வியாழன், 6 ஏப்ரல், 2023

புனித வியாழன்! (6-4-2023)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

       இன்று குருத்துவத்தையும் நற்கருணையையும் ஏற்படுத்திய விழாவினை நாம் கொண்டாடுகின்றோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறப்பதற்கு முன்பதாக நற்கருணையை ஏற்படுத்தி அந்நற்கருணை கொண்டாட்டத்தை நாள்தோறும் நினைவு கூரும் வண்ணமாக குருத்துவத்தை ஏற்படுத்திய ஒரு நன்னாள். இந்த நாளிலே நாம் அறிந்த அனைத்து குருக்களுக்காகவும் ஜெபிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இன்றைய நவீன சூழலில் எத்தனையோ இடர்பாடுகளும் எத்தனையோ விதமான தடைகளுக்கு மத்தியிலும் குருத்துவப் பணியை ஆற்றுகின்ற குருக்களை நினைவு கூருவோம். அவர்களுக்கு ஆண்டவர் தாமே இந்த உலக இச்சைகளுக்கு மத்தியிலும் எதிர்த்து நிற்பதற்கான வலிமையை தர வேண்டும் என மன்றாடுவோம்.

       நமது குடும்பத்தில் இறை அழைத்தல் பெருகுவதற்காக இறைவனிடம் வேண்டுவோம். இயேசுவோடு உடனிருந்த சீடர்கள் தகுதியற்ற நிலையில் இருந்தாலும் கூட அவர்களை தகுதி உள்ளவர்களாக மாற்றி தன் பணிக்கென அவர்களை அமர்த்திய இயேசுவைப்போல நம் மத்தியில் இயேசுவின் சீடர்களாக அவரது பணியில் பங்கெடுக்கக்கூடியவர்களாக வலம் வருகின்ற குருக்களின் வாழ்வுக்காகவும் உடல் நலத்திற்காகவும் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

செவ்வாய், 4 ஏப்ரல், 2023

உங்களுள் ஒருவன் என்னை காட்டிக் கொடுப்பான்! (5-4-2023)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

   யூதாசு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுப்பான் என்பதை இயேசு மற்றவர்கள் முன்னிலையில் உரையாடுவதைத்தான் இன்றைய வாசகமாக நாம் வாசிக்க கேட்கின்றோம். உங்களுள் ஒருவன் என்னை காட்டிக் கொடுப்பான் என்று சொல்ல, அங்கிருந்த சீடர்கள் ஒவ்வொருவருமே நானா? நானா? என்று சொல்லுகிற போது,  யூதாசும் அவர்களுள் ஒருவனாக, நானா? என கேள்வி எழுப்புகிற போது, நீயே சொல்லிவிட்டாய் என்று இயேசு சொல்லுகிறார்.

 ஏன் யூதாசு இயேசுவை காட்டிக் கொடுத்தார் என்ற கேள்விக்கு பலரும் பல விதமான புரிதல்களோடு பதில் சொல்லியிருந்தாலும்,  உடனிருப்பவரை தனியே விட்டுச் செல்வது என்பதும், உடனிருப்பவருக்கு துன்பத்தை உருவாக்குவது என்பதும், உடனிருப்பவருக்கு துரோகம் விளைவிப்பது என்பதும், என்றுமே ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாகவே கருதப்படுகிறது. ஆனால் இந்த மனிதன் தனக்கு எதிராக துரோகம் செய்வான் என்பதை அறிந்திருந்த நிலையிலும் கூட, அவனை அருகில் வைத்து அவன் கையில் பணப் பொறுப்புகளை கொடுத்து அவனை தகுதி உள்ள மனிதனாக மாற்றுவதற்கான முயற்சியில் இயேசு ஈடுபட்டார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

    என்னதான் இறைவனின் வார்த்தைகளை பலமுறை கேட்டிருந்தாலும் நம் வாழ்வில் இந்த உலகை இச்சைகளுக்குள் மூழ்கி கிடப்பது போலவே யூதாசின் வாழ்வும் இந்த உலக இச்சைகளுக்கு அடிமையாகிப் போனதாக இருந்தது. அதன் விளைவுதான் இயேசுவை காட்டிக் கொடுக்க அவன் பணத்தைப் பெற்றுக் கொண்டான். இப்பணத்தை பெற்றுக்கொண்டு இயேசுவை காட்டிக் கொடுத்தான். இந்த யூதாசு போல நம் வாழ்வை நாம் கறைபடுத்திக் கொள்ளாமல் கடவுளுக்கு உகந்த வாழ்வை வாழவும், நமது வாழ்வில் கடவுள் நமக்கு கற்றுத் தருகின்ற அனைத்து காரியங்களையும் கண்டுணர்ந்து கொண்டு நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, இயேசுவின் பாதையில் தொடர்ந்து பயணிக்க இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

திங்கள், 3 ஏப்ரல், 2023

மற்றவரின் வாழ்வு மேம்பட நம்மை சீர்படுத்துவோம்! (4-4-2023)


ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

            
 ஆண்டவர் இயேசு கிறிஸ்து தனது இறப்பை பற்றி எடுத்துரைக்கின்றார். தன்னோடு இருப்பவர்களுள் ஒருவன் தன்னை காட்டிக் கொடுப்பான் என்பதை அறிந்திருந்தாலும் கூட ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவர்களுக்கு மற்றவர்களுக்கான வாழ்க்கை நெறியை கற்பிப்பதற்கு தகுதியுள்ளவர்களாக அவர்களை மாற்றுகிறார் என்பதை இன்றைய வாசகங்களின் வாயிலாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம்.  எத்தனையோ குறைபாடுகள் இயேசுவின் சீடர்களிடத்திலிருந்தாலும் கூட, குறைகளை மிகைப்படுத்தாமல் அந்த குறைகளை களைவதற்கு ஏற்ற வகையிலும் மற்றவர் வாழ்வில் இருக்கிற குறைகளை களைவதற்கு ஏற்ற வகையிலும் தன்னுடைய சீடர்களை பக்குவப்படுத்திய இயேசுவைப் போலவே நீங்களும் நானும் நமது உள்ளத்தை சீர்தூக்கி பார்த்து நிமிடம் இருக்கின்ற குறைகளை எல்லாம் அகற்றிவிட்டு கடவுளுக்கு உகந்த மனிதர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள அழைக்கப்படுகின்றோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னோடு இருந்த சீடர்களின் மனநிலையை அறிந்திருந்தாலும் கூட அவர்களின் வாழ்வு மேம்படுவதற்கான வழிகளை கற்பித்தார். அவர்கள் வழியாக பலரின் வாழ்வு மேம்படுவதற்கு ஏற்ற வகையில் அவர்களை தயார்படுத்தினார். இந்த இயேசுவின் மனநிலையை நம்மிலும் கொண்டவர்களாக நம்மோடு வாழ்பவர்களை ஊக்கப்படுத்தவும் நம்மோடு வாழ்பவர்களிடத்தில் இணைந்து வாழவும் இறைவனிடத்தில் இன்றைய நாளில்  அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

மரியாவை தடுக்காதீர்கள்! (3-4-2023)



இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
     உணவு அருந்துவதற்காகச் சென்ற இயேசுவின் காலடிகளில் ஒரு பெண்மணியானவள் அமர்ந்து, தன் கண்ணீரால் அவரது கால்களைக் கழுவி, தன் கூந்தலாலால் அவர் கால்களை துடைத்து, தன் கையில் வைத்திருந்த நறுமண தைலத்தை அவர் காலில் கொட்டி பூசுகின்ற ஒரு நிகழ்வை நாம் வாசிக்கக் கேட்டோம்.  இந்த நிகழ்வு நடக்கிற போது அங்கு இயேசுவின் சீடர்களும் இருந்தார்கள். அவர்களுள் ஒருவரான யூதாசு, "இந்த நறுமண தைலத்தை ஏன் வீணாக்க வேண்டும்? முந்நூறு தெனாரியத்திற்கு மதிப்பு பெற்ற இந்த தைலத்தை ஏழைகளுக்கு கொடுத்து இருக்கலாமே என்று அவர் சொல்லுவது, பல நேரங்களில் அவர் ஏழைகளின் மீது கொண்டிருந்த அன்பை உணர்த்துவது போல இருந்தாலும், அப்பணத்தின் மீது அவர் கொண்டிருந்த மோகத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது. இயேசுவின் வாழ்வில் அரங்கேறிய இந்நிகழ்வானது,  இயேசு விரைவில் இறக்கப் போகிறார்; துன்பப்பட போகிறார் என்பதை வெளிப்படுத்தும் வண்ணமாக நிகழ்ந்தது என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

     நம் வாழ்வில் இதுபோல நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளுமே, ஏதோ ஒன்றை நமக்கு கற்றுத் தருகிறது. ஒரு விதத்தில் நாம் இன்னும் கடவுளின் மீது நம்பிக்கை கொள்ளவும், நம் வாழ்வில் வருகிற துன்ப துயரங்களுக்கு எப்போதும் தயார் நிலையில் இருப்பதற்கான ஆற்றலை பெற்றுக் கொள்ளவும் இறைவன் ஒவ்வொரு நாளும் பல வழிகளில் நம்மை ஊக்கப்படுத்துகிறார்; தகுதிப்படுத்துகிறார். இதனை உணர்ந்து கொண்டு வாழ்வில் வருகிற அத்துனை நிகழ்வுகளையும் இறைவனின் துணை கொண்டு எதிர்கொண்டு சென்றிட இறைவனிடத்தில் இறையருள் வேண்டி இன்றைய நாளில் இணைந்து ஜெபிப்போம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
 

ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு! (2-4-2023)



 ஆண்டவர்  இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

 இன்று தாய்த்திரு அவையாக இணைந்து நாம் குருத்து ஞாயிறை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கையில் ஏந்திய ஓலைகளோடு இயேசுவோடு இருந்தவர்கள் எருசலேம் நகர் நோக்கி அழைத்து வந்ததை நினைவு கூர்ந்து நாமும் இந்த குருத்தோலை பவனியில் இடம் பெறுகின்றோம்.  அன்று இயேசு செய்த அத்துனை அரும் செயல்களையும் கண்டு அவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக இவரே தங்களின் அரசராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை இதயத்தில் சுமந்தவர்களாக,  கையில் பலவிதமான குருத்தோலைகளை வைத்துக்கொண்டு வெற்றி முழக்கத்தோடு ஓசன்னா கீதம் பாடி, ஆண்டவர் இயேசுவை எருசலேம் நகர் நோக்கி மக்கள் அழைத்து வந்தார்கள்.  இவர்களின் இச்செயல் யூதர்கள் சிலருக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும், பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் பலவிதமான கலக்கத்தை உருவாக்கியது. எங்கே இவரை அரசராக்கி விடுவார்களோ என்ற ஐய உணர்வின் காரணமாகத்தான் இயேசுவை பழிவாங்குவதற்கும் இயேசுவை அழிப்பதற்குமான வழியை அவர்கள் தேடத் தொடங்கினார்கள்.
      ஆனால் கையில் குருத்தோலைகளை ஏந்தியவர்களாக, ஓசன்னா கீதம் பாடி,  இந்த இயேசுவின் செயல்களை புகழ்ந்து அவரை அரசராக்க வேண்டும் என்று மனநிலையோடு எருசலேம் நோக்கி அழைத்து வந்தவர்கள் தான்,  இன்னும் சில நாட்களில் ஆண்டவர் இயேசுவே! ஒழியும்! என்று சொல்லக்கூடிய மனிதர்களாக மாறப்போகிறார்கள் என்பதையும் உணர்ந்தவராக ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்தையும் ஏற்றுக்கொண்டார். தன் வாழ்வில் வந்த பாராட்டுகளையும் ஏற்றுக் கொண்டார்; இன்னல்களையும் ஏற்றுக் கொண்டார்; மற்றவர்களின் வசைப் பேச்சுக்களையும் அவர் ஏற்றுக் கொண்டார். அனைத்தையும் அவர் ஏற்றுக் கொண்டதற்கான அடிப்படை,  அவர் அனைவரும் மீதும் கொண்டிருந்த ஆழமான அன்பும் நட்புறவுமே. அந்த அன்பின் காரணமாகவும் நட்புறவின் காரணமாகவும் தான் இயேசு இந்த சமூகத்தில் எத்தனையோ நல்ல பணிகளை செய்து வந்தார்.  இப்பணிகளை செய்திருந்தாலும் கூட,  தன்னை உணர்ந்து கொள்ளாத மக்கள், இன்று தன்னை உணர்ந்து கொண்டவர்கள் கூட நாளை தன்னை மறுதலிப்பார்கள் என்பதை உணர்ந்து இருந்தாலும் அவர்களின் வாழ்வு மேம்பட பல்வேறு காரியங்களை இயேசு செய்தார்.

     இந்த இயேசுவை போலத் தான் நீங்களும் நானும் நன்மைகளை மட்டும் செய்கின்ற நபர்களாக, இச்சமூகத்தில் இருக்க வேண்டும் என்று அழைப்பை இதயத்தில் இருத்திக்கொள்ள அழைக்கப்படுகிறோம். நாம் செய்கின்ற காரியங்களை உணர்ந்து கொள்ளாதவர்களாக இருந்தாலும் சரி, உணர்ந்து கொண்டு நம்மை பாராட்டி விட்டு நாளை நம்மை தூற்றுகிறவர்களாக அவர்கள் மாறினாலும் சரி, நாம் நன்மைகளை மட்டும் செய்கிற நபர்களாக நாளும் இயேசுவைப்போல இந்த சமூகத்தில் பயணம் செய்ய இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

ஒன்றாய் சேர்ப்பதற்காக இறக்கப் போகிறார். (1-4-2023)


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
       இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஒரு இனம் முழுவதும் அழிந்து போவதற்கு பதிலாக ஒரு மனிதன் அழிந்து போவது நலம் என்று கருதி ஆண்டவர் இயேசுவை கொல்வதற்கு சூழ்ச்சி செய்கின்றார்கள், யூதர்களும் மறைநூல் அறிஞர்களும். ஏன் இயேசுவை இவர்கள் கொல்ல வேண்டுமென்ற கேள்வியை எழுப்பி பார்க்கிற போது, இயேசுவின் பெயரில் பலரும் நம்பிக்கை கொண்டார்கள். இயேசுவின் சொல்லையும் செயலையும் கண்டு அவரின் மீது நம்பிக்கை கொள்ளுகின்ற மனிதர்கள் நாளுக்கு நாள் அதிகமாகிய போது, எங்கே இந்த மனிதர்கள் நம்மை புறம் தள்ளி விடுவார்களோ என்ற ஐய உணர்வு. இயேசுவை குற்றவாளியாக சித்தரித்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையோடு, இயேசுவை கொல்வதற்காக வழிகளை தேடியவர்களாகவும், இயேசுவை பிடிப்பதற்காக காத்திருக்கக் கூடியவர்களுமாக இவர்கள் இருப்பதைத்தான் இன்றைய வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது.

    பல நேரங்களில் நாம் செய்கின்ற நன்மைத்தனங்களை  எல்லாம் உதறித் தள்ளிவிட்டு, நமக்கு எதிராக சூழ்ச்சிகளை செய்கின்ற நபர்களை நாம் வாழ்வில் சந்திக்கின்ற போதெல்லாம், நாமும் இந்த இயேசுவைப் போலவே செயல்படுகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. 

                ஆனால் எத்தகைய இன்னலும் இடையூறுகளும் வந்தாலும், இயேசுவைப்போல தளரா மனதோடு இயேசுவின் பணியை செய்கின்றவர்களாக, இயேசுவிடமிருந்து கற்றுக் கொண்ட இறையாட்சியின் மதிப்பீடுகளை இதயத்தில் இருத்தி அவற்றுக்கு செயல் வடிவம் தருகின்ற நபர்களாக, நம் வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள, ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள்! (31-3-2023)



இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
           இயேசுவோடு இருந்தவர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் அவர் மீது குற்றம் சுமத்தி அவர் மீது கல்லெறிய முயலுவதைத் தான் இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் வாசிக்கக் கேட்கிறோம்.

   இது போன்ற ஒரு நிகழ்வைத்தான் இன்றைய முதல் வாசகத்திலும் நாம் வாசிக்க கேட்கிறோம். எரேமியா ஆண்டவரின் வார்த்தைகளை அனைவருக்கும் எடுத்துரைத்து, அவர்களின் தீய பழக்கத்திலிருந்து விடுபட்டு வாழ்வு நெறிப்படுவதற்கான வழிகளை காட்டி இருந்தாலும், அங்கிருந்தவர்கள் எல்லாம் ஒன்று கூடி இந்த எரேமியாவுக்கு எதிராக குற்றம் சுமத்துவதற்கு ஒன்று கூடியது போல, இயேசு செய்த அத்தனை அரும் அடையாளங்களையும் கண்டிருந்தாலும், அவர் சொன்ன நல்லவற்றை கேட்டிருந்தாலும், அதனை எல்லாம் புறந்தள்ளி விட்டு கேட்பாரின் பேச்சை கேட்டுக்கொண்டு, பலர் யூதர்களின் சூழ்ச்சியால் அதிலும் குறிப்பாக பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர்களுடைய சூழ்ச்சியால், இயேசுவின் செயல்களில் குற்றங்களை சுமத்தி, அவரை குற்றவாளியாக தீர்ப்பிட வேண்டும் என்ற எண்ணத்தோடு கல்லெறிவதற்கு முயலுகிறார்கள்,   இயேசுவோடு உடன் இருந்தவர்கள்.  என்னை நீங்கள் நம்பவில்லை என்றால், என் செயல்களைக் கொண்டாவது என்னை உணர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லி இயேசு அவர்களிடம் கூறிவிட்டு, அவர்கள் மத்தியில் இருந்து நகர்ந்து செல்லுகின்றார்.

         இந்த இயேசுவைப் போல பல நேரங்களில் நாமும் சோதனைகளுக்கு உள்ளாகலாம். நாம் செய்கின்ற நன்மைத்தனங்களை பலர் கண்டிருந்தும், அவற்றை ஏற்றுக் கொள்ளாமல், நம்மிடம் இருக்கின்ற குறைகளை மட்டும் பெரிதுபடுத்தி, செய்யாத தவறினை இயேசுவின் மீது சுமத்தியது போல,  நம்மீதும் பலவிதமான குற்றங்களை மட்டுமே சுமத்தி, நாம் செய்கின்ற நன்மைத்தனன்களை உதறித் தள்ளுகின்ற மனிதர்களை நம் வாழ்வில் நாமும் சந்திக்க நேரலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையை சந்திக்கிற போது கூட, ஆண்டவர் இயேசுவைப்போல அனைவரின் நலனுக்கானதை மட்டும் எடுத்துரைப்பவர்களாக அனைவரின் நலனை மையப்படுத்தி தன் வாழ்வையே இழந்த இயேசுவைப்போல, நமது வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள இறைவனிடத்தில் இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

இறை வார்த்தைக்கு உரு கொடுப்போம்! (30-3-2023)



 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

    இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் ஆபிரகாமுக்கு கொடுத்த ஆசிகளை குறித்தும் வாக்குறுதிகளை குறித்தும் நாம் வாசிக்க கேட்கிறோம். நற்செய்தி வாசகத்தில் இயேசு பெரியவரா? ஆபிரகாம் பெரியவரா? யார் யாருக்கு முதன்மையானவர்கள் என்ற போட்டியானது நிலவுகிறது.

    படைப்பின் தொடக்கத்தில் தூய ஆவியானவர் நீரின் மீது அசைவாடிக் கொண்டிருந்தார். கடவுள் உலகைப் படைத்து கொண்டிருந்தார். அவர் சொல்ல ஒவ்வொன்றும் உண்டாகியது. இங்கு இயேசு எங்கு இருக்கிறார் என்ற கேள்வி எழுப்புகிற போது, கடவுளின் வார்த்தையாகத்தான் இயேசு படைப்பின் தொடக்கத்தில் இருந்தார். எனவே தான் வார்த்தை மனுவுருவானார் என இயேசுவை குறித்து நாம் விவிலியத்தில் சொல்லுகின்றோம். இதை மையப்படுத்தி தான் இயேசு, தான் படைப்பின் தொடக்கத்தில் இருந்தே இருக்கிறேன் என்று, அதாவது ஆபிரகாமுக்கு முன்பிருந்தே தான் இருக்கிறேன் என்று குறிப்பிட்டார். இதை உணர்ந்து கொள்ள இயலாமல் தான், யூதர்கள் தங்களுக்கிடையே இவர் ஆபிரகாமை விட பெரியவரோ என்ற கேள்வியை எழுப்பி இயேசுவின் மீது கல் எறிவதற்கு முயற்சிக்கிறார்கள்.  பல நேரங்களில் ஆண்டவரின் வார்த்தைகளை ஆழமாக இதயத்தில் இருத்தி சிந்திக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். ஆபிரகாமுக்கு கடவுளின் வார்த்தைகள் வழங்கப்பட்ட போதெல்லாம் ஏதோ ஒன்று, பத்தோடு பதினொன்று, அத்தோடு நான் ஒன்று என்ற மனநிலையோடு அதை ஏற்றுக் கொண்டவர் அல்ல. அனைத்தையும் இதயத்தில் இருத்தி சிந்தித்தவர். அந்த இறைவன் மீது ஆழமான நம்பிக்கையில் வளர்ந்தவர். எனவே தான் நம்பிக்கையின் நாயகனாக, இன்றும் நம்பிக்கையின் தந்தை என ஆபிரகாம் அழைக்கப்படுகிறார்.
      இறைவனுடைய வார்த்தைகளை அன்னை மரியா இதயத்தில் வைத்து சிந்தித்தது போல, நீங்களும் நானும் அன்னை மரியாவைப் போலவும், ஆபிரகாமைப் போலவும், ஆண்டவரின் வார்த்தையை அனுதினமும் இதயத்தில் இருத்தி ஆழமாக சிந்திக்கவும், அந்த சிந்தித்த வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற நபர்களாக இயேசுவின் பாதையில் தொடர்ந்து பயணிக்க இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

நீங்கள் விடுதலை பெற்றவர்கள்! (29-3-2023)



இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

        ஆண்டவரின் வார்த்தைக்கு செவி கொடுக்கின்ற மக்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள இறைவன் இன்றைய இறை வார்த்தை வழியாக நமக்கு அழைப்பு விடுக்கின்றார். கடவுளுடைய குரலைக் கேட்டு அதன்படி செயல்படுகிறபோது நமது வாழ்வு அர்த்தமுள்ள ஒரு வாழ்வாக இருக்கும். எப்போதெல்லாம் இஸ்ரேல் மக்கள் கடவுளின் குரலுக்கு செவி கொடுக்க மறந்தார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் வாழ்வில் பலவிதமான துன்ப துயரங்களுக்கு உள்ளானார்கள் என்பதை விவிலியத்தின் துணைகொண்டு நாம் அறிந்து கொள்ள முடியும். நாளும் நமது வாழ்வை நலமோடு அமைத்துக்கொள்ள இறை வார்த்தையை இதயத்தில் இருத்திக் கொள்வோம். கடவுளின் வார்த்தைகளை பின்பற்றுவது மட்டுமே நம் வாழ்வின் இலக்கு என்பதை உணர்ந்தவர்களாக, நாளும் இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

இருக்கிறவர் நானே! (28-3-2023)


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

          கடவுள் எப்போதும் நம்மோடு இருப்பவர். இந்த இறைவனின் குரலுக்கு செவி கொடுத்து நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்வதற்கான அழைப்பை இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு தருகின்றார்.  உடன் இருக்கின்ற இறைவனது குரலுக்கு செவி கொடுக்காமல் இஸ்ரயேல் மக்கள் தங்கள் வாழ்வை தங்கள் மனம் போன போக்கில் அமைத்துக் கொண்ட போதெல்லாம் கடவுள் மீண்டும் மீண்டுமாக அவர்களை தம் வழிக்கு அழைத்து வந்தார்.

      அதுபோலவே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் இம்மண்ணில் வாழ்ந்த போது எத்தனையோ நன்மைத்தனங்களை எடுத்துரைத்த போது அதற்கு செவி கொடுக்காத மனிதர்களாக பல யூதர்கள் தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். இத்தகைய மனிதர்களைப் போல நமது வாழ்வை நாம் அமைத்துக் கொள்ளக்கூடாது என்பதை தான் இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் வலியுறுத்துகிறார். நம்மோடு இருக்கின்ற இறைவனின் குரலுக்கு செவி கொடுத்து, நாளும் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு வாழ இறைவனிடத்தில் அருள் வேண்டி இன்றைய நாளில் இறை வேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

உங்களுள் பாவம் இல்லாதவன்!!!! (27-3-2023)


    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !

             இன்றைய நற்செய்தி வாசகத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகச் சொல்லி ஒரு பெண்ணை இயேசுவின் முன்னால் நிறுத்தி, மோசேயின் சட்டப்படி இவரை கல்லால் எரிந்து கொல்லலாமா என்ற கேள்வியை எழுப்புகிற போது ஆண்டவர் அடுத்தவரை தீர்ப்பிடுவதற்கு பதிலாக நாம் நேர்மையாளராகவும் நீதியோடும் செயல்பட வேண்டும் என்பதை இலை மறை காயாக எடுத்துரைக்கின்றார். உங்களின் குற்றமில்லாதவர் முதல் கல்லை எரியட்டும் என்ற இயேசுவின் வார்த்தைகள் அங்கிருந்த ஒவ்வொருவரின் உள்ளத்தையும் ஊடுருவியது.

    ஒருவரும் தங்கள் வாழ்வை சீர்தூக்கிப் பார்த்து  சிறுவர் முதல் பெரியவர் வரை கையில் ஏந்திய கல்லை தரையில் போட்டுவிட்டு நகர்ந்து சென்றார்கள் என விவிலியம் சுட்டிக்காட்டுகிறது.

 குற்றம் செய்தார் என்றும், கையும் களவுமாக பிடிபட்டார் என்றும் அவர்கள் கொண்டு வந்து நிறுத்தியது ஒரு பெண்ணை மட்டுமே. ஆணாதிக்க சமுதாயம் தன்னை காத்துக் கொண்டு, ஒரு பெண்ணை மட்டும் குற்றவாளியாக நிறுத்துகின்ற ஒரு நிகழ்வினை அன்று முன்னெடுத்தது. கடவுளின் பார்வையில் அனைவரும் மதிக்கத்தக்கவர்கள்.  பாலினமோ அல்லது இனத்தின் அடிப்படையிலோ, மதத்தின் அடிப்படையிலோ, மொழியின் அடிப்படையிலோ, நம்மில் பிளவுகள் இல்லை; வேறுபாடுகள் இல்லை என்பதை இயேசு எடுத்துரைக்கும் வண்ணமாக, பிறரை குற்றவாளி என யாரும் தீர்ப்பிடக்கூடாது; இந்த தீர்ப்பிடுதல் என்பது இறைவனுக்கு உரியது என்பதை எடுத்துரைக்கின்றார். இயேசுவிடம் இருந்து நாம் இன்றைய நாள் இறைவார்த்தையின் வழியாக கற்றுக்கொண்ட இந்த தீர்ப்பிடக்கூடாது என்ற பண்பினை இதயத்தில் இருத்திக் கொள்வோம். நாம் வாழுகின்ற சமூகத்தில் மற்றவர்களை குற்றவாளிகள் என தீர்ப்பிடுகிற போதெல்லாம் நாமும் தீர்ப்பிடப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறோம்; குற்றவாளிகளாக இருந்து கொண்டு தான் இருக்கிறோம் என்பதை இதயத்தில் இருத்தியவர்களாக, நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நம்மால் முடிந்த நன்மைகளை மற்றவருக்குசா செய்யவும் நீதியோடும் நேர்மையோடும், என்றும் பயணிக்கவும் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே! (26-3-2023)




இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

               இயேசுவின் இறப்புக்கு பிறகாக யூதர்கள் பலரும் கொல்லத் தேடிய ஒரு நபர் இலாசர். காரணம், இறந்த இலாசாரை ஆண்டவர் உயிர்த்தெழச் செய்தார். இந்த உயிர்ப்புச் செய்தியானது பலருக்கும் பரவியது. எனவே இந்த லாசர் இயேசுவை பற்றி பேசுவதற்கு காரணமாக இருக்கிறார் என்ற எண்ணத்தோடு இந்த இலாசாரை அழித்து விடுவதற்கான முயற்சியில் யூதர்கள் ஈடுபட்டார்கள் என்பதை வரலாறு சுட்டிக்காட்டுகிறது. 

     இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறந்த இலாசரை ஆண்டவர் உயிர்ப்பிக்கின்ற நிகழ்வினை வாசிக்க கேட்டோம்.  மனிதனுக்குள் இருக்கின்ற தூய ஆவியானவர் இவ்வுலகின் இச்சைகளின்படி வாழாமல் கடவுளுக்கு உகந்தபடி வாழ்வதற்கான அறிவுறுத்தலை கொடுத்துக்கொண்டே இருக்கிறார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் சுட்டிக்காட்டுகிறது. இந்த இரண்டாம் வாசகத்தின் அடிப்படையில் நமக்குள் இருக்கின்ற ஆவியாரின் குரலுக்கு செவி கொடுக்கின்ற போது நம் வாழ்வு அர்த்தமுள்ள ஒரு வாழ்வாக மாறும். இயேசு தன்னுடைய வாழ்வில் தன்னிடம் இருந்த ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து இந்த சமூகத்தில் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுகின்ற மனிதராக தன் வாழ்வை அமைத்துக் கொண்டார்.  இந்த இயேசுவை பின்பற்றக்கூடிய நீங்களும் நானும் நமக்குள் இருக்கின்ற ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து இவ்வுலக இச்சைகளை புறம் தள்ளிவிட்டு கடவுளுக்கு உரியவற்றிற்கு முதன்மையான இடம் கொடுத்து இவ்வுலக வாழ்வில் அனுதினமும் நம் செயல்களை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கிறிஸ்துவின் பிறப்பு அறிவிப்பு விழா! (25-3-2023)



இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

    தாய் திருவையானது இயேசுவின் பிறப்பு அறிவிக்கப்பட்ட நிகழ்வை இன்றைய நாளில் நினைவு கூர்ந்து மகிழ்வதற்கு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இதோ உமது திருவுளத்தை நிறைவேற்ற நான் வருகிறேன் என்று சொல்லி பலிகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டு தன்னையே பலியாக கொடுத்த இயேசுவின் பிறப்பு இன்று அறிவிக்கப்படுவதைத் தான் இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம். 

    அன்றைய யூத சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகளை பெண்கள் சந்தித்து கொண்டிருந்த போதும் கூட, கடவுளின் தூதர் மரியாவுக்கு தோன்றி இயேசுவின் பிறப்பை அறிவித்த போது, கடவுளின் பணியாளராக தன்னை ஏற்றுக்கொண்ட மரியா, நான் ஆண்டவரின் அடிமை! உமது சொற்படி எனக்கு நிகழட்டும் என்று சொல்லி கடவுளின் தூதர் கூறிய வார்த்தைகளுக்கு தன்னையே முழுவதுமாக இறைவனிடத்தில் அர்ப்பணித்தார். இந்த மரியாவின் அர்ப்பண உணர்வு உங்களிலும் என்னிலும் மேலோங்க வேண்டும் என்பதைத்தான் இன்றைய நாளில் இதயத்தில் இருத்திக் கொள்ள நாம் அழைக்கப்படுகின்றோம்.  மரியாவைப் போல கடவுளின் முன்னிலையில் நம்மை தாழ்த்திக் கொண்டு கடவுளால் 
கூடாத காரியம் எதுவுமில்லை என்பதை உணர்ந்தவர்களாக கடவுள் நமக்கென வகுத்து வைத்திருக்கின்ற அனைத்திற்கும் இதயத்தோடு இதயம் திறந்தவர்களாக செவி கொடுத்து, கடவுளுக்கு கீழ்ப்படிந்து நம் வாழ்வை அமைத்துக் கொள்ள ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

இயேசுவின் சீடர்கள் என சான்று பகர்வோம்! (24-3-2023)



இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !

          இயேசுவின் செயல்கள் இயேசுவை மெசியா என சுற்றி இருந்த அனைவராலும் கண்டுகொள்ள வைத்தது. அதன் விளைவாகத்தான் இயேசுவை மெசியா என்று அஞ்சி அவருக்கு எதிராக செயல்படுபவர்கள் கூட என்ன செய்வது என தெரியாமல், ஆனால் பல விதமான சூழ்ச்சிகளை தங்களுக்குள் மேற்கொண்டு இந்த இந்த இயேசுவை எப்படியாவது பிடித்து ஒழித்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.

     இயேசுவின் செயல்கள் இயேசுவை மெசியா என சுட்டிக்காட்டியது போல, இந்த இயேசுவை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய செயல்களும் நாம் இந்த இயேசுவை பின்பற்றுபவர்கள் என்பதை ஒவ்வொரு நாளும் வெளிக் காட்ட வேண்டும் என்பதை இதயத்தில் இருத்திக் கொண்டவர்களாக நம் செயல்களை சரி செய்து கொண்டு, கடவுளுக்கு உகந்த செயல்களை நம் செயல்களாக மாற்றிக்கொண்டு நம் செயல்களால் இயேசுவின் சீடர்கள் என சான்று பகரக்கூடிய ஒரு வாழ்வை நம் வாழ்வாக மாற்றிட இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

நமது செயல்கள் தந்தைக்கு உகந்ததா? (23-3-23)




    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
      இன்றைய இறை வார்த்தைகள் வாயிலாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து தான் கடவுளுக்கு அர்ப்பணம் ஆனவர்; கடவுளின் திருவுளப்படி இம்மண்ணில் வாழ்கிறவர் என்பதற்கான சான்று அவரின் செயல்கள் என்பதை எடுத்துரைக்கிறார். தன் செயல்கள் மூலமாக தான் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன் என்பதை இயேசுவின் வாழ்வில் இருந்து நாம் உணர்ந்து கொள்ளும் வகையில் அவரே அதனை எடுத்துரைக்கின்றார். இந்த இயேசுவை பின்பற்றுகின்ற நமது வாழ்வில் நாம் செய்கின்ற அன்றாட செயல்களும் இந்த இயேசுவின் பாதையில் நாம் பயணம் செய்கிறோம் என்பதை எடுத்துரைக்கின்ற செயல்களாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை வாயிலாக நீங்களும் நானும் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

                பரபரப்பான இந்த உலகத்தில் பம்பரமாக பல பணிகளுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கக்கூடிய நாம் ஒவ்வொருவருமே நமது செயல்கள் அனைத்தும் இயேசுவைப்போல தந்தையின் திருவுளத்திற்கு உகந்த செயல்களாக இருக்கிறதா என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பி பார்த்து நம் வாழ்வை சரி செய்து கொண்டு இயேசுவின் பாதையில் தொடர்ந்து பயணித்து நம் செயல்கள் மூலமாக அவருக்கு சான்று பகரக் கூடியவர்களாக மாறுவதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார். 

நாமும் இயேசுவும் இணைந்து இருக்க வேண்டும்! (22-3-23)



இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
   தந்தையும் இயேசுவும் ஒன்றாய் இணைந்திருந்தது போல நாமும் இயேசுவும் இணைந்து இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுகின்ற மனிதராக தன் வாழ்நாள் முழுவதும் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றியவராக தன் வாழ்நாளை அமைத்துக் கொண்டார்.  இந்த இயேசுவை பின்பற்றக்கூடிய நீங்களும் நானும் இந்த இயேசுவை போலவே கடவுளின் விருப்பத்தை அறிந்து அந்த விருப்பத்திற்கு செயல் வடிவம் தருகின்றவர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொண்டு இயேசுவின் சீடர்கள் நாம் என்பதை சொல்லிலும் செயலிலும் வெளிக்காட்டிட ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

             

மனிதர் நலமடைந்தார்! (21-3-23)




இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

        ஆண்டவர்  இயேசு கிறிஸ்து நெடு நாட்களாக முடக்கு வாத முற்றிருந்த ஒரு மனிதனுக்கு நலம் தருகின்ற ஒரு நிகழ்வை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம். இந்த வாசகத்தை நமது வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது பல ஆண்டுகளாக நம் மனதில் புதைந்திருக்கக்கூடிய பலவிதமான தீமைகளை அகற்றுவதற்கான ஒரு வாய்ப்பினையும் அழைப்பினையும் இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு தருகின்றார்.

     பல நேரங்களில் நம்மிடம் இருக்கின்ற இந்த தீய எண்ணத்தை எவரும் அறியாதிருக்க இதை அகற்றிட வேண்டும் வேண்டும் என்ற முயற்சியில் நாம் ஈடுபட்டு தோற்றுப் போய் இருக்கலாம். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நாளில் நாம் அத்தகைய தீய எண்ணங்களில் இருந்து விடுபடுவதற்கான அழைப்பை மீண்டும் இதயத்தில் உருவாக்கிக் கொள்ள அழைப்பு விடுக்கின்றார். 38 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் இருந்த அந்த மனிதனை ஆண்டவர் தேடி வந்தது போல நெடு நாட்களாக நம்மிடம் இருந்து அகற்ற முடியாமல் தவிர்க்கின்ற அந்த தீமையை அகற்றுவதற்கான வலிமையை இறைவன் தர வல்லவர் என்பதை உணர்ந்து கொண்டு நம் வாழ்வை நெறிப்படுத்திக்கொண்டு இயேசுவின் பாதையில் தொடர்ந்து பயணிக்க இறைவனிடத்தில் இறையருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார். 

புனித யோசேப்பு- புனித கன்னி மரியாவின் கணவர். (20-3-23)


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !

         இன்று தாய்த்திரு அவையானது புனித யோசேப்பை நினைவு கூர அழைப்பு விடுக்கிறது. விவிலியத்தில் நேர்மையாளராக சுட்டிக் காட்டப்படுகின்ற இந்த யோசேப்பு,  இயேசுவின் வளர்ப்பு தந்தை ஆன இவர் தன்னுடைய பணியை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர். தம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை பாதுகாக்கின்ற பணையினை மிகவும் சிறப்பாக செய்தவர்.  இளம் வயதில் இயேசுவை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தவர். தனக்கு தெரிந்த அத்தனை நன்மைகளையும் தன்னுடைய மகனுக்கு கற்றுக் கொடுத்த ஒரு நல்லதொரு தந்தையாக இந்த யோசேப்பு திகழ்கின்றார். எனவே தான் தொழிலாளர்களின் பாதுகாவலராகவும் படிக்கின்ற மாணவர்களின் பாதுகாவலராகவும் இவர் முன்னிறுத்தப்படுகின்றார். இந்த யோசேப்பை நினைவு கூருகின்ற இந்த நல்ல நாளிலே இவரின் நாமத்தை தாங்கி இருக்கிற அனைவருக்கும் நாம விழா வாழ்த்துக்களை மகிழ்வோடு உரித்தாக்குகிறேன்.  சூசையப்பரிடம் காணப்படுகின்ற நல்ல பண்புகளை எல்லாம் நமது பண்புகளாக எடுத்துக்கொண்டு கடவுளுக்கு உகந்த மனிதர்களாக, கடவுள் நம்மிடம் ஒப்படைக்கின்ற பணிகளை முகம் சுழிக்காமல் கடமை உணர்வோடு பொறுப்போடும் செய்கின்ற நபர்களாக நீங்களும் நானும் வளர்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

புனித யோசேப்பு கன்னி மரியாவின் கணவர்! (19-3-23)


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!


           நானே உலகின் ஒளி என்றவரை பின்பற்றுகின்ற நாம் ஒவ்வொருவருமே நமது வாழ்வை ஒவ்வொரு நாளும் இந்த கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வாக அமைத்துக் கொள்ள அழைக்கப்படுகிறோம். பல நேரங்களில் மனிதர்களாகிய நாம் முகத்தினை வைத்து எடை போடுகின்றோம். ஆனால் கடவுள் எவரின் முகத்தை வைத்தும் எடை போடுபவர் அல்ல. மாறாக அவர் உள்ளத்தை ஆய்வு செய்பவர்.

    இந்த இறைவனை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே இந்த தவக்காலத்தில் பல்வேறு தவ முயற்சிகளின் வாயிலாக நம் வாழ்வை நெறிப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுக்கின்றோம். நாம் மேற்கொள்ளுகின்ற தவம் முயற்சிகள் வெளிவரும் மற்றவரின் புகழுக்காகவோ மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவோ அமைந்திருத்தல் கூடாது. மாறாக, கடவுள் அகத்தை பார்க்கிறார் என்பதை உணர்ந்தவராக வெளிப்புற அடையாளங்களை புறம் தள்ளி உள்ளார்ந்த மாற்றத்தோடு ஒவ்வொரு நாளும் கடவுளின் வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொண்டு, நம் செயல்களை ஆய்வு செய்து பார்த்து இயேசுவின் செயல்களைப் போல நமது செயல்களையும் அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் ஆற்றல் வேண்டிட அழைக்கப்படுகிறோம். இறைவன் தருகின்ற இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாக நாம் கடவுளை பின்பற்றுகிறோம் என்பதை சொல்லிலும் செயலிலும் வெளிக்காட்டிட வேண்டும் என்பதை இதயத்தில் இருத்திக் கொள்வோம். 

      மலை மீது இருக்கின்ற ஒளியானது பலருக்கு பயன் தருவது போல நாமும் இந்த இயேசுவின் வார்த்தைகளை பின்பற்றுவதன் வாயிலாக பலரும் நம்மைப் பார்த்து தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள நல்லதொரு முன் உதாரணமாக நாம் செயல்படுவதற்கான ஆற்றலை வேண்டி இறைவனிடத்தில் இன்றைய நாளில் இறை வேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...