இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
ஆலயங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது திரு இசை. திருவழிபாட்டை சிறப்போடு நடத்துவதற்கு இசை என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இசையின் வழியாக ஆண்டவரின் இறை வார்த்தையை அகிலத்தில் உள்ளவர்களுக்கு அறிவிக்கக் கூடியவர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான ஒரு அழைப்பு இன்றைய நாளில் நமக்குத் தரப்படுகிறது.
பாடகர் குழுவின் பாதுகாவலியான செசிலியம்மாவின் திருவிழாவினை கொண்டாடக் கூடிய நாம் ஒவ்வொருவருமே, பாடல்கள் வழியாக கடவுளை போற்றிப் புகழ அழைக்கப்படுகிறோம். ஒருமுறை பாடுவது இருமுறை செபிப்பதற்கு சமம் என புனித அகுஸ்தினார் குறிப்பிடுவார். நாம் பாடல் வழியாக நமது உள்ளத்து உணர்வுகளையும், ஏக்கங்களையும், ஆண்டவரிடத்தில் எடுத்துரைக்கிறோம்.
இத்தகைய பணியில் நாம் ஈடுபடுவதற்கு உதவியாக இருக்கக்கூடிய பாடகர் குழு நண்பர்களை நன்றியோடு நினைவு கூரவும், அவர்களுக்காக செபிக்கவும் இந்த நாளில் நாம் அழைக்கப்படுகின்றோம். செசிலியம்மாவின் திருவிழாவினை கொண்டாடுகின்ற இந்த நல்ல நாளிலே நாம் திருவழிபாட்டில் ஆர்வத்தோடு பங்கெடுக்க உதவி புரிகின்ற ஒவ்வொரு பாடகர் குழு உறுப்பினர்களுக்காகவும் கடவுளிடத்தில் மன்றாடுவோம்.
இசையால் இன்னும் ஆர்வத்தோடு இறைவனை தேடவும், இறைவனை கண்டு கொள்ளவும் ஆற்றல் வேண்டியவர்களாய் இன்றைய நாளில் இறைவனிடத்தில் தொடர்ந்து இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக