இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
யூதாசு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுப்பான் என்பதை இயேசு மற்றவர்கள் முன்னிலையில் உரையாடுவதைத்தான் இன்றைய வாசகமாக நாம் வாசிக்க கேட்கின்றோம். உங்களுள் ஒருவன் என்னை காட்டிக் கொடுப்பான் என்று சொல்ல, அங்கிருந்த சீடர்கள் ஒவ்வொருவருமே நானா? நானா? என்று சொல்லுகிற போது, யூதாசும் அவர்களுள் ஒருவனாக, நானா? என கேள்வி எழுப்புகிற போது, நீயே சொல்லிவிட்டாய் என்று இயேசு சொல்லுகிறார்.
ஏன் யூதாசு இயேசுவை காட்டிக் கொடுத்தார் என்ற கேள்விக்கு பலரும் பல விதமான புரிதல்களோடு பதில் சொல்லியிருந்தாலும், உடனிருப்பவரை தனியே விட்டுச் செல்வது என்பதும், உடனிருப்பவருக்கு துன்பத்தை உருவாக்குவது என்பதும், உடனிருப்பவருக்கு துரோகம் விளைவிப்பது என்பதும், என்றுமே ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாகவே கருதப்படுகிறது. ஆனால் இந்த மனிதன் தனக்கு எதிராக துரோகம் செய்வான் என்பதை அறிந்திருந்த நிலையிலும் கூட, அவனை அருகில் வைத்து அவன் கையில் பணப் பொறுப்புகளை கொடுத்து அவனை தகுதி உள்ள மனிதனாக மாற்றுவதற்கான முயற்சியில் இயேசு ஈடுபட்டார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
என்னதான் இறைவனின் வார்த்தைகளை பலமுறை கேட்டிருந்தாலும் நம் வாழ்வில் இந்த உலகை இச்சைகளுக்குள் மூழ்கி கிடப்பது போலவே யூதாசின் வாழ்வும் இந்த உலக இச்சைகளுக்கு அடிமையாகிப் போனதாக இருந்தது. அதன் விளைவுதான் இயேசுவை காட்டிக் கொடுக்க அவன் பணத்தைப் பெற்றுக் கொண்டான். இப்பணத்தை பெற்றுக்கொண்டு இயேசுவை காட்டிக் கொடுத்தான். இந்த யூதாசு போல நம் வாழ்வை நாம் கறைபடுத்திக் கொள்ளாமல் கடவுளுக்கு உகந்த வாழ்வை வாழவும், நமது வாழ்வில் கடவுள் நமக்கு கற்றுத் தருகின்ற அனைத்து காரியங்களையும் கண்டுணர்ந்து கொண்டு நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, இயேசுவின் பாதையில் தொடர்ந்து பயணிக்க இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக