வெள்ளி, 2 ஜூலை, 2021

வாழ்வின் எல்லா நேரத்திலும் என்ன செய்ய வேண்டும்? (3.7.2021)

வாழ்வின் எல்லா நேரத்திலும் என்ன செய்ய வேண்டும்? 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்று நம் தாய் திருஅவையானது புனித  தோமையாரை நினைவு கூர நம்மை அழைக்கிறது. யார் இந்த தோமையார்? தோமையார் என்றாலே சந்தேகப்பட்டவர் என்று பலரும் கூறுவது உண்டு.  அவர் அன்று சந்தேகப்பட்டதன் விளைவுதான், இன்று நாம் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பை நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம் என்பதன் வெளிப்பாடு என்பதை யாரும் மறந்திடவும், மறுத்திடவும் இயலாது.  ஆண்டவர் இயேசு தோமாவின் சந்தேகத்தை மையப்படுத்தி, நமது நம்பிக்கைக்கு, உரமூட்டுகிறார். கண்டு நம்புவதைவிட காணாமல் நம்புவோரே, பேறு பெற்றவர் எனக் கூறுகிறார்.  கடவுளை என்றுமே நாம் யாரும் நேரில் பார்த்ததில்லை. இருந்தாலும் கடவுள் மேல் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். நம்பிக்கையோடு பல நேரங்களில் நாம் பல நல்ல காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் சில நேரங்களில், நாம் கடவுள் எங்கே இருக்கிறார் எனக் கேள்வி கேட்கும் பொழுது கடவுள் கூப்பிடும் தூரத்தில் தான் இருக்கிறார் என வேடிக்கையாக நாம் பல நேரங்களில் கூறிவிட்டே நகர்வது உண்டு.  கூப்பிடும் தூரத்தில் இருப்பதால் தான் அவரை பலர் கூப்பிடாமல் இருந்து கொண்டிருக்கிறோம்.

         நாம் நமது வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் அந்த ஆண்டவர்இயேசு கிறிஸ்துவின் உடனிருப்பை உணர்ந்து கொள்ள இன்றைய நாள் நமக்கு அழைப்பு தருகிறது. 

          கண்டு விசுவாசிப்பவரை விட காணாமல் விசுவாசிப்பவர் பேறுபெற்றவர் என இயேசு கூறிய வார்த்தைகளை இன்று நாம் நமது உள்ளத்தில் இருத்துவோம். ஏதோ
தோமாவுக்கு மட்டும் சொன்ன வார்த்தைகள் தான் இவை என நாம் கருதக் கூடாது.   
                           இவை நம் ஒவ்வொருவருக்கும் சொல்லப்பட்ட வார்த்தைகள். பெரும்பாலும் நாம் இறைவனை எப்போது நம்புகிறோம்? என்ற கேள்வியை உள்ளத்தில் எழுப்பி பார்க்கும் பொழுது நமது வாழ்வில் துன்பங்கள் வருகின்ற பொழுது மட்டுமே நாம் ஆண்டவரைத் தேடக் கூடியவர்களாக, ஆண்டவரை நம்பக் கூடியவர்களாக இருக்கிறோம். அதே நேரத்தில் தனது வாழ்வில் பலவிதமான மகிழ்ச்சியான தருணங்களின் போது ஆண்டவரை மறந்தவர்களாக நாம் இருந்து கொண்டிருக்கிறோம். 

      நமது செயல்களை இன்று சிந்தித்து சீர்தூக்கிப் பார்ப்போம். இன்று நாம் கண்டு விசுவசிக்க கூடியவர்களாக இருக்கின்றோமா? அல்லது காணாமலேயே அந்த இறைவனை விசுவாசிக்க கூடியவர்களாக இருக்கின்றோமா? காண்பது என்பதை பார்ப்பது என புரிந்து கொள்வதை விட,  இன்ப நேரங்களில் நாம் இறைவனை மறந்திருக்கின்றோமா? துன்ப நேரங்களில் மட்டுமே ஆண்டரைத் தேடுகின்றோமா?  என்று கேள்வியை உள்ளத்தில் எழுப்பிப் பார்த்து, நமது வாழ்வின் எல்லா நேரத்திலும் நாம் ஆண்டவரை நம்பக் கூடியவர்களாக, தேடக் கூடியவர்களாக இருப்பதற்கான அருளை இன்றைய நாளில் இறைவனிடத்தில்  வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...