இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று தாய்த்திரு அவையானது செபமாலை அன்னையின் திருவிழாவினை கொண்டாடுகிறது. இந்த நல்ல நாளில் நாம் செபமாலை அன்னையை குறித்து சிந்திப்பதற்கு அழைக்கப்படுகின்றோம். 1571 ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே, நடைபெற்ற போரில் கிறிஸ்தவர்கள் வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றிக்கான காரணம் என்ன என ஆராய்கிற போது, உரோமையில் இருக்கக்கூடிய பேதுரு ஆலயத்தில், கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி செபமாலை செபித்ததன் விளைவாகத்தான் போரில் வென்றார்கள் என கருதினார்கள். அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் இந்த தேதியில் செபமாலை அன்னையை நினைவு கூருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
துறவு மடங்களிலிருந்து தொடங்கப்பட்ட இந்த செபமாலை சொல்லும் முறையானது, இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக, எல்லோர் வாழ்விலும் இணைந்து இருக்கிறது. குடும்பங்களாக இணைந்து செபமாலை சொல்லும் பழக்கம் இன்றும் நம்மில் மலர்ந்து இருக்கிறது. நாளும் அதில் ஒவ்வொருவரும் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். நம்பிக்கையோடு அன்னையின் நாமத்தை உச்சரித்து செபிக்கின்ற போது தேவையானதை எல்லாம் தேவையான நேரத்தில் பெற்றுக் கொள்வோம் என்ற நம்பிக்கையானது கிறிஸ்தவர்களிடத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.
இன்று செபமாலை அன்னையை நினைவு கூருகின்ற இந்த நல்ல நாளில் நாம் நமது குடும்பங்களில் இணைந்து ஜெபிக்கின்ற ஜெபமாக இந்த ஜெபமாலை இருக்கிறதா? என்ற கேள்வியை இதயத்தில் எழுப்பிப் பார்க்க இன்று அழைக்கப்படுகின்றோம். நமக்காக ஆண்டவரிடத்தில் பரிந்து பேசுவதற்காக அன்னையின் வழியாக நாம் முன்னெடுக்கின்ற பக்தி முயற்சிகளில் ஒன்றுதான் இந்த செபமாலை. இந்த செபமாலையை நம்பிக்கையோடு பயன்படுத்தவும் அன்னையின் வழியாக ஆண்டவரின் ஆசியை பெற்றுக் கொள்ளவும், இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக