இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் ஆபிரகாமுக்கு கொடுத்த ஆசிகளை குறித்தும் வாக்குறுதிகளை குறித்தும் நாம் வாசிக்க கேட்கிறோம். நற்செய்தி வாசகத்தில் இயேசு பெரியவரா? ஆபிரகாம் பெரியவரா? யார் யாருக்கு முதன்மையானவர்கள் என்ற போட்டியானது நிலவுகிறது.
படைப்பின் தொடக்கத்தில் தூய ஆவியானவர் நீரின் மீது அசைவாடிக் கொண்டிருந்தார். கடவுள் உலகைப் படைத்து கொண்டிருந்தார். அவர் சொல்ல ஒவ்வொன்றும் உண்டாகியது. இங்கு இயேசு எங்கு இருக்கிறார் என்ற கேள்வி எழுப்புகிற போது, கடவுளின் வார்த்தையாகத்தான் இயேசு படைப்பின் தொடக்கத்தில் இருந்தார். எனவே தான் வார்த்தை மனுவுருவானார் என இயேசுவை குறித்து நாம் விவிலியத்தில் சொல்லுகின்றோம். இதை மையப்படுத்தி தான் இயேசு, தான் படைப்பின் தொடக்கத்தில் இருந்தே இருக்கிறேன் என்று, அதாவது ஆபிரகாமுக்கு முன்பிருந்தே தான் இருக்கிறேன் என்று குறிப்பிட்டார். இதை உணர்ந்து கொள்ள இயலாமல் தான், யூதர்கள் தங்களுக்கிடையே இவர் ஆபிரகாமை விட பெரியவரோ என்ற கேள்வியை எழுப்பி இயேசுவின் மீது கல் எறிவதற்கு முயற்சிக்கிறார்கள். பல நேரங்களில் ஆண்டவரின் வார்த்தைகளை ஆழமாக இதயத்தில் இருத்தி சிந்திக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். ஆபிரகாமுக்கு கடவுளின் வார்த்தைகள் வழங்கப்பட்ட போதெல்லாம் ஏதோ ஒன்று, பத்தோடு பதினொன்று, அத்தோடு நான் ஒன்று என்ற மனநிலையோடு அதை ஏற்றுக் கொண்டவர் அல்ல. அனைத்தையும் இதயத்தில் இருத்தி சிந்தித்தவர். அந்த இறைவன் மீது ஆழமான நம்பிக்கையில் வளர்ந்தவர். எனவே தான் நம்பிக்கையின் நாயகனாக, இன்றும் நம்பிக்கையின் தந்தை என ஆபிரகாம் அழைக்கப்படுகிறார்.
இறைவனுடைய வார்த்தைகளை அன்னை மரியா இதயத்தில் வைத்து சிந்தித்தது போல, நீங்களும் நானும் அன்னை மரியாவைப் போலவும், ஆபிரகாமைப் போலவும், ஆண்டவரின் வார்த்தையை அனுதினமும் இதயத்தில் இருத்தி ஆழமாக சிந்திக்கவும், அந்த சிந்தித்த வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற நபர்களாக இயேசுவின் பாதையில் தொடர்ந்து பயணிக்க இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக