ஆண்டவரின் பாதையில் அனுதினமும்
நடக்க (13-8-22)
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய முதல் வாசகத்தில் புளித்த திராட்சை பழங்களை பெற்றோர் தின்றால் பிள்ளைகளின் பல் கூசிற்று என்ற யூத பழமொழியை இறைவன் சுட்டிக்காட்டுகிறார். இந்த பழமொழியின் உள்ளார்ந்த அர்த்தம் என்ன என சிந்திக்கின்ற போது, பெற்றோர்கள் செய்த தவறின் விளைவாக பிள்ளைகள் தண்டிக்கப்படுகிறார்கள் என்ற மனநிலையானது யூதர்களிடத்திலிருந்தது. தான் செய்கிற தவறை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாதவர்கள், தாங்கள் தண்டிக்கப்படுவதற்கான காரணம் தாங்கள் செய்கிற தவறு அல்ல, மாறாக எங்கள் முன்னோர் செய்த தவறு என மற்றவரை குறை கூறி, தங்களை நியாயவாதிகள் போல காட்டிக்கொள்ளக் கூடிய மனப்பான்மை யூதர்களிடத்தில் பரவிக் காணப்பட்டது.
ஆனால் இறைவன் சிறு குழந்தைகளைப் போல கள்ளம் கபடமற்றவர்களாக செய்கிற தவறை எல்லாம் தவறு செய்தால் தவறு என ஏற்றுக்கொண்டு, அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு வேண்டி மனமாற்றம் அடைந்த மனிதர்களாக நாளும் வளர வேண்டும் என்ற சிந்தனையினை இறைவன் இன்றைய நாளில் நமக்கு தருகின்றார். இறைவன் தரக்கூடிய இந்த வாழ்வுக்கான சிந்தனையை இதயத்தில் ஏற்றுக் கொண்ட மனிதர்களாக, நாம் செய்கிற செயல்களை சீர்தூக்கி பார்த்து, நாம் செய்கிற தவறுகளை ஏற்றுக் கொள்வதற்கான மனத்திடனை இறைவன் நமக்கு வழங்க வேண்டும் என இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம்.
நாம் செய்கிற தவறை நாம் உணர்ந்து கொண்டு, அதை சரி செய்து கொண்டு, ஆண்டவரின் பாதையில் அனுதினமும்
நடக்க ஆண்டவரின் அருளினை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.
இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக