இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய நற்செய்தி வாசகமானது நமக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவை குறித்து இன்னும் ஆழமாக உணர்ந்து கொள்ள, அழைப்பு விடுக்கின்றது. கோழி தன் குஞ்சுகளை இறக்கையின் கீழ் அரவணைப்பது போல, கடவுள் நம்மை அரவணைத்து பாதுகாத்து வருகின்றார். இந்த இறைவனுடைய வார்த்தைகளை பல நேரங்களில் நாம் உதாசீனப்படுத்திவிட்டு, மனம் போன போக்கில் நமது வாழ்வை அமைத்துக் கொள்கிற போது, நாம் செல்லுகிற பாதை தவறு என்பதை, இறைவன் பல நபர்கள் வழியாக நமக்கு சுட்டிக்காட்டுகிறார். இந்த இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய், நம்மை நாம் சரி செய்து கொண்டு, மீண்டும் அவரிடத்தில் சரணாகதி அடைவதற்கு இன்றைய இறைவார்த்தை வழியாக நாம் அழைக்கப்படுகின்றோம்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது, பலவிதமான பணிகளை பலதரப்பட்ட மக்களுக்கு செய்தார். இந்த இயேசுவை பின்பற்றக்கூடிய நாம் ஒவ்வொருவருமே, இந்த இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தியவர்களாய், நாம் காணுகின்ற மனிதர்களுக்கெல்லாம் இந்த இறைவனின் செய்தியை அறிவிக்கவும், அறிவிக்கின்ற அந்த செய்தியை நமது வாழ்வாக மாற்றிக் கொண்டு, தொடர்ந்து பயணிக்கவும் அழைக்கப்படுகிறோம். பல நேரங்களில் நமது வாழ்வு தடம் புரண்டாலும், கடவுள் நமக்கு கொடுக்கின்ற அழைப்பின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு , மீண்டும் மீண்டுமாக எப்படி தாய்க்கோழியின் குரலுக்கு குஞ்சுகள் செவி கொடுத்து, இறக்கைகளின் கீழ் வந்து அரவணைப்பை பெறுகிறதோ அதுபோல நாமும் கடவுளின் குரலுக்கு செவி கொடுத்து, நமது தவறிய வாழ்வை மாற்றிக்கொண்டு, மீண்டுமாக இறைவனிடத்தில் சரணாகதி அடைவதற்கான ஆற்றலை இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக