர்கள் என்று கூறி ஆட்சியையும் அதிகாரத்தையும் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனுதினமும் பரபரப்பான நிகழ்வுகளோடு நகர்ந்து கொண்டிருக்கும் நம் நாட்டின் தற்போதைய நிலையில் இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நம்மை சட்டங்கள் குறித்து சிந்திக்கவும் செயலாற்றவும் அழைப்புக் தருகின்றார்.

சட்டங்கள் என்பது மனிதன் அறநெறியோடு இச்சமூகத்தில் வாழவேண்டும் என்ற உன்னதமான  சிந்தனையின் அடிப்படையில் அறநெறியோடு வாழ தனக்குத்தானே மனிதன் உருவாக்கிக் கொண்டவை ஆகும். இவ்வடிப்படையில் இறைவனால் முன்மொழியப்பட்டு மோசே வழியாக அன்று இஸ்ரவேல் மக்களுக்கு வழங்கப்பட்ட சட்டம்தான் பத்து கட்டளைகள். இதனைப் பற்றி தான் இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம்.
பத்துக்கட்டளைகள் பத்தும் மனிதன் அறநெறியோடு வாழ வேண்டும் என்பதற்காக உருவானவை. ஆனால் அறநெறியை முன்னிறுத்தி உதயமான சட்டங்களை எல்லாம்  மனிதன் அழிக்கும் சட்டங்களாக மாற்றி விட்டான். பொய் சொல்லாதே என சட்டம் கூறினால் கடவுளை பற்றி பொய் சொல்வதை தர்மமாக கருதினான் மனிதன். மனிதனை மனிதன் மதிக்கத் தவறி மனிதனுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களை கொண்டு  ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடிமைப்படுத்தவும் தனக்கு கீழாக நடத்தவும் பயன்படுத்திக் கொண்டான். உண்மையான சட்டத்தின் நோக்கம் அடிமைப்படுத்துவது அல்ல மாறாக அன்பால் அனைவரையும் அரவணைத்து வாழ்வதாகும்.

ஒருமுறை  ஆலயப் பணி செய்து கொண்டிருந்த ஒருவர் தன்னுடைய தெய்வத்திற்கு பலவிதமான விலை உயர்ந்த ஆபரணங்களை எல்லாம் அணிவித்து அழகு பார்த்தார். மறுநாள் ஆலயத்திற்கு வந்து கதவைத் திறந்தபோது தெய்வத்திற்கு அணிவிக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த ஆபரணங்கள் எல்லாம் யாரோ ஒருவரால் களவாடப்பட்டு இருந்தது.  இதனைக் கண்டு கோபமுற்ற அந்த ஆலய பணியாளர் ஆண்டவனை நோக்கி நீயெல்லாம் ஒரு இறைவனா? உனக்கு அணிவித்த நகைகளை உன்னால் பாதுகாக்க இயலவில்லையே, பிறகு எப்படி மனிதர்களை பாதுகாப்பாய்? என்று கோபத்தோடு இறைவனிடம் தனது கதறலை வெளிப்படுத்தினான்.அவன் திட்டும் போது அமைதி காத்த இறைவன் அவனது கோபம் சற்று குறையும் போது அவன் முன்பாக காட்சி கொடுத்து மனிதா நீ விலை உயர்ந்த நகைகளின் மீது அதிக அன்பு கொண்டிருந்ததால் அது களவாடப்பட்ட போது நீ கோபம் கொண்டாய். என் பார்வையில் அந்த விலை உயர்ந்த ஆபரணங்களை விட நீயே எனக்கு முக்கியம் எனவேதான் உனக்கு ஆறுதல் கூற வந்துள்ளேன் என்றார்.  அந்த ஆலய பணியாளரும்  தனது செயல் குறித்து மனம் வருந்தி இறைவனிடம் சரண் அடைந்தார்.
இன்று நாம் வாழும் இந்த உலகத்தில் பெரும்பாலும் மனிதர்கள் இறைவன் பெயரால் வகுத்துள்ள  சட்டங்களை மையப்படுத்தி மனிதனை மனிதன் நசுக்கவும் இறைவன் பெயரால் தான் வாழவும் வளரவும் விரும்பி சகமனிதனை  அதற்கு பலியாக மாற்றுகிறான். ஆண்டவரின் பார்வையில் இச்செயல் முற்றிலும் தவறானது. மனிதர்கள் ஒவ்வொருவருமே அது யாராக இருந்தாலும் சரி யூதரானாலும் கிரேக்கரானாலும் அவர்களுக்கு கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமும் இருக்கின்றார். என்று இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது.  ஞானமாய் இருக்கும் இறைவன் நமக்கு நல்லது எது?, நாட வேண்டியது எது? என்பதையெல்லாம் ஒவ்வொரு நாளும் தன்னுடைய வார்த்தைகளின் வழியாக நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றார்.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட அன்று கடவுளின் ஆலயமான எருசலேம் தேவாலயத்தில் பலவிதமான பாகுபாடுகளை உருவாக்கிக்கொண்டு மக்களிடமிருந்து பணங்களை பறித்துக் கொண்டு மக்களை ஏழைகளிளும் ஏழையாக மாற்றிக் கொண்டிருந்த அந்த அநீதியான சூழல் ஆலயத்தில் அரங்கேறுவது கண்டு வருத்தமுற்ற இயேசு சட்டையைக் சுழற்றினார் சட்டத்தால் நயவஞ்சகத்தோடு மக்களை அடிமைப்படுத்தி அவர்களை நோக்கி... இன்றும் நாம் வாழும் சூழலில் கடவுளின் பெயரால் ஆங்காங்கே பல விதமான வன்முறைகளும் பிரித்தாளும் யுத்திகளும் தொடர்ந்து வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.  எனவே இச்சூழலில் நாம் உண்மை இறைவன் உணர்த்தும் உண்மைகளை இறைவார்த்தையின் அடிப்படையில் உணர்ந்துகொள்ள அழைக்கப்படுகின்றோம்.

 இறைவன் படைத்த இந்த உலகில் அனைத்தும் அதிசயமாக இருக்கும் போது மனிதன் உருவாக்கிக் கொண்டுள்ள சட்டங்கள் அதன் உண்மைத்தன்மை எது? என்ன? என்பதை அனுதினமும் ஆராய்ந்து செயல்பட நாம் அழைக்கப்படுகிறோம். இன்றும் நம் நாட்டில் இன்றும் விவசாயிகளின் நலனுக்கு என்று சொல்லி உருவாக்கப்பட்ட சட்டங்கள் உண்மையில் விவசாயிகளின் நலனை முன் நிறுத்தவில்லை என்பதை மையப்படுத்தி வீதிகளில் இறங்கி போராடி கொண்டிருக்கும் விவசாயிகளின் நிலையை நாம் நன்கு அறிந்திருப்போம் ... 
நாட்டில் ஆளும் அரசின் தவறை சுட்டிக்காட்டினால்  அதனை ஏற்றுக்கொண்டு சரி செய்வதை விட்டு விட்டு பேசியவரை சிறையில் அடைக்கவும் நிலையே இன்று சட்டத்தின் மகத்துவமாக போற்றப்படுகிறது...
இச்சூழலில் இறைவன் உள்ளார்ந்த ஆலயம் பற்றி பேசி உள்ளத்தில்  எழுதப்படவேண்டிய சட்டம் பற்றி நயமாக எடுத்துரைக்கிறார்.
இறைவன் நமக்குத் தந்த சட்டம் என்பது அன்பை அடிப்படையாகக் கொண்ட அன்பின் சட்டம்... அந்த அன்பின் சட்டத்தை உள்ளத்தில் எழுதுவோம்.... அதனை செயலாற்றுவோம்.... சட்டத்தால் அநீதிகள் இழைக்கப்படும் போது அதனை எதிர்த்து குரல்கொடுக்கும் இயேசுவின் உண்மை சீடர்களாகிட  இறையருளை வேண்டுவோம்...     
 

1 கருத்து:

  1. சட்டங்கள் மனிதனின் வாழ்வுக்கானவை. அவற்றை வாழ்வுபெற மட்டுமே பயன்படுத்துவோம். அவற்றால் பிறரை எடுக்காமல், வாழ்வு பெறச் செய்வோம் என அன்புடன் அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு நமது அன்பின் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...