திங்கள், 5 ஜூலை, 2021

வாழ்வில் மாற்றத்தை உருவாக்கி கொண்டு பயணிக்க... (6.7.2021)

வாழ்வில் மாற்றத்தை உருவாக்கி கொண்டு பயணிக்க...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
ஒருநாள் நான் களப் பணியாற்றிக் கொண்டிருந்த  நாசரேத்தும் புனித வளனார் குழந்தைகள் இல்லத்தில் மாணவர்களிடத்தில் ஒரு போட்டி ஒன்றை ஏற்பாடு செய்தேன். மாணவர்கள் அனைவரும் வட்டமாக அமர்ந்து கொள்ள வேண்டும். ஒருவர் மற்றவரை அறிமுகப்படுத்த வேண்டும்.  ஆனால் சாதாரணமாக அறிமுகப் படுத்தக் கூடாது. ஒரு புனைப் பெயரை வைத்து அறிமுகப்படுத்த வேண்டும் என்று சொன்னேன். அவ்வாறு அறிமுகப்படுத்தும் போது ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு ஒரு புனைப் பெயரை வைத்து அறிமுகம் செய்தார்கள்.  ஆனால் அவர்கள் வைத்த புனைப் பெயர் எள்ளி நகையாடும் வகையில் கேலிக்கூத்தாக இருந்தது.  அதன் பிறகு சற்று நேரம் கழித்து மீண்டும் அவர்களை வட்டமாக நிற்க வைத்து, நீங்கள் உங்களைப் பற்றி அறிமுகப்படுத்த வேண்டும். ஆனால் ஒரு புனைப் பெயரோடு அறிமுகப்படுத்த வேண்டும் என்றேன் ‌.  அப்போது அவர்களும் தங்களை ஒரு புனை பெயரோடு அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.  ஆனால் அப்போது அவர்கள் பயன்படுத்திய அந்த புனைப் பெயரானது,  மிகவும் கேட்பதற்கு இனிமையாக,  கேட்டால் மகிழக்கூடிய வகையில் அமைந்திருந்தது.  அப்போது மாணவர்களிடத்தில் ஒரு பாடத்தை கற்பித்தேன். நமக்கு என்று வரும்பொழுது நல்லதை வைத்துக்கொள்ள விரும்புகிறோம். ஆனால் அடுத்தவருக்கு என்று வரும் போது, கேலிக்கூத்தாக சித்தரிக்கப்படுவதும், நகைச்சுவையான பெயர்களை சூட்ட எண்ணுகிறோம். இது தான் மனித இயல்பு. இந்த இயல்பிலிருந்து நாம் கடந்து வர வேண்டும் என்ற சிந்தனையை அன்று  கொடுத்தேன்.  இன்றைய நாள் முதல் வாசகத்திலும் யாக்கோபோடு ஓர் ஆடவர் போர் புரிகின்றார். போரின் முடிவில் யாக்கோபுக்கு இஸ்ரயேல் என்ற பெயரை சூட்டுகிறார். அவருக்கு ஆசி வழங்குகிறார். அடுத்தவருக்கு ஆசி வழங்கவும், அடுத்தவருக்கு நலமான பெயர்களை சூட்டவும்,  இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகிறோம்.  

     நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் எப்போதும் நம்மில் பலர், அடுத்தவருக்கு தீமையையும் நமக்கு நன்மையையும் வைத்துக் கொள்ள விரும்புகிறோம்.  இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசு செய்த நலமான பணியை கண்ணோக்கிப் பார்க்காது, பேச்சிழந்த ஒருவரை பேசவைத்த இயேசுவின் செயலை,  நலமான செயலாக காணாது,  அவர் தீய ஆவிகளின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்று கூறி,  அவரை தீய ஆவிகளின் தலைவன் என  இயேசுவுக்கு எதிர்மறையான பெயர் சூட்டுவதை இன்றைய நாளில் நாம் வாசிக்கக் கேட்டோம். 

             நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் பல நேரங்களில் அன்று இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களை போலத்தான், இன்றும் நம்மில் பலர் அடுத்தவருக்கு இழிவானதையும்,  எள்ளி நகையாடக் கூடியதுமான பெயர்களையும் வைத்துவிட்டு, நமக்கென்று நல்லதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும், நமக்கு மற்றவர்கள் நலமான பெயர்களை மட்டுமே சூட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு பயணிக்கின்றோம். இத்தகைய எண்ண ஓட்டத்தோடு பயணிப்பவர்களுள் நீங்களும் நானும் ஒருவரா?  என சிந்தித்துப் பார்ப்போம். அறிந்து இதனை செய்வதில்லை.  ஆனால் அறியாமல் இதனை செய்து கொண்டிருப்போம் பல நேரங்களில்.  

இன்றைய நாளில் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்த்து, வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு அடுத்தவருக்கு நல்லதைக்  கொடுப்பதற்கான பக்குவத்தைப் பெற வேண்டும். இதை எங்கிருந்தோ கற்க வேண்டும் என்பதல்ல. குடும்பத்தில் இருந்தே கற்கலாம். ஒரு தாயானவள் தனக்கு பழையதை வைத்துக்கொண்டு,  தன் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு புதியதைக் கொடுக்க எண்ணுவாள்.  தாயிடம் இருந்து இந்த பாடத்தை கற்றுக் கொள்கின்ற நமக்கு,  இன்றைய நாளில்,  இறைவன் உணர்த்துவதும் இதே பாடத்தை தான்.  தாய் மட்டும் அவ்வாறு தியாகம் செய்தல் ஆகாது.  சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் இத்தகைய பண்போடு  இச்சமூகத்தில் வளர வேண்டும் என்பதை இறைவன் உணர்த்துகிறார்.
 இறைவன் உணர்த்துவதை உணர்ந்து கொண்டு, வாழ்வில் மாற்றத்தை உருவாக்கி கொண்டு பயணிக்க, இன்றைய நாளில் இறையருளை இறைஞ்சி வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...