வெள்ளி, 4 நவம்பர், 2022

பவுலைப் போல முன்மதியோடு செயல்படுவோம்! (4-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
இன்றைய இறை வார்த்தையானது முன்மதியோடு வாழ்வதற்கான ஒரு அழைப்பை நமக்குத் தருகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நேர்மையற்ற ஒரு செல்வந்தன் எப்படி முன்மதியோடு செயல்பட்டான் என்பதை சுட்டிக் காண்பித்து, நேர்மையற்ற ஒரு மனிதன் கூட முன்மதியோடு செயல்படுகின்ற போது நீங்களும் நானும் இந்த சமூகத்தில் முன்மதியோடு செயல்பட வேண்டும் என்ற வாழ்வுக்கான பாடத்தை இன்றைய இறை வார்த்தை வாயிலாக நமக்கு கற்பிக்கின்றார். 

                  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றிய பவுல் அடியாரும் கூட, தன் வாழ்வில் இந்த முன்மதியை கொண்ட மனிதனாகவே, தன்னிடம் இருந்த அனைத்தையும் இழக்கத் துணிந்த ஒரு மனிதனாக, இந்த இயேசுவை மட்டும் ஆதாயமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் கருத்தூன்றிய ஒரு மனிதனாக, தன் வாழ்வை அமைத்துக் கொண்டார் என்பதை விவிலியத்தின் துணை கொண்டும், இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாகவும் நாம் அறிந்து கொள்கிறோம். அப்படி முன்மதியோடு வாழ்ந்து, முன்மதியோடு இருந்து, நமக்கு முன்மாதிரியாகத்  திகழ்ந்த பவுல், தன்னைப் போல வாழ அழைப்பு விடுப்பதை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்கின்றோம். 

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொண்ட மனிதராக, தான் இதுவரை தேடி வைத்திருந்த பணம், பெயர், பட்டம், பதவி, புகழ் என்ற அனைத்தையும் புறம் தள்ளிவிட்டு, ஆண்டவர் இயேசுவை உரிமையாக்கிக் கொள்ள முன்மதியோடு செயல்பட்ட பவுலைப் போல, நீங்களும் நானும் முன்மதி மிக்க மனிதர்களாக இந்த சமூகத்தில் பயணம் செய்வதற்கான அழைப்பு, இன்றைய நாளில் நமக்கு தரப்படுகிறது. 
நாமும், நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில், அனுதினமும் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குவதில் முன்மதியோடு செயல்படக் கூடியவர்களாக மாறிட அருள் வேண்டி இறைவனிடத்தில்  இன்றைய நாளில் மன்றாடுவோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...