இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய நாள் இறை வார்த்தையானது, இறைவார்த்தையின் உண்மை தன்மையை உணர்ந்து கொண்ட மனிதர்களாக நாளும் இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நகர் நகராக ஊர் ஊராகச் சென்று, நற்செய்தியை அறிவித்தார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த இயேசுவின் நற்செய்தியை இதயத்தில் ஏற்றுக்கொண்ட மனிதர்களாக, நாம் அதனை வாழ்வாக்கக் கூடியவர்களாக நாளும் பயணிக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம்.
இன்றைய முதல் வாசகத்தில் கூட திருத்தூதர் பவுல் எபேசு நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தில் பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்படிந்து வாழ வேண்டுமென ஒரு மனிதன் இந்த சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வண்ணமாக தனது நற்செய்தி பணியினை பவுல் ஆற்றியதை முதல் வாசகத்தின் வாயிலாக நாம் உணர்ந்து கொள்கிறோம்.
இந்த விவிலியத்தில் இருக்கின்ற அனைத்து பகுதிகளுமே நமது வாழ்வை நாம் நெறிப்படுத்திக் கொள்வதற்கான அழைப்பை நமக்கு தருகிறது.
இந்த அழைப்பை உணர்ந்து கொண்ட மனிதர்களாக நாளும் இறைவனது வார்த்தையை நமது வாழ்வாக மாற்றிக்கொள்ள இன்றைய இறைவார்த்தை நமக்கு அழைப்பு விடுக்கிறது. பல நேரங்களில் இந்த இறைவனுடைய வார்த்தையை கேட்கின்ற நபர்களாகவும், அறிவிக்கின்ற நபர்களாகவும் இருக்கின்ற நாம், அதற்கு செயல் வடிவம் தர மறந்து போகின்றோம்.
ஆனால், செயல் வடிவம் தருவது மட்டுமே கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வு என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. ஆண்டவரின் வார்த்தையை அறிவித்து அதன்படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுகிற போது தான், அது அர்த்தமுள்ள வாழ்வாக பார்க்கப்படுகிறது. அப்போது கடவுள் நம்மை ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்கிறார். வெறுமனவே இறை வார்த்தையை கேட்பவர்களாகவும், அறிவிப்பவர்களுமாக நாம் இருந்துவிட்டு, அதற்கு செயல் வடிவம் கொடுக்க தவறினோம் என்றால், கடவுள் நம்மை அறியாதவராகத்தான் இருப்பார் என்பதை நற்செய்தி வாசகம் நமக்கு தெளிவுபடுத்தி காட்டுகிறது.
இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் சுய ஆய்வு செய்து பார்ப்போம். ஆண்டவரின் வார்த்தையை அறிவிக்கவும், அறிவிக்கின்ற வார்த்தையை வாழ்வாக்கவும் ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் தொடர்ந்து பக்தியோடு மன்றாடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக