செவ்வாய், 8 நவம்பர், 2022

யார் உங்களை நம்பி உண்மை செல்வத்தை ஒப்படைப்பார்? (5-11-22)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
இன்றைய வாசகங்கள் வழியாக, ஆண்டவர் இயேசு கிறிஸ்து நாம் இந்த உலகத்தின் பார்வைக்கோ, அல்லது கடவுளின் பார்வைக்கோ ஏற்றபடி வாழவேண்டும் என, தடுமாறிக் கொண்டிருக்கின்ற எதார்த்த வாழ்வை சுட்டிக் காண்பித்து,  ஒரு பணியாளர் இரு தலைவர்களுக்கு ஒரே நேரத்தில் பணிவிடை செய்ய முடியாது. எனவே உங்கள் வாழ்வை ஏதேனும் ஒருவருக்கு உரியதாக வைத்துக் கொள்ளுங்கள் என்ற ஆழமான சிந்தனையினை இறைவன் இன்று இறை வார்த்தை வழியாக நமக்கு வழங்குகின்றார். 

       பல நேரங்களில் நாம் இந்த உலகத்தின் இச்சைகளுக்கு இடம் கொடுத்தவர்களாய் பணத்தையும், பதவியையும், பட்டத்தையும் நாடக்கூடிய மனிதர்களாக இருந்து கொண்டிருக்கிறோம். அதே சமயம் இவை அனைத்தும் நிலையற்றவை என அறிந்திருக்கின்ற நாம், 
நிலையான இறைவனை நோக்கி நமது வாழ்வை அமைத்துக் கொள்ள  வேண்டும் எனவும் பல நேரங்களில் எண்ணுவது உண்டு. 
                 இந்த இரண்டுக்கும் இடையில் தடுமாறுகின்ற மனிதர்களாக  இருக்கின்ற நமக்கு பவுல் ஒரு முன்மாதிரியாக விளங்குகின்றார். பவுல் தன்னுடைய வாழ்வில் ஆண்டவர் இயேசுவை பற்றிய நற்செய்தியை அறியாத பலருக்கு அறிவிக்கின்றார். தன்னுடைய தேவைகளுக்காக அவர் எவரையும் சார்ந்து இருக்கவில்லை.

         வறுமையிலும் எனக்கு வாழத் தெரியும்; வளமையிலும் எனக்கு வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ, எதுவாயினும் எல்லா சூழ்நிலையிலும், நான் வாழ பழக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லக்கூடிய மனிதனாய், தான் நம்பி ஏற்றுக் கொண்ட ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது,
அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவராய், பல இன்னல்களுக்கு மத்தியிலும் இந்த ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை தன் வாழ்வாக மாற்றிக் கொள்ள முயற்சித்தவர், அவரைப் போல நாமும் நமது வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டும் என தன் வாழ்வு மூலமாக நமக்கு அழைப்பு விடுப்பதைத் தான்,  இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம். 

            இந்த வாசகங்களின் அடிப்படையில், நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்ப்போம். நாம் பவுலை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, நமது 
வாழ்வை இந்த ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குவதில் நிலை நிறுத்துவதற்கான ஒரு அழைப்பு இன்றைய நாளில் நமக்கு தரப்படுகிறது.

           இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை
செதுக்கிக்கொண்டு, இந்த உலகத்தின் பார்வைக்கு இடம் கொடுக்காமல், இயேசுவின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்தவர்களாய், 
நமது வாழ்வை செம்மைப்படுத்திட ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...