ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற (14.8.22)


கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற (14-8-22 )

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
     நான் அமைதியை அல்ல, தீயை மூட்ட வந்தேன். உங்களுக்கிடையே பிளவை உண்டாக்க வந்தேன் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் இன்று ஒரு விதமான அச்சத்தையும் கலக்கத்தையும் நமக்கு உருவாக்குவது போல தோன்றலாம். ஆனால் ஆண்டவரின் வார்த்தைகளுக்கான  அர்த்தத்தை ஆராய்ந்து பார்க்கிற போது, கடவுளின் வார்த்தைகளை கேட்டு அந்த வார்த்தைகளை பின்பற்றுகிற மனிதர்களாக நீங்களும் நானும் வாழ வேண்டும் என்பதை இறைவன் வலியுறுத்துகிறார்.  கடவுளின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு அதை வாழ்வாக்க  நாம் முயற்சிக்கின்ற போது,  இந்த சமூகத்தில் பல விதமான எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும்.  குறிப்பாக குடும்பத்தில் கூட பலவிதமான எதிர்ப்புகளை நாம் சந்திக்க நேரிடலாம்.  நாம் கடவுளின் வார்த்தைகளை பின்பற்றி வாழ்கின்ற காரணத்தினால், நமது குடும்ப உறவுகள் கூட, சில நேரங்களில் நமக்கு எதிராக நிற்கக் கூடிய நிலை உருவாகலாம்.  இந்த நிலைகள் எல்லாம் உருவானாலும் நாம் கடவுளின் கட்டளையை பின்பற்றுகின்ற மனிதர்களாக எப்போதும் திகழ வேண்டும் என்பதை தான் இறைவன் வலியுறுத்துகிறார்.  

               இறைவன் வலியுறுத்துகின்ற  இந்த வாழ்க்கைப் பாடத்தை உணர்ந்து கொண்ட மனிதர்களாக நாம் இந்த சமூகத்தில் வாழுகிற ஒவ்வொரு நாளுமே கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற மனிதர்களாகிட இறைவனிடத்தில் அருள் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடம் தொடர்ந்து மன்றாடுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

ஆண்டவரின் பாதையில் அனுதினமும் நடக்க(13-8-2022)

ஆண்டவரின் பாதையில் அனுதினமும் 
 நடக்க (13-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
   
                இன்றைய முதல் வாசகத்தில் புளித்த திராட்சை பழங்களை பெற்றோர் தின்றால் பிள்ளைகளின் பல் கூசிற்று என்ற யூத பழமொழியை இறைவன் சுட்டிக்காட்டுகிறார். இந்த பழமொழியின் உள்ளார்ந்த அர்த்தம் என்ன என சிந்திக்கின்ற போது, பெற்றோர்கள் செய்த தவறின் விளைவாக பிள்ளைகள் தண்டிக்கப்படுகிறார்கள் என்ற மனநிலையானது யூதர்களிடத்திலிருந்தது.  தான் செய்கிற தவறை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாதவர்கள், தாங்கள் தண்டிக்கப்படுவதற்கான காரணம் தாங்கள் செய்கிற தவறு அல்ல, மாறாக எங்கள் முன்னோர் செய்த தவறு என மற்றவரை குறை கூறி, தங்களை நியாயவாதிகள் போல காட்டிக்கொள்ளக் கூடிய மனப்பான்மை யூதர்களிடத்தில் பரவிக் காணப்பட்டது. 

ஆனால் இறைவன் சிறு குழந்தைகளைப் போல கள்ளம் கபடமற்றவர்களாக செய்கிற தவறை எல்லாம் தவறு செய்தால் தவறு என  ஏற்றுக்கொண்டு,  அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு வேண்டி மனமாற்றம் அடைந்த மனிதர்களாக நாளும் வளர வேண்டும் என்ற சிந்தனையினை இறைவன் இன்றைய நாளில் நமக்கு தருகின்றார். இறைவன் தரக்கூடிய இந்த வாழ்வுக்கான சிந்தனையை இதயத்தில் ஏற்றுக் கொண்ட மனிதர்களாக, நாம் செய்கிற செயல்களை சீர்தூக்கி பார்த்து, நாம் செய்கிற தவறுகளை ஏற்றுக் கொள்வதற்கான மனத்திடனை இறைவன் நமக்கு வழங்க வேண்டும் என இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம்.

     நாம் செய்கிற தவறை நாம் உணர்ந்து கொண்டு, அதை சரி செய்து கொண்டு, ஆண்டவரின் பாதையில் அனுதினமும் 
 நடக்க ஆண்டவரின் அருளினை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம். 

இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

இணைந்து வாழ.... (12-8-22)

இணைந்து  வாழ.... (12-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் !
          மனிதன் இணைந்து வாழ்வதற்காக படைக்கப்பட்டிருக்கிறான். கணவன் மனைவி என்ற உறவாக இருந்தாலும் சரி, கடவுள் மனித உறவாக இருந்தாலும் சரி, மண்ணில் பிறந்த ஒவ்வொருவருமே மற்றவரோடு இணைந்து வாழ்வதற்கு இன்றைய நாள் வாசகங்கள் வலியுறுத்துகின்றன. இன்றைய முதல் வாசகத்தின் வழியாக கவனிப்பாரற்று கிடந்த இஸ்ரயேல் மக்களை எப்படி ஆண்டவர் தேடிச்சென்று, அவர்களை தன் மக்களாக ஏற்றுக் கொண்டு, அவர்களுடைய இன்ப துன்பங்களில் உடனிருந்து இணைந்து வழி நடத்தினார் என்பதை முதல் வாசகத்தின் வழியாக நாம் வாசிக்க கேட்கின்றோம்.

        இன்றைய நற்செய்தி  வாசகத்தில் கூட மணவிலக்கை பற்றி ஆண்டவர் இயேசுவினிடத்தில் கேள்விகள் எழுப்பப்படுகிற போது, கடின உள்ளத்தின் பொருட்டு உருவாக்கப்பட்டதே அந்த மண விலக்கு என்பதை எடுத்துக் கூறியவராய்,  மனிதன் இணைந்து இன்புற்று வாழ வேண்டும் என்பதை ஆண்டவர் இயேசு வலியுறுத்துகிறார்.

              இந்த ஆண்டவர் இயேசுவின் வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் ஏற்றுக்கொண்டவர்களாய் நாம், நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில், நாம் எப்படி இணைந்து வாழுகிறோம் என்பதை குறித்து சிந்திப்பதற்கான ஒரு அழைப்பினை இறைவன் தருகிறார். இறைவன் தரும் அழைப்பை ஏற்றுக் கொண்டவர்களாய் நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில், கடவுளோடும் சக மனிதர்களோடும் இணைந்து இன்புற்று வாழ்வதற்கான அருளினை இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

மன்னிப்பை வலியுறுத்தும் ஆண்டவர்(11-8-22)

மன்னிப்பை வலியுறுத்தும் ஆண்டவர்
(11-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் !
        மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனுமே மரணத்தை சந்திப்போம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த மரணத்தை சந்திக்கின்ற நேரம் வரை மன்னிக்க இயலாத மனப்பான்மையை இதயத்தில் இருத்திக் கொண்டே பயணிக்க கூடிய மனிதர்களாக இன்று நம்மில் பலரும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறோம். ஆனால், இன்றைய வாசகங்கள் அனைத்துமே மன்னிப்பை வலியுறுத்துகின்றன.

 கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்று வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்திற்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து மன்னிப்பையும் இரக்கத்தையும் விட்டுச் சென்றார். குற்றுயிரும் குலை உயிருமாக சிலுவையில் தொங்குகின்ற சூழ்நிலையில் கூட தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய மனிதர்களை மன்னிக்கும் மனம் படைத்தவராக ஆண்டவர் இயேசு கிறிஸ்து இருந்தார். இந்த மன்னிப்பின் நாயகனை பின் தொடரக்கூடிய நாம் மன்னிக்கும் மனம் கொண்ட மனிதர்களாக, நமது வாழ்வை நகர்த்தி கொண்டிருக்கிறோமா என்ற கேள்வியை இன்று எழுப்பிப் பார்க்க அழைக்கப்படுகின்றோம். 

     மன்னிப்பை வலியுறுத்தும் ஆண்டவரை பின்பற்றக் கூடிய நாம் மன்னிக்கும் மனம் படைத்தவர்களாக மாறிட இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கிறிஸ்துவின் மனநிலை....(10-8-22)


கிறிஸ்துவின் மனநிலை....(10-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

இன்றைய முதல் வாசகத்தில் முகமலர்ச்சியோடு, இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து கொடுக்க அறிவுரை வழங்கப்படுகிறது.  நற்செய்தி வாசகத்தில் கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் ஒழிய அது மற்றவருக்கு பயன் தராது என்பதை எடுத்துரைக்கிறது. இந்த இரண்டு வாசகங்களின் பின்னணியோடு இன்று திரு அவை நினைவு கூருகின்ற திருத்தொண்டர் புனித லாரன்ஸ் அவர்களின் வாழ்வை நாம் ஒப்பிட்டுப் பார்க்க அழைக்கப்படுகின்றோம்.

          திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ் என்பவர் துடிப்புமிக்க இளைஞரான லாரன்ஸை அழைத்து வந்து திருத்தொண்டராக திருப்பொழிவு செய்து, இறை மக்களுக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திரு உடலையும் திரு ரத்தத்தையும் வழங்குகின்ற பொறுப்பையும்,  திரு அவையின் சொத்துக்களை பராமரிக்கின்ற பொறுப்பையும் வழங்கினார். இந்த இரண்டு பணிகளையும் கடமையை உணர்ந்தவராய் சிறப்புடன் செய்தவர் தான் புனித திருத்தொண்டர் லாரன்ஸ் அவர்கள்.  இப்ப பணியை அவர் செய்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் கொடுங்கோல் அரசனான வலேரியன் என்பவன் திரு அவையின் சொத்துக்கள் அனைத்தையும் அடக்கி ஆள, கைப்பற்றி கொள்ள எண்ணினான். அதன் அடிப்படையில் அவன் திருத்தந்தை இரண்டாவது சிக்ஸ்துஸை கொலை செய்தான். அதனை தொடர்ந்து லாரன்ஸ் அவர்களை கொலை செய்ய முற்பட்டான். ஆனால் திருத்தொண்டர் லாரன்ஸ் அவர்களோ, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட எல்லா விதமான திரு அவை சொத்துக்களையும் ஏழை எளியவர்களுக்கு எழுதி வைத்துவிட்டு, இவர்கள் தான் திரு அவையின் சொத்துக்கள் என மனிதர்களை, ஏழைகளை அரசனின் முன்பாக காண்பிக்க கூடியவராக இருந்தார். திருத்தொண்டர் லாரன்ஸ் இந்த செயலால் கோபமடைந்த அரசன் அவரை ஒரு கட்டிலில் படுக்க வைத்து கட்டிலுக்கு அடியில் தீயை மூட்டி துன்புறுத்தினான். துன்பத்திற்கு மத்தியிலும், ஒரு பாகம் வெந்துவிட்டது; என்னை திருப்பி போடுங்கள் மறுபகுதியும் வேகட்டும் என்று கூறக்கூடிய ஒரு மனிதனாக, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை வாழ்வாக்கிக் கொண்டு, இருப்பதை முகமலர்ச்சியோடு அடுத்தவருக்கு பகிர்ந்து கொடுத்து, கொடுக்கப்பட்ட பணிகளை திறம்பட செய்து ஆண்டவர் இயேசுவுக்காக, உயிரை தியாகம் செய்த இந்த லாரன்ஸை நினைவு கூருகின்ற இந்த நாளில், நாம் நமது வாழ்வை இந்த லாரன்ஸின் வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்க அழைக்கப்படுகிறோம். 

        நாமும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்ற பலவிதமான பணிகளை கடமையை உணர்ந்தவர்களாய், ஆண்டவரே இயேசு கிறிஸ்துவின் மனநிலையைக் கொண்ட மனிதர்களாக, திறம்பட செய்வதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் தொடர்ந்து மன்றாடுவோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

நாம் கடவுளின் வார்த்தைகளை அறிவிக்கின்ற மனிதர்களாக இருப்போம்.... (9-8-22)

நாம் கடவுளின் வார்த்தைகளை அறிவிக்கின்ற மனிதர்களாக இருப்போம்.... (9-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய  நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
            இன்றைய வாசகங்கள் அனைத்துமே ஆண்டவரின் வார்த்தைகளை அறிவிக்கின்ற மனிதர்களாக நாம் இருப்பதற்கான அழைப்பை தருகின்றன. இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசேக்கியேலை  ஆண்டவர் தனது வார்த்தைகளை அறிவிப்பதற்காக அனுப்புகின்ற நிகழ்வை நாம் வாசிக்க கேட்டோம். இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட நாம் கடவுளின் வார்த்தைகளை அறிவிக்கின்ற மனிதர்களாக இருப்பதற்கான அழைப்பை இறைவன் தருகிறார். 

       வயதில் மூத்தவராக இருந்தாலும் சரி, இளையவராக இருந்தாலும் சரி, சிறு குழந்தைகளாக இருந்தாலும் சரி, கடவுளின் வார்த்தையை அறிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. கடவுளின் வார்த்தையை அறிவிக்க அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். அக்கடமையை சரிவரச் செய்யக்கூடிய மனிதர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான அழைப்பை இறைவன் தருகிறார். 

            நாம் அறிவிக்கின்ற வார்த்தைகளை கேட்டு பலர் உள்ளம் மாறுகிறார்கள் என்றால், அவர்களை கடவுள் இன்முகத்தோடு ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்கிறார். வழி தவறிப் போன மக்களுக்கு ஆண்டவரின் வார்த்தைகளை எடுத்துரைத்து அவர்களை ஆண்டவரை நோக்கி அழைத்து வரக் கூடிய மகத்துவமான பணியை செய்ய இறைவன் நம்மை அழைக்கின்றார். 

          இறைவன் தரும் இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாய் நாம் இதயத்தில் ஏற்றுக்கொண்டு அவ்வார்த்தைகளை அடுத்தவரோடு பகிருகின்ற மனிதர்களாக வாழ இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

திங்கள், 8 ஆகஸ்ட், 2022

ஆண்டவருக்கு உகந்த வாழ்வை நமது வாழ்வாக்கிக் கொள்ள....8-8-22

ஆண்டவருக்கு உகந்த வாழ்வை நமது வாழ்வாக்கிக் கொள்ள....8-8-22

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில், நாம் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்க்க அழைக்கப்படுகிறோம்.

                     ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது பலவிதமான பணிகளை செய்து கொண்டே சென்றார்.  அவர் பின்னே அவரை பின்தொடர்ந்த கூட்டத்தினர், அவரின் மீது ஏதாவது ஒரு குறையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற மனநிலையோடு, குற்றம் சுமத்த வேண்டும் என்ற மனநிலையோடு அவரை பின்தொடர்ந்து கொண்டிருந்தார்கள். 

                               தம்மை பின் தொடர்கின்ற நபர்கள் எல்லாம் இத்தகைய மனநிலை கொண்டிருந்தார்கள் என அறிந்திருந்த நிலையிலும் அவர் செய்ய விரும்பிய நன்மைகளை செய்து கொண்டே சென்றார் என்பதை இன்றைய வாசகங்கள் வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். 

                          யூதச் சமூகத்தில் பலவிதமான வரிகளானது விதிக்கப்பட்டிருந்தது. உரோமையரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த யூதர்கள், பல வழிகளில் வழிகளை செலுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த வரிகளை இயேசு செலுத்துகிறாரா? இல்லையா? என்பது குறித்து கேள்வியை எழுப்பி, இயேசுவை சிக்க வைக்க வேண்டும் என்ற மனநிலையோடு உடன் இருந்தவர்கள் செயல்பட்டார்கள். ஆனால் இறைவன் விவேகத்தோடு அவர்களை எதிர்கொண்டதை குறித்து, இன்றைய நாளில் நாம் வாசிக்க கேட்டோம். 

     இந்த நற்செய்தி பகுதியை நமது வாழ்வோடு நாம் ஒப்பிட்டு பார்க்கிற போது, நாம் வாழ்கின்ற சமூகத்தில் பலவிதமான தடைகளையும், பலவிதமான சூழ்ச்சிகளையும், சந்திக்கின்ற போதெல்லாம், துணிவோடு, கடவுளின் துணையோடு அனைத்தையும் எதிர்கொண்டு செல்ல, ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வை வாழ, கடமையை உணர்ந்து செயல்படக்கூடிய மனிதர்களாக, செல்லுகின்ற இடமெல்லாம் நன்மை செய்து கொண்டே செல்ல இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகிறார். 

இறைவன் தருகின்ற அழைப்பை இதயத்தில் ஏற்றுக்கொண்டு, ஆண்டவருக்கு உகந்த வாழ்வை நமது வாழ்வாக்கிக் கொள்ள, இறையருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

ஆண்டவரை பின்தொடர்ந்து செல்லும் மனிதர்களாக... 7-8-22

ஆண்டவரை பின்தொடர்ந்து செல்லும் மனிதர்களாக... 7-8-22

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
நம்பிக்கை இருந்தால் எதிலும் நம்பி, கை வைக்கலாம் என்பார்கள். இன்றைய நாள் வாசகங்கள் அனைத்துமே நம்பிக்கையோடு வாழ்வதற்கான ஒரு அழைப்பை நமக்கு தருகின்றன.

 இன்றைய நாளில் இரண்டாம் வாசகத்தில் நம்பிக்கையின் தந்தை என அழைக்கப்படக்கூடிய ஆபிரகாமை குறித்து பேசப்படுகிறது.  எப்படி இந்த ஆபிரகாம் நம்பிக்கையில் நிலைத்திருந்தார்?  வாழ்வில் எல்லா சூழ்நிலையிலும் கடவுள் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டாரோ, அவரைப் போல நீங்களும் நானும் இருக்க வேண்டும் என்ற வாழ்வுக்கான பாடம் இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக நமக்கு வழங்கப்படுகிறது.  நற்செய்தி வாசகத்திலும் நாம் நம்பிக்கையோடு கொடுக்கப்பட்ட பணிகளை, மற்றவர்கள் பார்க்கிறார்கள், பார்க்காமல் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு, நல்ல மனநிலையோடு,  கொடுக்கப்பட்ட பணிகளை நம்பிக்கையோடு தொடர்ந்து செய்யக்கூடிய நல்ல பணியாளர்களாக , நாம் இருக்கும் போது  கடவுளுக்கு உகந்த மனிதர்களாக நாம் இருப்போம்  என வாக்குறுதிகள் தரப்படுகிறது. அவ்வாறு வாழ அறிவுறுத்தவும் படுகிறது. கடவுள் அறிவுறுத்தக்கூடிய இந்த வாழ்வுக்கான நெறிகளை இதயத்தில் ஏற்றுக்கொண்டவர்களாய், வாழ்வில் எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும், எல்லா சூழ்நிலையிலும், நம்பிக்கையோடு ஆண்டவரை பின்தொடர்ந்து செல்லும் மனிதர்களாக நீங்களும் நானும் வாழ இந்த நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு, வாழ்வாக்க. 6-7-2022

வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு, வாழ்வாக்க.    6-7-2022

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
 இன்று தாய்த்திரு அவையானது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உருமாற்றப் பெருவிழாவை கொண்டாட அழைப்பு விடுக்கின்றது.  இன்றைய முதல் வாசகத்தில் தானியல் இறைவாக்கினர் தான் காட்சியில் கண்ட ஆண்டவரை குறித்து நம்மோடு பேசுவதை வாசிக்கக் கேட்டோம்.

       இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு, நாங்கள் கற்பனை கதைகளால் புனையப்பட்ட இயேசுவைப் பற்றி பேசவில்லை, நாங்கள் உடனிருந்து தாபோர் மலையில் அவர் உருமாற்றம் அடைந்தபோது, "இவரே என் அன்பார்ந்த மகன்" என கடவுள் அவரை குறித்துக் கூறிய வார்த்தைகளின் அடிப்படையில், அவருடன் இருந்து, அவரது வார்த்தைகளை கேட்டு அதன்படி வாழ்வை அமைத்துக் கொண்ட நாங்கள் எங்கள் வாழ்வின் அடிப்படையில், நாங்கள் கண்டதையும் கேட்டதையும் உங்களிடம் அறிவிக்கிறோம் எனக்கூறி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உருமாற்றத்தின் அடிப்படையில் உள்ள மாற்றம் அடைந்தவர்களாய் ஆணடவரைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து, ஆண்டவர் இயேசுவுக்காக தங்கள் உயிரையும் கொடுக்க துணிந்தார்கள் என்பதை இன்றைய வாசகங்கள் வாயிலாக நாம் அறிந்து கொள்கிறோம். 

இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உருமாற்ற பெருவிழா, நமது உள்ளங்களை மாற்றிக் கொள்ள அழைப்பு விடுக்கிறது. நாம் நமது தீய வாழ்வை களைந்து, ஆண்டவர் இயேசுவின் மீது அதீத  நம்பிக்கை கொண்டவர்களாய் அவரின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு, அதை வாழ்வாக்குகின்ற மனிதர்களாக இச்சமூகத்தில் வாழ இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

வார்த்தைகளை பின்பற்றுகின்ற மனிதர்களாக....(5-8-22)

வார்த்தைகளை பின்பற்றுகின்ற மனிதர்களாக....(5-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
 கடவுள் எங்கே இருக்கிறார் என்ற கேள்விக்கு பலரும் சொல்லக்கூடிய பதில், கூப்பிடும் தூரத்தில் என்று. கூப்பிடும் தூரத்தில் இருப்பதால் தான் பல நேரங்களில் நாம் கடவுளை கூப்பிட மறந்து போகின்றோம். கடவுள் எங்கோ இருப்பவர் அல்ல. நம் மத்தியில் இருப்பவர். நம் நடுவே குடி கொண்டிருப்பவர் என, இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. நம் மத்தியில் குடி கொண்டிருக்கின்ற இந்த இறைவன் நம்மிடம் வலியுறுத்துவது ஒரே காரியத்தையே. அது என்ன என சிந்திக்கின்ற போது, நற்செய்தி வாசகத்தின் வாயிலாக இறைவன் அதனை தெளிவுபடுத்துகிறார்.  கடவுளுடைய வார்த்தையை கேட்டு, அவ்வார்த்தைகளை பின்பற்றுகின்ற மனிதர்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்பதை மட்டுமே கடவுள் விரும்புகிறார்.  கடவுள் விரும்புவதை நாம் நமது உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு அவரது வார்த்தைகளை ஆழமாக சிந்திக்கவும், அதனை நமது வாழ்வில் செயல்படுத்தவும் இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

அவரின் மக்களாக இன்றும் என்றும் எப்போதும் இருக்க ...3-8-22

அவரின் மக்களாக இன்றும் என்றும் எப்போதும் இருக்க ...
3-8-22

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக தவறிய வாழ்வில் இருந்து மனம் திரும்பிய இஸ்ரயேல் மக்களை கடவுள் பாதுகாப்பதாகவும், அவர்களை மீண்டும் நன்னிலைக்கு கொண்டு வருவதாகவும் வாக்குறுதிகளை வழங்குகின்றார். இந்த வாக்கு மாறாத கடவுளை ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் உரியவராகவே யூதர்கள் கருதினார்கள்.  எனவே தான் அவர்கள் மற்றவர்களை புறவினத்தார் எனக்கூறி ஒதுக்கி வைத்துவிட்டு,  கடவுள் தங்களுக்கானவர், மெசியா தங்களை மட்டுமே மீட்க வருவார் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்தார்கள்.

     இவர்களின் மனநிலையை அறிந்தவராய் இயேசு அவர்களுக்கு வாழ்வுக்கான பாடத்தை கற்று தர வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் கானானியப் பெண்ணின் வேண்டுதல்களுக்கு மௌனம் சாதித்தார்.  அப்பெண்ணிடத்தில் பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்களுக்கு போடுவது முறை அல்ல என்ற வார்த்தைகளை இயேசு பயன்படுத்தியதன் பின்னணியும், தன்னை சுற்றி இருந்த மக்களுக்கு அனைவரும் கடவுளின் மக்கள், கடவுள் அனைவருக்குமானவர் என்பதை எடுத்துரைப்பதற்காகவே என்பதை இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். 

    நம் அனைவருக்குமான கடவுளிடம் நாம் நம்மை முழுவதுமாக அர்ப்பணித்து, அவரது திட்டத்திற்கு ஏற்ப நமது வாழ்வை அமைத்துக் கொண்டவர்களாய், நமது தீய வாழ்வில் இருந்து விடுபட்டு, கடவுள் காட்டுகின்ற பாதையில் பயணம் செய்து, அவரின் மக்களாக இன்றும் என்றும் எப்போதும் இருக்க இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

இறைவன் நம்மை வழி நடத்துகிறார்...(2-8-2022)

இறைவன் நம்மை வழி நடத்துகிறார்...(2-8-2022)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
 கற்பனைக்கு அடக்க இயலாத கடவுளைப் பற்றி இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நாம் அழைக்கப்படுகின்றோம். 

       இன்றைய நாள் முதல் வாசகத்தின் வாயிலாக இஸ்ராயேல் மக்கள் தவறிய வாழ்வை வாழ்ந்த போது பலவிதமான துன்பங்களின் வழியாக அவர்கள் செல்லுகின்ற பாதை தவறு என்பதை சுட்டி காண்பித்து, மீண்டுமாக இந்த மக்களை தம்மை நோக்கி அழைத்து வரக்கூடிய கடவுளாக இறைவன் இருப்பதை நாம் உணர முடிகிறது. கண்டிக்கின்ற கடவுள் ஆகவும் அவர் தென்படுகின்றார். அதேசமயம் இரக்கத்தை காட்டி பாசத்தை பொழிகின்ற ஒரு தந்தையான இறைவனாகவும் அவர் செயல்படுவதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. 

           பல நேரங்களில் நாம் கடவுளின் அன்பை புறக்கணித்துச் செல்லுகிற போதெல்லாம், நம்மை மீண்டும் மீண்டுமாக தேடி வந்து அரவணைப்பதை, நாம் நமது வாழ்வை சீர்தூக்கி பார்க்கின்ற போது உணர்ந்து கொள்ள முடியும் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது. 

             இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட,  இயேசுவோடு உடனிருந்த சீடர்கள் இயேசுவை பற்றி இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள இயலாதவர்களாக இருந்தார்கள் என்பதை நாம் கண்கூடாக காண முடிகிறது. 

                கடல் என்பது தீமைகளின் ஒட்டு மொத்த உருவமாக பார்க்கப்படுகிறது. கடலில் தீய ஆவிகள் குடியிருக்கும் என யூதர்கள் எண்ணினார்கள். அந்த மனநிலையை இயேசுவின் சீடர்களும் கொண்டிருந்தார்கள். எனவே, தான் கடல் மீது நடந்து வந்த இயேசுவை, அவர்கள் தீய ஆவி என எண்ணினார்கள்; அஞ்சினார்கள்; கலங்கினார்கள். 

                   ஆனால் கடவுள் அவர்களின் கலக்கத்தை போக்கி, நம்பிக்கையை கொடுத்து அவர்களை மீண்டுமாக தன் பாதையில் வழி நடத்திச் செல்வதை இன்றைய வாசகங்கள் நமக்கு வலியுறுத்திக் கூறுகின்றன. இந்த வாசகங்களின் பின்னணியோடு, நாம் நமது வாழ்வை சீர்தூக்கி பார்க்கின்ற போது, பல நேரங்களில் கடவுளுக்கு தகாத காரியங்களை நாம் முன்னெடுத்துச் சென்றாலும், கடவுள் நமக்கு ஆசி வழங்குவதிலிருந்து பின் வாங்கவில்லை. அவர் தொடர்ந்து நமக்குத் தேவையானதை கொடுத்து, நம்மை கரம் பிடித்து வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் நமது வாழ்வில் அடிப்படையில் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். இறைவன் நம்மை வழி நடத்துகிறார் அவர் நமது கடவுளாக எப்போது இருக்கிறார்கள். 

         நாம் நமது கடவுளின் மக்களாக இருப்பதை இன்றைய நாள் வாசகங்கள்  வழியாக நமக்குத் தருகிறார். கடவுளின் அழைப்பிற்கு செவி கொடுத்தவர்களாக நாம் அவரின் மக்களாக, அவரை நோக்கி பயணப்பட நாம் இறையருள் வேண்டுவோம் இன்றைய நாளில். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள...(1-8-22)

நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள...(1-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
                 இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா தவறான வாழ்வு வாழுகின்ற இஸ்ரயேல் மக்களின் தவறுகளை சுட்டிக்காட்டுகின்றார். அவரின் வார்த்தைகளை கேட்டு தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்வதற்கு முன்னதாகவே அனனியா என்ற மனிதன் , கடவுளின் சார்பாக நான் வாக்குறுதிகளை தருகிறேன்; கடவுள் கூறுவதை நான் அறிவிக்கிறேன் என்று கூறி, கடவுள் நம்மை மன்னித்து விட்டார்; மிகக் குறுகிய காலத்தில் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து நம்மை கடவுள் மீட்பார் என பொய்யான ஒரு இறைவாக்கினை உரைக்கின்றார். 
இந்த மனிதன் உரைப்பது பொய்யான இறைவாக்கு என்பதை எரேமியா இறைவாக்கினர் எடுத்துரைப்பதை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம்.

  நாம் வாசிக்கின்ற ஒவ்வொரு இறை வார்த்தையுமே ஆழமாக நமது இதயத்தில் இருத்தி சிந்திக்க அழைப்பு தருகிறது. 

         இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கி பார்த்து, நல்லதொரு மாற்றத்தினை முன்னெடுக்கின்ற மனிதர்களாக நாம் இருப்பதற்கான அழைப்பை இன்றைய நாளில் இறைவன் நமக்கு தருகின்றார். 

         இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட, இயேசுவோடு இருந்தவர்கள் அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, இயேசுவின் அருகில் இருந்த நபர்களை பார்த்து, இயேசுவின் சீடர்கள் கூறினார்கள்- இவர்கள் பசியால் மயக்கமுற நேரிடலாம். எனவே அவர்களுக்கான உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ள அவர்களை அனுப்பி விடும் என்று கூறிய போது, ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களிடம் இருப்பது என்ன?  அதை இவர்களுக்கு பகிர்ந்து கொடுங்கள் என கூறக்கூடியவராய், அவர்களிடம் இருப்பதைக் கொண்டு வல்ல செயல்களை நிகழ்த்துவதை நாம் வாசிக்க கேட்டோம். 

    இறைவனின் வார்த்தை ஒவ்வொரு நாளும் நமது வாழ்வில் பலவிதமான வல்ல செயல்களை நிகழ்த்த வல்லது. நாம் கடவுளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கின்ற போது அவர் நம்மை நோக்கி 100 அடிசன் எடுத்து வைக்கக்கூடிய கடவுளாக இருக்கின்றார். நாம் நம்மிடம் இருப்பதை அடுத்தவரோடு பகிர்வோம். நாம் கேட்ட இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள முயல்வோம். அதற்கான அருளை வேண்டி இன்றைய நாளில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

புதிய வாழ்வில் அவரோடு இணைந்திட... (31-7-22)

புதிய வாழ்வில் அவரோடு இணைந்திட... (31-7-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
குற்றமுள்ள நெஞ்சு குறுக்கும் என்பதற்கேற்ப, தான் செய்த குற்றத்தை எண்ணி மனம் வருந்தக் கூடிய ஒரு நபராக நாம் இருக்க வேண்டும் என்ற சிந்தனையினை இன்றைய முதல் வாசகம் வழியாக இறைவன் நமக்கு வழங்குகின்றார். 

     இறைவாக்கினர் எரேமியா வழியாக இஸ்ரயேல் மக்கள் பல தவறான காரியங்கள் செய்ததை இறைவன் சுட்டிக் காட்டுகிறார். ஆனால் தங்களை குறை சொல்லுகின்ற, தங்களின் செயல்களை கண்டிக்கின்ற இந்த எரேமியாவை ஏற்று கொள்ளாத மனிதர்களாக இஸ்ரயேல் மக்கள் இருந்தார்கள். ஆனாலும் இறைவாக்கினர் எரேமியா,"நீங்கள் மனம் மாறி ஆண்டவரை நாடுகிற போது, அவர் உங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார் என்பதை வலியுறுத்தி மனமாற்றத்திற்கான விதையை தூவுவதை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம். 

        இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட, தான் கொலை செய்த யோவான் தான் மீண்டுமாக உயிர்த்து வந்து விட்டாரோ என ஏரோது இயேசுவைக் கண்டு கலங்குவதை நாம் வாசிக்க கேட்டோம் ‌.  

     இன்றைய இரண்டு வாசகங்களும் நமக்கு தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது, நமது வாழ்வில் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை எல்லாம் நினைவு கூர்ந்து, மீண்டுமாக அத்தவறுகளை செய்யாமல், நம்மை நாமே சரிப்படுத்திக் கொண்டு, ஆண்டவர் நமக்கு காட்டுகின்ற பாதையில் பயணம் செய்வதற்கான ஒரு அழைப்பினை இறைவன் தருகின்றார். 

           நாம் செய்கின்ற செயல்களை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, தவறான செயல்களுக்காக மனம் வருந்தி, இறைவனிடத்தில் மன்னிப்பு வேண்டுகிற போது, கடவுள் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ள கூடியவராக இருக்கின்றார். இந்த இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக தீய வாழ்வை களைந்து, புதிய வாழ்வில் அவரோடு இணைந்திட இன்றைய நாளில் இறைவன் அழைப்பு தருகிறார். 

       இறைவனின் அழைப்பிற்கு திறந்த மனதோடு செவி கொடுத்து, அவரின் ஆசிகளை பெற்றுக் கொள்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பாராக.?

ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக....(30-7-22)

ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக....(30-7-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
குற்றமுள்ள நெஞ்சு குறுக்கும் என்பதற்கேற்ப, தான் செய்த குற்றத்தை எண்ணி மனம் வருந்தக் கூடிய ஒரு நபராக நாம் இருக்க வேண்டும் என்ற சிந்தனையினை இன்றைய முதல் வாசகம் வழியாக இறைவன் நமக்கு வழங்குகின்றார். 

     இறைவாக்கினர் எரேமியா வழியாக இஸ்ரயேல் மக்கள் பல தவறான காரியங்கள் செய்ததை இறைவன் சுட்டிக் காட்டுகிறார். ஆனால் தங்களை குறை சொல்லுகின்ற, தங்களின் செயல்களை கண்டிக்கின்ற இந்த எரேமியாவை ஏற்று கொள்ளாத மனிதர்களாக இஸ்ரயேல் மக்கள் இருந்தார்கள். ஆனாலும் இறைவாக்கினர் எரேமியா,"நீங்கள் மனம் மாறி ஆண்டவரை நாடுகிற போது, அவர் உங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார் என்பதை வலியுறுத்தி மனமாற்றத்திற்கான விதையை தூவுவதை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம். 

        இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட, தான் கொலை செய்த யோவான் தான் மீண்டுமாக உயிர்த்து வந்து விட்டாரோ என ஏரோது இயேசுவைக் கண்டு கலங்குவதை நாம் வாசிக்க கேட்டோம் ‌.  

     இன்றைய இரண்டு வாசகங்களும் நமக்கு தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது, நமது வாழ்வில் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை எல்லாம் நினைவு கூர்ந்து, மீண்டுமாக அத்தவறுகளை செய்யாமல், நம்மை நாமே சரிப்படுத்திக் கொண்டு, ஆண்டவர் நமக்கு காட்டுகின்ற பாதையில் பயணம் செய்வதற்கான ஒரு அழைப்பினை இறைவன் தருகின்றார். 

           நாம் செய்கின்ற செயல்களை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, தவறான செயல்களுக்காக மனம் வருந்தி, இறைவனிடத்தில் மன்னிப்பு வேண்டுகிற போது, கடவுள் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ள கூடியவராக இருக்கின்றார். இந்த இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக தீய வாழ்வை களைந்து, புதிய வாழ்வில் அவரோடு இணைந்திட இன்றைய நாளில் இறைவன் அழைப்பு தருகிறார். 

       இறைவனின் அழைப்பிற்கு திறந்த மனதோடு செவி கொடுத்து, அவரின் ஆசிகளை பெற்றுக் கொள்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பாராக.

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...