இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய நாள் இறை வார்த்தையானது, நாம் இறையாட்சிக்கு உகந்த மனிதர்களாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஒரு சிறிய கடுகு விதை முளைத்தெழுந்து பல பறவைகள் தங்குகின்ற இடமாக மாறுவது போல, நாம் செய்கின்ற சின்னஞ்சிறு காரியங்கள் வழியாக, இறையாட்சி என்ற ஆண்டவர் விரும்புகின்ற ஆட்சி இந்த மண்ணில் மலர்வதற்கான விதைகளாக நாம் இருப்பதற்கான அழைப்பை இறைவன் இன்றைய வாசகங்கள் வழியாக நமக்கு உணர்த்துகின்றார்.
எப்படி ஒரு சிறிய புளிப்பு மாவு ஒட்டுமொத்த மாவையும் புளிப்பேற்றுகிறதோ, அதுபோல நாம் செய்கின்ற சின்னஞ்சிறிய செயல்கள் இந்த சமூகத்தில் பலரும் இறையாட்சிக்கு உகந்த வாழ்வை தங்கள் வாழ்வாக மாற்றிக் கொள்ள தூண்டும் வகையில் அமையும் என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு வலியுறுத்துகின்றார்.
இன்றைய முதல் வாசகம் கூட கணவன் மனைவியாக இருக்கின்றவர்கள், எப்படி ஒருவருக்கொருவர் இணைந்து வாழ வேண்டும், விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இவர்கள் ஒன்றிணைந்து இருப்பது போல திரு அவையோடு நாமும் ஒன்றிணைந்து இருக்க இன்றைய இறைவார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது. திரு அவையோடு ஒன்றிணைந்து இருக்கின்ற நாம் ஒவ்வொருவருமே நமது செயல்கள் மூலமாக இந்த மண்ணில் இறைவன் இயேசுவின் இறையாட்சி மலர்வதற்கான விதைகளாக மாறிட இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக