சனி, 31 ஜூலை, 2021

வாழ்வு தரும் உணவாக மாறிட...(1.8.2021)

வாழ்வு தரும் உணவாக மாறிட...

இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாளில் வாசிக்கப்பட்ட வாசகங்களில் இருந்து,  என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இயேசு  இந்த மண்ணில் வாழ்ந்த போது பலர் அவரைத் தேடிச் சென்றார்கள்.  

அவர் மீது குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு கூட்டம் அவரை பின்தொடர்ந்தது.  

அவரிடமிருந்து நல்ல உடல் நலனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு கூட்டம் பின்தொடர்ந்தது. 

இவரிடமிருந்து எதையாவது ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும் என ஒரு கூட்டம் பின்தொடர்ந்தது.  

ஆனால் இன்று இயேசுவின் பின்னால் பின்தொடர்ந்த கூட்டமோ,  இவர் வயிறார உணவு தருகிறார் என்று உணவை மையப்படுத்தி பின்தொடர்ந்தது.

இயேசு தன்னை பின்தொடர்பவர்கள் யார் என்பதை நன்கு அறிந்தவராய் அவ்வபோது அவர்களுக்கு இறையாட்சியின் மதிப்பீடுகள் எது என்பதையும் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கக் கூடியவராக இருந்தார். 

இன்று நாம் எதை மையப்படுத்தி ஆண்டவர் இயேசுவை பின்தொடரும் என சிந்திக்கவும்.... வானிலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு இயேசுவைப் போல நாமும் இச்சமூகத்தில் வாழவும் இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.
இன்றைய முதல் வாசகத்தில் கூட எகிப்தில் அடிமையாய் இருந்த இஸ்ராயேல் மக்களை இறைவன் அழைத்து வந்ததோடு நின்றுவிடாமல்,  அவர்களின் தேவையை அறிந்தவராய் அவர்களுக்கு பசியைப் போக்க மன்னாவை வழங்கினார். ஆனால் அவர்கள் அந்த ஆண்டவரை இறுகப் பற்றிப் பிடித்து இருந்தார்களா? என்ற கேள்வியை எழுப்பும் பொழுது, தேவைக்கு இறைவனிடம் செல்பவர்களாக தான் அவர்களுள் பலர் இருந்தார்கள் என்பது வெள்ளிடைமலையாகப் புலப்படுகிறது. 
       இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறுகிறார், நானே வானினின்று இறங்கி வந்த உணவு. என்னை உண்டால் உங்களுக்கு பசியே இராது என்று கூறுகின்றார். வானிலிருந்து இறங்கி வந்த உணவான இந்த இயேசு கிறிஸ்து, இந்த சமூகத்தில் எப்படி வாழ்ந்தார் என சிந்திக்கின்ற போது, அவர் பிறர் வாழ தன்னையே தியாகம் செய்தவர். 

     இந்த சமூகத்திற்கு எது நல்லது? எது தவறானது? எதை செய்ய வேண்டும்? எதை முன்னிலைப்படுத்தி நாம் பயணிக்க வேண்டும்? என்பதை இயேசு கிறிஸ்து தான் சென்றவிடமெல்லாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே சென்றார். அவர் தனது கடமையை சரியாக செவ்வனே செய்து கொண்டே பயணித்தார். 


 மனித வாழ்க்கை என்பது ஒரு தொடர் தேடல் மிகுந்தது.  தேடலோடு பயணிக்கின்ற போது நமது வாழ்வானது சுவாரசியம் மிகுந்ததாக மாறுகிறது.  மண்ணில் பிறந்த ஒவ்வொருவருமே மிகவும் நலமோடு நல்ல முறையில் இச்சமூகத்தில் வாழ வேண்டும் என ஆசைப்படுகிறோம். ஓடி ஓடி உழைப்பதும் சேர்த்து சேர்த்து வைப்பதும் எதற்காக என சிந்திக்கின்ற போது, அரை சாண் வயிற்றுக்காக தான் என்ற உண்மையை புரிந்து கொள்ள முடியும்.ஆனால் இன்று  நாம் உணவை மட்டும் மையப்படுத்தி வாழ்வதைவிட, பல நல்ல உள்ளங்களை ஊக்கம் ஊட்டக்கூடிய வாழ்வாக நமது வாழ்வு அமைய வேண்டும் என்ற செய்திதான் இன்றைய நாளில் நமக்கு இறைவன் தருகின்றார். 

 ஒரு ஊரில் ஒரு பையன் இருந்தான். அந்த பையன் தன் பெற்றோரிடம் அம்மா, அப்பா,  எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை. அதனால் நான் சாகப் போகிறேன் என்று கூறினான். உடனே பெற்றோர் அவனிடம், இல்லை மகனே! நீ அவ்வாறு செய்தல் கூடாது. இந்த உலகத்தில் உனக்கு பல்வேறு திறமைகள் இருக்கின்றன. நீ நன்றாக வாழவேண்டும் என்று கூறினார்கள்.

இல்லை அம்மா நான் கண்டிப்பாக சாகப் போகிறேன். என்னை யாரும் தடுக்க முடியாது என்று கூறினான். உடனே அவனுடைய தந்தை நீ எவ்வாறு சாகப் போகிறாய் என்று கேட்டார். அதற்கு அவன் நான் தூக்கு மாட்டிக் கொள்வேன் என்றான். தந்தை அவனிடம் நான் கயிறுகளை எல்லாம் ஒளித்து வைத்து விடுவேன் என்றார். மீண்டும் மகன் அவரிடம் நான் மருந்து குடித்து இறந்து விடுவேன் என்றான். உடனே தந்தை அந்த மருந்தை எடுத்து ஒளித்து வைத்து விடுவேன் என்றார். மீண்டும் மகன் அவரிடம் இல்லை என்றால் நான் மேலிருந்து குதித்து விடுவேன் என்றான். 

 அப்போது தந்தை மகனிடம் கூறினார், சாவதற்கு இத்தனை வழிகள் இருக்குமானால் இதைவிட அதிகமாக, நாம் வாழ்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. உன்னுடைய திறமைகளும் உன்னுடைய நற்பண்புகளும் உன்னை உலகத்தில் உயர்த்தும். உன்னை காண்போர் உனது நற்செயல்களால் மகிழ்வர். அதனால் நீயும் மகிழ்ந்திருப்பாய் என்று மகனை நோக்கி மகிழ்வோடு கூறி, வாழ்வைப் பற்றி அவனுக்கு எடுத்துரைத்தார்.



                நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் எதை மையப்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்? சிந்திப்போம்... பொதுவாக சொல்வார்கள், உண்பதும் உறங்குவதுமே வாழ்க்கை என்றால் அதை மண்ணும் செய்யும், மரமும் செய்யும்.   நீங்களும் நானும் மனிதர்கள். நாம் உண்பதற்காக மட்டுமல்ல,  இந்த உலகத்தில் பல நல்ல உள்ளங்களை ஊக்கம் ஊட்டுவதற்காக இச்சமூகத்தில் வாழ வேண்டும்.  இயேசுவின் போதனைகள் எல்லாமே,  அந்த சமூகத்தில் வாழ்ந்த மக்களுக்கு அறநெறியை கற்பித்தது.  மனிதநேயத்தை கற்பித்தது. நல்ல செயலை செய்வதற்கான ஊக்கமூட்டுதலை அளித்தது. இது தான் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியின் மையமாக இருக்கிறது.  அதுவே இயேசுவின் வாழ்வில் வெளிப்பட்டது.  இதன் வழியாகத்தான் இயேசு வானினின்று இறங்கி வந்த வாழ்வு தரும்  உணவாக மாறினார். 


நாமுன் இச்சமூகத்தில் பிறந்தோம் இறந்தோம் என வாழாமல்,  ஒருவரை ஒருவம்  ஊக்கமூட்டக்கூடிய அடுத்தவருக்காக நம்மையே தியாகம் செய்யக்கூடிய ஆண்டவர் இயேசுவைப் போல இச்சமூகத்தில் வாழ அழைக்கப்படுகிறோம்.


நமது பங்கு தந்தை அவர்கள் கூட நமது குழந்தைகளை பாட வைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.   இவர்களின் பாடலாலும் நமது கூட்டு ஜெபத்தால் இந்த திரு பலியானது  மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த திருப்பலியில் நாம் வெறுமனே பங்கேற்பாளர்களாக மட்டுமில்லாமல் ஒருவர் மற்றவரை பாராட்ட கூடியவர்களாகவும் மாறிட இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.


எனவே இனி வரும் நாட்களில் நாம் ஒருவர் மற்றவரை தேவையின் நிமிர்த்தமாக மட்டும் தேடிச் செல்லாமல் அன்போடும் அக்கறையோடும் அடுத்தவர் நலனில் ஆர்வம் கொண்ட மனிதர்களாக ஒருவரை ஒருவர் ஊக்கமூட்டும் கூடியவர்களாக மாறுவோம். அப்போது தான்     வானினின்று இறங்கி வந்த வாழ்வுதரும் உணவாகிய இயேசுவைப் போல நமது வாழ்வும் அர்த்தமுள்ள வாழ்வாக மாறும் அதற்கான அருளை வேண்டி தொடர்ந்து இணைந்து இந்த திருப்பலி வழியாக ஜெபிப்போம். 

வெள்ளி, 30 ஜூலை, 2021

முரன்பாடுகளுக்கு மத்தியில் .... (31.7.2021)

முரன்பாடுகளுக்கு மத்தியில் ....

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 இன்றைய முதல் வாசகமானது ஆண்டவரின் பார்வையில் நீதி எப்பேறு பெற்றது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆம்! ஆண்டவர் இந்த சமூகத்தில் நாம் எப்படி வாழவேண்டும் என்பதை அன்று யூபிலி ஆண்டைப் பற்றி அறிவுறுத்துவதன் மூலம் விளக்குகின்றார்.  நாம் பாகுபாடுகளுக்கு மத்தியிலும், முரண்பாடுகளுக்கு மத்தியிலும், ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியிலும் பயணித்தாலும்,  மனிதர்கள் என்ற முறையில் நாம் அனைவரும் சமமானவர்கள். கடவுளின் உரிமைக்குரிய பிள்ளைகள் என்பதை மனதில் நிறுத்தியவர்களாய், நம்மை நாம் சரி செய்து கொண்டு, ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொண்டு, பாகுபாடுகளைக் கடந்து, முரண்பாடுகளை கடந்து, ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து, ஒன்றித்து வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, யூபிலி ஆண்டை பற்றி முன்னறிவிக்கப்படுகிறது. அந்த யூபிலி ஆண்டுதான் தொடக்கத்தில் பின்பற்றப்பட்டும் இருந்தது.  ஆனால் காலப்போக்கில்  சுயநலத்தின் பெயரால் ஆண்டவரால் வகுக்கப்பட்ட  யூபிலி ஆண்டை வெறும் பேசும் பொருளாக வைத்துவிட்டு நகரக்கூடிய மனிதர்களாக மாறினார்கள் என்பது வரலாற்று உண்மை.  ஆண்டவர்,  அனைவரும் சமமானவர்கள், சமத்துவமானவர்கள் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள் என்ற போர்வையில் தான் நம்மை நோக்குகின்றார்.  எனவே இந்த சமூகத்தில் தவறிழைக்கப்படும் பொழுது அது தவறு எனச் சுட்டிக் காண்பிக்க, உடன்பிறப்புகள் ஆகிய கடவுளின் பிள்ளைகளான நம் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. அந்தப் பணியை, மகத்துவமான அப்பணியை இம்மண்ணில் செய்தவர் தான் திருமுழுக்கு யோவான்.  அதன் விளைவாக தனது இன்னுயிரையும் இழக்கக்கூடிய சூழ்நிலை நிகழ்ந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இன்று நாம் அனைவரும் இணைந்து நினைவு கூரக் கூடிய, புனித லொயோலா இஞ்ஞாசியாரும் கூட இந்த உலகம் முழுவதையும் ஒருவன் தனதாக்கிக் கொண்டாலும் தனது ஆன்மாவை  இழந்தால் என்ன பயன்? என்ற கேள்வியை எழுப்பியவராய் அந்த கேள்வியை மனதில் ஆழமாக சிந்தித்தவராய், தன்னுடைய வாழ்நாளில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை முதன்மைப்படுத்தி, அவர் விரும்பக் கூடிய நீதியையும்,
சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் மையப்படுத்தி, இந்த சமூகத்தில் பற்பல பணிகளை செய்து, இன்றும் நம்மால் நினைவுகூரப்பட்டு கொண்டிருக்கிறார்.

 பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க கூடிய இந்த உலகத்தில் பல பணிகளுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கக் கூடிய நாம், இன்றைய நாளில், சற்று நிதானமாக, நம் இருப்பவர்களும் நம்முடைய சகோதரர்கள், நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்பதை உணர்ந்து கொண்டவர்களாய், ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும், நேசிக்கவும், ஆண்டவர் விரும்பக்கூடிய சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், வெறும் பேசும் பொருளாக வைத்துக்கொள்ளாமல்,  அதற்கு செயல் வடிவம் கொடுக்க கூடிய இயேசுவின் உண்மைச் சீடர்களாக மாறிட இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம்.

வியாழன், 29 ஜூலை, 2021

அறிந்தவரால் அலட்சியம் சாத்தியமே... (30.7.2021)

அறிந்தவரால் அலட்சியம் சாத்தியமே!...

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
இன்றைய முதல் வாசகமானது,
கொண்டாட வேண்டிய விழாக்களையும், இஸ்ரயேல் மக்களிடம் காணப்பட்ட ஒருமைப்பாட்டையும் தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆனால் இன்றைய நற்செய்தி வாசகமோ,  அறிந்தவர்களே நம்மை அலட்சியப்படுத்தும் சூழ்நிலை உருவாகும். அச்சூழலில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது. மனிதர்கள் பெரும்பாலும் ஒன்றாக இணைந்து வாழ விரும்புகிறார்கள். ஆனால் ஒன்றாக இணைந்து இருக்கின்றபோது, நானா? நீயா?  என்ற போட்டியானது உள்ளத்தில் உதிக்கின்றது. அந்த உதிக்கக் கூடிய எண்ணமானது,  உள்ளத்தில் பலவிதமான தவறான எண்ணங்களுக்கும் வித்திடுகிறது. எனவேதான், சொந்த மக்களுக்கு அவர்களைச் சார்ந்தவர் நல்லது சொல்லும்போதும் என்னைவிட உயர்ந்தவனா நீ?  என்ற எண்ணத்தோடு அலட்சியப் படுத்தக் கூடிய போக்கானது இன்றும் சமூகத்தில் நிலவிக் கொண்டிருக்கின்றது. அன்று ஆண்டவர் எகிப்தில் இருந்து இஸ்ரேல் மக்களை மீட்டு வந்தபோது,  அவர்கள் எப்படி வழிபட வேண்டும்? எப்போது விழா எடுக்க வேண்டும் என்பதை எல்லாம் திட்டமிட்டு மோசே வழியாக இறைவன் வெளிப்படுத்தினாலும்,  பல நேரங்களில் மோசேயை உதாசீனப்படுத்தக் கூடிய மக்களாக அம்மக்கள் இருந்தார்கள் என்று நாம் விவிலியத்தின் துணை கொண்டு அறிந்து கொள்ள முடியும். விவிலியத்தில் மட்டும் நடப்பது அல்ல இது.  நமது வாழ்விலும் அவ்வப்போது அரங்கேறக்கூடிய நிகழ்வு தான் இது. நல்லது என கருதி நாம் முன்மொழியும் போது,  எங்களுக்கு அறிவுரை கூற நீ யார்? என்ற கேள்வியை கேட்டு, பலர் நம்மை வாயடைக்க செய்யலாம். 
 ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்கிறார்,  இறைவாக்கினர்கள் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்று. இறைவாக்கினர்கள், அது உடன்பிறப்புகளாக இருந்தாலும் சரி, உதவியவர்களாக இருந்தாலும் சரி,  தவறு என்று வருகின்ற போது அவர்கள் செய்வதை சுட்டிக் காட்ட வேண்டும். அவர்கள் ஏற்கிறார்களோ, ஏற்கவில்லையோ, அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்ற செய்தியை இன்றைய நாள் நற்செய்தி வாசகம் தெளிவாக தந்தாலும் நாம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளின் படி வாழ்வை அமைத்துக் கொண்ட அவரது பணியைச் செய்யும் இறைவாக்கினர்கள். நாம் நமது செயலில் பின்வாங்கக் கூடாது,  ஏற்றுக் கொள்ளாத அவர்களுக்காக நம்மை நாம் மாற்றிக் கொள்வதை விட நீதி எதுவோ? சமத்துவம் எதுவோ?  உண்மை எதுவோ அதை உலகிற்கு அறிவிக்கக்கூடிய உண்மைச் சீடர்களாக அலட்சியப் படுத்துபவர்களுக்கு  மத்தியிலும் அயராது பணி செய்ய இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டும்.

புதன், 28 ஜூலை, 2021

வலையில் சிக்கிய நீங்கள் எங்கே செல்வீர்கள்?(29.7.2021)

வலையில் சிக்கிய நீங்கள் எங்கே செல்வீர்கள்?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
 இன்றைய நாளின் முதல் வாசகத்தில், கடவுள்  மேகத்தூண் வழியாக இஸ்ரயேல் மக்களை வழிநடத்தியது குறித்து வாசிக்க கேட்டோம். இன்றைய நாள் நற்செய்தி வாசகமோ, இறைவன் நம்மை பராமரித்துக் கொண்டு இருந்தாலும், இறைவன் ஒவ்வொரு நாளும் அவரது பராமரிப்பை நாம் உணர்ந்து நாம் கொண்டு, இறையாட்சியின் மதிப்பீடுகளுக்கு ஏற்ற வகையில் ஒருவர் மற்றவருக்கு சேவை செய்து வாழ வேண்டும் என்ற செய்தியினை மார்த்தாவை நினைவு கூருகின்ற இந்த நாளில் நமக்குத் தருகின்றது.

          மார்த்தா பல பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் ஈடுபட்ட பணிகள் அனைத்தும் அடுத்தவர் சேவையை மையப்படுத்தியதாகவே இருந்தது.  இந்த மார்த்தா தான் ஆண்டவர் இயேசுவின் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்.  

"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே" என்ற ஆண்டவர் இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தையை முழுமையாக நம்பி, அவ்வார்த்தைகளின் அடிப்படையில்,  லாசர் உயிர்பெற்று எழுவதற்கு காரணமாய் நின்றவரும் இந்த  மார்த்தா தான். இந்த மார்த்தாவை இன்று திருஅவை நினைவு கூருகிறது என்றால்,  மார்த்தாவிடம் காணப்பட்ட நற்பண்புகளான சேவை செய்யும் மனப்பான்மையை நாம் கொண்டிருக்க வேண்டும்.  நம் மீது கொண்ட அதீத அன்பின் காரணமாகத்தான் இறைவன் பல வழிகளில் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அவரது வழிநடத்துதலை உணர்ந்து கொண்டு நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், நாம் நம்பிக்கையோடு நலமான பணிகளை முன்னெடுத்துச் செல்ல கூடியவர்களாக இருக்க வேண்டும். இந்த இறையரசை முன்னெடுத்துச் செல்ல கூடியவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு நாம் செயல்படும்போது இறையாட்சிக்கு உட்பட்டவர்களாக நாம் இருக்கமுடியும் . இறைவன் இறையரசை கடலில் வீசப்பட்ட வலைக்கு ஒப்பிடுகின்றார்.

 

 கடலில் வலை வீசிய போது அதில் நல்லது தீயது என இரண்டு விதமான  பொருட்களுமே அகப்பட்டுக் கொண்டு வந்தது. அது போல இந்த உலகத்தில் இன்று கடவுள் வலையை வீசும் போது நாம் அனைவரும் அந்த வலைக்குள் அகப்பட்டு அவரிடம் செல்கின்றோம்.  நம்மை அவர் எடுத்து நல்லது எனக் கருதி சேர்த்து வைப்பாரா? அல்லது  தீயது என கருதி புறம் தள்ளுவாரா? கேள்வியை நாம் நமக்குள்ளாக எழுப்புவோம்.  நம்மை  நல்லது எனக் கருதி இறைவன் தன்னுடைய சேமிப்பில் நம்மை வைத்துக் கொள்ள வேண்டுமாயின் நாம் இறையாட்சி யின் மதிப்பீடுகளுக்கு ஏற்ற வகையில் மார்த்தாவைப் போல பிறர் தேவையை முன்னிறுத்தக் கூடியவர்களாக இச்சமூகத்தில் வலம் வரவேண்டும்.  அவ்வாறு நமது செயல்பாடுகள் இல்லை என்றால் இன்றைய நாளில் நாம் நமக்குள்ளாக மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, இனி வருகின்ற காலங்களில் இறைவன் நல்லது எனக் கருதி சேர்த்து வைக்கக் கூடிய மீன்களாகிட இறையருளை வேண்டுவோம்.

செவ்வாய், 27 ஜூலை, 2021

தேட வேண்டியது உனக்குள்ளே...;(28.7.2021)

தேட வேண்டியது உனக்குள்ளே...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இறையாட்சி மண்ணில் மறைந்திருக்கக் கூடிய  புதையலுக்கு ஒப்பிடப்பட்டு,  ஆண்டவர் இயேசுவால் கற்பிக்கப்படுகிறது. மண்ணுக்குள் மறைந்து இருக்கும் புதையலை எப்படி நாம் உரிமையாக்கிக் கொள்ள வேண்டும், என்று எண்ணம் கொண்டவர்களாய் இருப்பதை எல்லாம் விற்று அதனை உரிமையாக்கிக் கொள்ள விரும்புகிறோமோ, அது போலத்தான் இந்த உலகத்தில் நாம் நம்மிடம் இருப்பதை எல்லாம் அடுத்தவரோடு பகிர்ந்து, நமக்குள் மறைந்திருக்கும் மனிதநேயத்தை கண்டு கொண்டு, அதை நம்முடையதாக மாற்றிக்கொள்ள இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். 

அவ்வாறு நாம்  மறைந்திருக்கும் மனிதநேயத்தை கண்டு கொள்ளும் போது,  இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வாழக்கூடிய மனிதர்களாக மாறுவோம்.  அப்போது நாம் இறைவனிடத்தில் மோசேயைப் போல முகமுகமாக தரிசித்து அவருடன் உரையாட முடியும். ஆண்டவர் எப்போதும் நம்மை கண்காணிக்கின்றார். நம்மோடு பேச ஆவலாக காத்திருக்கின்றார். காத்திருக்கும் இறைவனிடத்தில் நாம் நேரம் செலவிடுவதில்லை. காரணம், பல விதமான பணிகளுக்கு மத்தியில் பரபரப்பாக அனுதினமும் இயங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமத பரபரப்பான பணிகளுக்கு மத்தியில்,  நம்முள் மறைந்திருக்கக் கூடிய அவரைக் கண்டு கொள்ளவும், அவருக்கு நேரம் ஒதுக்கவும், அவருடன் உரையாடவும், அதன் வழியாக நமக்குள்ளாக மறைந்திருக்கும் மனிதநேயத்தை கண்டுகொண்டு, இந்த சமூகத்தில் நாம் நிலையானது என கருதக் கூடிய அனைத்தையும் அடுத்தவருக்கு என தியாகம் செய்து, மனிதநேயத்தை நம்முடையதாக்கி இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வாழ்வை அமைத்துக் கொள்ளக் கூடியவர்களாக மாறிட இறைவன் அழைக்கின்றார்.

அழைக்கும் இறைவனின் குரலினை உணர்ந்து கொண்டவர்களாய்,  நாம் நமக்குள் மறைந்திருக்கும் மனிதநேயத்தை கண்டுகொள்ள, அதன் வழியாக இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வாழக்கூடிய மக்களாகிட இறையருள் வேண்டுவோம்.

திங்கள், 26 ஜூலை, 2021

நேர்மையாளராக ஒளி வீசிட... (27.7.2021)

நேர்மையாளராக ஒளி வீசிட...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும், நேர்மையாளராக, ஒளி வீசக் கூடிய மக்களாக நாம் இச்சமூகத்தில் திகழ வேண்டும் என்ற செய்தியை நமக்கு எடுத்துரைக்கின்றன.  ஆண்டவர் இயேசு விரும்பக்கூடிய ஒளிவீசக் கூடியவர்களாக நாம் இவ்வுலகத்தில் இருக்க வேண்டுமாயின் நாம் ஆண்டவரை தேடிச் செல்ல வேண்டும்.  எப்படி மோசே ஆண்டவரை தேடிச் சென்றபோது, ஆண்டவர் அவரோடு உரையாடினாரோ அதுபோல, நாமும் அவரை தேடிச் செல்லவேண்டும்.  தேடிச் செல்வது மட்டும் போதுமானது அல்ல.  தேடிச்செல்லக் கூடிய ஆண்டவரிடம் நாம் தெளிவுகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் எப்படி சீடர்கள் களைகள் உவமையை பற்றி விளக்குங்கள் என்று ஆண்டவரிடம் கேட்டு தெளிவுகளை பெற்றுக் கொண்டார்களோ அதுபோல, நாமும் ஆண்டவரை தேடிச் சென்று அவரிடம் தெளிவுகளை கேட்டுத் தெரிந்து கொள்ள, இன்றைய நாள் அழைப்பு தருகிறது.  இவை இரண்டையும் நாம் சரியாக செய்கின்ற பொழுது, நாம் இந்த சமூகத்தில் ஆண்டவர் இயேசு விரும்பக்கூடிய நேர்மையாளராக, ஒளி வீசக் கூடிய மக்களாக வாழ முடியும் என்ற செய்திதான் இன்றைய நாளில் மையமாக அமைகிறது.

 வாழ்க்கையில் பரபரப்பான இந்த உலகத்தில், அனுதினமும் பல பணிகளுக்கு மத்தியில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க கூடிய நமக்கு, இன்று ஆண்டவரை தேடிச் செல்வது என்பது ஒரு சவாலாகத்தான் இருக்கிறது. இந்த சவாலான சூழ்நிலையில், நாம் ஆண்டவரை கண்டுகொள்ளவும், அவருக்கென நேரம் ஒதுக்கவும், அவரைத் தேடிச் செல்லவும், அவரிடம் அமர்ந்து தெளிவுகளை பெற்றுக்கொள்ளவும், இன்றைய நாளில் இறைவன் அழைப்பு தருகின்றார். 

 இறைவனது குரலை உணர்ந்து கொண்டவர்களாய்,  நாம் நமது வாழ்வில் எவ்வளவோ பணிகள் இருந்தாலும், பணிகளுக்கு மத்தியில் ஆண்டவருக்காக நேரத்தை ஒதுக்குவோம். அவரைத் தேடிச் செல்வோம். இயேசுவின் சீடர்களை போல ஆண்டவர் இயேசுவிடமிருந்து தெளிவுகளை பெற்றுக் கொண்டு, நமது வாழ்க்கையை நேர்மையான மனிதர்களாகவும், இச்சமூகத்தில் ஒளி வீசக்கூடிய மனிதர்களாகவும் மாறிட, இறை அருளை இணைந்து வேண்டுவோம்.

ஞாயிறு, 25 ஜூலை, 2021

வாழ்க்கைப் பாடம் கற்றிட....(26.7.2021)

வாழ்க்கைப் பாடம் கற்றிட....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்று தாய்த் திருஅவையாக நாம் இணைந்து புனித சுவக்கின் அன்னம்மாளின் திருநாளை அனுசரிக்கின்றோம்.  இந்த நல்ல நேரத்தில் புனித அன்னாள் பெயரை தாங்கி இருக்கக்கூடிய அருட்சகோதரிகளுக்கு நாம விழா வாழ்த்துக்களை உரித்தாக்குவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 

         "எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு ஏற்ப ஒரு குழந்தை இச் சமூகத்தில் எப்படி இருக்கிறது என்பதை அந்த குழந்தையைக்  கொண்டு பெற்றோரை அறிந்து கொள்ள இயலும்.  அதன் அடிப்படையில் அன்னை மரியாளை திருஅவை உயரிய இடத்தில் வைத்திருக்கிறது. அன்னை மரியா இத்தகைய உயரிய இடத்தை திரு அவையிலும் நமது உள்ளங்களிலும் அடைந்திருக்கிறார் என்றால் அவரை வளர்த்தெடுத்த அவரது பெற்றோரை நினைவு கூருவது சிறப்பு வாய்ந்தது. அதன் அடிப்படையில்தான் திருஅவை இன்று அவர்களை நினைவு கூருகிறது.  முதிர்ந்த வயதில் மரியாவை பெற்றெடுத்து, மரியாவை
 கடவுளின் திட்டப்படி மிகவும் அற்புதமாக வளர்த்து, இறைவனின் மீட்புத்திட்டத்திற்கு கையளித்தார்கள் சுவைக்கீனும், அன்னம்மாளும்.

         இன்று நாம் வாசிக்கக் கேட்ட நற்செய்தி வாசகத்திலும் கூட,  ஒரு சிறிய கடுகு விதை பெரிய மரமாக மாறி பலருக்கு பலன் தருகிறது. சிறிதளவு புளிப்பு மாவு ஒட்டு மொத்த மாவையும் புளிப்பேறச் செய்கிறது.  அது போல நமது பெற்றோர் நமக்கு கற்பிக்கின்ற சிறிய, சின்னஞ்சிறு நற்செயல்கள் தான் நம்மை இச்சமூகத்தில் மிகப்பெரிய நற்செயலை ஆற்றுவதற்கு உந்துசக்தியாக அமைகின்றன. 

           இன்றைய நாளில் அன்னை மரியாவின் தாய் தந்தையரை நினைவு கூருவதோடு நகர்ந்து விடாமல், நாம் நமது தாய் தந்தையரையும், நமது வீட்டில் இருக்கக் கூடிய முதியவர்களையும் நினைத்துப் பார்ப்போம். அவர்களை பராமரித்துக் கொள்வோம். அவர்களிடமிருந்து அவர்களின் அனுபவத்தின் துணையோடு நமது வாழ்வுக்கான வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொண்டு இந்த நாளை இனிய நாளாக மாற்றுவோம்.

வெள்ளி, 23 ஜூலை, 2021

குரு - சீடன் எதுவாக இருக்க ஆசை ?(25.7.2021)

குரு - சீடன் எதுவாக இருக்க ஆசை ?

இறைவனின் அன்புக்கு உரியவர்களே!

ஒரு ஊரில் ஒரு முனிவர் இருந்தார். அந்த முனிவரிடம் ஒரு சீடன்  ஒருவன் இருந்தான். அந்த சீடனுடைய வாழ்நாள் லட்சியமே தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இந்த குருவுக்கு சீடனாக இருக்க வேண்டும் என்பதுதான். அந்த குரு என்னவெல்லாம்  சொல்வாரோ, அவை அனைத்தையும் வேத வாக்காக கடைபிடிப்பான். அந்த குரு, இதைச் செய் அதைச் செய் என்று எதைக் கூறினாலும் அந்த சீடன் உடனே செய்து விடுவான்.  குரு தனக்காக உயிரைக் கொடுக்கச் சொன்னால் கூட, அவன் உயிரைக் கொடுத்து விடுவான். அந்த அளவுக்கு அந்த ஒரு குருவின் மேல் ஒரு பற்று அவனுக்கு. அவருடைய வாழ்நாள் லட்சியமே அந்த குருவுக்கு சீடனாக இருப்பது. அந்த குருவும், அந்த சீடனை தன்னுடன் தங்க வைத்து அவனுக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்தார். ஒரு கட்டத்தில் உனக்கு எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்து விட்டேன். இப்பொழுது கடைசியாக ஒன்று சொல்லி தரப்போகிறேன். அது என்னவென்றால், யாராவது ஒருவன் ஒரு நோய் என்று சொல்லி அவனிடம் வந்தால், அதற்காக நான் உனக்கு ஒரு செபத்தைச் சொல்லித் தருகிறேன். நீ அந்த செபத்தை உச்சரித்தால் அது எப்படிப்பட்ட நோயாக இருந்தாலும் உடனே குணமாகி விடும், என்று சொல்லி, அந்த ஜெபத்தை அவனுக்கு சொல்லிக் கொடுத்தார். செபத்தை சொல்லிக் கொடுத்த பின் அந்த குரு சீடனிடம்,  இனிமே நீ என் கூட இருக்க கூடாது.  நீ என்ன விட்டு தள்ளி இருக்க வேண்டும். காட்டில் என் கூடவே இருந்தது போதும்.  இனி நீ மக்களோடு தான் இருக்கணும்.  ஆனால் நான் உனக்கு சொல்லிக் கொடுத்த  அந்த ஜெபத்தை நீ எங்கேயாவது சொன்னால் நீ என்னுடைய சீடனாக இருக்க முடியாது.  நீ சொல்லாமல் இருக்கும் வரைக்கும் தான் நீ என் சீடன். அந்த ஜெபத்தை சொல்லிவிட்டால் என்னுடைய சீடனாக இருக்க முடியாது என்று கூறினார். குருவின் சொல்படி அந்த சீடன் கிளம்பி சென்றான். அங்கே ஒரு கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் கொரோனா தொற்றுநோய் போன்றதொரு மிகப்பெரிய தொற்றுநோய் நிலவிக் கொண்டிருந்தது. மக்கள் படுகின்ற துன்பங்களையெல்லாம் தன்னுடைய கண்களால் கண்டான். அங்கு நிறைய மக்கள் இறந்து கொண்டிருந்தார்கள். இதனைக் கண்டு பொறுமை இழந்த அந்த சீடன், தனது குரு கற்றுக்கொடுத்த ஜெபத்தை சொல்லி அந்த கிராமத்து மக்கள் அனைவரையும் காப்பாற்றினான். 

சில நாள்கள் கழித்து அந்த சீடன் குருவை சந்தித்தான். அந்த குருவை நோக்கி அவன் என்னை மன்னித்து விடுங்கள் நான் தங்களுடைய சீடனாக இருக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், அந்த ஜெபத்தை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை, மக்களின் அவல நிலையைக் கண்டு அந்த ஜெபத்தை நான் சொல்லிவிட்டேன் என்று கூறினான். அப்போது அந்த குரு சீடனை பார்த்துக் கூறினார், நீ எப்பொழுது அந்த ஜெபத்தை ஜெபித்தாயோ, அப்பொழுது நீ ஒரு சீடன் என்ற நிலையைக் கடந்து ஒரு குருவின் நிலையை அடைந்து விட்டாய், என்று கூறினார். 
இன்றைக்கு, இப்போது நம்மிடம் இருக்கக் கூடியதை,  நாம் அறிந்ததை, நாம் தெரிந்து வைத்திருப்பதை, நம்மிடம் இருப்பதை, நாம் அடுத்தவரோடு பகிரும் போது மட்டுமே நிறைவைக் காண முடியும்.  எல்லாவற்றையும் சேர்த்து சேர்த்து  வைத்திருப்பதனால்  நாம் அனைத்தும் கொண்டவர்களாக இருக்கலாம்.  ஆனால் நம்மிடம் இருப்பதை அடுத்தவரிடம் பகிராத போது,  அனைத்தும் இருந்தும் நாம் ஒன்றும் இல்லாதவர்களாகத் தான் நாம் இருக்கிறோம். 

ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னை சுற்றி இருந்த அந்த மக்கள் மீது பரிவு கொண்டார். அவர்கள் வழியில் பசியினால் மயங்கி விடலாம் என்று எண்ணம் கொண்டார். அவர்களது பசியைப் போக்க வேண்டும் என எண்ணினார். சீடர்களைப் பார்த்து இவர்களுக்கு உணவு கொடுங்கள் என்று கூறினார். அந்த சீடர்கள் அனைவரும் இயேசுவுடனேயே பயணிப்பவர்கள். இயேசுவுக்கு  தெரியும் தன்னுடைய சீடர்களிடம் என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பது. தெரிந்தும் நம்மிடம் உணவு கொடுக்கச் சொல்கிறார் என்ற கேள்வி இயல்பாக அவர்கள் மனதில் எழுந்திருக்கலாம். ஆனால் அந்தக் கூட்டத்தின் மத்தியில் இருந்த சிறுவன் ஒருவன் தன்னிடமிருந்த இரண்டு மீனையும் ஐந்து அப்பங்களையும் அங்கு கொண்டு வந்தான். அந்த கொடுக்கக்கூடிய மனப்பான்மை என்று நம்மிடமும் இருக்க வேண்டும். 
நாம் நிறைய விஷயங்களை படித்து தெரிந்து கொள்கிறோம். நிறைய காரியங்களை சேர்த்து வைக்கிறோம்.  கற்றுக் கொள்வதும் சேர்த்து வைப்பதும் எதற்காக?  நமக்காக என்று சொல்லுகிறோம். நம்மிடம் மட்டுமே குவித்துக் கொண்டிருப்பதால் என்ன நன்மை நடக்கப் போகிறது? இருப்பதை இல்லாதவரோடு பகிரும் போது மட்டுமே, நாம் சேர்த்து வைத்த பொருட்களுக்கான அர்த்தம் கிடைக்கிறது. நாம் சேர்த்து வைத்த செல்வங்கள் அனைத்துமே மதிப்பை கொடுக்க கூடியதாக, மகத்துவமானதாக மாறுகின்றது.

 நம்மை சுற்றி இருக்கக் கூடிய செல்வங்களும் நமது உடமைகளும் நிலையானது அல்ல. இதையே பட்டினத்தார் இவ்வாறு கூறுவார்,


ஊருஞ் சதமல்ல,
உற்றார் சதமல்ல,
உற்றுப் பெற்ற பேருஞ் சதமல்ல,
பெண்டீர் சதமல்ல,
பிள்ளைகளும்சீருஞ் சதமல்ல,
செல்வஞ் சதமல்ல,
தேசத்திலேயாருஞ் சதமல்ல,
நின்தாள் சதங் கச்சியேகம்பனே.
என்கிறார் பட்டினத்தார்..

அதாவது 
ஊரும் நிரந்தரமல்ல, உற்றாரும் நிரந்தரமல்ல, பெற்ற பெயரும் நிரந்தரமல்ல, கட்டிய மனைவி, பெற்ற பிள்ளை, கொண்டுவந்த சீர் எதுவும் நிரந்தரமல்ல இந்த உலகத்திலே... ஒன்றே ஒன்று நிரந்தரம் அது இறைவன் ஒருவனே... 
நிரந்தரமான இறைவனைப் பற்றிக் கொண்டு நம்மிடம் இருப்பதை மற்றவரோடு பகிர இறைவன் அழைக்கின்றார். நாம் அனைவருமே ஆண்டவர் இயேசுவின் பிள்ளைகள். அவர் நம் அனைவருக்குள்ளுமாக இருந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார். இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகம் தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆண்டவர் இயேசுவின் பெயரால் எத்தனையோ இன்னல்களையும், எத்தனையோ துன்பங்களையும் சந்தித்தவர் இந்த பவுல். சந்தித்த துன்பங்கள் மத்தியிலும் அவர் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நம்பிக்கையின் நிமித்தமாகத்தான், வாழ்வில் பலவிதமான இன்னல்களை ஆண்டவர் இயேசுவின் பொருட்டு அவருடைய நற்செய்தியின் படி தன்னுடைய வாழ்வை அமைத்துக் கொள்வதால், உருவாகக்கூடிய இன்னல்களை துணிவோடு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு மனிதராக இருந்தார். 

    மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உள்ளிருந்து செயலாற்றுகிறார். நமக்குள் இருந்து செயலாற்றேகின்ற இறைவனை நாம் கண்டு கொள்ளும் போது மட்டுமே, நம்மிடம் இருப்பதை அடுத்தவரோடு பகிரக் கூடியவர்களாக மாற முடியும். கடவுள் எங்கோ இருக்கிறார் என்று எங்கெங்கோ தேடிக் கொண்டிருப்பதை விட, நமக்குள் உறைந்திருக்கும் இறைவனை கண்டு கொள்வோம். 

     இன்றைய நாளில், நீங்களும் நானும் அழைக்கப்படுகின்றோம். நமக்குள் உறைந்திருக்கும் இறை உணர்வை, இறையாட்சியின் மதிப்பீடுகளை, நாம் கண்டு கொள்ளும் போது மட்டும் தான் நாம் அடுத்தவர் மீது பரிவு கொள்ளக் கூடியவர்களாக மாறுவோம். நம்மிடம் இருப்பதை அடுத்தவரிடம் பகிர கூடியவர்களாக மாற முடியும். இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து கொள்வதற்கு இன்றைய நாளில் இறைவன் நம்மை அழைக்கின்றார்.  அழைக்கின்ற இறைவனது குரலுக்கு செவி கொடுத்தவர்களாய், நாமும் ஆண்டவர் இயேசுவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாய், நமக்குள் உறைந்திருக்கும் இறைவன் உணர்த்தும் உண்மையை உணர்ந்து கொண்டு, நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்வோம். 
     அதற்கான அருளை வேண்டி இணைவோம் இந்த திருப்பலியில்.


வாழ்வும் - இறையாட்சி மதிப்பீடும்... (24.7.2021)

வாழ்வும் - இறையாட்சி மதிப்பீடும்

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 கடந்த வாரம் முழுவதும் வாசிக்கப்பட்ட வாசகங்கள் அனைத்துமே இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி நாம் வாழவேண்டும் என்ற செய்தியை தருகின்றன. இயேசு மண்ணில் வாழ்ந்த போது இறையாட்சியைப் பற்றிய செய்திகளை எடுத்துரைத்துக்கொண்டே இருந்தார்.  அவரது வார்த்தைகளை பலர் வாழ்வாக மாற்றினார்கள், பலர் அதனை பொருட்படுத்தாது சென்றார்கள். பலர் அவர் கூறிய வார்த்தைகளைக் கேட்டு மயங்கினார்கள், ஆனால் செயலில் ஈடுபடாமல் இருந்தார்கள்.  இவ்வாறு பலதரப்பட்ட மனநிலையில் இருந்த அந்த மக்களிடையே ஆண்டவர் இயேசு இன்று புதியதொரு உவமையை சொல்லுகிறார். 

அதுதான் ஒரு நிலத்தில் அதன் உரிமையாளர் விதைகளை விதைக்க, அதில் முளைத்த களைகளைக் குறித்த உவமை. 

 ஒரு வயலில் எப்படி நல்ல விளைச்சல் தரக்கூடிய செடிகளும், எதற்கும் பயன்படாத களைகளும் வளர்ந்து நிற்கிறதோ, அதுபோலத்தான் இந்த உலகத்தில் பல நேரங்களில் இறையாட்சியின் மதிப்பீடுகளை அறிந்தவர்களும் அறிந்து அதனை செயல்படுத்தாமல் இருப்பவர்களும் இணைந்தே இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவ்வாறு நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த காலத்தில் பல நேரங்களில் இறையாட்சியின்  மதிப்பீடுகளை உணர்ந்து கொள்ளாமல் நடக்கக் கூடியவர்கள் மீது நமக்கு கோபம் எழுவது உண்டு.  அவர்கள் நன்றாக இருப்பார்கள்,  ஆனால் இறையாட்சியின் மதிப்பீடுகளை பின்பற்றுவதால் நாம் பல துயரங்களை அடைகிறோம்  என்ற எண்ணமானது, உள்ளத்தில் அவ்வப்போது வாட்டிக் கொண்டே இருக்கலாம்.  ஆனால், அந்தச் சூழ்நிலையில் நாம் எப்படி செயல்பட வேண்டும்? என்பதைத் தான் இறைவன் இன்று உணர்த்துகின்றார்.

நாம் இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்வாக மாற்றிக்கொண்டே பயணிக்க வேண்டும். பல களைகள் நம்மை நெருக்குவது போல் இருந்தாலும்,  நாம் பலன் தரக்கூடிய நல்ல செடியாக உருவெடுத்து கொண்டே இருக்க வேண்டும். காலம் வரும்பொழுது இறைவன் நல்ல விளைச்சல் தரக்கூடிய நம்மை பாதுகாப்பார்.  இடையூறாக இருந்த களைகளை எவ்வாறு அகற்றி, தீயிலிட்டு இருக்கிறார்களோ, அது போல இறையாட்சியின் மதிப்பீடுகளை உணர்ந்திருந்தும் அதனை செயலில் காட்டாதவர்களை இறைவன் பார்த்துக் கொள்வார் என்ற மனநிலையோடு இந்த சமூகத்தில் நாம் பயணிக்க இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன.  வாசகங்கள் உணர்த்துகின்ற உண்மை நெறியை உணர்ந்து கொண்டவர்களாய், நமது வாழ்வில் இறையாட்சியின் மதிப்பீடுகளை அனுதினமும் வெளிக்காட்டக் கூடியவர்களாக மாறிட இறையருளை வேண்டுவோம்.

வியாழன், 22 ஜூலை, 2021

விதைப்பவரை நோக்கிட ....(23.7.2021)

விதைப்பவரை நோக்கிட ....


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
         படைத்த படைப்புகளை வழிபடுகின்ற மனிதர்கள் பலர், படைத்த பரம்பொருளை மறந்து போகின்றனர்.  இதற்கு உதாரணமாகத் தான் இன்றைய நாளின் முதல் வாசகம் அமைந்திருக்கிறது.  படைத்த இறைவனை மறந்து போய், தங்களுக்கென தனி கடவுளை செய்து கொள்ளக் கூடியவர்களாகவும், தங்களை வழிநடத்திய, பராமரித்த கடவுளின் அன்பை உணராதவர்களாகவும், வணங்கா கழுத்துடைய மக்களாகவும் இஸ்ரயேல் மக்கள் திகழ்ந்தார்கள் என்பதை வரலாற்றில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.  பெரும்பாலும் விதை மண்ணில் விழுந்து முளைத்து விருட்சமாக எழுந்து நிற்கின்ற போது, விதையையும்  மரத்தையும் கண்ணோக்குகின்ற பலர், அந்த விதையை விதைத்தவரை மறந்து விடுகின்றனர்.  ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, இன்றைய நாளில் விதைகளை மண்ணில் தூவுகின்றார்.  தூவிய விதைகள் எல்லாம் சில சாலையோரத்திலும், சில முட்செடிகளுக்கு நடுவிலும், சில பாறைகள் மீதும்,  சில நல்ல நிலத்திலும் விழுந்தன என  நற்செய்தி வாசகத்தில் வாசிக்கக் கேட்டோம். ஆண்டவர் இயேசு விதை விதைப்பவராக நின்று விதையை தூவியிருக்கின்றார்.  நம்மிடம் பொழியப்பட்டு இருக்கின்ற அந்த ஆண்டவருடைய வார்த்தைகளான விதைகளை நாம் எந்த நிலத்தில் விழுந்த விதைகளாக உள்ளத்தில் உணர்ந்து, ஒவ்வொரு நாளும் வளர்த்தெடுக்கிறோம், என சிந்தித்துப் பார்ப்போம். தான் கற்பித்தவற்றையும் தான் போதித்தவற்றையும் தன் வாழ்வாக மாற்றிக் கொண்டவர் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.  அவரைப் பின்பற்றுகின்ற நாம், விதையை மட்டும் பார்த்து நகர்ந்து விடாது, விதையை விதைத்தவரான அவரின் விதைத்த நோக்கத்தையும் கண்டுகொள்ள அழைக்கப்படுகின்றோம். கடவுள் படைத்த இந்த அழகிய உலகில், படைத்த பொருள்களை நம்பி, அதனை வழிபட்டுக் கொண்டு நாட்களை நகர்த்தாது, உண்மையை தெய்வமான பரம்பொருளாகிய படைப்பனைத்திற்கும் தொடக்கமான ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நாம் கண்டு கொள்ளவும்,  அதன் வழி இந்த சமூகத்தில் விதையை நோக்குபவர்களாக மட்டுமில்லாது, விதைத்தவரை நோக்குபவராக மாறவும்,  எடுத்துக்காட்டான வாழ்வை அமைத்துக் கொள்ளவும் இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம்.

புதன், 21 ஜூலை, 2021

தேடி, கண்டு கொள்ள... (22.7.2021)

தேடி, கண்டு கொள்ள...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
             இன்றைய நாளில் நாம்  அனைவரும் இணைந்து மகதலா மரியாவை நினைவு கூருகிறோம். திருஅவை இவரை நினைவு கூருவதற்கு பல காரணங்கள் உண்டு. இந்த பெண்மணி தான் முதன்முதலில் ஆண்டவர் இயேசு உயிர்த்தார் என்ற செய்தியை சீடர்களுக்கு அறிவித்தவர். இந்தப் பெண்மணியைப் பற்றி விவிலியத்தில் பலவற்றை நாம் காண முடியும். இந்த பெண்மணியிடம் இருந்து தான்  ஆண்டவர் ஏழு பேய்களை ஓட்டினார் என விவிலியத்தில் கூறப்படுவதாக விவிலிய அறிஞர்கள் கருதுகிறார்கள். இந்த பெண்மணி தான் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண். இந்த பெண்மணி தான் ஆண்டவர் இயேசுவின் இறப்பின் போது அவரது சிலுவை அடியில் நின்று கொண்டிருந்த பெண். தனது வாழ்வில் தடம் புரண்டு இருந்த இந்த பெண்மணி, ஆண்டவர் இயேசுவை கண்டு கொண்ட போது, மனம் மாறினார், தன்னுடைய செயல்களை திருத்திக் கொண்டார். தன்னிடம் இருந்த அனைத்து விதமான தீய பழக்கங்களையும் விட்டொழித்து, ஆண்டவர் இயேசுவின் உண்மை சீடத்தியாக மாறிப்போனார். ஆண்டவர் இயேசுவை பின்தொடர்ந்தார். அவரது பணி வாழ்வில் அவரோடு நின்றார்.  அவரது மரணத்திலும் அவரது சிலுவை அடியில் நின்று மரியாவுக்கு பக்கபலமாக இருந்தார்.

 இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில்,  மகதலா மரியாவை போல பாவ  வாழ்வில் உழலக் கூடியவர்கள் ஏராளமானோர். ஆனால் நமது வாழ்வை அலசிப்பார்த்து திருத்திக்கொண்டு, ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக மாறுவதற்கு இந்த பெண்மணியின் வாழ்வு நமக்குக் கற்பிக்கின்றது. அப்பெண்மணியின் வாழ்வு நமக்கு கற்பிக்கின்ற பாடத்தை உணர்ந்து கொண்டு, வாழ்வில் நாம் செய்கின்ற பாவங்களை நினைவு கூர்ந்து, அந்த பாவங்களை விட்டொழித்து, ஆண்டவர் இயேசுவின் உண்மையான சீடர்களாக நாமும் இந்த மகதலா மரியாவை போல மாறிட இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.

 எனவேதான் திருஅவையானது இந்த பெண்மணியை பற்றி நினைவு கூருகின்றது. ஒருவரை பற்றி நினைவு கூருகின்ற போது, அவரின் வாழ்வில் நடந்தவைகளை மனதில் கொண்டு, நமது வாழ்வில் மாற்றங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் இன்றைய நாளில் நாம் நினைவுகூரக் கூடிய இந்த மகதலா மரியாவின் வாழ்வு, நமக்கு ஒரு பாடத்தைச் சொல்லித் தருகிறது. அதுதான்  நாம் நமது வாழ்வில் பின்பற்றுகின்ற தீய பழக்கங்களிலிருந்து மனம் மாறி, ஆண்டவரின் உண்மைச் சீடர்களாக மாற முடியும் என்ற பாடம். இந்த பாடத்தை உணர்ந்து கொண்டவர்களாக,  நமது வாழ்வில் நாம் செய்கின்ற பாவங்களை நினைவு கூர்ந்து அவற்றை மாற்றிக் கொண்டு, ஆண்டவரின் உண்மைச் சீடர்களாக மாறிட இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம். இயேசுவை தேடி, கண்டு கொண்ட மகதலா மரியாவை போல, நாமும் ஆண்டவரை அறிக்கையிடக் கூடியவர்களாக மாறுவோம்.

செவ்வாய், 20 ஜூலை, 2021

பராமரிப்பை உணர..... (21.7.2021)

பராமரிப்பை உணர.....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
  இறைவன் அனுதினமும் நம்மை பராமரித்து பாதுகாத்து வருகின்றார். அவரது பராமரிப்பை உணர்ந்து கொண்டு, அவருக்கு பலன் தரக்கூடிய விதைகளாக நாம் இருக்க இன்றைய நாளில்  அழைக்கப்படுகிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில் அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரயேல் மக்களை எகிப்தில் இருந்து இறைவன் மீட்டு வந்தார். ஆனால் ஆண்டவரின் உடன் இருப்பையும் பராமரிப்பையும் உணர்ந்து கொள்ளாத அந்த மக்கள் பல நேரங்களில் ஆண்டவர் மீது நம்பிக்கை இழந்தவர்களாக, ஆண்டவரின் பராமரிப்பை உணராதவர்களாக, செயல்பட்டார்கள். அந்த நேரங்களில் எல்லாம் ஆண்டவர் அந்த மக்கள் மீது கோபம் கொள்ளாமல், மக்களின் தேவையை நிறைவேற்றக் கூடியவராக இருக்கின்றார். 

 பொதுவாகவே மனித மனம் தேவையில் உழலும் போது, நல்லது என பார்க்கக்கூடிய பார்வையில், தேவை முடிந்த பிறகு அதை பொருட்படுத்தாத நிலையும் மனித மனங்களில் இயல்பாகவே இருக்கிறது. இதுதான் இஸ்ரயேல் மக்களின் வாழ்விலும் பிரதிபலித்தது. தங்களது தேவையை நிறைவேற்ற இறைவனை தேடினார்கள். தேவை நிறைவேறியவுடன் இறைவனை மறந்தார்கள். நாமும் பல நேரங்களில் அவ்வாறு செயல்படுகிறோம். அவ்வாறு செயல்பட்டால் நாம் நல்ல நிலத்தில் விழுந்த விதைகளாக, விளைச்சல் தரக்கூடியவர்களாக இருக்க இயலாது. இறைவன் நம் அனைவரையும் தன் பிள்ளைகள் என ஒரே அளவான அன்பையும் அக்கறையையும் பராமரிப்பையும் வழங்குகிறார் ஒவ்வொரு நாளுமே. அவருடைய பராமரிப்பை உணர்ந்து கொண்டு நாம், நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் போல பலன் தரக்கூடிய மனிதர்களாகிட இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். நாம் நல்ல நிலத்து விதைகளாக பலன் தர, ஆண்டவரின் பராமரிப்பை உணர்ந்துகொள்ள,  இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம்.

திங்கள், 19 ஜூலை, 2021

நாமும் அவரின் சகோதர சகோதரிகளாக மாறலாம்!...(20.7.2021)

நாமும் அவரின் சகோதர சகோதரிகளாக மாறலாம்!

இறைவன் இயேசுவில் அன்புக்கு உரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்றைய நாள் வாசகங்கள் நம்மை ஆண்டவர் இயேசுவின் சகோதர சகோதரிகளாக மாறுவதற்கு அழைப்பு தருகின்றன.  நாம் ஆண்டவரின் சகோதர சகோதரிகளாக மாறவேண்டும் என்றால், கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும்.   கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றியவர் தான் அன்னை மரியா.  ஆண்டவருடைய தூதர் அறிவித்த செய்தியை ஏற்றுக்கொண்டு,  அந்த தூதரின் வார்த்தைகளுக்கு இணங்கி, ஆண்டவர் இயேசுவை தன் வயிற்றில் சுமக்க, தம்மையே கையளித்து ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்றிய அன்னை மரியாவைப் போல, நாமும் நமது வாழ்வில், ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்றி அவரது சகோதர சகோதரிகளாக மாறிட முடியும். ஆண்டவருடைய சகோதர சகோதரிகளாக நாம் மாற வேண்டுமென்றால்,  அவரது திருவுளமான இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்ய வேண்டும்.  அன்போடும் பரிவோடும் இரக்கத்தோடும் அருகில் இருப்பவரை நோக்குகின்ற போது,  ஆண்டவர் இயேசுவின் இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்ய நாம் காரணமாக மாறுகின்றோம்.  நம்மால் இந்த மண்ணில் இறையாட்சி மலருகின்ற போது, நாம் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றக் கூடிய நபர்களாக விளங்க முடியும்.  அவ்வாறு விளங்கினால் நாம் அவரின் சகோதர சகோதரிகளாக மாறலாம்.  ஆண்டவர் நம்மை அவருடைய சகோதரர் சகோதரிகளாக எண்ணுவதால் தான்,  நம்முடைய அனைத்து விதமான இன்ப துன்ப நேரங்களில், நம்மோடு அவர் பயணிக்கின்றார். அவரது திருவுள்ளத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்,  அதன்படி செயல்பட வேண்டும் என்ற  எண்ணத்தோடு நம்மோடு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் பயணிக்கின்றார்.

 அவ்வாறு தான் இஸ்ரயேல் மக்களின் துன்பத்தை கண்டு அவர்களின் அழுகுரலை கேட்டு, அவர்களை அந்த அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வர மோசேயை அனுப்பி, அந்த மோசே வழியாக அவர்களுக்கு விடுதலை கொடுத்து பாலும் தேனும் பொழியும் கானான் தேசத்தை நோக்கி நடத்திச் சென்ற பொழுதும் கூட பலவிதமான இன்னல்களையும், பலவிதமான சிக்கல்களையும் அவர்கள் சந்தித்த போது, அவர்களோடு இருந்து அவர்களுடைய இன்ப துன்பத்தில் பங்கெடுத்து, அவர்களை மீட்டு வந்தார். கடவுள் தம்மை மீட்டு வந்தார் என்பதனை மனதில் கொண்டவர்களாய், மோசேயோடு இணைந்து அவர்கள் புகழ் பாடல் பாடினார்கள் என முதல் வாசகத்தில் வாசிக்கக் கேட்டோம். நாம் ஆண்டவரை புகழ் பாடலால் மகிழ்விப்பதை விட, இறையாட்சியின் மதிப்பீடுகளான அன்பு, சமத்துவம், சகோதரத்துவத்தோடு இந்த சமூகத்தில் பயணம் செய்து, ஆண்டவரின் திருவுளத்தை இம்மண்ணில் நிறைவேற்றக் கூடியவர்களாக மாறிட, அவரது சகோதர சகோதரிகளாக மாறிட, இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். ஆண்டவர் தருகின்றன அழைப்பை உணர்ந்து கொண்டு, அவரின் சகோதர சகோதரிகளாக மாறிட, முயலுவோமா!

ஞாயிறு, 18 ஜூலை, 2021

அடையாளமாக விளங்க... (19.7.2021)

அடையாளமாக விளங்க...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடக்கின்ற நிகழ்வை நாம் வாசிக்க கேட்டோம். இஸ்ராயேல் மக்கள் தங்கள் வாழ்வில் இதுவரை கண்டிராத மாபெரும் அற்புதமாக அதிசயமாக செங்கடலை கடக்கின்ற நிகழ்வை சந்தித்தார்கள். தங்கள் கண்களால் கடல் நடுவே பாதையை கண்டார்கள். வாக்களிக்கப்பட்ட புதிய வாழ்வை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார்கள். ஆனால், காலப்போக்கில் அவர்கள் தங்களை காத்து வந்த இறைவனை மறந்தவர்களாக, ஆண்டவரை விட்டு விலகிச் சென்ற மக்களாக இருந்தார்கள். எனவேதான் பல நேரங்களில் இவர்கள் வணங்கா கழுத்துள்ள மக்கள் என்று விவிலியத்தில் சொல்லப்படுகிறார்கள். 

            ஆண்டவர் இயேசுவின் காலத்திலும் கூட அவர் எவ்வளவோ, நன்மையான காரியங்களை செய்து கொண்டே சென்றார். இயேசுவிடம் குற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்தோடு இயேசு செல்கின்ற இடமெல்லாம் அவரைப் பின் தொடர்ந்து சென்றவர்கள் தான் இன்று நாம் வாசிக்கின்ற பரிசேயர்களும்  சதுசேயர்களும். இவர்கள் ஒவ்வொரு நாளும் இயேசுவின் அருஞ்செயல்களையும் அதிசயங்களையும் கண்ணாரக் கண்டவர்கள். ஆனால் மேலும் மேலும் இயேசுவிடம் வந்து இன்னும் எங்களுக்கு அடையாளங்களை காட்டும் என்று கேட்கிறார்கள். அப்போது இயேசு ஆண்டவர் அவர்களிடம் இவ்வாறு கூறுகிறார்:  வெறும் அடையாளங்களைக் கண்டு மட்டுமே நம்பிக்கை கொள்பவர்களாக நீங்கள் இருந்தால் உங்களுக்கு எந்தவிதமான அடையாளமும் தரப்படமாட்டாது என்கிறார். 

        இன்று நாம் வாழும் சமூகத்திலும் கூட மனிதர்கள் ஏதாவது ஓர் அதிசயம் நிகழ்கிறது என்று கேள்விப்பட்டால் அதனை நோக்கி ஓடக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.  சமீபத்தில் கூட மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில், மக்கள் அதிகமாக கூட வேண்டுமென்றால் அங்கு ஏதாவது அற்புதம் நிகழ்த்தப்பட வேண்டும் என்ற கருத்து சொல்லப்பட்டது. வெறும் அற்புதத்தையும் அடையாளத்தையும் நிகழ்வுகளையும் மட்டும் மையமாக வைத்து நாம் ஆண்டவரைத் தேடிச் செல்ல வேண்டும் என விரும்பினால், கண்டிப்பாக நாம் ஆண்டவர் மீது முழுமையான நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. எந்தவித அற்புதங்களும் அதிசயங்களும் நமது வாழ்வில் நடக்காத நிலையிலும், அதனை எதிர் பார்க்காதவர்களாய் ஆண்டவர் மீது அதீத நம்பிக்கை கொண்டு, படைத்த இறைவன் இந்த நொடி வரை நம்மை பாதுகாத்து வருகிறார், பராமரித்து வருகிறார் என்பதை உணர்ந்தவர்களாய், அவரைத் தேடிச் சென்று, நாம் அடையாளமாக மாற வேண்டும். 

ஆனால் அவ்வாறு மாறாது, வெளிப்படையாக அடையாளங்களை எதிர்பார்ப்பதும், அதைக் கொண்டு கடவுள் மீது ஆழமான நம்பிக்கை கொள்ள வேண்டும் என எண்ணுவதும் இறைவனுக்கு ஏற்புடைய செயலல்ல. இதைத்தான் இன்றைய வாசகங்கள் வெளிப்படுத்துகின்றன. 
     நாம் எத்தகைய மக்களாக இருக்கிறோம்? வாழ்வில் நடந்த பலவிதமான அற்புதங்களை, அதிசயங்களை, கண்ட போதும், வணங்கா கழுத்துள்ள மக்களாக இருந்த இஸ்ரயேல் மக்களாக இருக்கிறோமா? அல்லது ஏதேனும் அருளடையாளம் நிகழ்ந்தால் மட்டுமே கடவுளை நம்புவேன் என்ற மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கின்றோமா? அல்லது நாமே ஒரு நல்ல அடையாளமாய் மாறக் கூடியவர்களாய் படைத்த இறைவனின் பராமரிப்பை உணர்ந்தவர்களாய் இருக்கின்றோமா? 

கேள்வி நம்முன் இருக்கிறது. நாம் எத்தகைய மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கிறோம்?  அவரவர் உங்களையே சுய ஆய்வு àசெய்து, உரிய பதிலை கண்டு கொண்டு, உங்கள் வாழ்வை நல்லதொரு பாதையில் வழிநடத்திச் சென்று இந்த சமூகத்தில் நல்லதொரு அடையாளமாக விளங்க இறையருள் வேண்டுவோம்.

சனி, 17 ஜூலை, 2021

மந்தையின் மணம் அறிந்தவனே நல்ல ஆயன்!...(18.7.2021)

மந்தையின் மணம் அறிந்தவனே நல்ல ஆயன்!

இறைவன் இயேசுவில் அன்புக்கு உரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின்  அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
நெஞ்சை தொட்ட ஒரு குடும்பம். ஒரு குடும்பத்தில் ஒரு தாய் தந்தையருக்கு மூன்று பெண் குழந்தைகள். தாயும் தந்தையும் கடினப்பட்டு குழந்தைகளை வளர்த்தனர். குழந்தைகள் வளர்ந்தார்கள். திருமண வயதை எட்டிய நிலையில் இருக்கும் பொழுது தந்தை பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு, படுக்கையில் விழுந்தார். படுக்கையில் விழுந்த தந்தையை மூன்று மகள்களுமே போட்டி போட்டு கவனித்துக் கொண்டார்கள். பொதுவாக நோய்வாய்ப்பட்ட தந்தையை பார்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டாத பலருக்கு மத்தியில், இந்தக் குடும்பத்தினர் மிகவும் பாசத்தோடும் நேசத்தோடும் இதுவரை காட்டிய அன்பை கடந்து, இன்னும் அதிகமாக அன்பை பொழியக் கூடியவர்களாக, அந்த தந்தையை, கவனித்துக் கொண்டார்கள். ஒரு சிறு குழந்தையை போல் அவரை தாங்கினார்கள். அப்போது ஒன்று புரிந்தது, இந்த தந்தை தன்னுடைய பிள்ளைகளை சிறுவயதிலிருந்தே மிகவும் நல்லமுறையில் பராமரித்து, பாதுகாத்து, வளர்த்து வந்திருக்கிறார். அவரது வளர்ப்பு இன்று அவர் கண்ணால் காணக்கூடிய வகையில், அவரது மகள்களின் குழந்தைப் பருவத்தில், அவர்  பெரியவராக, தந்தையாக, இருந்தபோது அவர் எப்படி தன்னுடைய மகள்களை வளர்த்தாரோ, அது போல, அந்த குழந்தைகள் இளம்வயதுப் பெண்மணிகள் ஆனபோது, தங்கள் தந்தையை ஒரு குழந்தையாக பாவித்து அவரைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.  பெற்றோர் எவ்வழியோ, அவ்வழியே தான் குழந்தைகளும் செல்வார்கள்,  என்று கூறுவார்கள். ஒரு குழந்தையானது பெற்றோரிடமிருந்து தான் பலவற்றை கற்றுக் கொள்கிறது.  அதுபோல இந்த சமூகத்தை நாம் ஒரு குடும்பமாக இணைத்துப் பார்க்கும்போது, இந்த சமூகத்தில் பல மேய்ப்பர்கள் உண்டு. இந்த மேய்ப்பர்களை பார்த்துதான் மந்தையாகிய பல மக்கள் பலவற்றை கற்றுக் கொள்கிறார்கள். 

      இந்த சமூகத்தில் மேய்ப்பன் பெரியவனா? மந்தை பெரியதா? என்ற கேள்வியை எழுப்பும் பொழுது, இரண்டும் இணைந்திருப்பதில் தான் இன்பமும் நிறைவும் இருக்கிறது என்பதைக் கண்டுகொள்ள முடியும். இன்றைய நாள் முதல் வாசகம், தவறான மேய்ப்பர்களை சுட்டிக் காட்டுகிறது.  ஒன்று சேர்க்க வேண்டிய மேய்ப்பர்கள், பிரிவினைக்கு காரணமாக இருக்கிறார்கள். இதை இன்றைய நாளில் இன்று நாம் வாழுகின்ற சமூகத்திலும் நம்மால் காணமுடியும். அனைவரையும் ஒன்றிணைப்பதற்காக உருவான தலைவர்கள், பல நேரங்களில் பிரிவினைகளுக்கு வித்திடக் கூடியவர்களாகத் தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். பிரிவினைக்கு வித்திடுவதை ஆண்டவர் இயேசு விரும்புவதில்லை. ஒரு நல்ல தலைவன் என்பவன், அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடியவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தலைவனாக இந்த சமூகத்தில் வாழ்ந்தவர் தான், ஆண்டவர் இயேசு கிறிஸ்து.

 இதையே இன்றைய இரண்டாம் வாசகம் நமக்குத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த சமூகத்தில் ஒரு நல்ல ஒரு மேய்ப்பனாக இருந்தார். ஏழை- பணக்காரன், குற்றம் செய்தவன் - குற்றம் செய்யாதவன்,  சமூகத்தால் ஒதுக்கப்பட்டவன்-  உயர் நிலையில் இருப்பவன், அதிகாரத்தில் இருப்பவன்- அதிகாரம் அற்றவன் என பல பாகுபாடுகளுக்கு மத்தியிலிருந்த சமூகத்தில், இயேசுகிறிஸ்து அனைவரையும் தேடித் செல்லக்கூடிய, ஒன்றிணைக்கக் கூடிய ஒரு நல்ல தலைவனாக, நல்ல மேய்ப்பனாக இருந்தார். எனவே தான், அந்த மேய்ப்பனைத் தேடி மக்கள் கூட்டம், சாரை சாரையாக செல்லத் தொடங்கியது என்பதை இன்றைய நாள் நற்செய்தி வாசகம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. 

  இயேசு கிறிஸ்து தூய ஆவியின் உதவியால் எவ்வாறு கடவுளோடு ஒன்றித்திருந்தாரோ, அதுபோல இந்தச் சமூகத்தில் இருந்த ஒவ்வொருவருடனும் ஒன்றித்திருந்தார்.  அவரது அந்த ஒன்றிப்பு மனப்பான்மைதான், அனைவரையும் அவரை நோக்கி வர வைத்தது. 

 ஒரு நல்ல தலைவனாக இந்த சமூகத்தில் அவர் திகழ்ந்தார். எனவே அவரை நோக்கிச் சென்றவர்கள் எல்லாம் பலவிதமான நலன்களைப் பெற்றுக் கொண்டார்கள்.  இந்த இயேசுவைப் போல, ஒரு நல்ல மேய்ப்பனாக இந்த சமூகத்தில் நாம் ஒவ்வொருவரும் இருப்பதற்கு கடமைப்பட்டு இருக்கிறோம். ஆனால் பல நேரங்களில் நம்மிடையே இருக்கக்கூடிய சுயநலத்தின் காரணமாக, மந்தைகளை நமது தேவைக்கு பயன்படுத்தக் கூடிய மேய்ப்பர்களாகத் தான் இன்று நம்மில் பலர் இருந்து கொண்டிருக்கிறோம். 

ஒரு குடும்பம் என்றாலே 
அந்த குடும்பத்தில் நானா? நீயா? என்ற கேள்வியை எழுப்பி, யார் பெரியவர்? யார் உயர்ந்தவர்? என்ற பாகுபாட்டிற்கு வித்திடக்கூடிய நிலை, இன்று பல குடும்பங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஆண்டவர் இயேசு கிறிஸ்து பாகுபாடுகளையும் சுயநலப் போக்கையும் தகர்த்தெறிந்தவராய், அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு உன்னதமான ஆயராகிறார்.  அவரைப் போல, அவரைப் பின்பற்றுகிற நாமும் நல்ல  ஒரு ஆயனாக, மேய்ப்பனாக, இந்தச் சமூகத்தில் இருப்பதற்கு இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு  அழைப்பு  தருகின்றார்.  

           நான் தான் பெரியவன் என்று,  "தான்" என்ற மனப்பான்மையோடு இந்த சமூகத்தில் நாம் பயணிக்காமல், நம்மிடம் வரக்கூடிய மந்தையாகிய மக்களை நமது சுயநலப் போக்கின் படி வழி நடத்தாது, மந்தையாகிய மக்களின் தேவையை அறிந்தவர்களாக நாம் இச்சமூகத்தில் வலம் வர வேண்டும்.  அவ்வாறு வலம் வருகின்ற போது, மந்தைகளாகிய மக்கள் நம்மைத் தேடி வரக் கூடியவர்களாக மாறுவார்கள்.  நம்மைத் தேடி வருகின்ற போது அவர்கள் பலவிதமான நலன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், நாம் இயேசுவைப் போல நல்ல  ஒரு மேய்ப்பனாக 
 இந்த சமூதத்தில் இருக்க வேண்டும். 

மேய்ப்பன் என்றால் யாரோ ஒருவர் தான் தலைவர் என்று கூறிவிட்டு, அவன் தான் மேய்ப்பன் என எதிர்பார்த்துக் கொண்டு நகராமல், நாம் ஒவ்வொருவருமே நல்லதொரு மேய்ப்பனாக மாற வேண்டும். சமூகத்திலும், குடும்பத்திலும், வீட்டிலும், நாட்டிலும் நல்ல ஒரு தலைவர்களாக, நல்ல ஒரு மேய்ப்பர்களாக, பொதுநல சிந்தனையோடு செயல்படக்கூடிய தன்னார்வ மனம் கொண்ட நல்ல மனிதர்களாக இந்த சமூகத்தில் நாம் மாறிட வேண்டும் என்ற செய்தியினை, இறைவன் இன்றைய நாளில் நமக்குத் தருகின்றார்.  இறைவன் தருகின்ற செய்திகளை செவிகளில் கேட்டு விட்டு நகர்ந்து விடாது, கேட்டவற்றை வாழ்வாக மாற்றி,  இதுவரை எப்படியோ நாம் வாழ்ந்திருக்கலாம்.  ஆனால்  இனி வருகின்ற காலத்தில், நல்லதொரு மேய்ப்பனாக, அடுத்தவர் நலனை முன்னிறுத்தக் கூடிய ஒரு மேய்ப்பனாக, ஆயனாக இந்த சமூகத்தில் நாம் நின்று,  பலதரப்பட்ட மக்களும் நம்மை நோக்கி வந்து பலவிதமான நன்மைகளை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக நாம் மாறிட இறையருள் வேண்டுவோம்.  வேண்டலோடு  நின்று விடாது,  அதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். சமூகத்தில் நல்லதொரு மேய்ப்பன் ஆவோம். பல நல்ல தலைவர்களை உருவாக்கிட இறையருள் வேண்டுவோம்.

வெள்ளி, 16 ஜூலை, 2021

இடமாற்றம் - எண்ண மாற்றம்....(17.7.2021)

இடமாற்றம் - எண்ண மாற்றம்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 
இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெற்ற இடமாற்றம் என்பதை மையமாகக் கொண்டு எண்ண மாற்றத்தைக் குறித்து சிந்திக்க உங்களை அன்போடு அழைக்கின்றேன்.
இடம்பெயர்தல் வாழ்வில் இன்றியமையாத ஒன்று. இடம் பெயர்தலை பல நேரங்களில் நாம் ஏற்றுக்கொள்வதில்லை. இடம் பெயரும் போது நாம் இருந்த இடத்திலிருந்த நமக்கு நெருக்கமான,  நமக்கு பிடித்த பலவற்றை பிரிந்து நாம் செல்ல வேண்டிய நிலை உருவாகும். அதேசமயம், இடம் பெயர்தலால் நாம் பல புதியவற்றை கண்டு கொள்ளவும் இயலும்.  எனவே, எதிர்கால இலக்கை முன்னிட்டு நிகழ்காலத்தில் சின்னஞ்சிறு தியாகங்கள் செய்தவர்களாய்,  இடம் பெயர்தலை நாம் செய்தாக வேண்டும்.  மனித மனம் என்பது சுதந்திரமானது. இந்த சுதந்திரமான மனதிலே இடம்  பெயர்தலை ஏற்றுக் கொள்வதற்கும் ஏற்றுக் கொள்ளாதிருப்பதற்கும் உரிமை இருக்கிறது. ஆனால் காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ற வகையில் நாம் சில இடம் பெயர்தலை நமது வாழ்வில் பின்பற்ற வேண்டியதும் அவசியமான ஒன்றாகிறது.

 இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது பலவிதமான அற்புதங்களை செய்து கொண்டே இருந்தார். ஆனால் அவர்மீது குற்றம் சாட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவரைப் பின் தொடர்ந்த பரிசேயர் சதுசேயர்கள், இயேசுவின் மீது குற்றம் சாட்ட வாய்ப்பு தேடினார்கள். அவர்களின் தீய எண்ணத்தில் இருந்து  இடமாற்றம் அடைய விரும்பவில்லை.  மாறாக தீய எண்ணத்தோடு தொடர்ந்து உழன்று கொண்டிருப்பதுதான் நிறைவு எனக் கண்டார்கள். ஆனால் இயேசுவோ, தன்னைச் சுற்றி இருக்கக் கூடிய தீய எண்ணம் கொண்ட மனிதர்களை பொருட்டாக எண்ணாது, நல்லதை செய்து கொண்டே தொடர்ந்து இடம்பெயர்தலை முன்னெடுத்துக் கொண்டிருந்தார்.

 சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்த ஏழை,  எளியவர்களைத் தேடிச் சென்றார். தொட மறுத்த தொழுநோயாளர்களை தொட்டார். அவர்களோடு உறவாடினார்.  பாவிகள் என ஒடுக்கப்பட்ட, முத்திரை குத்தப்பட்ட மக்களிடையே சென்றார். அவர்களோடு அமர்ந்து உணவு அருந்தினார். இயேசு தன் வாழ்நாள் முழுவதும் இடம் பெயர்தலை பின்பற்றக் கூடிய மனிதராக இருந்தார். 

நாம் வாழும் இந்த உலகத்தில் நாம் எப்படி வாழ்கிறோம்? என்ற கேள்வியை நமக்குள் எழுப்பி பார்ப்போம். பல நேரங்களில் நாம் இந்த உலகத்தில் வலிமையான ஒருவரை பின்பற்றக் கூடிய வகையில் மாறுகிறோம். அந்த வலிமையானவரைப் பொறுத்து, அவருக்கு ஏற்ற வகையில், அவருக்கு பிடித்த வகையில், அவரை புகழ்ந்து கொண்டே, அவரது நல்ல செயல்களை மட்டுமே முன்னிறுத்தி பயணிக்கக் கூடியவர்களாக இருக்கின்றோம். ஆனால் பல நேரங்களில் நாம் ஒன்றை மட்டும் பற்றிக் கொண்டு இருப்பதை விட்டு விட்டு, இடம்பெயர்தலையும் வாழ்வில் முன்னெடுக்க அழைக்கப்படுகிறோம்.

 இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் இருந்து இடம்பெயர்ந்தார்கள். அவர்கள் உரிமை தேசமான கானான் தேசத்தை கண்டுகொண்டார்கள், வந்தடைந்தார்கள். நாமும் நமது வாழ்வில் நிலையானது என எண்ணி,  இந்த உலக நாட்டங்களைப் பற்றிக் கொண்டு இருப்பதை விட்டுவிட்டு, காலத்திற்கும் சூழலுக்கும்  ஏற்ற வகையில் இட மாற்றத்தை மனத்தில் இருத்திக் கொள்வோம்.  இடமாற்றம் என்பது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறிக் செல்வது என்று மட்டும் புரிந்து கொள்ளாது, நமது எண்ணங்களில் இருக்கக்கூடிய மாற்றமாக அது இருக்க வேண்டும் என்பதை உள்வாங்கிக் கொண்டவர்களாய், இன்றைய நாளில் நமது வாழ்விலும் இட மாற்றத்தை முன்னெடுக்க துவங்குவோம். இடமாற்றங்களால் பல நல்ல மாற்றங்களை நமது வாழ்வில் காணவும், அதன் வழியாக இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்யவும் இறையருள் வேண்டுவோம்.

வியாழன், 15 ஜூலை, 2021

மனிதநேயத்தை முன் நிறுத்தலாமே! ...(16.7.2021)

மனிதநேயத்தை முன் நிறுத்தலாமே!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
கடந்த வாரத்தில் ஒளிபரப்பான, "நீயா? நானா?" நிகழ்ச்சியில் ஒருபுறம் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும், மற்றொருபுறம் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய மக்களுக்கு உதவி செய்த தன்னார்வத் தொண்டர்களும், சமூக சேவகர்களுமாக,  இரு குழுவினருக்கு இடையேயான உரையாடல் நடந்தது. அந்த உரையாடலில் பல நல்லவற்றை இச்சமூகத்தில் உள்ளவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டது.  எப்படி ஒருவர் நோயினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடினார் என்பதையும், அந்த நேரத்தில் கடவுள் போல வந்து காத்தருளிய பல சமூக சேவகர்களையும், பல தன்னார்வ தொண்டர்களையும், நினைவு கூரும் விதமாக அந்நிகழ்வு அமைந்திருந்தது. இன்று மனிதர்களிடத்தில் இந்த மனித நேயப் பண்பு குறைந்து கொண்டே செல்கிறது.  ஏதேனும் ஒரு துன்பமுமோ, துயரமுமோ நேரும் போது மட்டும் தான் இது போன்ற செயலில் ஈடுபடுபவர்களை நாம் கண்டுகொள்கிறோம். பல நேரங்களில் இவர்களை கண்டுகொள்ளாமல் மனிதநேயமற்ற முறையில் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.  சட்டமா? மனிதநேயமா? என்று முன்னிறுத்தும் போது,  மனித நேயப் பண்புகளைத் தான் இறைவன் முதன்மையானது எனக் கருதுகிறார்.  இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் கூட கதிர்களை ஓய்வுநாளில் கொய்தார்கள் என்ற குற்றமானது இயேசுவின் சீடர்கள் மீது சுமத்தப்பட்டது. ஆனால் இயேசு பசியால் இருக்கிறவனுக்கு தன் பசியைப் போக்குவதற்காக அவன் கதிர்களை கொய்து உண்பதை சரி எனவும், சட்டத்தை வெறுமனே பிடித்துக் கொண்டிருப்பது தவறு எனவும் சுட்டிக் காட்டுகின்றார்.  நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், நாம் மனிதநேய செயல்களில் ஈடுபடுகிறோமா? தேவையில் இருப்பவரைக் கண்டு கொள்கிறோமா? அல்லது சட்ட திட்டங்களை மட்டுமே பிடித்துக்கொண்டு, ஏன் நான் அடுத்தவருக்கு உதவ வேண்டும்?  நான் ஈட்டிய வருமானம், அது எனக்குத்தான் என்ற மனநிலையோடு நகர்ந்து கொண்டு இருக்கின்றோமா? என சிந்தித்து பார்க்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.
  மனித நேயச் செயல்கள் நம்மிடத்தில் வெளிப்படும் போது தான்,  நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விரும்பக்கூடிய,  அவரது பிள்ளைகளாக இச்சமூகத்தில் இருக்க முடியும். நாம் மனித நேய செயல்களில் ஈடுபடாது, நம்மிடம் இருப்பதை அடுத்தவரோடு பகிராது இந்த சமூகத்தில் வாழ முற்படுவோமானால்,  நாம் கடவுளுக்கு உகந்தவராக இயலாது.  நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நம்மிடம் இருப்பதை அடுத்தவரோடு பகிர்வோம். மனிதநேய செயல்களை நமது வாழ்வில் முன்னெடுப்போம்.  எப்படி இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமையாக இருந்தபோதும், அவர்களின் அடிமைத்தனத்தை கண்டு அவர்களை மீட்டு வர வேண்டும் என ஆண்டவர் மோசேயை அனுப்பினாரோ, அதுபோல இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நம்மோடு அவர் உரையாடுகிறார்.  நமது வாழ்வில், நாம் வெறுமனே எழுதப்பட்ட சட்டங்களை பிடித்துக் கொண்டிருப்பதை விட மனித நேயச் செயல்களை முன்னிறுத்தி, அதன்வழி நடக்கக் கூடியவர்களாக மாறிட இந்நாளில் அழைக்கப்படுகின்றோம்.  அழைக்கும் இறைவனின் குரலைக் கண்டுகொண்டு வாழ்வில் மாற்றத்தை வெளிக்காட்டிட இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம்

புதன், 14 ஜூலை, 2021

கற்றுக்கொள்ளவோம்... (15.7.2021)

கற்றுக்கொள்ளவோம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு கற்றுக்கொள்ள அழைப்பு தருகின்றன. இயேசு கிறிஸ்து தனது நற்செய்திப் பணியை இவ்வுலகத்தில் ஆற்றியபோது, "என்னிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்" என்று கூறினார். இந்த இயேசுவிடமிருந்து  கற்றுக் கொள்வதற்கு பல பாடங்கள் உண்டு.  இந்த இயேசுவினிடத்தில் கனிவு இருந்தது, பரிவு இருந்தது, பாசம் இருந்தது, அன்பு இருந்தது, மன்னிக்கும் குணம் இருந்தது. இந்த இயேசுவிடம் இருக்கக்கூடிய ஏதேனும் ஒரு நற்பண்பை நாம் நம்முடைய வாழ்வில் கற்றுக்கொண்டு அதனை செயலாக்கப்படுத்திட இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். கடவுள் எப்போதும் நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார். நாம் படும் துன்பங்களை அவர் கண்ணோக்குகின்றார்.  துன்பங்களில் இருந்து நமக்கு விடுதலையை தருபவரும் அவரே. எப்படி இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து கானான் நாட்டிற்கு அழைத்துச் சென்றாரோ, அதுபோல நமது வாழ்வில், துன்பம் துயரம் போன்றவற்றிலிருந்து கடந்து, இறைவன் நம்மையும் மகிழ்வான வாழ்வை நோக்கி அழைத்துச் செல்வார். அதற்கு நாம் ஆண்டவர் இயேசுவைப் போல கனிவு உள்ளவர்களாகவும், பரிவுள்ளம் கொண்டவர்களாகவும்,  அன்பு உள்ளம் கொண்டவர்களாகவும், மன்னிக்கும் மனம் படைத்தவர்களாகவும் இருத்தல் அவசியமாகிறது. ஆண்டவரிடம் காணப்பட்ட பண்புகளுள் ஏதேனும் ஒன்றை இன்றைய நாளில் நாம் நம்முடைய பண்பாக மாற்றிக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். இந்த நாளை அழகாக்குவோம்.

செவ்வாய், 13 ஜூலை, 2021

நான் உனக்கு துணையாக இருப்பேன் ..(14.7.2021)

நான் உனக்கு துணையாக இருப்பேன் ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
இன்றைய நாள் வாசகங்கள் இறைவன் நம்மை பாதுகாப்பார் என்ற நம்பிக்கையில் நமக்கு தருகின்றன.  அவரிடத்தில் நாம் ஆழமான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என்ற செய்தி இன்றைய நாளில் நமக்கு தரப்படுகிறது.

மக்களின் துன்பங்களைக் கண்டு மகிழ்வு வல்ல இறைவன் மாறாக துன்பத்தில் இருந்து மக்களை விடுவிக்க என்பவரை இறைவன் இன்றைய நாளில் முதல் வாசகத்தில் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்களை மீட்டெடுப்பதற்காக மோசேவை அனுப்புகிறார்.
எகிப்துக்கு செல்ல அஞ்சக்கூடிய மோசே வுக்கு நான் உனக்கு துணையாக இருப்பேன் என்ற வாக்குறுதியை கொடுக்கின்றார். மக்களின் அழுகுரல் கேட்ட இறைவன் மக்களை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். 
இன்று நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட நம்மில் பலர் என்ன செய்வது எப்போது இந்த நிலை மாறும் என்ற எண்ணத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
விரைவில் இந்நிலை மாறும் கண்டிப்பாக அன்று இஸ்ரயேல் மக்களை காத்த இறைவன் என்று நம்மையும் அப்பார் என்ற ஆழமான நம்பிக்கை நமது உள்ளத்தில் இருக்க வேண்டும்.   அத்தகைய நம்பிக்கையோடு இந்த சமூகத்தில் நாம் பயணிக்கின்ற போது கடவுளின் திருவுளத்தை நாம் கண்டுகொள்ள இயலும்.

வாழ்வில் நிகழக் கூடிய இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் எல்லாம் நாம் ஆண்டவரின் திருவுளத்தை கண்டுகொண்டு அவர் மீது நம்பிக்கையோடு இந்த சமூகத்தில் தொடர்ந்து பயணிக்க இறை அருள் வேண்டுவோம்.  

திங்கள், 12 ஜூலை, 2021

வாழ்வில் நல்லது செய்கின்ற போது இடர்களா...?

வாழ்வில் நல்லது செய்கின்ற போது இடர்களா...?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் 
இன்றைய முதல் வாசகத்தில் எகிப்தில் அடிமையாக இருந்த இஸ்ரேல் மக்களை மீட்பதற்கு இறைவன் மோசே என்ற நபரை பிறக்க வைத்தது ...அழிவிலிருந்து அக்குழந்தையை காப்பாற்று இஸ்ரயேல் மக்கள் சார்பாக செயல்பட வைக்கிறார். ஆனால் தனி சார்பாக செயல்படக்கூடிய நபரை நீதி யார் எங்களுக்கு தலைவனா என்று கூறி அவரை புறக்கணிப்பதை நாம் வாசிக்க கேட்போம் ...
இயேசுவும் இந்த உலகத்தில் வாழ்ந்த போது பலவிதமான நற்செயல்களை செய்துவந்தும்...அவரை பலர் புறக்கணித்த தையும் அவரை நம்பாத அதையும் ஏற்றுக் கொள்ளாமல் நீயும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்க கேட்போம்.
இவ்வாசகப் பகுதிகள் நமக்குத் தருகின்ற செய்தி...
நாம் நல்ல பணிகளை செய்து என்றபோது அதை பலர் ஏற்றுக் கொள்ளாமலும், அதனை நிராகரித்து, நாம் அவர்கள் சார்பாக செயல்படுகிறோம் என்பதை கூட புரிந்து கொள்ளாமலும், நம்மை பல நேரங்களில் புறக்கணிக்கலாம். அந்நேரங்களில் எல்லாம் மனமுடைந்து போகாது ஆண்டவர் இயேசுவைப் போல நல்ல பணிகளை நாம் செய்ய வேண்டும். 

தன்னுடைய மக்கள் தன்னை புறக்கணித்தாலும் ஆண்டவரின் கட்டளைக்கு கீழ்படிந்து மோசே மீண்டும் அவர்களைத் தேடி வந்தார். எகிப்தில் இருந்து அவர்களை மீட்டுச் சென்றனர் ..

இந்த மோசேவைப் போல நாமும் நமது வாழ்வில் நல்லது செய்கின்ற போது சந்திக்கின்ற இடையூறுகளுக்கு மத்தியில் ஆண்டவரின் சொல் படி நடக்கக் கூடியவர்களாக இருக்க இறையருளை வேண்டுவோம்.... 

ஞாயிறு, 11 ஜூலை, 2021

அமைதியா? வாளா? (12.7.2021)

அமைதியா? வாளா?

இறைவனில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்வில் நாம் நல்லவற்றை செய்யலாம் நாம் செய்த நல்லவற்றை எளிதில் பலர் மறந்து நம்மீதும், நம்மைச் சார்ந்தவர்கள் மீதும் துன்பங்களை வாரி வழங்கலாம்...ஆனால் அந்நேரங்களில் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்ற பாடம் இன்றைய நாளில் கற்பிக்கப்படுகிறது. 

யோசேப்பு பலவிதமான நன்மைகளை எகிப்திய மக்களுக்கு செய்திருந்தும் யோசேப்பு மறைந்தவுடன் எகிப்தியர்கள் இஸ்ரவேலரை துன்புறுத்தக் கூடியது பற்றி இன்றைய நாளில் நாம் வாசிக்க கேட்டோம் ...
நன்மை செய்து இருந்தும் துன்பத்தை பெறுகின்ற நிலை உருவாகும்போது வாழ்வில் அமைதியை ஏற்படுத்துவதா அல்லது வாளை கொணர்வது  என்ற கேள்வியானது உள்ளத்தில் எழும்  அந்நேரங்களில் நாம் சூழலுக்கேற்ற வகையில் செயல்பட இறைவன் அழைக்கின்றார். இன்றைய நாளில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களை தனது பணிகளை பல இடங்களுக்கு அனுப்புகின்றார் ஏற்ற அவர்களிடம் தங்குமாறு ஏற்காதவர்கள் இடம் இருந்து முற்றிலும் விலகி விடுமாறும் இயேசு அவர்களுக்கு பாடம் கற்பிக்கிறார் இந்த பாடம் அவர்களுக்கு அது மட்டுமல்ல நமக்கும் தான் ...
வாழ்வில் தேவையான இடங்களில் அமைதியையும் வாளையும் கொணரக் கூடியவர்களாக இறையருள் வேண்டுவோம். 

வியாழன், 8 ஜூலை, 2021

நல்லெண்ணத்தோடு நலமான பணிகளை செய்ய (11.7.2021)

நல்லெண்ணத்தோடு நலமான பணிகளை செய்ய ...

இறைவன் இயேசுவின் அன்புக்குரியவர்களே 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 



இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸ் ஆடு மேய்க்கின்ற பணியை செய்து வருகின்றார் ஆனால் அவர் இறைவாக்கு உரைக்கும் பொழுது மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருக்கின்றனர். இவனெல்லாம் ஒரு பெரிய ஆளா! இவன் சொல்லி நான் கேட்கணுமா? இந்த எண்ணத்தோடு இருந்தனர். ஆனால் ஆமோஸ் இறைவனால் தேர்ந்து எடுக்கப்பட்டவர். கடவுளின் தேர்ந்தெடுத்தல் மிகவும் வித்தியாசமானது. ஆமோஸ் இறைவாக்கினர் தன்னைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார். நான் சாதாரண ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவன் தான். பெரிய படிப்பெல்லாம் படிக்கவில்லை. ஆனால் கடவுள் என்னை அழைத்தார். நான் சொன்னதைச் செய்கிறேன் என்று கூறினார்.

ஆமோசை அழைத்ததுப்போல கடவுள் நம்மையும் அவர் பணிக்காக அழைக்கின்றார்.ஆனால் நம்மில் பலர் கடவுள் ஒரு சிலரை மட்டுமே அழைக்கிறார் என எண்ணுகிறோம். ஆனால் கடவுள் ஒவ்வொருவரையுமே அழைக்கின்றார். ஏழை - பணக்காரன், படித்தவன் - படிக்காதவன்,வலிமையுள்ளவன் - வலிமையற்றவன் என்ற எந்தவித வேறுபாடும் இன்றி எல்லாரையுமே இறைவன் அழைக்கின்றார்.  ஆனால் பலர் அதை உணர்ந்து கொள்வதில்லை. அதை உணர்ந்து கொண்டு அவருக்கு ஏற்றவர்களாக வாழ்வதில்லை. மொத்தத்தில் அழைத்தல் எல்லோருக்குமாக இருக்கிறது. அதை உணராதவர்களாக நாம் இருக்கிறோம்.



இன்று இறைவனது அழைத்தல் என்றாலே குருக்களாக பணியாற்றுவது என்று தான் எண்ணுகிறோம். எனவே அழைத்தலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று சாக்கு சொல்பவர்கள் ஏராளம். நாங்கள் தான் திருமணம் முடித்து விட்டோமே.. நான் என்ன பணியாற்றுவது? என் பணி என் குடும்பத்தினருக்கு மட்டுமே என எண்ணுவோர் நம்மிடையே பலர்.

இதை தான் பாரதிதாசன்.

தன் பெண்டு 

தன் பிள்ளை 

சோறு, வீடு, சம்பாத்தியம் 

இவையுண்டு தானுண்டேன்போன் 

சின்னதொரு கடுகு போல் உள்ளங் கொண்டோன்!

அதாவது தான், தன் குடும்பம் என்பவர்கள் கடுகு போன்ற உள்ளம் கொண்டவர்கள் என்கிறார் பாரதிதாசன். அன்று குடும்பத்தில் உள்ளவர்கள் தான் பலவிதமான அறப்பணிகளில் ஈடுபட்டார்கள்;. அன்று வீட்டில் திண்ணை வைத்து கட்டியவர்கள் எல்லாம் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் காரணம் வழிப்போக்கர்கள் அமர்ந்து இளைப்பாறி விட்டுச் செல்லட்டும் என்ற உயரிய எண்ணம் கொண்டிருந்ததால். ஆனால் இன்று அன்னார்ந்துப் பார்க்கும் வகையில் மாளிகை போன்ற வீட்டைகட்டி அதற்கு அன்னை இல்லம் என பெயர்சூட்டி மகிழ்கின்றனர். ஆனால் அந்தோ பரிதாபம்…. வீட்டின் பெயர் மட்டுமே அன்னை இல்லம். ஆனால் அன்னை இருப்பதோ அனாதை இல்லம்…. இதுவே இன்று எதார்த்தம் இவ்வுலகில்.

ஆனால் கடவுள் பார்வையில் நாம் ஒவ்வொருவருமே சமமானவர்கள் தான். திருமணம் செய்து கொண்டவர்கள், திருமணம் செய்யாதவர்கள், ஏழை - பணக்காரர், தாழ்ந்தவன் - உயர்ந்தவன் இந்த வேறுபாடு எல்லாம் ஆண்டவர் பார்ப்பதில்லை. அவரது பார்வையில் நாம் அனைவரும் சமம். 

இயேசு கிறிஸ்து தன் இன்னுயிரை சிலுவையில் தியாகம் செய்தது ஒரு சிலருக்காக அல்ல நம் அனைவருக்காகவே. இவ்வுலகில் உள்ள அனைவரும் அவரது பிள்ளைகள். ஒவ்வொருவரையும் அவர் தம் பணிக்கென அழைக்கின்றார். அழைத்தவர்களை தகுதியுள்ளவர்கள் ஆக்குகின்றார். இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் வாசிக்க கேட்டோம்.

இயேசு தன் பணிக்கு அழைத்த சீடர்கள் எல்லாம் பெரிதாக சட்டம் படித்தவர்களோ, பட்டம் வாங்கியவர்களோ அல்ல. சாதாரண ஏழை எளிய மீனவர்களைத் தான். ஆனால் அழைத்தவர்களை தகுதியுடையவர்களாக மாற்றினார். இன்று கடவுள் நம்மையும் அழைத்திருக்கிறார். நம்மை தகுதியுள்ளவர்களாக அவர் மாற்றுவார். அதற்கு நாம் நம்பிக்கையோடு நலமான பணிகளையும் முன்னெடுத்து செல்லக்கூடியவர்களாக இச்சமூகத்தில் இருக்க வேண்டும். இதுதான் இன்றைய நாளில் இறைவன் நமக்குத் தருகின்ற செய்தி. அவரால் அழைக்கப்பட்ட நாம் அனைவரும் நல்லெண்ணத்தோடு இச்சமூகத்தில் நலமான பணி செய்ய வேண்டும்.  

இது எளிதான ஒன்று அல்ல… நாம் நல்லது செய்ய எண்ணலாம் ஆனால் மிக எளிதாக ஒருவர் நமது இயல்பை மாற்றிட முடியும்...

ஒருமுறை ஒருவன் ஒரு நாயைப் பிடித்துக் கொண்டு நடைப் பயிற்சியை செய்து கொண்டு இருந்தானாம். அவனருகில் சென்று மற்றொருவன் என்ன சக்கரை நோய் இருக்கா? என்று கேட்டானாம். உடனே அவன், இல்லை என்றானாம். உடனே மற்றவன்,  நான் உன்னையா கேட்கல உன்னுடைய நாயை தான் கேட்டேன் என்று கூறினானாம். உடனே அவனுடைய எண்ணங்கள் மாறின கோபத்தோடு கத்த தொடங்கினாம். 

இன்று நீங்கள் ஒரு நல்ல செயல்களை செய்ய தொடங்கும் போது உங்களை தடுப்பதற்கான ஆயிரம் வழிகளை பலர் கையில் எடுப்பது உண்டு. ஆனால் எந்த நேரத்திலும் நம்பிக்கையில் தளராது நீங்கள் உங்கள் பணியை செய்ய வேண்டும். நல்ல பணிகளை  செய்யும் போது, "இவன் விளம்பரத்திற்காக செய்கிறான்" என்று பலர் கூறுவார்கள். இவர் பெரிய ஆளா இதையெல்லாம் செய்ய வந்துவிட்டான். இவரைப் பற்றி நமக்கு தெரியாதா? என்று சிலர் ஏளனமாகவும் சொல்பவர்களும் உண்டு. சொல்லுபவர்கள் எல்லாம் செயலில் இறங்கியவர்கள் அல்ல. ஆனால் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆண்டவர் இயேசுவின் பெயரால் அனைத்து நலமான பணிகளையும் முன்னெடுத்து செல்லுங்கள். ஏற்பவர் இருக்கட்டும் ஏற்காதவர்கள் ஏற்காதவராக இருக்கட்டும். கடவுள் அவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் நம்மை வெளிப்படுத்துவார்.

நாம் இந்த இயேசுவை மனதில் கொண்டு இந்த சமூகத்தில் பயணிக்க வேண்டும். அப்படித்தான் இயேசுவின் சீடர்கள் இருந்தார்கள். பேய்களை ஓட்டுவும், நோய்களை குணப்படுத்தவும் பலவிதமான அதிகாரங்கள் அனைத்தும் அவர்களுக்கு கிடைத்தது. அனைத்து சூழல்களிலும் அவர்கள் அப்பணியைச் செய்து கொண்டே சென்றார்கள். அவர்களைப் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஏற்றுக் கொள்ளாதவர்களை பற்றி கவலைப்படத் தேவையில்லை. நீ செய்ய வேண்டியதைச் செய் என்று கூறி இயேசு அவர்களை வழி அனுப்பினார். இதையே அன்றைய நற்செய்தி வாசகத்திலும் வாசிக்க கேட்டோம்.



இன்று நிலவும் இந்த இக்கட்டான சூழலில் நம்மை மட்டும் காத்துக் கொள்வோம் பிறரைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை என ஒதுங்கக் கூடியவர்களுக்கு மத்தியில்  அந்த இயேசு கிறிஸ்து அவரது சீடர்களைப் போல நம்மையும் நலமான பணிகளை முன்னெடுக்க இன்று உங்களையும் என்னையும் அழைக்கின்றார். நல்லெண்ணத்தோடு நலமான பணிகளை முன்னெடுத்துச் செல்ல பணமோ, படிப்போ, பட்டமோ  தேவையில்லை. நல்லெண்ணம் இருந்தால் போதும். அந்த நல்லெண்ணம் என்பது வெறும் எண்ணமாக மட்டுமே இருந்தால் ஆகாது. அது நம் வாழ்வில் செயலாக்கப்பட வேண்டும். செயலாக்கப்படுவதை தான் இறைவன் விரும்புகிறார். அதனை செய்யவே இறைவன் இன்று நமக்கு அழைப்பு தருகின்றார். 

அன்று இயேசு சீடர்களை அனுப்பியது போல இன்று தளர்வுகளுக்கு மத்தியில் நாமும் இந்த சமூகத்திற்குள் செல்வோம். சமூகத்தில் நம் அண்டை வீட்டாரோடு அருகில் இருப்பவர்களோடு நம்மிடம் இருப்பதை பகிர்வோம். துன்பத்தில் துணை நிற்போம். அவர்களும் நல்ல செயல்களை செய்வதற்கு நமது செயல்கள் அவர்களுக்கு பாடமாகிட இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்...



இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...