இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய இறை வார்த்தையானது, ஒரே எண்ணமும், ஒரே அன்புறவும், ஒரே உள்ளமும் கொண்டவர்களாக நாம் ஆண்டவரில் மகிழ்ந்திருப்பதற்கான அழைப்பை நமக்கு தருகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் நாம் மகிழ்ந்திருக்க வேண்டுமாயின், அவரது வார்த்தைகளை வாழ்வாக்க கூடியவர்களாக நாம் மாறிட வேண்டும் என்பதை மனதில் இருத்திக் கொள்வோம்.
இன்றைய நாளில் நமது வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய வாழ்வுக்கான நெறியாக, ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நீங்கள் பகல் உணவுக்கோ, இரவு உணவுக்கோ, உங்கள் நண்பர்களையோ, செல்வந்தர்களையோ அல்லது உங்கள் உறவுகளையோ அழைத்தால், அவர்கள் மீண்டும் உங்களுக்கு கைமாறு செய்வார்கள். கைமாறு செய்ய இயலாத நபர்களான ஏழைகளையும், உடல் ஊனமுற்றவர்களையும், அழைத்து அவர்களோடு உணவு அருந்துங்கள்.
கைமாறு செய்ய இயலாத நபர்களுக்கு நீங்கள் செய்கின்ற உதவியின் வாயிலாக கடவுளிடமிருந்து கைமாறு பெறக் கூடியவர்களாக நீங்கள் இருப்பீர்கள் என்பதை, இறைவன் இன்றைய இறை வார்த்தை வழியாக நமக்கு வலியுறுத்துகிறார்.
இந்த இறைவன் வலியுறுத்துகின்ற வாழ்வுக்கான பாடம், பின்பற்றுவதற்கு எளிதாக இருந்தாலும், செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என எண்ணுகிற போது, நாம் சமூகத்தின் பார்வைக்கு அஞ்சக்கூடியவர்களாக, இந்த சமூகத்தின் போக்கில் உயர்ந்தவர்களையும், மதிப்பு மிக்கவர்களையும், நண்பர்களையும், உறவுகளையும் அழைத்து, அவர்களுக்கு கைமாறு எதிர்பார்த்து உதவி செய்யக்கூடிய நபர்களாக , அவர்களோடு இன்பத்தையும் துன்பத்தையும் பகிருன்ற மனிதர்களாக, நாம் நமது வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள, இறைவன் இன்று நம்மை அறிவுறுத்துகிறார். இந்த இறைவனின் அறிவுறுத்தலை உணர்ந்து கொண்ட மனிதர்களாக, நல்லதொரு மாற்றத்தை முன்னெடுத்தவர்களாக ஆண்டவர் இயேசுவின் வார்த்தைக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக