செவ்வாய், 30 மார்ச், 2021

வாழ்வின் நோக்கம் அறிவோம்? (31.03.2021)

வாழ்வின் நோக்கம் அறிவோம்?

இறைவனால் அனுப்பப்பட்டு இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களே! வணக்கம்.

இன்றைய நாள் இறைவார்த்தைகளின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 
இன்றைய நாள் வாசகங்கள் இறைவன் நமக்குக் கொடுத்துள்ள கொடைகளை பற்றியும் அவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றியும் சிந்திக்க நமக்கு அழைப்பு தருகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் கற்றோரின் நாவையும், அறிவைப் பெறுவதற்கான ஆர்வத்தையும், அந்த அறிவினை உள்வாங்கிக் கொள்ள தேவையான செவியையும், இவற்றோடு கூட இன்னும் பல கொடைகளையும் இறைவன் நமக்கு தந்துள்ளார் என்பதை எடுத்துரைக்கிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் யூதாசு ஆண்டவர் இயேசுவை காட்டிக் கொடுப்பதற்காக 30 வெள்ளிக் காசுகளை பெற்றுக் கொண்டதையும் ஆண்டவர் இயேசுவை காட்டிக் கொடுக்க அவன் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்ததையும் எடுத்துரைக்கிறது.

இந்த உலகில் நம்மை பிறக்கச் செய்த இறைவன், நமது பிறப்பின் நோக்கத்தோடே, அதனை நாம் நிறைவேற்றும் பொருட்டே இவ்வுலகிற்கு அனுப்பி இருக்கின்றார்.

இறைவன் நமது வாழ்வில் நமக்கு வழங்கியுள்ள நற்கொடைகள் எவை? என்பதை இன்று சிந்திப்போம்.


நமது பிறப்பின் நோக்கத்தை நமது வாழ்வின் இலட்சியத்தை நாம் ஒவ்வொரு நாளும் நாம் நிறைவேற்றும் விதமாக இறைவன் நமக்கு கொடுத்து இருக்கின்ற நமது உடலுக்காக, உடல் உறுப்புகளுக்காக, சிந்திப்பதற்கு இறைவன் கொடுத்த அறிவிற்காக, இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். இவற்றின் மூலமாக நாம் பெற்றுக்கொண்ட நல்ல நண்பர்களையும் உறவுகளையும் இன்னும் நம் வாழ்வில் பெற்று கொண்ட அனைத்திற்காகவும் இறைவனுக்கு நன்றி கூறுவோம். 

இத்தகைய இறைவனின் கொடைகளைக் கொண்டு நமக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய, வளர்ச்சி தரக் கூடிய காரியங்களை செய்திட வேண்டும் என்று இன்றைய முதல் வாசகத்தின் வழியாக இறைவன் நமக்கு அழைப்பு தருகின்றார்.

இறைவன் நமக்கு வழங்கியுள்ள கொடைகளை நாம் எதற்காக பயன்படுத்துகிறோம்? என்பதை இன்று சிந்திப்போம்.
இன்று நாம் வாழும் உலகில் பொதுவாக மனிதனின் கைகளில் ஏதேனும் பணமோ அல்லது மதிப்பு மிகுந்த பொருட்களோ கிடைக்கும் பொழுது அதனை நாம் வெறுமனே விட்டு வைத்து விடுவதில்லை. அதனைக் கொண்டு மேலும் பலவற்றை சம்பாதித்துக் கொள்ள விரும்புகிறோம். இன்று பணத்தையும் பொருட்களையும் மேலாக மதிக்கின்ற நாம் இறைவன் நமக்கு வழங்கியுள்ள கொடைகளை உணர்ந்து இருக்கின்றோமா? என்று சிந்திப்போம். 
இன்று ஒரு படம் வரையவோ, பாடல் பாடவோ, ஒரு கருத்தைச் சொல்லவோ அல்லது வேறு ஏதேனும் சிறப்பான செயல்களைச் செய்யவோ அழைக்கப்படும் பொழுது அதனை என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு முன் வருகின்றோமா? அல்லது அடுத்தவர் காரியத்தை சிறப்பாக செய்வார் என்று கூறி ஒதுங்கி விடுகின்றோமா? 
எனக்கு அத்தகைய திறமைகள் ஒன்றும் கிடையாது. என்னால் முடியாது. மற்றவரே என்னை விட சிறந்தவர் என்று நம்மை குறைவாக மதிப்பிடுகிறோமா?
என்பதை இறை  ஒளியில் சிந்திப்போம்.

ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்; நீரே என் மாட்சி; என்னைத் தலைநிமிரச் செய்பவரும் நீரே.

திருப்பாடல்கள் 3:3

என்ற திருப்பாடல் வரிகளுக்கு ஏற்ப இறைவன் நமக்கு வழங்கியுள்ள கொடைகளுக்கு இன்றைய நாளில் நாம் நன்றி கூறுவோம்!

நமது நற்சிந்தனைகளால், நற்செயல்களால், கனிவான நல் வார்த்தைகளால், இறைவனுக்கு கொடையாக நம்மை அர்ப்பணிப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...