ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய நாள் இறை வார்த்தையானது, இறைவனுடைய வார்த்தைகளின் ஆழத்தை அதிகமாக உணர்ந்து கொண்டு, அந்த வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ராயேல் மக்கள் இடிக்கப்பட்டிருந்த தங்களுடைய ஆலயத்தை மீண்டுமாக கட்டி புதுப்பிக்கிறார்கள். புதுப்பித்த இந்த ஆலயத்தை குறித்து மகிழ்கின்ற அவர்கள், தங்களுடைய செயல்கள் அனைத்துமே சமயம் சார்ந்த செயல்களாக அமைத்துக் கொண்டு, ஆண்டவர் இயேசு கிறிஸ்து விரும்புகின்ற, கடவுள் தங்களுக்கு கற்றுக் கொடுத்த வார்த்தைகளின் அடிப்படையில் வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, சமயம் சார்ந்த சடங்குகளை பின்பற்றுவதை மட்டுமே தங்கள் வாழ்வின் இலக்காகக் கொண்டிருப்பதை தவறு என இறைவாக்கினர்கள் எடுத்துரைப்பதை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்கிறோம்.
இத்தகைய செயல்முறைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால் ஆண்டவரின் நாள் வரும்போது அனைவரும் தண்டிக்கப்படுவோம் என அச்சுறுத்துவதை இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக நாம் உணர்ந்து கொள்கிறோம். இந்த இயேசுவின் வருகை உண்டு. அவர் வருகிற போது, அவரை எதிர்கொள்ள நாம் தகுதி உள்ளவர்களாக மாற வேண்டும் என்று போதித்த பவுலின் வார்த்தைகளை தங்கள் மனம் போன போக்கில் புரிந்து கொண்டு, ஆண்டவரின் நாள் வரப்போகிறது என எண்ணிக்கொண்டு உழைக்காமல் சோம்பேறிகளாக இருந்தவர்களுக்கு, பவுல் தனது கடிதத்தின் வாயிலாக உழைக்க மனம் இல்லாதவர் உண்ணலாகாது என்று, சொல்லி உழைப்பின் மகத்துவத்தை எடுத்துரைத்து, சோம்பேறித்தனத்தோடு வாழ்வதை தவறு என சுட்டிக் காட்டுவதை, இரண்டாம் வாசகம் நமக்கு வெளிப்படுத்துகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட, ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நீங்கள் இந்த இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளுகிற போது, வாழ்வில் பலவிதமான இன்பங்களையும் துன்பங்களையும் சந்திக்க நேரிடும். அப்படி சந்திக்கின்ற போதெல்லாம், நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள். உங்கள் தலைமுடி ஒன்று கூட கீழே விழாது, என்று சொல்லக்கூடியவராய், தன் பணியை செய்கின்ற ஆண்டவரின் வார்த்தையை வாழ்வாக்குகின்ற மனிதர்களை, ஆண்டவர் ஊக்கமூட்டுவதாக நற்செய்தி வாசகம் அமைந்திருப்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
இந்த வாசகங்கள் அனைத்துமே கடவுளின் வார்த்தைகளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக, நமது வாழ்வை ஆண்டவரின் வார்த்தைகளுக்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொள்ள நமக்கு அழைப்பு தருகின்றன. இந்த அழைப்பை நமது வாழ்வாக மாற்றிக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக