புதன், 23 நவம்பர், 2022

துன்பங்களுக்கு மத்தியிலும் ஆண்டவருக்குச் சான்று பகர்வோம்! (23-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
ஆண்டவர் இயேசுவின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கக் கூடிய நாம், துன்பங்களுக்கு மத்தியிலும் கடவுளுக்கு சான்று பகரக் கூடிய மனிதர்களாக இருப்பதற்கான ஒரு அழைப்பு இன்றைய இறை வார்த்தை வழியாக நமக்கு தரப்பட்டிருக்கிறது.

        ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக எந்த விதமான துன்பங்களையும் தாங்கிக் கொள்ளுகின்ற மனம் படைத்த மனிதர்களாக நீங்களும் நானும் நாளும் வளர வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. பல நேரங்களில் எதிர்பாராத துன்பங்களை சந்திக்கின்ற போது, மனம் உடைந்து போகக்கூடிய நமக்கு ஆறுதல் தருகின்ற விதத்தில் இன்றைய நாள் இறை வார்த்தை அமைந்திருக்கிறது. நாம் ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வை வாழுகிற போது, நம்மை பாதுகாப்பவராகவும்,  பராமரிப்பவராகவும், உடனிருந்து தேற்றுபவராகவும்,  கடவுள் இருக்கிறார் என்ற ஆழமான புரிதலை இன்றைய இறை வார்த்தை நமக்கு தருகிறது‌ துன்பங்களுக்கு மத்தியிலும்  கடவுளுக்கு உகந்த மனிதர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொண்டு, ஆண்டவரின் நாளில் அவரை எதிர்கொண்டு செல்ல, நம்மை நாமே தகுதிப்படுத்திக் கொள்ளக் கூடியவராக, ஆண்டவருக்குச் சான்ற  பகருகின்ற மனிதர்களாக நாளும் வளர்வதற்கான ஆற்றலை இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

செவ்வாய், 22 நவம்பர், 2022

புனித செசிலியாவின் இறை புகழ்ச்சி! (22-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
             ஆலயங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது திரு இசை. திருவழிபாட்டை சிறப்போடு நடத்துவதற்கு இசை என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இசையின் வழியாக ஆண்டவரின் இறை வார்த்தையை அகிலத்தில் உள்ளவர்களுக்கு அறிவிக்கக் கூடியவர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான ஒரு அழைப்பு இன்றைய நாளில் நமக்குத் தரப்படுகிறது. 

       பாடகர் குழுவின் பாதுகாவலியான செசிலியம்மாவின் திருவிழாவினை கொண்டாடக் கூடிய நாம் ஒவ்வொருவருமே, பாடல்கள் வழியாக கடவுளை போற்றிப் புகழ அழைக்கப்படுகிறோம். ஒருமுறை பாடுவது இருமுறை செபிப்பதற்கு சமம் என புனித அகுஸ்தினார் குறிப்பிடுவார். நாம் பாடல் வழியாக நமது உள்ளத்து உணர்வுகளையும், ஏக்கங்களையும், ஆண்டவரிடத்தில் எடுத்துரைக்கிறோம். 
        இத்தகைய பணியில் நாம் ஈடுபடுவதற்கு உதவியாக இருக்கக்கூடிய பாடகர் குழு நண்பர்களை நன்றியோடு நினைவு கூரவும், அவர்களுக்காக செபிக்கவும் இந்த நாளில் நாம் அழைக்கப்படுகின்றோம். செசிலியம்மாவின் திருவிழாவினை கொண்டாடுகின்ற இந்த நல்ல நாளிலே நாம் திருவழிபாட்டில் ஆர்வத்தோடு பங்கெடுக்க உதவி புரிகின்ற ஒவ்வொரு பாடகர் குழு உறுப்பினர்களுக்காகவும் கடவுளிடத்தில் மன்றாடுவோம்.

        இசையால் இன்னும் ஆர்வத்தோடு இறைவனை தேடவும், இறைவனை கண்டு கொள்ளவும் ஆற்றல் வேண்டியவர்களாய் இன்றைய நாளில் இறைவனிடத்தில் தொடர்ந்து இறை வேண்டலில் ஈடுபடுவோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

என் தாயும் சகோதர சகோதரிகளும் இவர்களே! (21-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்? என்று இயேசுவின் கேள்வியை வைத்து அன்னை மரியாவை புறம் தள்ளுகின்ற போக்கானது இன்று நம்மில் பலரிடத்தில் மேலோங்கி இருப்பதை நாம் காணலாம்.  ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தைகளை வெறும் கேள்வியோடு  நிறுத்தி விடாமல், அதனை கடந்து, இறைவார்த்தையை முழுமையாக வாசித்து, அன்னை மரியாவை குறித்து இயேசுவின் பார்வை, இயேசுவின் வார்த்தைகள் என்னவாக இருக்கிறது என்பதை ஆழமாக உணர்ந்து கொள்ள நீங்களும் நானும் அழைக்கப்படுகிறோம். இறை வார்த்தையை கேட்டு அதன்படி தம் வாழ்வை அமைத்துக் கொள்பவரே, என் தாயும் சகோதரரும் என, இயேசு குறிப்பிடுகின்றார். அன்று கபிரியேல் தூதரின் வழியாக கடவுளின் வார்த்தை அறிவிக்கப்பட்ட போது, நான் ஆண்டவரின் அடிமை என்று சொல்லி கடவுளின்   வார்த்தைக்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து, தன் வாழ்வையே கொடுத்த அன்னை மரியாவின் மகத்துவத்தை, இயேசு கிறிஸ்து அனைவரும் உணர்ந்து கொள்ள கூடிய வகையில் தெளிவுபடுத்தி இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். நீங்களும் நானும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் சகோதரர்களாக இருப்பதற்கான எளிய வழி, ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நமது வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதாக மட்டுமே அமைகிறது. 
                    நமது வாழ்வை ஆண்டவரின் வார்த்தைகளுக்கு ஏற்ற வாழ்வாக அமைத்துக் கொள்ளுவோம். ஆண்டவர் இயேசுவின் சகோதரர்களாக மாறிட, இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

இயேசு கிறிஸ்து அனைத்து உலகின் அரசர்! (20-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
பொதுக்காலத்தின் நிறைவு வாரத்தில் நாம் இருக்கின்றோம். இந்நன்னாளினை திரு அவையானது கிறிஸ்து அரசர் பெருவிழாவாக கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கிறது. அகிலத்தை ஆண்ட அரசர்கள் பலர் இருந்தாலும், அன்றும் இன்றும் எப்போதுமாக, கிறிஸ்தவர்கள் இயேசுவை அரசராக பார்க்கிறார்கள். ஒரு அரசன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான முன்பு உதாரணமாக இயேசு தன் வாழ்வில் இருந்தார் என்பதை அவரின் வாழ்வில் இருந்து நாம் அறிந்து கொள்ளுகிறோம்.  வரலாற்றின் பின்னணியை உற்று நோக்குகின்ற போது கூட,  இந்த உலகத்தில் நான் தான் உயர்ந்த அரசன் என்ற மனநிலையோடு வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்களுக்கு மத்தியில், அகிலத்திற்கே தலை சிறந்த அரசர், ஆண்டவர் இயேசு கிறிஸ்து மட்டுமே என்பதை திருஅவை வலியுறுத்தியதன் அடிப்படையில்,  இந்த  நாளானது உதயமானது. அகிலத்தின் அரசராக இருக்கின்ற  இந்த ஆண்டவரின் வருகையை ஆவலோடு நாம் ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம்.   கடந்த வாரம் முழுவதுமாக இந்த இறைவனின் வருகையை குறித்து ஆழமாக சிந்தித்தோம்.  இந்த நாளில் இந்த இறைவனை அரசராக ஏற்று, நடுநிலை தவறாது நீதி வழங்கக்கூடிய இந்த அரசரை எதிர்கொள்ள, நம்மை நாமே தகுதி உள்ளவர்களாக மாற்றிக்கொண்டு, இச்சமூகத்தில் ஒவ்வொரு நாளும் பயணம் செய்து ஆண்டவர் இயேசுவை சந்திக்கிற போது, அவருக்கு உகந்த மனிதர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான  அழைப்பினை  இன்றைய நாளானது நமக்கு வழங்குகிறது.  இந்த அகிலத்தின் அரசராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்கொள்ளுகிறபோது அவருக்கு உகந்த வாழ்வினை வாழ்ந்தவர்களாக, அவரது வார்த்தைகளை நம் வாழ்வாக மாற்றிக் கொண்டவர்களாக, அவரின் திரு முன்னிலையில் நிலைத்தருப்பதற்கான  ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் தொடர்ந்து மன்றாடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

அவர் வாழ்வோரின் கடவுள்! (19-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
ஆண்டவர் இயேசு கிறிஸ்து என் மண்ணில் வாழ்ந்து, பலவிதமான காரியங்களை செய்து இந்த மண்ணில் பலரால் கொலை செய்யப்பட்டு, இறந்து போனார். இறந்த இயேசு மூன்றாம் நாள் சொல்லியபடி உயிர்த்தெழுந்தார். இந்த இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக ஒவ்வொரு நாளும், நமது வாழ்வை நாம் அமைத்திருக்கிறோம். 
             இந்த உயிர்ப்பில் நம்பிக்கையற்ற மனிதர்கள் இயேசுவினிடத்தில் பல நேரங்களில் பலவிதமான உவமைகளின் வாயிலாக சட்டங்களின் அடிப்படையில், கேள்விகளை எழுப்பிய போது கூட, உயிர்ப்பு என்பது உண்டு என்பதை இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தினார். உயிர்ப்புக்குப் பிறராக நாம் எத்தகைய ஒரு உடலோடு இருப்போம்? எப்படிப்பட்ட நிலையில் இருப்போம் என்பதையெல்லாம் இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக அவர் தெளிவுபடுத்துவதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு உயிர்ப்பில் பங்கெடுக்க வருகின்ற நாம் ஒவ்வொருவருமே, அவருக்கு உகந்த ஒரு வாழ்வினை வாழ கடமைப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் நமது செயல்பாடுகள் அமைகிறதா?  என்ற கேள்வியை நாம் நமக்குள்ளாக எழுப்பிப் பார்த்தவர்களாய்,  மண்ணில் வாழ்கிற போது இயேசுவைப் போல, இயேசுவிடம் காணப்பட்ட நற்பண்புகளை நமது நற்பண்புகளாக மாற்றிக்கொண்டு, ஒவ்வொரு நாளும் இயேசுவின் பாதையில் பயணம் செய்ய இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

ஆண்டவரின் அழகைக் கண்டு ரசிப்போம்! (18-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
       
            இன்று தாய்த்திரு அவையானது புனித பேதுரு பவுலுக்கு நேர்ந்தளிக்கப்பட்ட பேராலயங்களை குறித்து சிந்திக்க நமக்கு அழைப்பு தருகிறது. பல்வேறு தியாகங்களை செய்து ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை பலருக்கும் அறிவித்த இந்த இரண்டு திருத்தூதர்களுடைய கல்லறையிலும் ஆலயம் எழுப்பப்பட்டது. அந்த ஆலயம் கட்டி எழுப்ப உதவிய ஒவ்வொருவரையும் இந்நேரத்தில் நன்றியோடு  நினைவு கூருவதற்கு திருஅவை இன்று அழைப்பு விடுக்கிறது. இந்த ஆலயங்களை நினைவு கூருகின்ற இந்த நல்ல நாளில், நாம் இருக்கின்ற, நமது பகுதியில் இருக்கின்ற ஆலயங்களை எல்லாம் கட்டி எழுப்புவதற்காக தங்களது உடல் பொருள் ஆவியை கொடுத்த, அத்தனை நல்ல உள்ளங்களையும் நன்றியோடு நினைக்கவும், இறை வேண்டலின் வீடாகிய இந்த இறைவனின் இல்லத்தை பயன்படுத்தி இறைவனோடு உள்ள உறவில் நாம் நிலைத்திருக்கவும் இன்றைய நாளில் இறைவன் நமக்கு அழைப்பு தருகின்றார்.

    இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாய், அழகுற கட்டி இருக்கின்ற ஆலயத்தின் அழகை கண்டு ரசிப்பதை விட, அதில் இருக்கின்ற ஆண்டவரோடு அமர்ந்து உரையாடுவதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

அமைதிக்கான வழியை அறிந்திருக்கிறோமா? (17-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 

        
இன்றைய முதல் வாசகமானது, திரு வெளிப்பாட்டு நூலில் இருந்து எடுக்கப்பட்டது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும், இறுதி நாட்களில் என்ன நடக்கும் என்பது குறித்தும் இந்த புத்தகத்தில் யோவான் கண்ட காட்சியில் குறிப்பிடப்படுகின்றன. 

      இந்தக் காட்சிகள் அனைத்துமே நமக்கு வலியுறுத்துவது, ஆண்டவர் இயேசுவின் நாள் வருகிற போது, அவரை எதிர்கொள்ள நம்மை நாம் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை, நமக்கு வலியுறுத்துகின்றன. 

            இன்றைய   நற்செய்தி வாசகத்தில் கூட ஆண்டவர் இயேசு கிறிஸ்து, எருசலேம் தேவாலயத்தின் அழிவை பற்றி பேசுகிறார். தேவாலயத்தின் அழிவு என அதை பார்ப்பதை விட, இந்த ஆலயத்தை நம்பிக்கொண்டு அதில் இருக்கின்ற சமய சடங்குகளை மட்டுமே பின்பற்றுவதில் தங்கள் வாழ்வு அடங்கி இருக்கிறது என வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு, இந்த சமயச் சடங்குகளை எல்லாம் கடந்த நிலையில், ஆண்டவர் இயேசுவின்  வார்த்தையை வாழ்வாக்குவதே வாழ்வின் இலக்கு என்பதே இயேசு எடுத்துரைக்கும் வண்ணமாக, இன்றைய நற்செய்தி வாசகம் அமைகிறது.
                    இந்த நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் , நமது வாழ்வை இயேசுவின் வார்த்தைகளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட ஒரு வாழ்வாக மாற்றிக்கொண்டு, ஆண்டவரின் நாள் வரும்போது அவரை எதிர்கொள்ள, நம்மை நாமே ஆயத்தப்படுத்திக் கொள்ள 
 இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

நமது கடமைகளை சரியாகவும் சிறப்பாகவும் செய்வோம்! (16-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 
இறை வார்த்தைகள் ஒவ்வொன்றுமே ஆண்டவர் இயேசுவின் வருகையை எதிர்நோக்கி இருக்கக்கூடிய நாம் அவரை எதிர்கொள்வதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அழைப்பை நமக்கு ஒவ்வொரு நாளும் வழங்கிக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில், இன்றைய இறைவார்த்தையானது தலைவர் வருகிற போது தன் பணியை, தன் கடமையை உணர்ந்து சிறப்பாக செய்திருக்கக்கூடிய பணியாளர்களாக நீங்களும் நானும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக நாம் அறிந்து கொள்கிறோம்.
       ஆண்டவரின் நாள் எப்போது வரும் என்பதை எவரும் அறியாது இருக்கின்றபோது, அவரின் வருகையின் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்களாக ஒவ்வொரு நாளும் நமது கடமையை உணர்ந்து நமது பணியினை நாம் சரிவரச் செய்ய இறைவார்த்தையின் வழியாக அழைக்கப்படுகின்றோம்.          

         இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொண்டு நம் கடமையை நாம் சரிவர செய்கிறபோது, தலைவர் வருகிற போது, ஆண்டவர் இயேசு இரண்டாம் வருகையின் போது அவரை எதிர்கொள்ள தகுதி உள்ளவர்களாக, நமது வாழ்வு அமையும் என்பதை இன்றைய இறை வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது. 
         இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கின்ற பொறுப்புகளையும் பணிகளையும் கடமையை உணர்ந்தவர்களாக, சரிவர செய்யக்கூடிய நபர்களாக நாம் இருப்பதற்கான ஆற்றலை  இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

செவ்வாய், 15 நவம்பர், 2022

இழந்து போனதை தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார்! (15-11-22)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 

        இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நாம் விழிப்பாய் இருப்பதற்கான அழைப்பு தரப்படுகிறது. ஆண்டவர் இயேசுவின் வருகை எப்போது என அறியாதிருக்கின்ற  சூழ்நிலையில், நாம் எப்போதும் ஆயத்த நிலையில் விழிப்போடு  இருக்க  அழைக்கப்படுகின்றோம். நமது வாழ்வை சுய ஆய்வு செய்து பார்த்தவர்களாய், நம்மிடம் இருக்கின்ற தீய எண்ணங்களை களைந்து எறிந்தவர்களாய், சக்கேயுவைப் போல மன மாற்றம் பெற்ற மனிதர்களாக, நாம் ஆண்டவர் இயேசுவை எதிர்கொள்ளவும்,  அவரைக் காண ஆவல் கொண்டவர்களாய், அவரை காணுகின்ற போது அவரை எதிர்கொள்வதற்கு நமது வாழ்வை நாம் தகுதியுள்ளவர்களாய் மாற்றிக்கொண்டு, அவருக்கு உகந்த மனிதர்களாக அவரை எதிர் கொள்வதற்கான ஆற்றல் வேண்டி
 இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

திங்கள், 14 நவம்பர், 2022

நமது நம்பிக்கையின் பார்வை விசாலமாகட்டும்! (14-11-22)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 

        ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையை குறித்து ஆவலோடு சிந்தித்துக் கொண்டிருக்க கூடிய இந்த நாட்களில், நாம் நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும் என்ற வாழ்வுக்கான பாடத்தை இன்றைய இறைவார்த்தை வழியாக இறைவன் நமக்கு வழங்குகின்றார். 

       இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம்பிக்கையோடு வந்த ஒரு பார்வையற்ற மனிதன் இயேசுவினிடத்தில் பார்வை பெற்று செல்வதை  நாம் வாசிக்க கேட்கின்றோம். 

      நம்பிக்கையோடு ஆண்டவரின் நாள் வரும்வரை நாம் காத்திருக்கவும், அந்த நம்பிக்கையில் நிலைத்திருக்கவும், இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம்.
 நம்பிக்கையில் நிலைத்திருந்து ஆண்டவரை எதிர்கொள்ள ஆற்றல் வேண்டி
 இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

ஞாயிறு, 13 நவம்பர், 2022

நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வை காத்துக் கொள்ளுங்கள்! (13-11-22)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 

இன்றைய நாள் இறை வார்த்தையானது, இறைவனுடைய வார்த்தைகளின் ஆழத்தை அதிகமாக உணர்ந்து கொண்டு, அந்த வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. 

        இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ராயேல் மக்கள் இடிக்கப்பட்டிருந்த தங்களுடைய ஆலயத்தை மீண்டுமாக கட்டி புதுப்பிக்கிறார்கள். புதுப்பித்த இந்த ஆலயத்தை குறித்து மகிழ்கின்ற அவர்கள், தங்களுடைய செயல்கள் அனைத்துமே சமயம் சார்ந்த செயல்களாக அமைத்துக் கொண்டு, ஆண்டவர் இயேசு கிறிஸ்து விரும்புகின்ற, கடவுள் தங்களுக்கு கற்றுக் கொடுத்த வார்த்தைகளின் அடிப்படையில் வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, சமயம் சார்ந்த சடங்குகளை பின்பற்றுவதை மட்டுமே தங்கள் வாழ்வின் இலக்காகக் கொண்டிருப்பதை தவறு என இறைவாக்கினர்கள் எடுத்துரைப்பதை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்கிறோம். 
இத்தகைய செயல்முறைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால் ஆண்டவரின் நாள் வரும்போது அனைவரும் தண்டிக்கப்படுவோம் என அச்சுறுத்துவதை இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக நாம் உணர்ந்து கொள்கிறோம். இந்த இயேசுவின் வருகை உண்டு. அவர் வருகிற போது, அவரை எதிர்கொள்ள நாம் தகுதி உள்ளவர்களாக மாற வேண்டும் என்று போதித்த பவுலின் வார்த்தைகளை தங்கள் மனம் போன போக்கில் புரிந்து கொண்டு, ஆண்டவரின் நாள் வரப்போகிறது என எண்ணிக்கொண்டு உழைக்காமல் சோம்பேறிகளாக இருந்தவர்களுக்கு, பவுல் தனது கடிதத்தின் வாயிலாக உழைக்க மனம் இல்லாதவர் உண்ணலாகாது என்று, சொல்லி உழைப்பின் மகத்துவத்தை எடுத்துரைத்து, சோம்பேறித்தனத்தோடு வாழ்வதை தவறு என சுட்டிக் காட்டுவதை, இரண்டாம் வாசகம் நமக்கு வெளிப்படுத்துகிறது. 

           இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட, ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நீங்கள் இந்த இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளுகிற போது, வாழ்வில் பலவிதமான இன்பங்களையும் துன்பங்களையும் சந்திக்க நேரிடும். அப்படி சந்திக்கின்ற போதெல்லாம், நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள். உங்கள் தலைமுடி ஒன்று கூட கீழே விழாது, என்று சொல்லக்கூடியவராய், தன் பணியை செய்கின்ற ஆண்டவரின் வார்த்தையை வாழ்வாக்குகின்ற மனிதர்களை, ஆண்டவர் ஊக்கமூட்டுவதாக நற்செய்தி வாசகம் அமைந்திருப்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். 

     இந்த வாசகங்கள் அனைத்துமே கடவுளின் வார்த்தைகளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக, நமது வாழ்வை ஆண்டவரின் வார்த்தைகளுக்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொள்ள நமக்கு அழைப்பு தருகின்றன. இந்த அழைப்பை நமது வாழ்வாக மாற்றிக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

சனி, 12 நவம்பர், 2022

தாம் தேர்ந்து கொண்டவர்களுக்கு கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரா? (12-11-22)

 ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 

இன்றைய நாள் இறை வார்த்தையானது, ஆழமான நம்பிக்கை கொண்ட மனிதர்களாக நாம் ஒவ்வொருவரும் நாளும் வளர வேண்டும் என்ற மைய சிந்தனையினை நமக்குத் தருகின்றது. நம்பிக்கையோடு நாம் ஆண்டவரிடத்தில் பலவிதமான மன்றாட்டுகளை எழுப்புகிற போதெல்லாம், பல நேரங்களில் இந்த இறைவன் நமது மன்றாட்டுக்கு செவி தராமல் காலம் தாழ்த்துகிறாரோ என்ற எண்ணமானது நம்மில் மலர்வது உண்டு.   

             ஆனால் நம்பிக்கையோடு தொடர்ந்து இறை வேண்டலில் நாம் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக இயேசு ஒரு உவமையை சுட்டிக் காட்டுகிறார். நேர்மையற்ற ஒரு நீதிபதியே தன்னை விடாமல் தொந்தரவு செய்து கொண்டிருக்கின்ற ஒரு பெண்ணுக்கு நீதி வழங்குகின்றார் என்றால்,  நம்மை படைத்து, பராமரித்து வருகின்ற இறைவன், தகுந்த நேரத்தில் நம் தேவைகளுக்கு, தகுந்த நேரத்தில் நம்  மன்றாட்டுகளுக்கு பதில் தரக்கூடியவராக இருப்பார் என்ற ஆழமான நம்பிக்கையோடு, நாம் இது நாள் வரை நமது வாழ்வில் சந்தித்த இன்ப துன்பங்களில் எல்லாம் உடனிருந்து வழி நடத்திய இறைவன், இனி வருகின்ற நாட்களிலும், நாம் நம்பிக்கையோடு கேட்பவற்றிற்கெல்லாம், தகுந்த நேரத்தில் பதில் தருவார் என்ற ஆழமான நம்பிக்கையோடு, நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆழமான சிந்தனையினை இன்றைய இறை வார்த்தை வழியாக , இறைவன் நமக்கு தருகின்றார். 

                 இந்த இறைவனுடைய வார்த்தைகளை இதயத்தில் இருத்திய மனிதர்களாக, முதல் வாசகம் சுட்டிக்காட்டுவதன் அடிப்படையில், நாம் நமது வாழ்வை, பிறர் அன்புப்பணி செய்வதில் அமைத்துக் கொண்டு, ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வை வாழவும், நம்பிக்கையில் நிலைத்திருக்கவும் இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

வியாழன், 10 நவம்பர், 2022

போதனையில் நிலைத்திருப்போரிடமே தந்தையும் மகனும் இருக்கிறார்கள்! (11-11-22)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!


               தொடக்கத்திலிருந்தே ஆண்டவர் இயேசு கிறிஸ்து அன்பு செய்யவும், ஒருவர் மற்றவரோடு அன்பு உறவில் நிலைத்திருக்கவும் வலியுறுத்தக் கூடியவராக இருக்கின்றார். இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது இந்த அன்பை அடுத்தவரோடு பகிர்கின்ற மனிதராக, தான் இருந்தது மட்டுமல்லாமல் தன்னோடு இருந்தவர்களும் அவ்வாறு இருக்க வேண்டும் என  வலியுறுத்தக் கூடியவராக இருந்தார். இன்றைய முதல் வாசகத்தில், பவுலும் அந்த அன்பு உறவில் நிலைத்திருப்பதற்கான வலியுறுத்தலை வழங்குவதை இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கிறோம். 

               இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட தொடக்கத்திலிருந்து பாவம் இந்த மண்ணில் பெருகிய போதெல்லாம், கடவுள் கோபம் கொண்டவராய் பலவிதமான அழிவுகளை இந்த உலகில் நிகழ்த்திய போது கூட, கடவுளின் அன்புக்குரியவர்கள் இருக்கத்தான் செய்தார்கள். 
           கடவுளின் அன்பானது இந்த உலகில் இருந்த பல நல்ல மனிதர்கள் மீது இருந்து கொண்டு இருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ளும் வண்ணமாக, இயேசு தொடக்க காலத்தில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் சுட்டிக் காண்பித்து, நோவாவின் காலத்தில் நோவா காப்பாற்றப்பட்டது போல, லோத்தின் காலத்தில் லோத்து காப்பாற்றப்பட்டது போல, நாம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கிக் கொண்டு, கடவுள் விரும்புகின்ற மனிதர்களாக, நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுகின்ற போது நமது வாழ்வும் ஆண்டவரால் காப்பாற்றப்படுகின்ற ஒரு வாழ்வாக அமையும் என்பதை இதயத்தில் இருத்திக் கொண்டவர்களாய், இயேசுவின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாக, இருக்கின்ற நாள் வரை அன்பைப் பகிர்ந்து அன்போடு வாழ்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசீர்வதிப்பார். 




     

இறையாட்சி உங்கள் நடுவே செயல்படுகிறது! (10-11-22)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

              இன்றைய முதல் வாசகமானது, திருத்தூதர் பவுல் சிறையில் இருந்த வண்ணமாக, பிலமோனுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து நாம் வாசிக்கின்றோம். நீ கடிதத்தில் அவர் ஒனேசிமை பற்றி குறிப்பிடுகின்றார். ஒனேசிம் என்ற மனிதன் பிலமோனிடத்தில் அடிமையாக இருந்த மனிதன். பவுல் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு அந்த வார்த்தையின் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, பவுலை பின் தொடரக்கூடிய ஒரு மனிதனாக இந்த ஒனேசிம் மாறிப் போகின்றார். 

         நாளடைவில் இயேசுவைப் பற்றி நற்செய்தி அறிவித்த காரணத்தினால், இந்த பவுல் சிறைக்குச் செல்கின்றார். தான் சிறையில் இருக்கின்ற பொழுது, தன்னிடம் இருக்கின்ற இந்த ஒனேசிமை மீண்டுமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவனை அடிமையாக நடத்தக் கூடாது. உன் சகோதரனாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு, பிலமோனுக்கு அவர் எழுதிய கடிதத்தைத் தான் இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்கின்றோம். 

         இந்த வாசகத்தின் பின்னணியோடு இன்றைய நற்செய்தி வாசகத்தை அணுகுகின்ற போது, இறையாட்சி பற்றி பலரும் பல விதமான தவறுதலான கருத்துக்களை கூறி, நம்மிடையே பலவிதமான குழப்பங்களை ஏற்படுத்துகிற போது, நாம் நமது வாழ்வில் நெறி தவறி விடாமல், ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டவர்களாக, நமது வாழ்வை இயேசு காட்டிய நற்செய்தியின் விழுமியங்களின் அடிப்படையில் அமைத்துக் கொண்டு ஒவ்வொருவரையும் அன்போடும் சகோதரத்துவத்தோடும், ஏற்றுக்கொண்டு இணைந்து வாழ வேண்டும். அத்தகைய ஒரு வாழ்வு தான் இறையாட்சிக்கான  அடித்தளம் என்பதை இயேசு சுட்டிக் காட்டுவதை இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் அறிந்து கொள்கிறோம். 

         இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில், ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 


இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு! (9-11-22)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

             இன்று தாய்த்திரு அவையோடு இணைந்து நாம் லாத்தரன் பேராலயத்தை நினைவு கூர்கிறோம். ஏன் ஒரு ஆலயத்தை நினைவு கூற வேண்டும் என்று வரலாற்றை பின்னோக்கி பார்க்கிற போது, தொடக்க காலத்தில் கிறிஸ்தவர்கள் எல்லாம் இயேசுவை அறிவிப்பதற்கு அஞ்சினார்கள். காரணம் பலவிதமான இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் ஆளானார்கள். எனவே யாரும் அறியாத இடங்களில் கூடி ஜெபித்தவர்களாக, இருந்தவர்களுக்கு அப்போதைய அரசன் கான்ஸ்டாண்டின், கிறிஸ்தவ மதத்தை அரச மதமாக அறிவித்து , தன்னுடைய அரண்மனையை ஆலயமாக மாற்றிக் கொடுத்தார். அதன் அடிப்படையில் இந்த லாத்தரன் பேராலயத்தில், பலவிதமான மன்றாட்டுகள் முன்னெடுக்கப்பட்டன. பலவிதமான திருத்தூதர்களுடைய புனிதர்களுடைய திருப்பண்டங்கள் அனைத்தும் இங்கு பாதுகாக்கப்பட்டன. 

    ஒவ்வொரு மறை மாவட்டத்திலும் ஆயரின் இருக்கை கொண்ட பேராலயம் இருப்பது போல, திருத்தந்தையின் இருக்கை கொண்ட பேராலயமாக இப்பேராலயம் விளங்கியது. எனவே இது முதன்மை வாய்ந்த ஆலயமாக கருதப்பட்டது. இந்த ஆலயத்தை நினைவு கூர்கின்ற இந்த நன்னாளில், நாம் நமது உடலாகிய ஆலயத்தை குறித்து சிந்திப்பதற்கான அழைப்பு தரப்படுகிறது. நாம் ஒவ்வொருவரும் கடவுள் தங்கும் ஆலயம் என விவிலியம் சுட்டிக்காட்டுகிறது.

           இந்த உடலாகிய ஆலயத்தை நாம் எவ்வாறு பேணுகிறோம்? ஆண்டவரின் வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொண்டவர்களாக, கடவுள் தங்குகிற இல்லமாக நமது உடல் இருக்கிறதா? என்ற கேள்வியை நாம் நமக்குள்ளாக எழுப்பிப் பார்ப்போம். 
    கடவுள் எங்கோ இருப்பவர் அல்ல; நம்முள் ஒருவராக நம்மிடையே இருப்பவர். நம்முள் உறைகின்ற இறைவனுக்கு தகுந்த வகையில் நமது வாழ்வு அமைய வேண்டும். நமது வாழ்வில் பலவிதமான ஏற்றத்தாழ்வுகளையும் தவறுகளையும் வைத்துக்கொண்டு, ஆண்டவர் குடிகொள்ளுகின்ற ஆலயம் நாம் என சொல்லுவது அர்த்தமல்ல. 

       ஒவ்வொரு நாளும் அனுதினமும் நம்மில் உறைந்திருக்கின்ற இறைவனுக்கு தகுந்த இடமாக நமது உள்ளத்தை மாற்றிட, இந்த நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம். நமது உடலாகிய ஆலயத்தை தூய்மைப்படுத்திக் கொண்டு, ஆண்டவரின் உறைவிடமாக  மாற்றிக்கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்! (8-11-22)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்து போது சென்ற இடமெல்லாம் நன்மை செய்தார் என விவிலியத்தின் துணை கொண்டு நாம் அறிந்து கொள்கின்றோம். 
இந்த இயேசுவைப் பின்பற்றுகின்ற நீங்களும் நானும், செல்லுகின்ற இடமெல்லாம் நன்மை செய்யவும், நல்லது எனப்படுவதை மற்றவருக்கு சொல்லித் தரவும், சொல்லுபவற்றை நாம் நமது வாழ்வில் பின்பற்றுவதற்குமான அழைப்பு இன்றைய நாளில் நமக்கு தரப்படுகிறது. 

      இன்றைய இறை வார்த்தைகள் அனைத்துமே ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை நாம் வாழ்வாக்கிக் கொள்வதற்கான அழைப்பை நமக்குத் தருகின்றன. நம்மைப் பார்த்து வளர்கின்ற குழந்தைகளுக்கு நாம் நற்பண்பை கற்றுக் கொடுக்கக் கூடிய நல்லதொரு முன்மாதிரிகளாக நிலைத்திருக்க வேண்டும் என்ற வாழ்வுக்கான பாடத்தை இறைவன் நமக்கு இன்று கற்றுத் தருகின்றார். 

     இறைவன் கற்றுத் தரக்கூடிய இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நாம் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, நமது வாழ்வு அடுத்தவருக்கு நன்மை பயக்கின்ற நல்லதொரு வாழ்வாக, முன்மாதிரியான வாழ்வாக, அமைவதற்கான ஆற்றலை வேண்டி இறைவனிடத்தில் இன்றைய நாளில் இணைந்து செபிப்போம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

புதன், 9 நவம்பர், 2022

நான் மனம் மாறி விட்டேன் என்று சொல்வாரானால், அவரை மன்னித்து விடுங்கள்! (7-11-22)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றி வாழுகின்ற நமது வாழ்வானது, மற்றவருக்கான முன்மாதிரியான வாழ்வாக அமைய வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது. நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நம்மை பார்த்து வளர்கின்ற மனிதர்களுக்கு முன்மாதிரிகளாக நீங்களும் நானும் இருப்பதற்கான அழைப்பு இன்றைய இறை வார்த்தை வழியாக நமக்கு தரப்படுகிறது.

ஆண்டவரின் வார்த்தைகளுக்கு ஏற்ற வகையில் நமது வாழ்வை அமைத்துக் கொண்டு, நன்னயம் மிக்க மனிதர்களாக, நல்லது செய்பவர்களாக, மற்றவர்களுக்கு நல்லதை சொல்லித் தரக்கூடிய மனிதர்களாக, இந்த சமூகத்தில் வலம் வர இறைவார்த்தை வாயிலாக இறைவன் அழைப்பு தருகின்றார். 

நமக்கு எதிராக குற்றம் செய்கின்ற மனிதர்களை மன்னிக்கின்ற மனம் படைத்த மனிதர்களாகவும், நம்பிக்கையோடு கடவுளின் வார்த்தையை பின்பற்றுகின்ற மனிதர்களாகவும், நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இறைவன் இன்றைய இறை வார்த்தை வழியாக நமக்கு அறிவுறுத்துகிறார். 

இந்த இறைவனின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்த மனிதர்களாக, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, இந்த இயேசுவை பின்பற்றுகிறேன் என்று வார்த்தை அளவில் சொல்லுவதை விட, இந்த இயேசுவின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 


செவ்வாய், 8 நவம்பர், 2022

இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்! (6-11-22)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
          கடவுள் நம்பிக்கைக்கு உரியவர். இந்த நம்பிக்கைக்கு உரிய இறைவன் மீது, ஆழமான நம்பிக்கை கொள்ள இன்றைய நாள் இறை வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது.  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நம்புகின்ற நாம் ஒவ்வொருவரும், 
இறப்பினும் வாழ்வோம் என்பது சாத்தியமான ஒன்று. நவம்பர் மாதம் முழுவதுமே நாம் இறந்த ஆன்மாக்களை நினைவு கூர்கின்றோம். இறப்புக்குப் பிறகாக என்ன நடக்கப் போகிறது என்ற  கேள்வியானது, உள்ளத்தில் பல நேரங்களில் எழுவது உண்டு. ஆனால், இறந்த ஒவ்வொரு நபருமே, ஆண்டவர் இயேசுவோடு இணைந்திருக்கிறோம் என்பதுதான் பவுல் அடியாரின் வாழ்வு மூலமாக, நாம் கற்றுக் கொள்கின்ற வாழ்வுக்கான பாடமாக உள்ளது.  

                        இன்றைய முதல் வாசகத்தில் கூட, சட்ட திட்டத்தைப் பின்பற்றுவதற்காக கடவுளின் சட்ட திட்டங்களை, நாங்கள் மீற மாட்டோம். எங்கள் உயிரைக் கூட இழக்கத் துணைவோம் என்றவாறு, ஒரு தாயானவள் தன்னுடைய மகன்களை ஊக்கமூட்டுவதையும், தன் வாழ்வை இழப்பதையும், இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். 


           இந்த ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை 
வாழ்வாக்குவது நம் வாழ்வின் இலக்கு என்பதை இந்த தாயிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாக இருக்கிறது.  நாம் அனைவருமே இந்த மண்ணில் வாழ்கிற போது, இன்பம் துன்பம் என்ற இரண்டுக்கு மத்தியிலும் சிக்கித் தவிக்கின்றோம். 


         பல நேரங்களில் இங்கு நிலையானது என  எண்ணுகின்ற அனைத்தும்  நிலையற்றது என்பதை உணர்ந்திருந்தாலும், பல நேரங்களில் நாம் கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்க தவறிப் போகின்றோம்.

         ஆனால் நாம் வாழுகின்ற இந்த மண்ணக வாழ்வில், கடவுளின் வார்த்தையை வாழ்வாக்குவதும், அவர் மீதான நம்பிக்கையில் நாளுக்கு நாள் வளர்வதுமே, நமது தாய் வீடாகிய விண்ணகத்தில் நமக்கு இடம் தரும் என்பதை, இன்றைய இரண்டாம் வாசகத்தின் வாயிலாக நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. 

இறப்புக்குப் பிறகாக நாம் எப்படிப்பட்ட உடலோடு இருப்போம் என்ற கேள்வியை, பல நேரங்களில் சதுசேயர்கள் எழுப்பியது உண்டு. சதுசேயர்களைப் பொறுத்தவரை, மறுவாழ்விலும் இறப்புக்குப் பிறகாக ஒரு வாழ்வு உண்டு என்பதில் நம்பிக்கை அற்றவர்களாக இருந்தார்கள். எனவே இயேசுவினிடத்தில் பல கேள்விகளை எழுப்பினார்கள். 


இறந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என, நம்புகிற நாம் ஒவ்வொருவருமே, இறந்து போன ஆன்மாக்கள் மாட்சி பொருந்திய உடலோடு உயிர்த்தெழுவார்கள். அப்படி உயிர்த்தெழுகின்ற ஒவ்வொருவருமே, ஆண்டவர் இயேசுவோடு இணைந்து மகிழ்ந்து இருப்பார்கள். 

இந்த இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாய், அவரின் வார்த்தைகளை வாழ்வாக்கிக் கொண்டு அவர் மீதான நம்பிக்கையில் நாளும் வளர்வதற்கான ஒரு அழைப்பு இன்றைய நாளில் நமக்கு தரப்படுகிறது. 

இந்த இறை வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை செதுக்கிக் கொண்டு, நம்பிக்கையின் நாயகர்களாக நாம் இந்த மண்ணில் வலம் வருவதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் மன்றாடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

யார் உங்களை நம்பி உண்மை செல்வத்தை ஒப்படைப்பார்? (5-11-22)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
இன்றைய வாசகங்கள் வழியாக, ஆண்டவர் இயேசு கிறிஸ்து நாம் இந்த உலகத்தின் பார்வைக்கோ, அல்லது கடவுளின் பார்வைக்கோ ஏற்றபடி வாழவேண்டும் என, தடுமாறிக் கொண்டிருக்கின்ற எதார்த்த வாழ்வை சுட்டிக் காண்பித்து,  ஒரு பணியாளர் இரு தலைவர்களுக்கு ஒரே நேரத்தில் பணிவிடை செய்ய முடியாது. எனவே உங்கள் வாழ்வை ஏதேனும் ஒருவருக்கு உரியதாக வைத்துக் கொள்ளுங்கள் என்ற ஆழமான சிந்தனையினை இறைவன் இன்று இறை வார்த்தை வழியாக நமக்கு வழங்குகின்றார். 

       பல நேரங்களில் நாம் இந்த உலகத்தின் இச்சைகளுக்கு இடம் கொடுத்தவர்களாய் பணத்தையும், பதவியையும், பட்டத்தையும் நாடக்கூடிய மனிதர்களாக இருந்து கொண்டிருக்கிறோம். அதே சமயம் இவை அனைத்தும் நிலையற்றவை என அறிந்திருக்கின்ற நாம், 
நிலையான இறைவனை நோக்கி நமது வாழ்வை அமைத்துக் கொள்ள  வேண்டும் எனவும் பல நேரங்களில் எண்ணுவது உண்டு. 
                 இந்த இரண்டுக்கும் இடையில் தடுமாறுகின்ற மனிதர்களாக  இருக்கின்ற நமக்கு பவுல் ஒரு முன்மாதிரியாக விளங்குகின்றார். பவுல் தன்னுடைய வாழ்வில் ஆண்டவர் இயேசுவை பற்றிய நற்செய்தியை அறியாத பலருக்கு அறிவிக்கின்றார். தன்னுடைய தேவைகளுக்காக அவர் எவரையும் சார்ந்து இருக்கவில்லை.

         வறுமையிலும் எனக்கு வாழத் தெரியும்; வளமையிலும் எனக்கு வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ, எதுவாயினும் எல்லா சூழ்நிலையிலும், நான் வாழ பழக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லக்கூடிய மனிதனாய், தான் நம்பி ஏற்றுக் கொண்ட ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது,
அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவராய், பல இன்னல்களுக்கு மத்தியிலும் இந்த ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை தன் வாழ்வாக மாற்றிக் கொள்ள முயற்சித்தவர், அவரைப் போல நாமும் நமது வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டும் என தன் வாழ்வு மூலமாக நமக்கு அழைப்பு விடுப்பதைத் தான்,  இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம். 

            இந்த வாசகங்களின் அடிப்படையில், நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்ப்போம். நாம் பவுலை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, நமது 
வாழ்வை இந்த ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குவதில் நிலை நிறுத்துவதற்கான ஒரு அழைப்பு இன்றைய நாளில் நமக்கு தரப்படுகிறது.

           இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை
செதுக்கிக்கொண்டு, இந்த உலகத்தின் பார்வைக்கு இடம் கொடுக்காமல், இயேசுவின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்தவர்களாய், 
நமது வாழ்வை செம்மைப்படுத்திட ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

வெள்ளி, 4 நவம்பர், 2022

பவுலைப் போல முன்மதியோடு செயல்படுவோம்! (4-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
இன்றைய இறை வார்த்தையானது முன்மதியோடு வாழ்வதற்கான ஒரு அழைப்பை நமக்குத் தருகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நேர்மையற்ற ஒரு செல்வந்தன் எப்படி முன்மதியோடு செயல்பட்டான் என்பதை சுட்டிக் காண்பித்து, நேர்மையற்ற ஒரு மனிதன் கூட முன்மதியோடு செயல்படுகின்ற போது நீங்களும் நானும் இந்த சமூகத்தில் முன்மதியோடு செயல்பட வேண்டும் என்ற வாழ்வுக்கான பாடத்தை இன்றைய இறை வார்த்தை வாயிலாக நமக்கு கற்பிக்கின்றார். 

                  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றிய பவுல் அடியாரும் கூட, தன் வாழ்வில் இந்த முன்மதியை கொண்ட மனிதனாகவே, தன்னிடம் இருந்த அனைத்தையும் இழக்கத் துணிந்த ஒரு மனிதனாக, இந்த இயேசுவை மட்டும் ஆதாயமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் கருத்தூன்றிய ஒரு மனிதனாக, தன் வாழ்வை அமைத்துக் கொண்டார் என்பதை விவிலியத்தின் துணை கொண்டும், இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாகவும் நாம் அறிந்து கொள்கிறோம். அப்படி முன்மதியோடு வாழ்ந்து, முன்மதியோடு இருந்து, நமக்கு முன்மாதிரியாகத்  திகழ்ந்த பவுல், தன்னைப் போல வாழ அழைப்பு விடுப்பதை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்கின்றோம். 

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொண்ட மனிதராக, தான் இதுவரை தேடி வைத்திருந்த பணம், பெயர், பட்டம், பதவி, புகழ் என்ற அனைத்தையும் புறம் தள்ளிவிட்டு, ஆண்டவர் இயேசுவை உரிமையாக்கிக் கொள்ள முன்மதியோடு செயல்பட்ட பவுலைப் போல, நீங்களும் நானும் முன்மதி மிக்க மனிதர்களாக இந்த சமூகத்தில் பயணம் செய்வதற்கான அழைப்பு, இன்றைய நாளில் நமக்கு தரப்படுகிறது. 
நாமும், நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில், அனுதினமும் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குவதில் முன்மதியோடு செயல்படக் கூடியவர்களாக மாறிட அருள் வேண்டி இறைவனிடத்தில்  இன்றைய நாளில் மன்றாடுவோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

வியாழன், 3 நவம்பர், 2022

நமது மன மாற்றம் பல மனங்களை மாற்றும்! (3-11-22)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய இறை வார்த்தையானது மன மாற்றம் அடைவதற்கான அழைப்பினை நமக்கு தருகிறது. மனம் மாறிய ஒரு நபரை குறித்து  கடவுள் மகிழ்கிறார் என்ற செய்தியானது, இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக நமக்கு தரப்படுகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்வதற்காக அனைத்தையும் குப்பை என கருதுகிறேன் என்ற பவுலடியார், தன் வாழ்வில் இந்த இயேசுவின் வார்த்தையை வாழ்வாக மாற்றிக் கொள்வதற்காக தன்னிடம் இருக்கின்ற அனைத்தையும் இழக்கத் துணிந்த ஒரு மனிதனாக இருந்தார் என்பதை நாம் முதல் வாசகத்தின் வாயிலாக அறிந்து கொள்கிறோம். 

இந்த பவுல் அடியாரை போல நீங்களும் நானும் ஆண்டவர் இயேசுவின்  வார்த்தைகளை வாழ்வாக்கிக் கொண்டு இந்த ஆண்டவரை மட்டுமே நாடிச் செல்லக்கூடிய மனிதர்களாக மாற வேண்டும் என்ற அழைப்பானது, இன்றைய நாளில் நமக்கு தரப்படுகிறது.

           இந்த இயேசுவுக்கு உகந்த ஒரு வாழ்வை நாம் வாழ வேண்டுமாயின், நல்லதொரு மனமாற்றம் அடைந்த மனிதர்களாக நாம் மாற வேண்டும். நமது மன மாற்றம் பல மனங்களை மாற்றும் என்பதை உணர்ந்து கொண்ட மனிதர்களாக, நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில், நல்லதொரு மாற்றம் பெற்றவர்களாக, ஆண்டவர் இயேசுவின் வார்த்தையை வாழ்வாக்கக் கூடிய மனிதர்களாகிட இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

அனைத்து ஆன்மாக்களின் பெருவிழா (2-11-22)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
         தாய்த்திரு அவையோடு இணைந்து, இன்றைய நாளில் நாம் இறந்து போன ஆன்மாக்களை  நினைவு கூருகிறோம். மண்ணில் வாழ்ந்த போது, நமக்கு முன்மாதிரிகளாக, பலவிதமான நற்பண்புகளை நம்மிடம் விட்டுச் சென்ற, மறைந்த நமது குடும்ப உறவுகள் ஒவ்வொன்றையும் நன்றியோடு நினைவு கூருவதற்கான நாள் இந்த நாள். 

இந்த மண்ணில் வாழ்ந்த போது, அவர்கள் மீது எத்தனையோ கசப்பான  எண்ணங்கள் நம் மத்தியில் இருந்தாலும், அவர்களின் பிரிவு நம்மில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கும். அவர் மீதான ஒரு வெற்றிடம், இன்றும் நமது குடும்பங்களில் நிலைத்திருக்கிறது. 
          நம்மோடு வாழ்ந்து, உண்டு, பழகி நம் வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை, தங்கள் வாழ்வால் நமக்கு வழிகாட்டிய , நமது குடும்பங்களில் வாழ்ந்து மரித்த, அனைத்து ஆன்மாக்களையும் நன்றியோடு நினைவு கூர்வோம். 

இறந்து போன ஆன்மாக்கள் அனைத்துமே ஆண்டவரிடத்தில் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்வோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறந்தார் ‌‌‌. இறந்த இயேசு மூன்றாம் நாள் சொல்லியபடி உயிர்த்தெழுந்தார். இந்த இயேசுவோடு இறந்து போன ஒவ்வொரு சகோதர சகோதரியும் உயிர்த்தெழுகின்றோம்.
தொடக்க கால திரு அவையில் இந்த உயிர்ப்பை குறித்து பலவிதமான பிரச்சனைகள் எழுந்தது.  ஆண்டவரின் வருகைக்காக காத்திருந்தவர்கள், மரணத்தை சந்தித்தபோது,  நம்பிக்கையாளர் பலர் கேள்வி எழுப்பினார்கள். இவர்களெல்லாம் ஆண்டவரின் வருகைக்கு காத்திருந்தார்கள். ஆனால் மரணத்தை சந்தித்து விட்டார்களே! இவர்களுக்கு உயிர்ப்பு உண்டா என்ற கேள்வி எழுந்த போது, ஆண்டவரின் இரண்டாம் வருகையின் போது இறந்த ஒவ்வொருவருமே, மாட்சி பொருந்திய உடலோடு உயிர்த்தெழுவோம் என திருத்தூதர்கள் கற்பித்தார்கள். அந்த கற்பித்தலின் அடிப்படையில் திருஅவையின் இந்த நம்பிக்கையில் நாமும் நிலை பெற்றிருக்கிறோம்.

நம்மோடு வாழ்ந்து மரித்த நமது உறவுகள் நமக்கு விட்டுச் சென்ற வாழ்வுக்கான பாடங்களை நினைவு கூர்ந்து நன்றியோடு அவர்களுக்காக இந்நாளில் இறைவனிடத்தில் இறை வேண்டல் செய்ய நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம். 
                  நம்மோடு வாழ்ந்த நமது குடும்ப உறவுகளை நினைவு கூர்வோம். விவிலியத்தில் காணப்படுகின்ற இறந்து போன செல்வந்தன், தன்னுடைய உறவுகளுக்காக நரகத்தில் துன்பப்படுகின்ற வேளையில், ஆபிரகாமை நோக்கி மன்றாடியது போல, நமது உறவுகளும் மரித்து, விண்ணகத்தில் இறைவனின் திருவடிகளில் அமர்ந்தவர்களாய் நமக்காக அனுதினமும் ஜெபிக்கின்றார்கள். அவர்களின் பரிந்துரை செபம் நமது குடும்பங்களுக்கு ஆசிகளை பெற்று தருகிறது என்ற ஆழமான நம்பிக்கையோடு, அவர்கள் விட்டுச் சென்ற நற்பண்புகளை நமதாக்கிக் கொள்ள, இன்றைய நாளில்
 இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

புதன், 2 நவம்பர், 2022

அனைத்து புனிதர்கள் பெருவிழா (1-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்று தாய்த்திரு அவையோடு இணைந்து நாம் அனைத்து புனிதர்களின் பெருவிழாவினை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த நல்ல நாளில் நாம் புனிதர்களை குறித்து சிந்திப்பதற்கு அழைக்கப்படுகின்றோம். மனிதர்களாக இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள், புனிதர்கள் என அழைக்கப்படக்கூடிய நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள். இந்த புனிதர்கள் எல்லோருமே நம்மை போல சாதாரணமான மனிதர்கள் தான். இந்த மண்ணில் வந்த போது நம்மைப் போல இன்ப துன்பங்களை தங்கள் வாழ்வில் சந்தித்தவர்கள். 
ஆனால் இன்ப துன்பங்களுக்கு மத்தியிலும், கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்குவதே தங்கள் வாழ்வின் இலக்கு எனக் கருதி, அந்த இலக்கினை நிறைவேற்றக்கூடிய பயணத்தில், எல்லாவிதமான இடர்பாடுகளையும் ஏற்றுக் கொண்டு, ஆண்டவர் இயேசுவை அறிவிக்க கூடியவர்களாகவும், ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கக் கூடியவர்களுமாக, இருந்தார்கள் என்பதை நாம் புனிதர்களின் வாழ்வில் இருந்து அறிந்து கொள்கிறோம். 

இன்றைய நாளில் மனிதர்களாக இம்மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய, நாமும் புனிதர்கள் என்ற நிலைக்கு உயர்வதற்கான வாய்ப்புகள் அனைத்தும் இறைவனால் நமக்கு தரப்பட்டிருக்கிறது. எனவே நமது வாழ்வை அடுத்தவருக்கு உகந்த ஒரு வாழ்வாக மாற்றி , ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை அறிவிக்கவும், அதனை வாழ்வாக்கக் கூடிய மனிதர்களாக நாமும் இந்த மண்ணில் வலம் வந்து, 
மனிதர்களாகிய நாம் புனிதர்களாக மாறிட இன்றைய நாளில்
 இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கைமாறை இறைவனிடமிருந்து பெறுவோம்! (31-10-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய இறை வார்த்தையானது, ஒரே எண்ணமும், ஒரே அன்புறவும், ஒரே உள்ளமும் கொண்டவர்களாக நாம் ஆண்டவரில் மகிழ்ந்திருப்பதற்கான அழைப்பை நமக்கு தருகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் நாம் மகிழ்ந்திருக்க வேண்டுமாயின், அவரது வார்த்தைகளை வாழ்வாக்க கூடியவர்களாக நாம் மாறிட வேண்டும் என்பதை மனதில் இருத்திக் கொள்வோம். 

இன்றைய நாளில் நமது வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய வாழ்வுக்கான நெறியாக, ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நீங்கள் பகல் உணவுக்கோ, இரவு உணவுக்கோ, உங்கள் நண்பர்களையோ, செல்வந்தர்களையோ அல்லது உங்கள் உறவுகளையோ அழைத்தால், அவர்கள் மீண்டும் உங்களுக்கு கைமாறு செய்வார்கள். கைமாறு செய்ய இயலாத நபர்களான ஏழைகளையும், உடல் ஊனமுற்றவர்களையும், அழைத்து அவர்களோடு உணவு அருந்துங்கள்.

 கைமாறு செய்ய இயலாத நபர்களுக்கு நீங்கள் செய்கின்ற உதவியின் வாயிலாக கடவுளிடமிருந்து கைமாறு பெறக் கூடியவர்களாக நீங்கள் இருப்பீர்கள் என்பதை, இறைவன் இன்றைய இறை வார்த்தை வழியாக நமக்கு வலியுறுத்துகிறார். 

இந்த இறைவன் வலியுறுத்துகின்ற வாழ்வுக்கான பாடம், பின்பற்றுவதற்கு எளிதாக இருந்தாலும், செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என எண்ணுகிற போது, நாம் சமூகத்தின் பார்வைக்கு அஞ்சக்கூடியவர்களாக,  இந்த சமூகத்தின் போக்கில் உயர்ந்தவர்களையும், மதிப்பு மிக்கவர்களையும், நண்பர்களையும், உறவுகளையும் அழைத்து, அவர்களுக்கு கைமாறு எதிர்பார்த்து உதவி செய்யக்கூடிய நபர்களாக , அவர்களோடு இன்பத்தையும் துன்பத்தையும் பகிருன்ற மனிதர்களாக, நாம் நமது வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கிறோம். 
ஆனால், ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள, இறைவன் இன்று நம்மை அறிவுறுத்துகிறார். இந்த இறைவனின் அறிவுறுத்தலை உணர்ந்து கொண்ட மனிதர்களாக, நல்லதொரு மாற்றத்தை முன்னெடுத்தவர்களாக ஆண்டவர் இயேசுவின் வார்த்தைக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட  இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

மன மாற்றம் பெற்றோமா! (30-10-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
கடவுள் இந்த அழகிய உலகத்தை படைத்தார். இந்த படைப்புகளின் மீது கடவுளின் ஆவியானவர் இருந்து, அனைத்தையும் இயக்கக் கூடியவராக இருக்கின்றார். இந்த ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்த மனிதர்களாக, நமது பார்வையை இயேசுவை நோக்கி பதித்துக்கொள்ள, இன்றைய நாள் இறை வார்த்தையானது நமக்கு அழைப்பு தருகிறது. 
இயேசுவை சந்திக்க விரும்பிய ஒரு மனிதனை, இயேசு சந்தித்தார். அவனின் வாழ்வு முற்றிலும் மாறுபட்டது என்பதை இன்றைய வாசகங்கள் வாயிலாக நாம் உணர்ந்து கொள்கின்றோம். சக்கேயு என்ற மனிதனின் பெயருக்கு , நேர்மையானவன் எனப் பொருள். ஆனால், அவனது வாழ்வோ நேர்மையற்றதனமாக இருந்தது. யூதர்களிடமிருந்து பணத்தினை வசூலித்து உரோமையர்களுக்கு கொடுக்க வேண்டிய பணியினை சிரமேற் கொண்டு செயல்பட்டாலும் , யூதர்களிடமிருந்து அதிகமான தொகையை வசூலித்து, வரியாக செலுத்த வேண்டியதை செலுத்திய பின், மீதமானதை தனக்கென சேர்த்து வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு மனிதனாக இருந்தான். 

இந்த மனிதனின் நேர்மையற்றதனத்தை எவரும் சுட்டிக் காட்டவில்லை. இயேசுவை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, குட்டையாக இருந்த மனிதன், அத்தி மரத்தின் மீது ஏறி அமர்ந்தான். இயேசு அவனை அன்னாந்து பார்த்து, "உன் வீட்டிற்கு நான் வருகிறேன்; உன்னோடு உணவருந்த இருக்கிறேன்" என்று சொன்னவுடனே, தன் வாழ்வை சுய ஆய்வு செய்து பார்த்தான். 

எல்லோரும் கண்டு வியக்கின்ற இந்த இயேசு கிறிஸ்து, என்னை அழைக்கின்றார். என் வீட்டிற்கு வருவதாக சொல்லுகின்றார். இவரை நான் என் வீட்டிலும், என் இதயத்திலும், ஏற்க நான் தகுதியுடையவனா என சிந்தித்தவராய், தன் வாழ்வை மாற்றிக் கொள்ள முயலுகிறார். நான் இதுநாள் வரை யாரிடமிருந்தும் ஏமாற்றி பலவற்றை அபகரித்து இருந்தாலும், அதை நான்கு மடங்காக திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லக்கூடிய ஒரு மனிதனாக, தன் வாழ்வை மாற்றக்கூடிய சக்கேயுவை நற்செய்தி வாசகம் நமக்கு படம் பிடித்து காட்டுகிறது. 
இந்த சக்கேயுவின் வாழ்வோடு நமது வாழ்வை ஒப்பிட்டு பார்ப்போம். அனுதினமும் ஆண்டவரை சந்திக்க வருகின்ற நாம், வெறுமனே சந்தித்து விட்டு செல்கிறோமா? அல்லது நாம் சந்திக்கின்ற இந்த இறைவனின் வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை சுய ஆய்வு செய்து, நல்லதொரு மாற்றத்தை நமக்குள் நாம் விதைத்துக் கொண்ட மனிதர்களாக, இந்த சமூகத்தில் அனுதினமும் பயணம் செய்கிறோமா? சிந்திப்போம்.


   நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, நாமே நமது செயல்பாடுகளை சரி செய்து கொண்டு, ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வை வாழ, சக்கேயுவின் வாழ்வு நமக்கு ஒரு முன்மாதிரியான வாழ்வாக அமைகிறது. இந்த முன்மாதிரியான வாழ்வை நமது வாழ்வாக மாற்றிக் கொண்டு பயணிக்க  இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

யாருக்கு முதலிடம்? (29-10-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய இறை வார்த்தையானது, நாம் முதன்மைப்படுத்த வேண்டியது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை என்ற ஆழமான சிந்தனையினை நமக்கு தருகிறது. திருத்தூதர் பவுல்  தனது வாழ்வில் அனைத்தையுமே இயேசுவுக்காக செய்கின்ற ஒரு மனிதராக இருந்தார். நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காக. நான் இறந்தாலும் அது கிறிஸ்துவுக்காக. அதுவே தன் வாழ்வின் ஆதாயம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஆண்டவர் இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட மனிதராக இயேசுவை முதன்மை படுத்தக்கூடிய ஒரு மனிதராக பவுல் இருந்தார் என்பதை பவுலின் வாழ்வில் இருந்து அறிந்து கொள்கிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட நாம் அழைக்கப்படுகின்ற போது, முதன்மையான இடத்தை நாடுவதை விட, கடைசியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். அப்போது முதன்மையான இடமானது நமக்கு வழங்கப்படும் என்பதை இயேசு சுட்டிக் காட்டுகிறார். 

               நமது வாழ்வில் நம்மை முன்னிறுத்தி பயணிப்பதை விட, ஆண்டவர் இயேசுவை முன்னிறுத்தி நமது செயல்களை அனுதினமும் அமைத்துக் கொள்ளுகிற போது, கடவுளின் பார்வையில் முதன்மையான இடத்தை பெறக்கூடிய நபர்களாக நாம் மாற முடியும் என்ற வாழ்வுக்கான சிந்தனையினை, இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு தருகின்றார். 

    இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்வதற்கான
ஆற்றலை இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

புனிதர்கள் சீமோன், யூதா ததேயு விழா! (28-10-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்று தாய்த்திரு அவையானது திருத்தூதர்களான சீமோனையும் யூதா ததேயுவையும் நினைவு கூர நமக்கு அழைப்பு விடுக்கிறது. லூக்கா நற்செய்தி 6ம் அதிகாரம், 16ம் வசனத்தில் நாம் சீமோனோடு , இந்த யூதா ததேயுவின் பெயர் இடம் பெறுவதை திருத்தூதர்களின் பட்டியலில் வாசிக்கலாம். இந்த இரு பெரும் திருத்தூதர்களுமே, விவிலியத்தில் அதிகம் பேசப்படாத நபர்களாகவே கருதப்படுகிறார்கள்.

 சீமானை குறித்து சொல்லுகிற போது, இவர் தீவிரவாதியாய் இருந்த சீமோன் என அடையாளம் காட்டப்படுகிறார். அன்றைய காலகட்டத்தில் உரோமையர்கள் யூதர்களை பலவிதமான இன்னல்களுக்கு உள்ளாக்கினார்கள். இந்த உரோமையர்களை எதிர்க்கின்ற யூதர்கள் ஒவ்வொருவருமே, தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டார்கள். அதன் அடிப்படையில் தான் இந்த சீமோனும் தீவிரவாதியாய் இருந்த சீமோன் என முத்திரை குத்தப்படுவதை வரலாற்றில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. 
அதுபோலவே இன்றைய நாளில் நாம் நினைவு கூர்கின்ற யூதா ததேயுவின் வாழ்வை குறித்து சிந்திக்கின்ற போது, விவிலியத்தில் அதிகம் பேசாத ஒரு நபராகவே இவர் தென்படுகிறார். ஆனால் இவர் இயேசுவினிடத்தில் பேசிய போது, நீர் ஏன் உம்மை மக்களுக்கு வெளிப்படுத்தாமல், எங்களுக்கு வெளிப்படுத்துகிறீர் என்ற கேள்வியை எழுப்புகிற போது, இயேசு அவருக்கு மறுமொழியாக, என்னை அன்பு செய்பவர் நான் சொல்வதை கடைப்பிடிப்பார்; கடவுள் அவரை அன்பு செய்வார்; நானும் அவரோடு வந்து குடி கொள்வேன் என்று சொல்லுகின்ற இறை வார்த்தையை விவிலியத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும். 

திருத்தூதர்களான சீமானும் சரி யூதா ததேயுவும் சரி, தங்கள் வாழ்வில் கிறிஸ்துவை பின்பற்றக்கூடிய நபர்களாக இருந்தார்கள். வெறுமனே இந்த இயேசுவை பின்பற்றாமல், இந்த இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாய், இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தியவர்களாய், தங்கள் வாழ்வை இந்த இயேசுவின் வார்த்தையை அறிவிப்பதற்காக அர்ப்பணித்தார்கள். 

இவர்களை முன்மாதிரிகளாக கொண்டு நாமும் ஆண்டவரின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டு தொடர்ந்து பயணிப்பதற்கான ஆற்றலை இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

நம்மை தேடும் இறைவன்! (27-10-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய நற்செய்தி வாசகமானது நமக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவை குறித்து இன்னும் ஆழமாக உணர்ந்து கொள்ள, அழைப்பு விடுக்கின்றது. கோழி தன் குஞ்சுகளை இறக்கையின் கீழ் அரவணைப்பது போல, கடவுள் நம்மை அரவணைத்து பாதுகாத்து வருகின்றார். இந்த இறைவனுடைய வார்த்தைகளை பல நேரங்களில் நாம் உதாசீனப்படுத்திவிட்டு, மனம் போன போக்கில் நமது வாழ்வை அமைத்துக் கொள்கிற போது, நாம் செல்லுகிற பாதை தவறு என்பதை, இறைவன் பல நபர்கள் வழியாக நமக்கு சுட்டிக்காட்டுகிறார். இந்த இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய், நம்மை நாம் சரி செய்து கொண்டு, மீண்டும் அவரிடத்தில் சரணாகதி அடைவதற்கு இன்றைய இறைவார்த்தை வழியாக நாம் அழைக்கப்படுகின்றோம். 
ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது, பலவிதமான பணிகளை பலதரப்பட்ட மக்களுக்கு செய்தார். இந்த இயேசுவை பின்பற்றக்கூடிய நாம் ஒவ்வொருவருமே, இந்த இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தியவர்களாய், நாம் காணுகின்ற மனிதர்களுக்கெல்லாம் இந்த இறைவனின் செய்தியை அறிவிக்கவும், அறிவிக்கின்ற அந்த செய்தியை நமது வாழ்வாக மாற்றிக் கொண்டு, தொடர்ந்து பயணிக்கவும் அழைக்கப்படுகிறோம். பல நேரங்களில் நமது வாழ்வு தடம் புரண்டாலும், கடவுள் நமக்கு கொடுக்கின்ற அழைப்பின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு , மீண்டும் மீண்டுமாக எப்படி தாய்க்கோழியின் குரலுக்கு குஞ்சுகள் செவி கொடுத்து, இறக்கைகளின் கீழ் வந்து அரவணைப்பை பெறுகிறதோ அதுபோல நாமும் கடவுளின் குரலுக்கு செவி கொடுத்து, நமது தவறிய வாழ்வை மாற்றிக்கொண்டு, மீண்டுமாக இறைவனிடத்தில் சரணாகதி அடைவதற்கான ஆற்றலை இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

செயலாக்கப்படும் இறை வார்த்தை! (26-10-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய நாள் இறை வார்த்தையானது, இறைவார்த்தையின் உண்மை தன்மையை உணர்ந்து கொண்ட மனிதர்களாக நாளும் இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நகர் நகராக ஊர் ஊராகச் சென்று, நற்செய்தியை அறிவித்தார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த இயேசுவின் நற்செய்தியை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக, நாம் அதனை வாழ்வாக்கக் கூடியவர்களாக நாளும் பயணிக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். 
இன்றைய முதல் வாசகத்தில் கூட திருத்தூதர் பவுல் எபேசு நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தில் பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்படிந்து வாழ வேண்டுமென ஒரு மனிதன் இந்த சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வண்ணமாக தனது நற்செய்தி பணியினை பவுல் ஆற்றியதை முதல் வாசகத்தின் வாயிலாக நாம் உணர்ந்து கொள்கிறோம். 

இந்த விவிலியத்தில் இருக்கின்ற அனைத்து பகுதிகளுமே நமது வாழ்வை நாம் நெறிப்படுத்திக் கொள்வதற்கான அழைப்பை நமக்கு தருகிறது.

                 இந்த அழைப்பை உணர்ந்து கொண்ட மனிதர்களாக நாளும் இறைவனது வார்த்தையை நமது வாழ்வாக மாற்றிக்கொள்ள இன்றைய இறைவார்த்தை நமக்கு அழைப்பு விடுக்கிறது. பல நேரங்களில் இந்த இறைவனுடைய வார்த்தையை கேட்கின்ற நபர்களாகவும், அறிவிக்கின்ற நபர்களாகவும் இருக்கின்ற நாம், அதற்கு செயல் வடிவம் தர மறந்து போகின்றோம். 
ஆனால், செயல் வடிவம் தருவது மட்டுமே கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வு என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. ஆண்டவரின் வார்த்தையை அறிவித்து அதன்படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுகிற போது தான், அது அர்த்தமுள்ள வாழ்வாக பார்க்கப்படுகிறது. அப்போது கடவுள் நம்மை ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்கிறார். வெறுமனவே இறை வார்த்தையை கேட்பவர்களாகவும், அறிவிப்பவர்களுமாக நாம் இருந்துவிட்டு, அதற்கு செயல் வடிவம் கொடுக்க தவறினோம் என்றால், கடவுள் நம்மை அறியாதவராகத்தான் இருப்பார் என்பதை நற்செய்தி வாசகம் நமக்கு தெளிவுபடுத்தி காட்டுகிறது. 

இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் சுய ஆய்வு செய்து பார்ப்போம். ஆண்டவரின் வார்த்தையை அறிவிக்கவும், அறிவிக்கின்ற வார்த்தையை வாழ்வாக்கவும் ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் தொடர்ந்து பக்தியோடு மன்றாடுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

இறையாட்சியின் விதைகளாக மாறிடுவோம்! (25-10-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய நாள் இறை வார்த்தையானது, நாம் இறையாட்சிக்கு உகந்த மனிதர்களாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஒரு சிறிய கடுகு விதை முளைத்தெழுந்து பல பறவைகள் தங்குகின்ற இடமாக மாறுவது போல, நாம் செய்கின்ற சின்னஞ்சிறு காரியங்கள் வழியாக, இறையாட்சி என்ற ஆண்டவர் விரும்புகின்ற ஆட்சி இந்த மண்ணில் மலர்வதற்கான விதைகளாக நாம் இருப்பதற்கான அழைப்பை இறைவன் இன்றைய வாசகங்கள் வழியாக  நமக்கு உணர்த்துகின்றார். 
எப்படி ஒரு சிறிய புளிப்பு மாவு ஒட்டுமொத்த மாவையும் புளிப்பேற்றுகிறதோ, அதுபோல நாம் செய்கின்ற சின்னஞ்சிறிய செயல்கள் இந்த சமூகத்தில் பலரும் இறையாட்சிக்கு உகந்த வாழ்வை தங்கள் வாழ்வாக மாற்றிக் கொள்ள தூண்டும் வகையில் அமையும் என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு வலியுறுத்துகின்றார். 
இன்றைய முதல் வாசகம் கூட கணவன் மனைவியாக இருக்கின்றவர்கள், எப்படி ஒருவருக்கொருவர் இணைந்து வாழ வேண்டும், விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இவர்கள் ஒன்றிணைந்து இருப்பது போல திரு அவையோடு நாமும் ஒன்றிணைந்து இருக்க இன்றைய இறைவார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது. திரு அவையோடு ஒன்றிணைந்து இருக்கின்ற நாம் ஒவ்வொருவருமே நமது செயல்கள் மூலமாக இந்த மண்ணில் இறைவன் இயேசுவின் இறையாட்சி மலர்வதற்கான விதைகளாக மாறிட இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...