ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
கடவுள் நம்பிக்கைக்கு உரியவர். இந்த நம்பிக்கைக்கு உரிய இறைவன் மீது, ஆழமான நம்பிக்கை கொள்ள இன்றைய நாள் இறை வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நம்புகின்ற நாம் ஒவ்வொருவரும்,
இறப்பினும் வாழ்வோம் என்பது சாத்தியமான ஒன்று. நவம்பர் மாதம் முழுவதுமே நாம் இறந்த ஆன்மாக்களை நினைவு கூர்கின்றோம். இறப்புக்குப் பிறகாக என்ன நடக்கப் போகிறது என்ற கேள்வியானது, உள்ளத்தில் பல நேரங்களில் எழுவது உண்டு. ஆனால், இறந்த ஒவ்வொரு நபருமே, ஆண்டவர் இயேசுவோடு இணைந்திருக்கிறோம் என்பதுதான் பவுல் அடியாரின் வாழ்வு மூலமாக, நாம் கற்றுக் கொள்கின்ற வாழ்வுக்கான பாடமாக உள்ளது.
இன்றைய முதல் வாசகத்தில் கூட, சட்ட திட்டத்தைப் பின்பற்றுவதற்காக கடவுளின் சட்ட திட்டங்களை, நாங்கள் மீற மாட்டோம். எங்கள் உயிரைக் கூட இழக்கத் துணைவோம் என்றவாறு, ஒரு தாயானவள் தன்னுடைய மகன்களை ஊக்கமூட்டுவதையும், தன் வாழ்வை இழப்பதையும், இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம்.
இந்த ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை
வாழ்வாக்குவது நம் வாழ்வின் இலக்கு என்பதை இந்த தாயிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாக இருக்கிறது. நாம் அனைவருமே இந்த மண்ணில் வாழ்கிற போது, இன்பம் துன்பம் என்ற இரண்டுக்கு மத்தியிலும் சிக்கித் தவிக்கின்றோம்.
பல நேரங்களில் இங்கு நிலையானது என எண்ணுகின்ற அனைத்தும் நிலையற்றது என்பதை உணர்ந்திருந்தாலும், பல நேரங்களில் நாம் கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்க தவறிப் போகின்றோம்.
ஆனால் நாம் வாழுகின்ற இந்த மண்ணக வாழ்வில், கடவுளின் வார்த்தையை வாழ்வாக்குவதும், அவர் மீதான நம்பிக்கையில் நாளுக்கு நாள் வளர்வதுமே, நமது தாய் வீடாகிய விண்ணகத்தில் நமக்கு இடம் தரும் என்பதை, இன்றைய இரண்டாம் வாசகத்தின் வாயிலாக நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
இறப்புக்குப் பிறகாக நாம் எப்படிப்பட்ட உடலோடு இருப்போம் என்ற கேள்வியை, பல நேரங்களில் சதுசேயர்கள் எழுப்பியது உண்டு. சதுசேயர்களைப் பொறுத்தவரை, மறுவாழ்விலும் இறப்புக்குப் பிறகாக ஒரு வாழ்வு உண்டு என்பதில் நம்பிக்கை அற்றவர்களாக இருந்தார்கள். எனவே இயேசுவினிடத்தில் பல கேள்விகளை எழுப்பினார்கள்.
இறந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என, நம்புகிற நாம் ஒவ்வொருவருமே, இறந்து போன ஆன்மாக்கள் மாட்சி பொருந்திய உடலோடு உயிர்த்தெழுவார்கள். அப்படி உயிர்த்தெழுகின்ற ஒவ்வொருவருமே, ஆண்டவர் இயேசுவோடு இணைந்து மகிழ்ந்து இருப்பார்கள்.
இந்த இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாய், அவரின் வார்த்தைகளை வாழ்வாக்கிக் கொண்டு அவர் மீதான நம்பிக்கையில் நாளும் வளர்வதற்கான ஒரு அழைப்பு இன்றைய நாளில் நமக்கு தரப்படுகிறது.
இந்த இறை வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை செதுக்கிக் கொண்டு, நம்பிக்கையின் நாயகர்களாக நாம் இந்த மண்ணில் வலம் வருவதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் மன்றாடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக