இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, பரிசேயரையும் சதுசேயரையும் அவர்களின் செயல்களையும் குறித்து சாடக்கூடிய நபராக இருக்கிறார். மன்னிப்பை அதிகம் வலியுறுத்தக் கூடிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து, எதற்காக இவர்களைச் சாட வேண்டும்? என்ற கேள்வியை எழுப்புகிற போது, பலவிதமான புரிதல்களை நாம் உள்வாங்கிக் கொள்ள முடியும்.
பரிசேயர்களும் சதுசேயர்களும் கடவுளுக்கு தகாதவற்றை செய்கின்ற போது, அவர்களின் செயல் தவறு என்பதை சுட்டிக்காட்டக் கூடிய நபராக ஆண்டவர் இயேசு கிறிஸ்து இருக்கிறார்.
இயேசுவின் இந்த செயல்பாடு, தவறு செய்கின்றவர்கள் தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை வாழ வேண்டும் என்பதை மையப்படுத்தியதாக அமைகிறது.
ஆனால் பரிசேயரும் சதுசேயரும் மன மாற்றத்திற்கு தங்களை உட்படுத்திக் கொள்வதை விட, ஆண்டவரின் வார்த்தைகளைக் கேட்டு தங்கள் குறைகளை சுட்டிக்காட்டுகின்றாரே என்று சொல்லி, அவர் மீது குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற மனநிலையோடு தங்கள் வாழ்வை நகர்த்துவதை இன்றைய வாசகங்கள் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த வாசகத்தின் பின்னணியோடு நமது வாழ்வை நாம் ஒப்பிட்டுப் பார்க்கிற போது பல நேரங்களில் நாம் செய்கின்ற தவறுகளை யாரேனும் ஒருவர் சுட்டிக் காண்பிக்கின்ற போது, பல நேரங்களில் நம்மை நாம் சரி செய்து கொள்வதை விட, மற்றவர்கள் மீதான குற்றம் குறைகளை கண்டுபிடிக்கவும் அதை பெரிதுபடுத்தக்கூடிய நபர்களாகவே நாமும் பல நேரங்களில் நமது வாழ்வை பரிசேயர் சதுசேயரைப் போல அமைத்துக் கொள்கிறோம்.
ஆனால் ஆண்டவர் விரும்புவது: குற்றங்கள் சுட்டிக்காட்டப்படுகிற போதெல்லாம், அதை உணர்ந்து கொண்டு நம்மை நாம் சரி செய்து கொண்டு, ஆண்டவர் காட்டுகின்ற பாதையில் அனுதினமும் பயணம் செய்வதற்கான ஆற்றலை இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக