இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
நானே உலகின் ஒளி என்றவரை பின்பற்றுகின்ற நாம் ஒவ்வொருவருமே நமது வாழ்வை ஒவ்வொரு நாளும் இந்த கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வாக அமைத்துக் கொள்ள அழைக்கப்படுகிறோம். பல நேரங்களில் மனிதர்களாகிய நாம் முகத்தினை வைத்து எடை போடுகின்றோம். ஆனால் கடவுள் எவரின் முகத்தை வைத்தும் எடை போடுபவர் அல்ல. மாறாக அவர் உள்ளத்தை ஆய்வு செய்பவர்.
இந்த இறைவனை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே இந்த தவக்காலத்தில் பல்வேறு தவ முயற்சிகளின் வாயிலாக நம் வாழ்வை நெறிப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுக்கின்றோம். நாம் மேற்கொள்ளுகின்ற தவம் முயற்சிகள் வெளிவரும் மற்றவரின் புகழுக்காகவோ மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவோ அமைந்திருத்தல் கூடாது. மாறாக, கடவுள் அகத்தை பார்க்கிறார் என்பதை உணர்ந்தவராக வெளிப்புற அடையாளங்களை புறம் தள்ளி உள்ளார்ந்த மாற்றத்தோடு ஒவ்வொரு நாளும் கடவுளின் வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொண்டு, நம் செயல்களை ஆய்வு செய்து பார்த்து இயேசுவின் செயல்களைப் போல நமது செயல்களையும் அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் ஆற்றல் வேண்டிட அழைக்கப்படுகிறோம். இறைவன் தருகின்ற இந்த அழைப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்டவர்களாக நாம் கடவுளை பின்பற்றுகிறோம் என்பதை சொல்லிலும் செயலிலும் வெளிக்காட்டிட வேண்டும் என்பதை இதயத்தில் இருத்திக் கொள்வோம்.
மலை மீது இருக்கின்ற ஒளியானது பலருக்கு பயன் தருவது போல நாமும் இந்த இயேசுவின் வார்த்தைகளை பின்பற்றுவதன் வாயிலாக பலரும் நம்மைப் பார்த்து தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள நல்லதொரு முன் உதாரணமாக நாம் செயல்படுவதற்கான ஆற்றலை வேண்டி இறைவனிடத்தில் இன்றைய நாளில் இறை வேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக